புதன், 1 டிசம்பர், 2010

12. மூவேந்தர்களும், 'ஆரிய' மூடப்பழக்கங்களும்!

சோழ மன்னர்கள் என்று மட்டுல்ல, பொதுவாகவே மூன்று குல மன்னர்களும் நீதியிலும், தர்மத்திலும், ஆரியம் என்று  சொல்லபப்டும் மனு நீதியிலிருந்து பிறழவில்லை. ஆரியர்கள் அளித்ததாகச் சொல்லப்படும்  வேத வேள்விகளில் பற்று உடையவர்களாகவே இருந்திருக்கின்றனர். ஆரியப் பழக்க வழக்கங்கள் என்று சொல்லப்படும் வழக்கங்கள்  தமிழ் நாட்டில் மட்டுமல்ல, பாரத தேசம் எங்குமே  இருந்திருக்கின்றது.

பாண்டிய மன்னன் ஒருவன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெரு வழுதி என்றே அழைக்கப்பட்டான். பல யாகங்களைச்க் செய்ததால் அவனுக்கு  இந்தப் பட்டப் பெயர்.
கோவிலில் முழங்கும் வேத ஒலியைக் கேட்டுத்தான் பாண்டிய நாட்டு மக்கள் காலையில் கண் விழிப்பார்கள் என்கிறது பரிபாடல்.
அதே பாடல் சோழன், சேரன் தலைநகரில்  உள்ள மக்கள் கோழி கூவும் ஒலிக்குத்தான் விழித்தெழுவார்கள் என்று நக்கல் எடுக்கிறது.
வேத கோஷம் முழங்கும் நாடு தங்கள் நாடு என்று சொல்லிக் கொள்வதில் அவர்களுக்குப் பெருமை.

சோழர்களும், சேரர்களும் சளைத்தவர்கள் இல்லை. செங்குட்டுவன் இமயத்திற்கே சென்று கல் எடுத்து வந்து கண்ணகியை வடித்து அவளுக்குக் கோவில் கட்டினான். சோழர்களுள் கரிகால் சோழன் இமயத்திற்குச் சென்று புலிக் கொடி நாட்டினவன். அவனது வேத நம்பிக்கைக்கு அளவில்லை.

திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் துவாபர யுகம் வரையிலான மன்னர்கள் பெயரைப்  பார்த்தோம். அதற்குப் பிறகு தொடரும் சோழ பரம்பரையில் கரிகாலன் முக்கியமானவன்.

கரிகாலன் என்னும் பெயர்க் காரணத்தை நாம் பல விதமாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், அரசாணையாக செப்பேடுகளில் பொறிக்கப்பட்ட விவரங்கள் உண்மையானதாக இருக்கும். அதன்படி இவன் பெயர் கலிகாலன் என்பதாகும். இது சிறப்புப் பெயர் என்றும்   தெரிகிறது. இவன் எதிரிகளின் யானைப் படைக்கும், கலியுகத்துக்குமே கலியாக, அதாவது யமனாக விளங்கினான். அதனால் கலிகாலன் என்று பெயர் பெற்றான் என்கிறது செப்பேடு. இந்த அரசன் காவிரிக்குக் குறுக்கே அணை கட்டியவன் என்றும் சொல்கிறது  செப்பேடு. அது கல்லணை என்று அறிவோம்.

கரிகாலனுக்கு இருக்கும் 'ஆரிய' நம்பிக்கைகள் ஏராளம். புறநானூறில் அவனைப் பற்றி ஒரு செய்யுள் வருகிறது (224). அதில் அவன் வேள்விச் சாலைகள் அமைத்து, பல வேள்விகள் செய்தவன் என்று வருகிறது. வேத மரபில் யாகங்களில் காணப்படும் பருந்து வடிவிலான வேள்வித் தூண்கள் அமைத்தான் என்றும் வருகிறது.
அந்தப் பாடலுக்கு உரை எழுதிய முன்னோர்கள், (இவர்கள் காலம் தெரியாது. டாக்.  உ.வே.சா அவர்கள் கண்டெடுத்த உரைப்படி சொல்கிறேன்) , ஆறு வேதாங்கங்களை அறிந்த சடங்கவிகள் அந்த வேள்விகளைச் செய்தனர் என்று எழுதி உள்ளார்கள். 
( ஷட் + அங்கம் = ஷடாங்கம், இதுவே சடாங்கம் என்று  மருவி, பின்னாளில் சடங்கு என்றானது. ஆறு பிரிவுகளான வேதாங்கங்கள் என்று பொருள். அவற்றின் வழியே நின்று செய்வது சடங்கு என்று ஆகியது.)


வேள்விகளிலும், தெய்வ நம்பிக்கைகளிலும் மூழ்கி இருந்தவன் கரிகாலன்.  எதையெல்லாம் ஆரியத் தாக்கம் என்றும், மூடத்தனம் என்றும் இன்றைய திராவிட விரும்பிகள் கூறுகிறார்களோ அவற்றை எல்லாம் கரிகாலன் செய்திருக்கிறான்.

அவன் இமயத்திற்குச் சென்று தன் ஆணையைப்  பொறிக்க விரும்பினான்.
அதற்காகத் தன் படை பலத்தை நம்பிக் கொண்டு போக வேண்டியதுதானே?
ஆனால் அவன் காஞ்சி நகரில் இருந்த சாத்தன் என்னும் தெய்வத்தை வேண்டினான். அந்த தெய்வம் அவனுக்குச்  செண்டு என்னும் ஆயுதம் கொடுத்தது. அந்த ஆயுதத்தால்  இமயத்தை அடித்து புலிச் சின்னம் பொறித்தான்.
காஞ்சி நகரில் அவன் பல திருப்பணிகளைச் செய்துள்ளான்,  பொன் வேய்ந்தான்  என்று செப்பேடு கூறுகிறது.
ஆகவே  காஞ்சிக்கும் கரிகாலனுக்கும் உள்ள தொடர்பு பற்றிப் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் கூறினது பொய் அல்ல என்று தெரிகிறது.
 
அது மட்டுமல்ல, போருக்குக் கிளம்பும் முன், நாள் பார்த்து நேரம் பார்த்துக் கிளம்பியிருக்கிறான்.  அவன் கிளம்பும் நாளில் வேறு துர் பலன்களும் காட்டின. அதனால் தன் வாள், குடை, முரசு போன்றவற்றை நல்ல நாள் பார்த்து வேற்றிடம் கொண்டு போய் வைத்து, பிறகு அங்கிருந்து கிளம்பினான்.

இந்த வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது. பரணி, கிருத்திகை உட்பட  12 நட்சத்திரங்கள் பயணத்துக்கு  ஆகாதவை. ஆனால் அந்த நட்சத்திரங்களில் பயணம் கிளம்ப வேண்டும் என்றால், அதற்கு முன்பாகவே, ஒரு நல்ல நாள் பார்த்து அன்றைக்குத் தன் உடமை (பயணத்துக்கான பெட்டி, செருப்பு போன்றவை) ஒன்றை வேறு ஒரு இடத்தில் அல்லது நண்பர் வீட்டில் கொண்டு போய் வைத்து விட வேண்டும். நல்ல நாளில் பயணம் கிளம்பி விட்டதாக  இதற்கு அர்த்தம். பிறகு கிளம்ப வேண்டிய நாளன்று அந்த வேற்றிடத்திற்குச் சென்று தன் பொருட்களை எடுத்துக் கொண்டு பயணம் ஆரம்பிக்க வேண்டும்.

இதை மூட நம்பிக்கை என்பார்கள் திராவிடவாதிகள்.
ஆனால் இதைத்தான்  கரிகால் சோழன் செய்தான். 
அவன் மட்டும் இப்படிச் செய்யவில்லை. 
கண்ணகிக்குக் கோவில் எழுப்ப, கல் கொண்டு வர இமயத்திற்குச் சென்றானே 
சேர மன்னன் செங்குட்டுவன் - 
அவனும் இப்படி நாள், கோள், ஓரை பார்த்து குடை, கொடி, முரசு போன்ற எல்லாவற்றையும் வேறிடத்தில்  வைத்து, பிறகு கிளம்பினான். 

இந்த நம்பிக்கைகள் எல்லாம் தொன்று  தொட்டு  இருந்திருக்கின்றது என்பதை, இதைப் பற்றி தொல்காப்பியர், சூத்திரம் எழுதி இருப்பதில் தெரிகிறது.

