ஞாயிறு, 18 டிசம்பர், 2011

87. சிந்து சமவெளி நகரங்களில் வேத- வாஸ்து!


சிந்து சமவெளிப் பகுதியில் தங்கள் பூர்வீகம் இருந்தது என்று சொந்தம் கொண்டாடும் திராவிடவாதிகள், அந்த இடங்களில் அவர்கள் வெறுக்கும் ஆரியத்தாக்கம்தான் இருந்தது என்பதை அறிவார்களா?


ஆரியர்கள் உண்டாகினதாக நினைக்கப்படும் அத்ர்வண வேதத்தின் ஒரு கிளை-வேதமான (உபவேதம் என்பார்கள்) வாஸ்து சாஸ்திர விதிகளைக் கொண்டே சிந்து சமவெளிப் பகுதிகள் எழுப்பப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் ஏறத்தாழ ஒரே காலக்கட்டத்தில், (இன்றைய பாகிஸ்தானில் உள்ள) மொஹஞ்சதாரோ, ஹரப்பா, இன்றைய குஜராத்தில் உள்ள தோளாவீரா மற்றும் பல பகுதிகளில், ஒரே விதமான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆராய்ச்சிகள் நடந்துள்ள இந்த மூன்று இடங்களையும் இந்தப் படத்தில் காணலாம்அதாவது, ஒரே விதமான தொழில் திறமைகளும், கட்டுமானத்திறமைகளும் கொண்ட மக்களால், இந்தப் பகுதிகளில் சமகாலத்தில் நகர நிர்மாணம், வீடுகள், தெருக்கள், நீர்நிலைகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு முன்னால் இங்கு இந்த அமைப்புகள் இல்லை. குறிப்பிட்ட திறமை கொண்ட மக்கள் திடீரென்று எங்கிருந்தோ வந்து இந்த இடங்களை ஆக்கிரமித்தார்கள் என்று சொல்லும் வண்ணம் பொ.மு 2600 முதல் பொ.மு 2200 வரைக்குள் நகரக் கட்டுமான அமைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்தத் திறமைகள் ஒரே நாளில் அல்லது குறுகிய காலத்தில் உண்டாகியிருக்க முடியாது. ஏற்கெனெவே நகர நிர்மாணத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்தினரால்தான் இவ்வாறு உண்டாக்கியிருக்க முடியும்


அதிலும், இந்த நகர அமைப்பு, மற்றும் வீடு அமைப்புகள், வாஸ்து சாஸ்திர விதிகளை ஒட்டி இருக்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகர வாஸ்துவில், சதுரம் அல்லது செவ்வக அமைப்பில் நிலம் தேர்ந்தெடுக்கப்படும். நான்கு திசைகளிலும் தெருக்கள் அமைக்கப்படும். குறுக்குத் திசைகளான வட கிழக்குதென் மேற்கு போன்ற திசைகளில் முக்கிய வீதிகள் அமைக்க மாட்டார்கள். நிலத்தின் சரிவு, மேடு ஆகியவற்றின் அடிப்படையில் நீர்ப்போக்கு, சாக்கடைகள் அமைக்கப்படும். மக்கள் குடியிருப்புகள், அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையில் அமைக்கப்படும். உதாரணமாக உழவர்கள் குடியிருப்பு, வயல்புறத்தை ஒட்டி அமையும். அரசன் அல்லது தெய்வத் திருக்கோவில்களை ஒட்டி பரந்த வீதிகள், பாட சாலைகள், மண்டபங்கள் போன்றவை அமைக்கப்படும், இவற்றை அமைப்பதிலும் இந்த திசையில் இப்படி அமைய வேண்டும் என்ற விதிகள் உள்ளன. இவையெல்லாம் சிந்து சமவெளி நகரங்களில் அமைந்துள்ளன


