செவ்வாய், 4 ஜனவரி, 2011

27. ஆரியர்கள் கடந்த 7 நதிகள்.



மொழி ஆராய்ச்சி செய்யக் கிளம்பி, வரலாற்று ஆராய்ச்சி செய்த மாக்ஸ் முல்லர் போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு ரிக் வேதம் ஒரு சவாலாக இருந்தது. அதன் சமஸ்க்ருத மொழிபெயர்பு குழப்பமாக இருந்தது. அவர்களைக் குழப்பிய ஒரு சொல் சப்தசிந்து என்பதாகும். இது அடிக்கடி ரிக் வேதத்தில் வருகிறது. சப்த சிந்துவைத் தாண்டிச் சென்று போர் புரிந்த வர்ணணைகள் வருகின்றன. மேலும், நதி நீரில் எதிரிகளை மூழ்கடிப்பதும், அணைகளை உடைத்து நீரை ஓட விடுவதுமான விவரங்கள் ஆங்காங்கே வருகின்றன. எனவே சப்த சிந்து என்பது ஒரு பூகோளப் பகுதியைக் குறிக்கிறது, அந்தப் பகுதி எது என்று கண்டு பிடித்துவிட்டால், படையெடுத்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கண்டு பிடித்து விடலாம் என்று நினைத்தார்கள்.


சிந்து என்ற நதிப் பெயர் அவர்களுக்குத் தெரியும். சப்த என்றால் ஏழு என்று பொருள். சிந்து நதி ஏழு நதிகளாக இல்லை. எனவே சிந்து நதியுடன் சேர்த்து மொத்தம் ஏழு நதிகள் சிந்துவின் மேற்கே இருப்பவற்றைக் குறித்து இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களது பைபிள் சொல்லும் மனிதனது தோற்றமும், தோற்றம் நடந்த இடமும் ஐரோப்பியப் பகுதிகளில் நடந்தன என்று நம்பினார்கள். மேலும் இந்திரன் வெள்ளை நிறத்தவர்களுக்கு உதவின கதையைப் பிடித்துக் கொண்ட அவர்களுக்கு, ஐரோப்பியரது வெள்ளை நிறம்தான் கவனத்தில் இருந்தது.



மேலும் அவர்களது ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்க்ருதத்துக்கும் ஒற்றுமை இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். உதாரணமாக சமஸ்க்ருதத்தில் மாதா பிதா என்று தாய், தகப்பனுக்குச் சொல்வார்கள். ஆங்கிலத்தில் மதர், ஃபாதர் என்பார்கள். ஜெர்மானிய மொழியிலும் இதே போன்ற  ஒசையுடன் இந்தச் சொற்கள் உள்ளன. இப்படிப்பட்ட மொழி ஒற்றுமைகள் உள்ளதால், சம்ஸ்க்ருதம் ஐரோப்பாவில் தோன்றியிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.  


இந்த காரணங்களினால் சப்த சிந்துவை ஐரோப்பாவில் தேடினார்கள். இந்த நதிகள் மாபெரும் நதிகளாக இருக்க வேண்டும், கடப்பதற்கு அரிதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஏனென்றால், சப்தசிந்துவைக் கடப்பதைப் பற்றி அவ்வளவு முக்கியத்துவம் ரிக் வேதத்தில் சொல்லப்படுகிறது.


அப்படி இவர்கள் கண்டுபிடித்த நதிகள் எவை தெரியுமா?
அட்லாண்டிக் கடலில் கலக்கும் ரைன் நதியில் ஆரம்பித்தார்கள். அங்கிருந்து படிபடியாக இந்தியா நோக்கி வரும் வழியில் உள்ள நதிகளைக் கணக்கிட்டார்கள்.. ரைன், அதைத் தொடர்ந்து டனுபே, அங்கிருந்து மெசபடோமியாவில் உள்ள யூப்ரடிஸ், டைகிரிஸ் என்று நான்கு நதிகளைத் தாண்டினால், ஐந்தாவதாக சிந்து நதி வந்துவிடுகிறது. சிந்து நதிக்கு ஐந்து கிளை நதிகள் உள்ளன. அந்தக் கிளை நதிகளில் சட்லெஜ், பியாஸ் நதிகளைச் சேர்த்துக் கொண்டு ஏழு நதிகள் என்று கணக்கு சொன்னார்கள். 



