புதன், 1 பிப்ரவரி, 2012

97. யூத மதத்தின் பாரதப் பிண்ணனி.


தலையில் ஒற்றைக் கொம்பைக் கொண்டிருந்த யூனிகானை, எகிப்து நாட்டிலிருந்து கடவுள் கொண்டு வந்தார் என்று பைபிள் கூறுகிறது.

 

  • "God brought them out of Egypt; he hath as it were the strength of an unicorn."—Numbers 23:22
  • "God brought him forth out of Egypt; he hath as it were the strength of an unicorn."—Numbers 24:8

எகிப்திலிருந்து வந்ததென்று சொல்லப்படவே, இந்த மிருகத்தை இந்தியாவுடன் எப்படி தொடர்புபடுத்தலாம் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை தேடினால், பண்டைய பாரத நாட்டிலிருந்து பல கருத்துக்கள் கடன் வாங்கப்பட்டு எகிப்து வரை சென்றிருந்த விவரங்கள் தெரிய வரும். அவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.

யூத மொழியில் முதலில் எழுதப்பட்ட பைபிளில் (OLD TESTAMENT) யூனிகானை, ரீம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது எந்த மிருகம் என்று ஒருவருக்கும் தெரியாது. ரீம் என்ற சொல்லின் பொருளும் இன்று வரை ஒருவருக்கும் தெரியாது. ஆனால் இது ஒற்றைக் கொம்புடையது என்றும், வலிமை மிக்கது என்றும் எழுதப்பட்டுள்ளது. ஒற்றைக் கொம்புடைய மிருகம் எதையும் ஐரோப்பாவில் அவர்கள் கண்டதில்லை. ரீம் என்னும் இந்தப் பெயரை வழிவழியாக மக்கள் சொல்லி வந்திருக்கவே, அப்படியே அதைத் தங்கள் நூலில் கையாண்டிருக்கின்றனர் என்று தெரிகிறது.


கண்ணால் கண்டிராத, ஒற்றைக் கொம்பு மிருகத்தை ஏற்றுக் கொள்ள முடியாத ஆராய்ச்சியாளர்கள், இந்த ஒற்றைக் கொம்பு விவகாரத்துக்கு ஒரு விளக்கம் அளிக்கிறார்கள். ரீம் என்னும் மிருகம் உண்மையில் இரண்டு கொம்புகள் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும், பக்கவாட்டில் பார்க்கும்போது, இரண்டு கொம்புகளும் ஒரே இணையாக அமைந்து, ஒரு கொம்பு மட்டுமே இருப்பதாகத் தோற்றமளிக்கும். அதைத் தவறாகக் கவனித்து, ஒற்றைக் கொம்பு மிருகம் என்று யூனிகான் என்னும் மிருகத்தைக் கற்பனையில் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது இவர்களது கருத்து. இதை நிரூபிக்க ஒரு பழைய சிற்பத்தைக் காட்டுகிறார்கள்.


பொ.மு. 9 ஆம் நூற்றாண்டில் மெசபடோமியாவில் உள்ள அசிரியா நாட்டை ஆண்ட  2 ஆம் அசுர்நாசிர்பால் என்னும் அரசனைச் சித்தரிக்கும் சிற்பம் இது. இந்த இடம் இன்றைய ஈராக் நாட்டில் இருக்கிறது. அதாவது பண்டைய பாரதத்தை ஒட்டி அதன் மேற்கெல்லையில் இந்த இடம் இருந்தது. ஆரியதஸ்யு போராட்டம் என்று சொல்லப்பட்ட யாயதியின் ஐந்து மகன்கள் (பஞ்ச மானவர்கள்) போட்ட சண்டையின் போதே மிலேச்சர்கள் என இரண்டு மகன்கள் தங்கள் பரிவாரங்களுடன் வெளியேற்றப்பட்டு, அவர்கள் சென்றடைந்த இடம் இது என்பதை நாம் நினைவில் கொண்டு இதை ஆராய வேண்டும்.