திங்கள், 18 ஜூலை, 2011

63. சூத்திரன் வேதம் படிக்கக்கூடாதா? (தொடர்ச்சி)

தமிழ் நிலங்களில் நாலாம் வர்ணத்தவரான வேளாண் மக்களை அடக்கியோ, ஒடுக்கியோ இழிவு படுத்தியோ நடத்தவில்லை என்பதற்குத் திருக்குறளின் உழவு அதிகாரமே சான்று.
வேளாண் மக்களே அச்சாணி என்றும்,

உலகுக்குத் தலை போன்றவர்கள் என்றும் கருதப்பட்டனர்.

இவர்களே அரசர்களுக்குச் செல்வத்தைப் பெருக்கிக் கொடுத்தனர்.

இவர்கள் இல்லையென்றால் தவ முனிவர்கள் கூட தவித்து விடுவார்கள்.

இவர்கள்தான் உண்மையில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் என்று சொல்லக்கூடிய
தகுதியுடன் இருப்பவர்கள்.

மற்றவர்கள் எல்லாம்தொழுதுண்டு இவர்களுக்குப் பின் செல்பவர்கள்
என்றெல்லாம் பலபடியாகத் திருக்குறள் கூறுவது,
இந்த மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த உயர்வைப் பறை சாற்றுகிறது.


இவர்கள் யாரிடமும் கை நீட்டினதில்லை என்கிறது திருக்குறள்.
ஆனால் இவர்களிடம் மற்றவர்கள் கை நீட்டிப் பெற்றனர்.
அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர் என்பது உண்மையே என்பதை
நச்சினார்க்கினியர் சொல்லும் நாலாம் வர்ணத்தவருக்கான ஆறு தொழில்களுள் விருந்தோம்பல் ஒன்று என்பதன் மூலம் தெரிகிறது. (பகுதி 62).

வேறு எந்த வர்ணாத்தவருக்கும் விருந்தோம்பல் சொல்லப்படவில்லை.
ஆனால் நான்காம் வர்ணத்தவருக்கு மட்டும் அது சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்குக் காரணம் ஒருவனுடைய பசியாற்றுகிற திறமை
இந்த வர்ணத்தவருக்குத் தான் உண்டு.
வீட்டுக்கு வருபவர்களுக்கு இல்லை என்று உணவு கொடுப்பவர்கள் இவர்கள்.
அப்படிப்பட்ட நிலையில் இருந்தார்கள் என்றால்
அவர்களை அடக்கப்படவேண்டியவர்கள் என்றோ,
தாழ்த்தப்பட்டவர்கள் என்றோ
இந்த வர்ண முறை அவர்களைப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது.


இந்தத் தமிழ் மண்ணில் அரசர்கள் கோலோச்சிய வரையிலும்,
அவர்களுக்கு நல்ல அந்தஸ்து இருந்தது.
தமிழ் அரசர்கள் அடிக்கடி ஒருவர் மீது ஒருவர் படையெடுத்தாலும் அப்பொழுதெல்லாம், வேளாண் மக்களையும்,
அவர்கள் உழும் வயல்களையும் அவர்கள் தொந்திரவு செய்ததில்லை.
வென்ற நாடுகளில் இருந்த மக்களையும்,
தங்கள் மக்களாக அரவணைத்து அவர்கள் மூலம் செல்வம் ஈட்டினர்.
படம் வயல்


ஆனால் அந்த நிலை ஒரு காலக்கட்டத்தில் மாறியது.
காபாற்ற வேண்டிய அரசன் காப்பாற்றவில்லை என்றால்
அப்பொழுது அவர்கள் வாழ்க்கை மாறி விடுகிறது.
அப்படிப்பட்ட காலம் எப்பொழுது, ஏன் எழுந்தது என்பதை
இந்தத்தொடரின் முக்கியக் கட்டத்தில் காணலாம்.
என்றைக்குமே யாருக்குமே அரசர்கள்தான் புரவலர்களாக இருந்திருக்கிறார்கள்.
அந்த அரசர்கள் இயல்பு திரிந்த போது
இந்த மக்களும் அவதியுற்றனர்.
இதற்குப் பார்ப்பனனும், வர்ண முறையும் காரணமில்லை.


