செவ்வாய், 15 மார்ச், 2011

45. அறிவியல் பார்வையில் குமரிக் கண்ட அழிவு –பகுதி -1
குமரிக் கண்டம் என்று சொல்லபப்டுகின்ற தென்னன் தேசங்களை மூன்று ஊழிகள் இந்தியப் பெருங்கடலுக்குள் மூழ்கடித்துவிட்டன என்று பார்த்தோம். அந்த மூன்று ஊழிகள் நடந்திருக்கக்கூடிய காலக் கட்டங்களையும் பார்த்தோம்.

அவை

முதல் ஊழி = கி மு 9990 (இன்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முன்.)
2 ஆம் ஊழி = கி மு 5550 (இன்றைக்கு 8000 ஆண்டுகளுக்கு முன்.)
3 ஆம் ஊழி = கி-மு 1850 (இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்.)


இதில் முதல் ஊழியில் தென் மதுரை தப்பித்தது.
அது இருந்த இடம் இந்தியக் கடலுக்குள் இந்தியாவுக்குக் கிழக்குப்பக்கம் செல்லும் 90 டிகிரி மலைத் தொடர்.2-ஆவது ஊழியில் தென் மதுரை அழிந்தது.
90 டிகிரி மலையின் பெரும்பகுதியும் அழிந்தது.
அதன்பிறகு கபாடபுரம் பாண்டியன் தலைநகரமாயிற்று.
இந்தியாவுக்கு மேற்கில் இந்தியக் கடலில் நீண்டு செல்லும்
குமரி மலைப் பகுதிகளில் இது இருந்தது.  


3-ஆவது ஊழியில் இந்தப் பகுதியும் அழிந்து தற்போதைய தென்னிந்திய நிலங்களே மிஞ்சின.

தமிழ் நூல்கள், ராமாயணம், மஹாபாரதம், திருவிளையாடல் புராணம் போன்றவற்றின் மூலமாக நாம் அறியும் இந்த விவரங்களை, பிறதுறை ஆராய்ச்சிகள் மூலமும் நிரூபிக்க முடியுமா என்று பார்க்கலாம்.
பிறதுறைகள் என்று சொல்லும்போது,
ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி,
கடல் வெள்ளப் பெருக்கு பற்றிய ஆராய்ச்சிகள்,
பூமித்தட்டு (plate tectonics)  போன்ற பிற அறிவியல் துறை சார்ந்த ஆராய்ச்சிகள் ஆகும்.


இவற்றின் மூலம் நாம் ஆராய வேண்டிய முக்கியக் கேள்விகள் மூன்று உள்ளன.

 1. இந்த ஊழிகள் நடந்தது உண்மையா?
 2. 700 காவதம் என்று சுமார் 7000 கி.மீ தொலைவுக்கு நிலப்பரப்புகள் இந்தியக் கடலில் இருந்தது உண்மையா?
 3. அப்படி நிலங்கள் இருந்திருந்தால் அவை முழுகியுருக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறதா?ஊழிகள் நடந்தது உண்மையே.

ஊழிகள் நடந்தது உண்மையே என்று ஆழ்கடல் ஆராய்ச்சியாளரான க்ரஹாம் ஹான்காக் (Graham Hancock) சொல்கிறார்.
கடலில் மூழ்கியுள்ள பழம் பகுதிகளைத் தேடும் ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டுள்ளார்.
அவரது கண்டுபிடிப்பின்படி மூன்று பெரும் ஊழிகள்
அதாவது மூன்று முறை கடலால் பேரழிவு பெரிய அளவில் நடந்திருக்கிறது.

இந்தப் பேரழிவுகளை மூன்று கோணங்களில் நிரூபிக்கலாம்.
 1. பூமித்தட்டு எனப்படும் டெக்டானிக் தட்டுகள் கொடுக்கும் அழுத்தத்தால் ஏற்படும் நில நடுக்கங்களின் காரணமாக, நிலப்பகுதிகள் சரிவடைதலும், சுனாமி போன்ற கடல் சீற்றம் எற்படுதலும்.
 2. பனி யுகம் எனப்படும் ஐஸ்-ஏஜ் சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன் முடிவடையவே பனி உருகிக் கடல் மட்டம் உயர்ந்த விவரங்கள்.
 3. இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் நீர் மாற்றங்கள்.இந்த விவரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஹான்காக் அவர்களது அறிவியல் கண்டுபிடுப்புகள் மூலம் தெரிய வந்துள்ள இந்த ஊழிகள் நடந்த காலக் கட்டம் பின் வருமாறு:-

1-ஆம் ஊழி இன்றைக்கு முன் 14,000 முதல் 15,000 ஆண்டுகளுக்குள் நடந்திருக்கிறது.