இந்தப் படத்தில் இவர்கள் சொன்ன நதிகளில் ஐந்தைக் காணலாம்.
  1. ரைன் நதி
  2. டனுபே நதி
  3. யுப்ரடீஸ் நதி (இது ஈரான், ஈராக் பகுதியாகும். இங்கு சுமேரிய நாகரீகம் இருந்தது. சிந்து சமவெளி நாகரீகம் ஆரம்பித்தது என்று இவர்கள் கருதிய கி-மு- 3000 ஆண்டில் இந்த நாகரீகம் இந்த நதிக்கரையில் இருந்தது.)
  4. டைகிரிஸ் (இதுவும் சுமேரிய நாகரீகப் பகுதி)
  5. சிந்து நதி.

மீதி இரண்டும் படத்தில் காண்பிக்கப்படவில்லை. அவை சிந்துவின் கிளை நதிகள். இந்த நதி ஆரம்பிக்கும் இமயமலைப் பகுதியில் அவை உள்ளன.


சப்தநதி ஆராய்ச்சி இத்துடன் நின்றுவிடவில்லை. இந்த ஏழு நதிகளை ஒருமுகமாக அனைவரும் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு சிலர் ஆப்பிரிக்காவில் உள்ள நைல் நதியில் ஆரம்பித்து எழு நதிகளைக் கணக்கிட்டார்கள். ஆப்பிரிக்கா என்றால் கருப்பர்கள் நாடு. அதனால் அது வெள்ளையர் படையெடுப்புக்கு ஒத்து வரவில்லை. ஆயினும் நாளடைவில், பிற ஆராய்ச்சியாளர்கள், சப்த சிந்துவை சிந்து நதி தீரத்திலேயே தேட ஆரம்பித்தார்கள். சப்தசிந்து என்று வேதம் கூறுவது சிந்து நதியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் ஏழு நதிகள் எவை என்று அவர்களால், ஏன் இன்று வரை யாராலும் சொல்ல முடியவில்லை.


இப்படி ஏழு நதிகளைத் தாண்டி வந்தவர்கள் நாடோடிகள் என்றார்கள். அவர்கள் ஆரியர்கள் என்றார்கள். அவர்கள் மேற்கு ஐரோப்பாவில் இருந்திருக்க வேண்டும் என்றும், வட ஐரோப்பாவில் இருந்திருக்க வேண்டும் என்றும் அவ்வப் பொழுது சொல்லிக் கொண்டார்கள். நாடோடிகளான இந்த மக்கள், குதிரைகளின் மீதும், தேர்ப்படையுடனும் வந்து சிந்துவையும் கடந்து கொடிய போர் புரிந்தனர் என்கிறார்கள்.


இவ்வளவு தொலைவு பயணப்படாமல், கிரேக்கப் பகுதியிலிருந்து வந்த அலெக்ஸாண்டர் என்னும் கிரேக்க மன்னனாலேயே, சிந்துவைத் தாண்டி முன்னேற முடியவில்லை. அலெக்ஸாண்டர் காலத்தில் சிந்து நதி பரந்த நதியாக இருந்திருக்கிறது. தேர்ச்சி பெற்ற படை பலத்தைக் கொண்ட அவரே திக்கு முக்காடிப் போய் திரும்பி விட்டார். அப்படி இருக்க முறையான படைத்திரளுடன் வராத ஆரியர்கள் சிந்து நதியை எப்படிக் கடந்திருப்பார்கள்? இங்கு இடைச் செருகலாக, அலெக்ஸாண்டர் படையெடுப்பை ஆங்கிலேயர் திரித்தவிதத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்.



