சனி, 29 ஜனவரி, 2011

33. ரஷ்யாவில் விஷ்ணு ஆலயம்!


பாரத நாட்டின் பரப்பளவு இன்றைக்குப் போலில்லாமல், முன்பு அதீதமாகப் பரந்து விரிந்திருந்தது. சங்கல்ப மந்திரத்தில், ஜம்புத்தீபத்தில் உள்ள பாரத வர்ஷத்தில் உள்ள பரதக் கண்டத்தின் தென் பகுதியில் நாம் இருக்கிறோம் என்று வருகிறது. பாரத வர்ஷம் என்பதன் விஸ்தீரணம் என்ன என்பதை ஸ்கந்த புராணம் விவரிக்கின்றது. பாரத வர்ஷம் 9 பகுதிகளாகப் பிரிந்திருந்தது. அப்படிச் சொல்லப்படும் பிரிவுகளில்தான் யவன ராஜ்ஜியம் வருகிறது. முன் பகுதியில் பார்த்த சக்‌ஷுஸ் நதி பாரத வர்ஷத்தின் ஒரு பகுதியே.


இந்தப் படத்தில், மத்தியத் தரைக் கடல் நோக்கிய அம்புக் குறி, மிலேச்சர்கள் என்று விரட்டப்பட்ட யயாதியின் மகனைச் சேர்ந்தவர்கள் சென்ற பகுதி. வடமேற்கு நோக்கிச் செல்லும் அம்புக் குறி இன்னொரு பகுதியினர் சென்ற வழி. அவர்கள் ஆங்காங்கே குடி அமர்ந்தும், மேலும் பரவியும் சென்றிருகின்றனர். அவர்கள் சென்ற போது அந்தப் பகுதிகளில் அதற்கு முன்பும் மக்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் எப்பொழுது, எங்கிருந்து அங்கே சென்றார்கள் என்பதை மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், அங்கு இருந்த மக்களுக்கும், நாம் வாழும் பாரத நாட்டில் இருந்த மக்களுக்கும் இருந்த தொடர்புகளைப் பார்ப்போம்.


சக்‌ஷுஸ் நதிதீரத்துக்கு அப்பால் வட மேற்கில் இருந்த பகுதிக்கு, 1000 வருடங்களுக்கு முன் வரை நம் நாட்டு மக்கள் சென்று வந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் வோல்கா என்னும் நதி ஓடுகிறது. வோல்காவின் கிளை நதியான ஓகா நதியின் கிளை நதிக் கரையில் ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ அமைந்துள்ளது.

வோல்கா நதி காஸ்பியன் கடலில் விழுகிறது. இந்தப் படத்தில் இந்தியாவுக்கு வட மேற்கே உஸ்பெகிஸ்தான் பகுதியில் ஆரல் கடலில் கலக்கும் அமூதர்யா என்ப்படும் சக்‌ஷுஸ் நதியைக் காணலாம். 

இந்தப் படத்தின் இடப்பக்க ஓரத்தில் காணப்படுவது காஸ்பியன் கடல். மேல் பக்கம் அம்புக் குறி காட்டும் பகுதியில் வோல்கா நதி வளைந்து செல்கிறது. அந்த நதிக்கரையில் அமைந்துள்ள சமாரா என்னும் பகுதியில் உள்ள ஸ்தரயா மைன் என்னும் இடத்தில் எட்டு கரங்களுடன் கூடிய விஷ்ணு உருவச் சிலை சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் வோல்கா நதிப் பகுதியையும், மாஸ்கோ இருக்கும் இடத்தையும், சமாரா இருக்கும் இடத்தையும் காணலாம்.

படத்தில் சமாரா என்று குறிக்கப்பட்ட இடத்தில் விஷ்ணு சிலை கிடைத்தது.

