வெள்ளி, 9 டிசம்பர், 2011

86. மொஹஞ்சதாரோ அல்லது மஹாபாரதம் – எது முதலில் வந்தது?

ஆரிய- திராவிடப் போர் நடந்தது என்று
இன்னும் நம்பும் திராவிடவாதிகள்,
மொஹஞ்சதாரோவிலும், ஹரப்பாவிலும்,
சிந்து சமவெளி நாகரிகத்திலும்
தங்கள் மூலத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்


முதன் முதலில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ அகழ்வாரய்ச்சிகள் நடந்த பொழுது,
அவை ஆரியப் படையெடுப்புக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக கருதப்பட்டது.
அந்த ஆராய்ச்சிகள் ஆரம்பித்து  ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆகிவிட்டன

1856 முதல் 1872 வரையில் ஹரப்பாவையும்,
1921-22 இல் மொஹஞ்சதாரோவையும் முதன் முதலாக ஆராய்ந்தார்கள்.
ஆனால் அவற்றுக்குப் பிறகு, மேலும் மேலும் பல ஆராய்ச்சிகள் நடந்து விட்டன.
அதே நாகரிக அடையாளங்களுடன்
அதே காலக்கட்டத்தில் (பொ.மு 3000 முதல் பொ,மு 1500 வரை)
இன்று வரை சுமார் 2000 இடங்களை கண்டுபிடித்துள்ளனர். 

அவற்றின் மூலம்
அந்த நாகரிகம் சிந்து நதிப் பகுதியைச் சார்ந்து இருந்திருக்கவில்லை என்றும்,
சிந்து நதிக்குக் கிழக்கே இருந்து,
தற்சமயம் மறைந்து விட்ட சரஸ்வதி நதிப் பகுதியில்
அதிக அளவில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரியவந்துள்ளது


அதாவது
தாங்கள் சிந்து நதி நாகரிக மக்கள் என்று
திராவிடவாதிகள் இன்னும் நினைத்துக் கொண்டிருந்தால்,
அவர்கள் வேத நாகரிகத்தைக் கடைபிடித்தவர்கள்
என்பதை ஒப்புக் கொள்வதாகும்.


உண்மையில் அதே நாகரிகச் சுவடுகள்
பெரும்பான்மையான வட இந்தியப் பகுதிகளில் இன்றும் தொடருகின்றன
என்றும் தெரிய வந்துள்ளது.
அதாவது எந்த நாகரிகத்தைத் திராவிடர்கள் நாகரிகம் என்று
திராவிடவாதிகள் கருதுகிறார்களோ
அது, வட இந்தியாவில் இருந்து வந்திருக்கிறதே தவிர,
தமிழ் நாட்டுப் பகுதியில் அல்ல. 


ஏறத்தாழ 12,60,000 சதுர கி.மீ பரப்பளவுக்கு ஒரே காலக்கட்டத்தில்
இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கும் முன் தொடங்கி,
ஒரே வாழ்க்கை முறையுடன் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர்
என்றும் தெரிய வந்துள்ளது.
ஆஃப்கானிஸ்தானத்தின் வடக்கெல்லையிலிருந்து ஆரம்பித்து,
தெற்கில் மஹாராஷ்டிரத்தின் கோதாவரி நதிக் கரை  வரையிலும்,
மேற்கில் இன்றைய பாகிஸ்தானத்தின் எல்லையில் ஆரம்பித்து,
கிழக்கில் உத்திரப் பிரதேசத்தின் சஹரான்பூர் வரையிலும்
இந்த நாகரிகம் பரவியிருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இந்தப் படத்தில்
1-   வட ஆஃப்கானிஸ்தானத்தில் உள்ள ஷோர்துகை (Shortugai)
2-   உத்தரப் ப்ரதேசத்தின் ஹுலாஸ் (Hulas)
3-   மஹாராஷ்டிரத்தில் உள்ள தைமபாத்.(Daimabad)
4-   ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள சுட்காகென் தோர் (Sutkagen Dor)