உதாரணமாக மொஹஞ்சதரோவில் மிகக் குறுகலான தெருக்கள் இருந்தன என்றும், அவை பிருந்தாவனத்தில் உள்ள தெருக்களை ஒத்திருக்கின்றன என்றும் பார்த்தோம். (பகுதி 82). அந்த் தெருவின் அகலம் ஒரு மனித உயரம் கூடக் கிடையாது. இந்த் தெருக்களை ஆராய்ந்த மாக்கே (MACKAY)  என்பவர், இந்தத் தெருக்கள் 1,42 மீட்டர் அகலம் கொண்டவையாக இருக்கின்றன என்றும், பல பகுதிகளில் வீட்டு வாயில் அகலமும், தெரு அகலமும் (1.42 மீ) ஒரே சரியாக இருக்கின்றன என்கிறார். நாம் முன்பே சொன்னது போல மாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக அழைத்துச் சென்று, அவ்வவற்றின் வீடுகளில் நுழையும் வண்ணம் இந்தத் தெருக்களும், வீட்டு வாயிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது புலனாகிறது.
இப்படிப்பட்ட தெருக்கள் யாதவக் குடியிருப்புகளுக்கு வசதியானவை. அந்தத் தெருக்களில் மாடுகளை ஓட்டி வந்து வீடுகளிலுள்ள தொழுவத்தில் அடைப்பது வசதியாக இருந்தது. அப்படிப்பட்ட தெருக்கள் மொஹஞ்சதாரோவின் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. அந்தப் பகுதில் உள்ள வீடுகளில் மண் பாண்டச் சில்லுகள் கிடைத்துள்ளன. இந்த விவரம், இவை யாதவக் குடியிருப்புகளே என்ற நம் எண்ணத்தை வலுப்படுத்துகின்றன.


குறுகிய தெருக்களைக் கொண்ட மொஹஞ்சதாரோ பகுதி. இங்கு கிடைத்துள்ள மண் பாண்டச் சில்லுகளை ஆராய்ந்துள்ளார்கள்.

மாடுகளுக்கும், மண் பாண்டத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. மாடு மேய்ப்பவர்கள் பால், தயிர், மோர், வெண்ணை வியாபாரம் செய்வார்கள். அவர்கள் பாலை உறைய வைக்க மண் பாண்டங்களையே உபயோகித்து வந்திருக்கிறார்கள். தயிரைக் கடைந்து வெண்ணை எடுக்க மண் பாண்டங்களையே பயன்படுத்தினார்கள். தயிரையும், வெண்ணையையும் மண் பாண்டங்களில் நிரப்பி அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, உயரத்தில் உரியில் கட்டித் தொங்க விடுவார்கள். 50 வருடங்கள் முன்வரை இந்த முறையே நம் நாடெங்கும் இருந்து வந்திருக்கிறது. கிருஷ்ணன் காலத்திலும், அதே வழக்கம் இருந்தது என்பதை, உரியை அடித்து, வெண்ணை திருடித் தின்ற கிருஷ்ண லீலையாக அறிகிறோம்
இந்த விவரங்களைக் கொண்டு, குறுகிய தெருக்களைக் கொண்ட மொஹஞ்சதாரோப் பகுதி மாடு மேய்ப்பவர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று அறியலாம்யாதவக் குடியிருப்புகளில் குறுகிய தெருக்கள் என்றால், பெரிய மாளிகைகள் போன்ற அமைப்புகள் கொண்ட பகுதிகளின் தெருக்கள் அகலமாக இருக்கின்றன. தெரு நிர்மாணம் என்பதே, பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அமைக்கப்படுவதாகும். தேர் வீதி, ராஜ பாட்டை என்று, கோவிலைச் சுற்றியும், அரண்மணைப் பகுதிகளிலும் அகலமான தெருக்கள் இருந்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட அமைப்புகள் மொஹஞ்சதாரோ காலத்திலும் இருந்திருக்கின்றன என்பதால், அவற்றைப் பயன்படுத்தக்கூடிய சமூக அமைப்பு அங்கு இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மொஹஞ்சதாரோ உண்டானதற்கு முன்பே, காண்டவ வனத்தை அழித்து, நிலத்தை மீட்டு, அதை விதிகளின் படி அளந்து இந்திரப்பிரஸ்த நகரத்தை பாண்டவர்கள் நிர்மாணித்தார்கள் என்று மஹாபாரதம் கூறுவதை இங்கு நினைவு படுத்திக் கொள்வோம். (பகுதி 85)

