ஞாயிறு, 18 டிசம்பர், 2011

88. மொஹஞ்சதாரோவின் வாஸ்து!



இனி மொஹஞ்சதாரோவின் அமைப்பைப் பார்ப்போம்.
சுமார் 250 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியுள்ள மொஹஞ்சதாரோ ஆரம்பத்தில் இரண்டு நதிகளுக்கு இடையில் அமைந்திருந்தது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன

இந்த நகரத்தின் மேற்கில் சிந்து நதியும், கிழக்கில் கக்கர்-ஹக்ரா நதியும் இருந்தன. கக்கர் ஹக்ரா என்பதே சரஸ்வதி நதி என்றழைக்கப்பட்டது. மொஹஞ்சதாரோ அமைக்கப்பட்ட காலத்தில் அந்த நதியைக் கிழக்கில் கொண்டு, அதன் மேற்குக் கரையில் நகரத்தை அமைத்திருக்கிறார்கள். மொஹஞ்சதாரோவின் அடையாளம் என்பது வேத மரபு அடையாளமே என்று சொல்ல  இந்த ஒரு விவரமே போதுமானது

சரஸ்வதி நதியைக் கிழக்கில் கொண்டு மொஹஞ்சதாரோ அமைக்கப்பட்டது என்றால்,
அது தற்செயலானது அல்ல.
அது தேர்ந்தெடுக்கப்பட்ட இடமாக இருக்க வேண்டும்.



கிழக்கில் சூரியன் உதிப்பதற்கு முன்பிருந்தே சரஸ்வதி நதிக்கரைக்குச் சென்று வழிபாடுகள் செய்யும் முறைகள் வேத மரபில் இருந்தன. ஆனால் இந்த நதி நாளடைவில் மறைந்து போய்விட்டது. மஹாபாரத காலத்திலேயே சரஸ்வதி பல இடங்களில் மறைந்து விட்டது. சரஸ்வதி நதிப் பகுதியில் தீர்த்த யாத்திரை சென்ற பலராமன் (கிருஷ்ணனது சகோதரன்) குதிரைப் பயணமாக 42 நாட்கள் செல்லும் தூரமே சரஸ்வதி ஓடுகிறது. மற்ற இடங்களில் பாலைவனமாக இருக்கிறது என்கிறார். (-பா- 3-80, 3-88) சரஸ்வதி நதிக்கு முக்கியத்துவம் கொடுத்த சமுதாயத்தினர், அந்த ஆறு தென்படும் இடங்களிலெல்லாம் குடியிருப்புகளை அமைத்திருப்பர் என்பதால், மொஹஞ்சதாரோ மக்களும், மஹாபாரத வேத வாழ்க்கையை வாழ்ந்தவர்களாக இருந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.


னால் நாளடைவில் கிழக்கில் ஓடிய சரஸ்வதி நதி மறைந்து, மேற்கில் சிந்து நதியே இருந்திருக்கிறது. தற்சமயம், சிந்து நதியும் பாதை மாறி, மொஹஞ்சதாரோவின் குறுக்காக, அதன் கிழக்குப் பகுதியில் ஓடுகிறது. ஆரம்பத்தில் அந்த நதி அவர்களை நிம்மதியாக வாழவிடவில்லை. மொஹஞ்சதாரோவைப் பொறுத்தமட்டில், அந்த நதியின் வெள்ளத்தால் மக்கள் அடிக்கடி அவதியுற்றிருக்கிறார்கள்.


வெள்ளம் வந்து குடியிருப்புகள் அழிந்திருக்கின்றன. எனினும், வெள்ளம் வடிந்த பிறகு, அழிந்த வீடுகளின் மீதே புது வீடுகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்தப் பகுதி மேடிட்டிருக்கிறது. ஆராய்ச்சிகள் மூலமாகத் தெரிய வந்துள்ள இந்த விவரம், இந்தப் பகுதியை 90 வருடங்களுக்கு முன்னால் முதன் முதலில் ஆராய்ந்த போது தெரிந்திருக்கவில்லை. அதனால் மொஹஞ்சதாரோ என்பதையேஇறந்தவர்கள் மேடு என்று கருதியிருக்கிறார்கள்.