இன்றுவரை நம் நாட்டுக் குழந்தைகள் படிக்கும் சரித்திரப்பாடம், ஆங்கிலேயர்கள் எழுதியதுதான். கிரேக்க சரித்திரத்தில் அலெக்ஸாண்டர் கிழக்கு நோக்கி செய்த  படையெடுப்பு விவரங்கள் இருக்கின்றன. அவற்றுள் உள்ள விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், அலெக்ஸாண்டர் பாரதப்பகுதிக்குள்ளேயே நுழையவில்லை. பாரதத்தின் பூகோள அமைப்பைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள நைல் நதியை அடைந்தபோதே, அதுவே பாரதம் என்று நினைத்து விட்டனர். அங்கே அலெக்ஸாண்ட்ரியா நகரை அவர் நிர்மாணித்தார்.


அங்கிருந்து கிழக்கு நோக்கி அவர் வந்தபோது சிந்து நதி காட்டாற்று வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்த ஜீலம் பகுதியை ஆண்ட புருஷோத்தமன் என்னும் அரசன் அலெக்சாண்டரை எதிர் கொண்டார். இதுவரை சொன்ன கதையை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் புருஷோத்தமனுடன் செய்த போரின் முடிவு என்ன? ஆங்கிலேயர்கள் சொன்ன கதை இன்று வரை நம் சரித்திரப்பாடப் புத்தகத்தில் இருக்கும் கதை புருஷோத்தன் தோற்றான் என்பது. ஆனால் தோற்ற பின்னும், அவனுக்கே அவனது  நாட்டை அலெக்ஸாண்டர் தந்துவிட்டார் என்று ஆங்கிலேயர்கள் சொன்னதற்கு ஆதாரம் இல்லை.


அலெக்ஸாண்டர் போர் வெறி பிடித்து, இந்த உலகையே தன் குடை கீழ்
கொண்டு வரவேண்டும் என்று புறப்பட்ட மன்னன். அவன் தான் வென்ற நாட்டை விட்டுவிடுவானா? உலகையே தன் குடையின் கீழ் கொண்டுவர விரும்பிப் படையெடுத்த அலெக்ஸாண்டரது கேரக்டருக்கு இது ஒத்துவரவில்லை.


மேலும், இப்படி ஒரு போர் நடந்து அதில் இந்திய மன்னன் ஒருவன் தோற்றான் என்பது இந்தியக் கதைகளிலும் இல்லை, கிரேக்கக் கதைகளிலும் இல்லை. அலெக்ஸாண்டர் போர் நிறுத்தத்தை விரும்பினார் என்றும், அதனால் புருஷோத்தமன் அவனைத் திரும்பிப் போக விட்டார் என்றே சொல்லப்படுகிறது. அலெக்ஸாண்டர் இந்தியப் பகுதியை அல்லது இந்திய மன்னனை வென்றதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.



ஆனால் ஆங்கிலேயர்கள் அப்படி ஒரு கதையை உருவாக்கினார்கள். இந்தியர்கள் நாதியற்றவ்ர்கள், படையெடுத்தவன் முன்னால் அடங்கிப் போனவர்கள் என்ற கண்ணொட்டத்துடன் ஆங்கிலேயர்கள் நம்மைப் பார்த்தார்கள். அன்று அலெக்ஸாண்டரிடம் தோற்றவர்கள் அதற்கு முன் தங்கள் மூதாதையரான ஆரியர்களிடம் தோற்றார்கள் என்று இந்தியர்களை மூளைச் சலவை செய்ய அலெக்ஸாண்டர் கதை அவர்களுக்கு உதவியது.



அலெக்ஸாண்டருக்குப் பின் இந்தியாவுக்கும், கிரேக்கத்துக்கும் தொடர்பு ஏற்பட்டது என்பது உண்மை. ஆனால் அதில் நட்புணர்வு மேலோங்கி இருந்தது. கிரேக்கர்கள் இந்தியாவுக்குப் படிப்பதற்கும் யாத்திரிகர்களாகவும் வந்தனர். அப்படி வந்தவர்களுள் ஒருவர் மெகஸ்தனிஸ் என்பவர். அவர் அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு 35 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்ததார். அவர் அலெக்ஸாண்டர் படையெடுத்தைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. தன் நாட்டு மன்னன் போரில் வென்று, அத்துடன் நில்லாமல், தான் வென்ற நாட்டைப் பெருந்தன்மையுடன் எதிரிக்கே கொடுத்தான் என்பது உண்மையாக இருந்தால், அதை மெகஸ்தனிஸ் அவர்கள் பெருமையாகப் பேசி இருப்பாரே? அப்படிப் பேசாமல், இந்தியாவின் மீது தொன்று தொட்டு யாரும் படையெடுத்து வந்ததில்லை. இந்தியர்களும், வேறு நாட்டின் மீது படையெடுத்தில்லை என்று கூறியுள்ளார். இதை ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்களும் கண்டு கொள்ளவில்லை. இன்று வரை இந்திய அரசும் இதன் அடிப்படையில் அலெக்ஸாண்டர் படையெடுப்பைப் பற்றிய உண்மையை வெளிக் கொண்டுவர முயற்சிக்கவில்லை.


அலெக்ஸாண்டருக்கு 1,150 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரியப் படையெடுப்பு நடந்தது என்பது ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அந்தப் படையெடுப்பு நடந்திருந்தால் மெகஸ்தனிஸ் அவர்கள், இந்தியாவின் மீது யாருமே படையெடுத்து வரவில்லை என்று எப்படி சொல்லியிருக்க முடியும்? அல்லது படையெடுத்தது உண்மை என்றால், தனது நாட்டுப் பகுதிகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்ற பெருமித உணர்ச்சியையோ, அல்லது அப்படி ஒரு உறவையோ சொல்லி இருக்கலாமே? மாறாக அவர் இந்தியாவில் பார்த்த மக்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள் எல்லாமே அவருக்குப் புதியதாக இருந்தது. ஒரு 1000 வருட இடைவெளியில், இந்தியாவை ஆக்கிரமித்த மக்களது முந்தின பழக்க வழக்கங்கள் எப்படி உருத்தெரியாமல் மாறிப்போகும்?


பயிற்சி பெற்ற போர்ப்படையுடன் வந்த அலெக்ஸாண்டரால் கடல் போன்று விரிந்திருந்த சிந்து நதியைக் கடக்க முடியவில்லை. அப்படி இருக்க, நாடோடிகளாக வந்ததாகச் சொல்லப்படும் ஆரியர்கள், ஐரோப்பிய நதிகளைக் கடந்து, சிந்துவையும் கடந்து போர் பலத்தால் எப்படி வெற்றி பெற்றனர் என்பதைப் பற்றி, ஆரியப் படையெடுப்புவாதிகள் யோசிக்கவில்லை.
இப்படி அவர்கள் சிந்திக்காத காரணத்தால், தங்களுக்குப் பிடித்தவாறு இருப்பதை மட்டும் ஆராயப் புகுந்தார்கள். உண்மையில் ரிக் வேதம் என்ன சொல்கிறது என்பதைக் கவனிக்கவில்லை.


சப்தசிந்து என்ற பதம் ரிக் வேதப்பாடலில் இருக்கிறது. ஆனால் அதன் மீது ஒரு தனிப்பாடல்கூடப் பாடப்படவில்லை.

ஆனால் புராணக் கதை என்று இவர்கள் ஒதுக்கிய சரஸ்வதி நதியின் மீது பல தனிப்பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளன.



ரிக் வேதத்தின் 10 மண்டலங்களில் 9 மண்டலங்களில் சரஸ்வதி பற்றிய செய்தியும், துதியும் வருகிறது.
நதிஸ்துதி சூக்தம் என்னும் பாடலில் (10-75) வட இந்தியாவில் உள்ள 10 நதிகள் துதிக்கப்படுகின்றன. கிழக்கில் கங்கையில் ஆரம்பித்து, யமுனா, சரஸ்வதி என்று மேற்கு நோக்கி மொத்தம் பத்து நதிகளை வணங்கிப் பாடும் ரிக் வேதப்பாடல் இது.
இந்தப் பத்து நதிகளில் சிந்து நதி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



சிந்து நதியைக் கடப்பது ஒரு பெரும் சவாலாக இருந்து அதையே சப்த சிந்து என்று படையெடுத்து வந்த ஆரியர்கள் ரிக் வேதத்தில் பாடியிருந்தால், நதிஸ்துதி கூறும் வணக்கத்துக்குரிய பத்து நதிகளில் அதை ஏன் சேர்க்கவில்லை.
சிந்து நதியைத்தான் விட்டார்கள்.
ஐரோப்பாவில் இருந்த ரைன் நதி முதல் பிற ஐரோப்பிய நதிகளோடு அவர்கள் தொடர்பு கொண்டிருந்தால், அந்த நதிகளைப் பற்றி ரிக் வேதத்தில் எங்காவது சொல்லி இருக்க வேண்டும் அல்லவா?
இல்லையே?
ஐரோப்பிய பூகோளப் பகுதி எதுவுமே ரிக் வேதத்தில் காணப்படவில்லையே? ஏன்?


சப்த சிந்துவில் உள்ள ஏழு எவை என்பதற்கு விளக்கம் இல்லை. ஆனால் சரஸ்வதி நதியுடன் ஏழு என்ற எண்ணைத் தொடர்பு படுத்தி ரிக்வேதம் கூறுகிறது.


ஏழு சகோதரிகளுடன் கூடிய சரஸ்வதி என்று சரஸ்வதி வர்ணிக்கப்படுகிறது. சரஸ்வதி சப்தாதி சிந்துமாதா என்று சிந்துவைச் சேர்த்துக் கொண்டு வருகிறது. ( 7-36-6)
இங்கு சிந்து என்ற சொல்லின் சூட்சுமம் தெரிகிறது.
சிந்து என்றால் வடமொழியில், வெள்ளம் அல்லது கடல் என்று பொருள்.
கடல் போல விரிந்து இருப்பதாலும், வெள்ளப்பெருக்குடன் இருப்பதாலும் சிந்து நதி என்னும் பெயர் வந்திருக்க வேண்டும்.



சரஸ்வதி நதியை சிந்துமாதா என்றது, வெள்ளப் பெருக்குடன் கூடிய எழுவரைக் கொண்ட சரஸ்வதி என்ற பொருளில் வருகிறது. சரஸ்வதி மாபெரும் நதியாக இருந்தது என்று ரிக் வேதம் கூறுகிறது.
சரஸ்வதி நதியை ‘சப்தஸ்வஸா என்றும் ரிக் வேதம் அழைக்கிறது. (6-61-10). அதாவது சரஸ்வதி ஏழு கிளைகளுடன் கூடிய நதியாக இருந்திருக்கலாம். இதைப் பற்றிய விவரங்களைப் பிறகு பார்ப்போம்.


ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.
ஏழு ரிஷிகள், படைப்புக் கடவுளின் மானஸ புத்திரர்கள் என்ப்படுகிறார்கள். இவர்கள் மூலமாக மனிதப் படைப்பு நடந்தது என்பது ஹிந்து மதம் கூறும் படைப்புக் கொள்கை. இதன் அடிப்படையில், சப்த ரிஷி மண்டலம் என்று ஒரு நட்சத்திரக் கூட்டம் வானில் சுட்டிக் காட்டபடுகிறது.




ரிஷிகள் ஏழு.
தீவுகள் ஏழு (அவற்றுல் நாம் வாழும் நாவலந்தீவு ஒன்று).
கடல்கள் ஏழு.
உலகங்கள் ஏழு. 
மேலுலகம் ஏழு.
கீழுலகம் (நரகங்கள்) ஏழு.
வேத மதம் கூறும் இது போன்ற ஏழு ஏழான தொகுதிகள், சங்க நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளன.
பரிபாடல் 5 இல் சப்த ரிஷிகள் பற்றிய ஒரு செய்தி வருகிறது.
பரிபாடல் 3- இல் மூவேழ் உலகங்கள் பற்றிய குறிப்பு வருகிறது.
அதாவது ஏழு வகைபட்டுள்ள மூன்று உலகங்கள் என்று கூறுகிறது.
ஆனால் இவை எதிலும் சப்த சிந்து வரவில்லை.


சப்த சிந்து என்பது தத்துவக் கருத்து.
இந்திரியங்களை வெல்ல இந்திரன் துணையுடன், சுதாஸ் போன்றவர்கள் சப்த சிந்துவைக் கடந்தார்கள் என்றால், தவ வலிமையால், உடலில் உள்ள எழு நாடிச் சக்கரங்களையும் கடந்தார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.


சப்த சிந்துவில் எதிரிகளை அழுத்தி கொன்றார்கள் என்றால், யோக வலிமையில், படிப்படியாக ஒவ்வொரு நாடியையும் வென்று முன்னேறுவதைக் குறிக்கிறது.
நாடி என்பதும் நதி என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
இவை நத் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து எழுந்தவை.
நத் என்றால் ஓடுவது என்று பொருள்.
ஓடிக்கொண்டே இருப்பதால் ஆறுக்கு நதி என்று சமஸ்க்ருதத்தில் பெயர்.
நம் உடலில் உள்ள நாடியிலும், ஒரு ஓட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. இறக்கும் தறுவாயில் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது என்கிறோம்.
இதை ரிக் வேத பாணியில் சப்த நதி, அல்லது சப்த சிந்துவும் அடங்கி விட்டது எனலாம்.
சிந்து என்றால் வெள்ளம் என்று பொருள்.
சப்த நாடிகளிலும் வெள்ளப்பெருக்காக இந்திரிய சக்தி ஓடிக் கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்தி, வெல்ல வேண்டும் என்பது தவ ஞானிகள் சொல்லிக் கொடுத்துள்ள பாடம்.
இப்படி தத்துவமாக ரிக் வேதம் இருக்கிறது.

ஜோதிடத்திலும் ஏழு வருகிறது.
கேது கிரகத்தின் எண் ஏழு ஆகும்.
கேது கிரகம், ஆன்மீகத்துக்கு உறுதுணையாவது. மோட்சத்துக்கு உதவுவது.
சப்த என்னும் ஏழுக்குப் பின் இப்படி ஒரு உயர்ந்த தத்துவம் இருக்கிறது. எனவே சப்தசிந்து என்றது, சிந்து நதி என்னும் நதியை இது குறிக்கவில்லை.


சப்த சிந்துவின் கதை இப்படி இருக்க, நம் திராவிடவாதிகள் என்ன செய்தார்கள்?
சிந்து என்ற ஒரு சொல் அவர்கள் மண்டையில் மணி அடித்தது போல இருந்தது.
சப்தசிந்து என்பது சிந்து நதியைக் குறிக்கிறது என்று நினைத்துக் கொண்டு, சமீபத்தில் கூட்டிய செம்மொழி மாநாட்டில் சிந்து சமவெளிப் பகுதியில் காணப்படும் ஏழு முத்திரைச் சின்னங்களை செம்மொழிச் சின்னத்தில் அமைத்து விட்டார்கள்.
செம்மொழி மாநாட்டுச் சின்னத்தைப் பற்றிய அரசு விளக்கத்தில், சப்தசிந்துவை முன்னிட்டும், தமிழிலும் ஏழு ஏழான தொகுதிகள் உள்ளன என்பதாலும் (மேலே பரிபாடல் போன்ற நூல்களில் வேத மரபை ஒட்டிக் கூறப்பட்டவை) சிந்து சமவெளியின் ஏழு சின்னங்களை அமைத்ததாகக் கூறப்பட்டது. 





