புதன், 16 பிப்ரவரி, 2011

37. மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள்.



மோரியர் என்பவர்கள் தங்கள் தேர்ச் சக்கரம் உருண்டு வர ஏதுவாக வெள்ளி மலையை உடைத்து வந்த விவரம் புறநானூறில் உள்ளது என்ற செய்தியை முன் பகுதியில் கண்டோம். மோரியர் குறித்த விவரம் மொத்தம் 4 இடங்களில் சங்கப் பாடல்களில் வருகிறது. அவற்றின் அடிப்படையில் ஒரு பழந்தமிழ் வரலாற்றை ஆராய்ச்சி செய்துள்ளனர். அவை சரியல்ல என்றும் அந்த சரித்திரத்தில் வேறு ஒரு பழமையான சரித்திரம் மறைந்திருக்கிறது என்றும், அது மட்டுமல்ல அது நடந்த பூகோளப் பகுதியே வேறு என்றும், அதன் அடிப்படையில் தமிழ் மொழிக்கும், மங்கோலிய, ஹங்கேரிய மொழி போன்றவற்றுக்கும் சில தொடர்புகள் ஏற்பட்டன என்பவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்கள் தமிழுக்கும், மங்கோலிய மொழிக்கும் உள்ள சில் ஒற்றுமைகளைக் காட்டி அதன் அடிப்படையில் சிந்து சமவெளி மக்களில் ஒரு பகுதியினர் மங்கோலியப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று கருதுகின்றனர். அதாவது மங்கோலியர்களுக்கும், தமிழர்களுக்கும் ஒரு பழைய தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்.  

மங்கோலியா என்னும் நாடு இமய மலைக்கு வடக்கே சீனப் பிரதேசஙகளுக்கு வட மேற்கில் உள்ளது.


இங்கு புழங்கி வரும் மங்கோலிய மொழியில் உள்ள சில சொற்கள் தமிழ்ச் சொற்களை ஒத்துள்ளன. இதனால், சிந்து சமவெளி மக்கள் ஆரியர்களால் விரட்டப்பட்ட பொழுது, அவர்களுள் ஒரு பகுதியினர் மங்கோலியப் பகுதிக்குச் சென்றிருக்கலாம். சிந்து சமவெளி திராவிடர்கள் பேசிய மொழியின் மிச்சம் இன்னும் அவர்களிடம் இன்று வரை இருந்திருக்கலாம் என்பதே இவர்கள் கூற்று. சமீபத்தில் நடந்த செம்மொழி மாநாட்டில் இது குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையும் வாசிக்கப்பட்டது. இந்த மங்கோலிய மொழியின் தொடர்பை முழுவதும் அறிந்து கொண்டால், தமிழன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்தவனா அல்லது தமிழகப் பகுதியிலிருந்து வந்தவனா என்பதை நிலை நிறுத்தலாம். இந்தக் கட்டுரையில் இதை ஆராய்வோம். .


முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். மொழித் தொடர்பு என்பது நாட்டுக்கு நாடு மக்கள் தொடர்பு கொள்வதால் ஏற்படுகிறது. தொல்காப்பியரும் திசைச்சொல் என்று குறிப்பிட்டுள்ளார். பல திசைகளிலிருந்தும் சொற்கள் வருகின்றன. அதாவது பல திசைகளிலிருந்தும் மக்கள் ஒரு நாட்டுக்கு வரும்போது அவர்கள் பேசும் மொழியில் உள்ள சில சொற்கள் நம் மொழியுடன் கலந்து விடுகின்றன. இவையே திசைச் சொற்கள் ஆகும். நம் தமிழும் பிற மொழிகளுடன் கலக்கும் வாய்ப்பு பல முறை இருந்திருக்கின்றது.


