திங்கள், 18 ஜூலை, 2011

64. சங்க நூல்களில் பிற வர்ணத்தவர் ஆதிக்கம்.
மற்ற வர்ணத்தவர்கள், அந்தணர்களிடமிருந்து கல்வி கற்றார்கள். 
கற்ற கல்வியை வெளிப்படுத்தவும் செய்தார்கள். 
அப்படி வெளிப்படுத்திக் கொள்வதிலும், 
அந்தணர்கள் மற்ற வர்ணத்தவருடன் போட்டிக்கு வந்ததில்லை. 
அப்படிப் போட்டியிட்டிருந்தால், 
சங்க நூல்களில் அந்தணர்கள் ஆதிக்கமே அதிகமாக இருந்திருக்கும்.   

ஆனால் சங்க நூல்களில் அந்தணர்கள் எழுதிய பாடல்கள் குறைவு. 
அவர்கள் வேதம் ஓதுதலிலும், கற்பித்தலுமே காலத்தைக் கழித்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவர்கள்,  
தங்கள் பெயரை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றனர்.  
மற்றவர்களுக்கு ஒரு ஏணியாகத்தான் தமிழ்ப் பார்ப்பனன் இருந்திருக்கிறான்.


உதாரணத்துக்குப் புறநானூறை எடுத்துக் கொண்டால், 
அதில் அந்தணர்கள் எழுதிய செய்யுள்கள் குறைவு.  
அரசர்களும், வணிகர்களும் வேளாண் மக்களும் எழுதிய பாடல்களே அதிகம்.  
பிற சங்க நூல்களிலும் கடை இரண்டு வர்ணத்தவரே 
அதிக செய்யுள்கள் இயற்றியுள்ளனர்.


குறுந்தொகையை மட்டும் எடுத்துக் கொண்டால்

 • ஆசிரியன் பெருங்கண்ணனார் என்று ஆசிரியர் பட்டத்துடன் ஒருவரும்,
 • மதுரை ஆசிரியர் கோடங் கொற்றனார் என்ற ஒருவரும் என இருவரே
ஆசிரியர் என்ற பெயருடன் இருக்கின்றனர். பொதுவாகக் கற்பித்தலைப் பார்ப்பனர்கள் செய்யவே, இவர்கள் பார்ப்பனர்களாக இருக்க்க்கூடும்.


குறுந்தொகைப் பாடல்களை எழுதியவர்களில் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்று பிற வர்ணத்தவரே அதிகம் இருக்கிறார்கள்


 • அவர்களில் கொல்லர்கள் இருவர்.
 • அவர்களது பெயர்கள், மதுரைக் கொல்லன் புல்லன் (373),
 • மதுரைப் பெருங்கொல்லர் (141)

 • வணிக வர்ணத்தைச் சேர்ந்தவர், மதுரை அறுவை வணிகன் இளவேட்டனார். அறுவை என்றால் ஆடை என்று பொருள். இவர் துணி வியாபாரியாக இருக்க வேண்டும்.
 • மதுரை எழுத்தாளர் சேந்தம் பூதனார் என்பவர் எழுத்தாளர் பணியில் இருந்திருக்க வேண்டும்.
 • மதுரை வேளா தத்தர் என்றும் ஒரு புலவர் இருந்திருக்கிறார். இவர் வேளாண் மரபைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
 • மிளை வேள் தித்தனார் என்னும் பெயர் கொண்ட புலவரும் வேளாண் தொழில் செய்தவராக இருக்க வேண்டும்.

 • வாயிலான் தேவனார்  என்றும், ‘வாயிளங் கண்ணனார் என்றும் பெயர் கொண்ட புலவர்கள் வாயில் காப்போனாக இருந்திருக்க வேண்டும். அவரவர் செய்த தொழிலைக் கொண்டும் பெயர் வைத்திருக்கின்றனர். வாயில் காக்கும் தொழில் கீழ்மையானது என்று எண்ணப்படவில்லை. எல்லாத் தொழில்களுக்கும் மரியாதை இருந்தது.
 • வண்ணக்கன் என்ற பெயரில் இரண்டு புலவர்கள் குறுந்தொகையில் எழுதி உள்ளார்கள். வண்ணக்கன் என்றால் நாணய பரிசோதகர் என்று பொருள். அந்த நாளில் வேறு பட்ட வேலைகள் இருந்திருக்கின்றன. அவற்றைச் செய்ய விசேஷ திறமைகளைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
 • வாத்தியக் கருவிகள் வாசித்தவர்களும் செய்யுள் இயற்றியுள்ளார்கள். ‘நெடும் பல்லியத்தனார்’, ‘நெடும் பல்லியத்தை என்ற பெயர்களில் இரண்டு புலவர்களது பாடல்கள் குறுந்தொகையில் காணப்படுகின்றன. பல்லியத்தை என்னும் அடை மொழி, பல வாத்தியங்களை உடையவர்களுக்கு அளிக்கப்படுவது
 • வாத்தியம் இசைத்தவர்களைப் போல கூத்தர்களும் பாடல்கள் எழுதி உள்ளனர். வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் என்பவரது பெயர் அவர் கூத்தாடுபவர் என்பதைக் காட்டுகிறது.

செய்யும் தொழில், ஆர்வம் என வகை வகையாக இருந்தாலும், இவர்கள் அனைவரும் வேதமொழிந்த கல்வியாக, முதல், இடை, கடை என இலக்கண, இலக்கியம், தர்ம நூல் போன்றவற்றைப் பயின்று இருந்தால்தான் திணை, துறை சுத்தமாகச் செய்யுள் இயற்றி இருக்க முடியும்.


