வியாழன், 8 செப்டம்பர், 2011

72. அறிவன் ஜோதிடமும், அகஸ்திய பூஜையும்.



அறிவனுக்கு மூவகைக் காலமும் தெரியும்.
அதில் ஒரு வகை இறந்தகாலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பது.
ஊழ் வலியால் ஏற்படும் நிகழ்ச்சிகள்
அந்த முக்காலங்களிலும் பரவுகின்றன
என்பதைச் சொல்பவர்கள் அறிவர்கள்.

இனி இரண்டாவது வகையைக் காண்போம்.
இந்த வகையில்
உலகத்தில் உள்ள ஐம்பூதங்களிலும் ஏற்படும் மாறுபாடுகளைக் கவனித்து,
அதன் அடிப்படையில் இனி வரப்போகும் காலத்தில்
இந்த ஐம்பூதங்கள் எவ்வாறு பலனளிக்கும் என்று
கவனித்துச் சொல்வது.

குற்றமற்ற செயலை உடைய மழையும்,
பனியும், வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும்,
நெறியினால்தெளிந்து சொல்வான் அறிவன் என்கிறார்
தொல்காப்பிய உரையாசிரியர்.

இதையே பன்னிரு படலம் ஒரு செய்யுளாகத் தருகிறது.

பனியும், வெயிலும், கூதிரும் யாவும்
துனியில் கொள்கை யொடு நோன்மை
எய்திய தணிவுற்று அறிந்த
கணிவன் முல்லை

அறிவன் என்பவன் காலக் கணிப்பாளன்.
மழையும், பனியும், வெயிலும் அமையும் விதத்தினைக் கவனித்து,
வரப்போகும் காலத்தில் பெறக் கூடிய
மழை, வெயில் போன்ற
தட்ப வெப்ப நிலையைச் சொல்பவன் அவன்.


இதில் அவனது முதல் கவனம் மழையின் மீதுதான்.
மழை நன்கு பெய்தால்தான்,
பயிர் விளைச்ச்லைப் பற்றி முடிவு செய்ய முடியும்.
வரப்போகும் வெயில் காலம் வறட்சியால் பாதிக்கப்படாமல் இருக்குமா
என்பது போன்ற விவரங்களையும்
முன் கூட்டியே தெரிந்துக் கொள்ள முடியும்.


பல சங்கப் பாடல்களும் மழை வளத்தைப் பற்றிச்
சொல்லி விட்டுத்தான்
அரசனது புகழைப் பற்றிப் பேசுகின்றன.
அறம், பொருள், இன்பத்தைப் பற்றிப் பேசும் திருக்குறளும்
வான் சிறப்பைப் பற்றிச் சொல்லிவிட்டுத்தான்
பிற விஷயங்களுக்கு வருகிறது.

மழை வரவைக் கவனித்து,
அதன் அடிப்படையில்
மக்கள் மகிழ்ச்சியாக வாழும் முறைமையைப் பற்றிப்
பேசுகிறது பரிபாடல் 11.
இந்தப் பாடலை எழுதியுள்ள ஆசிரியர் நல்லந்துவனார்
ஒரு அறிவராக இருக்க வேண்டும்.
ஏனெனில் அந்தப் பாடலின் ஆரம்பத்தில்
சில கோள் நிலைக் குறிப்புகளைக் கொடுத்து விட்டு,
மழைவரவை அறிவித்து விட்டபிறகு
பாடலை ஆரம்பிக்கிறார்.

அவர் கொடுக்கும் கோள் நிலைகளில் பல நுட்பமான விவரங்கள் புதைந்துள்ளன.
அந்த விவரங்களை ஆராயும் போது
ஒரு ஒருங்கிணைந்த கலாசாரமாக
தமிழன் கலாசாரம்,
பாரதம் தழுவிய கலாசாரமாக இருந்திருக்கின்றது
என்பதும்,
புத்தாண்டு போன்ற பல விஷயங்களில்
எந்தவித ‘ஆரியத் திணிப்பும்’
இருந்ததில்லை என்றும் தெரிகிறது.


விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப
என்று தொடங்கும் இந்தப் பாடலைக் கொண்டு
இந்த விண்வெளி அமைப்பு இருந்த காலக்கட்டத்தை
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துச் சொல்ல முடியும்.
ஆனால் இதுவரை யாரும் ஆராயவில்லை.
ராமாயணத்தில் கொடுக்கப்பட்டுள்ள
கோள்களது அமைப்பைக் கொண்டு
ஆராய்ந்து,
7000 ஆண்டுகளுக்கு முன்னால்
ராமாயணம் நடந்தது என்று கண்டு பிடித்துள்ளார்கள்
என்று பார்த்தோம் (பகுதி  )
அது போல கோள்களது அமைப்பு
சங்க நூல் ஒன்றிலும் கொடுக்கப்பட்டுள்ளது
என்பதை இங்கு தெரிவிப்பன் மூலம்,
இதைப் படிப்பவர்கள்
இந்தச் செய்தியை அறிவியல் ரீதியில் ஆராய்ந்து,
இது நடந்த காலக்கட்டத்தைக் கண்டுபிடிக்க
உதவுவார்கள் என்று நம்புகிறேன்.


என்னிடம் இருக்கும் ஜோதிட ஸாஃப்ட்வேர் மூலம் தேடினபோது,
இந்த அமைப்பு கி.மு. 1000 வருடங்களுக்கு முன் இருந்திருக்கலாம்
என்று தெரிய வந்தது.

இந்த அமைப்பில் செவ்வாய் மேஷத்திலும்,
சுக்கிரன் ரிஷபத்திலும்,
புதன் மிதுனத்திலும்,
குரு மீனத்திலும், சனியும், சந்திரனும் ராகுவும் மகரத்திலும்,
கேது கடகத்திலும்,
சூரியன் சிம்மத்திலும் இருக்கிறது.
இந்த அமைப்பில் ஆறு கிரகங்கள் ஆட்சி பெற்றிருக்கின்றன.
இது அபூர்வமான ஒன்று.



இந்தப் படம்
பரிபாடல் மூலமும், உரையும்” என்னும் நூலில்
கொடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால்
1969 ஆம் வருட வெளியிடப்பட்டது.

இந்த அமைப்பில் ஆராய்ச்சிக்கும், ச்சரியத்துக்கும்
உள்ள விஷயங்கள் சில இருக்கின்றன.
  • ·         அதில் முதலாமது
இந்த அமைப்பு சந்திர கிரகணத்தைக் குறிக்கிறது
என்று ஒரு கருத்து இருக்கிறது.

பாம்பு ஒல்லை மதிய மறைய வரு நாளில் என்றும்
சொல்லப்பட்டுள்ளதால்,
இந்த அமைப்பு சந்திர கிரகணத்தைக் குறிக்கிறது
என்கிறார்கள் அறிஞர்கள்.

  • ·         சூரியன் இருக்கும் இடம்
இந்தப் பாடலில் சொல்லப்படுகிறது.
புலர் விடியல் அங்கி உயர் நிற்ப

புலரும் விடியல் காலை அங்கி என்னும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் இருக்க,
சூரியன் உயர் நின்றான்.
சூரியனுக்கு உயர்வான நக்ஷத்திரங்கள்
அவன் ஆட்சி செய்யும்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகும்.
ஸ்த்ததுக்கு முன் வருவது, உத்தரம்.
சூரியன் உத்தர நக்ஷத்திரத்தில் இருக்கும் போது
இன்னும் உதயமாகாத வேளையில்,
உதயத்துக்கு முன் அடி வானம் வெளுக்கும்.
அந்த வானில் ஹஸ்த நக்ஷத்திரம் இருக்கவே
அது கண்ணுக்குத் தெரியாது.
அதற்கு உயரே உத்தர நக்ஷத்திரத்தில் பொழுது விடிந்தது
என்கிறது இந்தப் பாடல்.
இதனால் இப்பாடல்
பொழுது விடியும் வேளையைக் குறிக்கிறது.
அந்த நேரத்தில் கிரகணம் ஆரம்பிக்கவில்லை என்பது
மேலே கொடுக்கப்பட்டுள்ள
படத்தின் மூலம் தெரிகிறது.


  • ·         சூரியனின் இந்த அமைப்பைச் சரி பார்க்க
மற்றொரு அபூர்வ அமைப்பைத் தருகிறார் புலவர்.
வர் விவரிக்கும் அந்த நாளில்
பொதியின் முனிவன் புரைவரைக் கீறி மிதுனமடைய என்கிறார்.

பொதியில் முனிவன் என்பவன் அகத்தியன்,
அந்த நக்ஷத்திரத்தைப் பற்றி ஏற்கெனெவே
இந்தத் தொடரில் கண்டோம்.
அதற்கு CANOPUS என்று பெயர்.


தென் துருவப் பகுதியில் வருடம் முழுவதும் தெரியும் அந்த நக்ஷத்திரம்,
நம் நாட்டின் மத்தியில் செல்லும் விந்திய மலைக்குச்
சற்று வடக்கு வரையில்தான் கண்ணுக்குத் தெரியும்.
பூமியின் சாய்மானம் மாறு பட்டுக்க் கொண்டே இருப்பதால்,
ஒரு சமயம்அது வடக்கில் இருப்பவர்களுக்குக்
கண்ணுக்குத்தெரியவில்லை.


விந்திய மலையின் கர்வத்தை அகஸ்தியர் அடக்கவே
அது வளராமல் நின்று போனது என்னும் கதையின்
உள்ளர்த்தத்தை நாம் பகுதி 42 இல் கண்டோம்.
அதற்குப் பிறகு விந்தியத்துக்கு வடக்கில் உள்ளவர்கள்
அகஸ்தியரைப் பார்த்து அர்க்கியம் என்னும் வழிபாடு செய்ய முடிந்தது.

இது வேத வழிபாட்டில் சொல்லும் விஷயம்.
இன்றைய தமிழ் நாட்டவர்களுக்கு
இந்த அகஸ்திய பூஜையைப் பற்றி ஒன்றும் தெரியாது.
ஆனால் அந்த நக்ஷத்திரம் பொதிகையைக் கடந்து மிதுனம் அடைந்தான்
என்று புலவர் சொல்லியுள்ளதால்,
அவர் இருந்த காலத்தில் அகஸ்தியருக்கு அர்க்கிய வழிபாடு
தமிழ் நாட்டிலும் நடந்திருக்கிறது என்று தெரிகிறது.


வைகாசி மாதம் முதலாகவே சூரியன் ரிஷபத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தவுடன்,
அகஸ்திய நக்ஷத்திரம் கண்ணில் தென்படாமல் போகும்.
சூரியனது ஒளியால், அது அஸ்தமனம் ஆகி விடும்.
பிறகு ஒவ்வொரு ராசியாக சூரியன் செல்லச் செல்ல,
விடியலுக்கு முன் அந்த நக்ஷத்திரம் தெரிய ஆரம்பிக்கும்.
விடியலுக்கு முன் தெரிய ஆரம்பிக்கும் நக்ஷத்திரத்தை
HELIACAL RISING என்பார்கள்


அது எப்பொழுது தென்பட ஆரம்பிக்கும் என்று
வட மொழி நூல்களில் எழுதி வைத்துள்ளார்கள்.
சூரியன் கன்னி ராசியில் நுழைந்தவுடன்
அதாவது புரட்டாசி மாதம், அது உஜ்ஜயினி நகரில் தெரியுமாம்.

உஜ்ஜயினிக்குச் சற்று தெற்கில் இருக்கும் நம் பகுதிகளில்,
சூரியன் சிம்ம ராசியின் கடைசிப் பகுதிக்கு வரும் போது தெரியும்.
அதனாலும், அன்றைய தினம் (பாடல் எழுதப்பட்ட தினம்)
சூரியன் சிம்ம ராசியில் இருந்தான்
என்பது தெளிவாகிறது.

·         இனி அகஸ்திய நக்ஷத்திரத்துக்குச் செய்யும்
அர்க்கிய வழிபாட்டைப் பற்றிப் பார்ப்போம்.
விடியலுக்கு முன் அந்த நக்ஷத்திரம்
ண்ணுக்கு தெரிய ஆரம்பித்த முதல் 7 நாட்களும்
அதை நோக்கி அர்க்கிய வழிபாடு செய்தனர்
என்று புராணங்களும்,
வராஹமிஹிரர் எழுதிய ப்ருஹத் சம்ஹிதையும் தெரிவிக்கின்றன.
அந்த வழிபாட்டை 7 வருடங்கள் விடாமல் செய்து வந்தால்,
நோய் நொடியின்றி இருக்கலாம்.
சில நூல்களில் 17 வருடங்கள் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
(அகஸ்திய நக்ஷத்திரம் இருப்பது
புதன் ராசியான மிதுனம் என்பதல் இந்தக் கணக்கு இருக்கலாம்)


இவ்வாறு வழிபடும் பிராம்மணன் வேத ஞானம் பெறுவான்.
க்ஷத்திரியன் பகைவரை வெல்வான்.
வைசியன் பசுக்களைப் பெறுவான்.
சூத்திரன் தனவானாவன்.
இவர்கள் அனைவருமே
நோயில்லா வாழ்வும், நல்லொழுக்கமும் அமையப் பெறுவார்கள்
என்கிறார் வராஹ மிஹிரர். (ப்ருஹத் சம்ஹிதை -12-18)

இந்த வழிபாடு வேத மந்திரங்களைக் கொண்டு செய்யப்படுவது.
இதை நான்கு வர்ணங்களுமே செய்ய வேண்டும்
என்று சொல்லியுள்ளதால்,
வேத வழிபாடு சூத்திரனுக்கு மறுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
மக்கள் அனைவரது ஆரோக்கியத்துக்கும்,
மேன்மைக்கும் வேத மதம் உறுதுணையாக இருந்திருக்கிறது
என்பதும் தெரிகிறது.


இந்த வழிபாடு தமிழ் நாட்டிலும் இருந்திருந்தால்தான்,
அகஸ்தியர் கண்ணுக்குத் தெரிந்து விட்டார்
என்று புலவர் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
7 வருடங்கள் அல்லது
அதிக பட்சம் 17 வருடங்கள் வழிபட வேண்டும் என்று நூல்கள் சொல்லவே,
எல்லோரும், எல்லா வருடங்களும் செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனாலும், அந்த வழிபாடு
தமிழ் நாட்டில் நாளடைவில் மறைந்து போயிருக்க வேண்டும்.


ஆனால் அந்த வழிபாடு 2000 ஆண்டுகளுக்கு முன் வரை
(அதைப் பற்றிக் கூறும் ப்ருஹத் சம்ஹிதா எழுதப்பட்டு
2000 ஆண்டுகள் ஆகியிருப்பதால்) இருந்திருப்பதால்,
ஒரு கேள்வி வருகிறது.
தமிழுக்கு எழுத்து வடிவம் கொடுத்து,
இலக்கணம் கொடுத்து,
அதை வளர்த்தவர் அகஸ்தியர்.
அவரைக் குறித்துத் தமிழ் மக்கள் வழிபாடு செய்தால்
தில் ஒரு அர்த்தம் இருக்கும்.
ஆனால் வட இந்தியாவில் அவருக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?




வைவஸ்வத மனுவின் வழித்தோன்றல்களாக வந்த மக்கள்,
தங்கள் முந்தின குடியிருப்பாக,
உலகின் தென் பகுதியில் வாழ்ந்திருந்தால்,
அகஸ்தியரை என்றும் கண்டு வழிபட்டவர்களாக இருந்திருப்பார்களோ?

அதனால்தான் அவர்கள் ஸரஸ்வதி நதி தீரத்தில்
குடியமர்ந்த பிறகு,
அங்கிருந்து அகஸ்தியர் கண்ணுக்குப் புலப்படாததால்,
மனம் வருந்தியும்,
பிறகு
அந்த நக்ஷத்திரம் கண்ணுக்குப் புலப்பட்ட ஆரம்பித்த பிறகு
வழிபாட்டினைத் தொடங்கியும்
இருந்திருக்க வேண்டும்.

விந்திய மலை தடுத்ததாக காரணம் கற்பித்து,
அதை நிரந்தரமாக அகஸ்தியர் வளராமல் செய்து விட்டார்
என்று கதையையும் எழுப்பி இருக்க வேண்டும்.

பூமியின் சுற்றுப் பாதையில் இந்த நக்ஷத்திரம் இல்லை.
அதில் உள்ள 27 முக்கிய நக்ஷத்திரங்களில்
இந்த நக்ஷத்திரம் இல்லை.
இது எங்கோ தென் கோடியில்தான் தென்படுகிறது.
தென் பகுதி உலகத்தில் இருப்பவர்களுக்கு
இது முக்கியத்துவம் வாய்ந்தது.
அங்கு
சாகத் தீவும்,
அதன் பிறகு தென்னன் தேசமும் இருந்தன.
தென்னனுக்கு அகஸ்தியர் குல ஆசான்.

ராமனது பாட்டியின் சுயம்வரத்துக்கு
பாண்டிய மன்ன்ன் வந்திருந்தான் என்று காளிதாசர் சொல்கிறார் என்று
பகுதி 14 இல் பார்த்தோம்.
அதில் வரும் வர்ணனையில்,
பாண்டியனுக்கும் அகஸ்தியருக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு சொல்லப்படுகிறது.

"மலையிலிருந்து கொட்டும் அருவிகளைப் போல,
சிவந்த சந்தனம் பூசப்பட்ட மலை போன்ற மார்பில்
தொங்கும் முத்துச் சரங்கள் பல உடையவன்
இந்தப் பாண்டிய மன்னன்.
அகத்திய முனிவர் வழி நடத்த,
அஸ்வமேத யாகங்கள் பல செய்ததால்
அபிஷேக நீர் அவன் உடலில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ”

என்று காளிதாசர் சொல்வதைக் கண்டோம்.
யாக வேள்விகள் செய்து
அகஸ்தியரால் வழி நடத்தப்பட்டவன் தென்னன்.
அவனும் அகஸ்திய நக்ஷத்திரத்துக்கு
அர்க்கிய வழிபாடு செய்திருக்க வேண்டும்.

சரஸ்வதி நதி வழியாக வட இந்தியாவுக்கு வந்த மக்களும்
அகஸ்திய நக்ஷத்திரத்துக்கு அர்க்கிய வழிபாடு செய்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு சாராருக்கும், ஒரே மூலம்
இருந்திருந்தால்தான் இது சாத்தியம்.
வேத மதத்தில் பலவித வேள்வி, வழிபாடுகள் இருந்தாலும்,
இந்த குறிப்பிட்ட வழிபாடு
அந்த நக்ஷத்திரத்தைப் பார்த்துச் செய்யப்படுவது
என்பது குறிப்பிடத்தக்கது.
அகஸ்திய நக்ஷத்திரம் கண்ணில் தெரிந்தால்தான்
இந்த வழிபாடு செய்ய முடியும்.
தமிழ் நாட்டில் இது கண்ணில் தென்படுகிறது.
விந்திய மலை வரை இது கண்ணில் தெரியும்.


எனவே திணிப்பு என்று சொன்னால்,
இந்த வழிபாடு,
தெற்கிலிருந்துதான்
வடக்குக்குத் திணிப்பாகச் சென்றிருக்க முடியும்.

இல்லையேல்,
தெற்கு – வடக்கு என்னும் இரண்டு சாராரும்,
ஒரே இடத்தில் வாழ்ந்து இந்த வழிபாட்டை
மேற்கொண்டிருக்க வேண்டும்.
இந்த குறிப்பிட்ட வழிபாட்டு,
பூமத்திய ரேகைக்குத் தெற்கிலோ
அல்லது,
இந்தியாவுக்குக் குறுக்கே மத்தியில் செல்லும்
கட ரேகைக்குத் தெற்கிலோதான்
இருந்திருக்கக்கூடிய சாத்தியம் கொண்டது.

இதனால் இந்த வழிபாடு செய்த மக்கள் அனைவரும்
ஒரே மூலத்திலிருந்து,
அதுவும் தெற்கிலிருந்து உண்டானவர்களாக இருக்க வேண்டும்.

ஐரோப்பாவிலிருந்து வந்த ஆரியன் என்கிறார்களே,
அப்படி வந்தவர்களுக்கும்,
சிந்து சமவெளியில் உட்கார்ந்திருந்தான் தமிழன் என்கிறார்களே,
அவர்களுக்கும்
அகஸ்தியர் (நக்ஷத்திரம்) என்றென்றும்
கண்ணில் தெரிந்திருக்க மாட்டார்.


மேற்சொன்ன ஐரோப்பிய ஆரியன்,
சிந்து சமவெளித் தமிழன் ஆகியோர்
உண்மையல்ல என்பதை
பரிபாடல் சொல்லும் அகஸ்திய நக்ஷத்திரக் கருத்தும்
அகஸ்திய வழிபாடும்
நிரூபிக்கின்றன.




4 கருத்துகள்:

  1. இந்தப் படத்தில் சூரியன் கேதுடன் இருக்க வேண்டும் அது போல் சந்திரகிரகணம் என்றால் சூரியனுக்கு ஏழில் சந்திரனும் அல்லது சந்திரனுக்கு ஏழில் சூரியனும் இருக்க வேண்டும். சூரிய கிரகணம் என்றால் சூரிய சந்திரர்களுடன் ராகு அல்லது கேது இணைந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yes,
      I had written
      //இந்த அமைப்பு சந்திர கிரகணத்தைக் குறிக்கிறது
      என்று ஒரு கருத்து இருக்கிறது.//
      Some people think so.

      நீக்கு