ஆரியப் படையெடுப்பை மெய்ப்பிக்க, இறந்தவர்களைத் தேடித் தேடிப் பார்த்து விட்டார்கள். ஒரு சான்றும் கிடைக்கவில்லை. மாறாக, இயற்கைச் சீற்றத்தால் இங்கிருந்த மக்கள் அவதியுற்று, அதைத் தாங்க முடியாமல் ஒரு காலக் கட்டத்தில் இந்த நகரத்தை விட்டு நீங்கி விட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.


மொஹஞ்சதாரோ பகுதியில், குறைந்தது 7 முறையாவது வெள்ளப் பெருக்கு வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். திடீரென ஒரு நாளில் அவர்கள் இந்த இடத்தைக் காலி செய்யவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக இடப்பெயர்வு செய்திருக்கிறார்கள் என்று கருதுகிறார்கள். ஆனால் வாஸ்து அமைப்பில் இந்த நகரம் அமைந்துள்ளதால். நம்மால் வாஸ்து தொடர்புடைய காரணங்கள் இரண்டைச் சொல்ல முடியும்.


(1)  கிழக்கிலும், மேற்கிலும் நதிகள் ஓடிய போது கட்டப்பட்ட அந்த நகரத்தில், கிழக்கில் நதி மறைந்து போன காலத்திலிருந்து வாஸ்து வேதனைகள் ஆரம்பித்திருக்கும். மேற்கில் நதி ஓடும் பள்ளமும், கிழக்கில் மேடும் உண்டான காலத்திலிருந்து வீட்டுப் பெண்கள் இறந்து போவதும், பொருள் நஷ்டமும் உண்டாக ஆரம்பித்திருக்கும்.


(2)  அதை விட மோசமான வாஸ்து வேதனை, கி.பி 2 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் கோவிலைப் போன்ற முக்கிய அமைப்பில் இருக்கும் மொஹஞ்சதாரோப் பகுதியின் கிழக்கில், புத்த விஹாரமும் ஸ்தூபி என்னும் அமைப்பும் உயரமாகக் கட்டப்பட்டிருக்கின்றன.


மேலிருந்து தெரியும் மொஹஞ்சதாரோ பகுதி.





இந்தப் பகுதியின் கிழக்கில் உயரமான புத்த விஹாரம்.



புத்த விஹாரத்தின் கீழ், சிந்து சமவெளிகாலத்தைச் சேர்ந்த பழைய கட்டுமானப் பகுதிகள் இருக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
கி.பி. 2 ஆம் நூற்றாண்டில், இந்தப் பகுதிக்கு வந்த பௌத்தர்கள்,
தங்கள் மதத்தைப் பரப்பியிருக்கிறார்கள்.
இந்த ஸ்தூபத்தையும் கட்டியிருகிறார்கள்.
கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரை அங்கு மக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு
இது ஒரு சாட்சி


பொ.மு 1500 இல் அந்த நகரத்தை விட்டு அனைத்து மக்களும் நீங்கியிருந்தால்,
யாருமே இல்லாத இடத்தில் எதற்காக புத்த விஹாரம் கட்டியிருக்க வேண்டும்?
எனவே ஒரு காலத்தில் பல ஆயிரக் கணக்கில் இருந்த மக்கள் தொகை குறைந்து,
சில ஆயிரம் மக்களாவது அங்கு இருந்திருக்க வேண்டும்.
அப்படி இருந்த காலக்கட்டத்தில், அவர்களது
முக்கியப் பகுதியின் கிழக்கில் ஒரு உயரமான அமைப்பு
பௌத்தர்களால் உண்டாக்கப்பட்டதால்,
வைத்யப்பிருஷ்டம் என்ற வாஸ்து வேதனை உண்டாகியிருக்கும்


கிழக்கில் உயர்ந்த ஸ்தூபி!