 • குலபதி என்ற அடைமொழியுடன்கிடங்கிற் குலபதி நக்கண்ணனார் என்ற புலவர் இருந்திருக்கிறார். ஆயிரம் மாணவர்களை ஆதரித்துக் கல்வி புகட்டுபவருக்குக் குலபதி என்ற பட்டம் கொடுப்பார்கள். கல்விக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்திருந்தால், இப்படி ஒரு வழக்கம் வந்திருக்கும்? இப்படி ஒரு பட்டம் வழங்கும் வழக்கம் இருந்துள்ளதால், ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்தனர் என்பதும் தெரிகிறது.

வர்ண மக்களை விடுங்கள். ஒரு ஆரிய அரசன் எழுதிய பாடல் குறுந்தொகையில் இருக்கிறது.
 • ஆரிய அரசன் யாழ்ப் பிரமத்த்தன் எனபது இவன் பெயர். (கு-தொ-184). இந்த அரசனுக்குக் கபிலர் தமிழ் கற்றுக் கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது. அதற்காக அவர் இயற்றியதே குறிஞ்சிக் கலி என்றும் சொல்லப்படுகிறது. ஆரியத் திணிப்பு நடந்தது என்று திராவிடவாதிகள் கூறுகிறார்களே, இதற்கு என்ன சொல்கிறார்கள். விரட்டியடித்தவனும், திணித்தவனுமாக ஆரியர்கள் இருந்திருந்தால், இந்த ஆரிய அரசன் எழுதிய பாடல் குறுந்தொகையில் எப்படி இடம் பெற்றிருக்கும்?

குறுந்தொகையில் உள்ள பிற பெயர்களைப் பாருங்கள். அவை வடபால் முனிவர்கள் பெயராக இருக்கின்றன.
 • கடம்பனூர்ச் சாண்டில்யன் என்ற ஒரு புலவர் எழுதிய பாடல் இருக்கிறது (307)
யார் இந்தச் சாண்டில்யன்? ஒரு ரிஷியா? சாண்டில்ய கோத்திரத்தில் வந்தவரா? அல்லது இந்தப் பெயரைக் கொண்ட வடபால் புலவர் ஒருவரா? ஆனால் அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்வோம். தமிழ்ப் புலமை இருந்திருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்வோம்.


 • இன்னொரு புலவர். இவர் பெயர் கருவூர்ப் பவுத்திரனார் (குறுந்தொகை – 162)
இந்தப் பெயர் பவித்திரம் அல்லது பேரன் என்ற பொருள் கொண்ட பௌத்திரன் என்னும் வட சொல்லாகும். ஆனால் அவரது ஊர்ப் பெயரோ கருவூர் என்பது.  தமிழும், சமஸ்க்ருதமும், சங்க காலம் வரை உறவாடியது என்பதற்கு இதை விட வேறு சாட்சி என்ன வேண்டும்?


 • இந்தப் பெயரைப் பாருங்கள். கருவூர் ஓத ஞானி. (கு-தொ – 71) ஓத ஞானி என்பது சமஸ்க்ருதப் பெயர். பரந்த ஞானம் என்பது இதற்குப் பொருள். வெறும் ஓத ஞானி என்னும் பெயரிலும் ஒருவர் எழுதியுள்ளார்.

 • இன்னொரு புலவர் நெய்தல் கார்க்கியர் எனப்பட்டார். (குதொ 212)
இவர் நெய்தல் நிலத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் கார்க கோத்திரத்தைச் சேர்ந்தவரா, கார்க ரிஷியின் வம்சமா, அல்லது கார்க்கி என்னும் பெண்பால் ரிஷியின் வழி வந்தவரா? அல்லது வட புலத்திலிருந்து தமிழ் நாட்டு நெய்தல் நிலத்துக்கு வந்து தவ வாழ்க்கை மேற்கொண்டவரா? இவர் எழுதிய இரண்டு பாடல்களிலும், நெய்தல் நில வாழ்க்கையும், தலைவன் மணியொலிக்கத் தேரிலேறி கடற்கரைக்கு வரும் காட்சியும் சொல்லப்படுகின்றன. கடற்கரையோரம் தவ வாழ்க்கையை மேற்கொண்ட வடபால் தவ முனிவரோ இவர் என்று எண்ணும் வண்ணம் இவர் தாம் பார்த்த காட்சிகளை விவரிக்கும் பாங்கு அமைந்திருக்கிறது.


 • இன்னொரு பெயரும் இருக்கிறது. அது தேவ குலத்தார் குறுந்தொகையின் 3 ஆவது பாடல் இவரால் இயற்றப்பட்டது. தேவன் என்னும் பெயரில் பாரதம் பாடிய பெருந்தேவனாரும் இருக்கிறார். தமிழ் மக்களின் வாழ்க்கை வேத மரபின் அடிப்படையில் இல்லையென்றால், இப்படிப் பட்ட பெயர்கள் வரமுடியாது.


வேத மரபின் அடிப்படை என்பது மட்டுமல்ல, வடக்கு, தெற்கு வித்தியாசம் இல்லாமல் ஒரு கலந்துறவாடல் நடந்திருக்கிறது. தமிழும், சமஸ்க்ருதமும், தமிழ் நாட்டவரும் அறிந்திருந்தனர், வட நாட்டவரும் அறிந்திருந்தனர் என்பதை நச்சினார்க்கினியர் தெரிவித்துள்ளார்.


61 ஆம் கட்டுரையில் கூறிய தொல்காப்பிய வர்ண சூத்திரத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார் தமிழில் தலை ஓதல்என்பது பற்றிச் சொல்லும் விவரம் இதை நிலை நிறுத்துகிறது.


அவர் சொல்கிறார்:-


தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும்,  
அகத்தியனாரும்,  
மார்க்கண்டேயனாரும்,
வான்மீகனாரும்,  
கவுதமனாரும் போலார் செய்தன தலை”.
என்கிறாரே இவர் சொல்லும் இந்தப் பெயர்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்களா?


 • இந்தப் பெயர்களில் இறையனார் என்பது சிவ பெருமானைக் குறிக்கும்.

 • அகத்தியனார், நமக்கு மிகவும் அறிமுகமானவர்.  
 • ஆனால் அவர் வடபால் முனிவர்தான்
 • அவரது மனைவி லோப முத்திரை என்பவள் உத்தர குருவைச் சேர்ந்தவள் என்று ஒரு கருத்து இருக்கிறது. ரிக் வேதத்தில் ஒரு பாடல் அவளால் இயற்றப்பட்ட்து. ராவணனைப் போரில் வெல்ல, ராமனுக்கு அகஸ்தியர் சமஸ்க்ருத்த்தில் ஆதித்திய ஹ்ருதயம் என்னும் பாடலை உபதேசித்துள்ளார். அவரே தமிழுக்கும் ஆசான் என்பது நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

 • அடுத்து மார்க்கண்டேயரைப் பற்றி நச்சினார்க்கினியர் சொல்லியுள்ளாரே, இவரும் சமஸ்க்ருத்த்தில் புராணம் தந்துள்ளார்.  
 •  
 • சிவ பெருமானது அருளால் சாவை வென்று என்றும் பதினாறாக, சிரஞ்சீவியாக இருப்பவர் என்று சொல்லப்படும் மார்க்கண்டேயர் தமிழில் எழுதியுள்ளார் என்பது தெரிகிறது ஆனால் தமிழ்க் கல்வியில் அவர் தந்துள்ள நூல்களைப் படிக்க வேண்டும் என்கிறாரே அது எப்படி? தமிழ் இலக்கிய, இலக்கணத்தில் மார்க்கண்டேயர் எழுதிய நூல்கள் இருந்தன என்றுதானே அர்த்தமாகிறது?

 • அடுத்து, கவுதமனார் என்ற பெயரைப் பாருங்கள். பாலை பாடிய கவுதமனார் என்று ஒருவர் இருந்தார். பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தைப் பாடியவரும் ஒரு கவுதமனார். இருவரும் ஒருவரே என்று சில ஏடுகளில் குறிக்கப்பட்டுள்ளது என்கிறார் டா. உ.வே.சா அவர்கள். இந்தக் கவுதமனார் ஒரு பார்ப்பனர். அவரும் அவரது மனைவியும் சுவர்கம் செல்ல வேண்டும் என்று ஒரு யாகம் செய்ய விரும்பினர். அந்த யாகத்தைச் செய்யச் சேர மன்னன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் உதவினான். இந்தக் கவுதமனாரைத்தான் நச்சினார்க்கினியர் சொல்லியிருக்க வேண்டும். இவர் கவுதம கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். அந்தக் கோத்திரம் அவரை ஆரிய வர்த்த ரிஷிகள் மரபில் வைக்கிறது. அந்த மரபில் வந்த இவர் தமிழின் தலை ஓதலுக்கான இலக்கண இலக்கியம் படைத்தவர் என்பது, வடக்கு- தெற்கு என்ற வித்தியாசம் அன்று இல்லை என்பதையும், தமிழையும், சமஸ்க்ருதத்தையும் இன்றியமையாத இரு கண்களாக அறிஞர்கள் பார்த்தார்கள் என்பதையும் தெரிவிக்கிறது.

 • அது போல வான்மீகனார் என்கிறாரே? அவர் யார்? ராமாயணம் எழுதிய வால்மீகியா?
வான்மீகம் என்பது ஒரு சம்ஸ்க்ருதச் சொல்தான். கரையான் புற்றுக்கு வால்மீகம் என்று பெயர்அவர் தியானத்தில் அமர்ந்த பொழுது அவர் மீது கரையான் புற்று கட்டி விடவே அவர் இந்தப் பெயர் பெற்றார். எனவே இது காரணப்பெயர். இந்தப் பெயரில் வேறு ஒருவர் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அவர் எழுதிய இலக்கண, இலக்கிய நூல்களைப் படித்தலே தமிழ் மொழியில் தலையாய கல்வி என்கிறாரே அது எப்படி?

தமிழில் வால்மீகி எழுதியுள்ளாரா?

அடுத்தக் கட்டுரையில் காண்போம்.
21 கருத்துகள்:

 1. இதுவரை காணாத கோணம் உங்கள் தளம் ....அருமை..உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. ஊக்கத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு புரட்சிமணி அவர்களே. இன்னும் முக்கியக் கருத்துக்கள் -மரபணு ஆராய்ச்சி, ஆரியம் என்பது என்ன, தமிழில் ஆரியம், தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்த மக்கள், அதன் தொடர்பாக ஏற்பட்ட சமூக ஏற்ற தாழ்வுகள் - போன்ற கருத்துக்கள் வர இருக்கின்றன. 100 பதிவுகள் வரை செல்லும் என நினைக்கிறேன். படிக்கவும்.