ஆட்சி நடத்தப்படும் விதமே இவர்கள் பெற்ற அவதிக்கு காரணமானது
என்பதைப் புரிந்துக் கொள்ள,
நம்மை ஆண்ட வெளிநாட்டாரை வைத்துச் சொல்ல முடியும்.
பாரதம் முழுவதும் இருந்த பல வேறு அரசர்கள்,
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.
ஆனால் வென்ற நாடுகளில் இருந்த வேளாண் மக்களையும்,
அவர்கள் செல்வமான கழனிகளையும் அழிக்கக் கூடாது என்பதை
ஒரு தர்மமாகக் கொண்டிருந்தார்கள்.


அந்தத் தர்மம் படையெடுத்து வந்த முஸ்லீம் அரசர்களுக்கு இல்லை.
அவர்களுக்குப் பின் நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேயனுக்கும் இல்லை.
நம்மை அழித்து, நம் சொத்தைத் தங்கள் ஊருக்கோ,
அல்லது தங்கள் அரசர்களுக்கோ கொடுக்க வேண்டும் என்பதுதான்
அவர்களது தர்மமாக இருந்தது.


நம்மிடம் இருந்தவற்றை அபகரித்தவர்கள் அவர்கள்.
அதனால் பாதிப்புக்குள்ளான மக்களுக்குள் முக்கியமானவர்கள் இந்த வேளாண் மக்கள்.
அந்தப் பாதிப்பின் காரணத்தை அறியாமல்,
பார்ப்பனர்களையும், வர்ண முறையையும் அதற்குக் காரணமாக்கும் திராவிடவாதம்,
முன்பு கராஷிமா அவர்கள் சொன்னார் என்று மேற்கோளிட்டோமே
அது போல அறிவுக்குப் புறம்பானது, உண்மையில்லாதது (பகுதி 54)


வேளாண் மக்களும், கல்வியும்.

வணங்கப்படத்தக்கவர்களான நாலாம் வர்ணத்தவர்களுக்கு,
கல்வி மறுக்கப்படவில்லை.
வேதமொழிந்த கல்வியை அவர்கள் படிக்க வேண்டும் என்பது
அவர்களுக்கான ஆறு தொழில்களுக்குள் ஒன்றாக இருந்தது.
அந்தக் கல்வி பெறுவதில் தடை இல்லை, வர்ண வித்தியாசம் இல்லை.


பழமொழி 116இல்
ஆற்றவும் கற்றார் அறிவுடையார், அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை,
அந்நாடு வேற்று நாடாகா, தமவேயாம்
அதனால் கல்லாமல் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுவதால்
கல்வி கற்பதற்குத் தடை ஏதும் இருந்திருக்கவில்லை என்று தெரிகிறது.


இந்தப் பழமொழிச் செய்யுள் மூலம், கற்றவர் பல நாடுகளுக்கும் சென்றனர் என்றும்,
அப்படிச் சென்ற நாடுகளெல்லாம் அவர்களுக்கு வேற்று நாடுகள் போல இல்லை என்றும்,
அந்த நாடுகள் அவர்களை அரவணைத்துக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிகிறது.
அவர்கள் கற்ற கல்வி, இன்றைய திராவிடவாதிகள் சொல்வதைப் போல மொழிப் புலமை அல்ல. அதாவது தமிழன், தமிழை மட்டுமே வைத்துக் கொண்டு இதுமட்டுமே கல்வி என்று இருக்கவில்லை. வெறும் தமிழ் மொழிப் புலமை மட்டுமே இருந்திருந்தால், அவர்களால் வெளி இடங்களுக்குச் சென்று அங்கு தங்களை இன்றியமையாதவர்களாக நிலை நாட்டிக் கொண்டிருக்க முடியாது


எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சொல்லியிருப்பதால்
அறிவு சார்ந்த கல்வியாகவும்,
வாழ்கை முறை, தர்ம நிலை ஆகியவற்றைப் புகட்டும் கல்வியாகவும்
இருந்திருக்க வேண்டும்

அதனால் அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பு அடைந்திருக்கிறார்கள்.