இதன் காரணமாக,
பொருள் நஷ்டம் ஏற்பட்டிருக்கும்,
வம்ச விருத்தியும் பாதிக்கப்பட்டிருக்கும்.
இப்படிப்பட்ட இழப்புகளை மக்கள் சந்தித்திருந்தால் நிச்சயம், ஊரைக் காலி செய்து கிளம்பி விட்டிருப்பார்கள். இதனால், இந்த புத்த விஹாரம் வந்த சமயத்திலிருந்து, அதாவது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த நகரம், வெறிச்சொடி இருந்திருக்க வேண்டும்.


இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு விவரம் இருக்கிறது.
சிந்து சமவெளி நாகரிக  காலத்திற்குப் பிறகு,
மொஹஞ்சதாரோவுக்கு வந்தவர்கள் பௌத்தர்கள்! 
ஆரியர்கள் அல்ல.
அங்கு வந்த பௌத்தர்களும், ஆக்கிரமிப்பு வேலை செய்திருக்கிறார்கள்.

மொஹஞ்சதாரோவில் காணப்படும் சின்ன்ங்களையும், கிடைத்துள்ள முத்திரைகளையும் கொண்டு, இந்த நகரம், மஹாபாரத காலத்தின் தொடர்ச்சியாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்லலாம். அந்த விவரங்களின் முதல் படியாக, மொஹஞ்சதாரோ வாஸ்து அமைப்பில் இருப்பதை இங்கு காண்போம். 


எந்த ஒரு நிலத்தையும், அதன் பயன்பாட்டின் அடிப்படையில் பிரிக்கும் முறை
வாஸ்து பதம்’ எனப்படும்.
இவ்வாறு 32 வகையான வாஸ்து பதங்கள் உள்ளன.
அவற்றுள் அதிகமாக நாம் பின்பற்றுவது
எட்டுக்கு எட்டு (8 X 8 = 64) என்று பிரிக்கப்படும்,
சதுஷ்ஷஷ்டி பதம் ஆகும்.
இது கிராமம், நகரம், நில தானங்கள் ஆகியவற்றில் பின்பற்றப்படுவது.
இது பாரதம் முழுவதும் பின்பற்றப்பட்டுள்ளது.
நில சாசனங்களிலும், கல்வெட்டுகளிலும்,
இதன் அடிப்படையில் நிலம் அளக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 


இது போல வீடுகட்டும் நிலப்பரப்பை
ஒன்பதுக்கு ஒன்பது (9 9 = 81) என்று பிரிக்க வேண்டும்.
ஏகஷீதி பத வாஸ்து என்று அழைக்கப்படும் இந்தப் பகுப்பு,
நம் நாட்டில் பரவலாக உள்ளது.
அதாவது வீடு கட்ட வேண்டும் என்றால்
இப்படித்தான் 81 பகுதிகளாகப் பிரிப்பார்கள்.
நிலங்களை அளக்க மேற்சொன்ன 64 பகுதிகளாகத்தான் பிரிப்பார்கள்.
மண்டபம், யாக சாலை ஆகியவற்றுக்கு சதபத வாஸ்து எனப்படும்
பத்துக்கு பத்து (10 10 = 100) என்று பிரிப்பார்கள்.  
அவ்வாறே தெய்வப் பிரதிஷ்டை செய்யும் நிலங்களுக்கு
நாலுக்கு நாலு (4 4 = 16) என்று பிரிக்கப்படும்
மஹாபீத பத வாஸ்து (MahApItha) பின்பற்றப்பட வேண்டும்
என்பது வாஸ்து விதியாகும்.
இப்படிப் பிரித்து, அதன் மத்திய பகுதியில்
பிரம்மஸ்தானத்தை அளந்து எடுப்பார்கள்.
பிரம்மஸ்தானத்தில் தெய்வப் பிரதிஷ்டை செய்யப்படும்.