2-ஆம் ஊழி இன்றைக்கு முன் 11,000 முதல் 12,000 ஆண்டுகளுக்குள் நடந்திருக்கிறது

3-ஆம் ஊழி இன்றைக்கு முன் 7,000 முதல் 8,000 ஆண்டுகளுக்குள் நடந்திருக்கிறது.இந்த காலங்கள் தென்னவன் தேசம் கண்ட ஊழிகளுடன் ஒத்துப் போவதைக் காணலாம்.

ஆனால் இதில் சொல்லப்பட்டுள்ள முதல் ஊழியைப் பற்றி தமிழில் எந்த குறிப்பும் இல்லை.
இதனால் இன்றைக்கு 14,000 ஆண்டுகளுக்கு முன் வந்த ஊழி,
தென்னவன் நிலங்களைத் தாக்கியிருக்காது என்றும்,
அது உலகின் வேறு பகுதியில் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.


ஹான்காக் அவர்கள் சொல்லும் இரண்டாம் ஊழியின் காலமும்,
பாண்டியர்களது முதல் ஊழிக் காலமும் ஒத்துப் போகிறது.
அதே காலக் கட்டத்தில் இன்றைய பூம்புகார் நகருக்கு ஐந்து கி.மீ தொலைவில் கடலுக்குள் காணப்படும் ஒரு அமைப்பும்,
கடலுக்குள் மறைந்தது குறிப்பிடத்தக்கது.


பகுதி 16  -இல் இன்றைக்கு 11,500 வருடங்களுக்கு முன்,
கடலுக்குள் மூழ்கிய பழைய பூம்புகார் நகரைப் பற்றிய ஆழ்கடல் ஆராய்ச்சி செய்தியைக் கண்டோம்.உலகளாவிய அளவில் 2-ஆம் ஊழி என்று சொல்லப்படுவது,  
தமிழ் பேசும் நிலங்களில் முதல் ஊழியாக இருந்திருக்கிறது.
பூம்புகாரும், தென் மதுரையும் இந்த ஊழியால் பாதிப்பு அடையவே,
இது இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நடந்திருக்கிறது என்று தெரிகிறது.


இந்த ஊழியில் அதிக பாதிப்பு அடைந்த இடம் வேறு ஒன்றும் இருக்கிறது.
அது இந்தியக் கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள
இந்தோனேசியா, சுமத்ரா, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகள் ஆகும்.

இந்தப் படத்தைப் பாருங்கள்


20,000 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதிகள் எல்லாம் ஒன்றாக இப்படி இருந்தது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இதை சுந்தாலாந்து என்று பெயரிட்டிருக்கிறார்கள். 
(பச்சை நிறத்தில் இருக்கும் இடங்களே தற்சமயம் வெளியே தெரிகின்றன.)
இந்தப் பகுதி, 14,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஊழியின் போதே கொஞ்சம் முழுகியது.
தென்மதுரையைத் தாக்கிய ஊழியின் போது, இந்த சுந்தாலாந்து அதிக அழிவைச் சந்தித்திருக்கும். 

இந்தப் பகுதியில் இன்றைக்கும் நிலநடுக்க அபாயங்கள் அதிகம்.
இந்தப் பகுதியில் 2004 ஆம் வருடம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடல் அலை திரண்டு சுனாமியாக வந்து,
இந்தியாவின் கிழக்குக் கரையைத் தாக்கியது.
இதே விதமாக பேரலைத் தாக்குதல்,
2- ஆம் ஊழியின் போது இந்தோனேசியப் பகுதிகளைத் தாக்கி
அங்கு நிலப்பரப்பை பெருமளவில் மூழ்கடித்திருக்க வேண்டும்.
அந்த அலை இந்தியா வரை வந்து, இந்தியாவின் கிழக்குக் கரையில் இருந்த பூம்புகாரையும் தாக்கியிருக்க வேண்டும்.