இந்தச் சிலை கோவிலில் வழிபடப்பட்ட சிலையாகத் தெரிகிறது. ஸ்தரயா மைனா என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் ஒரு காலத்தில் மக்கள் வசித்த அடையாளங்களும், பழைய நாகரிகச் சின்னங்களும், அயுதங்கள், காசுகள், ஆபரணப் பொருட்கள் போன்றவையும் கிடைத்துள்ளன. இங்கு எங்காவது கோவில் இருந்த அடையாளம் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த விஷ்ணு சிலை கி-பி- 8 அலல்து 9- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. தற்சமயம் ஹிந்து மதத்துடன் எந்தத் தொடர்போ, சாயலோ இல்லாத இந்த இடத்தில் இவ்வளவு சமீப காலத்தில் விஷ்ணு ஆலயம் எழுப்பட்டிருப்பது குறித்து ஆச்சரியப்படுகிறார்கள். கிருஸ்துவமும், இஸ்லாமும் பரவி விட்டால், ஹிந்து மதமும், வேத வழிபாடும் எப்படி மறக்கடிக்கப்பட்டு விடும் என்பதற்கு இந்தச் சிலையும், ரஷ்யா முழுவதும் சாட்சி.

ரஷ்யா முழுவதும் என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் வாழும் பாரத நாட்டுக்கும், ராவணன் முதல் அன்றைக்கு இருந்த பல மக்களுக்கும், - நம் தமிழரையும் சேர்த்துதான் சொல்கிறேன் ரஷ்யாவுக்கும் ஒரு தொடர்பு இருந்தது. அந்தத் தொடர்பைத் தெரிந்து கொள்ளப் படிப்படியாக முன்னேறுவோம்.

பாரதத்தின் வட மேற்குப் பகுதி வழியாகச் சென்று, இமய மலைக்கு வடக்கில் உள்ள பகுதிகளுக்கு நம் மக்கள் சென்றிருக்கின்றனர். அதற்கு அவர்கள் சென்ற வழி, சிந்துவைத் தாண்டி, துஷாரம் எனப்படும் துருக்கியைத் தாண்டி, சக்‌ஷுஸு நதியைத் தாண்டி, ஸ்த்ரீ ராஜ்யம் என்னும் நகரத்தைக் கடந்து இன்றைய சைபீரியா இருக்கும் இடமான உத்தர-குரு என்னும் இடத்துக்கு அவர்கள் சென்றார்கள்.
வராஹமிஹிரர், தான் எழுதியுள்ள ப்ருஹத் சம்ஹிதையில், பாரத வர்ஷத்திலுள்ள நாடுகளை விவரித்துள்ளார். இவர் கொடுத்துள்ள விவரப்படியும் ஸ்த்ரீ ராஜ்ஜியம் இந்தப் பகுதியில் வருகிறது.

விஷ்ணு சிலை கிடைத்துள்ள ஸ்தரயா மைனா என்னும் இடம் முன்னாளில் ‘ஸ்த்ரீ ராஜ்யம் எனப்பட்டிருக்கிறது. (மேலே உள்ள படத்தில் சமாரா என்று இருக்கும் பகுதி ஸ்த்ரீ ராஜ்ஜியமாக இருக்கலாம்.). ஸ்தரயா என்பது ஸ்த்ரீ என்னும் சொல்லின் திரிபாகத் தெரிகிறது. இந்த இடம் பாரத நூல்களில் சொல்லப்பட்ட ஸ்த்ரீ ராஜ்ஜியம்தான் என்பதற்கு இந்த விஷ்ணு சிலை ஒரு முக்கிய ஆதாரம்.


இந்த சிலையின் காலம் கி-பி- 8 ஆம் நூற்றாண்டு அல்லது 9- ஆம் நூற்றாண்டு என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதே காலக்கட்டத்தில் காஷ்மீரை ஆண்ட மன்னனான லலிதாதித்யன் என்னும் அரசன் ஸ்த்ரீ ராஜ்யம் நகரை வென்று அங்கு ‘நரஹரி எனப்படும் விஷ்ணு கோவிலை நிறுவினான் என்று ராஜ தரங்கிணி என்னும் நூலில் கல்ஹணர் எழுதியுள்ளார்.