சுமார் 250 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மொஹஞ்சதாரோவை நோக்கும் போது, புத்த விஹாரம் உள்ளிட்ட மொத்தப் பகுதியில், ஆரம்பத்தில் ஒரு கோவில் அல்லது வழிபாட்டு இடம் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஒரு வழிபாட்டு இடத்தில் இருக்கக்கூடிய குளம், மண்டபம் போன்ற அமைப்புகள் இங்கு காணப்படுகின்றன.

இந்த மொத்த அமைப்பும் வாஸ்து-பத அமைப்பில் இருப்பதைக் காணலாம்.




வாஸ்து-பதம் என்னும் பகுப்பின் அடிப்படையில் இந்த இடத்தை மேற்கண்டவாறு பிரிக்கலாம். இதில் நடுவில் காணப்படும் சதுரம் / செவ்வகம் பிரம்மஸ்தானம் எனப்படும்

அந்தப் பிரம்மஸ்தானத்துக்குள் குளம் வருகிறது. இதனால் இந்த மத்திய அமைப்பில் தெய்வ வழிபாடு நடந்திருக்க வேண்டும்

இந்தக் குளத்தை GREAT BATH  ன்கிறார்கள்.

 



இதைக் குளியல் குளம் என்று முதலில் நினைத்தார்கள்.
அது சரியல்ல.
மொஹஞ்சதாரோவில், வீட்டுக்கு வீடு கிணறு இருக்கிறது
என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களிலும் கிணறுகள் இருக்கின்றன.
எனவே பொதுக் குளியல் குளத்துக்கு அவசியமே இல்லை.
அதனால், இங்கு காணப்படும் குளம், கோவில் குளமாக இருக்கலாம்
என்று ஊகிக்க முடிகிறது.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் இந்த அமைப்புகள் வாஸ்து விதிக்குள் வருகின்றன.
நாலுக்கு நாலாகப் பத வாஸ்துவில் இவ்வாறு பிரிக்கலாம்.




இந்தப் படத்தில் மனித, தெய்வ, யாம்ய, அசுர சக்திகள் அமையும் அமைப்புகளைக் காணலாம். இவற்றின் அடிப்படையில் கோவில் அமைப்புகள் இருக்கும்.
இந்த அமைப்பை மொஹஞ்சதாரோவின் முக்கிய இடமான குளத்தைக் கொண்ட அமைப்பில் பொருத்த முடிகிறது.




இதே அமைப்பை வேறு விதமாகவும் பார்க்கலாம்.
மொத்த பகுதியையும், ஒரே அமைப்பாக்க் கொண்டு கீழ்க்கண்டவாறு பிரித்து, கட்டுமான்ங்கள் அமைக்கலாம்.






கிழக்கே நீண்டிருக்கும் பகுதி (புத்த விஹாரம் கட்டப்பட்டுள்ள இடம்) நுழை வாயில் கொண்டதாக இருக்க வேண்டும். பல வித கட்டுமானக்களைக் கடந்து வந்தால், நடுப்பகுதியில்  கோவில் அல்லது வழிபாட்டுகான இடம் அமையும்


அந்தப் பகுதியில் GREAT BATH  எனப்படும் ஒரு குளம் இருக்கிறது. அதை ஒட்டி அதற்கு மேற்கில் ஒரு செவ்வக அமைப்பு தெரிகிறது. இது உண்மையில் 3 X 9  என்ற கணக்கில் மூன்று நீள் வரிசைகளில், ஒவ்வொரு வரிசையிலும் 9 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 27 பகுதிகளாகக் காணப்படுகிறது. இது தானியங்கள் சேமிக்கும் கிடங்காக இருக்கலாம் என்று ஒரு சாரார் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்








குளத்திற்குப் பின்னால்கிடங்கு’.