  பதிலளிநீக்கு
 3. தொடர்ந்து படிப்பேன்...செந்தமிழ் மாநாட்டில் உங்களது கருத்துக்களை முன் வைத்திருக்கலாமே?
  தமிழ் நூல்களை மட்டும் கொண்டும் இப்படி ஒரு வரலாற்று ஆய்வை நான் எதிபார்க்கவே இல்லை. உங்கள் கருத்துக்கள் உண்மையாய் இருப்பின் உங்கள் பெயரும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
  உங்களது தமிழ் புலமை என்னை ஆச்சர்யபட வைக்கின்றது. தாங்கள் தமிழாசிரியரா?

  பதிலளிநீக்கு
 4. @ புரட்சிமணி.

  # சென்ற வருடம் நடந்த செம்மொழி மாநாட்டில் இது போன்ற கட்டுரைகளுக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இந்தத் தொடரின் 9 ஆம் பதிவைப் படியுங்கள்.

  # உள்ளுறைச் சான்று (INTERNAL EVIDENCE) என்று நமது நூல்களில் உள்ள கருத்துக்களின் அடிப்படையில் நமது வரலாற்றை ஆராய வேண்டும். அவை தொல் பொருள் ஆராய்ச்சி, மரபணு ஆராய்ச்சி, கடல் மட்ட ஆராய்ச்சி (குமரிக்கண்டத்தைக் கடல் கொண்டு விட்டது என்று தமிழ் நூல்கள் சொல்வதால்), இவை போன்ற பிற வகைப்பட்ட ஆராய்ச்சிகளுடன் ஒத்துப் போகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படிப்பார்த்தால் ஆரியப் படையெடுப்பு என்பது நடக்கவில்லை என்பதையும், திராவிடம் என்னும் அடையாளம் தமிழனுக்குக் கிடையாது என்பதையும் தெரிந்து கொள்ளலாம் என்பது இந்தத் தொடரின் நோக்கம்.


  # பெயருக்காகவோ, பொருளுக்காகவோ இதை எழுதவில்லை. பன்முகக் கோணத்தில் பார்க்கும் பழக்கமும், எந்த ஒரு கருத்தானாலும், புத்தகமானாலும் மூலத்துக்குச் சென்று பார்க்கும் வழக்கமும் இருப்பதால், எதை, ஏன் சொன்னார்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. இதை ஒரு சுடோகு புதிருடன் ஒப்பிடலாம். ஆரம்பத்தில் ரொம்ப நேரம் அங்கு இங்கு என முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் ஒரு பிடிமானம் கிடைத்து விடும். அதற்குப் பிறகு மற்ற விடைகள் எல்லாம் சட சடவென்று கிடைத்து விடும். அது போலத்தான் இதுவும். இதிஹாச, புராணங்கள், சங்க நூல்கள் ஜோதிடம், வேதாந்தம், அறிவியல் கண்டுபிடுப்புகள் என்று எல்லாவற்றையும் கவனிக்கும் போது, ஒரு கட்டத்துக்கு மேல், ஒன்றுக்கொன்று இயைந்து கருத்துக்கள் தெரிகின்றன. அப்படித் தெரியும் கருத்துக்களை எழுதுகிறேனே தவிர, முதலிலேயே ஒரு முடிவை (assumptions) வைத்துக் கொண்டு அதை நோக்கி ஆராயவில்லை. ஆனால் தமிழர் பற்றி எழுதும் எந்தக் கட்டுரையிலும் ஆரியன் வந்தான், அவனால் பாதிப்படைந்த திராவிடன்தான் தமிழன் என்னும் ஒரு கருத்தை வைத்துக் கொண்டுதான் ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

  # சுடோக்கு போல புதிரை விடுவித்துக் கொண்டு செல்லும் போதுதான், கங்கை - சேது பற்றிய கட்டுரையும், வெள்ளத்தில் தப்பிய மனு எங்கு சென்றான் என்ற கருத்துக்களும், சாகத்தீவின் சாகை மரமும், பாலை மரமும் ஒன்றே என்னும் கருத்தும் கிடைத்தன. கால்டுவெல் சொன்ன திரவிட- திரமில, தமில, தமிழ என்னும் திரிபு தமிழ் இலக்கணப்படி அமைகிறதா என்று தேடியபோதுதான், எழுத்துக்களின் பிறப்பியலுக்கு மூலம் வேதம் என்பதும், அந்தப் பிறப்பியலை அந்தணர்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் என்று தொல்காப்பியர் சொன்னதும் தெரிய வந்தது. கால்டுவெல் சொன்ன எழுத்துத் திரிபு, தமிழ் இலக்கணப்படி அமையவில்லை என்பதும் தெரிய வந்தது. இதை எந்தத் தமிழ்ப் புலமை உடையவராவது சொல்லியுள்ளாரா? இலக்கணத்தால் செம்மைப் படுத்தப்பட்ட தமிழ், தன்னுடைய பெயரை எப்படி ஒரு தவறான திரிபிலிருந்து பெற்றிருக்க முடியும் என்று எந்த தமிழ் ஆராய்ச்சியாளராவது சொல்லியுள்ளாரா? இல்லை. அது ஏன் என்று தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்.