இதில் காட்டப்பட்டுள்ள பாகிஸ்தானம், ஆஃப்கானிஸ்தானம் ஆகிய இடங்கள்,
சுதந்திரம் பெறுவதற்கு முன் வரை பாரத நாட்டின் பகுதிகளாக இருந்தன
என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தப் பெயர்களில் சமஸ்க்ருத சாயல் இருப்பதையும் காணலாம்


·         ஆஃப்கானிஸ்தான வட எல்லையில் உள்ள ஷோர்துகை என்னும் இடம், நாம் முன்பே ஆராய்ந்த சக்ஷுஸ் என்னும் ஓக்ஸ்ஸ் நதிக் கரையில் அமைந்துள்ளது. (பகுதி 33) ஸ்ரோதஸ் என்றால்நதியின் போக்குஎன்று அர்த்தம். அதிலிருந்து ஸ்ரோதுகை, ஷோர்துகை என்று உருமாறி இருக்கலாம். இன்றைக்கு அங்கு இஸ்லாம் வந்து விடவே, பழைய நினைவுகள் எல்லாம் அழிந்து விட்டிருக்கும்.

·         உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஹுலாஸ் என்னும் இடப்பெயரில் உள்ள ஹுலா என்பது போர்க் கருவியின் சமஸ்க்ருதப் பெயர்.


·         சுட்காகென் தோர் என்பது சூதாகின் தோர் என்னும் சமஸ்க்ருதச் சொல்லை நினைவு படுத்துகிறது. சூதாகின் என்பதை பிள்ளை பெற்ற தீட்டு எனலாம். தோர் என்பது கயிறு என்று பொருள் படும். இப்படியெல்லாம் என்ன அர்த்தம் இருக்கும் என்ற கேல்வி எழுவது நியாயமே. ஆனால், இந்தத் தொடரின் போக்கில் நாம் ஈரான் நாட்டில் சிறிது பயணம் செய்வோம். அப்பொழுது நாம் பார்க்கும் சில விவரங்களுடன் இந்தப் பெயர்கள் ஒத்துப் போவதைக் காணலாம். இன்றைக்கு சுட்காகென் தோர் என்றழைக்கப்படும் இடம், ஈரான் எல்லையை ஒட்டி, பாகிஸ்தானத்தில் இருக்கிறது. அதைத் தாண்டினால், மிலேச்சர்கள் வாழுமிடம் என்று கருதப்பட்டது.
kI

கீழ்க்காணும் படத்தில் பாகிஸ்தான் – ஈரான் எல்லையில் உள்ள சுட்காகென் தோர் காட்டப்பட்டுள்ளது.
   


(இந்தக் கட்டுரையின்) முதல் படத்தின் அடிப்படையில்
இரண்டு விவரங்களைத் திராவிடவாதிகள் தெரிந்து கொள்ள முடியும்.
(1)  அன்றைய பாரதத்துக்கு மேற்கு, வட மேற்கே, இந்தக் கலாச்சாரம் செல்லவில்லை. இன்றைக்கு இருக்கும்  ஈரான், மத்திய ஐரோப்பா போன்ற பகுதிகள் மிலேச்ச நாடுகள் என்று மீண்டும் மீண்டும் மஹாபாரதத்தில் சொல்லப்படுகின்றன. அந்தப் பகுதிகளிலிருந்து வந்தவன் ஆரியனாக இருந்தால், அவன் முன்பிருந்த பகுதிகளை மிலேச்சம் என்று ஏன் ஒதுக்க வேண்டும்?


(2)  முதல் படத்தில் காட்டப்பட்ட இடத்தில் முதலில் திராவிடர்கள் இருந்தார்கள் என்பது உண்மையென்றால், அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டு, இன்றைய தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள் என்றால், அந்த மொஹஞ்சதாரோ நாகரிகம், தமிழ் நாட்டில் அல்லவா ஊன்றியிருக்க வேண்டும்? அவ்வாறு இல்லாமல், வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் அல்லவா அந்த நாகரிகம் தழைத்திருக்கிறது? தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட பானைகளிலும், எழுத்துக்களிலும் அந்தக் கலாச்சாரத்தின் அடையாளங்கள் காணப்படலாம். அதற்கு வேறு காரணங்கள் இருக்க முடியுமே தவிர, சிந்து சமவெளிக் கலாச்சாரம் அப்படியே இட மாற்றம் நடந்ததற்கான அடையாளங்கள் காணப்படவில்லை.


அதை விட ஒரு முக்கிய விவரம்
சிந்து சமவெளிப் பகுதி என்று முதல் படத்தில் பார்த்தோமே
அந்த இடம் முழுவதுமே மஹாபாரதத்துடன் தொடர்பு கொண்டது.
மஹாபாரதக்கதையில் கௌரவர்கள் மொத்தம் நூறு பேர்.
அவர்களுக்கு ஒரே ஒரு சகோதரி இருந்தாள்.
அவள் பெயர் துஸ்சலை.
அவளை மண்ந்தவன் பெயர் ஜெயத்ரதன்.
அவன் ஆண்ட நாடு, சிந்து நாடு.
அவன் சிபியின் வம்சத்தில் வந்தவன்.
அவன் ஆண்ட சிந்து நாட்டில் மொஹஞ்சதாரோ இருக்கிறது.


இந்த சிவியைப் பற்றி நாம் முன்பே
சிந்து முதல் சோழன் வரை என்னும் கட்டுரையில் (பகுதி 32) எழுதினோம்.
ஆரிய- தஸ்யு போராட்டம் என்று
ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்பட்ட போர்
யயாதியின் ஐந்து மகன்களுக்குள் நடந்த்து.
அவர்களது சகோதரியின் மகன் சிவி ஆவான்.
அவனே புறாவுக்குத் தன் சதையைக் கொடுத்தவன்.
அவன் சிந்து நதிக்கரைக்கருகே ஆண்டான்.
அவன் மகன்கள் நான்கு வம்சமாகப் பிரிந்தார்கள்,
அவர்கள் கைகேயர்கள், மாத்ரகர்கள், வ்ருஷ்தர்பர்கள், சௌவீர்ர்கள்
என ஹரிவம்சம் சொல்கிறது. (1-31-29)


அவர்கள் அந்தப் பகுதியில்,
அதாவது இன்றைய பலுசிஸ்தான், சிந்து, காந்தஹார் பகுதிகளில் ஆண்டு வந்தனர்.
அவர்களுள் சௌவிரன் வம்சத்தில் ஜெயத்ரதன் வருகிறான்.
அவன் ஆண்ட இடம் சிந்து நதி தன் கிளை நதிகளுடன் சேரும் இடமாகும்
என்று அல்-பரூனி கூறுகிறார்.
இன்றைக்கும் சிவி என்னும் பெயரில் பாகிஸ்தானில் ஓரிடம் இருக்கிறது.
சிந்து நதியை ஒட்டிய சிவி உள்ளிட்ட சிந்துப் பகுதிகளை ஜெயத்ரதன் ஆண்டிருக்கிறான்.
இங்கு நமக்கு ஒரு கேள்வி வருகிறது.
சிந்து சமவெளி நாகரிகத்துக்குப் பிறகுதான்
கிருஷ்ணாவதாரம் நடந்திருந்ததென்றால்,
மொஹஞ்சதாரோ உள்ளிட்ட பகுதிகளில்
சிபி, ஜெயத்ரதன் உள்ளிட்ட பல மன்னர்களது ஆக்கிரமிப்பு,
அதனால் புதுக் குடியேற்றங்கள் நடந்திருக்கும்.
அப்படி ஏதும் மாற்றங்கள் இல்லாமல்,
மொஹஞ்சதாரோ
தனது பழைய குடியிருப்பைக் காட்டிக் கொண்டு இருக்கிறதே, அது எப்படி?


மொஹஞ்சதாரோ முதலில் வந்ததா?
மஹாபாரதம் முதலில் வந்ததா?