தெருக்கள் அமைப்பிலும், கட்டுமான்ங்களிலும், வாஸ்து அளவீடுகள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த அளவீடுகளது அடிப்படை 108 என்ற எண்ணில், வேத மரபில் உள்ளது.
108 என்பது பிரபஞ்சத்தின் ரகசிய எண் ஆகும்.
இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள  பிரபஞ்ச விஞ்ஞானத்தைக் கொண்டு,
இந்த எண் நம் உலகை ஆட்கொண்டுள்ளது என்று சொல்லலாம்.
108 என்னும் எண் மூலமாகச்
சூரியனும், சந்திரனும் உலகத்தின் இயக்கத்திலும், மனித வாழ்க்கையிலும்
முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தூரம்,
சூரியனது குறுக்களவின் (விட்டம்) 108 மடங்குகள்  ஆகும்.

அது போலவே, நமக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம்,
சந்திரனது குறுக்களவின் 108 மடங்குகள் ஆகும்.இதை நோக்கும் போது, 108 என்ற எண்ணில்
ஏதோ இரு சூட்சுமம் இருக்கிறது என்று தெரிகிறது.
அந்தச் சூட்சுமத்தை வேத ஞானம் கைக்கொண்டுள்ளது.
மந்திர ஜபங்களைச் சொல்ல வேண்டும் என்றால்,
108 அல்லது அதன் மடங்குகளில் சொல்ல வேண்டும்
என்பது வேத ஞானம்.
அது போலவே வேத வழிபாட்டுக்கான யாக சாலைகளின் அளவிலும்,
இந்த 108 என்னும் எண் வருகிறது.

ஆங்கிலேயர் தாக்கம் வந்த பிறகு நாம் மீட்டர் அளவை ஏற்றுக் கொண்டு விட்டோம். ஆனால் அதற்கு முன் வரை அங்குலம், தண்டம் என்னும் அளவுகளில் இந்த எண்ணே கோலோச்சிக் கொண்டிருந்த்து.
இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியம் விவரம் என்னவென்றால், அந்த அளவீடே, சிந்து சமவெளி நகரங்களிலும், காளிபங்கன், லோதால் போன்ற இடங்களில் காணப்ப்டும் ஹோம குண்டங்களிலும் காணப்படுகிறது என்பதே. இந்த நகரங்களின் அளவுகளை ஆராய்ந்த எல்லா ஆராய்ச்சியாளர்களும் இந்த விவரத்தை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
தோளாவீரா, லோதால் ஆகிய இடங்களில் அளக்கும் ஸ்கேல் கிடைத்திருக்கிறது. அதில் காணப்படும் அடிப்படை அளவு 1.76 மி.மீ ஆகும்.
இந்த எண்ணை 108 ஆல் பெருக்கினால் வரும் எண்ணே சிந்து சமவெளிப் பகுதிகளின் கட்டுமானங்களுக்கான அடிப்படை அளவாக இருக்கிறது என்று கண்டு பிடித்துள்ளார்கள்.
தெருக்கள் மட்டுமல்ல, கட்டுமானப் பணிகளையும், பல சிந்து சமவெளி நகரங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்கள். அங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கல் அளவுகளையும் ஆராய்ந்துள்ளார்கள். எல்லாவற்றிலும் அடிப்படை அங்குலம் –தண்டம் என்னும் அளவீடுகள் பொருந்துகின்றன. 


இன்று நம்மிடம் உள்ள வாஸ்து சாஸ்திர நூல்கள்,
வராஹமிஹிரரது ப்ருஹத் சம்ஹிதை
போன்றவற்றில் கொடுக்கப்பட்டுள்ள
அங்குலம், தனுர் முஷ்டி போன்ற அளவீடுகளுடன்
அவை பொருந்துகின்றன. என்பதே மிக முக்கிய விவரமாகும்.  
வேத மரபின் ஒரு தொடர்ச்சியான நாகரிகமாக, சிந்து சமவெளி நாகரிகம்
இருந்திருக்கிறது என்பதற்கு இந்த அளவீடுகளே சாட்சியாக இருக்கின்றன. 


