வெள்ளி, 7 அக்டோபர், 2011

77. தமிழும், சமஸ்க்ருதமும் இரு கண்கள் -2மொழி ஆராய்ச்சி என்பது 17 ஆம் நூற்றாண்டு முதல்
விறு விறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.
அவரவர் தங்கள் மொழியை ஆராய்ச்சி செய்வார்கள்.
ஆனால் ஐரோப்பியர்கள் பிற மொழிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தனர்.
ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பல் வேறு மொழிகள் வழங்கி வரவே
இந்த ஒப்பீட்டு ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெறலாயின.
அந்த ஆராய்ச்சிகள் மூலம் ஐரோப்பிய மொழிகளுக்குத்
தாய் மொழியாக விளங்குவது கிரேக்க லத்தீன் மொழிகளே
என்ற முடிவுக்கு வந்தார்கள்.
அந்த நேரத்தில்தான் இந்தியாவில்
ஆங்கிலேயர்கள் கால் பதிக்க ஆரம்பித்தனர்.


நிறத்தாலும், வளத்தாலும், பலத்தாலும்,
பாரம்பரியத்தாலும், மொழியாலும்
தாங்களே உயர்ந்தவர்கள் என்று ஆங்கிலேயர்கள்
உள்ளிட்ட ஐரோப்பியர்கள் நினைத்துக் கொண்டிருந்த காலம் அது.
இந்தியாவில் நுழைந்ததும் அவர்களை ஈர்த்த முதல் நூல்
காளிதாசர் எழுதிய சாகுந்தலம் ஆகும்
தைப் பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்தார்கள்.
அந்த நூலின் கவிச் சுவையும், காதல் கதையும்
மொழி பெயர்ப்பாளர்களது கவனத்தை இந்தியாவின் பக்கம் இழுத்தது.
அப்பொழுது அவர்கள் காளிதாசர் மீது
கவனத்தைச் செலுத்தியிருக்கலாம்.
அவர் எழுதிய ரகு வம்சத்தை ஆராய்ந்திருக்கலாம்,
நமது துரதிஷ்டம் அவர்கள் அதைச் செய்யவில்லை


ரகு வம்சத்தைப் படித்திருந்தாலும்,
அது அவர்களுக்கு ஒப்புக் கொள்ளூம்படி இருந்திருக்காது.
ஏனெனில் அதில் ராமனது நீண்ட பரம்பரை சொல்லப்பட்டுள்ளது.
அந்தப் பரம்பரை செல்லும் கால அளவைக் கணக்கெடுத்தால்,
இவர்களது மத நூலான பைபிள் சொல்லும்
காலக்கட்டத்துக்கு முன்னால் செல்கிறது

பைபிள் சொல்லும் கணக்குப்படி,
கி-மு-4004 ஆ ஆண்டு,
அக்டோபர் மாதம்
23 ஆம் தேதி காலை 9 மணியளவில்தான்
இந்த உலகம் தோன்றியது.
அதனால் ராமன் கதையும், கிருஷ்ணன் கதையும்,
புராணங்கள் சொல்லும் அரசர் பரம்பரைகளும்,
பைபிளை நம்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு
ஏற்புடையதாக இல்லை.
அவற்றைச் சரித்திரமாக அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை


ஆனால் அவர்களுக்குத்தான் ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கிறதே, பார்த்தார்கள்,
இந்தியாவில் யாரைக் கேட்டாலும்
வேதம்தான் முதன்மையானது,
வேதம்தான் உயர்வானது என்று சொல்லி வரவே,
வேதம்தான் முதல் நூலாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
ரிக், யஜூர், சாம, அதர்வண என்று சொல்லப்படவே,
ரிக் வேதமே முதலில் தோன்றியதாக இருக்க வேண்டும்
என்று அதை ஆராய்ந்தார்கள். மொழி பெயர்த்தார்கள்.
அதில் அவர்கள்கண்டு பிடித்த
நிறக் கொள்கையும்,
ஆரிய- தஸ்யு போராட்டமும் எப்படிப்படவை
என்று நாம் ஏற்கெனெவே பார்த்தோம்.


அத்துடன் நில்லாமல், ஐரோப்பிய மொழிகளுடன்,
சமஸ்க்ருதம், மற்றும் பல இந்திய மொழிகளை
ஒப்பீடு செய்ய ஆரம்பித்தார்கள்.
சமஸ்க்ருதத்துக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும்
ஒப்புமை இருக்கின்றன என்று கண்டார்கள்.
ஐரோப்பாவிலிருந்து வந்த ஆரியர்கள்
இந்தியாவுக்குக் கொடுத்த மொழியே சமஸ்க்ருதம் என்று சொன்னார்கள்.
வட இந்திய மொழிகளுக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும்
ஒலி அமைப்பில் ஒப்புமை இருந்தன.
அது எப்படி சாத்தியமாகும் என்பதற்கு
மஹாபாரதம் உள்ளிட்ட நூல்களில் உள்ள ஆதாரங்களை
அவர்கள் பொருட்படுத்தவில்லை.


ஆரிய- தஸ்யு போராட்டம் என்று சொன்னார்களே,
அது நடந்து முடிந்தவுடன்
இரண்டு பிரிவினர், பாரதத்தை  விட்டு வெளியேறினார்கள் (பகுதி 30).

அவர்களில் ஒரு பகுதி இன்றைய ஆஃப்கான்ஸ்தான்,
அதற்கு வடக்கு, வட மேற்கு என்று பரவினார்கள்.
மற்றொரு பகுதியினர் சிந்து நதிக்கு மேற்கே
அரேபியா, மத்தியத் தரைக் கடல் நாடுகள், எகிப்து என்று பரவினார்கள்
என்றும் கண்டோம். 