மொஹஞ்சதாரோ முதலில் வந்ததென்றால்,
பின்னால் வந்த மஹாபாரத ஜெயத்ரதன்
அந்தப் பகுதியை ஆண்ட பொழுது,
மொஹஞ்சதாரோ இப்பொழுது காட்சி தருவது போலவா இருந்திருக்கும்?
அது அழிந்து போயும், உருமாறியும் அல்லவா இருந்திருக்கும்? 


ஆனால் பொ.மு 1500 வரை மொஹஞ்சதாரோவில் மக்கள் வாழ்ந்து,
அதற்குப் பிறகு வெள்ளத்தினால் அந்த இடம் அழிந்து,
அதனால் அங்கிருந்த மக்கள் வெளியேறி விட்டனர்
என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 


அதற்குப் பிறகு அந்த இடத்தில் யாரும் குடியேறவில்லை என்றால்,
மஹாபாரத ஜெயத்ரதன் மொஹஞ்சதாரோ காலத்துக்குப் பிற்பட்டவன் அல்லன்.
அதற்கு முற்பட்டவன் என்றே தெரிகிறது.


கிருஷ்ணாவதாரத்தையும், மஹாபாரதத்தையும், அகழ்வாராய்ச்சியாளர்கள் மறுப்பதில்லை.
அவை நடந்த சம்ப்வங்களே என்று சொல்லும் வண்ணம்
ஆதாரங்கள் இருக்கின்றன.

அந்த மஹாபாரதம் நடந்து முடிந்து 5000 ஆண்டுகள் ஆகி விட்டன
என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன.
பல கல்வெட்டுகளிலும், கலியுக வருடம் காணப்படுகிறது.
அதன்படி நாம் இப்பொழுது கலி மஹாயுகத்தில் 5113 ஆவது வருடத்தில் இருக்கிறோம்.
அப்படியிருக்க மொஹஞ்சதாரோ மட்டுமல்ல,
சிந்து சமவெளி நாகரிகம் முழுவதையுமே
நாம் வேறு கோணத்திலிருந்துதான் பார்க்க வேண்டும்.


மஹாபாரத்தை நம்ப மாட்டேன் என்று ஒரு சாரார் சொல்ல்லாம்.
ஆனால் வெளி நாட்டில் நடப்பதென்ன?
அட்லாண்டிஸ் என்னும் ஒரு பழைய நாடு
ஐரோப்பியர்களது மூதாதையர் நாடு,
அது  கடலுக்குள் முழுகி விட்டது என்று  ப்ளேட்டோ என்னும் கிரேக்க ஞானி சொன்னாலும் சொன்னார்-
இன்றைக்கு ஐரோப்ப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள
அனைத்து தரப்பு விஞ்ஞானிகளும்  அதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


நம் நாட்டிலும், ஏராளமான நூல்கள்
நம் பழைய சரித்திரத்தைப் பற்றிப் பேசுகின்றன.
குறிப்பாக ராமாயணம், மஹாபாரதம் என்ற இரண்டும்
இது இவ்வாறு நடந்தது என்று சொல்லும் இதிஹாசங்களாக இருக்கின்றன.
அவற்றை யாரும் பொழுது போக்குக்குப் படிப்பதில்லை. 
ஆர்வத்துடனும், பக்தியுடனும்
பரம்பரை பரம்பரையாக மக்கள் அவற்றைப் படித்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட இதிஹாசங்கள் சொல்லும் சரித்திரத்தை
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அறிவு ஜீவிகள்.
அவர்கள் அவற்றைக் கட்டுக் கதை என்பார்கள்.