சப்த சிந்து என்பது ரிக் வேதத்தில் வருவது. ஆரிய வேதம் என்று இவர்கள் அழைக்கும் வேதத்தில், ஆரியர்களுக்கு முக்கியமான சப்த சிந்துவை சுவீகாரம் எடுத்துக் கொண்டு விட்ட இவர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்!!


மாக்ஸ் முல்லர் முதலான ஆங்கிலேயர்கள் சப்த சிந்துவை சிந்து நதியில் காணவில்லை. ஐரோப்பாவில் இருக்கும் ரைன் நதி முதற்கொண்டு சப்த சிந்துவைக் கண்டார்கள். அந்தப் பகுதியிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்றால், அந்த ஆரியர்களது பகுதியான சப்த சிந்துவை நம் தமிழகத்துத் திராவிடவாதிகள் சுவீகரித்துக் கொண்டு செம்மொழி சின்னத்திலும் சிம்பாலிக்காக வைத்தார்கள் என்றால், இதுவே திராவிடவாதிகளின் ‘பகுத்தறிவின்உச்சக் கட்டம் என்று சிரிக்காமல் வேறு என்ன செய்வது??


8 கருத்துகள்:

  1. //ஆப்பிரிக்காவில் உள்ள நைல் நதியை அடைந்தபோதே, அதுவே பாரதம் என்று நினைத்து விட்டனர்//

    காமடி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொலம்பஸ் மேற்கு இந்தியத் தீவை அடைந்தவுடன் அவற்றை இந்தியா என்று நினைத்தார். அவர் அப்படி நினைத்ததால் தான் அவைகளுக்கு மேற்கு இந்தியா என பிற்காலத்தில் பெயரே வந்தது ! விஷயம் அப்படியிருக்க நீங்கள் ஆசிரியர் கூறியிருப்பதை ஒரு சாத்தியக்கூறாக எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர நீங்க காமடி பண்ணிட்டு அடுத்தவங்கள காமடி பண்றாங்கனு சொல்லக்கூடாது...

      நீக்கு
  2. Dear jayashree,

    Saraswathy River was dried up long long ago. Indus river is still flowing. Satellite images shows saraswathy was dried in thar desert. But in your article you mentioned that both saraswathy and indus were same. Its bit confusing for me. I am not sure, my understanding is correct. could you explain me Please?

    Regards
    Kalidasan

    பதிலளிநீக்கு
  3. Dear Mr Kalidasan,

    Kindly read the article again, I have not said that Saraswathy and Sindhu river were the same. In Rig Veda it is said "saraswathgy sindhu maathaa". The Sindhu here means flood or waters. It means "saraswathy with flood waters". The Europeans who read this, misinterpreted it and thought this referred to the Indus river.

    பதிலளிநீக்கு
  4. இப்பொழுது புரிகிறது இந்த ஏழின் மகாத்மியம்! தன்னுடைய கலைஞர் தொலைகாட்சி சேவை தொடஙக இருந்தபோது,சின்னமாக 7 ரேகை கொண்ட சூரியனை தேர்ந்தெடுத்தார்.அதன் பின்னணிஇந்த ஸப்த
    ஸிந்துவா?

    பதிலளிநீக்கு
  5. ஆரம்பத்தில் கக்கர் ஹக்ரா நதிக்கு அதாவது சரஸ்வதி நதிக்கு சட்லெஜ் மற்றும் யமுனை நதியில் இருந்து நீர் கிடைத்துவந்திருக்கிறது. இமயமலையில் சிறிய அளவுக்கு மேடு அல்லது பள்ளம் ஏற்பட்டாலும் இந்த நதியின் திசையானது முற்றிலும் மாறிவிடும்.
    இமயமலையில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சட்லெஜ் மற்றும் யமுனையில் இருந்து வந்த நீர் திசை மாற்றப்பட்டுவிட்டது. யமுனை கங்கைநதி நோக்கியும், சட்லெஜ் சிந்துநதி நோக்கியும் ஓடத்துவங்கின. இதனால் கக்கர்-ஹக்ரா நதியின் அதாவது அதாவது சரஸ்வதியின் நீர் வரத்து குறைந்துவிட்டது.
    இதனால் ராஜஸ்தான், குஜராத்தில் அந்த நதியால் பாயமுடியவில்லை. நதி பாயாததால் ராஜஸ்தான், குஜராத்தில் சரஸ்வதி நதியின் ஆற்றுப்படுக்கை வறண்டுபோய் தார்பாலைவனமாக மாறிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது 5000 வருடங்களுக்கு முற்பட்ட - அதாவது மகாபாரத கால சரஸ்வதி. அதற்கும் முன்னால், பனியுகம் முடிந்த போது, கங்கை நதி தோன்றுவதற்கு முன்னாலும், உருவான நதி சரஸ்வதி நதியாகும். ஆரம்பத்தில் சரஸ்வதி நதி, இமயமலையிலிருந்துதான் வந்தது. உத்தராகண்டில் உள்ள பிரம்ம கபாலம் என்பதே சரஸ்வதியின் முதல் தோற்றமாகும். அங்கிருந்து உண்டாகி, பின்னாளில் திரிவேணி சங்கமத்தில் பூமிக்குள் மறைந்தது. விண்வெளியிலிருந்து எடுத்த படங்களில், இமயமலையில் சரஸ்வதி நதி தோன்றின அமைப்பும், யமுனை உள்ளிட்ட நதிகள் அதனைச் சேர்ந்த அமைப்பும் தெரிகின்றன. இந்த இணைப்புகளையும் படிக்கவும்.

      http://journey2light.wordpress.com/2013/01/10/saraswati-the-lost-vedic-river-the-triveni-sangam/

      http://www.gsbkerala.com/saraswatih.htm

      நீக்கு
  6. "..மேலும் அவர்களது ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்க்ருதத்துக்கும் ஒற்றுமை இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். உதாரணமாக சமஸ்க்ருதத்தில் மாதா – பிதா என்று தாய், தகப்பனுக்குச் சொல்வார்கள். ஆங்கிலத்தில் மதர், ஃபாதர் என்பார்கள். ஜெர்மானிய மொழியிலும் இதே போன்ற ஒசையுடன் இந்தச் சொற்கள் உள்ளன. இப்படிப்பட்ட மொழி ஒற்றுமைகள் உள்ளதால், சம்ஸ்க்ருதம் ஐரோப்பாவில் தோன்றியிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். "

    Dear, the only way to prove that the western view - Sanskrit was originated in the west - is wrong, is by accepting the fact that Sanskrit - Samkatham - Senkathai, was a dialect of Old Tamil spoken in the north. Sooner or later you are are going to accept it. This only would fix the Aryan-Dravidian divied, and will unite all of us as ONE. I like both languages, because both of them were/are ours.
    Am thath sathyam - isn't it pure Tamil.
    am - yes; thath - athu; sa + thee + am = true as the co-existence of sun and fire. What a wonderful language!
    All the words in Sam(s)ka(r)tham could be analyzed to be of Tamil origin.
    Anyway your research is wonderful.

    பதிலளிநீக்கு