வேத மதத்தைப் பின்பற்றாததால் இவர்கள் மிலேச்சர் என்ப்பட்டனர்.
வேத வழிமுறைகளை விட்டாலும், இவர்கள் பேசின மொழி
முதலில் அந்த அளவுக்கு மாறியிருக்காது.
ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்களில் மாறி விடும்.
பாரதத்தில் இருந்த்து போல மொழியையும்,
அந்த மொழி சார்ந்த வாழ்க்கை முறையையும்
காப்பாற்றி வரவில்லை என்றால்,
பல தலை முறைகளுக்குப் பிறகு
அவர்கள் பேசும் மொழி.,
மூலமான தாய் மொழியிலிருந்து மாறுபட்டு விடும்.


இது திராவிடன் என்பதைப் பற்றி மனு ஸ்ம்ருதி சொன்னதுக்கொப்பானது..
ஒருவன் க்ஷத்திரியம் என்னும் வாழ்க்கை முறையை விட்டுவிட்டால்,
அவனைத் தொடர்ந்து வந்த எதிர்காலத் தலைமுறை மக்களும்
க்ஷத்திரிய வழக்கத்தையும், வாழ்க்கையும் விட்டுவிட்டால்,
7 ஆவது தலை முறை வரும் போது
அப்போது இருப்பவனது வாழ்க்கை முறைக்கும்,
முதல் தலைமுறையில் இருந்தவனது வாழ்க்கை முறைக்கும்
சம்பந்தமே இருக்காது,
முதல் தலைமுறை மனிதன் க்ஷத்திரியன் என்றால்,
அவனுக்கும், அவனது  7 ஆவது தலைமுறை மனிதனுக்கும்
க்ஷத்திரியத் தொடர்பே இருக்காது.
7 ஆவது தலைமுறையில் வருபவன்
முழுவதும் க்ஷத்திரியத்தை விட்டவனாவான்.
அவன் திராவிடன் எனப்பட்டான் என்கிறார் மனு. 


அதுபோல பாரதத்திலிருந்து ஐரோப்பாவுக்கும், அரேபியாவுக்கும்
மிலேச்சர்கள் என்ற அடையாளத்துடன் மக்கள் சென்றுள்ளனர்.
பாரத்திலிருந்த வாழ்க்கை முறையை அவர்கள் பின்பற்றவில்லை.
அதனால் காலப்போக்கில் அவர்கள்
வழக்கங்களும், மொழியும் மாறுதலடைந்துதான் தீரும்.
பல்லாயிரம் வருடங்களுக்குப் பிறகு,
சில சொற்களது சாயல் மட்டுமே மிஞ்சி நிற்கும்.
அதைத்தான் மொழி ஒப்பீட்டு ஆராய்ச்சியாளர்கள்
’கண்டு பிடித்து’ வருகிறார்கள். 

அவர்கள் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குப் போனவர்கள்
என்று சொல்லும் இந்திய நூல்களைப் படிக்காததால்
அல்லது ஒப்புக் கொள்ள முடியாததால்,
ஐரோப்பாவிலிருந்து இங்கு வந்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருகிறார்கள்.


இந்தப் பின்னணியில், வேறு சில ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.
பொதுவாகவே பெயர்ச் சொற்களைக் கொண்டுதான்
இந்த ஆராய்ச்சி நடக்கிறது.
ஐரோப்பாவிலிருந்து வந்த ‘ஆரியர்கள்
இந்தியாவுக்குக் கொண்டு வந்த செடி, மரம், மிருகம்
எவையெவையாக இருக்கும் என்கிற ரீதியில் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
ஆனால் ஒன்று கவனிக்க வேண்டும்,
ஐரோப்பாவின் தட்ப வெப்ப நிலை வேறு,
பெரும்பாலான இந்தியாவின் தட்ப வெப்ப நிலை வேறு.
அங்கு வளரும் இன மரங்களும், விலங்குகளும்,
இந்தியாவில் வளர்ந்து பெருகுவது எளிதல்ல. 


ஆனால் ஒப்புமை கொண்ட பல பெயர்களுக்கும்
ஒரு பொதுத்தன்மை இருக்கிறது.


இவை எல்லாம் விவசாயம், மற்றும்
வளர்ப்பு மிருகங்கள் சம்பந்தப்பட்டவை என்பதாகும்.
தானாகவே ஓரிடத்தில் காணப்படும் மரமோ, விலங்கோ,
அந்த இடத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றபடி அமையும்.
ஆனால் மனித முயற்ச்சியால் செய்யப்படும் விவசாயத்தில்,
சில குறிப்பிட்ட இன தாவரங்களை வளர்க்கலாம்,
அவற்றைச் சார்ந்துள்ள சில மிருகங்கள் இருக்கலாம்.
அல்லது அப்படி சார்ந்துள்ள சில மிருகங்களையும் வளர்க்கலாம்.
அவற்றை வளர்க்கும் மனிதர்கள் இடம் பெயரும் போது,
இந்த விவசாயமும், வளர்ப்பு மிருகங்களும் இடம் பெயரும்.
மொழி ஆராய்ச்சியில் ஒப்புமை காணப்படும் 
இந்திய- ஐரோப்பியச் சொற்கள்,
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிச் சொற்களை
இந்த முறையில் ஆராய்ந்தார்கள்.

உலகின் பல் வேறு இடங்களிலும் இன்று பரவியுள்ள பயிர்கள்,
பயிர்த்தொழில் சார்ந்த விலங்குகள் ஆகியவற்றின்
மரபணுக்களை ஆராய்ந்து
இவற்றுக்கெல்லாம் தாய் இனம் எங்கிருந்தது
என்று கண்டு பிடிக்க முடியும்.
பல்வேறு மொழிகளிலும் பெயர் ஒப்புமை உடைய இனங்களை
இந்த அடிப்படையில் ஆராய்ந்துள்ளார்கள். 
இந்த ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம்
இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியப் பகுதிகளில்தான்
ஆரம்பத்தைக் காட்டுகின்றன.


இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால்,
தெற்காசியா, தென்கிழக்காசியா என்றும் சொல்லலாம்.
ஆயினும், இந்த ஆரம்பங்கள் இன்றைய இந்தியாவில் இருப்பதால்,
நில நீட்சியாக, தென்னன் தேசமாக,
அதற்கும் முன்னால் சாகத்தீவாக இருந்த நிலப்பகுதிகள்
அதாவது இந்தியப் பெருங்கடலில் நிலப்பகுதிகள்
இருந்திருக்க்கூடிய சாத்தியங்களை
இந்த ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. 


இதனுடன் பெயர் ஆராய்ச்சியை இணைத்து ஆராய்ந்து
இந்தப் பயிர்கள், விலங்குகள் ஆகியவற்றுக்கான பெயர்களில்
சமஸ்க்ருதத்துக்கும், தென்னிந்திய மொழிகளுக்கும்
ஒற்றுமை இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.


அதாவது ஒரே இடத்தில்,
ஒரே மூலத்திலிருந்து 
உண்டான சொற்களாக, அந்தப் பெயர்ச் சொற்கள்
சமஸ்க்ருதம், தமிழ் முதலான இந்திய மொழிகளில் காணப்படுகின்றன.


இனி ஆராய்ச்சி முடிவுகளைப் பார்ப்போம்.
·        
 • இந்தியாவில்தான் முதன்முதலில் பசுவை வளர்த்திருக்கிறார்கள். இந்தியப் பசுக்களுக்கும், கிழக்கு ஆப்பிரிக்கா, ஈரான், ஈராக், மத்திய ஐரோப்பா ஆகிய இடங்களில் காணப்படும் பசுக்களுக்கும், மரபணு ஒற்றுமை இருக்கிறது. ஆனால் இந்தியப் பசுக்கள்தான் முதலில் உண்டானவை.

 • ·         இந்தியாவிலிருந்து ஒரு பிரிவு ஆப்பிரிக்காவுக்கும், இன்னொரு பிரிவு ஈரான், ஈராக், மத்திய ஐரோப்பா போன்ற இடங்களுக்கும் சென்றிருக்கின்றன. இவை வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்திருக்கின்றன. பசுக்கள் தானாகப் போக முடியாது. அவை மனிதனை அண்டி வாழ்பவை. மேலும் விவசாயப் பகுதிகளில்தான் பசுக்கள் இருக்கும். அவற்றுக்கு மேய்ச்சல் நிலம் தேவை. பயிர்த் தொழிலில் மாடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. எங்கு மாடு இருக்கிறதோ, அங்கு பசுக்கள் இருந்தாக வேண்டும். இதனால் விவசாயத்துக்கும், பசு வளர்ப்புக்கும் தொடர்பு உண்டு. எனவே மக்கள் இடப்பெயர்வு மூலமாகப் பசுக்களும் இடம் பெயர்ந்திருக்கின்றன. இந்த இடப் பெயர்வுகள் இந்தியாவிலிருந்துதான் வெளியே சென்றிருக்கின்றனவே தவிர, வெளியிலிருந்து இந்தியாவுக்கு வரவில்லை.


·          
 • இனி இவை சென்ற காலத்தைப் பார்ப்போம். இந்தியாவின் வழியாக, கிழக்கு ஆப்பிரிக்கா, அங்கிருந்து மேற்கு ஆப்பிரிக்கா என்று இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் பசுக்கள் சென்றிருக்கின்றன. இந்த விவரம் தென்னன் கண்ட 3 ஆம் ஊழிக் காலத்துடன் ஒத்துப் போவதைக் கவனிக்கவும். (பகுதி 45) இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன், பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கமும், குமரிக் கோடும் கடலுக்குள் முழுகின. அதே காலக் கட்டத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பசுக்கள் நுழைந்திருக்கின்றன. அப்பொழுது தென்னவன் என்னும் பாண்டியனுடன், “தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய நல்லினத்து ஆயர்” மக்கள் கடல் ஊழியிலிருந்து தப்பி, தற்போதைய தென்னிந்தியப் பகுதிகளுக்கு வந்திருக்கின்றனர் என்று கலித்தொகை 104 கூறுவதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும் (பகுதி 44 & 60). அப்படி வந்த மக்கள் கையை வீசிக் கொண்டு வந்திருக்க மாட்டார்கள். முடிந்தவரை மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு, தாங்கள் வளர்க்கும் பசுக்களையும் அழைத்துக் கொண்டு வந்திருப்பார்கள். பசுக்களே ஆயர்களுக்கு வாழ்வாதாரம். கடல் கொண்டதாகச் சொல்லப்படும் பகுதியோ, மலை முகடுகள் இருக்கும் பகுதிகள். இன்றைக்கு இருக்கும் லக்ஷத்தீவுகள் தொடங்கி, மாலத்தீவுகள் வரை மலையின் உச்சிப் பாகங்களே கடலுக்கு மேலே இருக்கின்றன. அவை கிழக்கு ஆப்பிரிக்காவின் கிழக்கில் உள்ள மடகாஸ்கர் தீவு வரை செல்கின்றன. ஊழிக்கு முன்னால், இந்த்த் தொடரின் பல பகுதிகள் முழுகாமல், பரந்து விரிந்திருக்க வேண்டும். 