அறு வகைப்ப்பட்டப் பார்ப்பியலில் நான்கு வகைகள் இப்படிப்பட்ட கல்வியையும், தமிழ், சமஸ்க்ருதம் ஆகிய இரண்டு மொழிப் புலமையையும் தருபவை. அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டே அவர்கள் பெருமை பெற்றிருக்க முடியும்.
ஆனால் இவை எல்லாம் பொருள் ஈட்டும் முறையைச் 
சொல்லித் தரும் கல்வி அல்ல.

பொருள் ஈட்டுவதற்கு, நாலாம் வர்ணத்தவருக்கு உழவு இருந்தது.

மூன்றாம் வர்ணத்தவருக்கு வாணிகம் இருந்தது.

அரசர்களுக்கு ஐந்து வகைகள் இருந்தன. ஐவகை மரபின் அரசியல் பக்கம்என்று தொல்காப்பியம் சொல்வது பின் வரும் ஐந்து வகைகளில் பொருள் சேர்ப்பதே என்று நச்சினார்க்கினியார் சொல்கிறார்.

(1)  சுங்கம், வரி போன்ற வழிகள் மூலம் பொருளைப் பெருக்குதல்,
(2)  பகைவனை வென்று அவன் நாட்டிலிருக்கும் செல்வத்தை அடைதல்,
(3)  வாரிசு இல்லாமல் ஒருவர் இறந்து விட்டால், அவரது செல்வத்தைப் பெறுதல்,
(4)  பொருள் இல்லாத காலத்தில் வாணிபம் செய்து பொருள் தேடல்,
(5)  அறத்தில் திரிந்தாரைத் தண்டிக்கும் விதமாக அவரது பொருளைப் பெறுதல்

நான்கு வர்ணத்தவர்களில்
பார்ப்பனர்களுக்குப் பொருள் சேர்க்கும் முறை சொல்லப்படவில்லை.
மாணவர்கள் தருவதையும், தானமாகப் பெருவதையும் வைத்துக் கொண்டே
அவர்கள் வாழ்க்கை நடத்தினார்கள்.
அந்தப் பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்த கல்வி பொருளாதாரக் கல்வி அல்ல.
அது அறக்கல்வியாகும்.
அந்தக் கல்வியை நான்காம் வர்ணத்தவர்கள் பெற வேண்டும் என்பது
அவர்களுக்கான வர்ண விதியான ஆறு தொழில்களில் ஒன்று.


அந்தக் கல்வி அவர்களுக்குப் பொருள் ஈட்டும் முறையைச் சொல்லித்தரவில்லை.
ஆனால் அந்தக் கல்வி அறிவைக் கண்டு பிறர் இவர்களுக்குப் பொருள் தந்தனர்.

எங்கோ கிராமப்புறத்தில் இருக்கும் பாணர்கள் அப்படிப்பட்ட கல்வியால் பெற்ற
கவி இயற்றும் திறமையால் அரசர்களிடமிருந்து பொருள் ஈட்டினர்.
எந்த அரசன் வாரிக் கொடுக்கும் வள்ளலாக இருந்தானோ, அவனைத் தேடி
நாடு விட்டு நாடு சென்று, பாடிப் பரிசில்கள் பெற்றிருக்கின்றனர்.
அப்படி அவர்கள் பாடின பாடல்களில், உலக அறிவும், அறநூல்கள் அறிவும் மிகுந்து இருப்பதைச் சங்க நூல்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்கிறோம்.



வேதமொழிந்த கல்வி.

ஆறு பார்ப்பியலில், 4 வகைகளில் வரும் வேதமொழிந்த கல்வி என்பது,
அறநூல்கள் சொல்லும் அறக் கல்வி ஆகும். (பகுதி 61)
அற வழிக் கல்வி என்பது அறம், பொருள், இன்பம் என்னும் புருஷார்த்தங்களைக் கொண்டது.