  # //தாங்கள் தமிழாசிரியரா? //பழம் தமிழ் நூல்களைப் படித்துப் பரவசம் அடைபவள். அவ்வளவே.

  பதிலளிநீக்கு
 5. தங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி
  //எழுத்துக்களின் பிறப்பியலுக்கு மூலம் வேதம் என்பதும், அந்தப் பிறப்பியலை அந்தணர்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் என்று தொல்காப்பியர் சொன்னதும் தெரிய வந்தது.//
  இதன்படி நீங்கள் சொல்லவருவது சமஸ்கிருதம் தான் உலகில் முதலில் தோன்றிய மொழி என்பதா?
  இது சம்பந்தமான தொல்காப்பியரின் கூற்றை தந்தால் நன்றாக இருக்கும்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 6. ’தமிழ்ப் பார்ப்பனர்’ கட்டுரையில் பிறப்பியல் சூத்திரத்தையும், மற்றும் அதனுடன் தொடர்புடைய சூத்திரங்கள், அவற்றின் எண் போன்றவற்றைக் கொடுத்துள்ளேன்.

  அவை சொல்லும் கருத்துக்கள் மூலம், வேதம் முதலில் தோன்றியது. வேதம் என்பது ரிஷிகள் தங்கள் தவத்தினால் தந்தது. அந்த வேத உச்சரிப்பின் மூலம் சொற்கள் நமது உடலில் எங்கு எப்படி பிறக்கின்றன என்று தெரிந்துக் கொள்ளலாம். அதாவது வேதம் தோன்றின பிறகுதான் வியாகரணம் முதலிய வேதாங்கங்கள் தோன்றின. இலக்கணங்கள் தோன்றின.
  வேதம் மூலம் சொற்களின் பிறப்பைத் தெரிந்து கொண்டு அகத்தியர் பேசு மொழியாக இருந்த தமிழுக்கு இலக்கணம் தந்து செம்மைப்படுத்தினார். ஒரு புறம் பாணினிக்கு சமஸ்க்ருத இலக்கணமும், மறுபுறம் அகஸ்தியருக்குத் தமிழ் இலக்கணமும் சிவ பெருமான் கற்றுக் கொடுத்தார் என்று புராணங்கள் சொல்வதால், மக்கள் பேசும் மொழிகளாக சமஸ்க்ருதமும், தமிழும் ஒரே காலக் கட்டத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று புலனாகிறது. ஆனால் எப்பொழுது தோன்றியது என்று வேதத்துக்குக் காலவரை இல்லை.

  இதுவரை வந்துள்ள மொழி ஆராய்ச்சிகளும், தமிழ்ச் சொற்களும், சமஸ்க்ருதச் சொற்களும் ஒரே காலக்கட்டத்தில், ஒரே இடத்தில், ஒரே சூழ்நிலைகள விவரிக்க உருவாயின என்பதே. அவற்றைத் தக்க இடத்தில் இந்தத் தொடரில் தருகிறேன்.

  அந்த ஆராய்ச்சிகளில் அவை தோன்றிய இடம் என்று சொல்லப்படுவது தெற்கு ஆசியா. அங்கு ஒரு MISSING LINK ஆக சாகத்தீவு இருந்தது. அது பிற்காலத்தில் தென்னன் தேசமாக இருந்து பிறகு கடலில் மறைந்தது என்பதே என்னுடைய கருத்து.

  பதிலளிநீக்கு
 7. (தொடர்ச்சி)
  சாகத்தீவிலும், பிறகு தென்னன் தேசத்திலும் தமிழும், சமஸ்க்ருதமும், வேதமும் வாழ்ந்து, அங்கிருந்துதான் பிற இடங்களுக்குப் பரவியது.

  2-ஆம் ஊழி முடிந்து கபாடபுரத்தில் 2ஆம் சங்கம் ஆரம்பித்த போது முதலில் 48 சமஸ்க்ருத சொற்களே 48 சங்கப் புலவர்களாகவும், 49 ஆவதாக சிவ மெருமானும் சங்கம் ஆரம்பித்தனர் என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது என்பதை இந்தத் தொடரில் முன்பே எழுதியுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 8. தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி...
  மற்றும் ஒரு சந்தேகம் தவறாக என்ன வேண்டாம்
  //2-ஆம் ஊழி முடிந்து கபாடபுரத்தில் 2ஆம் சங்கம் ஆரம்பித்த போது//
  கபாடபுரத்தில் முதல் தமிழ்சங்கம் தோன்றியதாக படித்த ஞாபகம்

  பதிலளிநீக்கு
 9. //சாகத்தீவிலும், பிறகு தென்னன் தேசத்திலும் தமிழும், சமஸ்க்ருதமும், வேதமும் வாழ்ந்து,//

  அது என்ன வேதமும்? அதுவும் தமிழ், சமஸ்கிருதம் போல் ஒரு மொழியா?
  நன்றி

  பதிலளிநீக்கு
 10. R.Puratchimani சொன்னது…

  //2-ஆம் ஊழி முடிந்து கபாடபுரத்தில் 2ஆம் சங்கம் ஆரம்பித்த போது//
  கபாடபுரத்தில் முதல் தமிழ்சங்கம் தோன்றியதாக படித்த ஞாபகம்//

  திரு புரட்சி மணி அவர்களே,
  நீங்கள் இந்தத் தொடர் முழுவதும் படிக்காமல் கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரிகிறது. மேலே உள்ள உங்கள் கேள்விக்குப் பதில் இந்தத் தொடரின் பல கட்டுரைகளிளும் சொல்லப்பட்டுள்ளது. படிக்கவும்.