3500 வருடங்களுக்கு  முன் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்பது மாக்ஸ் முல்லரின் கருத்து.
கரிகாலன் வாழ்ந்த காலமோ சிலபப்திகாரத்துக்கும் முன்.
அதாவது 2000 வருடங்களுக்கு முன் கரிகாலன் வாழ்ந்திருக்கிறான்.
3500 வருடங்களுக்கு  முன் ஆரியன் வந்து - அதற்குப் பிறகு  1500 வருடங்களுக்குள் மனு வந்து, முசுகுந்தன் வந்து, சோழ வர்மன் வந்து, காவேரி பிறந்து, கரிகாலனும் தன் ஆரியத் தனத்தை வேதப் பற்றில் காட்டி விட்டான் என்று சொல்லலாமா? 

சிலப்பதிகாரத்தையே பாருங்கள்.
கண்ணகிக்காக உயிரை விடுவது போலப் பேசுகிறார்களே இந்தத் திராவிடவாதிகள், அந்தக் கண்ணகி தன் மார்பில் ஒன்றைத் திருகி எறிந்தாளாம்.
அது மட்டும் எப்படி சாத்தியமாகும்?
அப்படி நடந்தது என்று சொல்வது மூடத்தனம் என்று ஏன் இவர்கள் நினைக்கவில்லை?
அப்படி எறிந்த மார்பினால், மதுரையே   தீப்பிடித்துக் கொண்டதாம்.
இது காதுல பூ இல்லையா?
இதை எல்லாம் கண்டு கொள்ள மாட்டர்கள்.
ஆனால் மனம் போன போக்கில் ஆரிய நம்பிக்கை என்றும், மூட நம்பிக்கை என்றும் தமிழர் பழக்க  வழக்கங்களைச் சாடுவார்கள்.

சிலப்பதிகாரத்தில் இன்னும் வருகிறது. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் இறந்து விட்டான். அவனுக்குப் பின் அரசுக் கட்டில் ஏறியவன் வெற்றி வேல் செழியன். இவன் கொற்கையை ஆண்டு வந்தவன். நெடுஞ்செழியன் தம்பியாக இருக்க வேண்டும்.
இவன் என்ன செய்தான்?
பத்தினித் தெய்வத்தின் (கண்ணகியின்) கோபத்தால் மதுரை எரிந்து விடவே, அவளுக்கு சாந்தி யாகம்  செய்தான்.
ஒரு பொற்கொல்லன் காரணமாக கோவலன் இறக்கவே,  அந்த யாகத்தில் 1000 பொற்கொல்லர்களை, ஒரு பகல் பொழுதில்  உயிர்பலி கொடுத்து, பிறகே மதுரையின் அரசுக் கட்டிலில் ஏறினான் என்று சிலப்பதிகாரம்  கூறுகிறது.
இப்படி எல்லாம் செய்ய, எந்த ஆரியன் இவர்களைத் தூண்டினான்?

இப்படிப்பட்ட செயல்களுக்கு  அடிப்படையாக  நியாயம், நீதி, நல் வழி நடத்தல், தவறு செய்யாமை, தவறுக்குப் பிராயச்சித்தம், தவறுக்குத் தண்டனை, ஊழ்வினையில் நம்பிக்கை போன்ற பல காரணிகள் இருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக ஒரே வரியில் சொல்வதென்றால் தெய்வ நம்பிக்கை இருந்திருக்கிறது. இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

ஆனால் தெய்வத்தை நம்புகிறவன் முட்டாள் என்பது திராவிட நம்பிக்கை. 
தெய்வத்தை நம்பாதவன் முட்டாளாகவே இருக்கட்டும். 
ஆனால் தெய்வத்தை நம்பாதவன் அயோக்கியனாக அல்லவா இருப்பான்?
தெய்வத்தை நம்புகிறவனுக்கு பயம் இருக்கும்,
தவறு செய்ய பயம் இருக்கும்.
தான் தவறு செய்தால் தெய்வம் தண்டிக்கும் என்ற பயம் இருக்கும்.

போன பகுதியில் பார்த்தோமே, புகார் நகரின் பண்ட சாலையில் எல்லாப் பொருளும் போட்டது போட்ட படி கிடக்குமாம். ஏன்?
அவற்றைக் களவாட பயப்படுவார்களாம்.
திருடினவன் மாட்டிக் கொண்டால் தண்டனை கடுமையாக இருக்கும்.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்களே, ஏன்?
அரசனிடமிருந்து தப்பினாலும், தெய்வத்திடமிருந்து தப்ப முடியாது என்னும் எண்ணத்தால், தெய்வ நம்பிக்கை உடையவன் தவறு செய்ய பயப்படுவான்.

ஆனால் தெய்வ நம்பிக்கை இல்லாதவனுக்குத் தவறு செய்யப்  பயமில்லை.

தெய்வத்தை நம்புபவன் முட்டாள் என்று திராவிடவாதிகள் கூறுகிறார்கள்.
அப்படியே இருக்கட்டும். 
ஆனால் தெய்வத்தை நம்பாதவன் அயோக்கியன் ஆவான்.
ஒருவன் முட்டாளாக இருந்தால்  அவனுக்கு மட்டும்தான் கேடு. 
ஆனால் ஒருவன் அயோக்கியனாக இருந்தால் ஊருக்கே கேடு. 
அப்படிக்  கேடு விளைவிக்கும் திராவிடவாதிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இவர்கள் பார்வையில் பார்த்தால்  தமிழ் மன்னர்கள் அனைவருமே முட்டாள்கள்.
அப்படிப்பட்ட தமிழ் மனனர்கள் வளர்த்த தமிழை, தமிழ் நாட்டை  ஏன் இவர்கள் இன்னும் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்?
சிந்து சமவேளிக்கே சென்று தாங்கள் இழந்த நாட்டை மீட்கலாமே?

5 கருத்துகள்:

 1. மன்னிக்கவும் , பதில் தெளிவாக இல்லை என்று சொல்லவில்லை ..என் ஐயம் தீரவில்லை ...சோழவர்மன் முன்னோனான " முசுகுந்தன் " ..நாளங்காடிப் பூதத்தை (புகாரில் - பூம்புகாரில் ) தன் தமருக்கு, அதாவது தன்னைச் சேர்ந்தோருக்குத்
  தந்தான் , என்று சொல்கிறீர்கள் ..

  ஆனால் , " முசுகுந்தன் " ஆட்சி செய்தது ..வட பாரதத்தில் .அங்குதான் அவன் மக்களும் இருந்திருப்பார்கள் ..அப்படி இருக்கையில் ..ஏன் ..புகாரில் பூதத்தை அமைக்க வேண்டும் ..

  கி.வ .இராஜசேகர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமாகப் பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.

   உங்கள் கேள்வி புரிகிறது.அன்றைய பாரதம் என்பது இன்றைய இந்தியா, பாகிஸ்தான், அதற்கும் அப்பால் சில இடங்கள் என்று இருந்தது. இவை அனைத்தையும் தன் குடைக் கீழ்க் கொண்டு வந்தால் ஒரு அரசன் ‘சக்கரவர்த்தி’ என்னும் பட்டம் பெறுவான். முசுகுந்தன் அப்படிப் பட்டம் பெற்ற சக்கரவர்த்தி ஆவான். ராமனுக்குச் சில தலைமுறைகள் முன்னோனான ரகுவும், சக்கரவர்த்தி ஆனான். அவனைக் கொண்டுதான் ரகு வம்சம் என்றும், ராமனை ராகவன் என்றும் அழைத்தார்கள். முசுகுந்தன் பெற்ற வெற்றிகளை மஹாபாரதத்திலும், ரகு பெற்ற வெற்றியை காளி தாசர் எழுதிய ரகு வம்சத்திலும் படிக்கலாம்.

   நிற்க, இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவர்கள் காலத்தில் இன்றைக்கு இருப்பது போல இந்தியா முழுவதும் மக்கள் பெருக்கம் இல்லை. அவர்கள் சக்கரவர்த்தி என்னும் பட்டம் பெறுவதற்காக, திக் விஜயம் என்னும் பெயரில் பிரதக்ஷிணமாகச் சென்று, நாடுகளை வென்றார்கள். பிரதக்ஷிணம் என்றால், வலச்சுற்றாகக் கிழக்கில் ஆரம்பித்து, தென் திசைக்கு வருவார்கள். இந்த முறையில் போரிடச் செல்லும் வழக்கம் புற நானூறிலும் சொல்லப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களில், முதலாம் ராஜராஜனை எடுத்துக் கொண்டால், முதலில் தென் திசையில்தான் தன் வெற்றிகளை நாட்டினான். வலச்சுற்றில், அவன் நாட்டிலிருந்து தென் திசையில் ஆரம்பிக்க வேண்டும்.

   இந்த வித திக் விஜயத்தில், முசுகுந்தனும், அவனுக்குப் பின்னாளில் ரகுவும் தென்னிந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அப்பொழுது நிறைய அரசுகள் இங்கு இல்லை. ஆங்காங்கே மக்கள் குழுக்களாக இருந்திருக்கிறார்கள். தென் பகுதியின் கிழக்குக் கடற்கரையில் பூம்புகார் அன்றே இருந்திருக்கிறது. அதை முசுகுந்தன் தன் குடைக் கீழ் கொண்டு வந்திருக்கிறான். அங்கு வெற்றி பெற்ற பிறகு, மேற்குத் திசையில் வெற்றியை நாட்ட அவன் செல்ல வேண்டும். அதனால் தான் வென்ற இடங்களில் எல்லாம், தனது அதிகாரியை அங்கு நியமித்து விட்டுச் சென்றிரு்க்கிறான். அந்த வகையில், முசுகுந்தன் காலத்துத் தொடர்புடைய படைத் தலைவர்கள், மற்றும் அதிகாரிகள் பூம்புகாரில் தொடர்ந்திருக்கிறார்கள். நாளங்காடி பூதத்தை அவர்களிடம் தந்திருக்கிறான். இது அடியார்க்கு நல்லார் உரையில் சொல்லப்பட்டுள்ளது.

   முசுகுந்தனது தலை்நகரம் வட இந்தியாவில் இருந்தததால், தென்னிந்திய முனை அவனது கண்காணிப்புக்கு வெகு தொலைவில் வருகிறது. அவன் காலத்தில் வட இந்தியாவில் இருந்த அளவு அரசு அமைப்புகள், தென் இந்தியாவில் இல்லை. அதனால் தென் பகுதியில் அவன் கவனம் குறைவாகத்தான் இருந்திருக்கும். அதை ஈடு செய்ய, அந்தக் காவல் பூதத்தைத் தென்பகுதியில் நிறுவ விரும்பி, புகார் நகரில் நிறுவி இருக்க வேண்டும். இதற்குப் பல காலம் கழித்துதான், சோழ வர்மன் சோழ வம்சத்தை நிறுவிகிறான். அதுவும், முசுகுந்தன் வழியில் அமைந்த் தென் பகுதி அரசை, நேரிடைக் கவனிப்பில் கொண்டு் வர, இந்தச் சோழ வர்மன் வந்திருக்கக் கூடும்.

   நீக்கு
 2. நன்றி நேரம் அமையும் போதெல்லாம் படிக்கிறேன் ..

  பதிலளிநீக்கு
 3. கஜேந்திர மோக்ஷம் புராணக் கதையில் யானையாகப் பிறந்தது ஒரு பாண்டிய மன்னனே! இது கிருத யுகத்தில் நடந்தது- அதாவது இராமர் அவதரித்த திரேதா யுகத்திற்கும் முன்பு.ஆகையால் தெற்கில் சில இராச்சியங்கள் அப்போதே இருந்தன.
  வால்மீகி இராமாயணத்தில், வாலியின் கிஷ்கிந்தை இன்றைய கர்நாடகாவில் உள்ளது. வாலியை அம்பினால் அடித்தவுடன், வாலி இராமனைப் பார்த்து தன்னை அடித்தது எப்படி நியாயமாகும் என்று கேட்க்கிறான்.அப்போது, இராமன் தங்களது இராச்சியம் பாரதம் முழுவதும் உள்ளதால்,அநியாயம் எங்கு நடந்தாலும் அதி தண்டிக்கும் உரிமை அந்த அரசர்களுக்கு உண்டு என்கிறான்.ஆகையால்,தசரத சக்கரவர்த்திக்கு பாரதம் முழுமையும் அதிகாரம் இருந்தது.அதாவது, ரகு வம்ச அரசர்கள் கீழ் பாரதம் முழுமையும் இருந்தது.
  ஔரங்கசீப்பும் சுல்தான்களை நியமித்து தக்ஷிண பிரதேசத்தை ஆண்டான்.
  சாரநாதன்.

  பதிலளிநீக்கு
 4. //ஒருவன் முட்டாளாக இருந்தால் அவனுக்கு மட்டும்தான் கேடு.
  ஆனால் ஒருவன் அயோக்கியனாக இருந்தால் ஊருக்கே கேடு.
  அப்படிக் கேடு விளைவிக்கும் திராவிடவாதிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.//
  சரியாகச் சொன்னீர்கள் விடுதலைப்புலிகளுக்கு வக்காளத்து வாங்குவது
  எதைத்செய்தாலும் அதற்கு குற்றம் காண்பது கொலை குற்றவாளிகளுக் கு தண்டணை கொடுக்கக்கூடாதென்பது

  பதிலளிநீக்கு