திராவிடவாதிகள் விஷயமே வேறு.
அவர்கள் அவற்றை ஆரியக் கதைகள் என்பார்கள்,
தமிழர் மீது திணிக்கப்பட்ட கதைகள் என்பார்கள்.
அவர்கள் சொல்வது உண்மையென்றால்,
81 ஆவது கட்டுரையில் நாம் கண்டோமே,
தொழுநைக் கரையில் நடந்த சம்பவம் என்று
அக நானூறில் சொல்லப்பட்ட சம்பவம்
அதை எழுதிய மருதனிள நாகனார் திணிப்பாளரா,
அல்லது ஆரியத்திணிப்பினால் புத்தி பேதலித்து
கிருஷ்ணன் கதையைச் சொன்னவரா? 

முல்லைப் பாடல்களில் கிருஷ்ணனைக் கொண்டாடுகிறார்களே,
அவை எல்லாம் கற்பனையா?
ஆரியத் திணிப்பா? 


கற்பனை இல்லாத இலக்கியம் கிடையாது என்று சொல்லாம்.
ஆனால் ராமாயணம், மஹாபாரதம் என்னும் இரண்டு இதிஹாசங்களும்,
நடந்ததை நடந்த படியே சொல்வன,
அதனால்தான் அவை இதிஹாசங்கள் எனப்பட்டன.
இதிஹாசம் என்றால் இது இவ்வாறு நடந்ததுஎன்று பொருள். 


இவற்றை எழுதினவர்கள் திராவிடவாதிகள் சொல்வது போன்ற
ஆரியப் பார்ப்பனர்கள் அல்லர். 

வற்றைச் சொன்னவர்கள் முற்றும் துறந்த முனிவர்கள். 

தமிழ்ச் சங்கத்தில் பாடல் அரங்கேற்றிய வான்மீகியாரே,
சமஸ்க்ருதத்தில் ராமாயணம் எழுதியவர் என்பதை
65 ஆவது கட்டுரையில் பார்த்தோம்.
எந்த சுய நலமும் இல்லாத,
மக்கள் நலம் விரும்பின முனிவர்கள் அவர்கள்.
அவர்கள் சொன்னதில் எந்தக் கற்பனையும் இருக்க முடியாது.


கற்பனை எங்கு, எப்படி வருகிறது என்று சொல்லலாம்.
80 ஆவது கட்டுரையில் சாண்டில்ய ரிஷியின் பெயரில்
ஒரு சங்கப் பாடல் இருக்கிறது என்று பார்த்தோம்.
அதில் அந்த ரிஷியை நினைவுறுத்தும் வண்ணம்
நிலவைத் தொழும் காட்சி சொல்லப்பட்டுள்ளது. 

அந்தப் பாடலில்,
அந்தக் காட்சியைக் கண்டு தலைவி, தலைவனை விட்டுப் பிரிந்தை
எண்ணி வருந்துகிறாள்.
இப்படி ஒரு பாடலை ஒரு ரிஷி எழுதியிருக்க முடியாது என்று சொல்லலாம்.
ஆனால் அந்த நாளில், புலவர் என்னும் அங்கீகாரம் பெற விரும்புபவர்கள்,
அகப் பொருளைப் பற்றியும் பாட வேண்டும் என்று நினைத்தார்கள்.
தங்களுக்குப் பரிச்சயம் இல்லாத பொருளைப் பற்றி எழுதும் போது
கற்பனையை நாட வேண்டியிருந்தது. 


ஐம் பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியை எழுதியவர்
திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவராவார்.
சமண முனிவர்கள் துறவறம் மேற்கொண்டவர்கள்.
அதனால் அவர்களால் அக வாழ்க்கையைப் பற்றி எழுத முடியாது
என்ற கருத்து எழவே,
அவர் தம்மால் முடியும் என்று காட்டுவதற்காக எழுதினதே சீவக சிந்தாமணியாகும். 

அந்தக் காப்பியத்தின் கதாநாயகனான சீவகன்
தமிழ் நாட்டான் அல்லன்.
அந்தக் கதையும், தமிழ் நாட்டில் நடக்கவில்லை.
அந்தக் கதை சஸ்க்ருத்தில் முதலில் எழுதப்பட்து.
அதைத் தழுவி தமிழில் எழுதினார் திருத்தக்க தேவர்.

அதை ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று
என்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் ராமாயண, மஹாபாரதங்களை இகழ்வோம்!


அப்படி எழுந்த மஹாபாரதக் கதையில்
ஜெயத்ரதன் போரில் கொல்லப்படுகிறான்.
அவன் நாடு பாண்டவர்கள் வசம் வருகிறது. 
இது மஹாபாரதம் சொல்லும் விவரம். 


மொஹஞ்சதாரோவுக்குப் பிறகு, மஹாபாரதப் போர் நடந்திருந்தால்,
அதன் தாக்கம் மொஹஞ்சதாரோவில் நிச்சயம் தெரிந்திருக்கும்.


ஆனால் அந்த இடம் 5000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி,
3500 ஆண்டுகள் வரை நன்கு இருந்திருக்கிறது.
அந்த இடம் மட்டுமல்ல,
ஏறத்தாழ, 12,60,000 சதுர கி.மீ பரப்பளவுக்கு
சிந்து சம்வெளி நாகரிகம் பரவியிருக்கிறது.
இந்த இடம் முழுவதும் மஹாபாரதச் சம்பவங்கள் நடந்த இடமாகும். 


3500 ஆண்டுகளுக்கு முன் இந்த நாகரிகம் மறைந்த பிறகு,
வேதம் வந்து, ராமன்,பிறந்து,
கிருஷ்ணன் பிறந்து,
அவன் நினைவு சங்கப் பாடலில் நுழைந்து
என்று இவை அனைத்தும் நடக்க வேண்டுமென்றால்,
அது சினிமா ஃப்ளாஷ் பாக்கில்தான் சாத்தியமாகும்..
ஆனால் 5000 வருடங்களாக நடைபெற்று வரும்
கலியுக வருடக் கணக்கில் பலப்பல கல்வெட்டுகள்
பாரதம் முழுவதும் கிடைத்துள்ளன. 


கலியுகம் பிறந்து 89 ஆவது ஆண்டில் அரசாண்ட
அர்ஜுனது கொள்ளுப் பேரனான ஜனமேஜயனால்
வெளியிடப்பட்ட செப்பேட்டு சாஸனம் சொல்லும் விவரத்தைத்
தொல் பொருள் ஆராய்ச்சிக் கழக வெளியீடு
(பக்கம் 333, 334 Indian Antiquary) தெரிவிக்கிறது. 


கலியுகத்தின் பல்வேறு வருடங்களிலும் எழுதப்பட்ட சாசனங்கள்
தமிழ் நாட்டிலேயே கிடைத்துள்ளன.
பார்த்திவசேகரபுரம் கல்வெட்டில்
நாள் சுத்தமாகக் காலத்தை எழுதி வைத்துள்ளார்கள்.
ஒரு நாள், இரண்டு நாட்களல்ல,
கலியுகம் பிறந்து லட்சக்கணக்கான நாட்களுக்குப் பிறகு
எழுதப்பட்ட சாசனம் அது. 

கலியுக்க் கோட்டுநாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து
ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்ற நாளில்
கோக்கரு நந்தடக்கன் தனது ஆட்சிக் காலத்தின்
ஒன்பதாவது வருடத்தின் 15 ஆவது நாளில் வெளியிட்ட சாசனம் என்று
அதில் எழுதப்பட்டுள்ளது.
அதாவது கலியுகம் தொடங்கி
14,49,087 ஆவது நாளன்று அந்த சாசனம் எழுதப்பட்டது என்கிறது அந்த வாசகம். 

இதை ஆங்கிலேயர்கள் புகுத்திய ஆண்டுக்கணக்கில் கணக்கிட்டால்,
பொ.பி 1143 ஆம் ஆண்டு ஆகும். 