இந்த அரசன் காஷ்மீரை ஆண்ட கார்க்கோட வம்சத்தைச் சேர்ந்தவர்.
இவர் கி-பி 724 முதல் 760 வரை காஷ்மீரை ஆண்டார்.
காஷ்மீர் ஒரு ஹிந்து தேசம்தான். அதை சாரதா தேசம் என்றும் அழைத்தனர். பார்வதியின் பிறந்தகமான ஹிமயமலைப் பகுதியில் இருக்கவே இந்தப் பெயர். ஹிமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தை வழி பட்ட விவரங்கள் இந்த நூலில் உள்ளன. லதிதாதித்ய முக்தபீடன் என்னும் இந்த அரசன் காஷ்மீரை ஆண்ட காலம் காஷ்மீரின் பொற்காலமாக இருந்தது.

அவன் ஒரு முறை திக் விஜயம் செய்து பல நாடுகளையும் வென்றான்.
அவன் ஸ்த்ரீ ராஜ்ஜியததை வென்று உத்தர-குரு வரை சென்றான்.
அவன் ஸ்த்ரீ ராஜ்ஜியத்தில் ஸ்தாபித்த கோவிலின் நரஹரி சிலையே சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டின் காலக்கட்டமும் ஒன்று என்பது கவனிக்கப்படத்தக்கது. .

ஒரு ரஷ்ய பெண்மணி ஒருவர் வலைத்தளத்தில் வெளியிட்ட இந்தச் சிலையின் புகைப்படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 


இந்தச் சிலை கோவிலில் காணப்படும் சிலை என்றும், இது நீருக்குள் கிடைத்தது என்றும் அந்நாட்டுத் தொல் பொருள் ஆராய்ச்சிக் கழகம் கூறியுள்ளதாக இவர் எழுதியுள்ளார். பொதுவாக கோவிலுக்கு ஒரு ஆபத்து வந்த காலத்தில், தெய்வச் சிலைகளை நீருக்குள் மறைத்து வைப்பார்கள். அல்லது அதீத சக்தி வந்துவிட்டால் அப்படிபட்ட தெய்வச் சிலையை நீருக்குள் அமிழ்த்தி வைப்பார்கள். ரஷ்யாவின் இந்தப் பகுதியில் கிருஸ்துவ, முஸ்லீம் படையெடுப்புகள் நடந்திருக்கின்றன. அதன் காரணமாக கோவிலும் அழிந்து, ஹிந்து மதமும் இங்கு அழிந்து போயிருக்கலாம்.


ஸ்த்ரீ ராஜ்ஜியத்திற்கு லலிதாதித்தன் சென்றதைத் தொடர்ந்து அவன் பேரனான ஜெயபீடன் என்னும் அரசனும் ஸ்த்ரீ ராஜ்ஜியத்துக்குச் சென்று வென்று வந்திருக்கிறான். அவன் காலம் கி-பி 8- ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி.
இவனுக்குப் பிறகு இவன் மகன் லலிதலீடன் என்பவன் ஸ்த்ரீ ராஜ்ஜியத்திற்குச் சென்றிருக்கிறான்.
அதன் பிறகு 11 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரை ஆண்ட கலஸன் என்னும் அரசனும் ஸ்த்ரீ ராஜ்ஜியத்துக்குச் சென்றிருக்கிறான். 

காஷ்மீரிலிருந்து ஸ்த்ரீ ராஜ்ஜியம் செல்லும் வழித்தடத்தை இந்தப் படத்தில் காணலாம். 

.
படத்தில் உள்ள பெஷாவர், புஷ்கலாவதி என்று அழைக்கப்பட்டது. 
ராமனது தம்பியான பரதனது மகன் புஷ்கலன் ஆண்டதால் இந்தப் பெயர்.
அதன் கீழே உள்ள லாகூர் ராமனது மகன் லவன் ஆண்ட நகரமாகும். 
இந்தப் பகுதி வழியாக வட மேற்கு செல்லும் வழித்தடம் கைகேயினது பிரந்த ஊரான கேகயம் செல்லும் வழித்தடமாகும். விவரங்கள் அடுத்த பகுதியில்.
 நீல நிறத்தில் இடையில் காட்டப்பட்டுள்ள பகுதி சக்‌ஷுஸ் நதிப் பகுதியாகும். 
அதைத் தாண்டி வட மேற்கே சென்றால் ஸ்த்ரீ ராஜ்ஜியம்.