குளத்தை ஒட்டி தானியக் கிடங்கு அமையுமா என்பது ஒரு கேள்வி.
குளத்து நீர் வெளியேறும் இடம் இந்தக்கிடங்குக்குஅருகே உள்ளது.
கீழ்க்காணும் படத்தில் குளத்திலிருந்து நீர் வெளியேறும் பாதை தெரிகிறது. அது ‘கிடங்கின்’ அடிவாரத்தை ஒட்டி நீரை வெளியேற்றும். வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அமைப்பில், யாரேனும் தானியக் கிடங்கை அமைப்பார்களா? மாட்டார்கள். எனவே அது கிடங்கு அல்ல என்று நிச்சயமாகச் சொல்ல்லாம்.





அதிலும் அந்த நீர் வெளியேற்றும் வழிப்பாதை, ஒரு ஆள் செல்லக்கூடிய அளவில் இருக்கிறது.



குளத்து நீரைக் காலி செய்வதற்காக இப்படி ஒரு பெரிய பாதையை அமைக்க மாட்டார்கள். பாதையைத் திறந்து விட்டால், அணையிலிருந்து திறந்து விட்டாற்போல நீர் வெளியேறும். ‘கிடங்குப்’ பகுதியில் நீரை வெளியேற்றுவதால், குளத்தைச் சுத்தம் செய்வதற்காக நீரை வெளியேற்றுவது என்பது அவர்களது நோக்கமாக இருக்க முடியாது.


ஆனால் அந்தக் கிடங்குப் பகுதியைச் சுற்றி ஒரு அகழி போன்ற அமைப்பு இருந்து, அந்தக் கிடங்குப் பகுதியின் வெப்பத்தைத் தணிக்க வேண்டிய அவசியமும் இருந்தால், ஒரு நிரந்த அமைப்பாக, கிடங்கைச் சுற்றி நீர் ஓடும் வண்ணம் அமைத்திருப்பார்கள். அப்படி ஒரு அகழி இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு இன்னும் அடிப்பகுதியை ஆராயவில்லை. 


இன்றைக்கும் தமிழ் நாட்டின் பழங் கோவில்களில் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றி நீர் தேங்கி நிற்கும் வண்ணம், அகழி போல அமைப்புகள் இருப்பதைக் காணலாம். தெய்வ சக்தி இறங்கியிருக்கும், கர்ப்பக்கிருகம், குளுமையாக வேண்டும். அபிஷேகமும், மலர் மாலைகளும், தெய்வத் திரு உருவத்தையும், கர்ப்பக் கிருகத்தையும் எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன. கோடைக் காலத்தில், வெப்பம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி நீர் நிரப்பும வழக்கம் இன்றும், பழங் கோவில்களில் இருக்கிறது. மொஹஞ்சதாரோவின் குளத்து நீர்ப் போக்குப் பாதையும், அது செல்லும் கிடங்கு எனப்படும் அமைப்பும், இதை நினைவு படுத்துகின்றன.


கிடங்கு என்று சொல்லப்படும் இடத்தில் நமக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.
அந்த இடம், 3 X 9 = 27 என்று பிரிக்கப்பட்டு,
ஒன்பது, ஒன்பதாக மூன்று வரிசைகளில் அஸ்திவாரப் பிரிவுகள் அமைந்துள்ளன. 


இதே அமைப்பில் 3 X 3 = 9 ஆக நம் கோவில்களில் நவக் கிரகப் பிரதிஷ்டை இருக்கிறது.
3 X 9 =27 என்றல் அது வேத ஜோதிடத்தில் உள்ள
27 நக்ஷத்திரங்களை நினைவு படுத்துகிறது.
அதிலும் மூன்று வரிசையாகக் காணப்படுவது, இந்தக் கருத்துக்கு வலு கூடுகிறது.  
27 நக்ஷத்திரங்களையும் ஒன்பது, ஒன்பதாகத்தான் பிரித்துள்ளார்கள்.
அஸ்வினி முதல் ஆயில்யம் வரை ஒரு பிரிவு.
மகம் முதல் கேட்டை வரை இரண்டாவது பிரிவு.
மூலம் முதல் ரேவதி வரை மூன்றாவது பிரிவு.
இந்த நக்ஷத்திரங்களுக்கு அதிபதிகள் உண்டு.
அவற்றை நக்ஷத்திர தேவதை என்பார்கள்.
அவை வேதத்தில் போற்றப்படுகின்றன. 


அந்த தேவதைகளை வழிபடும் வழக்கம் நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கும், ஒரு பறவை, ஒரு மரம், ஒரு தேவதை என்று இருக்கும். அந்தந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், அதே நக்ஷத்திரத்துக்கு உரிய மரம், பறவை, தேவதையின் மூலக் கூறுகளைக் கொண்டிருப்பார்கள் என்பது ஜோதிடக் கருத்து. அவற்றுக்கு உணவு ஈந்து, அவற்றை போஷிக்க போஷிக்க, அதே நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களும் நல்ல ஆரோக்கியம், வளங்களுடன் இருப்பார்கள் என்பது ஜோதிடக் கருத்து.


அது மட்டுமல்ல. ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கும் சில எழுத்துக்கள் உண்டு. அவற்றை உச்சரிக்கும் போது எழும் அதிர்வலைகள், அவற்றைக் குறிக்கும் நக்ஷத்திரத்துடன் ஒத்தவை. எனவே அவரவர் பிறந்த நக்ஷத்திரத்தின் எழுத்தை முதலாவதாகக் கொண்டு, பெயரிடும் வழக்கம் நம் நாட்டில் சமீப காலம் வரை இருந்து வந்தது.


கவி பாடுபவர்களும், இந்த நக்ஷத்திர எழுத்தை உபயோகித்தார்கள். ஒரு கவிஞர் அல்லது புலவர், தான் வணங்கும் இஷ்ட தெய்வத்தைப் போற்றிய பிறகே தனது பாடலைத் தொடங்குவார். அந்த இஷ்ட தெய்வத்தை ரகசியமாகப் பாடலில் பூட்டுவதும் உண்டு. கடவுள் வாழ்த்தின் முதல் பாடலின் முதல் சீரின் மூன்றாம் எழுத்தில், இஷ்ட தெய்வத்தின் நக்ஷத்திர எழுத்தை அமைப்பது வழக்கம் என்று சூடாமணி நிகண்டு சூத்திரம் (12-102) கூறுகிறது. அப்படி அமைக்கப்படும் பாடல், அழியாமல் பல காலம் நின்று நிலைத்து, புகழுடன் இருக்கும் என்னும் கருத்தில் இவ்வாறு செய்யப்படுகிறது. அவ்வாறு செய்ய வைப்பது நக்ஷத்திரமே என்பது தொன்று தொட்டு பாரதம் முழுவதும் இருந்து வந்த கருத்தாகும்.


தமிழ் ஜோதிடத்தில் நக்ஷத்திரத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகவே இருந்தது. 76 ஆவது கட்டுரையில் கண்ட கூடலூர் கிழார், தனது புற நானூற்றுப் பாடலில், இந்த பெயருடைய நக்ஷத்திரத்தில் சந்திரன் செல்லும் போது, இந்த நக்ஷத்திரம் உதித்து, இந்த நக்ஷத்திரம் மறைந்த போது என்று சொல்லித்தான், சொல்ல வந்த கால- நேரத்தைச் சுட்டிக் காட்டுகிறார். 


நக்ஷத்திரங்களை வழிபடுதலும், அவற்றின் தேவதைகளை வழிபடுதலும் நம் நாட்டில்  வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. அவற்றுக்கான தெய்வங்களை வழிபடுதல் தமிழ் நாட்டில் இன்றும் இருக்கிறது. மொஹஞ்சதாரோ காலத்தில், அதாவது கிருஷ்ணன் வாழ்ந்த 5000 ஆண்டுகளுக்கு முன் நக்ஷத்திர தேவதைகளை வழிபடும் வழக்கம் இருந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்களையும், மொஹஞ்சதாரோவில் வணங்கப்பட்ட்டிருக்கக்கூடிய தெய்வங்களையும் அடுத்த கட்டுரையில் காண்போம்.  





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக