புதன், 10 அக்டோபர், 2012

109. ட்ரூயிடுகளது ஓஅம் (OGHAM) மொழியும், சிந்து சமவெளியின் கண்ணெழுத்தும்.




ட்ரூயிடுகள் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் மொழி எப்படிப்பட்டது என்று பார்த்தால் அங்கும் பாரத நாட்டின் வேத மரபின் அடையாளம் தென்படுகிறது. அந்த மொழியின் முக்கிய அம்சம், அது பேசு மொழியாக இருந்தது என்பதே. வேதத்தைப் போல வழிபாட்டுக்கான ஓதும் பாடல்கள் பல இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றை அவர்கள் ஒருபோதும் எழுதி வைத்துப் படிக்கவில்லை. எழுத்து மூலம் சொல்லிக் கொடுக்கவில்லை. இந்த விவரத்தை 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜூலியஸ் சீசர் எழுதி வைத்துள்ளார்.

சீசருக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு என்றால், ஃப்ரான்ஸ் நாட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வந்த கெல்டு மக்களை வென்று அவர்கள் வாழ்ந்த பகுதிகளைத் தன் நாட்டுடன் இணைத்தார். ஃப்ரெஞ்சுப் பகுதியில் வாழ்ந்த கெல்டு மக்களுக்குக்கால்(GAUL) என்று பெயர். உண்மையில் இந்தப் பெயரை கல்லியா (GALLIA) என்று லத்தீன் மொழியிலும், கல்லென் (GALLIEN) என்று ஜெர்மானிய மொழியிலும் அழைத்தார்கள். இது கல்லன் (GHALLA) என்று சமஸ்க்ருதத்திலும், அதற்கு இணையான சொல்லாகக் கள்ளன் (KALLAN) என்று தமிழிலும் சொல்வதற்கு ஒத்திருக்கிறது.

க்ஷத்திரியத்தை விட்டவன் கல்லன் எனப்படுவான். அவனுக்கு அடுத்த தலைமுறையினரும் க்ஷத்திரியத்தை விட்டால் அவர்கள் மல்லர்கள் எனப்படுவார்கள். இப்படியே தலைமுறை, தலைமுறையாக க்ஷத்திரியம் மறந்தவர்கள், 7 ஆவது தலைமுறையில் திராவிடர்கள் எனப்படுவார்கள் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது என்பதை 52 ஆவது கட்டுரையில் கண்டோம். அந்த வரிசையை மீண்டும் திரும்பிப் பார்ப்போம்.
1.   கல்லன் 2. மல்லன் 3. லிக்கிவி 4. நடன். 5. கரணன் 6. கஸன் 7. திராவிடன்.
சமஸ்க்ருத்த்தில் கல்லன் என்பது தமிழில் கள்ளன் என்றாயிற்று. அதன் பிற விவரங்களைத் தனிக் கட்டுரையாகக் காண்போம். இங்கு கல்லன் கள்ளன் என்பது வழிவழியாக வழங்கி வந்த பெயர் என்பதை மட்டும் பார்ப்போம். மஹாபாரதக் கிருஷ்ணன் கள்ளன் எனப்பட்டான். அதே பெயரில் கள்ளழகன் என்று திருமாலிருஞ்சோலையிலும் குடி கொண்டிருக்கிறான். அந்தப் பெயர் வந்ததற்குப் பல காரணங்கள் இருந்தாலும், கம்சனுடைய மாமனாரான ராசந்தனுடைய தாக்குதலைத் தாங்க முடியாமல், தன் மக்களுடன் கிருஷ்ணன் துவாரகைக்கு ஓடி வந்து விடுகிறான் என்பதும் ஒரு காரணமாகும். அதனால் கிருஷ்ணனுக்கு ரண்-சோட் ராய் (போர்க்களத்திலிருந்து ஓடி வந்தவன்) என்றும் ஒரு பெயர் உண்டு.















Fig 1 – Ranchod Rai
 

போரிடாமல் ஓடி வந்ததால் அவன் கல்லன் ஆகிறான். இதையே தமிழில் கள்ளன் என்று கூறுகிறோம். கள்ளப் பரம்பரையினர், திருட்டுத் தொழில் செய்பவர்கள் அல்லர். அவர்கள் ஏதோ காரணங்களினால் க்ஷத்திரியர்களாக வாழாமல், அல்லது வாழமுடியாமல் இருந்தும், இயல்பான வீரத்தைக் கொண்டிருந்ததால், வீரத்தைக் காட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கள்ளர்கள் பாதுகாப்புப் பணிகளிலும், காவல்; பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாகக் கோயிலைக் காக்கும் பணியில் கள்ளர் இன மக்களே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பதை உடுமலைப்பேட்டை, கடத்தூரில் உள்ள மருதீசர் கோயில் அர்த்த மண்டபத்தில் உள்ள பொ.பி. 14 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டின் மூலம் அறியலாம்.

கல்லன் என்னும் இந்தப் பெயர் கெல்டு மக்களுக்கு இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கது. ஏனெனில், நாம் கூறுவது போல இவர்கள் த்ருஹ்யுவைச் சேர்ந்தவர்களாக இருந்தால், இவர்கள் போரில் தோற்று ஓடிப் போனவர்களே. போரில் தோல்வியைத் தழுவி, உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டி நாட்டை விட்டு வெளியேறின மக்கள் கல்லர்கள் ஆவார்கள். அதனால் இந்த மக்கள் கல்லி, கல்லென் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, கிரேக்கர்களால் கால் என்றழைக்கப்பட்டிருக்க வேண்டும். கல்லன் என்னும் பெயரை இவர்களுக்கு யாராவது சூட்ட வேண்டிய தேவையில்லை. பொதுவாகவே அந்த நாளில் தங்கள் நிலையை ஏற்றுக் கொண்டு, தாங்களே, தங்களைக் கல்லன் என்று அழைத்துக் கொள்வார்கள். அப்படியே கல்லி என்ற பெயருடன் ஃப்ரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி போன்ற பகுதிகளில் குடியமர்ந்திருக்கிறார்கள். 106 ஆவது கட்டுரையில் சொல்லப்பட்ட அயோனி எனப்பட்ட பானியோனியாவும் இந்தப் பகுதியில் இருப்பதைப் படத்தில் காணலாம்.


                                             Fig 2


இவர்களுடன் போரிட்ட ஜூலியஸ் சீசர் இவர்கள் பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.
("They commit to memory immense amounts of poetry...they consider it improper to commit their studies to writing...lest it should be vulgarized and lest the memory of scholars should become impaired". – ஜூலியஸ்சீசர். )

வேதப் பாடல்களை உருப்போட்டு மனப்பாடம் செய்வது போல ட்ரூயிடுகளும் மனனம் செய்தனர். அவ்வாறிருக்க அந்த மக்களுக்கு எழுத்து பூர்வமான மொழி இருந்தது என்ற கருத்து கிருஸ்துவம் தோன்றின பிறகுதான் உண்டானது. அதிலும் கெல்டுகள் பின்பற்றிய இலைச் சின்னங்களைக் கொண்டே அவையே அவர்களது மொழி என்ற எண்ணம் எழுந்தது. இன்றுவரை அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அந்தச் சின்னங்கள் சில செடி அல்லது மரம் போன்ற தாவர வகைகளைக் குறிப்பதாக எழுந்தன என்றும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. சென்ற கட்டுரையில் சோம ரசத்தைப் போன்ற ஒரு வகையான ரசத்தைத் தயாரிக்கும் செடியை அவர்கள் தெரிந்து வந்த்திருந்தார்கள் என்று பார்த்தோம். அப்படிப்பட்ட செடி அல்லது மரங்களை அடையாளம் சொல்வதற்காக அவர்கள் சில அடையாளச் சின்னங்களை ஏற்படுத்தினர். அவை செடியைப் போலவும், இலையைப் போலவும் இருக்கின்றன.

அவ்வாறாக ஏறத்தாழ 20 தாவர வகைகளைக், கோடுகள் கொண்ட அடையாளச் குறிகளால் குறித்தனர்., அவை கீழ்க்கண்டவாறு உள்ளன. அவற்றை ஆராய்ந்து அவற்றுக்கு எழுத்து வடிவத்தைப் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் கொடுத்துள்ளனர்.


                                                   Fig 3

ஆனால் கெல்டுகளைப் பொறுத்த வரையில், இந்தக் குறியீடுகள் குறிப்பிட்ட தாவரத்தை அடையாளம் காட்டுவன. இவற்றுக்கு கெல்டுகள் பெயர் வைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட குறிகள் ஒரு ரகசிய மொழியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில், பொ.பி 14 ஆம் நூற்றாண்டில் ஆராய்ந்து, ஓஅம் (OGHAM) என்ற பெயருடன் இந்தக் குறிகளை ஒரு எழுத்து மொழி என்று பிரகடனப்படுத்தினார்கள். Ahg-m  அல்லது Oh-ehm என்னும் ஒலிக் குறிப்பில் ஐம், ஓஐம், ஓஅம் என்று அழைத்தார்கள். இந்தப் பெயர் பழைய பெயர்தான். இந்த ஒலிக் குறிப்பு கல்லி மக்கள் வழிபாட்டில் இருந்திருக்கிறது. ஆனால் அது என்ன என்றும், எதைக் குறிக்கிறது என்றும் சரியாகத் தெரியவில்லை. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லூசியான் (LUCIAN)  என்னும் கிரேக்க அறிஞர் இந்த ஒலிக் குறிப்பில் கல்லி மக்களுக்கு ஒரு கடவுள் இருந்ததாகவும், அவர் பேச்சுக்கு அதிபதி (GOD OF ELOQUENCE) என்றும் கூறுகிறார்.

இந்த ஒலிக் குறிப்பையும், அது காட்டும் செடி போன்றவற்றையும் ஒருங்கிணைத்து நோக்கும் போது, ட்ரூயிடுகள் அறிந்திருந்த சோம ரசம் போன்ற ரசத்தைத் தரும் தாவர வகைகளே பொருத்தமாக இருக்கின்றன. சோமம் என்னும் செடியை ஆதியில் அறிந்திருந்த மக்களாக இருந்திருந்தால், சோம் என்னும் பெயரைக் கொண்டு அந்தச் செடி வகைகளை அழைத்திருப்பார்கள். கிட்டத்தட்ட 20 செடிகளை இந்தக் குறிகளால் அடையாளம் காட்டியிருப்பதால், சோமலதா, சோமதரு என்பது போல, சோம என்னும் பெயரைச் சேர்த்து, அவற்றை அழைத்திருப்பார்கள். சோம என்பது பொதுப் பெயராக இருப்பதால், அந்தப் பெயர் அவர்களது கலாசாரத்தை அழித்த பின்னும் நினைவில் நின்றிருக்கிறது. அறைகுறை நினைவில் சோம் என்பது ஓம் என்றாகி இருக்கிறது.

எனினும், ஓஅம் என்னும் கெல்டிக் கடவுள், பேச்சு அல்லது சொல்லுக்கு அதிபதி என்று கிரேக்க ஆராய்ச்சியாள்ர் 1800 ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருக்கவே, ஓம் என்னும் மந்திர ஒலியை இது குறிக்கலாம் என்று எண்ணவும் இடம் இருக்கிறது. ஓம் என்பது என்பது வேத மரபில் பிரணவ மந்திரம் எனப்படும். எந்த ஜபத்தையும், வழிபாட்டையும் ஓம் என்று ஓதியே ஆரம்பிப்பார்கள். செடிகளைக் குறிக்கும் சின்னங்களாக இந்தக் குறிகள் இருப்பதால், அந்தச் செடி அல்லது மர இலைகளை வழிபாட்டில் பயன் படுத்தியிருக்கிறார்கள் என்றும், அப்பொழுது ஓங்கார சப்தத்துடன் அந்த இலைகளைப் பறித்தோ அல்லது வழிபாட்டில் பயன்படுத்தியோ இருக்கலாம் என்றும் ஊகிக்க இடம் இருக்கிறது.


இன்றும் நம் நாட்டில், தர்ப்பை, அருகம் புல் போன்ற புல் வகைகள், துளசி, வில்வம் போன்ற செடி, மர இலைகளை வழிபாட்டில் அர்ச்சனைக்குப் பயன் படுத்துகிறோம். அப்படிப் பயன்படுத்தும் போது, ஓம் என்னும் உச்சரிப்புடன் பல மந்திரங்களைச் சொல்கிறோம். இவற்றை அறியாத ஒரு வெளி மனிதன், இந்த இலைகளைக் கொண்டு செய்யும் அர்ச்சனையையும், உச்சரிப்பையும் பார்த்தால் அல்லது கேட்டால், என்ன நினைத்துக் கொள்வான்? அந்த இலைகளது பெயரே ஓம் என்னும் பெயருடன் இருக்கின்றன போலும் என்றல்லவா நினைத்துக் கொள்வான்? அப்படித்தான் ஓஅம் மொழி ஆராய்ச்சியும் இருக்கிறது.

கெல்டுகளது வழக்கங்களை மதிக்காமல் அழித்து விட்டு, அதன் பிறகு அவற்றை ஆராய முற்பட்ட ஐரோப்பியர்கள், அவற்றின் அடிப்படைகளை அறியாததால், ஓம் என்னும் ஒலிக் குறிப்பை செடிகளின் பெயரில் இணைத்திருக்க சாத்தியம் இருக்கிறது. ஒரு செடியை அல்லது பொருளை அடையாளம் காட்ட உருவாக்கப்பட்ட சின்னத்தை, எழுத்து என்று தவறாக நினைக்க சாத்தியம் இருக்கிறது. இதே அணுகுமுறையைச் சிந்து சமவெளியில் காணப்படும் முத்திரைகளில் உள்ள குறிகளிலும் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் காணப்படும் குறிகள் ஓஅம் குறிகளில் இருப்பது போல, ஒரு பொருளை அடையாளம் காட்டும் குறிகளே, அவை எழுத்துக்கள் அல்ல. இதை நிரூபிக்க பழம் பெரும் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் சான்றுகள் உள்ளன. அது மட்டுமல்ல, ஓஅம் எழுத்துக்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் காட்டும் குறிகள், சிந்து சமவெளி முத்திரைகளிலும் இருக்கின்றன. அதன் மூலம் கெல்டுகளது குறியீடுகள் பாரதத்திலிருந்து உருவானவை என்றும் நிரூபிக்க முடியும். இதனால் வெளியிலிருந்து பாரதத்துக்கு மக்கள் வரவில்லை. பாரதத்திலிருந்துதான் கலாசாரம் வெளியே சென்றிருக்கிறது என்பதை அறியலாம்.  இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். 

சிந்து சமவெளிப் பகுதியில் கிடைத்துள்ள முத்திரைகளில் காணப்படும் குறிகள் சித்திர அமைப்புகள் ஆகும், அவை சொல் எழுத்துக்கள் இல்ல. அவை குறிப்பிட்ட பொருட்களைக் குறிக்கும் பொருள் எழுத்துக்கள். அவற்றைத் தமிழில்கண்ணெழுத்துக்கள் என்று சிலப்பதிகாரம் இரண்டு இடங்களில் கூறுகிறது.

கண்ணெழுத்துக்களை எழுதுபவர்கள் கண்ணுள் வினைஞர்கள் ஆவார்கள். சுவர்களிலும், ஆடைகளிலும், கேடயங்கள் மீதும், மண்டபக்கூரைகளிலும் கண் கவர் ஓவியத்தை வரைபவர்களைக் கண்ணுள் வினைஞர் என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. இதற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் கண்ணுள் வினைஞர் நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர் என்கிறார். அதாவது தான் எதைச் சொல்ல, அல்லது காட்ட விரும்புகிறாரோ அதைக் கண்ணால் பார்த்த மட்டிலேயே புரிந்து கொள்ளும்படி செய்பவர் ஆதலால் அவருக்குக் கண்ணுள் வினைஞர் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால் பார்ப்பவர்க்குப் படிப்பறிவோ அல்லது சொல்லப்படும் பொருளைப் பற்றிய அறிவோ தேவையில்லை. வடிவத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட வடிவங்களை வடிப்பவர் கண்ணுள் வினைஞர் ஆவார். இங்கு சித்திரங்களை வடிப்பவரைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.

இதே சொல்லை சிலப்பதிகாரமும், கண்ணுள் வினைஞரும், மண்ணீட்டாளரும்(5-30) என்று கூறுகையில் மண்ணால் உருவங்களை உருவாக்குபவர்களையொட்டிக் கூறுவதால், மண்ணால் உண்டாக்கப்படும் பொருள்களில், கண்ணால் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொள்ளக்கூடிய சித்திரங்களை வரைபவர் அல்லது செதுக்குபவர் என்பது புலனாகிறது.

இதே சொல்லை கோவலன் சந்தித்த பொற்கொல்லனைத் தொடர்ந்து வரும் மக்களில் ஒருவராகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர” (16- 105). இங்கு அந்தச் சொல் பொன் வேலை செய்பவர்களில், கண்ணால் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்ளத்தக்கவாறு வடிவங்களை பொன்னில் தட்டி உருவாக்குபவர் என்ற பொருள் கொண்டதாகிறது. இந்த இடத்தில் கண்ணுள் வினைஞரை உருக்குத் தட்டார் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

கண்ணால் பார்த்துப் புரிந்து கொள்ளும் இடங்களில் இந்தக் கண்என்னும் சொல் வருகிறது. உதாரணமாக கண்ணுளாளர் கருவிக் குயிலுவர்” (சில- 5-184) என்னுமிடத்தில் இசைக் கருவிகள் வாசிப்பவர்களுடன் சொல்லப்படுவதால், கண்ணுளாளர் என்பவர் ஆடும் கூத்தர் எனப்படுகிறார். சொல்ல வரும் கருத்தை கூத்தின் அசைவுகளால், பார்ப்பவருக்குப் புரியும் வண்ணம் செய்வதால் அவர் கண்ணுளாளர் ஆகிறார்.

அது போல அரசன் கேட்ட விவரத்தை மடலில் எழுதி முத்திரை இலச்சினையைப் பொறித்துத் தருபவரைக்கண்ணெழுத்தாளர்என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. (26-170). எழுத்துகளை மட்டும் எழுதியிருந்தால் அவர் எழுத்தாளர் ஆவார். ஆனால் இலச்சினையை வரைந்ததால், அந்த மடல் யார் பெயரில், எவரிடமிருந்து வருகிறது என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து விடும். அப்படித் தெரியக் கூடிய இடங்களில் கண் என்னும் சொல்லைச் சேர்த்தே தமிழில் வழங்கியுள்ளார்கள்.

அப்படிச் சொல்லப்பட்ட ஒரு விவரம்தான் கண்ணெழுத்துஎன்பது. இது ஒரு மொழியின் எழுத்தல்ல. எந்த மொழியை அறிந்தவர் அல்லது அறியாதவராக இருந்தாலும், கவலையில்லை. கண்ணால் பார்த்தவுடனேயே புரிந்து கொள்ளக்கூடிய வடிவத்தை உடையது கண்ணெழுத்து ஆகும்.
அப்படிப்பட்ட கண்ணெழுத்து, வியாபாரத்துக்காக அனுப்பப்படும் பொருள்களை அடக்கியுள்ள பொதிகள் மீது கட்டுகள் பிரியாத வண்ணம் பொறிப்பார்கள். அதை ஆங்கிலத்தில் சீல் என்கிறோம். அப்படிப்பட்ட பொதிகள் பூம்புகார் நகரில், கப்பல் வழியாக வந்திறங்கியிருந்தன.

வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயில்..” (சிலப் – 5 – 111.113)

அடியார்க்கு நல்லார் தரும் பொருள்:-

வம்ப மாக்கள்- புதியோர்.
தம் பெயர் பொதித்த தம் பெயரெழுதிய
கண்ணெழுத்துப் படுத்த அடையாள எழுத்தினை இலச்சினையாக அமைத்த
எண்ணுப் பல் பொதி பலவாகிய எண்களை உடைய பொதிகள்
கடைமுக வாயில் பண்ட சாலை வாயில் (ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் வந்து இறங்கியிருக்கும் பண்ட சாலை)


கண்ணெழுத்து என்னும் அடையாள எழுத்து இலச்சினையே, சிந்து சமவெளிப் பகுதிகளில் கிடைத்துள்ள சீல்கள் (அடையாள இலச்சினைகள் அல்லது முத்திரைகள்) ஆகும். உதாரணமாக கீழ்க்காணும் சித்திரம், மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள சீல் ஆகும்.

                                  Fig 4 http://www.harappa.com/seal/7.html 

இதில் வராஹம் என்று நாம் சொல்லும் ஒற்றைக் கொம்பு மிருகத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த உருவம் பொறித்த சீல்கள் (அடையாள முத்திரை) நூற்றுக் கணக்கில் கிடைத்துள்ளன. இது அடையாள இலச்சினையாக இருக்க வேண்டும். ஏனெனில் நம் நாட்டில் கூர்ஜரப் ப்ரதிஹார்ர்கள், சாளுக்கியர்கள், காகதீயர்கள், விஜய நகர அரசர்கள் ஆகியோருக்கு வராஹமே அரச இலச்சினையாகும். வராஹம் பொறித்த பொற்காசுகளை வராஹன் என்ற பெயரில் விஜய நகர அரசர்கள் வெளியிட்டனர். தமிழ் நாட்டுக் கோயில் கல்வெட்டுகளிலும் இந்த வராஹப் பொன், தானமாகக் கொடுக்கப்பட்ட விவரங்கள் இருக்கின்றன.

மேலே சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட கண்ணெழுத்து இப்படிப்பட்ட அடையாளத்தைக் குறிப்பதாக இருக்கிறது. அரசனது திருமுக ஓலையைத் தயாரிக்கையில் அதில் அரச இலச்சினையைப் பொறிப்பவர் கண்ணெழுத்தாளர் என்பது இதை ஒட்டியே எழுந்தது. அரசர்களுக்கு மட்டுமல்லாமல், வணிகர்களுக்கும், வணிகக் குழுக்களுக்கும் அவரவர்களுக்கென அடையாள இலச்சினை இருந்திருக்கிறது. அதிலும் வியாபாரத்துக்காக பொதிகளை அனுப்பும்போது, அவற்றில் தங்கள் அடையாளத்தையும், அனுப்பும் பொருளைச் சுட்டிக் காட்டும் வகையிலும் கண்ணெழுத்துகளைப் பொறித்தனர் என்பதே சிலப்பதிகாரம் காட்டும் கருத்தாகும். இதை ஒட்டியே மேலே காட்டப்பட்ட படத்தில் உள்ள முத்திரை இருக்கிறது. அந்த முத்திரையின் பின்புறத்தைக் கீழுள்ள படத்தில் காணலாம்.


                              Fig 5 http://www.harappa.com/seal/8.html

பின்புறத்தில்கயிறு கட்டும் வண்ணம் ஓட்டை கொண்ட அமைப்பு இருக்கிறது. அனுப்ப வேண்டிய வாணிபப்பொருளை நன்றாக அடுக்கி, அதைப் பொதியாகக் கட்டுவார்கள். அந்தப் பொதியைச் சுற்றி கயிற்றால் கட்டி அதில் இந்த அடையாள முத்திரையையும் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள். சிந்து சமவெளியின் முத்திரைகள் மெசபடோமியாவிலும் கிடைத்திருப்பதால், வாணிபப் பொதிகளில் இவற்றைக் கட்டி அனுப்பி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

அல்லது பொதிகளைக் கட்டி அதில் சீல் வைப்பதுபோல ஈரக் களிமண்ணை ஒட்டி அதன் மீது அச்சுக்களால் முத்திரை குத்தியிருக்கிறார்கள். கீழ்க்காணும் படத்தில் முத்திரை குத்த உதவிய அச்சுகளைக் காணலாம்.



                                            Fig 6

இவை மேற்காட்டிய சிலப்பதிகார வரிகள் கூறுவதை ஒத்திருக்கின்றன. இதில் காணப்படும் வடிவங்களை மொழி என்றோ, சொல் என்றோ சிலப்பதிகாரம் கூறவில்லை, இவற்றைக் கண்ணெழுத்துக்கள் என்றே கூறியுள்ளது.  இப்படிப்பட்ட அமைப்பில் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே பூம்புகார் நகருக்குக் கடல் வழியாக பொதிகள் வந்து இறங்கியிருக்கின்றன.

இவை சிந்து சமவெளியைச் சேர்ந்த பொதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற மறுப்பு எழலாம். அதற்கும் சிலப்பதிகாரம் பதில் தருகிறது.

சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எழுப்பக் கல் எடுக்க வேண்டி இமய மலைக்குச் செல்ல ஆயத்தங்கள் செய்த பொழுது, பலவகைப் பட்ட மக்களும் அவனை வந்து பார்த்தனர். அவர்களுள் ஒரு குழுவினர் நூற்றுவர் கன்னரைச் சேர்ந்தவர். நூற்றுவர் கன்னர் என்பது சதகர்ணி என்னும் பெயரது தமிழாக்கச் சொல். சமஸ்க்ருதத்தில் சதம் என்றால் நூறு என்று பொருள். கர்ணி என்றால் அம்பு என்று பொருள். சதம் என்பதை நூற்றுவர் என்றும் கர்ணி என்பதைக் கன்னர் என்றும் தமிழ்ப்படுத்தியிருக்கின்றனர்.

சதகர்ணி என்னும் மன்னர்கள் சாதவாஹன / சாலிவாஹன வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆந்திரா முதல் மஹாராஷ்டிரம் வரை ஆண்டனர். செங்குட்டுவன் காலத்தில், யவனர்கள் போன்ற மிலேச்சர்கள், இந்தியாவின் வடமெற்குப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் வராமல் சதகர்ணி மன்னர்கள் தடுத்திருக்கின்றனர். அவர்களுள் கௌதமிபுத்ர சதகர்ணி என்பவன் யவனர்களை வென்றிருக்கிறான். அவனது காலம் பொ.பி. 78 முதல் பொ.பி 102 வரை என்று சொல்லப்படுகிறது. இந்த மன்னன் செங்குட்டுவனது நண்பனாக இருந்திருக்கிறான். இவர்கள் இருவருமாக யவனர்களை அடக்குவதில் ஈடுபட்டு வென்றிருக்க வேண்டும். ஏனெனில் இமயத்துக்குச் சென்று கல் கொண்டு வரும் செய்தியைக் கூறுமிடம் ஒன்றில்,

வன் சொல் யவனர் வளநாடாண்டு
பொன் படு நெடுவரை புகுந்தோன் ஆயினும்(சிலப்- 28 – 141 &142)

என்று சிலப்பதிகாரம் கூறுவதால், கௌதமிபுத்ர சதகர்ணியுடன் சேர்ந்து, செங்குட்டுவனும் யவனர்களை வென்றிருக்கிறான் என்பது தெளிவாகிறது. இதைக் கொண்டு செங்குட்டுவன் காலம் 1 ஆம் நூற்றாண்டின் இறுதி என்று அறியலாம்.

முதலில் இந்த சதகர்ணி மன்னன் சஞ்சயன் என்னும் தனது தூதுவன் தலைமையில் ஒரு செய்தி அனுப்புகிறான். கண்ணகிக்குச் சிலை எழுப்ப, கல் எடுப்பதற்காகச் செங்குட்டுவன் வருவதென்றால், அதைத் தாமே செய்து விடுவதாகவும், இமய மலையில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டித் தாமே சேர நாட்டுக்கு வந்து தருவதாகவும், அதனால் செங்குட்டுவன் வட திசை நோக்கி வர வேண்டியதில்லை என்றும் கூறுகிறான். (சிலப் -26 – 150 வரிகள் முதல்)

ஆனால் செங்குட்டுவன் அதற்கு ஒப்பவில்லை. முன்பொரு முறை தன் தாயுடன் கங்கைக்குப் புனித நீராடல் செய்ய வந்த பொழுது, பாலகுமாரன் மக்களான கனக, விஜயன் என்பார் தன்னை இழிவாகப் பேசினதால், ‘அருந்தமிழ் ஆற்றல்அறியாத அவர்களுக்குப் பாடம் கற்பிக்கத் தாம் வருவதாகப் பதில் கூறி, கங்கையைக் கடக்கப் படகுகளை ஏற்பாடு செய்யுமாறு நூற்றுவர் கன்னரிடம் கேட்டுக் கொள்கிறான்.

இங்கு சில முக்கிய விவரங்கள் பொதிந்திருக்கின்றன. நூற்றுவன் கன்னனுக்கு கங்கைக் கரை வரையிலும் செல்வாக்கும், படை பலமும் இருந்திருக்கிறது. அவன் வடமேற்கு இந்தியா வழியாக நுழையக் காத்திருக்கும் மிலேச்சர்களை அடக்குவதில் ஈடுபட்டிருந்தான். அப்பொழுது, புது தொல்லையாக தெற்கிலிருந்து படையுடன் சேரன் வந்தால், யார் எந்தப் பக்கம் சேருவார்களோ என்ற எண்ணத்தில், சேரமன்னன் வருகையைத் தடுக்கப் பார்த்திருக்கிறான். ஆனால் சேர மன்னனுக்கு யார் மீது பகை என்ற தெளிவு கிடைத்தவுடன், அவன் வட இந்தியாவுக்கு வந்த போது, அவனது கூட்டுறவுடன் யவனர்களை அடக்கியிருக்கிறான். இந்தச் செய்தி வட இந்தியப் பகுதிகளில் பதிக்கப்படவில்லை. சிலப்பதிகாரத்தில் மட்டுமே இருக்கிறது. அதிலும், யவனர்களை வென்று, இமயத்துக்குச் சென்றான் என்று சொல்லப்படவே கௌதமிபுத்ர சதகர்ணியுடன் வடமேற்கு இந்தியாவில் இருந்த யவனர்களை வென்றிருக்கிறான்.

அந்தப் பகுதி பருப்பதம் என்று தமிழ் நூல்களில் சொல்லப்படும் அமர்நாத் பகுதியாக இருக்க வேண்டும். (24 ஆவது கட்டுரை) பருப்பதத்திலதான் பாண்டியன் கயல் பொறித்தான், அங்குதான் சேரனும் வில் பொறித்திருக்க வேண்டும். அமர்நாத், காஷ்மீர்ப் பகுதிகளுக்குத் தெற்கில், இந்தியாவின் வடமேற்கில் யவனர்கள் இருந்திருக்க வேண்டும். அந்தப் பகுதி வரை கௌதமி புத்ர சதகர்ணிக்கு வீச்சு இருந்திருக்கிறது.

இத்தனை விவரமும் ஏன் சொல்கிறேன் என்றால், செங்குட்டுவனுக்குத் தூதுவனை அனுப்பின நூற்றுவன் கன்னன் எனப்படும் சதகர்ணி, வெறுங்கையுடன் அனுப்பவில்லை. கூத்தர்களையும், 102 நாடக மகளிரையும், 208 இசைக் கருவியாளர்களையும், 96 வகை சமய சாத்திர வகையறிந்த 100 வேழம்பரையும், தாமரை வடிவிலான 100 தேர்களையும், 500 யானைகளையும், பதினாயிரம் குதிரைகளையும்இனி இங்கு தான் முக்கிய விவரம் வருகிறது

எய்யா வடவளத்து இருபதினாயிரம்
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்
அனுப்புகிறான். ( சிலப்- 26 -135 & 136)

இதற்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார், “வேறோரிடத்தும் கண்டறியாத வடதிசை வளங்களை உடையனவாயும், சரக்கின் பெயர், அளவு முதலியன பொறிக்கப்பட்ட பொதிகளை உடையனவாயும் அணி செய்யப்பெற்ற இருபதினாயிரம் வண்டிகளும் என்கிறார்.

கண்ணெழுத்துப் படுத்தன என்று இங்கு இளங்கோவடிகள் சொல்வது, பூம்புகாரில் வந்திறங்கிய பொதிகளுக்கொப்பாக, கண்ணால் பார்த்த அளவிலேயே புரிந்து கொள்ளும் வண்ணம், என்ன பொருள், எத்தனை எண்ணிக்கை என்பது போன்ற விவரங்களைக் கண்ணெழுத்தாகப் பொறிக்கப்பட்ட பொதிகள் என்பது புலனாகிறது. இந்தப் பொதிகள் வட இந்தியாவின் வளத்தைத் தாங்கி வந்தன. இந்தப் பொதிகளை அனுப்பியவன், வடக்கு, வடமேற்கு இந்தியாவில் கோலோச்சியவன். அந்தப் பகுதியில் சிந்து சமவெளி நாகரிகம் அவனது காலத்துக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் வரை தழைத்தோங்கியிருந்தது. அதற்குப் பிறகு அங்கிருந்த மக்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை என்று சிந்து ஆராய்ச்சியாளர்கள் கையைப் பிசைவார்கள்.

அங்கிருந்த மக்கள் எங்கே போவார்கள்? அங்கேயே, அருகிலுள்ள இடங்களில் வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் தொடர்ந்திருக்கிறது. அவர்கள் புகுத்திய வாணிப இலச்சினை உத்திகள் தொடர்ந்திருக்கின்றன. இது செங்குட்டுவன் காலம் வரையிலும் தொடர்ந்திருக்கிறது.

5000 ஆண்டுகளுக்கு முன்னால் வாணிப்ப் பொருட்களை எவ்வாறு அனுப்பினார்களோ, அதே முறையில், சிலப்பதிகாரக் காலம் வரை அனுப்பி இருக்கிறார்கள்.

வடமேற்கில் வாழ்ந்த மக்கள் அந்தப் பகுதிகளிலிருந்துதான் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் ஆரியப் படையெடுப்பு நடந்து அதனால் தமிழ் நாட்டுக்கு வந்து, பிறகு தமிழ் நாட்டிலிருந்து அனுப்பவில்லை.

அவர்கள் தமிழர்களும் இல்லை. சிந்து சமவெளிப் பகுதி மக்கள் உண்டாகின சரக்கு, சிலப்பதிகாரக் காலக் கட்டத்தில் பூம்புகாருக்கும், வஞ்சிக்கும் வாணிபப் பொருளாக வந்திருக்கிறது.

அந்தச் சரக்குகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் கண்ணெழுத்துக்கள் என்று தெளிவாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதை அறியாத ஆராய்ச்சியாளர்கள், அந்த எழுத்துக்களில் தமிழ் மொழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


அடுத்த முக்கிய விவரத்துக்கு வருவோம்.

5000 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய சிந்து சமவெளி வாழ்கைக்கும், சதகரணிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அதைக் காட்ட கண்ணெழுத்தைப் பார்க்க வேண்டும்.  அரச முத்திரைகளும், அரச இலச்சினைகளும் கண்ணெழுத்துக்களே. ஏனெனில் அவற்றைப் பார்த்த மாத்திரத்தில் அவை எந்த அரசனைச் சார்ந்தவை என்று மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வர். சதகர்ணிகளுடைய இலச்சினையில் மலையும், ஒரு க்ராஸும் (கூட்டல் குறி) கண்டிப்பாக இருக்கும். அது உண்மையில் க்ராஸ் அல்ல. நான்கு திசைகளைக் காட்டுவது.




பொ.பி 1 ஆம் நூற்றாண்டில் கௌதமிபுத்ர சதகர்ணியால் வெளியிடப்பட்ட நாணயம் இது. யவனர்களை வென்று யவன (கிரேக்க) நாணயங்களைக் கைப்பற்றியிருக்கிறான். அதன் மீதே தனது அடையாள முத்திரையைக் குத்தியிருக்கிறான்.

முன்பக்கம் முக்கோணங்களாகத் தெரிபவை மலை. கீழ்க்காணும் படத்தில் தெளிவாகக் காணலாம்.


                                            Fig 8


பின்புறம் இருப்பது (2 ஆவது படம்) உஜ்ஜயினி சின்னம் என்றழைக்கப்பட்டது.
க்ராஸ் போன்ற அந்த அமைப்பு உண்மையில் 4 திசைகளைக் காட்டும் உஜ்ஜயினி சின்னமாகும். கீழுள்ள படத்தில் தெளிவாகக் காணலாம்.
                                         Fig 9


நான்கு திசைகளும் உஜ்ஜயினியை மையமாகக் கொண்டு சொல்லப்படுவன. ஏற்கெனெவே பல இடங்களில், இந்தத் தொடரில், நாம் சொல்லியிருக்கிறோம் பூமியின் அச்சின் மீது, லங்கா, உஜ்ஜயினி, குருக்ஷேத்திரம் ஆகியவை அமைந்துள்ளன. உஜ்ஜயினியை மையமாக வைத்து நான்கு திசைகளை ஜோதிடத்தில் கணித்தனர். உஜ்ஜயினியே நேரம், காலம் ஆகியவற்றுக்கு ஆதாரமாக அறிவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதை ஆண்ட கௌதமிபுத்ர சதகர்ணியே சாலிவாஹன சகாப்தத்தை ஏற்படுத்தினான். அதைத்தான் இன்றுவரை பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்,

28 ஆவது கட்டுரையில் நாம் ஏற்கெனவே கூறியவாறு யவனர்கள் போன்ற மிலேச்சர்களை இவன் வென்றதால், சஹாப்தத்தை ஆரம்பிக்கும் தகுதி பெற்றான். அவன் நண்பனான செங்குட்டுவனுக்கு அது குறித்து எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் நம் மாநில திராவிடவாதிகளுக்கு அவன் வட ஆரியன், தமிழர்களை அடக்க வந்த அரக்கன்!

கௌதமிபுத்ர சதகர்ணி, சாலிவாஹனப் பரம்பரையைச் சேர்ந்தவன். அந்த சாலிவாஹனன் யார்? 19 ஆம் நூற்றாண்டு வரையில் நம் மக்களுக்கு அவன் யார் என்று தெரிந்திருக்கிறது. ஏனெனில் 1881 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் ரிப்போர்ட்டில் அவனைப் பற்றி மக்கள் கொண்டிருந்த எண்ணத்தை எழுதியிருக்கிறார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். (http://www.chaf.lib.latrobe.edu.au/dcd/page.php?title=&record=387)

அவன் ஒரு கும்பன், அதாவது குயவன். பேல்தார் (வேளிர்), சுதர் என்னும் தச்சர்கள், இரும்புத் தொழிலாளர்கள், பொற்கொல்லர்களுக்கிடையே வளர்ந்தவன். அவன் வளர்ந்த இடத்தில் சிந்து சமவெளி நாகரிகம் தழைத்திருந்தது. அதன் சுவடுகள் 3500 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டன என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொன்னாலும் அந்த மக்களும், அவர்கள் பரம்பரையாகச் செய்து வந்த தொழிலும் மறையவில்லை. ஏனெனில் தங்கள் சின்னம் என்று சாலிவாஹனர்கள் காட்டுவது சிந்து சமவெளி முத்திரைகளில் இருந்திருக்கிறது.

சாலிவாஹன (அ) சதகரணி முத்திரை, நாணயங்களில் யானைக்கு இடம் உண்டு. இவர்கள் யானைகளைப் பழக்குவதில் வல்லவர்கள் போலும். சேரன் செங்குட்டுவனுக்கு 500 யானைகளைப் பரிசளித்திருக்கிறார்கள். அவர்கள் நாணயத்தில் யானையையும், 4-திசைகளைக் குறிக்கும் க்ராஸ் குறியையும் காணலாம்.


                              Fig 10 http://en.wikipedia.org/wiki/File:Satkarni1.JPG
இதே போல யானையும், மூன்று முக்கோணங்களாக மலைகளையும் கொண்ட முத்திரை மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ளது.


                                        Fig 11 Seal M 281

சதகரணிகள் நாணயங்களில் சூரியன், சந்திரனும் இருக்கின்றன. மேலேயுள்ள முத்திரையில் முதலில் இருப்பது சூரியனை ஒத்து உள்ளது. யானைக்கு மேற்புறம் 5 சித்திரங்கள் இருக்கின்றன. இவை ஒரு குறிப்பிட்ட சரக்கு அல்லது அதை உருவாக்கின வியாபாரியைக் குறிக்கும் அடையாளச் சின்னம் என்பது சிலப்பதிகாரம் சொல்லும் கண்ணெழுத்துக் கருத்தாகும். சாலிவாஹனன் கும்பர்களிடையே வளர்ந்தவன் ஆதலால், இந்த முத்திரை அவனது முன்னோர்களைக் குறிப்பதாகவும் இருக்கலாம். இந்த முத்திரையின் வலது ஓரத்தில் இருப்பது பானைச் சின்னம். (கும்பம் என்றால் பானை) கும்பர்களது இலச்சினையாக இது இருக்கலாம். ஏனெனில் இந்தச் சின்னம் பல முத்திரைகளில் காணப்படுகிறது.

மூன்று முக்கோணச் சித்திரமும், கும்பமும் பிற முத்திரைகளிலும் காணப்படுகின்றன. 


                                                                   Fig 12
                                               Seal M 58

 வேத மரபில் முக்கியத்துவம் பெற்ற அரச இலையுடன் கூடிய மூன்று முக்கோணமும் கிடைத்துள்ளது. இதுவும் சாலிவாஹனனது கும்பப் பரம்பரைச் சின்னமாக இருக்கலாம். சாலிவாஹனர்கள் அஸ்வமேதம் போன்ற பெரும் யாகங்களைச் செய்தவர்கள்.

                                         Fig 13
                                            Seal K – 53

கீழ்க்காணும் சின்னத்தில் க்ராஸும் அம்பும் இருக்கின்றன.

                                            Fig 14

                                            Tablet H 787 B

சக்கரம் போன்ற வட்டத்தில் உஜ்ஜயினி முத்திரையைப் போல 4 திசைகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அதையடுத்து வில்லும், அம்பும் இருக்கிறது. சதகர்ணி என்றால் நூறு அம்புகள் என்று பொருள். இந்தக் கண்ணெழுத்து சிந்து சமவெளியில் இருக்கிறதென்றால், அதை அடையாளமாகக் கொண்ட மக்கள் வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று கண்ணெழுத்து காட்டுகிறதல்லவா? சதகர்ணி என்னும் குலப் பெயரையும் வைத்துக் கொண்டுள்ளதால், அவர்களது பூர்வீகம் சிந்து சமவெளிப் பகுதிக்குச் செல்கிறது என்று சொல்லலாமல்லவா?

வில்-அம்புக்கு அடுத்த சின்னம் மலையை ஒத்திருக்கிறது. எனவே இந்தச் சின்னம், சதகர்ணிகளது ஆதி சின்னமாக இருக்க வேண்டும். பின்னாளில் நாடாளும் நிலமை வந்த போது அந்தப் பூர்வ சின்ன்ங்களையே தங்கள் அடையாளங்களாகத் தொடர்ந்திருக்கிறார்கள். சிந்து சமவெளித் தொடர்பு இருந்ததால்தான், வட திசை வளங்களைப் பொதிகளாகக் கட்டி, கண்ணெழுத்து இலச்சினை பொறித்து சேர மன்னனுக்கு அனுப்பியிருக்கின்றனர்.
சிந்து சமவெளித் தொடர்பு இருந்ததால்தான், அங்கே அவர்களுக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்த மிலேச்சர்களை அடக்குவதில் மும்முரம் காட்டியிருக்கிறார்கள்.


இனி சிந்து சமவெளியிலிருந்து கெல்டிக் மக்களது ஓஅம் மொழிக்குச் செல்வோம். கண்ணெழுத்தாக அமைந்தவை சிந்து சமவெளிச் சின்னங்கள். அதே போலவே கண்ணெழுத்தாக 20 தாவர வகைகளுக்கு அடையாளம் கொடுத்தனர் கால் என்னும் கெல்டு மக்கள்.

தொல்பொருளாக்க் கிடைத்துள்ள வடிவங்கள் கீழ்க்கண்டவையே.

                                           Fig 15

கோடுகளாகவும், சீப்பு போலவும் அமைந்த இவை 20 விதமான தாவரங்களைக் குறிக்கின்றன என்கிறார்கள்.
இது போன்ற கண்ணெழுத்துக்களை சிந்து சமவெளிச் சின்னங்களிலும் காண்கிறோம்.

உதாரணமாக, கீழ்க்காணும் சின்னத்தில் வலது ஓரத்தில் ஒரு மரம் அல்லது செடி காட்டப்பட்டுள்ளது. அதன் இலைகளைக் காட்டிய அமைப்பைப் பாருங்கள். இதைப் போலவேதான் ஓஅம் அமைப்புகளும் இருக்கின்றன.

                                     Fig 16
                                         M 1425A

இதை அடுத்து, கோடுகள், சீப்பு போன்ற அமைப்புகள் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் என்ன வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளுங்கள், ஆனால் வலது ஓரத்தில் இருப்பது ஒரு தாவரம் என்பதில் சந்தேகமேயில்லை.

நாம் காணும் காலக் கணக்கின்படி சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன்பே த்ருஹ்யு நாட்டை விட்டு வெளியேறி விட்டான். அவனைச் சேர்ந்தவர்கள் பின்பற்றிய ஓஅம் எழுத்தின் சுவடுகள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவையே கிடைத்துள்ளன. கால வேறுபாடுகள் இருந்தாலும், தாவரத்தை ஒரே விதமாகக் காட்டும் பாணி சிந்து சமவெளியிலும், கெல்டு மக்களிடையேயும் இருந்தன என்பது கவனிக்க வேண்டியது. அதிலும், கெல்டுகளைச் சேர்ந்த ட்ரூயிடுகள், இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள் என்பதால், இந்த ஒற்றுமை இருக்கிறது.

மேலும் சில சிந்து சமவெளி முத்திரைகளைப் பார்க்கலாம்.

                                       Fig 17
                                            Seal B 10

இந்தச் சின்னத்திலும் ஒரு செடி இருக்கிறது. இதே சின்னத்தில் கோடுகள் இருப்பது ஏன்? ஆதியில் இருந்த கண்ணெழுத்து வடிவத்தை இது காட்டுகிறதல்லவா? இது போன்ற கோடுகள் ஓஅம் எழுத்தில் இருப்பது தற்செயலானதா?

                                          Fig 18
                                        
M 1341

இன்னுமொரு சின்னத்தை மேலே காண்கிறீர்கள். ஓஅம் எழுத்துக்கள் தாவர வகைகளைக் குறிப்பிடுகின்றன என்பதால், இந்த சிந்து சமவெளிச் சின்னமும் தாவரங்களையே காட்டும் கண்ணெழுத்து எனலாம். இதில் நடுவில் காணப்படும் பெட்டகம் போன்ற அமைப்பு சோம ரசத்தைப் பிழியும் பாத்திரமாக இருக்கலாம். எதை எதையெல்லாமோ சோம பாத்திரம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உதாரணமாக கீழ்க்காணும் முத்திரையில் ஒற்றைக் கொம்பு மிருகத்தின் முகத்துக்குக் கீழே இருக்கும் பாத்திரம் போன்ற அமைப்பை சோம ரசம் பிழியும் பாத்திரம் என்கிறார்கள். அதைவிட மேலே காட்டும் கண்ணெழுத்து, ஏதோ செடியுடன் தொடர்பு கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

                                           Fig 19

                                                  M 218

இங்கு காட்டப்பட்டுள்ள முத்திரைகளில் எல்லாம் செடி மற்றும் ஓஅம் எழுத்தின் அமைப்பில் கோடுகள் இருப்பதைக் காணலாம்.

.
                                        Fig 20
                                                Dlp 3



                                         Fig 21
                                              m 898


                                         Fig 22
                                                M 172



                                       Fig 23
                                              M 704

கால் என்னும் கெல்டுகளுக்கும் சிந்து சமவெளிச் சின்னங்களுக்கும் உள்ள ஒற்றுமை இத்துடன் நிற்கவில்லை.

கால் மக்களுக்கு ஆதியில் பாரதத்தொடர்பு இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு வலுவான ஆதாரம், இவர்கள் வராகத்தைப் பூஜித்தார்கள் என்பதே. வேத மரபில் இருப்பது போலவே, நதி, மண், செடி, மரம், மிருகம் என்று இயற்கையில் உள்ள எல்லாவற்றையும் மதித்தும், வழிபட்டும் வந்த இந்த கெல்டுகள்அவர்களுள் கல்லி என்ற பெயருடன் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த இந்த மக்கள்விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வராகத்தை மிக முக்கியமான ஒன்றாகக் கருதினார்கள். சிந்து சமவெளிப் பகுதியில் அந்தச் சின்னம் அதிகமாகக் கிடைத்துள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அவர்கள் உருவாக்கிய வராகத்தைக் கீழே காணலாம்.


                                        Fig 24

பொ.பி. 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதன் வாய்ப் பகுதியையும், முதுகில் வளையம் போன்ற அமைப்பு இருப்பதையும் கவனியுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் கால் மக்கள் பயன்படுத்திய நாணயமாகும். அதிலும் வராஹ உருவம் இருக்கிறது. முதுகில் வளையங்கள் போன்ற அமைப்பு இருக்கிறது. அது மட்டுமல்ல, வராஹத்துடன் எப்பொழுதும் இணைந்த தர்மச் சக்கரம், கூட்டல் குறியைப் போல இருக்கிறதைக் காணவும்


                                           Fig 25

Before 52 BC. Potin 16mm (2.77 gm). Boar, cross below / Boar, pellet in lozenge below. BMC.S16. VF+, dark green patina, some encrustation. Scarce type. Ex Bir Collection

இதே கூட்டல் குறியும், நான்கு பக்கங்களில் வட்டங்களும் நூற்றுவர் கன்னர் எனப்படும் சதகர்ணிகளது உஜ்ஜயினி முத்திரையில் இருப்பதை மறக்க வேண்டாம். அது மட்டுமல்ல, இப்படிப்பட்ட க்ராஸ் சின்னம் தர்மச் சக்கரமாகும் என்பதையும், குறிப்பாக வராஹத்தை ஒட்டி வரும் இக்குறி தர்மச் சக்கரத்தையே காட்டும் என்பதையும் மறக்க வேண்டாம். 

இதில் காணப்படுவது கிருஸ்துவ கிராஸ், இது சக்கரமல்ல என்று சொல்ல விரும்புபவர்கள் இந்தியாவில் பொ.பி. 6 ஆம் நூற்றாண்டில் ஐஹோளேவில் செதுக்கப்பட்ட சாளுக்கிய மன்னர்களது அரச சின்னத்தைப் பார்க்கவும், அதிலும் வராஹத்துடன், கல்லி நாணயத்தில் காணப்படும் அமைப்பில் தர்மச் சக்கரமும் இருக்கிறது. அந்தச் சின்னத்தைக் கீழே காணலாம்.
                                     Fig 26

இதைப் பார்த்து விட்டு, சாளுக்கியர்கள் வந்தேறிய ஆரியர்கள் என்றோ, கால் மக்களிடமிருந்து இந்தக் கருத்துக்களைக் கடன் வாங்கியவர்கள் என்றோ நம் மக்கள் கூற மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இங்கு நாம் சொல்ல வரும் கருத்தே வேறு. கருட புராணத்தில் சாளக்கிராமங்களது அமைப்பைச் சொல்லுமிடத்தில் வராஹப் பெருமாளின் சாளக்கிராமம் எப்படி இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கால் என்னும் கல்லி மக்கள் பின்பற்றிய வராஹ அமைப்பு அதை ஒட்டியே இருக்கிறது என்பது ஆச்சரியமான உண்மை. கருட புராணத்தில் (Panchanan Tarkaratna, part1 Chapter 45) வராஹ முகத்துடனும், முதுகில் இரண்டு வளைவுகளுடனும் இருப்பது வராஹ சாளக்கிராமம் என்கிறது. முதுகில் இரட்டைப் படை எண்ணிக்கையில் வளையங்கள் இருக்கும் என்றும், சக்கரத்துடன் கூடியதாக இருக்கும் என்றும் வராஹ லக்ஷணங்களாகச் சொல்லப்பட்டுள்ளது.
                                     Fig 27 வராஹ சாளக்கிராமம்.

கால் நாணயத்தில் இந்த லக்ஷணங்கள் அமைந்திருப்பதைக் காணலாம். வராஹம் என்னும் தெய்வத்தை அறிந்த மக்களாக இருந்தால் மட்டுமே இப்படி அமைத்திருக்க முடியும்.

வராஹம் மட்டுமல்ல, சாளுக்கிய முத்திரையில் உள்ள கண்ணாடி அமைப்பும், அதே போலவே கெல்டுகளது சின்னங்களில் உள்ளன.
சாளுக்கியக் கண்ணாடியைப் பார்ப்போம்.


                                      Fig 28

ஸ்காட்லாந்தில் கிடைத்துள்ள கெல்டுகளது சின்னத்திலும் அதே போன்ற கண்ணாடியைக் காணலாம்.
கண்ணாடியின் பக்கத்தில் சீப்பு போன்ற அமைப்பு சிந்து சமவெளிச் சின்னங்களில் இருப்பதைப் போல அமைந்துள்ளது.

இப்படிப்பட்ட ஒற்றுமைகள் இருப்பதால், மய வாஸ்து பல இடங்களிலும் பரவி இருப்பதைப் போல, இது போன்ற முத்திரைகளும் ஒரே விதமான சிற்பக் கலைஞர்கள் மூலமாகப் பரவியிருக்கலாம் என்று எண்ண வாய்ப்பிருக்கிறது. அது சரியல்ல, ஏனெனில் மேலே காட்டப்பட்ட அமைப்புகள் மத நம்பிக்கை சம்பந்தப்பட்டவை. கலாசார வழக்கங்களை அடிப்படையாக்க் கொண்டவை. ஒரே மூலத்திலிருந்து இவை உண்டாகி, அவற்றை மக்கள் பின்பற்றியிருந்தால்தான் இப்படிப்பட்ட ஒற்றுமைகள் இருக்க முடியும்.

கண்ணாடியும், சீப்பும், சக்கரமும் கண்ணெழுத்துகளாக மங்கலச் சின்னங்களாக பாரத நாட்டில் இருப்பவை. அஷ்ட மங்கலச் சின்னங்கள் என்னும் 8 சின்னங்கள் வேத மரபில் வாழ்ந்த எல்லா அரசர்களும் பின்பற்றினார்கள்.

தீபம், கவை, கண்ணாடி, தோட்டி,
புணர் மீனே, முரசு, கும்பம், பொலிகொடி சுபம் ஓரெட்டே
என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது. (12-90)

கவை என்றால் விசிறி அல்லது சாமரம். தோட்டி என்றால் யானையை அடக்கும் அங்குசம், இவை எல்லாம் கண்ணெழுத்துக்களாக அரச முத்திரைகளில் இருக்கும். இவற்றில் மீன் அதிலும் புணர் மீன் என்று இரட்டை மீன் சொல்லப்பட்டிருப்பதைப் பாருங்கள். இவை எல்லாம் சிந்து சமவெளி முத்திரைகளில் இருப்பவையே. மீனில் நக்ஷத்திரத்தைத் தேடுகிறார்களே, அஷ்ட மங்கப் பொருள்களில் மீன், மீனாகத்தான் இருக்கும். நக்ஷத்திரமாகாது.

இவை போலவே 21 மங்கலச் சின்னங்களை சூடாமணி நிகண்டு கூறுகிறது. இவை பாரதம் முழுவதும் அரசர்களால் போற்றப்பட்டவையே. இவையாவன:- மகுடம், குடை (கொற்றக் குடை), விசிறி அல்லது சாமரம், அங்குசம், முரசு, சக்கரம், யானை, கொடி, சுவர், தோரணம், கும்பம் அல்லது நீர்க் குடம், மாலை, சங்கு, கடல், மகர மீன், கூர்ம்ம் (ஆமை), இரட்டை மீன், சிங்கம், தீபம், எருது, சிம்மாசனம். 

இவற்றைப் பெயர்ச் சொல்லாக முத்திரைகளில் பதிக்க மாட்டார்கள். சித்திர வடிவில்தான் கண்ணெழுத்தாகப் பதிப்பார்கள். இவற்றில் குறைந்தது இரண்டு சின்னங்களாவது எந்த ஒரு சிந்து சமவெளிச் சின்னத்திலும் இடம் பெற்றிருக்கும். இவை கண்ணெழுத்துக்கள் ஆனதால், சிந்து சமவெளி எழுத்துக்களும் கண்ணெழுத்துக்களே.

இவை எழுந்த பாரத நாட்டிலிருந்து வெளியேறிய மக்களாதலால், ட்ரூயிடுகளும் பாரதச் சின்ன்ங்களைக் கண்ணெழுத்துக்களாகப் பின்பற்றியிருக்கின்றனர். அதன்  அடிப்படையில் இன்னும் இரண்டு சின்ன்ங்களை நாம் ஆராய வேண்டும்.
ஒன்று ஓஅம் எழுத்தில் அமைந்துள்ளது என்று சொல்லப்படும் ஒரு தகடு.
                                          Fig 30

ஓஅம் என்னும் கோடுகளுடன், சதுரம், வட்டங்கள் என்றும் அமைந்துள்ளன. இவற்றுக்கும் பாரத மரபுகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதையும், அதனுடன் கீழே காட்டப்பட்டுள்ள கல் அமைப்பில் உள்ள ஓஅம் எழுத்துக்கும், பாம்புச் சின்னத்துக்கும் பாரத மரபில் தொடர்பு இருக்கிறதா என்றும் அடுத்த கட்டுரையில் காண்போம்.


                                       Fig 31

பாரதத்திலிருந்து வெளியேறினவர்களே கால் மக்களும் என்பதை உறுதி செய்யும் இன்னுமொரு சாட்சியுடன் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

ஃப்ரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பொ.மு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாத்திரத்தின் கைப்பிடியில் உள்ள உருவத்தைக் கீழே காணலாம்.

                                Fig 32 http://en.wikipedia.org/wiki/Vix_Grave

பயத்தை உண்டாக்கும் தோற்றத்துடன் நாக்கை நீட்டிக் கொண்டிருக்கும் இந்தப் பெண் உருவத்தின் நெற்றியில் பொட்டு இருக்கிறது!
யாருடைய முகம் என்பதில் ஹிந்துக்களுக்குச் சந்தேகமே இருக்க முடியாது. தடுக்கி விழுந்தால் இந்த முகத்தை இந்தியாவில் எங்கணும் பார்க்கலாம்.


                                       Fig 33

இதுவே கல்கத்தா காளியின் வடிவமும் கூட.


                                  Fig 34 கல்கத்தா காளி.

இந்த உருவத்தை ஃப்ரான்ஸ் நாட்டுக்காரர்கள் இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றிருப்பார்கள், அல்லது இந்தியச் சிற்பி அங்கு போய் செதுக்கியிருப்பான் என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் அதன் காலம் பொ.மு. 5 ஆம் நூற்றாண்டு. முகம் ஒன்றாக இருந்த போதிலும், அலங்காரம் அவர்கள் நாட்டைப் போலிருக்கிறது.


அதே முகம் அரச இலையில் வடிக்கப்பட்டுள்ளதைக் கீழே காணலாம்.


இதில் பொட்டு இல்லையென்றாலும், வடிக்கப்பட்டது வேத மரபில் முக்கியத்துவம் பெற்ற அரச இலையில். இதன் காலம் பொ.மு 6 ஆம் நூற்றாண்டு என்கிறார்கள். அனடோலியாவைச் சேர்ந்த்தாக இருக்க வேண்டும்.

இந்தப் புனைதல்களெல்லாம், பழைய நினைவுகளையும், பழக்க வழக்கங்களையும் எடுத்துச் சென்ற ஒரு சமுதாயம், காலப்போக்கில் மறந்து போய், அதனால் உருமாற்றம் அடைந்தவையாகத்தானே இருக்கின்றன?








6 கருத்துகள்:

  1. Before making any topic about INDUS OR HARAPPAN CIVILIZATION or their script, pls search for articles written by Mr. Iravatham Mahadevan, an Indian epigraphist.

    I am giving one such link...http://www.harappa.com/arrow/meluhha-and-agastya.html and in the same site there is an article in a PDF format, please read that also Meluha and Agastya: Alpha and Omega of the Indus Script (PDF)

    பதிலளிநீக்கு
  2. Mr. Iravatham Mahadevan does not belong to any Dravidian Movement. Moreover, Mr. Iravatham Mahadevan was born in 1930 in a Smartha Tamil Brahmin family of Thanjavur district. For further details please read http://en.wikipedia.org/wiki/Iravatham_Mahadevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. # I differ a lot from Dr Iravatham's contentions, though I continue to send to him all my articles in Tamil and English on Indus related ones. All these articles in this series are being sent to some other Indus writers too.

      # One of the issues is that of the Cock symbol which I don't agree with Dr Iravatham's views. My refutation can be read here.

      http://jayasreesaranathan.blogspot.in/2010/08/cocks-in-indus-seal-and-cock-city-in.html

      # The pitcher symbol described by him in the link you have given - that too will be countered in my upcoming articles in this series by showing an Irish carving that has the same image. How to justify it with his explanation? You can't.

      # One can not deny the kannezuththu reference in Silappadhikaram. Most Indus scholars are now coming to the view that Indus symbol is not a script. The so called Alpha and Omega are logos of the specific maker of the tablet or product. Eg, Omega is the Kumba. The Kumbar people must have used it. Salivahana was a Kumba. Even Brahmi lines end up with such symbols showing it to be the seal of the maker/writer.

      # There are numerous articles on Indus and Aryan - Dravidian issue in English in my English blog, http://jayasreesaranathan.blogspot.in The VEL - Agasthya connection from Dwaraka to Pothigai is the climax of this Tamil series in which Lopamudra will appear.
      Just browse my English blog and you will know what I am coming to tell. Some sample articles :-

      http://jayasreesaranathan.blogspot.in/2010/07/ivc-was-post-mahabharata-culture-world.html

      http://jayasreesaranathan.blogspot.in/2011/11/agasthya-in-dwaraka-and-vajra-in.html

      # Finally I am at a loss to understand how you suppose that I have not acquainted myself with Indus authors including Dr Iravatham. Perhaps you have read only a few articles in this site here and there and not read wholly(:

      நீக்கு
  3. Yes, I agree I got the link of your blogspot recently through a mail from one of my friends and I didnt read them in their chronological order, I will open topic and if i feel it is a continuation of previous one then i go to the previous topics, and moreover so far whatever I read I did see any mention about Mr. Iravatham Mahadevan's name or any reference about that. I came to know about Mr. Iravatham Mahadevan about 4 or 5 years back only, and I use to read any article which bears his name.

    I appreciate your acceptance of other's comments and replying it as soon as possible. Keep writing your blogs.

    Thank you.

    பதிலளிநீக்கு
  4. I didn't mention Dr Iravatham's name because, I didnt use any of his views so far. If I use anyone's idea, I would promptly mention it then and there. But those who are in the know of Indus researches by these authors, would know where I am countering them. For example, Indus fish symbol for Tamil word 'meen' is a pet topic of Dr Asko Parpola. In the 103rd article, I had countered that Meen idea. It will continue when I write on Minoan culture.

    On another note, let me say that you can accept Iravatham or Parpola's views en masse ONLY IF you agree to denounce the vast literature resources of Tamil. Tamil grammar does not corroborate with what they say on Indus 'script' or Brahmi script (Iravatham's views).

    பதிலளிநீக்கு
  5. These 'kannezhuththu' are the forerunners of today's barcode!
    I was under the impression, as tutored by teachers and others, that Indus seals depicted a 'script' and till I read the article today I was believing it to be Indus script and toiled many days with my very limited knowledge to find resemblance to known language scripts. But , Thanks to you, I am now clear in my confused thoughts. Very, very interesting findings.I also concur that our puranas, Itihasas, as also the vast Tamil literature have latent clues about our past. Without refering to them, I feel it is futile to unearth our past!
    TG Saranathan

    பதிலளிநீக்கு