அறம், பொருள், இன்பம் என்றால் என்ன?
ஒருவன் நடந்து கொள்ளும் விதம் அறவழியில் இருக்க வேண்டும்.
பொருள் ஈட்டுவது அறவழியில் இருக்க  வேண்டும்.
இன்பம் நுகர்வதும் அறவழியில் இருக்க வேண்டும்,
இப்படி இருந்தால் வீடு பேறு கிடைக்கும்.
அதனால் அறம், பொருள் இன்பத்தை ஒருவன் ஒழுகாகப் பேண வேண்டும்.

இது வேதக் கருத்து.

இதுவே திருக்குறள் முதல் புறநானூறு உள்ளிட்ட
அனைத்து சங்க நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது


இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் புறநானூறு என்பதே
அறநிலை, பொருள்நிலை, இன்ப நிலை என்று மூன்று பகுதிகளாக இருந்திருக்க வேண்டும் என்பது டா. .வே.சா அவர்களது கருத்து. அவருக்குக் கிடைத்த ஒரு ஏட்டுச் சுவடிப் பிரதியில் அறநிலை என்ற தலைப்பில் புறநானூறு ஆரம்பித்திருந்தது. அப்படித் தலைப்பிட்ட பகுதிகளாக பிற பிரதிகள் கிடைக்காததால் இப்பொழுது இருக்கிற புற நானூறாகக் கொடுத்திருக்கிறார். ஆனால்அறநிலைஎன்று ஒரு பிரதியில் காணப்படவே, பொருள் நிலை, இன்ப நிலை என்று பிற தலைப்புகளில் புற நானூறு இருந்திருக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக அவர் தொகுத்தபுற நானூறுமூலமும், உரையும் புத்தகத்தில் எழுதியுள்ளார். (1935 ஆம் வருடப் பதிப்பு)



ஆகவே அறம், பொருள், இன்பம் என்னும் வேத மதக் கருத்தே
தமிழர் பண்பாட்டுக் கருத்து ஆகும்.
அதை மனுவாதிகளும் பின்பற்றினார்கள் என்பதால்,
தமிழன் அதை வட இந்தியாவில் புகுத்தினான் என்று சொல்வது சரியல்ல
என்பது போலவே,
மனுவும் தமிழ் மக்கள் மீது அதைத் திணித்தான்
என்று சொல்வதும் சரியல்ல.
வேதத்தை எல்லோரும் பேணி வந்தனர்.
அதனால் அது தரும் வாழ்க்கையியலும்
இமயமலை முதல் தென் குமரி வரை பொதுவாக இருந்திருக்கிறது
அதைத்தான் கல்வியாகத் தமிழன் கற்றான் என்று தொல்காப்பியம் சொல்கிறது.
அது நான்காம் வர்ணத்தவருக்கு மறுக்கப்படவில்லை என்பதற்கு
ஒரு சான்று புற நானூறில் இருக்கிறது.



வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன் கட்படுமே (பு-நா-183)


அதாவது நான்கு பால் என்று நான்கு வர்ணங்கள் இருந்திருக்கின்றன.
அவற்றுள் மேல்பால், கீழ்ப்பால் என்பது மேலிலிருந்து கீழாக எண்ணுவதால் ஏற்படுவது. கீழ்ப்பால் என்னும் நான்காவது பாலைச் சேர்ந்த ஒருவன் கல்வியில் தேர்ச்சி பெற்றால் அவனிடம், மேற்பாலாக உள்ள முதல் மூன்று வர்ணங்கள் ஒன்றில் பிறந்தவனாக இருந்தாலும், ஒருவன் தலை வணங்கி அவன் சொன்னதற்குக் கட்டுப்படுவான்.


இதில் குதர்க்கம் கண்டுபிடிப்பவர்கள், கீழ்ப்பால் ஒருவன் கற்பின் என்று ஒருவன் கற்றுக் கொண்டால் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே அத்தி பூத்தாற்போல ஏதோ சிலரே கற்றிருக்க வேண்டும் என்று சொல்லலாம்.

அது சரியல்ல என்று தெரிந்து கொள்ள அந்தப் பாடல் சொல்லும் கருத்து முழுவதையும் தெரிந்து கொள்வது நல்லது

அந்தப் பாடல், கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதற்காக ஒரே வகையில் உள்ளவர்களுக்குள் கல்வியால் பேதம் ஏற்படும் என்று உதாரணங்களைச் சொல்கிறது.

அப்படிச் சொல்வது - ஒரே தாய் வயிற்றில் பிறந்தாலும், கல்வி கற்ற மகனிடம் அந்தத் தாய்க்கும் மனம் செல்லும்

அது போல ஒரே குடியில் பலர் பிறந்திருந்தாலும், அவர்களுள் மூத்தவனை வருக வருக என்று அழைக்காமல், இளையவனாக இருந்தாலும், கற்றவன் எவனோ அவன் பின்னால் அரசனும் செல்வான்

அதே போல வேற்றுமைகள் இருக்கும் நான்கு வர்ணத்தவர்களில், கடைசி வர்ணத்தவன் கற்றவன் என்றால், அவனுக்கு முன்னால் இருக்கும் மூன்று வர்ணதவர்களும் அவனிடம் கட்டுப்படுவார்கள்.

இந்தக் காரணங்களினால், உதவி செய்தோ, பொருள் கொடுத்தோ எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்கிறது இந்தச் செய்யுள்.

இதில் வேற்றுமை தெரிந்த நாற்பால் என்று சொல்லி, அவர்களுள் கீழ்ப்பால் கல்வி கற்றலைப் பற்றிச் சொல்லவே, அந்த வேற்றுமை என்பது கல்வியினால் ஏற்பட்ட வேற்றுமை அல்ல என்பது தெளிவாகிறது. பிற வழிகளில் அந்த வேற்றுமை இருந்திருக்கிறது. அந்த வேற்றுமைகள் கல்வி கற்பதற்குத் தடையாக இல்லை என்றும் தெளிவாகிறது.

இந்தச் செய்யுளை எழுதியவர் ஒரு அரசர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

அவர் பாண்டிய அரசர் ஆவார்.

அதிலும் அவர் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் அரசனாவார்.

இந்த அரசன், கோவலன் சாவுக்குக் காரணமாகி, தான் தவறு செய்து விட்டோம் என்று தெரிந்த கணமே அரியணையில் உயிரை விட்ட நெடுஞ்செழியனாவான் என்பதை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தின் இறுதியில் தெரிந்து கொள்ளலாம்.





அவன் ஆரிய வர்த்தம் என்று விந்திய மலைக்கு வடக்கே இருந்த இடங்களுக்குச் சென்று அங்கிருந்த அரசர்களை வென்றிருக்கிறான் என்பதை ஆரியப்படை கடந்தவன் என்ற சிறப்புப் பெயர் மூலம் தெரிந்துக் கொள்கிறோம்

வெறுக்கப்பட வேண்டியது ஆரியம் என்றால்,
ஆரியர்களே, தமிழ்ர்கள் மீது மனுவாதித் திணிப்பு செய்தனர் என்று இந்தத் திராவிடவாதிகள் சொல்வது உண்மை என்றால்,
ஆரியப் படைகளை வென்ற அந்த அரசன், அந்த மனுவாதி வர்ணாஸ்ரமத்தைத் தன் நாட்டிலிருந்து விரட்டியிருக்கலாமே?

அப்படிச் செய்யாமல், வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் என்று என்று ஏன் செய்யுள் இயற்றிக் கொண்டிருக்க வேண்டும்?

அந்த வர்ணப்பகுப்பு, தமிழ் மக்களிடையே இயல்பாக இருந்திருக்கவேதானே அவன் அதைத் தவறாகவோ, அல்லது ஆரியத்திணிப்பு என்றோ கருதவில்லை.?


பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும் என்று அனைத்து மக்களும் கல்வி கற்க வேண்டும் என்று அந்நாளில் சொன்னதற்குக் காரணாம், கல்வியானது ஒழுக்கத்தைத் தரும் என்பதால்தான்.
 
ஒழுக்க சீலனான எந்த வர்ணத்தவராக ஒருவர் இருந்தாலும் அவருக்கு மரியாதை இருந்தது. அவர் சொல்லுக்கு மரியாதை இருந்த்து.

அப்படி ஒழுக்க நெறியில் ஒருவன் இருந்தால் அதுவே உயர் குடிப் பிறப்பு எனப்பட்ட்து.
குடி என்பது வர்ணத்தில் வரவில்லை எந்த வர்ணத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், நன்னெறியும், ஒழுக்க்மும் கொண்டிருந்தால் அவன் உயர்ந்த குடியினன் என்று சொல்லப்பட்டான். நாலடியாரிலும், திருக்குறளிலும் வேண்டிய அளவுக்கு இவற்றை விவரித்துள்ளார்கள். குடிப் பிறந்தார் குன்றா ஒழுக்கங் கொண்டார் என்னும் நாலடியார் (குடிப்பிறப்பு 4) செய்யுள், இந்த உயர் குடி என்பது ஒழுக்கத்தால் வருவது, வர்ணத்தால் வருவதல்ல என்பதைத் தெளிவு படுத்துகிறது.

ஒருவனுக்கு ஒழுக்கம் இல்லை என்றால் அதற்காக அவன் வர்ணத்தைக் குறை சொல்லவில்லை. ஒழுக்கமில்லை என்றால் அவன் கயவன் எனப்படுவான். மேலே மேற்கோளிட்ட அந்தச் செய்யுள் இதைச் சொல்கிறது. ஒழுக்கமுடையவர் உயர் குடிப் பிறந்தோர் என்ப்படுவர். ஒழுக்கமில்லாதவர் கயவராவார்.  

அந்த ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க்கிற கல்வி, ஆறு வகைப் பார்ப்பியலில் வருகிற வேதமொழிந்த கல்வி. தர்ம நூல்களும், ராமாயணமும், மஹாபாரதமும், புராணங்களும் தான் அந்த ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. அந்தக் கல்வியைக் கற்றவனைத் தலை வணங்கி இருக்கிறார்கள்

அவன் நான்மறை தெரிந்த பார்ப்பனனாக இருந்தால், அரசர் முதல் பிற வர்ணத்தவர்கள் தலை வணங்கியிருக்கிறார்கள்.  

கற்றறிந்த நாலாம் வர்ணத்தவனாக இருந்தாலும், அவனுக்கு, பார்ப்பனர், அரசர் முதல் அனைவரும் தலை வணங்கியிருக்கிறார்கள். 

அந்தக் கல்வி கற்றவர்களுக்குத்தான் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றிருக்கிறார்கள். மனுவாதி சூத்திரனாக இருக்கட்டும், சாகத்தீவின் மந்தக சூத்திரனாக இருக்கட்டும், அவர்களைப் பற்றிச் சொல்லுமிடத்தே, அவரவர்கள் தர்ம நெறியில் நின்று சிறக்க வாழ்ந்தார்கள் என்றே சொல்லப்பட்டுள்ளது. அது போலவே தமிழக வேளாண் மக்களும் தர்ம நெறியில் நின்று உயர்குடியினராக மதிக்கப்பட்டு இருந்தார்கள். இந்தக் கருத்தை திருக்குறள் குடிமையியல் உரையில் பரிமேலழகர் சொல்வதைக் காணலாம்.


புலன் அழுக்கற்ற அந்தணன் என்று கபிலரை, மாறோக்கத்து நப்பசலையார் சொல்லியுள்ளார். புலன் அழுக்கில்லாமை என்பது அந்தணனுக்கு மட்டுமல்ல, அன்றைய அறக் கல்வியைக் கற்ற எவருக்குமே வரக் கூடியது.


இன்றைக்குத் திராவிடம் பேசும் திராவிடவாதிகளுக்கு அது இருக்கிறதா?

அறக்கல்வி கற்காமலும், அறக்கல்வியை மதிக்காமலும் இருக்கிற இந்தத் திராவிடவாதிகள், அன்றைய தமிழ் நிலங்களில் இருந்திருந்தால் கயவர்கள் என்று ஒதுக்கப்பட்டிருப்பார்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக