எனது நீண்ட கால திட்டம் இப்போது வடிவம் பெறுகிறது.
“பாரதத்தின் வரலாறு”
என்னும் தொடர்
காணொளியின் மூலம்,
வேத
நாகரிகத்தின் தொடக்கம், அதைத் தொடங்கியவர், வேத நாகரிகம் பிறந்த இடம் மற்றும் அது இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பரவினவிதம் ஆகியவற்றை, நான்
கொண்டு வர உள்ளேன். ஆரியப்
படையெடுப்பு / இடப்பெயர்வு போன்ற சிக்கலான
பிரச்சினைகள், மக்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தார்களா அல்லது
இந்தியாவுக்கு வெளியே சென்றார்களா, எப்படி, எப்போது - இந்த விவரங்களையும் நீங்கள் இந்தத் தொடரில் எதிர்பார்க்கலாம்.
தமிழின் கடந்த காலத்தைப் பற்றிய எனது ஆர்வம், இதிஹாச-புராணத்துடன் தமிழ் ஆதாரங்கள் ஒருங்கிணைந்து இருப்பதைக் காட்டியது. இவை பாரதத்தின் கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ள அவசியம் என்று எப்போதும் என்னை நினைக்க வைத்தது. காலப்போக்கில், இரண்டு ஆதாரங்களுக்கிடையில் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருந்த அம்சங்களை அடையாளம் காணத் தொடங்கினேன், அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்தும்போது முழுமை அடைகின்றன. அவற்றில் ஒன்றை மட்டுமே ஆதாரமாக எடுத்துக்கொண்டால் அது ஒரு முழுமையான பார்வையை அளிக்கவில்லை.
ஆகவே, இந்தத் தொடர் தமிழ் மற்றும் வட இந்திய மூலங்களின் ஒருங்கிணைந்த பகுப்பைக் காணப் போகிறது, இது நூல்களில் காணப்படும் சிக்கலான மற்றும் முரண்பாடான அம்சங்களுக்கான
உறுதியான பதில்களைக் கண்டறியவும், நமது
கடந்த காலத்தைப் பற்றிய நமது புரிதலுக்கும் உதவும். பாரதத்தின் கடந்த
காலத்தை நிர்மாணிப்பதற்கான எனது இந்த முயற்சியில், இலக்கியம், தொல்பொருள், மரபணு மற்றும் பிற ஆதாரங்களுடன் தமிழ் ஆதாரங்களை நான் ஆய்வு செய்வேன். பண்டைய தமிழர்களின் புகழ்பெற்ற நிலமான “குமரிக் கண்டத்தின்” உண்மை விவரங்களைப் பற்றியும் நான் பேசுவேன்
என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
ஆங்கில பதிப்பைத் தொடர்ந்து தமிழ்ப் பதிவு வெளியிடப்படும். ஆக்கபூர்வமான கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் பங்களிப்புகள் (யோசனைகள்) வரவேற்கப்படுகின்றன.
முதல் காணொளி:
முதல் காணொளியில், பண்டைய சோழ வம்சத்திற்கும் வட
இந்தியாவின் சில முக்கிய வம்சங்களுக்கிடையேயான உயிரியல் தொடர்பை ராஜேந்திரசோழரின் திருவாலங்காடு செப்பேட்டிலும், அவரது மகன் வீரராஜேந்திராவின் கன்னியாகுமரி கல்வெட்டிலும் கொடுக்கப்பட்டுள்ள பரம்பரை
பட்டியலின் அடிப்படையில் நிறுவுகிறேன். யயாதியின் பரம்பரையில் வரும் துஷ்யந்தனின் மகன் பரதனின் சொந்த மகனே முதல் சோழன் என்று ராஜேந்திர சோழர் செப்பேடு
கூறுகிறது. சோழவம்சத்தினர் ராமனின் பரம்பரையில் வந்தவர்கள் என்று வீரராஜேந்திரர் மிகவும் வெளிப்படையாக எழுதியுள்ளார். துஷ்யந்தன் மகன் பரதன் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர், ராமர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர், ஆனால் சோழர்கள் எப்போதும் தங்களை சூரிய
வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டியதால் இந்த இரண்டு பதிப்புகள் பரஸ்பரம் முரண்படுகின்றன.
இந்த முரண்பாடு யயாதியில் ஆரம்பிக்கிறது. யயாதி ஒருவரே சூரிய மற்றும் சந்திர வம்சத்தில் தோன்றுகிறார். ராமரின் திருமணத்தின் போது வசிஷ்டரால் விவரிக்கப்பட்ட ராமரின் வம்சாவளிப் பட்டியலில் யயாதியின் பெயர் உள்ளது. ஆனால் இதேபோன்ற ஒரு பட்டியலை இதே வசிஷ்டர் மீண்டும் விவரிக்கிறார். ராமரை ராஜ்யத்திற்குத் திரும்பும்படி வற்புறுத்திய நேரத்தில் இந்தப் பட்டியலைத் தரும் வசிஷ்டர் அதில் யயாதியின் பெயரை மட்டும் விட்டு விடுகிறார். இந்தப் பட்டியலை வசிஷ்டர் கூறுகையில், மூத்த மகன் மட்டுமே இக்ஷ்வாகு வம்சத்தில் ஆட்சியை ஏற்றுக்கொள்கிறான். இவர்களெல்லாம் மூத்த பிள்ளைகள் என்று சொல்லும் போது, யயாதியின் பெயர் சொல்லப்படாததால், யயாதி மூத்த மகனல்லன், ஆனால் ராமனது முன்னோர் தான் என்று நமக்கு விளங்குகிறது. யயாதியின் தந்தை நஹுஷனுக்கு அடுத்து யயாதியின் மகன் நாபாகன் இந்தப் பட்டியலில் இடம் பெறுகிறார்.
இதனால் யயாதி, சந்திர வம்சத்திற்கு தத்து கொடுக்கப்பட்டார் என்ற யூகத்திற்கு இடமளிக்கிறது. விஷ்ணு புராணத்தின் சந்திர வம்சப் பட்டியலில் நஹுஷனது பெயர் தோன்றினாலும், வால்மீகி ராமாயணத்தில் வசிஷ்டரின் 2 வது பட்டியலில் தோன்றும் அவரது பெயர், அவர் இக்ஷ்வாகு சிம்மாசனத்தில் ஏறினார், ஆனால் அதற்குப் பிறகு சந்திர வம்சத்துக்குச் சென்றுவிட்டார் என்பதைக் காட்டுகிறது. நஹுஷன் இந்திரன் பதவியை ஏற்றுக்கொண்டு அகஸ்திய முனிவரை துஷ்பிரயோகம் செய்த பின்னர் கீழே விழுந்த புராணக்கதை இதை ஆதரிக்கிறது. யயாதியும் ஸ்வர்கத்தில் இருந்து விழுந்ததைப் போன்ற ஒரு சம்பவம் உள்ளது. இந்த வெளிப்புற புராணக்கதைகள், அவற்றின் உருவக அர்த்தங்களுக்காக மற்றொரு அத்தியாயத்தில் விவாதிக்கப்படும்
இப்போது யயாதி சூரிய வம்சத்திலிருந்து விலகி சந்திர வம்சத்தில் நுழைந்தார் என்பதைக் கவனிப்போம், இது தத்தெடுப்பு மூலம் மட்டுமே சாத்தியமாகும். புருவின் பரம்பரையில் வந்த துஷ்யந்தனின் விஷயத்தில் துர்வசுவின் பரம்பரையால் தத்து எடுக்கப்பட்டார் என்று விஷ்ணு புராணத்திலும் இதே போன்ற மாற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தைவழி உறவினர்களின் குடும்பங்களுக்குள் இந்த மாற்றம் நிகழ்ந்தது, ஒரே மரபணு தொடர்ந்து இருப்பதை உறுதி செய்தது.
புருவும் துர்வசுவும் இக்ஷ்வாகுவின் வம்சாவளியில் வந்த யயாதியின் மகன்களாக இருப்பதால், அதே தந்தைவழி மரபணுவை ராமருடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். திருவாலங்காடு செப்பேடுகளின்படி, துஷ்யந்தனின் மகன் பரதனின் நேரடி வம்சாவளியாக முதல் சோழன் இருந்ததால், சோழனும் ராமரின் அதே y-குரோமோசோமை (ஆண் வழி மரபணு) பகிர்ந்து கொண்டான்.
இவ்வாறு ராஜேந்திரர், மற்றும் வீரராஜேந்திரர் குறிப்பிட்டுள்ள பரம்பரை, உயிரியல் ரீதியாக ஒன்றுதான் என்பதை நாம் காணலாம். முதல் சோழர் பரதனுக்குப் பிறந்ததால், ராமரின் தந்தைவழி மூதாதையரான யயாதியிடமிருந்து வந்தவர் என்று வீரராஜேந்திரர், ராமரின் குடும்பத்தில் முதல் சோழரின் பிறப்பை அடையாளம் கண்டிருக்கிறார்! சங்ககால நூல்கள் தொடங்கி, 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை எழுதப்பட்ட பல நூல்களில் ராமருடனான தொடர்பு சொல்லப்பட்டுள்ளது.
ராமன் மனுவின் வம்சத்தில் வந்ததால், மரபணு அடிப்படையில், சோழர்கள் தங்கள் வம்சாவளியை மனு மற்றும் சூரியனிடமிருந்து ஆரம்பித்தனர். எனவே சோழர்கள் சூரிய வம்சத்தினர்.
சோழரின் வம்சாவளியில் அறியப்படாத மற்றொரு அம்சம். உள்ளது. அவர்கள் சிபியைக் கொண்டு ‘செம்பியன்’ என்ற பட்டப் பெயரைக் கொண்டிருந்தனர். யயாதியின் மற்றொரு மகன் அனுவின் பரம்பரையில் சிபி வருகிறார். எனவே சிபியும் அதே தந்தைவழி மரபணுவை ராமருடன் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் சோழர்கள் ஏன் தங்களை சிபியுடன் இணைத்துக் கொண்டார்கள்? பரதனுடைய தொடர்பை எங்குமே சொல்லவில்லையே, ஏன்?
விஷ்ணு புராணத்தின் விவரங்களைப்
பார்க்கும்போது,
பரதனுக்கு (சோழனின் தந்தை) ஒன்பது மகன்கள். அவர் அந்த ஒன்பது
மகன்களையும் கை விட்டு விட்டார் என்று தெரிய வருகிறது. ஒன்பது மகன்களும் தங்கள் தாய்மார்களால்
கொல்லப்பட்டனர் என்று விஷ்ணு புராணம்
கூறுவது ஏற்புடையது அல்ல. .
திருவாலங்காடு செப்பேட்டின் மூலம் குறைந்தபட்சம் ஒரு மகன் (சோழன்) கொல்லப்படவில்லை என்று தெரிகிறது. மகன்கள் கைவிடப்பட்டனர், ஆனால் அவர்கள் தப்பிப்பிழைப்பதற்கான
சொந்த வழிகளைக் கண்டுபிடித்தார்கள். வீரராஜேந்திராவின் கல்வெட்டு, பரதன் மகனான முதல் சோழர் ஒரு சிறிய படையுடன் புறப்பட்டு தெற்கே காவேரி நதி ஓடும் பகுதியில் ஒரு
ராஜ்யத்தை நிறுவினார் என்று கூறுகிறது. இந்த சோழன் சொந்த தந்தையான பரதனால் கைவிடப்பட்டபோது சிபியின் குடும்பத்தினரால்
தத்தெடுக்கப்பட்டிருப்பான். அதனால் சோழர்கள் தங்களை சிபியின் சந்ததியினர்
என்று அடையாளப்படுத்திக் கொண்டனர், அதே
சமயம் பரதனை பற்றி எந்த வார்த்தையும் சொல்லவில்லை, திருவாலங்காடு செப்பேடு மட்டும் இல்லையென்றால் பரதனுடன், சோழர்களுடனான தொடர்பை நாம் ஒருபோதும்
அறிந்திருக்க மாட்டோம்.
