வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

40. தமிழ் வேந்தர்கள் ஆண்டது தென்பகுதி - திராவிடமல்ல.




தாமிரபணி ஆற்றுக்குத் தெற்கே மலய பர்வதத்துடன் கூடிய நிலப்பகுதி, முயல் போன்ற வடிவில் இருந்தது என்று சஞ்சயன் கூறினான். (பகுதி 39). இன்று அங்கு அப்பகுதி அந்த அமைப்பில் இல்லை.
ஆனால் மலய பர்வதம் என்று சொல்லப்பட்டது இன்று மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியாகும். 

அது கன்னியாகுமரியுடன் முடிந்து விடுகிறது. ஆனால் மஹாபாரதம் மற்றும் ராமாயணம் கொடுக்கும் விவரங்களின்படி, தாமிரபரணி ஆறு தொடங்கி தெற்கில் மலய பர்வதம் இன்னும் செல்கிறது

இந்த மலயபர்வததைக் கொண்ட இடம் சாகத்துவீபம் என்று அழைக்கப்பட்டது.
இந்த உலகின் ஏழு பெரும் நிலப்பகுதிகளில் சாகத்த்வீபமும் ஒன்று.
பாரதவர்ஷம் இருக்கும் ஜம்புத்தீவு என்னும் நாவலந்தீவினைப் போல, சாகத்தீவும் சஞ்சயனால் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அதன் முக்கிய மலை மலய பர்வதம் ஆகும்.


அதாவது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதி மலய பர்வதம் எனப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்தியக் கடலுக்குள் அந்த மலை நெடுந்தூரம் செல்கிறது.
அதன் முழு நீளத்தையும் உள்ளடக்கி அந்த நாளில் இருந்த நிலப்பரப்பு சாகத் துவீபம் எனப்பட்டது.
மஹாபாரத காலத்தில் ஒரு சிறிய பகுதியாக, அதாவது ஜம்புத்துவீபத்தின் காது போல பாரத வர்ஷத்திலிருந்து தன் கடலில் இந்தப் பகுதி தொங்கிக் கொண்டிருந்தது என்பதை சஞ்சயன் வர்ணனையின் மூலம் தெரிகிறது.



சென்ற பகுதியில், பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்ட சாரங்கத்துவஜன் என்னும் பாண்டிய மன்னனைப் பற்றித் தெரிந்து கொண்டோம். சாரங்கத்துவஜன், திருஷ்டத்யுமனுடன் சேர்ந்து துரோணரை எதிர்த்துப் போரிட்டான்.
போரில் துரோணர் கொல்லப்பட்டதைக் கேட்ட அவர் மகன் அஸ்வத்தாமன், வெறி கொண்டு பாண்டவப் படைகளை எதிர்த்தான்.
அப்படி அவன் எதிர்த்தவர்களுள் ஒருவன் பாண்டிய அரசனான மலயத்துவஜன் என்று மஹாபாரதத்தில் வருகிறது. (8-20).
அவர்கள் இருவருக்கும் நடந்த போர் விரிவாக விளக்கப்படுகிறது.
அந்தப் போரில் பாண்டிய அரசன் அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டான்.
தன் தந்தையைக் கொன்றவர்களுள் ஒருவனான சாரங்கத்துவஜன் மீது அஸ்வத்தாமனுக்குக் கோபம் இருந்திருக்கும்.
அவனுடன் நிச்சயமாகப் போர் புரிந்திருப்பான்.
மலயத்துவஜனுடன் விவரிக்கப்பட்டுள்ள போர் உண்மையில் சாரங்கத்துவஜனுடன் நடந்த போராக இருக்க வேண்டும்.
இதைத் தவிர வேறு எந்த பாண்டியனுடனும் அஸ்வத்தாமா போர் புரிந்ததாக சொலல்ப்படவில்லை.
துரோணரை எதிர்த்துப் போரிடட்வர்கள் பெயரில் சாரங்கத்துவஜன் பெயர் மட்டுமே வருகிறது.
மலய பர்வதம் கொண்ட பாண்டிய நாட்டு மன்னாக இருக்கவே, சாரங்கத்துவஜனுக்கு, மலயத்துவஜன் என்ற பெயர் குலம் அல்லது குடிப் பெயராக இருந்திருக்க வேண்டும்.



மலயத்துவஜ பாண்டியன் என்னும் பெயரில் நாம் அறிந்துள்ள மற்றொரு முக்கிய அரசன், மீனாட்சி அம்மையைப் பெற்றெடுத்த மலயத்துவஜ பாண்டியன்.
மஹாபாரதக் காலத்துக்கு முன்பே மீனாட்சி கதை வந்திருக்க வேண்டும்.
ஏனென்றால், மஹாபாரதக் காலக் கட்டத்தில் இன்று இருக்கும் மதுரை, பாண்டியன் வசம் இல்லை.
பாண்டிய நாடு தாமிரபரணிக்குத் தெற்கே மலய பர்வதத்தை ஒட்டி இருந்திருக்கின்றது.
இன்றைய இந்தியாவில் அந்தப் பகுதி மிகவும் சிறிய பகுதி.



எனவே மீனாட்சி பிறந்த மதுரை சங்க நூல் உரையாசிரியர்களால் சொல்லப்பட்ட, கடல் கொண்ட தென்மதுரை என்பது தெளிவாகிறது. மலயத்துவஜன் என்றே பாண்டியன் சாரங்கத்துவஜன் அழைக்கப்படவே, மலயத்துவஜ வம்சமாகப் பல மன்னர்கள் அவனுக்கு முன் இருந்திருக்க வேண்டும்.
எப்படி ராமனும், கிருஷ்ணனும் உண்மையில் வாழ்ந்தார்களோ, அப்படியே மீனாட்சி அம்மையும் மலயத்துவஜ பாண்டியனுக்கு மகளாகப் பிறந்தது உண்மையான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். மலயத்தொடர்பு பற்றி மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம்.



மஹாபாரதத்தில் பாண்டியனைப் பற்றி இரண்டு வர்ணனைகள் அடிக்கடி வருகின்றன.
ஒன்று அவன் முத்து அணிந்திருந்தான்.
மற்றொன்று அவன் சந்தனம் பூசி இருந்தான்.
குறிப்பாக மலய பர்வத சந்தனம் பற்றி கூறப்பட்டுள்ளது.
யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்தில் கலந்து கொண்ட பாண்டிய மன்னன் மலய பர்வதத்தில் கிடைக்கும் சந்தனத்தை அளித்தான் என்று வருகிறது.
சுக்ரீவன் தரும் தென்னிந்திய வர்ண்னையிலும், தாமிரபரணி ஆற்றுக்குத் தென் புறம் சந்தன மரங்கள் அதிகம் என்று வருகிறது.
சந்தனம் பற்றிய சங்க நூல் குறிப்புகளில், வட குன்றத்துச் சந்தனம் என்று வட நாட்டில், இமய மலையில் கிடைக்கும் சந்தனத்தைப் பற்றியே அதிக இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. 


ஆனால் சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் ( ஊர்காண் காதை -80) ‘தெண்கண மலயச் செழுஞ்சேராடி “ என்று தெங்கணமும், மலய பர்வதமும் இணைந்த பகுதியில் கிடைக்கும் சந்தனம் பற்றிய குறிப்பு வருகிறது.
பாண்டியன் நிலம், தாமிரபரணிக்குத் தெற்கில் மலய பர்வதத்துடன் கூடி நீண்டிருந்தபோது, அந்தப் பகுதியிலிருந்து சந்தனத்தைப் பெற்றிருக்கிறான்.
அந்தப் பகுதி அடியார்க்கு நல்லார் கூறும் ஏழு நிலப்பகுதிகளில் தெங்க நாட்டுப் பகுதியாக இருக்கலாம்.
மலையை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் இருக்கும் இன்றைய கேரளத்தில் தென்னை மரங்கள் அதிகம்.
அந்த அமைப்பே நீண்டிருந்த அந்தப் பகுதியில் அந்த நாளில் இருந்திருக்க வேண்டும்.
அதைத் தெண்கண / தெங்கண மலயத்தில் கிடைத்த சந்தனம் என்று கூறியிருக்கலாம்.
இன்றைய கேரளத் தென் பகுதிகள் தெங்க நாட்டுப் பகுதியைச் சார்ந்திருக்கலாம்.



அந்த நிலப்பகுதிகளை கடலுக்கு இழந்த பின், வட நாட்டிலிருந்து சந்தனத்தை வரவழைத்திருக்கிறார்கள்.
இந்த விவரம் சந்தனம் பற்றிய சங்கப் பாடல்கள் மூலம் தெரிகிறது. (பு-நா- 380, அ-நா- 340).
மஹாபாரதக் காலத்தில், பாண்டியனுக்கு வேண்டிய சந்தனத்தை மலய பர்வதமே தந்திருக்கிறது என்பதால்,
மஹாபாரதம் நடந்த 5000 வருடங்களுக்கு முன், இன்றைய தமிழ் நாடு கடலுக்குள் நீண்டிருந்தது என்பது புலனாகிறது.


5000 வருடங்களுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்தது.
அப்பொழுது பாண்டியன், இன்றைய தமிழ் நாட்டுக்கும் தெற்கே வாசம் செய்திருக்கிறான் என்பதை இதன் மூலம் தெளியலாம். அப்பொழுது சோழனும், சேரனும் தமிழ் நாட்டுப் பகுதியில்தான் இருந்திருக்கிறார்கள், சிந்து சமவெளிப்பகுதியில் அல்ல.
அந்த காலக்கட்டத்தில் சோழன் ஆண்ட இடம் பற்றிய குறிப்புகள் இல்லை.
ஆனால் 9000 வருடங்களாகவே புகார் நகரம் புகழுடன் இருந்திருக்கவே, சோழன் புகாரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டிருக்க வேண்டும்.
அந்தக் காலக் கட்டத்தில் இருந்த சேர அரசன், உதியன் சேரலாதன் என்பவன்.
இவன் மஹாபாரதப் போரில் சண்டையிட்ட பாண்டவ, கௌரவப் படைகளுக்குப் பெருஞ்சோறு அளித்தான் என்று கூறும் புற நானூற்றுப்பாடல், அவன் வாழ்ந்த சம காலத்தில் எழுதப்பட்டதாக அமைந்துள்ளது. ( பு-நா-2) 


இந்தச் சேர மன்னன் செய்த இச்செயலை உறுதிப்படுத்தும் வண்ணம்
அகநானூறிலும் (233),
பெரும்பாணாற்றுப்படையிலும் (415-7),
நன்னூல் சூத்திர மயிலைநாதர் உரையிலும் (343),
விருத்தி உரையிலும் (344),
இலக்கண விளக்க உரையிலும் (247), சொல்லப்பட்டுள்ளது.
இவை தவிர சிலப்பதிகாரத்தில், மூவேந்தரையும் புகழும் ஓரிடத்தில்,(23-55) அவரவர் பரம்பரையில் உயர்ந்து நின்ற அரசனைப் பற்றிச் சொல்கையில்,
சோழப் பரம்பரையில் சிபியையும்,
பாண்டியன் பரம்பரையில் பொற்கைப் பாண்டியனையும்,
சேரன் பரம்பரையில் உதியன் சேரலாதன் பெருஞ்சோறு அளித்தமை பற்றியும் பாராட்டப்படவே,
மஹாபாரதக் காலத்தில் சேரன் வாழ்ந்தான் என்பது மறுக்க முடியாத உண்மை என்றாகிறது.


அந்த சேரன் ஆண்ட தமிழ்ப் பகுதியில், சூரியன் கிழக்குக் கடலில் உதித்து, மேற்குக் கடலில் மறைந்தது என்று அவனைப் பற்றிக் கூறும் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
அதாவது சேரன் உதியன் ஆண்ட பகுதி கிழக்குக் கடலிலிருந்து, மேற்குக் கடல் வரை பரவி இருந்திருக்கிறது.
வங்கக் கடலிலிருந்து, அரபிக் கடல் வரை பரவி இருந்தது.
அவன் ஆண்ட பகுதிக்குத் தெற்கே தாமிரபரணியும், அதற்குத் தெற்கே பாண்டியனும்.
சேரனது தென் கிழக்குப் பகுதியில் சோழனும் ஆண்டிருந்திருக்கின்றனர்.


மஹாபாரதம் நடந்த 5000 ஆண்டுகளுக்கு முன், தமிழக மூவேந்தர்களும் ஆண்ட பகுதி இவ்வாறு தென்னிந்தியாவில் இருக்க, அதே காலக் கட்டத்தில் சிந்து நதிப் பகுதியில் தமிழன் எவ்வாறு வாழ்ந்திருக்க முடியும்?
5000 வருடங்கள் அல்ல, அதற்கு முன்னும், மூவேந்தர்களும் இதே தென் பகுதியில்தான் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை ராமாயணம் காட்டுகிறது.


சீதையைத் தேட வானரங்கள் புறப்பட்ட போது, அவர்கள் தலைவனான சுக்ரீவன் நான்கு திசைகளிலுமுள்ள நாடுகள், மலைகள், நதிகள் போன்றவற்றை விவரிக்கிறான்.
பாரதத்தின் வட பகுதியைப் பற்றி அவன் கொடுத்த விவரங்கள் அடிப்படையில் உத்தர குரு போன்ற பிரதேசங்களை நாம் அலசினோம். (பகுதி -35).
அவன் கூறும் தென் பகுதி விவரங்கள் பழந்தமிழ் நாட்டு அமைப்புடன் ஒத்துப் போகிறது.
அவன் சொல்லும் விவரங்களை வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம் 41-இல் படிக்கலாம்.


அனுமன் முதலான் வானரங்கள் தென் பகுதியில் செல்ல வேண்டிய வழியை சுக்ரீவன் சொல்கிறான்.
விந்திய மலையைத் தாண்டி தெற்கில் வந்தால் தண்டகாரண்ய வனம் வரும்.
கோதாவரி நதியானது அந்த வனத்தின் குறுக்கே செல்கிறது.
அதைத் தாண்டிச் சென்றால், ஆந்திரம், பௌண்டரம், சோழ, பாண்டிய, சேர நாடுகள் வரும்.
இதில் பௌண்டரம் என்பது ஒரிசா, வங்கப் பகுதியில் இருக்கிறது.
ஆந்திரம் என்பது ஆந்திரப் பிரதேசமாகும்.
ராமாயணத்திலும், ஆந்திரம் தனிப் பகுதியாக சொல்லப்படுகிறது.
மஹாபாரதத்திலும் அது தனிப் பகுதியாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்ப் பகுதிகளுடன் ஆந்திரத்தைச் சேர்த்துச் சொல்லப்படவில்லை.
வேங்கடத்துக்கு வடக்கே இருப்பது ஆந்திரா.
தமிழ் பேசும் மக்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்ததில்லை என்பதே தொல்காப்பியமும் கூறும் செய்தியாகும்.


இந்த நாடுகளைப் பற்றிச் சொன்னபின் சுக்ரீவன் மலய பர்வதத்துக்கு வந்து விடுகிறான்.
திராவிடம் என்ற நாடு பற்றி ராமாயணத்தில் பேச்சே இல்லை.
அவன் விளக்குவது இந்தியாவின் நேர் தெற்குப் பகுதியாகும்.
இதனால் நேர்த்தெற்கில் திராவிட நாடு இல்லை என்றாகிறது.
மஹாபாரதத்தில் பொதுவாகவே தென்னிந்தியாவில் இருந்த அனைத்து நாடுகளையும் பற்றிச் சொல்லவே அங்கு திராவிட நாடு பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது.
அதாவது திராவிடம் என்ற பகுதி தெனிந்தியாவில் இருந்திருக்கிறது.
ஆனால் தமிழகமும், ஆந்திரமும் கொண்ட தெற்குப் பகுதியில் அது அமையவில்லை.


ராமாயண வர்ணனையில், மூவேந்தர் நாடுகளைப் பற்றிச் சொன்னவுடன், மலய பர்வதமும், காவிரி நதியும் சொல்லப்படுகிறது.
அங்கு அகஸ்தியர் வாழ்ந்தது சொல்லப்படுகிறது.
அதற்குப் பிறகு தாமிரபரணி ஆற்றைக் கடக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அதற்கும் அப்பால் ‘கவாடம் பாண்டியாணாம் அதாவது பாண்டியர்களது கபாடபுரம் இருக்கிறது.
முத்துக்களாலும், பலவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மதில் சுவரால் சூழப்பட்ட கோட்டை அங்கு இருந்தது.
அங்கிருந்து தெற்குக் கடலுக்கு வந்தால் மஹேந்திர மலையை அடையலாம்.
அகஸ்தியரால் அந்த மலை கடலுக்குள் அழுத்தப்பட்டது.
கடலில் முழுகாத பகுதியே மஹேந்திர மலை என்று தெரிகிறது.
அதாவது அந்த மலை ஒரு தொடராக நீண்டிருந்தது.
அதில் பெரும் பகுதி ராமாயண காலத்திலேயே மூழ்கி விட்டிருந்தது.
அங்கிருந்து கடல்புறம் 100 யோஜனை துரம் தாண்டினால் ஒரு தீவு வரும் (இலங்கை),
அங்கே சீதையைத் தேடுங்கள் என்கிறான் சுக்ரீவன்.


இதற்கு மேலும் இன்றைய தென் கடலான இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்த நிலங்கள் குறித்த வர்ணனைகள் வருகின்றன. அவற்றில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் முக்கியமானவை.
அவை தரும் அமைப்பும், சாகத்தீவின் அமைப்பும்,
பாண்டியன் ஆண்ட முந்திய நாடுகளின் அமைப்பும் ஒன்றுக்கொன்று இயைந்து இருக்கின்றன.


அவற்றுக்குள் செல்வதற்கு முன், மஹேந்திர மலையையும், கவாடம் என்று சொல்லப்பட்ட அமைப்பையும் அறிவோம்.
இன்றைக்கு மஹேந்திர மலை என்பது திருக்குறுங்குடி என்னும் வைணவ திவ்விய தேசத்தில் இருக்கிறது.
இங்கிருந்துதான் அனுமன் இலங்கைக்குத் தாவிச் சென்றிருக்கிறான்.
இந்தப் பகுதியைப் பற்றிச் சொல்வதற்கு முன்னாலேயே, தாமிரபரணி ஆற்றைக் கடந்தபின் மலய பர்வதத்தின் தொடர்ச்சியாக சொல்லப்பட்ட இடத்தில் கவாடபுரம் என்னும் பாண்டியன் தலைநகரைப் பற்றி சுக்ரீவன் சொல்கிறான்.
இது தென்கடலுடன் இணையும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும்.
இந்தப் பகுதியைப் பற்றிய சுவையான தகவல்களை அடியார்க்கு நல்லார் மூலம் நாம் அறிகிறோம்.


சிலப்பதிக்கார உரையில் (8-1), ஏழேழ் நாற்பத்தொன்பது நாடுகள் பற்றி அவர் கூறியதை முந்தின பகுதியில் கண்டோம்.
அவை எல்லாம் கடலுக்குல் அமிழ்ந்தன என்கிறார்.
அவற்றுடன் கடலுக்குள் அமிழ்ந்த பிற பகுதிகளில்,
குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும்,
காடும், நதியும்,
பதியும்,
தட நீர்க் குமரி வட பெருங்கோட்டின்காறும்
கடல் கொண்டு அழிதலால்
என்கிறார்.
குமரி கொல்லம் முதலிய பன் மலை நாடு என்று சொல்லவே, மலய பர்வதத்தை ஒட்டி அமைந்துள்ள இன்றைய கொல்லம் என்னும் கேரளப் பகுதி பாண்டியன் வசம் அந்நாளில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.



அந்த இடத்தில் குமரியின் வட பெருங்கோடு இருந்தது என்றும் இதன் மூலம் தெரிகிறது.

கோடு என்றால் மலைச் சிகரம் என்றும் பொருள். நீர்க்கரை என்றும் ஒரு பொருள் உண்டு.
இங்கு குமரி ஆற்றைச் சொலல்வில்லை.
ஏனெனில் இதே விளக்க உரையில், முதலிலேயே பஹ்ருளி ஆற்றையும், குமரி ஆற்றையும் சொல்லி அதற்க்கிடையே உள்ள தூரத்தையும் அடியார்க்கு நல்லார் சொல்லி விட்டார்.


எனவே இங்கு குமரிக் கோடு என்றதும், வட பெருங்கோடு என்றதும்,
குமரி மலைத் தொடரின் வடக்கில் உள்ள மலைச் சிகரமான குமரி என்னும் சிகரம் என்றாகிறது.
அது கொல்லத்தை ஒட்டி அமைந்திருக்கிறது.
இவை எல்லாம் உண்மையே என்பதை இந்தியப் பெருங்கடலின் அடிவாரத்தைக் காட்டும் படங்களில் காணலாம்.

இந்தப் படத்தில் தென்னிந்தியாவின் தென் முனையில்,
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலய மலை கடலுக்குள் தொடர்வதைக் காணலாம்.
கொல்லத்துக்குத் தெற்கே அந்த மலையில் கவாடம் இருந்திருக்கிறது.
அது பஹ்ருளி ஆற்றங்கரையில் இருந்தது.
மலய மலையில் உள்ள மஹேந்திர மலையின் அடிவாரத்தில் இலங்கை இருந்தது என்று ராமாயணம் கூறுகிறது.
இந்தப் படத்தில் அப்படிபட்ட அமைப்பு இலங்கை வரை செல்வதைக் காணலாம்.
இந்தப் பகுதி ராமாயண காலத்திலேயே கடலுக்குள் மூழ்கி விட்டது.



சஞ்சயன் கூற்றின் அடிப்படையில், வட்டத்துக்குள் உள்ள பகுதியே, முயல் வடிவான சாகத்தீவின் பகுதியாக இருந்திருக்க வேண்டும்.
இந்தப் பகுதியில் அப்பொழுது கவாடபுரம் இருந்திருக்கிறது.


அதாவது பஹ்ருளி ஆறு முதல் குமரி ஆறு வரை இருந்த 700 காவதம் / காத தூரமுள்ள குமரிக் கண்டம்
மஹாபாரதக் காலத்துக்கு முன்பே கடலுக்குள் அமிழ்ந்து விட்டிருக்கிறது.


700 காவதம் / காதம் என்பது இன்றைய இந்தியாவின் நீளத்தைப் போல இரண்டு மடங்காகும்.
1 காதம் என்பது ஏழரை நாழிகை தூரம்.
ஏழரை நாழிகை என்பது மூன்று மணி நேரம்.
அந்த மூன்று மணி நேரத்தில் ஒருவன் எத்த்னை தூரம் விறுவிறுப்பாக நடந்து கடப்பானோ அதுவே ஒரு காதம்.
அதை 10 மைல் தூரம் என்று செந்தமிழ் அகராதி கூறுகிறது.
அது 7 மைல் தூரம் என்றும் கூறுவது உண்டு.


7 மைல் என்பது 11.2 கி.மீ ஆகும். மணிக்கு சுமார் மூன்றரை கி.மீ வேகத்தில் ஓரு சாதாரண மனிதன் நடக்க முடியும்.
எனவே காதம் என்பது 7 மைல் / 11.2 கி.மீ என்று வைத்துக் கொண்டால் 700 காதம் என்பது 7,640 கி.மீ என்றாகும்.
பஹ்ருளி ஆற்றுக்கும், குமரி ஆற்றுக்கும் இடையே அத்தனை தூரம் இருந்தது என்கிறார் அடியார்க்கு நல்லார்.
அவ்வளவு பெரிய பகுதி கடலுக்குள் அமிழ்ந்து விட்டது.
அந்தப் பகுதியில் தென்மதுரை இருந்தது.
அங்குதான் முதல் சங்கம் 4,440 வருடங்கள் நடந்தது.


அத்தனை பெரிய நிலப்பரப்பில், கடலும், மலையுமாக இருந்த பூலோக சுவர்கத்தில்
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கோலோச்சிய தமிழர்கள்,
பரப்பில் மிகச் சிறிய சிந்து சமவெளி தீரத்திற்கு ஏன் வரவேண்டும்?

5000 ஆண்டுகளே ஆன சிந்து சமவெளி நாகரிகம் எங்கே?

அதற்கும் பல ஆயிரம் வருடங்களுக்கும் அப்பால் வாழ்ந்த தமிழர்கள் எங்கே?

அடாவடி திராவிடவாதிகளுக்குக் கொஞ்சமாவது பகுத்தறியும் சிந்தனை இருக்கிறதா?



13 கருத்துகள்:

  1. //எனவே காதம் என்பது 7 மைல் / 11.2 கி.மீ என்று வைத்துக் கொண்டால் 700 காதம் என்பது 7,640 கி.மீ என்றாகும்.
    பஹ்ருளி ஆற்றுக்கும், குமரி ஆற்றுக்கும் இடையே அத்தனை தூரம் இருந்தது என்கிறார் அடியார்க்கு நல்லார்.
    அவ்வளவு பெரிய பகுதி கடலுக்குள் அமிழ்ந்து விட்டது.
    அந்தப் பகுதியில் தென்மதுரை இருந்தது.
    அங்குதான் முதல் சங்கம் 4,440 வருடங்கள் நடந்தது.
    //

    சமீபத்தில் அவ்வளவு பெரிய நிலம் கடலில் மூழ்கியதாக வரலாறு இல்லைனு விஞ்ஞானிகள் சொல்லுறாங்களே.

    பதிலளிநீக்கு
  2. சமீபத்தில் என்றால் எத்தனை வருஷங்கள்?

    பதிலளிநீக்கு
  3. //சமீபத்தில் என்றால் எத்தனை வருஷங்கள்?
    //

    50000 வருஷங்கள்

    பதிலளிநீக்கு
  4. அந்த விஞ்ஞானிகளின் பெயரையும், அவர்கள் செய்த ஆராய்ச்சியையும் தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. http://answers.yahoo.com/question/index?qid=20101111201727AANArKB

    இந்த லின்க் பாருங்க

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் இவ்வாறு சொன்னீர்கள் // சமீபத்தில் அவ்வளவு பெரிய நிலம் கடலில் மூழ்கியதாக வரலாறு இல்லைனு விஞ்ஞானிகள் சொல்லுறாங்களே. //

    நீங்கள் கொடுத்துள்ள இந்த லிங்கில்
    http://answers.yahoo.com/question/index?qid=20101111201727AANArKB
    நீங்கள் சொன்ன இந்தக் கருத்து இல்லையே?


    conjecture ஆக அந்த லிங்கில் எழுதியுள்ளதை, நான் பன் முனை ஆதாரங்களுடன் எடுத்துக் கொண்டு போகிறேன். மேலும் இந்தத் தொடரில் இதுவரை கொடுக்கப்பட்ட க்ளேன் மில்னே, க்ரஹாம் ஹான்காக், மிலன்கோவிட்ச் ஆகியோரது ஆராய்ச்சிகளை நீங்கள் படிக்கவில்லை போலிருக்கிறது.

    இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய பகுதிகள் பற்றிய விவரங்கள் இனிமேல்தான் வருகின்றன. குறைந்தது மூன்று கட்டுரைகளில் அவை ஆராயப்படும்.

    பதிலளிநீக்கு
  7. கவாடம் பாண்டியானாம் தாமிரபரணி போன்ற சுக்ரீவன் குறிப்புகள் இராமாயனத்தில் எந்த பகுதியில் வருகிறது.
    -சுப்பிரமணி

    பதிலளிநீக்கு
  8. //பெயரில்லா சொன்னது…

    கவாடம் பாண்டியானாம் தாமிரபரணி போன்ற சுக்ரீவன் குறிப்புகள் இராமாயனத்தில் எந்த பகுதியில் வருகிறது.
    -சுப்பிரமணி//

    மேற்காணும் கட்டுரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிகள் :-

    ”அவன் கூறும் தென் பகுதி விவரங்கள் பழந்தமிழ் நாட்டு அமைப்புடன் ஒத்துப் போகிறது.
    அவன் சொல்லும் விவரங்களை வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம் – 41-இல் படிக்கலாம்.”

    வலைத்தளத்தில் உள்ள ஆங்கில மொழிபெயர்ப்பில் இங்கே காணலாம்:- (வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம் 41-18, 19)

    http://www.valmikiramayan.net/kishkindha/sarga41/kishkindha_41_frame.htm



    tato hemamayam divyam muktaa maNi vibhuuSitam || 4-41-18
    yuktam kavaaTam paaNDyaanaam gataa drakSyatha vaanaraaH |


    18b, 19a. vaanaraaH= oh, vanara-s;
    tataH= from there;
    yuktam= joined to - braced to the wall of fortress;
    hemamayam divyam= full with gold, beautiful one;
    muktaa maNi vibhuuSitam= pearls, gemstones, decorated with;

    paaNDyaanaam kavaaTam= of Paandya [kingdom's,] castle-door;

    gataaH= having gone there;
    drakSyatha= you shall see; search inside that gateway.

    Meaning:-

    "From there, on going to the Paandya Kingdome you shall see a fully golden castle-door bracing the compound-wall of the fortress, which is decorated with pearls and jewels, and conduct your search even in that kingdom. [4-41-18b, 19a]

    பதிலளிநீக்கு
  9. பாண்டிய-இராமாயண வரிகளை சொல்லியதற்கு நன்றி,

    மேலும் மயன் வரலாறு, வைசம்பாயனம், ஐந்திரம் போன்றவற்றிலும் உங்கள் வாதங்களுக்கு வழு சேர்க்கும் மூலங்கள் அதிகம் உள்ளன.

    மேலும் குமரிக்கண்டத்தில் பிறந்த மயன் இயற்றிய பிரணவ வேதமே வியாசர் எழுதிய நான்மறைக்கு முந்து நூலாக தமிழ்-சமஸ்கிருத ஒப்பீட்டு தொன்மவியலாளர்கள் கருதுகின்றனர். அந்த மயனை பற்றி எழுதிய வைசம்பாயனர் வியாசரின் சீடராவார். மயனே தமிழர் கலைகளின் மூலன் என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதை அறியாமல் வேதம் தவறானது என திராவிடத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் தவறாka கூறுகின்றனர்.

    மேலும் மயன் பற்றிய விவரங்களுக்கு,

    in tamil-
    http://tawp.in/r/2hx8

    in english-
    http://en.wikipedia.org/wiki/Mamuni_Mayan

    -சுப்பிரமணி

    பதிலளிநீக்கு
  10. 73 ஆவது கட்டுரையின் கீழும் இதே கருத்துரை வந்துள்ளது. அங்கு என் பதில் கருத்துரையைக் கொடுத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  11. இப்பொழுது உள்ள மதுரை 3வது மதுரை எனில், அறுபடை வீடுகளும் அதை போலவே பிற்பாடு மற்றி அமைக்கப்பட்ட புதுக்கோயில்களா?

    பதில்தரவும் அம்மா

    விடைகளுக்காக காத்திருக்கிறேன்............

    பதிலளிநீக்கு