2000 வருடங்களுக்கு முன் வரை
ஆங்கிலேயர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் சரித்திரமே கிடையாது.
ஆனால் தமிழ் நிலத்தில் வாழ்ந்தவர்கள்,
கலியுகம் தொடங்கி ஒவ்வொரு நாளாகக் கணக்கிட்டு,
இன்றைக்கு இத்தனை லட்சம் நாட்கள் ஆகி விட்டன 
என்று சொல்லியிருக்கிறார்கள் என்றால்
அந்தக் கலியுகக் கணக்கைப் பின்பற்றிய அவர்கள் மடையர்களா? 

அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுச் சரித்திரத்தைத்
தவறாமல் பதித்து வந்த புத்திசாலிகளா? 


இந்தக் கலியுகக் கணக்கு ஆங்கிலேயன் வந்த பிறகும்
தொடர்ந்திருக்கிறது.
எடுத்துக்காட்டாக,
கலியுகம் பிறந்து 4945 ஆண்டில்,
அதாவது பொ.பி. 1844 ஆம் ஆண்டில் 
ஒரு யாதவக் குடும்பத்தால் கொடுக்கப்பட்ட கோவில் தானத்தைப் பற்றிய கல்வெட்டு,  
நம் தமிழ் நாட்டில் தஞ்சை நகரம், கொள்ளுப் பேட்டையில்
கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

ஒவ்வொரு நாளாகவும், வருடமாகவும் பின்பற்றி வந்திருக்கிறார்களே
இந்த 5000 வருடத்துக்கும் மேலான கலியுகக் கணக்கு கற்பனையா? 

அதைப் பின்பற்றிய அரசன் முதல் ஆண்டி வரையிலான
அனைத்து இந்திய மக்களும் பொய்யர்களா?கலியுகம் என்பதே
கிருஷ்ணன் இந்த உலகை விட்டு நீங்கிய பிறகு ஆரம்பித்தது
என்பதற்குப் பல நூல் ஆதாரங்கள் இருக்கின்றன.
அவற்றின் அடிப்படையில் கலியுகம்
கி.மு. 3102 இல் ஆரம்பித்தது என்று தெரிய வருகிறது. 


சற்றேறக்குறைய அதே காலக்கட்டத்தில்
சிந்து சம்வெளி நாகரிகம் ஆரம்பித்தது என்றால்,
அது ஆரம்பித்து எந்த பாதிப்பும் இல்லாமல்
1500 வருடங்கள் வரை அது இயங்கியது என்றால்,
அந்த நாகரிகம், மஹாபாரதப்போர் முடிந்து,
அமைதி திரும்பிய பிறகு மக்கள் ஆரம்பித்தப் புது வாழ்க்கை என்றுதானே அர்த்தம்?


சிந்து சமவெளிப் பகுதிகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள்,
அங்கு இன்றைக்கும் நாம் பின்பற்றும்,
வேதச் சடங்குகள், வாஸ்து முறைகள் போன்றவையே
தெரிகின்றன என்று சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த நாளில் மீட்டர் முறையில் அளக்க மாட்டார்கள்.
அங்குலம், தனுர்முஷ்டி என்று அளப்பார்கள். 

மொஹஞ்சதாரோ, ஹரப்பா,
தோலவிரா, லோதால், காலிபங்கன்
போன்ற சிந்து சமவெளிப் பகுதிகளில்
உள்ள வீடுகள், பொருட்கள் போன்றவற்றின் அளவீடுகளே,
2000 ஆண்டுகளுக்கு முன் டில்லியில் நாட்டப்பட்ட 
துருப்பிடிக்காத இரும்புத்தூணிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


அந்த அளவீட்டு முறையே கங்கைக் கரைக் கண்டுபிடிப்புகளிலும் காணப்படுகிறது. 
இது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை இங்கு படிக்கலாம்:-அதாவது, நம் நாட்டில் இன்றும் வழங்கி வருகிற கட்ட்ட அமைப்பு,
வாஸ்து, பொறியியல் போன்றவை
மாறாமல் சிந்து சமவெளி முதல் இருந்து வந்திருக்கிறது. 