ஆக சமீபத்திய சரித்திரத்தில் 8- ஆம் நூற்றாண்டு தொடங்கி 11- ஆம் நூற்றாண்டு வரை நம் பாரத மக்கள் அந்தப் பகுதிக்குச் சென்று ஹிந்து மதப் பண்பாட்டை நிலை நிறுத்தியிருக்கின்றனர்.
அந்தப் பகுதியில் விலை மதிப்பற்ற ரத்தினங்களுக்கும், பலவித செல்வத்துக்கும் குறைவில்லை என்று கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தின் உரையாசிரியரான பட்டாஸ்மின் என்பவர் தெரிவிக்கிறார். மஹாபாரதத்திலும் இரண்டு இடங்களில் இந்த நகரின் பெயர் வருகிறது. இதை ஆண்ட ‘ஸ்ருங்கிஎன்னும் அரசன் கலிங்க நாட்டில் நடந்த சுயம்வரத்தில் கலந்து கொண்டான்.

ஸ்ருங்கி என்னும் பெயரிலும், ஸ்த்ரீ ராஜ்ஜியம் என்னும் பெயரிலுமே அந்த நாட்டின் நடப்பை நாம் ஊகிக்கலாம். அந்த நாட்டின் பெயரே ஸ்த்ரீ ராஜ்ஜியம். அங்கு பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகம். ஸ்ருங்காரத்துடன் கூடிய முக்கியத்துவமாக அது இருந்தது. வாத்ஸ்யாயனர் எழுதிய காம சூத்திரத்திலும் ஸ்த்ரீ ராஜ்ஜ்யம் பற்றியும் அதை ஒட்டி ‘கிராம நாரி விஷயம் என்று பெண்கள் சுதந்திரமாக எந்த ஆணுடனும் கூடி இருக்கும் வழக்கத்தைக் கூறியுள்ளார்.

ராஜ தரங்கிணியில், கல்ஹணரும் பெண்கள் விஷயத்தைப் பற்றிக் கூறியுள்ளார். லலிதாதித்ய அரசன், அந்தப் பெண்களிடம் காமத்தில் மூழ்கித் திளைக்கவில்லை என்கிறார். அவனது பேரனான ஜெயபீடனும் அந்த நாட்டு வழக்கப்படி பெண்களிடம் நடந்து கொள்ளவில்லை. அதனால் அவன் இந்திரியங்களை வென்றவன் இந்திரியக்ராமன் என்னும் பெயரும் பெற்றான் என்கிறார். ஆனால் அவன் மகனான லலிதபீடன் ஸ்த்ரீலோலனாக இருந்தான். அவனும் ஸ்த்ரீராஜ்ஜியத்திற்குச் சென்றான் என்பது தெரிகிறது.

இந்த விவரங்களை எல்லாம் சொல்லக் காரணம், இந்தப் பகுதியில் வழங்கும் பெயர்களும், இந்த வழக்கங்களும் யயாதிக்கும் முற்பட்ட, மிக மிக முந்தின காலக் கட்டத்தின் எச்சமாக விளங்குகிறது.

முதலில் பெயர்களைப் பார்ப்போம். வோல்கா நதியின் கரையில் இந்த நகரம் இருக்கிறது. வோல்கா நதியின் பழைய பெயர் ரஸா அல்லது ரோஸா என்பதாகும். இது சமஸ்க்ருதப் பெயராகும். பாரசீக மொழியில் ரனா என்றும், தாலமி அவர்களால் ‘ரா என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. ரஸம் என்னும் பொருளிலே இந்தப் பெயர்கள் இருந்திருக்கின்றன. இந்தப் பெயரிலிருந்தே அந்த நாட்டுக்கு ரஷ்யா என்ற பெயர் வந்தது அன்று அந்நாட்டவர் தெரிவிக்கின்றனர்.


இந்த நதியின் ஒரு கிளை ஓகா என்பது.
இதை அக்வா என்னும் லத்தீனச் சொல்லுடன் தொடர்புபடுத்திக் காட்டுகிறார்கள்.
நீர் என்று அதன் அர்த்தம்.
இதன் ஓசையில் வருவது ஆப என்னும் சமசஸ்க்ருதச் சொல்.
அந்தச் சொல்லுக்கும் நீர் என்பது அர்த்தம்.
ஆப-ஸரஸ், நீர் இருக்கும் நீர்நிலை என்னும் பொருளில் வரும் அப்ஸரஸ் என்னும் தேவ மகளிரைப் பற்றி புராணங்களில் பல குறிப்புகள் வருகின்றன.
இவர்கள் ஸ்ருங்காரத்துக்கும், மயக்குவதற்கும் பெயர் போனவர்கள்.
அது அவர்களது தர்மம். அவர்கள் சட்டத்தில் அது தவறில்லை.


விஸ்வாமித்திரரை மயக்கிய மேனகை ஒரு அப்ஸரஸ் நங்கை.
ஊர்வசி, திலோத்தமை போன்ற நங்கையர் பல ஆண்களுடன் தொடர்பு கொண்டும், அதனால் தவறு ஏதும் சொல்லப்படாமலும் இருந்திருக்கின்றனர். ஊர்வசியே மதுரையில் மாதவியாகப் பிறந்தாள் என்ற விவரங்களை முன்பு பார்த்தோம். அவள் வம்சதில் பிறந்தவள் கோவலன் மயங்கிய மாதவி ஆவாள்.


மாதவி என்னும் பெயர் அப்சரஸ் என்னும் இந்தத் தேவ கன்னிகைகளுடன் தொடர்பு கொண்டது.
யயாதியின் மகள் மாதவியைப் பற்றி முன் பகுதியில் பார்த்தோம்.
அவளது பிறப்பிலும் ஒரு தேவ மங்கை தொடர்பு இருக்கிறது.
யயாதி மிகவும் சிறந்த அரசனாக விளங்கினான். அவன் நாட்டில் மக்கள் ஆசை இல்லாதவர்களகவும், தவறு செய்யாதவர்களாகவும் இருந்தனர். இதனால் மக்களுக்கு மறு பிறவி இல்லாத நிலைமை வந்து விடும். அப்படி நேர்ந்தால் காலச் சக்கரம் மேற்கொண்டு செல்வது கடினமாகும் என்று நினைத்த இந்திரன் அவனை வழி பிறழச் செய்யும் நோக்கத்துடன் அசுர்விந்துமதி என்னும் தேவ நங்கையை அவனிடம் அனுப்பினான். அவளைக் கண்டு யயாதி மயங்கினான். ஆனால் அவன் அப்பொழுது மூப்பு அடைந்தவனாக இருந்தான். அவளை மணக்கும் நோக்கத்துடன் இளைமையைப் பெற பிரும்பி தன் மகன்களிடம் இளமையைத் தருமாறு கேட்கவே, புரு என்னும் கடைசி மகன் சம்மதித்தான். அதனால் அவனுக்குஅரசுரிமை தரவே அவன் மகன்களுக்குள் ஆரிய- தஸ்யு போர் எழுந்தது. நாடு அல்லோலகல்லோலப்பட்டது. இந்திரனது குறிக்கோள் நிறைவேறியது.


யயாதிக்கும் அந்த தேவ நங்கைக்கும் பிறந்த மாதவியும் அப்ஸரஸ் போன்ற தேவ மகளிர் போலவே பல ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் வாழ்க்கை வாழ்ந்தாள். இப்படிப்பட்ட இயல்பை உடைய மக்கள் உத்தர-குரு மக்கள் என்று மஹாபாரதம் உள்ளிட்ட பல நூல்களில் சொல்லப்படுகிறது.
அந்த உத்தர-குருவுக்கு மேற்கே உள்ள ஸ்த்ரீ ராஜ்ஜியத்தில் அப்படிப்பட்ட இயல்புள்ள பெண்கள் வாழ்ந்தார்கள்.


அந்தப் பெண்களிடம் வசப்பட்டு, அவர்களைத் தூக்கிச் செல்வது என்பது ஒரு வழக்கமாகவே இன்று வரை இருக்கிறது. அலா கச்சு என்று அழைக்கப்படும் பெண்ணைக் கடத்திக் கொண்டு மணம் செய்யும் வழக்கம் ஒரு குலப்பழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் அது ஒத்துக் கொள்ள முடியாதது என்று மாறி வருகிறார்கள்.


அந்த வழக்கம் இருக்கும் பகுதிகளை இந்தப் படத்தில் காணலாம்.
இந்த வழக்கம் இருக்கும் கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற இந்த இடங்கள் ஸ்த்ரீ ராஜ்ஜியத்தை ஒட்டி அமைந்தவை.அம்புக் குறி ஸ்த்ரீ ராஜ்ஜியத்தைக் காட்டுகிறது.


இந்தப் பழக்கம் உத்தர- குருவிலிருந்து வந்திருக்க வேண்டும். அங்குதான் ஆணும் பெண்ணும் விரும்பின வரையில் ஒன்றாக வாழ்வதும், ஜோடிகளை மாற்றிக் கொள்வதும் நடந்திருக்கிறது. ஒரே பெண் பல ஆண்களுடன் வாழ்ந்ததும் நடந்திருக்கிறது.


த்ரௌபதியைப் பாண்டவர்கள் ஐவரும் மணப்பதில் தப்பில்லை என்று தாயார் குந்தியிடம், யுதிஷ்டிரர் இந்த உத்தர குரு வழக்கத்தை மேற்கோளாகக் காட்டினார்.
குந்தி மகன்களைப் பெற்றதும் இந்த வழக்கத்தின் அடிப்படியில்தான். பாண்டவர்கள அனைவருமே அப்படிப் பிறந்தவர்களே.
அவர்களுக்குத் தந்தையாக இருந்தவர்கள் தேவர்கள்.
தேவர்கள் எங்கிருந்தோ வரவில்லை.
அவர்கள் இருப்பிடம் உத்தர குருவுக்கும் அப்பால் பூமியின் வட பாகம் ஆகும். இவை எல்லாம் கட்டுக்கதை அல்ல என்று சொல்லும் வண்ணம் பல ஆதாரங்கள் இருக்கின்றன.


இந்தத் தொடரிலேயே முன்பு இந்திர விழாவின் போது வ்ழிபடப்பட்ட நாளங்காடிப் பூதம் என்னும் தெய்வத்தைப் பற்றி அறிந்தோம். அது இந்திரனுக்கு உதவியாக இருந்தது என்பதையும் பார்த்தோம்.
வித்யாதரர் என்பவர்களும் வட சேடியில் வாழ்ந்த மக்கள் என்று பார்த்தோம். இந்திரன், யக்‌ஷன், கந்தர்வன், கின்னரர் போன்ற பெயரில் மக்கள் ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.
அவர்கள் இருப்பிடம் இமயமலையும் அதற்கு வடபுலமும் ஆகும்.
அவ்வாறான மக்கள் 40,000 வருடங்களுக்கு முன்பே அந்தப் பகுதியில் குடியேறினார்கள் என்று மரபணு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

அவர்கள் சென்றது நாம் வசிக்கும் பாரதம் வழியாகத்தான்.
ஒரு நாற்றாங்கால் போல பாரதம் இருந்திருக்கிறது.
இங்கு வளர்ந்த பயிர்கள் வேறு வேறு இடங்களில் நடப்பட்டு வளர்ந்ததைப் போல மக்கள் வடபுலங்களுக்குப் பிரிந்து போயிருக்கின்றனர்.
அங்கிருந்து மக்கள் வரவில்லை.

அங்கு சென்ற மக்கள் வாழ்க்கை முறை இடம், காலம், சீதோஷ்ணம் போன்றவற்றுக்கு ஏற்றாற்போல உருவாகி இருக்கிறது.
உதாரணமாக ஸ்த்ரீ ராஜ்ஜியம், உத்தர குரு போன்ற இடங்களில் ஏன் அப்படி சுதந்திர வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
அந்த இடங்கள் குளிர்ப் பிரதேசத்தில் வருபவை.
அதனால் புணர்ச்சி எண்ணங்கள் குறைவாக இருக்கும்.
அதனால் மக்கள் பெருக்கம் குறைவாக இருக்கும்.
அதன் காரணமாக சுதந்திரத்தைக் கடைபிடித்திருக்கலாம்.

மக்கள் பெயர்வு பாரதம் வழியாக சென்றது என்று காட்டும் மரபணு ஆராய்ச்சிகள் இன்னொரு விவரத்தையும் காட்டுகிறது.
பனி யுகம் ஆரம்பித்தபோது, இந்தப் பகுதிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின. இந்தப் பகுதிகளில் மக்கள் தொகை மிகவும் குறைந்து விட்டது.
பனி யுகம் முடிந்த பிறகு சிறிது சிறிதாக மக்கள் பெருக ஆரம்பித்தனர்.
அந்தக் காலக்கட்டத்தில் இந்திர லோகம் என்பது ஒரு முடிவுக்கு வந்து விட்டது.
அப்பொழுது எஞ்சி நின்றது உத்தர குரு மட்டுமே.

அந்த உத்தர குருவில் வாழ்ந்தவன் புரூரவஸ்.
அவன் இந்திரனின் வழித் தோன்றல் எனப்படுகிறான்.
அவனது மனைவி அப்ஸ்ரஸ் பெண்ணான ஊர்வசி (பல ஊர்வசிகள் இருந்திருக்க வேண்டும்)
அவர்களது பரம்பரையில் வந்தவன் யயாதி!

அந்த யயாதியின் மகள் வழித்தோன்றல் சிபி.
அவன் மரபில் வந்தவர்கள் சோழர்கள்.
இந்திர விழா கண்ட தமிழ் மன்னர்களுக்கு இப்படி இந்திர லோகத் தொடர்பு செல்கிறது!!

5 கருத்துகள்:

 1. திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே,

  மிகச் சிறப்பான ஆச்சர்யமூட்டும் பதிவு.

  ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியப் பகுதிக்குள் வர வில்லை.இங்கிருந்து தான் உலகின் பல பகுதிக்கும் சென்றனர் என்று அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.உங்கள் ஒவ்வொரு பதிவிலும் மிக அதிக தகவல்கள் நிறைந்துள்ளன.மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. ஊக்கத்துக்கு நன்றி திரு தனபால் அவர்களே.

  பதிலளிநீக்கு
 3. திரு தனபால் அவர்களே,
  குமரிக் கண்டம் பற்றி கட்டுரைகள் இட ஆரம்பித்து விட்டேன். படித்து விட்டீர்களா?

  பதிலளிநீக்கு
 4. Hi Jayasree,

  I happened to read your articles accidentally and found them very interesting and informative. I would like to congratulate all your efforts on this and wish you all success.

  In this article, you have mentioned Vishnu idols with 8 hands have been found in Russia. But the provided Vishnu idol has only 4 hands. So I have searched in Google and found many such idols related to that excavation. I found a Russian link which has scanned copy's of that excavation report. That has Vishnu idol sitting in cross leg position (which looks like has 8 hands in some angle and snake heads in some angle) and few other artifacts. I am not sure about the credibility of this resource. May be this link will be useful for you.

  http://staraya-mayna.ru/forum/viewtopic.php?id=27&p=13


  Regards,
  Aditi

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thanks Ms Aditi.
   The pic I had given was from a Russian site and given by a Russian who had written that it was from a Russian source. The discovery of the deity is true. There is no doubt it. But the exact figure that was unearthed must be brought to focus authentically. Only an informed Hindu can identify the figure for its name. Some Hindu living in Russia can look for the details personally. Or at the Govt level or from some Govt agencies involved in history and archeology, some one can be sent to Russia to know the exact details. Even Universities can send research students and faculty.

   நீக்கு