  //அது என்ன வேதமும்? அதுவும் தமிழ், சமஸ்கிருதம் போல் ஒரு மொழியா?//

  வேத சமஸ்க்ருதம் வேறு, பேச்சிலும், எழுத்திலும் இருக்கும் சமஸ்க்ருதம் வேறு. 19 ஆம் கட்டுரையில் இதைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. படிக்கவும்.

  பதிலளிநீக்கு
 11. ஆம் திருமதி ஜெயஸ்ரீ அவர்களே, நான் முழுவதும் படிக்காமல் தன் கேள்வி கேட்கிறேன். ஏன் எனில் உங்களின் அருமையான தளத்தை இப்பொழுதுதான் பார்க்க நேர்ந்தது. அதற்குள் அனைத்து பதிவுகளையும் படித்துவிட்டு கேள்வி கேட்பது சாத்தியமில்லை. அதற்குள் வந்த சந்தேகமும் மறந்து விடும். ஆதலால் தான் இப்படி :) கவலைப்படாதீர்கள் இனி தொந்தரவு செய்ய மாட்டேன். நன்றி. தங்களுடைய விளக்கத்திற்கும் நன்றி :)

  பதிலளிநீக்கு
 12. //அதற்குள் அனைத்து பதிவுகளையும் படித்துவிட்டு கேள்வி கேட்பது சாத்தியமில்லை. அதற்குள் வந்த சந்தேகமும் மறந்து விடும். ஆதலால் தான் இப்படி //

  படிப்பவர்கள் கோணத்திலிருந்து இது சரியே. நான் தான் இதை உணரவில்லை. எனவே கேள்விகளைக் கேளுங்கள். அவற்றுக்கான விளக்கங்கள் முன்பே எழுதப்பட்டிருந்தால், அந்தக் கட்டுரை எண்களைச் சுட்டிக் காட்டுகிறேன்.

  மேலும் சில கேள்விகள் நான் சிந்திக்காத விஷயத்தைப் பற்றி இருந்தால், அவற்றை இனி வரும் கட்டுரைகளில் சேர்க்க முடியுமா என்று பார்க்கிறேன். எனவே கேளுங்கள்:)

  பதிலளிநீக்கு
 13. தமிழில் வால்மீகி எழுதியுள்ளாரா? திருவான்மியூர் அப்படின்னு எப்படி பேர் வந்தது

  பதிலளிநீக்கு
 14. கேள்வி கேட்பதை வரவேற்றமைக்கு மிக்க நன்றி. எனக்கு தமிழ் செய்யுளை புரிந்து கொள்ளும் அளவுக்கு திறமை இல்லை. இருந்த பொழுதிலும் ஒரு செய்யுளை வைத்து ஒரு சந்தேகம் கேட்கிறேன். பிழை இருப்பின் பொறுத்தருள்க.

  உங்களுடைய பத்தாவது கட்டுரையில்
  //அந்தக் காமன் பண்டிகை நிறைவேறிய கையோடு , அதற்கடுத்த பௌர்ணமியில், அதாவது சித்திரா பௌர்ணமியில், இந்திர விழா நடந்தது.
  அதைக் காணத், தன் துணையுடன் வந்த அந்த இளைஞனை, இளங்கோவடிகள் விஞ்சை வீரன் என்கிறார். அவனது ஊர் வெள்ளி மலை என்று சொல்லப்படும் பனி படர்ந்த இமய மலைக்கும் அப்பால் உள்ள வட சேடி நாடு என்கிறார் அவர். //

  என்று எழுதி உள்ளீர்கள்.
  நீங்கள் பின்வரும் படலை வைத்து இதை எழுதியுள்ளீர்கள் என நினைக்கின்றேன் . இந்த பாடலில் வெள்ளிமலை இமயமலையை தான் குறிக்க வேண்டுமா? வெள்ளியங்கிரி மலையை குறிப்பதற்கு வாய்ப்பில்லையா? (இது சின்னப்பிள்ளை தன்மான கேள்வி என்று எனக்கு தெரியும் . நான் உங்களிடம் இதன் மூலம் கேட்பது இப்பொழுதுள்ள வெள்ளியங்கிரி மலை பற்றி ஏதேனும் வரலாற்று குறிப்புகள் இருந்து அது இதனுடன் ஒத்துப்போகிறதா என்பதை அறியவே .)
  மேலும் இங்கு "வட சேடி நாடு" என்று குறிப்பிட பட்டதாக தெரியவில்லையே வியன்பெருஞ் சேடி என்று தானே உள்ளது.
  மேலும் பின்வரும் இரண்டு வரியானது "வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
  கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக் " கமக்கடவுளை குறிப்பது போல் உள்ளதே! தங்கள் கருத்து. இந்த பாடலுக்கு விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.
  நான் உங்களை சோதிப்பதாக எண்ணாதீர்கள் என் சந்தேகத்தை தீக்கத்தான் இந்த கேள்வி.
  மிக்க நன்றி .

  // வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
  கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்
  கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
  விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
  தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்//

  பதிலளிநீக்கு
 15. @ Jaisankar jagannathan
  திருவான்மியூர் மட்டுமல்ல, தமிழ் நாட்டில் இன்னொரு இடமும் இருக்கிறது. இன்னும் ஓரிரு தினங்களில் வால்மீகி பற்றிய கட்டுரை வெளிவரும்.

  பதிலளிநீக்கு
 16. @ Puratchimani

  சிலப்பதிகாரம் தரும் விளக்கங்களுக்கு, 1959 ஆம் வெளியிடப்பட்ட, “சிலப்பதிகார மூலமும்,உரையும்” (அடியார்க்கு நல்லார் உரையைத் தழுவி ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதியது) புத்தகத்தைப் பின்பற்றி கருத்துக்களைத் தருகிறேன்.
  அதன் அடிப்படையில் நீங்கள் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு விளக்கங்கள்:-

  # அந்த உரையில், பெரிய வெள்ளி மலையிலே இருக்கும் அகன்ற பெரிய வட சேடிக் கண்ணே -என்று சொல்லப்படுகிறது.


  # வட சேடியை ஆண்ட உபரிசிரவஸு பற்றி மஹாபாரத, புராணங்களில் விவரங்கள் இருப்பது, அந்த வஸு இந்திரக் கொடியை முதலில் பெற்று இந்திர விழா செய்தான் என்னும் செய்தியையும், அந்த விழாவைச் செய்யும் முறையை வராஹமிஹிரர் தனது பிருஹத் சம்ஹிதையில் ஒரு அத்தியாயம் முழுவதும் விளக்குவதும், அந்த வஸு இந்திரனுக்கு நண்பன் என்பதும், இன்ன பிறவும் CROSS REFERENCS. இந்த விவரங்கள் ஆங்காங்கே இந்தத் தொடரில் வந்துள்ளன.

  # விஞ்சை வீரன் என்பதை வித்தியாதரர் என்றே அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். இந்த வித்யாதரர்கள் இமயமலைப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என்பதற்கு மஹாபாரத்தில் குறிப்புகள் உள்ளன. வித்தியாதரகள் கந்தர்வ வாழ்க்கை வாழ்ந்த கந்தர்வர்களைப் போன்றவர்கள். இவர்கள் தங்கள் துணையுடன் சந்தோஷமாகத் திரிந்து கொண்டிருப்பார்கள். அப்ஸரஸ், வித்யாதரர், கந்தர்வர் ஆகியோரும், உத்தரகுரு மக்களும் காம விளாயாட்டுகளுக்கும்,பெண்கள் தங்கள் விரும்பியவர்களுடன் இருப்பதற்கும் பெயர் போனவர்கள். 33- ஆம் கட்டுரையில் அப்படிப்பட்ட சமுதாயம் வாழ்ந்தது என்பது சொல்லப்பட்டுள்ளது.

  # இன்னும் இந்தத் தொடரில் வரப்போகும் கட்டுரைகளில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மக்கள் வாழ்ந்தனர் என்ற விவரங்கள் வருகின்றன. வைவஸ்வத மனு சரஸ்வதிப் பகுதிக்கு வந்த பொழுது (48 ஆம் கட்டுரை) மேற் சொன்ன பெண்களது வழியில், விருப்பப்படி வாழ்ந்த பெண்கள் இமயமலைப் பகுதிகளில் இருந்தனர். அதனால்தானோ, பெண்களுக்குக் கடுமையான கட்டுதிட்டத்தை மனு விதித்திருகக்லாம். உத்தரகுரு பற்றிய கட்டுரைகளில் மேலும் பல விவரங்களைப் படிக்கலாம்.

  # வடசேடியிலிருந்து கிளம்பி, அந்த ஜோடி வரும் வழியை சிலப்பதிகாரம் கடலாடு காதையில் 28 ஆம் வரி முதல் சொல்லப்பட்டுள்ளது. அதை இந்திய வரைபடத்தில் அந்தக் கட்டுரையில் காட்டியுள்ளேன்.
  “சிமயத் திமையமும் செழுநீர்க் கங்கையும்,
  உஞ்சையம் பதியும், விஞ்சத் தடவியும்,
  வேன்கட மலையும், தாங்கா விளையுட்
  காவிரி நாடுங்காட்டிப் பின்னர்ப்
  பூவிரி படப்பைப் புகார் மருங்கெய்தி”

  என்று சொல்லுமிடத்தே, இமயமலை தொடங்கி புகார் வரை அவர்கள் வந்த வழி தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

  # வடசேடிக்குரிய இந்திர விழாவும், வித்தியாதரர்கள் விரும்பும் காம விழாவும் புகார் நகரில் நடை பெறவே அவர்கள், இமயம் தாண்டி, புகார் தேடி வந்ததற்கான காரணமும் தெரிகிறது.


  என்வே வெள்ளிமால் வரை என்றது இமயமலையே.

  பதிலளிநீக்கு
 17. (தொடர்ச்சி)

  அடியார்க்கு நல்லார் உரையில் அந்த வித்தியாதர ஜோடி கிளம்பிய நாள், திதி போன்றவற்றையும், அதை விளக்கும் போது மதுரையில் கோவலன் வெட்டுண்ட நாள், திங்கள் ஆகியவற்றையும், அது தொடர்பாக சிலப்பதிகாரத்தின் பிற காதைகளையும் மேற்கோளிடுகிறார். அதன் படி அந்த வித்தியாதரர்கள் தங்கள் நாட்டில் பங்குனி மாதம் காமன் பண்டிகை கொண்டாடிவிட்டு, சித்திரைமாதம் புகாரில் கொண்டாடப்படும் இந்திர விழாவுக்கு வருகின்றனர். அவர்கள் கொண்டாடிய காமன் பண்டிகை இன்றைக்கும் ‘ஹோலிப் பண்டிகையாக’ வட இந்தியாவில் கொண்டாடப்படுவது. அது பங்குனிப் பௌர்ணமியில் கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த பௌர்ணமியில் புகாரில் இந்திர விழா கொண்டாடப்பட்டது.


  // வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
  கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்
  கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
  விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
  தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்//

  இந்த வரிகளில் ‘விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன்” என்பதில் விருந்தாட்டு என்பது ‘ஆண்டுதோறும் செய்யும் விழா’ என்று உரையில் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை விளக்கும் அடியார்க்கு நல்லார் வடசேடியில் விருந்தாட்டு விழா கண்ட விஞ்சை வீரன், அதே விழா அதற்கடுத்த மாதம் புகார் நகரில் கொண்டாடப்படவே அதற்குச் செல்லலாம் என தன் காதலிக்குச் சொல்லிக் கிளம்புகிறான் என்கிறார். அந்த விருந்தாட்டு விழா காமக்கடவுளுக்கு அவர்கள் செய்த விழா. அது முடிந்து அவர்கள் புகார் வந்து சேர ஒரு மாதம் ஆனது என்பதும் தெரிகிறது. இதுவும் அவர்கள் பயணம் செய்த தூரத்தை உறுதி படுத்துகிறது.

  மேலும் இந்தப் பகுதியை விவரிக்கையில்தான் முசுகுந்தனைப் பற்றியும், நாளங்காடிப் பூதம் பெறப்பட்ட வரலாற்றையும் அடியார்க்கு நல்லார் விளக்குகிறார். அந்த முசுகுந்தன் சோழர்களது முன்னோன். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் அவன் பெயர் வருகிறது. (கட்டுரை 11) அவன் இந்திரனுக்குச் செய்த உபகாரத்தினால் இந்தப் பூதத்தைப் பெற்றான். இந்திரன், இந்திரக் கொடி, வடசேடி மக்கள் ஆகியோர்க்கும் சோழ மன்னர்களுக்கும் ஏற்பட்ட தொடர்பு இந்த விவரங்கள் மூலம் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 18. ஒரு வேண்டுகோள். குறிப்பிட்ட கட்டுரையில் எழும்பும் கேள்விகளை, அந்தந்த கட்டுரைகளின் கருத்துரைப் பகுதிகளில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.அந்தக் கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள், தொடர்ச்சியாக அவற்றைப் படிக்க ஏதுவாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 19. @jayasree
  தங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி நன்றி. :))

  பதிலளிநீக்கு
 20. //2-ஆம் ஊழி முடிந்து கபாடபுரத்தில் 2ஆம் சங்கம் ஆரம்பித்த போது முதலில் 48 சமஸ்க்ருத சொற்களே 48 சங்கப் புலவர்களாகவும், 49 ஆவதாக சிவ மெருமானும் சங்கம் ஆரம்பித்தனர் என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது என்பதை இந்தத் தொடரில் முன்பே எழுதியுள்ளேன்.//
  இதற்க்கு நம்பும்படியாக ஒரு விளக்கம் தாருங்களேன் ஜெயஸ்ரீ அம்மா அவர்களே.. சிவபெருமான் உடுக்கை அடித்ததாகவும் அதில் இருந்து இரண்டு மொழிகள் பிறந்தன என்றும் கூறுவதன் உண்மை பொருள் என்ன?. அதில் ஏன் தமிழும் சமஸ்க்ரிதமும் வர வேண்டும்?. ஏதாவது ஒன்று மட்டும் வந்திருக்கலாமே?. 48 சமஸ்கிரத எழுத்துக்கள், 48 சங்க புலவர்களாக மாறின என்றால் அதன் பொருள் என்ன?.

  பதிலளிநீக்கு
 21. @ R. Shanmugham

  இந்தத் தொடரின் 2ஆம் கட்டுரையான ‘சங்கப் புலவர்கள் பொய்யர்களா?” என்பதில் சொல்லப்பட்டுள்ளதே என் பதில்.

  அந்த நாளில் அவர்கள் எழுதியிருக்கிறார்கள், என்ன எழுதியிருக்கிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை. அதுதான் உண்மை. அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைத் தேட வேண்டுமே தவிர, நம்மால் நம்ப முடியவில்லை என்பதற்காக அவற்றை ஒதுக்க முடியாது. அவற்றில் எத்தனையோ அர்த்தங்கள் அடங்கி இருக்கின்றன. இந்தத் தொடரில் 19 ஆவது கட்டுரையில் ஐதரேய உபநிஷத்திலிருந்து மேற்கோளிட்டிருப்பேன் - எதையும் மறைத்துச் சொன்னார்கள். அதனால் தான் வேதங்களுக்கே மறை என்ற பெயர் ஏற்பட்டது. என்ன சொன்னார்கள் என்பதைத் தேடுபவனுக்கு அது தெரியவரும்.

  48 அக்ஷரங்கள் புலவர்களாகப் பிறந்தன என்று சொன்னதையும் இப்படித்தான் தேடி, ஆராய்ந்து கண்டு பிடிக்க வேண்டும். அவற்றை spoon feeding செய்ய விருப்பமில்லை. இந்தத் தொடருக்குத் தேவையான விவரங்களுக்கு விளக்கம் தருகிறேன். அதற்கு மேல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அப்பியாசம் செய்து, ஆழ்ந்து சிந்தித்துத் தேடவும்.

  பதிலளிநீக்கு