இந்தோனேசியப் பகுதியில் கடும் நிலநடுக்கம் எற்பட்டிருந்தால்,
அதனால் உருவாகும் சுனாமி அலை வரும் திசையில் புகார் இருப்பதை இந்தப் படத்தில் காணலாம்.சுனாமி அலையின் திசைக்குத் தெற்கில் தென் மதுரை இருந்தது.


கடலலையின் ஓட்டம் வேறு திசையில் இருக்கவே,
தென் மதுரையில் கடல்மட்டம் இறங்கியிருக்கிறது அல்லது
கடல் உள்வாங்கி இருக்கிறது என்பதை,
உக்கிர குமாரன் கடல் நீரை வற்றச் செய்தான் என்று திருவிளையாடல் புராணம் கூறுவதிலிருந்து தெரிகிறது.


இப்படி அந்தப் பகுதியில் நிலநடுக்கம் உண்டாவதற்குக் காரணம் இருக்கிறது.
இந்திய பூமித் தட்டு, கிழக்குப் பக்கம் இருக்கும் பூமித்தட்டுடன் இடித்து, அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.இந்தப் படத்தில் இமயமலையில் ஆரம்பித்து, இந்தியாவையும், ஆஸ்திரேலியாவையும் சேர்த்து இந்திய பூமித்தட்டு இருக்கிறது.


2-ஆம் ஊழி (தென்னன் வரலாற்றில் முதல் ஊழி) தாக்கியதில்
இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில்தான் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பகுதிகளில் என்றென்றுமே நிலநடுக்கமும்,
அதனால் கடல் பொங்குவதும் நடந்து வந்துகொண்டிருக்கிறது.
ஏனெனில், இந்திய பூமித்தட்டானது அதற்கடுத்துள்ள பூமித்தட்டின் மீது
இந்தப் பகுதியில் அழுத்திக் கொண்டு நகருகிறது.
ஆனால் நகர முடியாமல், பக்கத்து பூமித் தட்டின் கீழ் சரிந்து விடுகிறது.
அழுத்தம் அதிகமாகும் போது சரிந்து நிலநடுக்கமாக வெளிப்படுகிறது.
அதனால் ஆழ்கடல் நீரானது இடமாற்றமாகி சுனாமியாகிறது.
இந்தப் படத்தில் இந்தியப் பூமித்தட்டின் கிழக்கு எல்லை
இந்தோனேசியப் பகுதியில் நீல நிறத்தில் குறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
நீல நிறமாக உள்ள இடங்களில் இந்திய பூமித்தட்டு பக்கத்து பூமித்தட்டின் கீழ் சரிந்து கொண்டிருக்கிறது.
அவ்வபொழுது அங்கு அழுத்தம் கூடி மள மளவென்று சரிந்து விடும்.
அதுவே நில நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதன் விளைவாக உண்டாகும் சுனாமி, இந்தியாவின் கிழக்குப் பகுதியைத் தாக்கும்.


சமீபத்தில் நடந்த ஜப்பான் நிலநடுக்கமும் இப்படிப்பட்டதே.
ஜப்பான் இருக்கும் பூமித்தட்டும், அதற்குப் பக்கத்தில் இருக்கும் அமெரிக்க பூமித்தட்டும் மோதிக் கொண்டு இருக்கின்றன.
அவற்றுள் ஜப்பான் இருக்கும் பூமித்தட்டு அமெரிக்க பூமித்தட்டின் கீழ் 18 அடி தூரம் சென்று விட்டிருக்கிறது.
இதனால் ஜப்பான் நாடே 8 அடி தள்ளி போய் விட்டது.
அந்த நாடு தனியாக நகராது.
அந்த நாடு இருக்கும் பூமித்தட்டு பக்கத்து பூமித்தட்டின் கீழ் சரிந்து போகவே மொத்த நிலத்தட்டும் இடம் பெயர்ந்து விடுகிறது.
அதனால் அந்த தட்டின் மீது தெரியும் ஜப்பான் நாடு நகர்ந்து விட்டது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
இதனால் ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் மட்டமும் அதிகரித்து விடும்.


இப்படிப்பட்ட சரிவுகளால், நிலப்பரப்புகள் கடலுக்குள் போகக் கூடும்.
2004 ஆம் ஆண்டு சுனாமியுடன் வந்த நிலநடுக்கத்தின் காரணமாக அந்தமான் பகுதி 5 அடி உயர்ந்துவிட்டது.
அதன் தென் கிழக்கில் இருந்த நிகோபார் பகுதிகளில் சில கடலுக்குள் முழுகி விட்டன என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


இந்தியக் கடலின் கிழக்குப் பகுதியில் இப்படி என்றுமே கடல் கொந்தளிப்பு இருந்து வந்திருக்கிறது.


இதுவரை விவரித்த கிழக்குப் பகுதி நிலநடுக்கங்களால் அதிகமாக பாதிக்கப்பட்ட நகரம் பூம்புகார் ஆகும்.
பூம்புகார் பல முறை அழிவைச் சந்தித்திருக்கிறது.
மணிமேகலை நடந்த காலக் கட்டத்திலும் புகார் நகரில் கடல் நீர் வந்து நாசம் செய்தது என்று அந்த நூல் மூலம் அறிகிறோம்.


அது போல கிழக்குப் பகுதியில்,
தொடர்ச்சியாக கடலுக்குள் முழுகிய மற்றொரு இடம் மஹாபலிபுரம் ஆகும்.
ஆரியக் கதைகள் என்று திராவிடவாதிகள் சொல்கிறார்களே
அந்தக் கதையில் ஒன்றான வாமன் அவதாரம் தமிழ் நாட்டில் இருக்கும் மஹாபலிபுரத்தில்தான் நடந்தது.
இது மஹாபலிச் சக்கரவர்த்தி ஆண்ட நகரமாகும்.
திருமால் வாமன அவதாரம் எடுத்து எந்த பலியிடம் மூன்றடி மண் கேட்டாரோ 
அந்த பலி ஆண்ட நாடு அது.
அந்த மஹாபலியின் பெயரால் அந்த ஊருக்கு மஹாபலிபுரம் என்ற பெயர் வந்தது.


 ஆழ் கடல் ஆராய்ச்சியில் கடலுக்குள் தெரியும் முழுகிய மஹாபலிபுர அமைப்புகள்


அவனது வழியில் வந்தவன் பாணாசுரன் என்பவன்.
அவனது மகளான உழை என்பவளை 
கிருஷ்ணன் பேரனான அநிருத்தன் என்பவன் விரும்பினான்.
அது பிடிக்காத பாணாசுரன், அநிருத்தனைச் சிறையில் அடைத்து விட்டான்.
இதைக் கேள்விப்பட்ட கிருஷ்ணர் துவாரகையிலிருந்து மஹாபலிபுரம் வந்தார்.
தன் பேரனை விடுவிப்பதற்காக,
உலோகத்தாலும், மண்ணாலும் ஆன குடங்களைத் தலை மேல் வைத்துக் கொண்டு
நடனமாடிக் கொண்டே வீதிகளின் வழியே சென்று
அனைவரது கவனத்தையும் திசை திருப்பினார்.
அந்த சமயமாகப் பார்த்து, சிறையிலிருந்து தன் பேரனை விடுவித்தார்.
அதன் பிறகு பாணாசுரனையும் வென்று, தன் பேரனுக்கும் உழைக்கும் திருமணம் செய்து வைத்தார்.


இது ஏதோ கட்டுக் கதை அல்ல.
கிருஷ்ணன் குடத்தைத் தலையில் வைத்து ஆடின நடனத்துக்கு ‘குடக் கூத்துஎன்று பெயர்.
இதுவே ‘கரகாட்டம்என்று உருமாறியிருக்கிறது.
கிராமியக் கலை என்றும்,
தமிழர்களது பாரம்பரியக் கலை என்றும் இன்று திராவிடவாதிகள் சொல்கிறார்களே
அந்தக் கலையை முதலில் தந்தவர் கிருஷ்ணர்தான்.
இதை நான் சொல்லவில்லை.
சிலப்பதிகாரம் சொல்கிறது.
மஹாபலிபுரத்தை அப்பொழுது ஆண்டவன் பாணாசுரனாக இருக்கவே,
அந்த ஊரை ‘வாணன் பேரூர் என்கிறது சிலபப்திகாரம்.


கிருஷ்ணர் 2-ஆம் சங்கத்தில் கலந்து கொள்ள கபாடபுரத்துக்கு மட்டும் போகவில்லை.
தமிழ் நாட்டின் கிழக்கில் இருந்த வாணன் பேரூருக்கும் சென்று
குடக் கூத்து ஆடி, தன் பேரனுக்கு திருத்தங்கல் என்னும் நகரத்தில் 
திருமணமும் செய்வித்தார்.


அந்த வாணன் பேரூர், பாணாசுரனது காலத்துக்குப் பிறகு கடலில் மூழ்கியது!
அந்த செய்திதான் இந்தக் கட்டுரைக்கு நமக்கு வேண்டும்.
அதாவது கிருஷ்ணர் காலத்துக்குப் பிறகு முழுகியிருக்கிறது.
அதற்கு முன்னாலும் மஹாபலிபுரம் கடல் அழிவைச் சந்தித்திருக்கிறது.  
மஹாபலிபுரத்தின் பூகோள ரீதியான அமைப்பில், 
அந்த நகரமும், பூம்புகாரைப் போலவே 
இந்தோனேசிய நிலநடுக்கங்கள் உண்டாக்கும் சுனாமி செல்லும் வழியில் இருக்கிறது. 


மஹாபலிபுரத்தை ஒட்டிக் கடலில் ஆராய்ந்த ஹான்காக் அவர்கள்,
இன்றைக்கு 6000 வருடங்களுக்கு முன் முழுகிய பகுதிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்.
இது அவர் சொல்லும் 3-ஆவது ஊழியின் காலக் கட்டமாகும்.
இது சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.
தமிழகத்தின் கிழக்கே பூம்புகாரும் , மஹாபலிபுரமும் 
மீண்டும் மீண்டும் கடலால் அழிக்கப்படவே,
முன்பு சொன்ன சுந்தாலாந்துப் பகுதியான இந்தோனேசியப் பகுதியில் 
ஏற்பட்ட நிலநடுக்கங்களாலும்,
அவை உண்டாக்கிய சுனாமியாலும், இவை படிபடியாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.


மஹாபலிபுரத்தில் மொத்தம் ஏழு கோவில்கள் இருந்தன என்று வழி வழியாகச் சொல்லப்படுவது.
இப்பொழுது இருப்பது ஸ்தலசயனத்துறைவார் எனப்படும் ஒரு கோவில் மட்டும்தான்.
அதைத் தாண்டி கடலுக்குள் இன்னும் ஆறு கோவில்கள் இருந்தன.
அவை படிப்படியாகக் கடல் சீற்றத்தில் முழுகி விட்டன.
மஹாபலிபுரத்துக்கு, மாமல்லபுரம் என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டது பிற்கால வரலாறு.
தன் பெருமையைப் பறை சாற்ற விரும்பிய பல்லவ மன்னன் செய்த செயலால் அது மாமல்லபுரம் என்றானது.
அத்துடன் மஹாபலிபுரத்தின் பழைய நினைவுகள் காலப்போக்கில் மறக்கப்பட்டு விட்டது.


இந்தியக் கடல் அடிவார அமைப்பு.
கிழக்குப் பக்கத்தைப் போலவே,
இந்தியக் கடலின் மேற்குப் பகுதியிலும் பூமித்தட்டு மோதல் நடந்து கொண்டிருக்கிறது..
இந்தியக் கடலின் மேற்கில் ஆஃப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் பூமித்தட்டு இடித்துக் கொண்டிருக்கிறது.இந்தப் படத்தில் கிழக்கு ஆஃப்ரிக்காவில் சிவப்பாகச் செல்லும் கோடு ஆஃப்ரிக்க பூமித்தட்டின் ஓரமாகும். 
சிவப்பு நிறம் காண்பிக்கும் இடத்தில் இந்தியக் கடலின் அடிவாரம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இதனால் இங்கு எப்பொழுது வேண்டுமானாலும் நிலநடுக்கம் வரலாம்.
அதன் காரணமாக சிவப்புப் பகுதி காட்டும் இடம் வரை இந்தியக் கடல் உட்புகுந்து விடலாம்.
இதனால் கிழக்கு ஆஃப்ரிக்கா முழுவதுமே கடலுக்குள் முழுகி விடும்.
தென்னாஃப்ரிக்கப் பகுதி ஒரு தீவாகி விடும் என்கிறார்கள்.
அப்பொழுது, ஆஃப்ரிக்கக்கண்டத்தின் வடிவமே மாறிப்போய் விடும்.


அப்படி மாறிப் போனதுதான் நாமிருக்கும் இந்தியத் தட்டின் நிலப்பகுதிகள்.
இன்றைக்கிருக்கும் இந்தியா, இதேபோல சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இருக்கவில்லை.
இந்திய பூமித்தட்டைப் பொறுத்தவரையில் ஒரு வித்தியாசமான அமைப்பு இருக்கிறது.


பொதுவாக ஒரு பூமித்தட்டு, இன்னொறு பூமித்தட்டை அழுத்தும்.
ஆனால் ஒரே பூமித்தட்டில், இரண்டாகப் பிரிந்தது போல ஒன்றையொன்று அழுத்திக் கொண்டிருப்பது
இந்தியத்தட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
தென்னிந்தியாவுக்குத் தெற்கே கடலில் ஒரு அழுத்தப்பகுதி இருக்கிறது.
அங்கே மொத்த இந்தியப் பரப்பும், அதற்குத் தெற்கில் கடலில் உள்ள பரப்பும்
இரு வேறு தட்டுகளைப் போல ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு
அழுத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.


இந்தப் படத்தைப் பாருங்கள்.
(இந்தப் படம், மற்றும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள இதே போன்ற படங்களைத் தெளிவாக இந்த லிங்கில் காணலாம். .)
இந்த லிங்கில் உள்ள படத்தை க்ளிக் செய்து பார்க்கவும்)இமய மலை தொடங்கி ஆஸ்திரேலியா வரை இந்திய பூமித்தட்டு செல்கிறது.
இதில் சிவப்பு நிறப்பகுதிகள் அழுத்தம் கொடுத்துச் சென்று கொண்டிருக்கும் பகுதிகள் ஆகும்.
இமயமலைப் பகுதியில் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.


ஆனால் இந்தியாவுக்குக் கீழே, இந்தியக் கடல் பகுதியில்
சாம்பல் நிறத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ள பகுதிகளைப் பாருங்கள்.
அந்தப் பகுதியில் வடக்கும் தெற்குமாக ஒரு அழுத்தம் ஏற்பட்டுக் கொண்டு,
அதனால், கடலின் அடிவாரம் மேலே உயர்ந்து கொண்டே வருகிறது. (அம்புக் குறி)
இது பல மில்லியன் வருடஙகளாக நடப்பது.
அதாவது கடலுக்குள் இருக்கும் இந்தப் பகுதி உயரமான பகுதி. 
இது ஒரு சமயம் கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருக்ககூடிய சாத்தியம் இருக்கிறது.

மத்திய இந்தியக் கடலில் வடக்கு - தெற்காக அழுத்தம் பெற்று வரும் இடத்தில்

(மேலே உள்ள படம்) கடந்த 100 வருடங்களில் மட்டும் 
ஏழு முறை நிலநடுக்கங்கள் வந்துள்ளன.  
 லட்சக் கணக்கான ஆண்டுகளாக  மோதிக் கொண்டு 
உயர்ந்து  கொண்டிருக்கும்  இந்த  மத்திய  இந்தியக் கடல்  பகுதியில்,
அந்த  மோதல்  காரணமாக 
நிலநடுக்க  அபாயங்களை  நிறையவே சந்தித்திருக்கும். 

7000 ஆண்டுகளுக்கு முன் அப்படி ஒரு நிகழ்வும் சாத்தியமே.
அதனால் நிலச் சரிவும், கடல் கொள்ளுதலும் சாத்தியமே.
 

கீழ்க்காணும் படத்தில் இந்தியக் கடலின் அடித்தளம் காணப்படுகிறது.
அதில் இந்தியாவுக்குத் தெற்கே, மத்திய இந்தியக் கடல் பகுதியில் 
உயர்ந்து இருக்கும் பகுதியைக் காணலாம்.
கீழே உள்ள படத்தில் இருக்கும் அமைப்பில்
இந்தியக் கடலின் நடுவில் உயர்ந்துள்ள பகுதியும்,
அதை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளும்,
700 காவதம் வரை பரவியிருக்கும் சாத்தியம் இருப்பதைக் காணலாம்.இதுவே குமரிக் கண்டம் அல்லது தென்னன் தேசங்கள் பரவியிருந்த நிலங்களாகும்.
இந்தப் பகுதியின் மேற்கில் 90 டிகிரி மலையும், அதன் தென் பகுதியில் தென் மதுரையும்,
ஹான்காக் கூறும் 3 ஆம் ஊழியில் (தமிழ் வரலாற்றில் 2-ஆம் ஊழியில்)
இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்னால்
மொத்தமாக கடலுக்குள் சென்றிருக்கிறது.


இன்றைக்குத் தெரியும் இந்தோனேசியா, சுமத்ரா பகுதிகளும்,
தற்போதைய வடிவத்தை,
இந்த ஊழியின் போதுதான் அடைந்தது என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
அதாவது 7000 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஊழி பெரும் ஊழியாக இருந்தது.
அதற்கு முக்கியக் காரணம் நிலநடுக்கங்களும், நிலச் சரிவும், சுனாமியும் மட்டுமல்ல.
பனியுகம் முடிந்ததால் கடல் மட்டம் ஏறிக் கொண்டே வந்ததும் ஒரு கூடுதல் காரணம்.
அவற்றை அடுத்தக் கட்டுரையில் காண்போம்.6 கருத்துகள்:

 1. //அதாவது 7000 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஊழி பெரும் ஊழியாக இருந்தது./

  அப்படின்னா இதன் தாக்கம் உலகம் முழுக்க இருக்கனுமே. அப்படி இல்லையே ஏன்

  பதிலளிநீக்கு
 2. தற்சமயம் ஜப்பானில் நடந்ததும் ஊழி போன்றதுதான். அதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கிறதா? 2004 இல் இந்தோனேசியப் பகுதியில் கடலில் வந்த ஊழி ஆஃப்ரிக்கா வரை எட்ட முடிந்தது. ஆனால் உலகம் முழுவதும் பாதித்ததா? இல்லை.

  கடலுக்குள் பூகம்பம், பூமித்தட்டு மோதல் போன்றவை ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் நடப்பதில்லை. எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கெல்லாம் பாதிப்பு வருகிறது. தொடர்ச்சியாக பாதிப்பு வரும் போது, கடலுக்குள் முழுகி விடுகிறது. இங்கு நாம் இந்தியக் கடலைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். அட்லாண்டிக் கடலிலும் பல நிலங்கள் முழுகி இருக்கின்றன. ஆனால் எல்லாமே அதிகப்படியாக 7000 ஆண்டுகளுக்கு முன் 11000 ஆண்டுகளுக்குள் நடந்திருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு.

  அடுத்த பகுதியில் பனி யுகம் பற்றிப் படிக்கும் போது மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 3. Dear Jayasree Mam,
  It seems that Sundaland itself would have been a huge continent with a civilisation different from ours.

  பதிலளிநீக்கு
 4. Dear Mr Chalam.

  It was huge and peopled well - but would not say a different culture. Hindu culture was spread all over the world until 5000 years ago. Please browse this site thoroughly about it.

  http://www.hinduwisdom.info/index.htm

  பதிலளிநீக்கு
 5. "வாமன் அவதாரம் தமிழ் நாட்டில் இருக்கும் மஹாபலிபுரத்தில்தான் நடந்தது."

  புராணத்தில் பலிச் சக்கரவர்த்தி நர்மதை நதிக் கரையில் யாகம் நடத்திய போது ஸ்ரீ வாமணர் தோன்றியதாக படித்த ஞாபகம்.
  ஸாரநாதன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல இடங்களில் இவ்வாறு வரலாம். பரசுராம அவதாரத்தில் கூட மஹேந்திர கிரி இவ்வாறு ஒரிசாவிலும், தமிழ் நாட்டிலும் வருகின்றன. ஆங்காங்கே மக்கள், ரிஷிகள் அந்தந்த தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து இவ்வாறு கூறியிருக்கிறார்கள். ஆனால் பலி வாழ்ந்தது காஞ்சிபுரத்துக்குத் தென் கிழக்கே இருந்திருக்கிறது, இன்றைய இந்தோனேசியாவின் பல பகுதிகள் 6000 ஆண்டுகளுக்கு முன் வரை முழுகாமல் இருந்தன. அங்கோ அல்லது அதையொட்டியோ, ஹிரண்யகசிபுவின் நகரம் இருந்தது. அதைப் பற்றி அடுத்து வரும் 112 ஆவது கட்டுரையில் எழுதப் போகிறேன். ஹிரண்யகசிபுவின் வழித்தோன்றல் பலி ஆவான்.

   நீக்கு