மொஹஞ்சதாரோ காலத்துக்கு முன்னால் இருந்த அளவீடுகளே, மொஹஞ்சதாரோ காலத்துக்குப் பின்னாலும் தொடர்ந்திருக்கிறது. சமீபத்தில் மோஹன் பந்த் (Mohan Pant) என்பவரும், ஷூஜி ஃபூனோ (Shuji Funo) என்பவரும் இணைந்து, மொஹஞ்சதாரோ, காட்மாண்டுவில் உள்ள திமி (Thimi) என்ற இடம், இன்றைய பாகிஸ்தானில் உள்ள தக்ஷசீலம் ஆகிய மூன்றையும் ஒப்பீடு செய்து ஆராய்ந்துள்ளார்கள்.
தக்ஷசீலத்தைப் பற்றி 13, 34 ஆவது கட்டுரைகளில் கண்டோம். இந்த இடம் ராமர் காலத்திலேயே உண்டாக்கப்பட்டு விட்டது. (இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்னால்). பரதனுடைய மகனான தக்ஷனுக்காக உண்டாக்கப்பட்ட நகரம் இது. பிற்காலத்தில் இது கல்விச் சாலைக்குப் பெயர் பெற்றதாக ஆனது.


மொஹஞ்சதாரோ, தக்ஷசீலம், திமி ஆகிய இடங்களில் உள்ள கட்டுமானங்கள், அவற்றில் பயன்படுத்தப்பட்ட அளவீடுகள் ஆகியவற்றை ஆராய்ந்த போது, அவை ஒரே விதமாக இருப்பதையும், வேத வாஸ்துவை ஒட்டி இருப்பதையும் வெளிக்காட்டியுள்ளார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள்.
அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்னால் என்ன  விதி முறைகளின் அடிப்படையில்,
வீடு, நகரம் ஆகியவற்றை நிர்மாணித்தார்களோ,
அதே அடிப்படையில் மொஹஞ்சதாரோ உள்ளிட்ட
சிந்து சமவெளி நகரங்களையும் அமைத்துள்ளார்கள்.
இதே விதிமுறைகள் தக்ஷசீலம் உண்டாக்கப்பட்ட 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வந்திருக்க வேண்டும்.
சிந்து சமவெளி நகரங்களை நிர்மாணித்தர்கள், புதிதாகத் தொழில் கற்றுக் கொண்டு வீடுகள் கட்டவில்லை.
அவர்கள் ஏற்கெனெவே கட்டுமான அறிவைக் கொண்டிருந்தார்கள்.
அது மட்டுமல்லாமல்,
அந்தத் தொழில் நுட்பம், வேத வாஸ்துவின் அடிப்படையில் அமைந்துள்ளாதால்,
வேத காலம் அதற்கு முன்பே இந்தியாவில் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது


20 வருடங்களுக்கு முன் குஜராத்தில் உள்ள தோளாவீராவின் அமைப்பை ஆராய்ந்தார்கள். 48 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அந்தப் பகுதி, திருத்தமான, சதுர, செவ்வக அமைப்பில் அமைந்திருக்கிறது

அங்கு ஒவ்வொரு இடமும், வாஸ்து சாஸ்திர அங்குல அளவிலும், தனுர்முஷ்டி அளவிலும் அமைந்துள்ளது என்றும் கண்டுபிடித்துள்ளார்கள். ஒவ்வொரு கட்டுமானத்தின் பயன்பாட்டின் அடிப்படையில், அதில் பயன்படுத்தப்படும் நீள அகலங்கள் மாறுபடும் என்று வராஹமிஹிரர் கொடுத்துள்ள அளவீடுகளில் தோளவீரா, ஹரப்பா, மொஹஞ்சதாரோ, காளிபங்கன் ஆகிய இடங்களில் பல அமைப்புகள் இருக்கின்றன.

அது மட்டுமல்ல, தோளாவீராவின் அமைப்பை ஒட்டிய ஓரிடத்தையும் கங்கைக் கரையில் கண்டு பிடித்துள்ளார்கள். இந்த இடம், மஹாபாரதத்தில் வரும் திரௌபதியின் பிறந்த வீடு இருந்த காம்பில்யம் என்னும் இடமாகும். திரௌபதியின் தந்தையான துருபதனின் பெயரால், இந்த இடத்தைத் துருபதன் கிலா’ (துருபதன் அரண்மனை) என்றே அங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள்.20 வருடங்களுக்கு முன்னால் இங்கு அகழ்வாராய்ச்சி செய்தபோது, அதன் அமைப்புகள் தோளாவீராவின் அமைப்புகளை ஒத்திருந்தன என்று தெரிய வந்தது.
காம்பில்யத்தின் கட்டுமானங்கள், 2000 வருடங்களுக்கு முந்தினவை.
அதனால், மொஹஞ்சதாரோவை விட மஹாபாரதம் காலத்தால் பிற்பட்டது
என்று சொல்லிவிட முடியாது.
மஹாபாரத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பலவும்,
காப்பாற்றப்பட்டும், அவ்வப்பொழுது புனரமைக்கப்பட்டும் இருந்திருக்கின்றன.
அப்படியே இந்தக் காம்பில்ய அமைப்பும் சீரமைக்கப்பட்டு வந்திருக்க வேண்டும்.
அது கடைசியாகச் சீரமைக்கப்பட்ட காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்திருக்கிறது


அவ்வாறு சீரமைக்கும் போது, அதன் உண்மையான அமைப்பு மாறாத வண்ணமே சீரமைத்திருப்பார்கள். அப்படி அமைந்தவை, தோளாவீராவின் அமைப்பை ஒட்டி இருப்பதால், ஆரம்பத்திலிருந்தே அதே அமைப்பில்தான் அந்த அரண்மனை இருந்திருக்க வேண்டும்.  ஒரே விதமான கட்டுமானப் பணிகளும், அவற்றின் வாஸ்துவும் மஹாபாரத காலம் தொட்டே இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றன


நாம் முன்பே சொன்னது போல (பகுதி 85) கட்டுமானத்தின் பலவித பணிகளில் தேர்ச்சி பெற்ற விஸ்வகர்மாக்கள், தங்கள் அனுபவத்தையும், மயன் மூலம் கற்றுக் கொண்டவற்றையும், மொஹஞ்சதாரோ வரை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.
இவர்கள் சிந்து சமவெளி மக்களாக இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தொழில் ரீதியாக அந்தந்த இடங்களுக்குச் சென்று கட்டுமானப் பணியில்
ஈடு பட்டிருக்கலாம். அவர்களில் பலர் அங்கேயே தங்கியிருக்கலாம்.
பலர் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கலாம்.
அல்லது பொ.மு 1500 ஆண்டுகளில் சிந்து சமவெளிப் பகுதிகளில்
ட்சி, நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழ்திருக்கின்றன
என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கவே,
அங்கிருந்த மக்கள் கங்கைக் கரைப் பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம்.
அப்படி வந்த மக்கள், துருபதன் அரண்மனையைப் புனர் நிர்மாணம் செய்திருக்கலாம்.


இதன் மூலம் முக்கியமாகத் தெரிய வருவது என்னவென்றால்,
மொஹஞ்சதாரோ போன்ற பகுதிளில் இருந்த மக்கள்,
வட இந்தியாவுக்கு இடம் பெயர்ந்திருக்கூடிய சாத்தியம் இருக்கிறதே தவிர,
அங்கிருந்து விரட்டப்பட்டு,
தமிழ் நாட்டுக்கு வந்திருக்கக்கூடிய சாத்தியம் இல்லை.
ஆரியப் படையெடுப்பை நம்புபவர்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்,
ஆரியன் படையெடுத்து திராவிடனை விரட்டினான் என்பது
உண்மையாகவே இருந்தாலும்,
அந்தத் திராவிடன், கங்கைப் பகுதிகளுக்குத்தான் சென்றானே தவிர
காவிரி, வைகைக் கரைக்கு வரவில்லை!


5 கருத்துகள்:

 1. பொ .மு. என்பதனை விளக்கவும்.
  ஸாரநாதன்.

  பதிலளிநீக்கு
 2. Common Era என்று ஆங்கிலத்தில் கூறுகிறோமல்லவா, அதன் தமிழாக்கம் பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்குப் பின் என்பது. ஆங்கிலத்தில் BCE =பொ.மு CE = பொ.பி

  பதிலளிநீக்கு
 3. Thank you.I was under the impression CE meant Christian Era!Thanks for clearing my basic wrong assumptions.
  Saranathan.

  பதிலளிநீக்கு