 • ·         முன்பே மடகாஸ்கர் தீவுக்கருகே, இன்றைய தமிழக நிலப்பகுதி அளவில் நிலப்பரப்பு கடல் மட்டத்துக்கு மேல் இருந்த்து என்பதைப் பகுதி 46 இல் கண்டோம். மாஸ்கரேன் பீடபூமி என்றழைக்கப்படும் இந்தப் பகுதி 6000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நிலப்பரப்பாக இருந்தது என்பதைக் கடல் மட்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சிறிது, சிறிதாக முழுகிக் கொண்டு வந்த இந்தப் பகுதி, 3500 ஆண்டுகளுக்கு முன் இருந்த இடம் தெரியாமல் போயிருக்க வேண்டும். இந்தப் பகுதி வரை ஆங்காங்கே இருந்த மக்களில், இந்திய நிலப்பரப்புக்கு அருகே இருந்தவர்கள், பாண்டிய மன்ன்னுடன் தமிழகத்தில் கரையேறி, முத்தூர் கூற்றத்தில் குடியமர்த்தப்பட்டனர். (பகுதி 60 ) மாஸ்கரேன் பீடபூமிப் பகுதியில் இருந்தவர்களுக்கு ஆப்பிரிக்கா அருகாமையில் இருக்கவே, அங்கு குடியேறியிருப்பார்கள்.


 • கீழக்காணும் படத்தில் மாஸ்கரேன் பகுதியில் உள்ள சைஷல்ஸ் (Seychelles) எனப்படும் தீவுக் கூட்டத்தில் ஒன்றைக் காணலாம், இதைச் சுற்றியுள்ள பரப்பு நீருக்கடியில் தெரிகிறது. இது ஒரு சமயம் கடல் மட்டத்துக்கு மேல் இருந்தது. 
 •  

 • ·         இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்குப் பசுக்கள் சென்றன  என்று மரபணு ஆராய்ச்சிகள் சொல்லவே, அந்தப் பசுக்களுடன் சென்ற மக்களும் ஆயர்களாக இருக்க வேண்டும். ஆப்பிரிக்காவில் நுழைந்து, மேற்காப்பிரிக்கா வரை அவர்கள் சென்றுள்ளனர். (மரபணு ஆராய்ச்சி செய்த இனப்) பசுக்களை வளர்ப்பதைப் பாரம்பரியத் தொழிலாக்க் கொண்டுள்ள இன்றைய ஆப்பிரிக்க மக்கள், மற்றும், முத்தூர்க் கூற்றம் போன்ற பகுதிகளில் பசு வளர்ப்பதைப் பரம்பரையாகச் செய்து வரும் மக்கள் ஆகியோரது மரபணுவைப் பரிசோதித்துப் பார்த்தால், இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கலாம்.

 • ·         இந்த இடத்தில் மதுரைக்கருகே வசிக்கும் பிறமலைக் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்களது மரபணுக்கள் 70,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தவர்களுடன் தொடர்பைக் காட்டுகிறது என்னும் ஆராய்ச்சி முடிவையும் பொருத்திப் பார்க்கலாம். இன்றைய தென்னிந்தியப் பகுதிக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே எளிதில் செல்லும் விதமாக நிலத்தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. கள்ளர்கள் ஆநிரை காப்பதில் ஈடுபட்டவர்கள் என்பதும் பொருத்தமாக இருக்கிறது. கள்ளர்கள் பற்றிய பிற விவரங்களை, 7 ஆம் வகையான பொருநர் என்பதை ஆராயும் போது அறியலாம்.


 • ·         தென் கிழக்கு ஐரோப்பா தொடங்கி, இத்தாலி வரை காணப்படும் பசுக்களது மரபணு தொடர்பு, இந்தியாவில் ஆரம்பிக்கிறது. இது பழமையான தொடர்பு. இன்றைக்கு 25,000 ஆண்டுகள் முதல் 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பசுக்கள் இந்தியாவிலிருந்து சென்றிருக்க வேண்டும் என்பதே இந்த ஆராய்சிகள் காட்டும் விவரம். இந்தக் காலக் கட்டம் பனியுகத்துக்கு முன் செல்கிறது.

 • ·         பனியுகத்தின் உச்சக்கட்டம் இன்றைக்கு 17,000 ஆண்டுகள் முதல் 20,000 – 25,000 ஆண்டுகள் வரை இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் உலகின் வடபாகம் பனியால் மூடியிருந்தது. அதற்கு முந்தின காலக் கட்டத்தில் இந்திர லோகம் அல்லது தேவ லோகம் எனப்பட்ட சைபீரியப் பகுதிகள், போக பூமி எனப்பட்ட உத்தர குரு முதலியவை மக்கள் வசிக்கத்தக்க இடங்களாக இருந்தன. (மக்களுடைய பரபணு ஆராய்ச்சிகளைப் பற்றி ஆராயும் போது மேலும் விவரங்களைக் காண்போம்.) 25,000 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவிலிருந்து பசுக்கள் ஐரோப்பாவுக்குச் சென்றன என்றால், அதற்கும் முன் இந்தியாவில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதுவும் பசு, கன்றுகளுடன் வாழ்ந்திருக்கிறார்கள். பனியுகம் ஆரம்பிப்பதற்கு முன்னால், இந்தியப் பகுதிகள் அதிக வெப்பமடைந்திருக்கலாம். அதனால் வெப்பம் குறைந்த வட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திக்ருக்கலாம்.

 • ·         இங்கு மொழி ஆராய்ச்சி நுழைகிறது. பசு என்பதன் பெயர் தமிழ், சமஸ்க்ருதம், ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் ஒத்த ஒலியுடன் இருக்கிறது. பல மொழிகளிலும், பசு என்பது சிறு சொல்லாகவோ அல்லது ஒற்றைச் சொல்லாகவோ இருக்கிறது. சமஸ்க்ருத்த்தில் கோ (go) அல்லது காவ். தமிழில் . ஆங்கிலத்தில் கவ் (cow) பார்சி மொழியில் கா (gaw). டட்ச் மொழியில் கோ (koe). கிழக்கே பார்த்தால் சீனாவில் கு (gu). தாய்லாந்தில் கோ (koh). ஆப்பிரிக்க் ஸ்வாஹிலி மொழியில் கோம்பெ (ngombe).


                                  டட்சு நாட்டுப் பசுக்கள்

                                            இந்தியப் பசு

 • ·         மொழி ஒப்பீடு மட்டும் செய்யும் போது, எதிலிருந்து எது வந்தது என்ற குழப்பம் வருகிறது. ஆனால் மரபணு ஆராய்ச்சிகளில் அவற்றின் மூலம் தெரிகிறது. பசுக்கள் வேத மதத்துக்கு ஆதாரமானவை. பாரத மக்கள் பசுவைத் தெய்வமாகப் பார்த்தார்கள். • ·         தமிழ் மக்களும் அதைத் தெய்வமாகப் பார்த்தார்கள். பசுவைக் கொல்வது பாவம் என்று நினைக்கும் நாடு இது. பசுவைக் கொல்லுதல் என்னும் வார்த்தையைச் சொல்லுதல் கூட தவறு என்று பழந்தமிழர் எண்ணியதால், அந்த வார்த்தையைச் சொல்ல நேரிட்ட ஒரு பாடலில் ‘ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கு’ (ஆவின் முலையறுத்தவ) என்று ஆலத்தூர் கிழார் பாடியுள்ளார் (புற நானூறு 34). போருக்குச் செல்லும் போது பசுக்களுக்கு தீங்கு நேரிடாமல் பார்த்துக் கொண்டார்கள். முந்தின கட்டுரையில் சொன்ன முது குடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்ன்ன் அதை ஒரு யுத்த தர்ம்மாகவே பார்த்தான் என்று புற நானூறு 9 ஆம் பாடல் சொல்கிறது. கோபத்தில் மதுரையைத் தீக்கிரையாக்கின போதும், கண்ணகி பசுக்களுக்கு எந்த்த் தீங்கும் நேரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

 • ·         இந்தியக் கடல் பகுதியில் இருந்த்தாக நாம் சொல்லும் சாகத்தீவுப் பகுதியில் ரைவதக மலை இருந்தது என்று கூறினோம் (பகுதி 56, 57 & 58). அந்த மலை ரேவதி நக்ஷத்திரத்தைக் காட்டுவது.

·         

 • அந்த ரேவதி நக்ஷத்திர அதிபதி பசு வளத்தைக் கொடுக்கும் பூஷன் என்பவன். பசு வளம் என்பது மழை வளத்துடன் தொடர்பு கொண்டது. ரேவதி நக்ஷத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் அக்னி ஹோமங்கள் செய்யும் வழக்கம் இன்று வரை நீடித்து வருகிறது. இந்த வருடம் (2011) அந்த சமயத்தில் திருச்சூர் அருகே செய்யப்பட்ட அதிராத்திரம் என்னும் ஹோமம், பசு, மழை வளத்தை விரும்பியே செய்யப்பட்டது (பகுதி 6)

 • ·         இந்தப் பழக்கங்கள் தென்ன்ன் தேசம் என்று சொல்லப்படுவதற்கும் முன்னால், இந்தியக் கடல் பகுதிகளில் இருந்தது என்பதை இங்கு மேற்கோளிட்ட பகுதிகளில் கண்டோம். மரபணு ஆராய்ச்சியும், பசுக்கள் இந்தப் பகுதியில் இருந்தன என்பதையும், இங்கிருந்துதான் உலகின் பிற இடங்களுக்குச் சென்றன என்பதையும் காட்டுகின்றன.

 • ·         இதே பகுதியில் மக, மசக முதலான நான்கு வர்ணத்தவர்கள் இருந்தார்கள் என்றும் கண்டோம் (பகுதி 60). அப்பொழுதே வேதம் இருந்த்து. வேத வேள்விகள் இருக்குமிடத்தில் பசுக்கள் இருக்கும். பசுவின் பாலும், பசுவின் சாணத்திலிருந்து வேள்விக்கான வரட்டியும், பஞ்ச கவ்வியமும் வேத வழி வாழ்பவர்களுக்குத் தேவை. இவை வளமாக இருந்த இடத்தில் பேச்சு மொழியாகத் தமிழ் என்னும் மதுர மொழியும், வேத மொழியாக சமஸ்க்ருதமும் இருந்து வந்தது. ஒரே இடத்தில், ஒரே பொருளுக்குத் தமிழிலும் சமஸ்க்ருதத்திலும் சொல் ஏற்பட்டிருக்க வேண்டும். தமிழில் ஆ என்றும் சம்ஸ்க்ருதத்தில் கோ என்றும் இருந்திருக்கிறது. இந்தக் கருத்தையே, இந்த மரபணு சார்ந்த மொழி ஆராய்ச்சிகள் செய்த ஃபுல்லர் (Dorian Fuller) என்பவர் சொல்கிறார்.

அவர் சொல்வது:- “Linguistic evidence congruent with an early North Indian (Gangetic) agricultural complex comes from a range of agricultural terms found in Sanskrit and sometimes in Dravidian languages which appear to derive from extinct languages of unknown affiliation.”


 • இங்கு ஃபுல்லர் அவர்கள் இன்றைய மொழிகளுக்கும் மூத்த மொழி ஒன்று, பொது மொழியாக இருந்திருக்க வேண்டும் என்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. 25,000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குப் பசுக்கள் சென்றன என்ற விவரம் இருப்பதால், 25,000 ஆண்டுகளுக்கும் மேலாகவே பசுவும், பசுவைச் சார்ந்த வேத வாழ்வும் இருந்தன என்று தெரிகிறது. 25,000 ஆண்டுகளுக்கு முன்னால் என்றால் அது பாண்டியன் காலத்துக்கும் முன் இருந்த சாகத்தீவைத்தான் சுட்டிக் காட்டுகிறது. அது மட்டுமல்ல, தமிழும், சமஸ்க்ருதமும் ஒன்றாக இருந்திருக்கக்கூடிய சூழ்நிலையையும் காட்டுகிறது.

இதுவரை பசுக்களைப் பற்றிய ஆராய்ச்சியை மட்டுமே பார்த்தோம். மற்றவற்றையும் இனி காண்போம்.8 கருத்துகள்:

 1. //jayasree சொன்னது…
  தமிழில் உள்ள சமஸ்க்ருதச் சொற்களை நீக்கி, சமஸ்க்ருதத்துக்கும் பொதுவான தமிழுக்கான இலக்கணங்களை நீக்கி விட்டால், பாதி தமிழ் காணாமல் போய் விடும்.
  8 அக்டோபர், 2011 12:05 am //

  நீங்கள் கூறியது போல தமிழ் பாதி மறைந்து விட்டது உன்மை தான். நான் உங்களுடைய சமஸ்க்ருதத்தையோ உங்கள் கட்டூரைப் போக்கையோ விமர்சிக்கவில்லை. அப்படி விமர்சிக்க விரும்பி இருந்தால் முதற் கட்டூரை படித்த உடனேயே கருத்து கூறி இருப்பேன். நீங்கள் உண்மையிலேயே தமிழுக்கும் தமிழனுக்கும் நன்மை பயக்காவிடினும் தீமை பயக்காதவராய் இருந்திருந்தால் இப்படி(தமிழ் காணாமல் போய்விடும்) என்று கூறி இருக்க மாட்டீர்கள்.  (66. மனித பாஷை என்னும் தமிழ் மொழி!) என்ற பகுதியில்
  // தேவ பாஷை என்று சமஸ்க்ருதத்தைச் சொல்வார்கள்.
  மனிதர்கள் பேசுவது மனித பாஷை என்பது போல,
  தேவர்கள் பேசுவது தேவ பாஷை ஆகும். //

  என்று குறிப்பிட்டு இருக்குறீர்க்ள், அப்படி என்றால் தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் கடவுள் இல்லையா?
  அப்படி என்றால் தமிழ் கடவுளான முருகன் உஙகளுடைய பார்வையில் வெரும் மனிதனா?

  திராவிட வாதிகள் தமிழ் வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றால்
  சமஸ்கிருத வாதிகளும் ஏன் இப்படி தமிழையும் சமஸ்கிருதத்தையும் இனைக்கிறேன் என்று கூறிக்கொண்டு தமிழை ஏன் இருட்டடிப்பு செய்கிறீகள். ”உங்களுடைய தாய்மொழியை ஒருவர் செத்துவிட்டது மறைந்து விட்டது” குறைவாக பேசும்போது ’’தேவ குலத்தில்’’ வந்த உங்களுக்கே சினம் வந்து தமிழை சாடுகிறீர்களே, அப்படித்தான் மனிதனாகிய எங்களுக்கும் சினம் வரும். தமிழ் எங்கள் தாய்க்கு நிகர். தமிழை இகழ்ந்தவனை என் தாய்த் தடுத்தாலும் விடேன்” என்று கூறிய பாரதிதாசன் பாடலை படித்து வளர்ந்தவர்கள் நாங்கள்.

  பதிலளிநீக்கு
 2. தமிழன் அவர்களே,
  சுத்தமாக இந்தத் தொடரை முழுவதும் படிக்காமல் நீங்கள் எழுதி வருகிறீர்கள் என்று தெரிகிறது.
  படிப்பதையும் ஒழுங்காகப் படிப்பதில்லை என்றும் தெரிகிறது. முருகன் மனிதனா, தெய்வமா அல்லது வேறு ஏதாவதா என்பதைப் பற்றி கருத்துரைப் பகுதியில் சலம் என்பவருக்கு நான் எழுதிய விவரங்களையும் நீங்கள் படிக்கவில்லை என்றும் தெரிகிறது. இந்தத் தொடரில் முருகனைப் பற்றிப் பல விவரங்கள் வர இருக்கின்றன. அவற்றையும் படித்து விட்டு, நீங்கள் மேலே எழுதியது போல வினோதமாகப் புரிந்து கொண்டு எழுதுங்கள். இதை வைத்தும் ஒருவரது மன நிலையை ஆராய்ச்சி செய்பவர்களுக்குப் பயனாகும்!

  முருகனது ‘தேவ குல’த் தொடர்புகள் உங்களுக்குத் தெரியாது என்பது தெரிகிறது. முருகன் மணந்தது தேவசேனை என்னும் தேவ லோகப் பெண்ணை. அவளது தகப்பன், தேவலோக அரசனான இந்திரன். கந்த புராணம், கந்த புராணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதில் இந்த விவரங்கள் எல்லாம் வரும். அந்தக் கந்த புராணம் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்று நினைக்கிறீர்கள்? சமஸ்க்ருதத்தில்தான். அதற்குப் பிறகுதான் தமிழில் எழுதப்பட்டது.

  கந்தன் புகழை பாரதம் முழுவதும் பறை சாற்றிய பெருமையும், ’குமார சம்பவம்’ என்னும் சமஸ்க்ருத நூலுக்கே உரியது. அதை எழுதிய காளிதாசர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அல்லர்.

  அது மட்டுமல்ல. முருகன் மணந்தானே வள்ளி - அவள் பெயர் சமஸ்க்ருதத்தில் வல்லி என்பதே. வள்ளி என்றாலும், வல்லி என்றாலும் ஒரே பொருள்தான். ஒரே பொருளுடன் ஒரே ஒலி அமைப்பில் தமிழ், சமஸ்க்ருதம் ஆகிய இரண்டு மொழிகளில் சொற்கள் வந்தமை இந்தத் தொடரில் விவரிக்கப்படும். அந்த விவரங்களைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு இப்பொழுதே உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

  நிற்க, முருகன் என்பது மட்டுமே தமிழ்ப் பெயர். அவருக்குள்ள மற்ற பெயர்களான கந்தன் (ஸ்கந்தன் என்னும் சமஸ்க்ருதச் சொல்லின் திரிபு), சுப்ப்ரமண்யன், குமரன் என்பவை சமஸ்க்ருதப் பெயர்கள்.

  தமிழ்க் கடவுள் என்று நீங்கள் குறுக்கிச் சொல்லும் அவர் பிறந்தது இமவான் என்பவனது புதல்வியான பார்வதிக்கு. அந்த இமவானை “முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து, இரு பிறப்பாளரொடு பெருமலை அரசன்” என்கிறார் இளாங்கோவடிகள் (சிலப்பதிகாரம் - 25 -127, 128 வரிகள்)

  இதன் பொருள் “மூன்று புரியாலான பூணூலை அணிந்த மார்பினையும், முத்தீ என்னும் ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்னும் மூன்று வேள்விகளையும், இரு பிறப்பாளர்களுடன் செய்த பெரும் மலையான இமயமலைக்கு அரசன்”. அப்படிப்பட்ட பிராம்மணனுக்குப் பிறந்த பேரன் முருகன்!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் ஜெயஸ்ரீ அவர்களே.

  திருமூலர் தமிழையும்,சமஸ்கிருதத்தையும் (ஆரியம் ) பற்றிக் கூறும்போது :

  ”ஆரியமும் தமிழும் உடனே சொலிக் காரிகையார்க்கும் கருணை செய்தானே'

  சிவபெருமானே தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் மூல முதல்வன் என்கிறார். ”உடனே சொல்லி” என்பது சமகாலத்தில் தோற்றம் கொண்டவையாகவும், தமிழையும், சம்ஸ்கிருதத்தையும் சகோதர மொழிகளாகவுமாக்குகிறது.

  திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாமென்பது திருமூலரின் குரு-சீட சித்த மரபின், நந்தி வழி திருமூலர் ஈறான, 3000 ஆண்டுகாலத் தொன்மமாக இருக்கலாம். திருமூலருக்குப் பின் இன்றுவரை 1000 ஆண்டுகள் எனக் கொண்டாலும் குறைந்தது 4000 வருடங்களாகிறது இரு பெரும் மொழிகளும் தோன்றி.


  நிச்சயமாக 3500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்தாக புரட்டப்படும் ‘ஆடு மேய்க்கும் ஆரியர் கூட்டம்’ ஆரியத்தை கொண்டுவந்திருக்க முடியாது.

  எனக்கு சமஸ்கிருத அறிவு இல்லை எனினும் அதை நன்றாக அறிந்த பாரதியை நம்புகிறேன் - ”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”..

  பதிலளிநீக்கு
 4. "தமிழ்க் கடவுள் என்று நீங்கள் குறுக்கிச் சொல்லும் அவர் பிறந்தது இமவான் என்பவனது புதல்வியான பார்வதிக்கு. அந்த இமவானை “முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து, இரு பிறப்பாளரொடு பெருமலை அரசன்” என்கிறார் இளாங்கோவடிகள் (சிலப்பதிகாரம் - 25 -127, 128 வரிகள்)

  இதன் பொருள் “மூன்று புரியாலான பூணூலை அணிந்த மார்பினையும், முத்தீ என்னும் ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்னும் மூன்று வேள்விகளையும், இரு பிறப்பாளர்களுடன் செய்த பெரும் மலையான இமயமலைக்கு அரசன்”. அப்படிப்பட்ட பிராம்மணனுக்குப் பிறந்த பேரன் முருகன்!"

  முருகக்கடவுளை பிராமணனாக்கி குறுக்கி விடாதீர்கள்..!

  அன்று இமவான் போன்ற அரசர்களும் பூணூல் போட்டிருந்தனர். மேலும், உமாதேவியார் குழந்தை வடிவில் தோன்றி இமவானிடம் மகளாகப் போய்ச் சேர்ந்தார். முருகனும் தீப்பொறியினின்று குழந்தையாய்த் தோன்றியவனே அன்று யாருக்கும் பிறந்தவனில்லை - சின்னச் சிவன் - என்பார்கள் சைவர்கள்.!

  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. @ குமார்.

  இன்னும் முருகனைப் பற்றி இந்தத் தொடரில் சொல்ல ஆரம்பிக்கவில்லை. ஆனால் என்ன சொல்லப் போகிறேன் என்பதை 68 ஆவது கட்டுரையின் கருத்துரைப் பகுதியில் எழுதி இருக்கிறேன். படிக்கவும்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் குமார் அவர்களே,
  //எனக்கு சமஸ்கிருத அறிவு இல்லை எனினும் அதை நன்றாக அறிந்த பாரதியை நம்புகிறேன் - ”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”.. //

  67, 68 கட்டுரைகளைப் படிக்கவும்.

  பதிலளிநீக்கு
 7. குறுக்கு அறிவைப் பற்றி தமிழர்களுக்கு தெரியாமல் போனதால்தான்
  நீங்கள் எங்களுடைய மொழி இலக்கியம் இலக்கணம் எல்லா வற்றையும் உங்களுக்கு
  ஏற்ப மாற்றிக்கொண்டீர்கள்

  தக்ஷணாமூர்த்தி என்பதற்கு விளக்கம் உங்களுக்கு தெரிந்திருக்கும்
  சமசஸ்கிருதத்தில் தக்ஷண் என்பதற்கு தெற்கு என்று பொருள் மூர்த்தி என்பதற்கு
  உருவம் என்று பொருள்

  தெற்கத்தவர் அல்லது தெற்கிலிருந்து வந்தவர் அல்லது தென்னவன் என்பது பொருள்
  உங்களுக்கு தெரியாததா?
  தமிழ் விளக்கமும் சமஸ்கிருத விளக்கமும் நான் உங்களுக்கு கூறவேண்டியதில்லை.

  ஆக உங்கள் மொழி வாயிலாகவே சிவனை தெற்கிலிருந்து வந்தவர் என்று கூறுகிறீர்கள்

  இப்படி உங்கள் தேவைக்கேற்பவும் உங்களின் மூதாதையர் ஏறக்குறைய 2000 வருடங்களாகவே
  தமிழர்களை ஏமாற்றி வருகிறீர்கள்

  எல்லாம் ஒரே கடவுள் என்று கூறி பிறகு தேவகுலத்தோடு பெண் கொடுத்தல் பெண் எடுத்தல்
  பொன்ற கதைகளை கூறி அதிலிருந்து உங்கள் குலம் தான் உயர்ந்தது என்று கூறி
  பின் நாங்கள் தான் தேவர்கள் உயர்ந்தவர்கள்.
  மேலும் உங்கள் பிழைப்புக்காக அரசர குலத்தை, ஷத்ரியர்கள் (நானும் ஒரு ஷத்ரியன்)
  என்று கூறி அரசர்களை பாடி புகழ்ந்து மேலும் அரசர்களுக்கு குருவாகவும் மூலை சலவை செய்து அவர்கள் மூலமாக மக்களை
  நம்பவைத்து ஏன் பிராமணர்களான நீங்கள் சொகுசாக வாழ்க்கை நடத்துவதற்காக...
  தமிழில் நமக்கு கிடைத்த இலக்கியகள் பலவும், கம்பராமாயணம், ஐம்பெறும் காப்பியமானாலும் சரி
  தேவாரம், திருவாசகமானாலும் எல்லாமே இன்றிலிருந்து 2000 அல்லது; 3000 வருடங்களுக்கு உட்பட்டது.
  ஆக இந்த நூல்கள் பிராமணர்களின் தூண்டுதலாலும், பல பிராமண முனிவர்களாலும் எழுதப்பட்டது.
  மேலும் சிலப்பதிகாரம் மற்றும் கம்பராமாயணம் ஏன் தொல்காப்பிய காலகட்டங்களிலேயே தேவ அசுரக்கதைகள் தமிழ் மக்களின்
  மனதில் வேறூன்றி ஆல விருட்சமாக வளர்து விட்டகாலம் எனவேதான் இந்த இலக்கியங்களில் எல்லாம்
  உங்களுடைய கடவுளர்கள் கதா நாயகர்களாகவும் மேற்கோலர்களாகவும் வருகின்றனர்.

  3000 வருடங்களுக்கு முந்தைய நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை ஏனெனில்
  பல ஊழிகளால் ஆயிரக்கணக்கான வான சாஸ்திர நூல்களும் மருத்துவ நூல்களும்
  கட்டிடக்கலை நூல்களும் இன்னும் அறிவியல் நூல்களும் தற்காப்பு கலை நூல்களும் அழிந்துவிட்டன.
  இந்த 3000 வருடத்திலேயே லட்சக்கணக்காண நூல்கள்
  மதச்சண்டையிலும் இனச்சண்டையிலும் மொழிச்சண்டையிலும் அழிந்து விட்டன.

  நாங்கள் சொல்கிறோம் பனியுகத்திற்கு முன்பே அதாவது 20000 ஆன்டுகளுக்கு முன்பே அதாவது அகத்தியர் காலத்திற்கு
  முன்பே தமிழ் இலக்கணம் இருந்தது. மேலும் இப்பொழுது உள்ள தொல்காப்பியம் பாமர மக்களும் கற்கவும் செய்யுற்பா இயற்றவும்
  குறிப்பாக வணிகம் செய்யவருபவரும் உலக மக்களும் இலகுவாக தமிழ் கற்க வடிவமைக்கப்பட்டது.
  பின் சமஸ்கிருதம் கலந்த பல தமிழ் இலக்கண நூல்கள் உருவாயின. காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றம் பெற்றதால் தான்
  தமிழ் இன்றைக்கும் செல்வசெழிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறது.

  தமிழ் மொழி இயற்கையான மொழி எனவே அது உறுதியாக மனிதன் தோன்றி அவன் தன் வாயினால் ஒலி எழுப்பத் தோன்றியதிலிருந்தே உருவானது
  அது 20000, 30000 அல்ல 3 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழி. இதற்கான எழுத்திலக்கணம் வேண்டுமானால் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம்

  ஆனால் சமஸ்கிருதம் என்பதற்கு சமைக்கப்பட்ட அதாவது திருத்தி அமைக்கப்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட மொழி என்றுதானே பொருள்
  ஆக வேரொரு மொழியில் இருந்து பண்படுத்தப்பட்ட மொழி என்று பொருள் கொள்ளலாம். வேரு வொரு மொழி அது தமிழகக் கூட இருக்கலாம்.
  ஒரு வேலை சிலேடை தமிழிலிருந்து வந்ததாகவும் இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 8. கருணாநிதி என்பதே வடமொழிச் சொல். அன்புச்செல்வன் என்பது நல்ல தமிழ் சொல்.
  உதய சூரியன் என்பது வடமொழிச் சொல். எழுஞாஎறு என்பது நல்ல தமிழ் சொல்.
  மத்ய பேருந்து நிலையம் என்பதும் வடமொழிச் சொல். அனால் மைய பேருந்து நிலையம் என்பது நல்ல தமிழ் சொல். இவர்களுக்கு எது வடமொழி வார்த்தை எது தமிழ் வார்த்தை என்பதுவே தெரியாது. பிறகு தமிழையும் வடமொழியும் பிரித்து பேசுவது பிரிவனை பேச்சே.

  பதிலளிநீக்கு