இப்போது மரபணு குறிப்புகள்:
·
சிபியின் மகன் கேகய நாட்டை நிறுவுகிறார். கேகயம், இன்றைய பாக்டிரியா (Bactria) என்னும் நாடு என்று தெரிகிறது. ராமர் மற்றும் சோழர் ஆகியோரால் பகிரப்பட்ட மரபணு
இந்தியாவுக்கு
வெளியே சென்றதை இது காட்டுகிறது இதே மரபணு சோழர் மூலம் தென்னிந்தியாவுக்கு பூம்புகார் வரை வந்திருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் காணப்படும் மரபணு
குறிப்பான் மத்திய ஐரோப்பாவிலும் இருக்கும்
·
சிபியின் மூதாதையர் அனு
இந்தியாவிலிருந்து மேற்கு ஆசியா / மேற்கு ஐரோப்பாவுக்குச் சென்றார். அவர் மூலம், ராமன், சோழர் ஆகியோருக்குப் பொதுவான மரபணு இந்தியாவுக்கு வெளியே சென்றிருக்கிறது.
·
பரதனின் மூதாதையரான துர்வசுவின் சந்ததியினர் யவனர்கள்
என அடையாளம் காணப்பட்டனர்
·
பாண்டவர்களின் விஷயத்தில் அவர்கள் இந்தியாவுக்கு வெளியில்
இருந்து வந்தவர்களால் பிறந்தவர்கள்! இந்த மரபணு கலி யுகம் பிறப்பதற்கு முன்னால் இந்தியாவில் நுழைந்திருக்கிறது. பாரம்பரிய கலியுக தேதியிலிருந்து
கழிக்கப்பட்ட மகாபாரத தேதியை அடிப்படையாகக் கொண்டு கி.மு 3200 ஆக நான் நேரத்தை வழங்கியுள்ளேன், பாண்டவர் மகன்களில் பெரும்பாலோர் மகாபாரதப்
போரில் இறந்திருந்தாலும், அவர்களது பல தார மணத்தினால், பல மகன்கள் இருந்திருக்க வேண்டும். அவர்களின் மரபணு இன்னும் தொடர்ந்து இருக்கலாம்.
இதுவரை விவாதிக்கப்பட்ட அனைவரின்
பொதுவான மூதாதையர் வைஸ்வத
மனு.
மனு அளித்துள்ள இந்திர துவஜம் என்னும் பாடலில் கந்தனை, சுப்பிரமணியர் என்று வணங்கியுள்ளார். இதன் மூலம், கந்தன் மனுவின் காலத்துக்கு முற்பட்டவர் என்று தெரிகிறது. அந்தக் கந்தனோ, முதல் தமிழ் சங்கத்தை தன் தந்தை இறையனாருடன் ஆரம்பித்து வைத்தவர். இதன் மூலம் கந்தன் என்னும் முருகன் தமிழ் வரலாற்றை ஆரம்பித்து வைத்தவர் என்று குறுக்கி விட முடியாது பாரதத்தின் வரலாறே அவரிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று புலனாகிறது. இனி வரும் காணொளிகளில் அந்த வரலாற்றைக் காண்போம்.
(இந்தக் கட்டுரையின் தமிழாக்கம் உதவி: திருமதி புவனா சூரிய நாராயணன்)
இந்தக்
கட்டுரையின் ஆங்கில மூலம் Indic Past series 1: Solving Yayati mystery and Rama’s connection to Chola.
Really interesting to hear and read about Chola origin. Thanks
பதிலளிநீக்கு