சனி, 14 ஜனவரி, 2012

93. ஹரப்பாவின் ஆரிய அமைப்புகள்.


27 நக்ஷத்திரங்கள், 12 ராசிகளுக்குள் அடங்கும். இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், 27  நக்ஷத்திரங்களைக் கொண்டு வானத்தைப் பகுத்தது போல, 12 ராசிகளைக் கொண்டு வானத்தைப் பகுத்தனர் எனலாம். இதிலுள்ள ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால், மொஹஞ்சதாரோவில் ஒன்பது ஒன்பதாக மூன்று வரிசைகளில் 27 தனித்தனி அஸ்திவார அமைப்புகள் இருக்கின்றன. மொஹஞ்சதாரோ உருவாகின அதே காலக்கட்டத்தில் உண்டான ஹரப்பாவில் ஆறு, ஆறாக இரண்டு வரிசைகளில் மொத்தம் 12 அமைப்புகள் இருக்கின்றன என்பதே.


இந்த இரண்டு இடங்களிலும், இந்த இரண்டு அமைப்புகளும் மிகப் பெரிய அளவில் அமைந்துள்ளன. அதாவது இவற்றுக்கு ஏதோ ஒரு முக்கியத்துவம் இருந்திருக்கிறது. இவற்றை ஆராய்பவர்கள் வெளிநாட்டவர்களாக இருப்பதால், அவர்களது நாட்டு வழக்கத்தில், இவற்றைத் தானியக் கிடங்குகள் என்கிறார்கள். ஆனால் இவற்றில் ஒரு மணியளவும் தானியம் கிடைக்கவில்லை. தானியத்தைச் சேகரித்து வைத்த அடையாளமும் இல்லை. இவற்றின் அமைப்புகள், தானியக் கிடங்குகள் போலவும் இல்லை. மேலும் இவை இரண்டுக்கும் அருகில் நீர்ப் போக்குவரத்து இருந்திருக்கிறது. நீரோடும் இடத்தில் தானியக்கிடங்கை அமைக்க மாட்டார்கள். இந்த காரணங்களால், இவை கிடங்குகள் அல்ல என்ற எண்ணத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளார்கள். கிடங்குகள் இல்லையென்றால், இவை என்ன என்ற கேள்விக்கு இவர்களுக்கு விடை தெரியவில்லை. ஆனால் ஹிந்து நாடான பாரதத்தின் பின்னணியில் நோக்கினால், விடை கிடைக்கிறது.


27 என்னும் எண், 27 நக்ஷத்திரங்களையே குறிக்கும். அது போல 12 என்னும் எண், 12 ராசிகளைக் குறிக்கும். இவை இரண்டும் ஜோதிடச் சொற்களாக மட்டும் இல்லாமல், வழிபாட்டுக்கு உரியவையாக மஹாபாரத காலத்தில் இருந்து வந்தன. இந்த வழிபாட்டில் தனுர் ராசிக்கு முதலிடம் இருந்தது. தனுர் ராசியின் முதல் நக்ஷத்திரமான மூல நக்ஷத்திரத்தைக் காலாக உருவகித்து, 27 நக்ஷத்திரங்களையும் ஒவ்வொரு உடலுறுப்பாகக் கொண்டு, 'நக்ஷத்திரப் புருஷன்' என்று உருவகித்தார்கள். சித்திரை மாதத்தில், மூல நக்ஷத்திரத்தில் சந்திரன் செல்லும் போது நக்ஷத்திரப் புருஷ விரதமாக ஆரம்பித்தார்கள். வாழ்நாள் முழுவதும் அந்த விரதத்தைச் செய்பவன், மறு பிறவியில், நக்ஷத்திரமாகப் பிறப்பான் என்றும், அந்த விரதத்தைச் செய்பவர்கள் உலகாளும் சக்கரவர்த்தியாகவும் பிறப்பார்கள் என்றும் பலவித பலன்களை வராஹமிஹிரர், பிருஹத் சம்ஹிதையில் (அத்- 105) கூறுகிறார். இந்த விரதத்தைப் பற்றி, நாரதருக்கு ருத்திரர் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. புராண காலத்திலிருந்து தொடரும் இந்த விரதம், வராஹமிஹிரர் காலம் வரை, அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.


 

நக்ஷத்திரங்கள் அமையும் ராசிகளை எடுத்துக் கொண்டால், அவை 12 என்று அமையும். அவற்றுள் நக்ஷத்திரப்புருஷன் ஆரம்பிக்கும் மூல நக்ஷத்திரம் தொடங்கி 12 ராசிகள், அவற்றின் மாதங்கள் ஆகியவை, கிருஷ்ணனுக்கும், விஷ்ணுவுக்கும் முக்கியமானவை. மூல நக்ஷத்திரம் வரும் தனுர் மாதத்தை 'நக்ஷத்திர மாதம்' என்றே அழைத்தார்கள். அப்படி அழைக்கும் வழக்கம் கிருஷ்ணன் ஆண்ட துவாரகை இருக்கும் குஜராத்தில் இன்றும் இருக்கிறது. அந்த மாதத்தைத் தமிழில் மார்கழி மாதம் என்கிறோம். அந்த மார்கழிக்கு, அதாவது நக்ஷத்திர மாதத்துக்கு, அதாவது தனுர் ராசிக்கு முக்கியத்துவம் தரும் வண்ணம், 'மாதங்களில் தன்னை மார்கழி' என்று கீதையில் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளான். இதற்குப் பின்னால் ஒரு விண்வெளி உண்மை இருக்கிறது.


இந்தப் பத்தில் நாம் இருக்கும் பால்வெளி காலக்ஸி காட்டப்பட்டுள்ளது. அதன் மையத்தில் இருப்பது தனுர் ராசி. அதன் ஒரு புறம் முக்கால் பங்கு தொலைவில் நாம் இருக்கும் சூரிய மண்டலம் இருக்கிறது.
இந்த அமைப்பில் நாம் இருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் வானத்தை 12 ராசிகளாகப் பிரித்துள்ளோம். அதை ஜாதக்கட்டமாக அமைத்துள்ளோம். கீழுள்ள படத்தில் தனுர் ராசியில், நாமிருக்கும் காலக்ஸியின் அடர்த்தியான நக்ஷத்திரக் கூட்டங்கள் கொண்ட மையப் பகுதியைக் காணலாம்

.


மையப் பகுதியான தனுர் ராசியை நாமிருக்கும் சூரிய மண்டலம் உட்பட அனைத்து நக்ஷத்திரங்களும் சுற்றிவரவே, தனுர் ராசிக்கும், அது அமையும் மார்கழி மாத்துக்கும் முக்கியத்துவம் ஏற்பட்டது. தனுர் ராசி தொடங்கி, 12 ராசிகளையும், காக்கும் கடவுளான விஷ்ணுவின் 12 பெயர்களால் (துவாதச நாமங்கள்) அழைக்கப்படுதல் வேத மரபில் இருக்கிறது.

அதாவது, ஜாதகக்கட்டமாக நாம் பார்க்கும் வான் வெளி, நம்மைச் சூழ்ந்துள்ளது.

இப்படிச் சூழ்ந்துள்ள மொத்த வெளியையும்,

காக்கும் கடவுளான விஷ்ணுவானவர் -

தனது 12 விதமான அமைப்புகளால் பரவி, நம்மை வருட முழுவதும் காக்கிறார் என்பதே இதன் தாத்பரியம் ஆகும்.


இதன்படி மார்கழிக்கு அதிபதி கேசவன்.

தை – நாராயணன்

மாசி – மாதவன்

பங்குனி – கோவிந்தன்   

சித்திரை – விஷ்ணு

வைகாசி – மது சூதனன்

ஆனி – திரிவிக்ரமன்

ஆடி – வாமனன்

ஆவணி – ஸ்ரீதரன்

புரட்டாசி – ஹ்ருஷீகேசன்

ஐப்பசி – பத்மநாபன்

கார்த்திகை – தாமோதரன்.நக்ஷத்திர புருஷ விரதத்தைக் கூறும் கடைசி அத்தியாயத்தில்,

இந்த 12 ராசிகளில், 12 ரூபங்களில் அமைந்துள்ள விஷ்ணுவை வழிபடுவதையும் வராஹமிஹிரர் கூறுவதால்   

இவை இரண்டையும் (27 நக்ஷத்திரங்கள், 12 ராசிகள்) இணைத்தே அந்த நாளில் வழிபட்டுள்ளார்கள்

என்று தெரிகிறது.

அதன் பிற விவரங்களைப் பார்ப்பதற்கு முன், ஹரப்பாவின் 12 பகுதி அமைப்பை ஆராய்வோம்.


 

கீழ்க்காணும் ஹரப்பா வரைபடத்தில் 12 பகுதிகள் கொண்ட 'கிடங்கு' என்னும் அமைப்பை ஒட்டி ராவி நதி ஓடியிருப்பதைக் காணலாம். நீர்நிலைக்கு அவ்வளவு அருகில் கிடங்கு அமைக்க மாட்டார்கள். ஆனால், நீர் நிலைக்கும், ஆற்றுக்கும் அருகே கோவில் அமைப்பது வழக்கமான ஒன்றாகும். நீர்நிலைகளுக்கு அருகில்தான் கோவில் அமைக்க வேண்டும் என்பதை ஒரு விதியாகவே வராஹமிஹரர் கூறுகிறார். (பிரு-சம் – அத் 56)

இந்தப் படத்தில் மஞ்சள் நிற வட்டத்தில் இருப்பது "கிடங்கு"ப் பகுதி. அதை ஒட்டி ராவி நதி ஓடியிருக்கிறது. இப்பொழுது அந்த இடம் வறண்டு இருக்கிறது.

 

 

'கிடங்கு' என்று சொல்லப்படும் இடத்தில், 12 அமைப்புகள் தென்படுகின்றன. அதன் வரைபடத்தைக் கீழே காணலாம்.