சிந்து சம்வெளியில் அவை ஆரம்பிக்கவில்லை.
அதற்கும் முன்பே அவை இருந்திருந்தால்தான்,
திருத்தமான முறையில் அவர்கள் தங்கள் நகரங்களை நிர்மாணித்திருக்க முடியும்.


அங்குதான் நாம் விஸ்வகர்மா, மயன் போன்றவர்களது
வாஸ்துவின் பழமையை அறிகிறோம். 

கௌரவர்களுடன் என்றைக்கும் மனஸ்தாபம் இருந்ததால்,
பாண்டவர்கள் தங்களுக்கென ஒரு நகரத்தை நிர்மாணிக்க விரும்பினார்கள்.
அதற்காக காண்டவ வனம் என்னும் காட்டை அழித்தார்கள்.
அந்த அழிவில் சிக்கிக் கொண்ட மயனைக் காப்பாற்றினார்கள்.
அதற்குக் கைம்மாறாக அவன் பாண்டவர்களுக்கு
அரண்மனை கட்டித்தர விரும்பினான்.
அந்தக் காட்டை அழித்த இடத்தில்,
ஒரு நகரத்தை நிர்மாணிப்பதற்கு ஏற்றாற்போல நிலத்தைத் தேர்ந்தெடுத்து,
அளந்து எடுத்தார்கள் என்கிறது மஹாபாரதம்.
அதிலேயே வாஸ்து சாஸ்திரம் அன்று இருந்தது என்று நமக்குத் தெரிந்து விடுகிறது. 

அந்த நகரத்தைச் சுற்றி
அரணையும், அகழியையும் மயன் அமைத்தான். 
இந்திரப் பிரஸ்தம் என்று அழைக்கப்பட்ட அந்த நகரம் இருந்த இடமே
இந்தியத் தலைநகரமான டில்லி இருக்கும் பகுதியாகும். அந்த நகரத்தில் மயன் கட்டிய அரண்மனையின் முக்கிய அம்சம்,
அரண்மனைக்குள் இருந்த குளமாகும். 

அரண்மனைக்குள் குளம் என்பது ஒரு புதிய அமைப்பாக இருந்திருக்க வேண்டும்.
ஏனெனில் அது குளம் என்று அறியாமல்,
அதில் துரியோதன்ன் விழுந்து விடுகிறான் என்கிறது மஹாபாரதம். 

அரண்மனைக்குள் குளம் இருந்தது என்றால்,
அதற்கு எங்கிருந்து நீர் வரத்து கிடைத்தது? 


மழை நீராக இருக்க முடியாது.
ஊற்று நீராகவும் இருக்க முடியாது,
ஏனெனில் குளத்தைச் சுற்றிலும், அரண்மனைப் பகுதிகள் இருந்தன.
அந்தக் குளத்துக்கு நீர் வரத்தும்,
நீர் வெளியேற்றமும் எவ்வாறு இருந்திருக்கும் என்னும் கேள்விகளை எழுப்பினால்,
அதற்கு விடையை, மொஹஞ்சதாரோவின்
குளம், கிணறு அமைப்புகளில் பெறுகிறோம். 


மயன் கட்டிய பாண்டவர் அரண்மனையும்,
அதிலிருந்த குளமும் நாம் கண்டதில்லை.
ஆனால் அந்த மயனால் பயிற்றுவிக்கப்பட்ட
பல விஸ்வகர்மாக்கள் தாங்கள் கற்றுக் கொண்ட திறமையை
மொஹஞ்சதாரோவில் காட்டி,
அந்தத் திறமையை இன்னும் செப்பனிட்டு,
சிந்து சமவெளிப் பகுதியின் பிற இடங்களிலும் காட்டியுள்ளனர். 


நீராதாரத்தை உண்டாக்கிப் பாதுகாக்கும் அந்தக் குறிப்பிட்ட திறமை
தமிழ் நாட்டில் எங்குமே காணப்படவில்லை.
சிந்து சமவெளி மக்களாக இருந்திருந்தால்தானே,
அதன் சுவடு தமிழ் நாட்டில் இருந்திருக்கும்? 

அது என்ன என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக