வெள்ளி, 9 செப்டம்பர், 2011

73. ஆவணியில் புத்தாண்டா?



அறிவன் என்று அழைக்கப்பட்ட ஜோதிடன்,
நான்கு திசைகளையும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி கவனித்து,
மழை வரவு குறித்த விவரங்களை முன் கூட்டியே
தெரிவிக்க வேண்டியது அவனது முக்கியத் தொழில்.

சரியான காலத்தில், சரியான அளவில் மழை பெய்தால்
அது அரசனது நல்லாட்சிக்குச் சாட்சி.
நான்கு திசைகளிலும் மழை மேகம் சூழ்ந்து மழை பெய்தால்,
அந்த அரசன் மட்டுமல்ல,
அவன் முன்னோர்க்ளும்,
சிறப்பான அரசாட்சி என்னும்திகிரியைச் (அரசச் சக்கரம்)
செலுத்தினார்கள் என்பது பொருள் என்கிறது பத்துப்பாட்டு 69.

மழை வரவு, மழையின் அளவு என்பவற்றின் அடிப்படையில்
நாட்டு வளம் இருக்கவே,
மழை வருமா அல்லது பொய்க்குமா என்பதை
சாமானிய மக்களும் அறிந்திருந்தார்கள் என்று நினைக்கும்படி,
சில விவரங்கள் மீண்டும் மீண்டும் சங்க நூல்களில் வருகின்றன.

அவற்றில் முக்கியமானவை, சுக்கிரன் கிரகம் அமைந்த நிலையாகும்.
சுக்கிரன் தென் திசையில் சஞ்சரித்தால் அந்த வருடம் மழை பொய்க்கும்,
செவ்வாய் இருக்கும் ராசியில், சுக்கிரனும் இருந்தால் மழை பெய்யாது.
மழை தரக்கூடிய நாள் நக்ஷத்திரத்தில் சுக்கிரன் நிற்க வேண்டும்.
நாள் நக்ஷத்திரம் என்பது சந்திரன் இருக்கும் நக்ஷத்திரம்.
சந்திரன் ஆயில்யம், மகம், திரிவோணம், அவிட்டம்
ஆகிய நக்ஷத்திரங்களைக் கடக்கும் போது
மழை பெய்யும் என்பது மரபு.
அந்த நக்ஷத்திரங்களில் சுக்கிரன் நின்றால்
கண்டிப்பாக மழை பெய்யும்
என்ற எண்ணம் இருந்தது.
முந்தின பகுதியில் சந்திரன் அவிட்டத்தில்
இருந்த அமைப்பைக் கண்டோம்.
அப்படிப்பட்ட அமைப்பில் மழை பெய்யும்.

இவை எல்லாம் மூட நம்பிக்கை அல்ல.
காலம் காலமாக அறிவர்கள் இயற்கையை உன்னிப்பாக நோக்கி,
மழை வரக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கண்டு, தெளிந்து
அவற்றை விதிமுறைகளாக எழுதி வந்துள்ளனர்.

மழையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு
எந்த நூலின் ஆரம்பத்திலும் மழையைப் போற்றினார்கள்.
கொடிநிலை, கந்துழி, வள்ளி என்னும்
தொல்காப்பிய சூத்திரம் (புறத்திணை இயல் 27)
இந்த வழக்கத்தைக் குறிக்கிறது.
தொல்காப்பிய இலக்கணமே இவ்வாறு இருக்க,
அந்தத் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தின் ஆரம்பத்தில்
நிலம், கருப் பொருள் என்று விவரிக்க ஆரம்பிக்கையில்,
தொல்காப்பியரும்
மழையிலிருந்துதானே ஆரம்பிக்க  வேண்டும்?

அதைதான் அவர் செய்தார்.
காரும் மாலையும் முல்லை(பொரு- 6)
என்று மழைக் காலத்திலிருந்துதான்
தொல்காப்பியர் ஆரம்பிக்கிறார்.
ஆனால் இந்த சூத்திரத்தைக் கொண்டு,
ஒரு சாரார்,
மழைக் காலம் ஆரம்பிக்கும் ஆவணி மாதமே
தமிழர்களது வருட ஆரம்பமாக இருந்திருக்க வேண்டும்.
பழங்காலத் தமிழன் ஆவணியில்தான்
புத்தாண்டு ஆரம்பித்தான் என்கின்றனர்.

அண்டை மாநிலமான கேரளத்தில் ஆவணியில் புத்தாண்டு ஆரம்பிக்கிறது.
அந்தப் பகுதி மூவேந்தர் ஆட்சிக் காலத்தில்
சேர மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது.
இதனால் தமிழ் பேசும் மக்கள்
ஒரு காலத்தில் ஆவணியில் புத்தாண்டை ஆரம்பித்தனர்
என்று ஒரு வாதம் இருக்கிறது.

இந்த வாதத்தைக் கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது.
எவனைஇவன் திணித்தான், திணித்தான்
என்று திட்டுகிறார்களோ,
அவன் பின்பற்றியதை,
தாங்களாகவே சுவீகரித்துக் கொள்ள விரும்புகிறார்கள்!
ஆவணியில் புது வருடம் என்பது,
பார்ப்பனர்களது கல்வியாண்டு தொடங்கும் நேரமாகும்.

இன்றைக்குக் கல்வியாண்டு என்பது
ஜூன் மாதம் தொடங்குகிறது.
கோடைக் காலத்தில் நீண்ட விடுமுறை கொடுத்துவிட்டு,
வெயில் தணிந்தபின் புதிய கல்வியாண்டை ஆரம்பிக்கிறோம்.
இப்படி, தட்ப வெப்பம், வசதி
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முறைகள் எழுந்துள்ளன.

பார்ப்பனனைப் பொருத்த வரையில்
உத்தராயணத்தில் அவனுக்கு
கோவில், திருவிழா என வெளி வேலைகள் அதிகம்.
அவன் படிப்பதற்கோ,
மற்றவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கோ
நேரம் இருக்காது.

ஆனால் ஆவணி தொடங்கி மழைக்காலம் ஆரம்பித்து விடும்.
அப்பொழுது வெளியே செல்ல முடியாது.
அந்த நேரத்தை வேதம் மற்றும் வேதாங்கம் பயில
() பயிற்றுவிக்கப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஆவணி துவங்கி வளர்பிறைக் காலத்தில் வேத அத்தியயனமும்,
தேய்பிறைக் காலத்தில் வேதாங்க அத்தியயனமும் செய்து,
வேதக் கல்வியைக் கற்றார்கள்.
இந்தக் கல்வி மார்கழி வரை தொடரும்.
அதற்குப் பிறகு உத்தராயணம் ஆரம்பிக்கவே,
கோவில், திருவிழா வேலைகள் என்று மீண்டும் ஆரம்பிக்கும்.
அப்படியும்,
தை என்னும் புஷ்ய மாதத்தில் சுப காரியங்கள் செய்ய மாட்டார்கள்.
அயனம் ஆரம்பித்த முதல் மாதத்தில் தெய்வ காரியம்தான் செய்வார்கள்.
அதன் படி உத்தராயண முதல் மாதமான தை (புஷ்ய மாதம்),
தக்ஷிணாயன முதல் மாதமான ஆடி
ஆகிய இவ்விரண்டு மாதங்களிலும்,
தெய்வ வழிபாட்டுச் செயல்கள் இருக்கும்.


உத்தராயணம் முழுவதும் அவர்களுக்குப் படிக்க நேரம் இருக்காது.
மீண்டும் தக்ஷிணாயனம் ஆரம்பித்த பிறகு,
ஆவணியில் வேதம் பயிலுதல் தொடங்கும்.
இதற்கு ஆதாரம் மனு ஸ்ம்ருதி 4-95.
இந்த வேதக் கல்வியாண்டை பிரம்ம சூத்திர உரையிலும்
ராமானுஜர் எழுதியுள்ளார்.

இடையிலும் மாதாமாதம் அனத்தியயன நாட்கள் என்று,
படிப்பு சொல்லிக் கொடுக்காத நாட்கள் வரும்.
அமாவாசை போன்ற நாட்கள் படிப்பு சொல்லிக் கொடுக்காத நாட்கள்.
அந்த நாட்களில் அவர்களுக்கு பித்ரு ஹோமம்
போன்ற வேலைகள் இருப்பதால்
அப்பொழுதெல்லாம் படிப்புக்கு லீவு நாட்கள்.
இப்படி பிராம்மணர்களுக்கு அமைந்த கல்வியாண்டை,
ஸரஸ்வதி பிராம்மணார்கள் குடியேறிய பகுதியான
கேரளக் கரையோரப் பகுதிகளில்
அந்தக் குடிகளுடன் தொடர்பு கொண்ட
ஒரு மன்னன் ஆரம்பித்து வைத்ததே
கொல்லம் ஆண்டுகள் என்னும்
ஆவணியில் ஆரம்பிக்கும் ஆண்டுகள்.


உதய மார்த்தாண்ட வர்மன் என்னும் அரசனால்
கொல்லம் என்னும் நகரில் ஆரம்பிக்கப்பட்டதால்,
அந்த வருட முறை
கொல்லம் ஆண்டு என்று வழங்கப்பட்டது.


இதைப் பார்த்து,
தாங்களும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தால்
அந்த அரசனைப் போல
ஆண்டுகளை மாற்றும்,
அல்லது உண்டாக்கும் உரிமையும்,
அதிகாரமும் வந்துவிடுகிறது என்று
திராவிடவாதிகள் நினைத்து விடுகிறார்கள்.


அரசர்கள் தங்கள் மனம் போன போக்கில்
மாற்றங்களைக் கொண்டு வந்ததில்லை.
கொடுங்கோல் அரசர்கள்தான் மனம் போன போக்கில்
மாற்றங்களைச் செய்வார்களே தவிர,
தமிழக மூவேந்தர்கள் அவ்வாறு செய்ததில்லை.


உதய மார்த்தாண்ட வர்மன் என்னும் அந்த அரசன்
அந்த மாற்றத்தைத் தன்னிசையாகச் செய்யவில்லை.
தன்னைச் சுற்றியுள்ள புலவர்கள் புகழ் பாடினார்கள்
என்று செய்யவில்லை.
பார்ப்பனர்கள் அவ்வாறு செய்யத் தூண்டினார்கள்
என்று செய்யவில்லை.
அவன் செய்த மாற்றம் மறைந்த ஒரு சாஸ்திரத்தை,
மறக்கப்பட்ட ஒரு வழக்கத்தை
வாழச் செய்வதற்காகச் செய்ததாகும்.


அது என்ன என்று பார்ப்பதற்கு முன்னால்,
கொல்லம் வருடம் கணக்கிடப்படும் முறையை
இந்த இணைப்பில் படிக்கவும்


இதில் வருடங்களின் எண்
கடபயாதி பததி என்னும் முறையில்
கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்
இது இன்று மறைந்து விட்ட வேதக் கணிதம் ஆகும்.
இந்த முறையில் சமஸ்க்ருத எழுத்துக்களுக்கு
எண் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த எண் மாத்திரையல்ல.
மாத்திரை என்பது ஒரு எழுத்தை ஒலிக்கும் கால அளவு.
ஆனால் இந்த எண்,
ஒரு எழுத்துக்கு உரித்தான ஒரு அளவு.


எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று
முன்னோர் சொன்னார்கள் அல்லவா?
அதுதான் இது.
எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களைப் போன்றவை.
ஒரு கண்ணும் மறு கண்ணும் இயைந்து வேலை செய்கின்றன.
அது போல எண்ணும், எழுத்தும் இயைந்து
ஒன்றாக வேலை செய்கின்றன.
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் உண்டு.
அதனால் ஒரு எண்ணைப் பார்த்தே
அதன் எழுத்து என்னவென்று சொல்லி விடலாம்.


எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள்
என்று உள்ளன.
அப்படி ஏன் பெயர் வைத்தார்கள் என்று நாம் சிந்திப்பதே இல்லை.
உயிர் எழுத்துக்கு உயிர் உண்டு.
அவற்றுக்கென வீரியம் உள்ளது.
உயிர் கரை படியாதது.
உயிர் அழியாதது.     
அதனால் அப்படி.


ஆனால் மெய் அப்படிப்பட்டதல்ல.
அந்த மெய்யுடன் உயிர் சேர்ந்தால்தான் உபயோகமாகும்.
அப்படி உண்டாவது உயிர் மெய் எழுத்தாகும்.
அந்த உயிர் மெய் எழுத்தில் உள்ள உயிர்
தனக்கெனெவே வீரியம் கொண்டது.
அந்த வீரியம் அளவிட முடியாதது.
அந்த உயிர், மெய்யுடன் சேரும் போது,
அதன் காரணாமாக உண்டாகும் உயிர் மெய் எழுத்துக்கு
ஒரு வீரியம் கொடுக்கிறது.


அதை ஒரு எண்ணால் குறித்தார்கள்.
நாம் சர்வ சாதாரணமாக நினைக்கும்
எழுத்துக்குப் பின்னால் எத்தனை அர்த்தம் இருக்கிறது பாருங்கள்.
அப்படி எண்களால் குறிக்கப்படும் எழுத்துக்கள்
கடபயாதி பததி எனப்பட்டது.

சமஸ்க்ருத்த்தில் எண்- எழுத்து சேர்க்கையைக் கீழே காணலாம்.
(படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்)




இதில் ஞ,ன என்பவற்றுக்கு எண் இல்லை.
இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும்,
அவ்வவற்றின் வரிசையில் அமைந்துள்ள எழுத்துக்களுக்கும்
அதே எண்ணைக் கொடுக்கும்.
வரிசை என்பது (உ-ம்) க- வரிசை,  க, கா, கி, கீ என்பன.  

வரிசையாக எழுதப்பட்ட உயிர்மெய் எழுத்துக்களைப் பார்த்தால்,
முதல் எண்ணான 1-இல் அமையும் எழுத்துக்கள்
க, ட, ப, ய என்பன.
அதனால் இவற்றுக்கு ‘கடபயாதி பததி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த முறையில் ஆண்டின் எண் போன்றவற்றைக்
கொல்லம் ஆண்டில் பயன்படுத்தபடுத்துகிறார்கள்.

கொல்லம் ஆண்டு 1000 ஆண்டுகளுக்கு முன் உண்டானதால்
இந்த பத்தி ஏதோ சமீபத்திய கண்டுபிடிப்பு என்று நினைக்க வேண்டாம்.

இது சமஸ்க்ருத மொழியில் அனாதி காலம் தொட்டு வருவது.
இந்த முறையில்தான் நூல்களில் பல
மறை பொருட்களை வைத்தார்கள்.


உதாரணமாக மஹாபாரதம் என்னும் நூல் பெயரை
18 என்று குறிப்பார்கள்.
இதில் 1= ய, 8 = ஜ.
சமஸ்க்ருதத்தில் எண்களைப் படிக்கும் போது,
வலது பக்கம் தொடங்கி இடது பக்கம் நோக்கிப் படிக்க் வேண்டும்.
வலது பக்கத்திலிருந்து படிக்கும் போது 8, 1 என ஜய என்று படிப்பார்கள்.
மஹாபாரத்துக்கு வியாசர் வைத்த பெயர் ‘ஜய’ என்பதாகும்.


இதுவே எண் கணிதத்தின் அடிப்படையாகும்.
இதை நம் நாட்டவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு,
கீரோ (Cheiro)  என்பவர், நியூமராலஜி என்னும்
எண் கணித சாஸ்திரத்தை உருவாக்கினார்.




நம்மிடமிருந்து அவரிடம் போய்,
அவரிடமிருந்து நாம் இன்று வாங்கிக் கொண்டு
பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்!!


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்,
உயிர்மெய் எழுத்துக்கான இந்த எண்கள் வீரியம் வாய்ந்தவை.
இவற்றின் அடிப்படையில் ரிஷிகள் மந்திரங்களை உண்டாக்கினர்.
(கீரோவின் எண் கணிதத்தில் இந்த வீரியம் உண்டாக்கப்படவில்லை.)
ஆனால் ரிஷிகள் உண்டாக்கின மந்திரங்களில் உள்ள எழுத்துக்களுக்கு
இந்த வீரியம் உண்டு.
உயிராக அந்த ரிஷிகள் இருந்து,
அவர்கள் தவ வலிமையால்,
இந்த எண்களின் வீரியத்தைக் கூட்டி,
உபதேசித்தனர்.

இது ஸரஸ்வதி நதி தீரத்தில்
வைவஸ்வத மனு குடியேறின காலத்திருந்தே இருந்து வந்தது.
காலப்போக்கில் அழிந்து போனதை மீண்டும்
எடுத்துக் கொடுத்தவர் ஆரிய பட்டர்.
அவர் எழுதிய ஆரியபட்டீயம் என்னும் ஆரிய சித்தாந்தத்தின்
முதல் பகுதியான
‘கீதிக பதத்தில்’,
தஸகீதிக சூத்திரம்’ என்னும் பெயரில்
இந்தக் கடபயாதியையும்,
மேலும் சில எழுத்து – எண் கணக்குகளையும் எழுதி வைத்துள்ளார்.




இதைக் கணித்த்தில் பயன்படுத்தும் முறையையும் தந்துள்ளார்.
அதன்படி பெரிய எண்களை,
ஒரு சில எழுத்துக்கள் கொண்ட சிறிய சொல்லாக எழுத முடியும்.
காலம், கருத்து போன்றவற்றை எளிதாகச் சொல்ல
இது பயன் படும்.


உதாரணமாக ஒரு சதுர் மஹா யுகம் என்பது 43,20,000 வருடங்கள்.
அதை ‘க்யூக்ர்’ (khyu ghr)  என்று சமஸ்ருத்த்தில் எழுதலாம்.
அதாவது 7 ஸ்தானமுள்ள எண்ணை ஒரு சிறிய எழுத்தில் காட்ட முடியும்.
இதில்
khyu = khu + Yu
(khu = kha X U = 2 X10,000 = 20,000
Yu = ya X U = 30 X 10,000 = 3,00,000)
Ghr = gha X r = 4 X 10,00,000 = 40,00,000
Therefore
Khyu ghr = 20,000 + 3,00,000 + 40,00,000 =43,20,000

இது சதுர் யுகத்தின் கால அளவு.


இவரைப் போலவே 2-ஆம் ஆரிய பட்டர் என்பவரும்
தான் எழுதின ‘மஹா சித்தாந்தத்தில்’
கடபயாதி பத்தியைப் பயன் படுத்தும்
வேறு முறைகளையும் எழுதியுள்ளார்.
மறைந்து விட்ட ஒரு அறிவை,
1000 வருடங்களுக்கு முன்னால்
வெளிக் கொணர்ந்தவர்கள்
ஆரியபட்டர் -1 (ஆரியபட்டீயம் எழுதியவர்)
ஆரியபட்டர் -2 ஆகியோரே.
இந்தியாவின் முதல் செயற்கைக் கோள்
ஆரியபட்டரின் பெயரில் அமைந்துள்ளது என்பது
கணித்த்துக்கும், விஞ்ஞானத்துக்கும்
அவர் ஆற்றிய பங்கைப் பறை சாற்றுகிறது. 




ஆரியபட்டர் -1 பாடலிபுத்திரத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இவரது நூல்களுக்கு உரை எழுதியவர்கள்
இவர்கள் ‘அஸ்மாகம்” என்னும் இடத்தைச் சேர்ந்தவர்
என்று எழுதியுள்ளார்கள்.
அஸ்மாகம் என்பது திருவிதாங்கூர் எனப்படும் திருவனந்தபுரமாகும்.

முன்பே பகுதி 55 இல்
ஆரியம் என்ற ஒரு இடம் தென்னிந்தியாவில் இருந்தது
என்பதைக் கண்டோம்.
அங்கு வாழ்ந்த்தால் ஆரியபட்டர் என்ற பெயர் பெற்றிருக்கலாம்
என்றும் சொன்னோம்.
இவர்கள்
ஸரஸ்வதி பிராம்மணர்கள்.

பரசுராமர் காலத்திலேயே மேற்குக் கடற்கரை முழுவதும்,
சரஸ்வதி பிராம்மணர்கள் குடியேறினார்கள் என்று கண்டோம்.
பெரிய புராணத்திலும், பரசுராமர் அங்கு நிலம் மீட்ட விவரம் வந்துள்ளது
என்றும் கண்டோம்.
("பரசுபெறு மாதவ முனிவன் பரசுராமன் பெறு நாடு"
பெரிய புராணம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,  
விறன்மிண்ட நாயனார் புராணத்தின் முதல் செய்யுள்)
 


அந்தப் பகுதியை ஆண்டவன்
உதய மார்த்தாண்ட வர்மன் என்றும்
அவன் காலத்தில் கி.பி. 824 இல்
கொல்லம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது என்றும்
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மார்த்தாண்டம் என்னும் குலப் பெயர்,
காஷ்மீரப் பகுதியுடன் தொடர்புடையது.

மார்த்தாண்டம் என்பது சூரியனது பெயர்.
ஒரு வருஷத்தில் வரும் 12 மாதங்களுக்கும்
சூரியனுக்கு ஒவ்வொருவித பெயர் உண்டு.
’அதிக மாதம்’ வரும் ஆண்டில்,
13 ஆவது மாதத்துக்கு மார்த்தாண்டம் என்று பெயர்.
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தில்
இந்தப் பெயர் வருவதைக் காணலாம்.
மார்த்தாண்டம் என்றால், பிரளயம் ஆன பிறகு
மீண்டும் புது உலகம் உண்டாகுதல் என்பதாகும்.

சூரியனுக்கு உரிய இந்தப் பெயரில்
சூரியன் கோவில் ஒன்று,
உச்சியில் சூரியன் என்றைக்குமே சஞ்சரிக்காத
காஷ்மீர் மாநிலத்தில் ஆனந்தநாக் என்னும்
இடத்துக்கு அருகே காணப்படுகிறது.




இந்தியாவில் உள்ள சூரியன் கோவில்களிலேயே இது பழமையானது.
இன்று இடிபாடுகளுடன் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும் ஒரு கருத்து உள்ளது.
கி.பி 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்றும் ஒரு கருத்து உள்ளது.
கட்டப்பட்ட காலத்தை ஒதுக்கி விட்டுப் பார்த்தால்,
பொதுவாக மார்த்தாண்டம் கோவில் என்பது,
பிரளயத்திலிருந்து தப்பிய மக்கள்
தங்கள் புனர் வாழ்வு ஆரம்பிக்கும் முன் வழிபடுவது.  
இது அமைந்த இடம்,
வெள்ளத்தில் தப்பிய மனு,
சரஸ்வதி நதியின் வழியாக இமய மலையில் நௌபந்தனம்
என்ற இடத்தை அடைந்தானே,
அதை நினைவு படுத்துகிறது.
பிரளயத்திலிருந்து தப்பிய மக்கள்,
மார்த்தாண்டம் ஆளும் 13 ஆம் மாதத்தில்
இறந்த பித்ருக்களுக்கு வழிபாடு செய்வார்கள்.


அந்த நினைவோடு இருப்பவர்கள்
அல்லது, அத்தகைய நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டவர்கள்,
மார்த்தாண்டம் என்னும்
பரம்பரைப் பெயரைக் கொண்டிருக்க முடியும்.


திருவாங்கூர் அரச பரம்பரையினர்
பரசுராமர் மீட்ட இடங்களில் குடியேறிய பரம்பரை என்பதால்,
அவர்களுக்கும் சரஸ்வதி பிராம்மணர்களுக்கும்
தொடர்பு இருக்க்க்கூடும்.
சரஸ்வதி நதி தீரத்தில் இருந்து வந்த வழக்கங்கள்
அவர்களிடமும் இருக்கக்கூடும்.  


பண்டைய சமஸ்க்ருத பததியான இந்த கடபயாதியை மீட்டு,
அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர
அவர்கள் விரும்பியிருப்பதில் சந்தேகமில்லை.
ஆரியம் என்ற ஒரு நாடு தென்னிந்தியாவில் இருந்தது என்பது
அவர்கள் ஆளுகைக்குள் இருந்த பகுதியாக இருக்கலாம்.
அங்கே ஆரியபட்டர் கடபயாதியை அளித்தார்.
அதை மார்த்தாண்ட வர்மன் வரவேற்று,
காலக் கணக்குக்குப் பயன் படுத்திக் கொண்டார்.


ஆரியம் என்ற இடமும்,
கடபயாதியை விவரித்த ஆரிய பட்டரும்,
அஸ்மாகம் என்னும் திருவாங்கூரும்,
அதன் அரசனான மார்த்தாண்ட வர்மனும்
அந்த ஒரு பூகோளப் பரப்புடன் சம்பந்தப் படவே,
கடபயாதியை அடிப்படையாகக் கொண்ட
கொல்லம் ஆண்டுக் கணக்கு தோன்ற
இவையும்,
ஆரியபட்டருக்கும், மார்த்தாண்ட வர்மனுக்கும்
இருந்த சரஸ்வதி தீரத் தொடர்பும்
அதனுடன் வரும் பழைய சமஸ்க்ருதப் பததிகளும்
ஒருங்கிணைது கொல்லம் வருடமாக
உருக்கொண்டது எனலாம்.

இந்த ஆண்டு வழக்கம் சமஸ்க்ருதப் பாடமும்,
வேதம் வளர்க்கவும் உறுதுணை செய்த
வேதக் கல்வி வழக்கமாகும்.

மார்த்தண்ட வர்மனுக்கு முன்பே,
சேரன் செங்குட்டுவன் (கண்ணகிக்குக் கோவில் எழுப்பியவன்)
வடக்கிலிருந்து சோம யாகம் செய்வோரை அழைத்து வந்து,
தன் நாட்டில் சோம யாகம் செய்வித்தான் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
சதுக்க பூதரை வஞ்சியுள் தந்து,
மதுக் கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்” (நடுகல் காதை – வரி – 147, 148)

சதுக்க பூதம் என்பது நாளங்காடி பூதம் போன்றது.
இவை இந்திரன் வசம் இருப்பது.
உரையாசிரியரான அடியார்க்கு நல்லார்,
இந்திரனது அமராவதிக்குச் சென்று
இந்த சதுக்க பூதத்தைக் கொண்ர்ந்தது மட்டுமல்லாமல்,
சோம யாகத்தைச் செய்வித்தான் என்கிறார். 


எனவே பிராம்மணர்கள் அதிகமாக இருந்த சேரப் பகுதிகளில்
வேதக் கல்வியாண்டு அமைந்தது ஆச்சரியமில்லை.
அழியும் நிலையில் இருந்த கடபயாதிக்கு
மறு வாழ்வு கொடுத்து,
மனித குல சொத்தான அந்த அறிவைக்
காப்பாற்றிய பெருமை
ஆரியபட்ட்ருக்கும், மார்த்தாண்ட வர்மனுக்கும் உரியது.


தமிழிலும் வீரியம் மிகுந்த உயிர் மெய் எழுத்துக்கள் இல்லையா
என்று கேட்கத்தோன்றும்.

இருந்தன என்பதை
‘மந்திரம்’ குறித்த தொல்காப்பிய சூத்திரம் காட்டுகிறது. 

அதை அடுத்த கட்டுரையில் காண்போம். 





11 கருத்துகள்:

  1. பாண்டிய-இராமாயண வரிகளை சொல்லியதற்கு நன்றி,

    மேலும் மயன் வரலாறு, வைசம்பாயனம், ஐந்திரம் போன்றவற்றிலும் உங்கள் வாதங்களுக்கு வழு சேர்க்கும் மூலங்கள் அதிகம் உள்ளன.

    மேலும் குமரிக்கண்டத்தில் பிறந்த மயன் இயற்றிய பிரணவ வேதமே வியாசர் எழுதிய நான்மறைக்கு முந்து நூலாக தமிழ்-சமஸ்கிருத ஒப்பீட்டு தொன்மவியலாளர்கள் கருதுகின்றனர். அந்த மயனை பற்றி எழுதிய வைசம்பாயனர் வியாசரின் சீடராவார். மயனே தமிழர் கலைகளின் மூலன் என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதை அறியாமல் வேதம் தவறானது என திராவிடத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் தவறாka கூறுகின்றனர்.

    மேலும் மயன் பற்றிய விவரங்களுக்கு,

    in tamil-
    http://tawp.in/r/2hx8

    in english-
    http://en.wikipedia.org/wiki/Mamuni_Mayan

    -சுப்பிரமணி

    பதிலளிநீக்கு
  2. மயன் பற்றிய தமிழ்ச் சுட்டி தவறான செய்தியைத் தருகிறது. மயன் செய்த ஐந்திரம் என்பதும், தொல்காப்பியர் தாம் படித்ததாகச் சொல்லும் ஐந்திரம் என்பதும் வேறு. அதே போல சிலப்பதிகாரம் சொல்லும் ஐந்திரம் என்பதும் மயன் செய்த ஐந்திரமும் வேறு.

    மயன், விஸ்வகர்மா ஆகிய இருவருமே சிற்ப சாஸ்திரிகள். உலகின் தென் பாகத்திலும், வடபாகத்திலும், பருவ நிலைகள் வேறு, பருவ காலங்கள் வேறு. தென் பகுதி பருவ நிலைக்கு ஏற்ப மயன் சாஸ்திரம் எழுதினார். வட பகுதி பருவ நிலைக்கு ஏற்ப விஸ்வகர்மா சாஸ்திரம் எழுதினார். அவர்கள் சாஸ்திரங்களில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை நான் முதுகலையில் பாடமாகப் படித்துள்ளேன்.

    சிலப்பதிகாரத்தில் மாதவி அரங்கேறும் மேடையைப் பற்றிய வர்ணனை வருகிறது. அது மயன் சாஸ்திரத்தின் அடிப்படையில் இல்லை. மாறாக விஸ்வகர்மாவின் சிற்ப சாஸ்திரத்தின் அடிபப்டையில் உள்ளது. இந்தத் தொடரில் தக்க இடத்தில் அதை எழுதுகிறேன். சிந்து சமவெளி நாகரிகத்தின் கட்டுமான அளவுகள், தாஜ் மஹாலின் கட்டுமான அளவீடுகள், டில்லியில் உள்ள இரும்புத்தூணின் (இந்தத் தொடரில் இரும்புத் தூணைப் பற்றி எழுதியுள்ளேன்)அளவுகள் ஆகியவை ஒன்றே என்று ஐ.ஐ.டியினர் கண்டு பிடுத்துள்ளனர். அதாவது சிந்து சமவெளி காலம் முதல் அதே அளவு முறைகளைத் தான் நம் மக்கள் கடைபிடித்துள்ளனர். அந்த அளவு முறை விஸ்வகர்மா முறை - அது மயன் அளவு முறை அல்ல.

    பூமியின் வட பகுதியில் - அதாவது பூமத்திய ரேகைக்கு வடக்கே இருப்பதால், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் விஸ்வகர்மா சாஸ்த்திரத்தையே பின்பற்றியுள்ளனர். விஸ்வகர்மா பரம்பரையினர் இன்று வரை இருக்கிறார்கள். இவர்கள் தொன்மை வாய்ந்த மக்கள். ஆறுபடை வீடுகளது அமைப்பு விஸ்வகர்ம ப்ரகாசிகா என்னும் விஸ்வ கர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

    சங்கப் பலகையைப் பற்றி தமிழ் இணைப்பில் சொல்லியுள்ளார்கள். சங்கப் பலகை தெய்வீகப் பலகை. அதை இறையனார் கொடுத்ததாகத் தான் சரித்திரம். (இந்தத் தொடரில் சொல்லியுள்ளேன். தேடல் பகுதியின் மூலம் கட்டுரையைக் கண்டு பிடிக்கலாம்). அது சிறியதாக இருந்தது. ஆனால் சிறந்த புலவர்கள் உட்கார, உட்கார அது இடம் கொடுக்கும். அதை மயன் வடித்ததாக தமிழ்ச் சங்க நூல்கள் சொல்லவில்லை என்பதே நான் அறிந்தது.

    ஆனால் இந்தத் தொடரில் நான் சொல்லும் சாகத்தீவுடன் மயன் சம்பந்தம் வருகிறது. சூரிய வழிபாடு, சூரியனது சிற்பம் போன்றவற்றில் மயன் கைவண்ணம் இருக்கிறது. அதை ஓரிரண்டு கட்டுரைகளுக்குப் பிறகு கொண்டு வருகிறேன்.

    இன்னும் சொல்லப்போனால் சூரிய சித்தாந்தம் என்பதே மயனுக்கு உபதேசிக்கப்பட்டது. அந்த மயனது இருப்பிடம் அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. அது ரோமக தேசம் என்பது. அது இன்றைய ரோம் நகரம் அல்ல.
    அதன் ரோமக தேசத்தின் இருப்பிடம் பூமத்திய ரேகைக்கு அருகே, இலங்கைக்கு 90 பாகை மேற்கில் இருந்தது. அந்த இடம் இன்று அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கிறது. அட்லாண்டிஸ் பற்றி இந்தத் தொடரில் எழுதியுள்ளேன். தேடல் பகுதியின் மூலம் அந்தக் கட்டுரையைப் படிக்கவும். அந்தப் பகுதியே ரோமக தேசத்துடன் ஒத்துப் போகிறது.

    பதிலளிநீக்கு
  3. ஐந்திரம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் மயனின் கலையையே தமிழர்கள் பின்பற்றியதாக சிலம்பில் உள்ளது. அதை வைத்தே கூறினேன்.

    :மயன் விதித்துக் கொடுத்த

    ::மரபின் இவைதாம்

    :ஒருங்குடன் புணர்ந்து

    ::ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்-சிலப்பதிகாரம்(இந்திரனுக்கு விழுவூரெடுத்த காதை)(108 - 109)

    மேலும் வைசம்பாயனம் மட்டுமே மயன் பற்றி அதிகம் நிரம்ப கூறுகிறது.

    :குமரிநன் நிலத்தன்று குணமுறும் கலைகள் ஆய்ந்து
    ::குமரியாள் அருளினாலே கூர்மதி நனிவிலங்க
    :அமர் பொருள் ஆக்கம் கண்டான் ஆற்றலும் ஆண்மை மிக்க
    ::அமர்நிலை வீரம் ஓங்க அருங்கலை வளர்த்தான் அன்றே - வைசம்பாயனம்

    //சிலப்பதிகாரத்தில் மாதவி அரங்கேறும் மேடையைப் பற்றிய வர்ணனை வருகிறது. அது மயன் சாஸ்திரத்தின் அடிப்படையில் இல்லை. மாறாக விஸ்வகர்மாவின் சிற்ப சாஸ்திரத்தின் அடிபப்டையில் உள்ளது.//

    //மயன், விஸ்வகர்மா ஆகிய இருவருமே சிற்ப சாஸ்திரிகள். உலகின் தென் பாகத்திலும், வடபாகத்திலும், பருவ நிலைகள் வேறு, பருவ காலங்கள் வேறு. தென் பகுதி பருவ நிலைக்கு ஏற்ப மயன் சாஸ்திரம் எழுதினார். வட பகுதி பருவ நிலைக்கு ஏற்ப விஸ்வகர்மா சாஸ்திரம் எழுதினார்.//

    ஒருவேளை குமரிக்கண்டத்தின் ஊழியில் தென்பகுதிக்காக இயற்றப்பட்ட மயநூல் அழிக்கப்பட்டு, வடபகுதி நூல்கள் அழியாததால் விஸ்வகர்மாவின் சாஸ்திரம் பின்பற்றப்பற்றிருக்கலாம்.

    //சங்கப் பலகையைப் பற்றி தமிழ் இணைப்பில் சொல்லியுள்ளார்கள். சங்கப் பலகை தெய்வீகப் பலகை. அதை இறையனார் கொடுத்ததாகத் தான் சரித்திரம். (இந்தத் தொடரில் சொல்லியுள்ளேன். தேடல் பகுதியின் மூலம் கட்டுரையைக் கண்டு பிடிக்கலாம்). அது சிறியதாக இருந்தது. ஆனால் சிறந்த புலவர்கள் உட்கார, உட்கார அது இடம் கொடுக்கும். அதை மயன் வடித்ததாக தமிழ்ச் சங்க நூல்கள் சொல்லவில்லை என்பதே நான் அறிந்தது.//

    மயன் சங்கப்பலகை செய்ததை

    ''அவைக்களப் பலகை கண்டு அருந்தமிழ் பலகை யாக்கி

    அவைக்களச் சான்றோர் வாழ்த்த அருந்தமிழ் பலகை ஏற்றி

    அவைக்கள வேந்தன் வாழ்த்த அருந்தமிழ் நூல்களெல்லாம்

    அவையுளோர் கண்க ளிக்க அரங்கேற்றி நின்றதன்றே -(ப.நூ.30)''

    என்ற பாட்டின் வழியறியலாம். ஆனால் இதில் குறிக்கப்பட்ட ''ப.நூ.30'' என்ன நூலென்று தெரியவில்லை. இந்த புத்தகத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    ''பண்டைத்தடயம், மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.''

    ''ப.நூ.30'' என்ன நூலென்று தெடிக்கொண்டிருக்கிறேன். மேலும் நான் இயந்திரவியல் மாணவன் என்பதால் எனக்கு இவற்றில் அதிகம் புரிதலில்லை. நான் படித்தவற்றை கொண்டே இவ்வாறு கூறுகிறேன். இதில் தவறுகளும் இருக்கலாம்.

    நான் கணினி உபயோகம் பற்றி சில நாட்களே கற்று வருவதால் எனக்கு இந்த தளத்தில் எவ்வாறு இணைய வேண்டுமென்று தெரியவில்லை. கருத்துறை இடும்போது மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் உள்ளே நுழைய மறுக்கிறது. உதவவும்.

    -சுப்பிரமணி

    பதிலளிநீக்கு
  4. ஈரானின் மக்கள், தங்களின் சரித்திர கல்வெட்டுக்களையும், தொல்பொருட் தடயங்களையும் காட்டி தாங்கள் தான் ஆரியர்கள், அவ்ர்கள் இந்தியாவுக்கு வந்து, இந்திய உபகண்டத்தின் பூர்வீக மக்களுடன் கலந்ததாதால் தான் திராவிடரல்லாத இந்தியர்கள் உருவாகினார்கள் என்கிறார்கள், என்பதற்கு ஆதாரங்களையும் தந்து, அவர்கள் ஆரியரில்லை, இங்கு வரவுமில்லை என்பதை நிரூபியுங்கள்

    பதிலளிநீக்கு
  5. //ஈரானின் மக்கள், தங்களின் சரித்திர கல்வெட்டுக்களையும், தொல்பொருட் தடயங்களையும் காட்டி தாங்கள் தான் ஆரியர்கள், அவ்ர்கள் இந்தியாவுக்கு வந்து, இந்திய உபகண்டத்தின் பூர்வீக மக்களுடன் கலந்ததாதால் தான் திராவிடரல்லாத இந்தியர்கள் உருவாகினார்கள் என்கிறார்கள்//


    அவர்கள் தரும் ஆதாரங்களைத் தாருங்கள். அவற்றில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறேன்.

    இந்தத் தொடரை நீங்கள் முழுவதும் படித்தீர்களா? ஈரான், ஈராக் முதலான வட மேற்கு நாடுகள் பாரதத்தின் பகுதியாக இருந்தது என்று சொல்லும் மஹாபாரத வர்ணனைகள் கொடுத்துள்ளேன். சீனாவும் பாரதத்தின் பகுதியாக இருந்தது. இன்றைய இந்தியாவை வைத்துக் கொண்டு அன்றைய பாரதத்தின் எல்லையை நிர்ணயிக்க வேண்டாம்.


    பாரசீகம் என்பது பார்ஸ்வ என்றே முதலில் அழைக்கப்பட்டது. பார்ஸ்வ என்றால் இடது பக்கம். இதைப் பற்றி இன்னும் இந்தத் தொடரில் எழுத ஆரம்பிக்கவில்லை.

    இன்றைக்கு முக்கியமான ஆதாரம் மரபணு ஆராய்ச்சிகளாகும்.
    அதன் மூலம் மக்கள் இடப் பெயர்வு, மற்றும் மூலம் ஆகியவற்றை ஆராய்ந்துள்ளார்கள்.
    கீழ்க் காணும் இணைப்பில் இடப்பெயர்வை எளிய முறையில் காணலாம். இடப்பெயர்வு இந்தியா வழியாக ஐரோப்பாவுக்குச் சென்றதே தவிர, ஈரானின் வழியாக இந்தியாவுக்கு வரவில்லை. ஆரிய - தஸ்யு கட்டுரைகளை இந்தத் தொடரில் படியுங்கள். அது சொல்லும் வழியில்தான் ஈரானிய மக்கள் தொகை ஏற்பட்டது என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு.

    http://www.bradshawfoundation.com/journey/

    கீழ்க் காணும் இணைப்பில் இது வரை உலகில் நடந்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளைக் காணலாம். இவற்றில் எதுவும் நீங்கள் சொல்லும் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

    http://www.archaeologica.org/NewsPage.htm

    ஆரியப் படையெடுப்பும், நீங்கள் சொல்லும் ஈரானியக் கதைகளும் ஆதாரமில்லாதவை என்று ஆங்கிலத்தில் பலப்பல ஆராய்ச்சி முடிவுகள் வந்து விட்டன. தமிழில் அவை இன்னும் வராததால் தமிழ் மக்களுக்குத் தெரியவில்லை.

    சாம்பிளுக்கு இந்த இணைப்புகளில் உள்ள ஆங்கிலக் கட்டுரைகளைப் படியுங்கள்.

    http://koenraadelst.bharatvani.org/downloads/books/aid.htm

    http://www.stephen-knapp.com/death_of_the_aryan_invasion_theory.htm

    http://www.docstoc.com/docs/72461396/collapseofaryaninvasiontheory

    இவை தவிர என்னுடைய ஆங்கில வலத்தளத்தில் ஆரியப் படையெடுப்பு குறித்த 162 கட்டுரைகள் உள்ளன.
    அவற்றை இந்த இணைப்பில் படிக்கவும்,

    http://jayasreesaranathan.blogspot.com/search/label/No%20Dravidian%20divide

    பதிலளிநீக்கு
  6. திரு சுப்பிரமணி அவர்களே.

    ’மயன் விதித்துக் கொடுத்த மரபின்’ என்று சிலப்பதிகாரம் சொல்லும் மண்டபங்கள், தமிழ் அரசர்களுக்காக, அதாவது தமிழர்களுக்காக மயன் செய்து கொடுத்தவை அல்ல. அப்படி ஏதாவது வலைத் தளத்தில் எழுதியிருந்தால் அது தவறு.
    அந்தப் பகுதியை சிலப்பதிகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே படிக்கவும்.

    அதில்
    வஜ்ஜிர நாட்டு மன்னனிடமிருந்து பெற்ற கொற்றப் பந்தரும்,

    மகத நாட்டு மன்னனை சோழ மன்னன் வென்று அவனிடமிருந்த பட்டி மண்டபத்தைப் பெற்றமையும்,

    அவந்தி (உஜ்ஜயினி) நாட்டு மன்னன் மகிழ்ந்து கொடுத்த வாயில் தோரணமும் சொல்லப்படுகிறது

    இவை மூன்றும் மயன் நிருமித்த வழியால் செய்து கொடுக்கப்பட்டன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
    இந்த மூன்றும் செய்யும் கம்மாளர்களர்களுடைய முன்னோர் மயனுக்கு ஒரு உதவி செய்தனர். அதற்குக் கைம்மாறாக, மயன் இந்த மூன்றையும், (பந்தர்,பட்டி மன்றம், தோரண வாயில்) செய்து கொடுத்தான். அவற்றைப் பெற்ற வட இந்திய மன்னர்கள் சோழ அரசனுக்கு அவற்றைக் கொடுத்தனர். அவற்ரை ஒருசேர இந்திர விழாவில் வைத்திருந்தனர். அவற்றை மயன் செய்து கொடுத்தது வட நாட்டு அரசர்களுக்கு என்பதைக் கவனிக்கவும்.

    மயன், பாண்டவர்களுக்கு அரக்கு மாளிகை கட்டிக் கொடுத்தான்.
    மயன் வழித்தோன்றல், ராமர் சேது பாலத்தைக் கட்டினான்.

    பொதுவாக 4 விஷயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. வீடு, மனை முதலியன பருவ காலம், திக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இடத்துக்கு இடம் மாறும். அவ்வாறு பூமியின் தெற்கில் அமைந்த நகரங்கள் மயன் உண்டாக்கிக் கொடுத்த விதி முறைகள் படி இருக்கும். இலங்கையும் நிர்மாணிக்கப்பட்ட நகரம்தான். ஆனால் அதை மயன் நிர்மாணிக்கவில்லை. விஸ்வ கர்மா நிர்மாணித்தான் என்று வால்மீகி எழுதியுள்ளார். காரணம், இலங்கை பூமத்திய ரேகைக்கு வடக்கில் உள்ளது. இவை எல்லாம் மனம் போன போக்கில் அன்றைக்குச் செய்ய வில்லை. வாஸ்து என்னும் இந்த சாஸ்திரம் படி செய்தார்கள்.

    வாஸ்து சாஸ்திரம் என்பது, 4 வகைப்படும். நிலம் /வீடு/ மாளிகை போன்ற வசிக்கும் இடங்கள், குளம், ஏரி போன்ற நீர் நிலைகள்,தெரு, ஊர் போன்ற பொது இடங்கள், வாகனங்களுக்கான அளவீடுகள், கட்டில், அரியணை போன்ற சொகுசுப் பொருள்களுக்கான அளவீடுகள் என்று நான்கு வகையாக மாறும்.

    அதன் அடிப்படையில்தான் மயன் அளவீடா, விஸ்வ கர்மா அளவீடா என்று கண்டு பிடிக்கிறோம்.

    மய சபா என்றே ஒரு சபையை நிர்மாணிக்கும் விதத்தை ‘சம்ஸ்க்ருத பாரதம்’ என்னும் நூல் விளக்குகிறது. இது இந்திரன், வருணன் ஆகியோரது சபைகளைக் கட்ட பயன்படுத்திய சாமான்களைக் கொண்டு கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
    அந்த இந்திரன் யார்?

    இந்தத் தொடரில் சைபீரியா பகுதியில் அர்க்கைம் என்னும் இடத்தைப் பற்றி எழுதி இருப்பேன். உத்தர குரு என்னும் அந்த இடம் ஒரு காலத்தில் (30,000 ஆண்டுகளுக்கு முன்னால்) இந்திர லோகமாக இருந்தது. இதை நீங்கள் கட்டுக் கதை என்று சொல்லலாம். ஆனால் அப்பொழுது அங்கு மக்கள் தொகை இருந்தது என்பதற்கு ஆதாரம் உள்ளது. அங்கிருந்த மக்கள் வழியில் வந்தவர்கள், அமெரிக்காவில் உள்ள, மயன், ப்யூப்லோ, இன்கா மக்கள். அவர்களது முதல் ஆரம்பம், தென் இந்தியக் கடலில் இருந்த சூரிய மலையில். அதைக் காட்டும் ஒரு ஆதாரத்தை, வரப்போகும் கட்டுரைகளில் எழுத உள்ளேன்.

    அதனால் மயன் என்பவன் தமிழனுக்கு மட்டும் என்று சுருக்கி விடாதீர்கள். இடம், பொருளுக்கு ஏற்றாற் போல பல விஷயங்கள் இருக்கின்றன. பாரத மூலம் மிகப் பழமையானது, தமிழர் முதல் பலரும் இதன் அங்கத்தினர்களே. வரிசைக் கிரமாக இந்தத் தொடரைப் படித்தால்தான் பல விஷயங்கள் புரியும்.

    நிற்க, ப.நூ என்றால் என்ன என்று எனக்கும் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. //நான் கணினி உபயோகம் பற்றி சில நாட்களே கற்று வருவதால் எனக்கு இந்த தளத்தில் எவ்வாறு இணைய வேண்டுமென்று தெரியவில்லை. கருத்துறை இடும்போது மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் உள்ளே நுழைய மறுக்கிறது. உதவவும்.//

    பக்கவாட்டில் ‘இங்கு சேரலாம்’ என்றுள்ள இடத்தில், இடுகைகள் என்று உள்ள இடத்தில் நீங்கள் இணையலாம்.

    பதிலளிநீக்கு
  8. //இந்தத் தொடரில் சைபீரியா பகுதியில் அர்க்கைம் என்னும் இடத்தைப் பற்றி எழுதி இருப்பேன். உத்தர குரு என்னும் அந்த இடம் ஒரு காலத்தில் (30,000 ஆண்டுகளுக்கு முன்னால்) இந்திர லோகமாக இருந்தது. இதை நீங்கள் கட்டுக் கதை என்று சொல்லலாம்.//

    பொதுவாக நான் இந்து தொன்மங்களை பொய்யெனக் கொள்வதில்லை. அதில் ஏதாவது மறை பொருள் விள்க்கங்கள் இருக்கும். மேலே வேறு எவரோ ஈரான் பற்றி கூறியதை நான் கூறியதாக நினைத்துவிட்டீர்கள் போலும்.

    //அங்கிருந்த மக்கள் வழியில் வந்தவர்கள், அமெரிக்காவில் உள்ள, மயன், ப்யூப்லோ, இன்கா மக்கள். அவர்களது முதல் ஆரம்பம், தென் இந்தியக் கடலில் இருந்த சூரிய மலையில். அதைக் காட்டும் ஒரு ஆதாரத்தை, வரப்போகும் கட்டுரைகளில் எழுத உள்ளேன்.//

    மேலும் நீங்கள் கூறிய தென்னமேரிக்க-தென் இந்திய தொடர்பை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன்.

    அவர்கள் விவசாய(பொன்னேர் உழுதல்) மற்றும் விழாக்கள்(இந்திரவிழா) பெரிதளவு இந்திய முறையை போலுள்ளதையும் தமிழ் விக்கிப்பீடியாயில் எழுதியிருக்கிறேன். இந்த இணைப்பை பாருங்கள்.

    http://tawp.in/r/2l7d

    மேலும் இன்கா, மாயன்-தென்னிந்திய தொடர்புகள் பற்றிய சில புத்தகங்களையும் படித்ததுண்டு.
    -சுப்பிரமணி

    பதிலளிநீக்கு
  9. நன்றி திரு சுப்பிரமணி அவர்களே.

    மேலே நீங்கள் கொடுத்துள்ள இணைப்பு முழுமையாக இல்லை என்று நினைக்கிறேன். அதில் ஒன்றும் வரவில்லை. மீண்டும், அந்த இணைப்பை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நாம் இங்கு மயன் பற்றிப் பேசும் போது நான் தவறாமல் படிக்கும் -Anthropology வலைத்தளத்திலும் இதைப் பற்றிய கட்டுரை வந்துள்ளது.
    அதை இந்த இணைப்பில் படிக்கலாம்.
    http://frontiers-of-anthropology.blogspot.com/2011/09/lacandon-mayas-and-malay-mayas.html

    இதில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியக் கருத்து, இந்தோனேசியா வழியாக மக்கள் பசிஃபிக் கடலைக் கடந்து மயன் இருப்பிடத்தை அடைந்திருக்கலாம் என்பது.

    இதற்கு முன் ஒரு கருத்துரையில், இந்தோனேசிய எரிமலையான டோபா என்பது 65,000 ஆண்டுகளுக்கு முன் வெடித்த நிகழ்வே, சிவன் திரிபுரம் எரித்த செயலாக வர்ணிக்கப்படுகிறது என்று எழுதி இருந்தேன்.
    அந்த எரிமலை வெடிப்பதற்கு முன்னால், இந்தியக் கடலில் சாகத்தீவும், மக்கள் பெருக்கமும் இருந்தது. அந்த வெடிப்பினால், மக்கள் தொகை சிதறுண்டு, குறைந்தும் போயிற்று. அப்பொழுது ஒரு ரிவர்ஸ் இடப் பெயர்வு நடந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அந்த ரிவர்ஸ் இடப்பெயர்வில் உள்ள மிஸ்ஸிங் லிங்க் சாகத்தீவும், குமரிக் கண்டமும். இதை இந்தத் தொடரில் எடுத்துச் செல்வேன்.

    டோபா வெடிப்பினால், ஒரு பகுதி மக்கள் பசிஃபிக் கடலைக் கடந்து மயன் என்று மேற்கு அமெரிக்க கடற்கரையில் குடியேறி இருக்க்கூடிய சாத்தியம் இருப்பதை, மேலே கொடுத்த இணைப்பு உறுதி செய்கிறது.

    நினைக்கும் வேகத்தில் எழுத வேண்டும் போல இருக்கிறது. ஆனால் பிற வேலைகள், பொறுப்புகளுக்கிடையே இந்தத் தொடரை எழுதுவதால், இந்தத் தொடர் மெதுவாகச் செல்கிறது. தற்சமயம், நாடிச் சுவடி ஒன்றை மொழி பெயர்த்து, உரை எழுதும் பொறுப்பு முடியாமல் இருப்பதால், அதை வேகமாக முடித்துக் கொண்டிருக்கிறேன். அதை முடித்தவுடன், அடுத்த வாரம் முதல், இந்தத் தொடரில் முழு கவனம் செலுத்த முடியும்.

    பதிலளிநீக்கு
  10. sometime shortlinks can't function well in tamil wiki. complete link about inca's agriculture mentioned below.


    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88

    பதிலளிநீக்கு