உதாரணமாக கொரிய மொழியிலும் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன என்றும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை செம்மொழி மாநாட்டில் படிக்கப்பட்டது. கொரியா போன்ற பகுதிகளில் 1000 வருடங்களுக்கு மேலான ஹிந்துக் கோவில்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதற்குக் காரணம், தமிழ் மன்னர்கள் அந்தப் பகுதிகளுக்குப் படை எடுத்துச் சென்று தமிழ் அரசையும், ஹிந்து மதத்தையும் நிறுவியுள்ளனர். வாணிபம் காரணமாகவும் தமிழ் மக்கள் அந்தப் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். அதனால் தமிழ் மொழியும், தமிழர் கலாச்சாரமும் அங்கு கலந்துள்ளது. கொரியா விஷயத்தில் இந்த விவரங்கள் குறித்து யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.


ஆனால் மங்கோலிய மொழியில் தமிழ்க் கலப்பு இருப்பதில், எங்கிருந்தோ தேடிக் கண்டு பிடித்து, சிந்து சமவெளி மக்களைத் தொடர்பு செய்கின்றனர். மங்கோலிய கலாச்சாரத்துக்கும், தமிழ்க் கலாச்சாரத்துக்கும் சிறிதும் தொடர்பு கிடையாது. மங்கோலியர்கள் எப்பொழுதும் முரட்டு சுபாவத்துடன் இருந்திருக்கின்றன்ர். மங்கோலியர்கள் மூர்கத்தனத்துக்குப் பெயர் போனவர்கள். காட்டுமிராண்டித்தனமான சண்டையும், அசுர சுபாவமும் அவர்களுக்கு உண்டு. அவர்களது தொல்லை தாங்காமல் சீனர்கள் சீனப் பெரும் சுவரை எழுப்பினர். அப்படிபட்ட போர் வெறி பிடித்த மங்கோலியர்களும், நாகரிகம் தெரிந்த பழந்தமிழ் மக்களும் ஒரே இனம் என்று சொல்வது அடாவடியான செயல். அப்படி என்றால் மங்கோலிய மொழியில் தமிழ் மொழிக் கலப்பு எப்படி வந்தது?


இதைத் தெரிந்து கொள்ள உதவியாக இருப்பது மோரியர் குறித்த விவரமாகும். மோரியர் பற்றிய சங்கச் செய்திகளில் திகிரி என்னும் சொல் வருகிறது.
திகிரி என்றால் உருளை, சக்கரம் என்று தமிழில் அர்த்தம் கொள்கிறோம்.
இதே சொல், இதே பொருளில் மங்கோலிய மொழியிலும் வருகிறது.
தொகிரி அல்லது தெகிரி என்னும் இரண்டு மக்கோலியச் சொற்களும் சுழலுதல்’, ’சக்கரம் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
மோரியர் குறித்த அனைத்து சங்கச் செய்திகளிலும் ‘திகிரிஎன்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
மேலும் ஆதனுங்கன் மேல் பாடபட்டுள்ள புறநானூற்றுச் செய்யுளிலும் (175) மோரியர் என்பவர்கள் வெள்ளி மலைக்கு அப்பால் இருந்தவர்கள் என்று உரை ஆசிரியர்கள் எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது.


புறநானூறு தவிர அகநானூறில் 3 இடங்களில் மோரியர் குறித்து விவரம் வருகிறது. அகநானூறு 69 இல் பொருள் தேடச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லையே என்று தலைவி வருந்துகிறாள்.
அவளைத் தோழி சமாதானம் செய்கிறாள்.
தலைவன் தனது பயணத்தை வேண்டுமென்றே நீட்டிக்கவில்லை.
அவன் சென்ற தூரம் அப்படிப்பட்டது. மோரியர்கள் தங்கள் தேர்ச் சக்கரங்கள் உருண்டு வர வேண்டி மலையை உடைத்துப் பாதை போட்டார்களே அந்தப் பாதை வழியே அவன் சென்றிருக்கிறான்.
அதனால் அவன் வரத் தாமதம் ஆகிறது என்று தோழி சமாதானம் செய்கிறாள். பாதை ஒழுங்காக இருக்கிறது என்றால் அவன் எளிதில் சீக்கிரமாகத் திரும்பி வர முடியுமே?
ஆனால் அவன் வரத் தாமதம் ஆகிறது என்றால் அந்தப் பாதை இருக்கும் பகுதி வெகு தொலைவில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்?


இந்தப் பாடலைப் போலவே அகம் 281 இலும், தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் பனி இரும் குன்றம் என்று பனி மூடிய சிகரங்களை உடைய மலை என்று தெளிவாக இமய மலையைப் பற்றி குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து
 எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறைஇறந்து, அவரோ சென்றனர்.


மலையைக் குறைத்து, தென் திசை வந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சிந்து சமவெளிதீரத்தின்கண் உள்ள இமய மலையாக இருக்கலாமோ என்றும் கேட்கலாம்.
மோரியர் என்னும் சொல்லும் ஆரியர் என்னும் சொல்லுக்கு ஒத்ததாக இருப்பது இந்த சந்தேகத்தை எழுப்புகிறதே என்றும் கேட்கலாம்.
ஆனால் அந்தப் பகுதியில், அதாவது இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இமய மலைப் பகுதிகள் பனி  மூடியவை அல்ல.
மேலும் அந்தப் பகுதியில் இயற்கையாகவே மலைக் கணவாய்கள் உள்ளன. மலையின் அந்தப் பக்கத்திலிருந்து, இந்தியப் பகுதிக்கு அந்தக் கணவாய்கள் மூலம் வந்துவிட முடியும்.


முன்பே பரதன் தன் தாய் வீடான கேகய நாட்டுக்குச் சென்ற வழியைப் பார்த்தோம். யானைகள், குதிரைப்படைகள், வண்டிகள் போன்றவற்றுடன் அவன் முன்பே நன்கு அமைந்த பாதையில் வந்துள்ளான் என்றும் பார்த்தோம் (பகுதி 34 ) இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் பனி மூடிய மலையைக் குடைந்து வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அப்படிப் பாதை போடப்பட்டிருக்கிறது. இந்திய சீன எல்லையில் உள்ள ‘நாதுலா கணவாய்ப் பகுதி அப்படி பாதை போடப்பட்ட பகுதியாக இருக்கலாம்.



இந்தப் பகுதி இந்தியா, ஐரோப்பியப் பகுதிகளை இணைக்கும் ஒரு முக்கியப் பாலமாக அந்நாளில் இருந்தது. சில்க் பாதை எனப்படும் பாதையின் முக்கியத் திறவுகோலாக இந்தப் பகுதி இருந்தது.
இந்தப் பகுதியைத் தன் வசம் வைத்துக்கொள்ள சீனர்கள் பல போர்களைச் செய்துள்ளனர்.
அந்தச் சீனர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் மங்கோலியர்கள். அந்தப் பகுதி சரித்திரத்தைத் தேடினால், மோரியர் என்னும் பெயரை ஒத்தாற்போல மோடுன் என்னும் மங்கோலிய மன்னனது ஆட்சி இருந்தது தெரிய வருகிறது.
அந்த மக்களை ‘மாகியர் என்று அவர்கள் மொழியில் கூறுகிறார்கள். பொதுவாகவே மாகியர்கள் கொடூரமாகப் போர் புரியும் குணம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அவர்களால் சீன மக்களுக்குப் பெரும் தொல்லை ஏற்பட்டது.






கொடூரமான மோடுன் என்னும் மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு ஆகும்.
அவன் மங்கோலியாவை கி.மு 209 முதல் கி.மு 174 வரை ஆண்டான். இவனது ஆட்சிக் காலத்தில் 26 நாடுகளின் மீது படையெடுத்திருக்கிறான். இவன் பெயரைக் கேட்டாலே அந்த நாளில் மக்கள் அலறுவார்கள்.
கொடூரமான போர் முறைகளும், மக்களைத் துன்புறுத்துவதும் இவனது வழக்கம். இவனால் சீன நாட்டுக்குப் பல முறை தொல்லை ஏற்பட்டது.
இவன் இந்தக் கணவாய்ப் பகுதியின் மீதும் படை எடுத்துள்ளான்.


சங்கப் பாடல்களில் ‘வம்ப மோரியர் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வம்ப என்பது தொந்திரவு கொடுத்தல் என்னும் பொருளில் வந்துள்ளது.
அவன் தென் திசை நோக்கிப் படையெடுத்தபோது இமயமலையைக் குடைந்து இந்த கணவாயை உடைத்து அகலப்படுத்தி வந்திருக்கலாம்.
அவன் காலத்துக்குப் பின்னர், சுமுக நிலை திரும்பியதும், சில்க் ரூட் எனப்படும் பாதை மீண்டும் ப்யன்படுத்தப்பட்டிருக்கும்.
இந்த சில்க் ரூட் என்னும் பாதை இந்தியா வழியாக, ஐரோப்பாவையும், சீனாவையும் இணக்கிறது.

கி.பி. 1-ஆம் நூற்றாண்டில் இருந்த சில்க் பாதை.


இந்தப் பாதையின் பெரும் பகுதி இந்தியா வழியாகத்தான் செல்கிறது. காந்தாரம் (இன்றைய காந்தகார்) வழியாக இந்தியாவில் நுழைந்து பாட்னா எனப்படும் பாடலிபுத்திரம் வழியாகச் சென்று வட கிழக்கே நாதுலா கணவாய் வழியாக சீனப்பகுதிகளில் இந்தப் பாதை நுழைகிறது.
சிந்து சமவெளி காலம் தொட்டே இந்தப் பாதையில் வாணிபம் காரணமாக மக்கள் போக்குவரத்து இருந்திருக்கிறது.


தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், ஆண்கள் அடிக்கடி வியாபார நிமித்தமாக வேற்றூருக்குச் சென்றிருந்தனர் என்று சங்கப்பாடல்கள் மூலம் அறிகிறோம். தமிழன் திரை கடலோடி திரவியம் தேடி இருக்கிறான், நில வழியாகவும் சென்று தேடியிருக்கிறான். அப்படித் திரவியம் தேடச் சென்றவன் திரும்பி வருவதற்குத் தாமதம் ஆகும் காலத்தில் தலைவி அடையும் துன்பம் பல பாடல்களிலும் சொல்லப்பட்டுள்ளது.


அவர்கள் நில வழியே சென்ற பாதை பாடலிபுத்திரம் வழியாக இருந்திருக்ககூடும் என்பதை வலியுறுத்தும் சங்கப் பாடல்கள் உள்ளன. பாடலிபுத்திரம் பொன்னுக்குப் பெயர் பெற்றது என்று சங்கப் பாடல்களில் வருகிறது. (அகம் 265, குறுந்தொகை -75, பெருந்தொகை 1-58). தலைவன் வரப்போகிறான் என்ற செய்தியைக் கேட்ட தலைவி, செய்தி கொண்டு வந்தவனுக்கு சோனை ஆற்றங்கரையில் உள்ள பொன் விளையும் பாடலிபுத்திர நகரத்தையே பரிசாகத் தருகிறேன் என்று கூறுகிறாள்.
பாடலி வழியாக வரும் தலைவன், தலைவிக்குப் பொன் நகைகள் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.


கண்ணகி காலத்துக்கு முன்பே பாடலிபுத்திரம், உஜ்ஜயினி போன்ற பகுதிகளுடன் தமிழ் மன்னர்களுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது.
சோழன் நகரத்தில் வஜ்ஜிர நாட்டுப் பந்தலும், அவந்தி நாட்டு (உஜ்ஜயினி) தோரணவாயிலும், மகத நாட்டுப் பட்டி மண்டபமும் இருந்தது என்று சிலப்பதிகாரம் மூலம் தெரிகிறது.
இந்த மூன்று நாட்டாரும் திறையாகக் கொடுத்தார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
திருமாவளவன் எனப்படும் கரிகால் பெருவளத்தான் இமயமலையில் புலிக் கொடி நாட்டச் சென்ற போது பாடலிபுத்திரம் முதலான இந்த நாடுகள் வழியாகச் சென்றிருக்க வேண்டும்.
அப்பொழுது இவற்றைத் திறையாகப் பெற்றிருக்க வேண்டும்.
இவன் சென்று வந்த விவரம் சிலப்பதிகாரத்தில் காணப்படவே அந்தச் செயல் கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன்னமே நடந்திருக்க வேண்டும்.


பாடலிபுத்திரத்தைத் தலைகரமாகக் கொண்ட மகத நாட்டை மௌரியர்கள் ஆண்டு வந்தனர்.
மோரியர் என்று சங்க நூல்களில் வந்துள்ளது மௌரியர்களாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அது சரியல்ல.
மௌரியர்களது ஆட்சி என்றுமே தமிழகத்தை ஊடுருவியதில்லை.
மாறாக கரிகால் சோழன் மகத நாட்டிலிருந்து திறை பெற்றான் என்றே குறிப்பு இருக்கிறது.
அப்பொழுது மகதத்தை ஆண்டவர்கள் யார் என்பது பற்றிய குறிப்பு இல்லை.


ஆனால் மௌரியர்களுக்கு முன் இருந்தவர்கள் நந்தர்கள்.
நந்த வம்சத்தினர் மகத நாட்டை கி.மு. 4- 5 நூற்றாண்டுகளில் ஆண்டிருக்கின்றனர்.
சங்கப் பாடலில் நந்த மன்னர்களைப் பற்றிக் கூறும் ஒரு பாடல் இருக்கிறது. (அகம் 265)
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக், கங்கை
நீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ?

கங்கையில் புண்ணிய நீராடுதலும், வாணிப்ம் காரணமாக பாடலிபுத்திரம் வரை போய் வந்ததும், நந்த வம்சத்தினர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அங்கிருந்து சில்க் பாதையில் மங்கோலியா வரை தமிழன் சென்றிருக்கிறான். அவ்வளவு தொலைவு செல்லவே அவர்கள் திரும்பி வர வெகுகாலமாகி இருக்கிறது. அதுவே சங்கப் பாடல்களில் தலைவியின் துயரத்துக்குக் காரணமாகி இருக்கிறது.
மாதக்கணக்கில் அந்த நாடுகளில் தங்கி இருக்கவே அங்கு வழங்கிய மொழியில் தமிழின் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் அதிகம் இருக்கிறது.
மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள் இருப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.  

ஆனால் மோரியர்கள் என்பவர்கள் மகத நாட்டை ஆண்ட மௌரியர்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருத வகை செய்யும் சங்கப் பாடல் ஒன்று உள்ளது. மேல்சொன்ன 4 ஆதாரங்களுள் அகநானூறு 251 இல் மேலும் சில விவரங்கள் உள்ளன.

வெல்கொடித்

துனைகால் அன்ன புனைதேர்க் கோசர்

தொல்மூ தாலத்து அரும்பணைப் பொதியில்,

இன்இசை முரசம் கடிப்பிகுத்து இரங்கத்,

தெம்முனை சிதைத்த ஞான்றை; மோகூர்

பணியா மையின், பகைதலை வந்த

மாகெழு தானை வம்ப மோரியர்

புனைதேர் நேமி உருளிய குறைத்த

இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்,


இந்தப் பாடலுக்குப் பழைய உரைஆசிரியர்கள் எழுதிய உரையை நான் படித்ததில்லை. அந்த உரை மிகவும் பயனுடையதாக இருக்கும். ஏனெனில், இந்தப் பாடலை விவரித்துள்ள இந்நாள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் சரித்திர விவரம் வலுவாக இல்லை.


இந்தப் பாடலின் அடிப்படையில், மோகூர் என்னும் தமிழகப் பகுதிக்கு மோரியர் வந்தனர் என்றும், அவர்களை கோசர் என்பவர்கள் வரவழைத்தனர் என்றும், மோகூர் மன்னனுக்கும், கோசருக்கும் பகை இருந்ததால், மோகூர் மன்னனை வெல்ல கோசர்கள் வம்ப மோரியர் துணையை நாடினர் என்றும் அதற்காக அவர்கள் மலையை வெட்டி, பாதை அமைத்துத் தங்கள் தேரைச் செலுத்து வந்து வெற்றி பெற்றனர் என்றும் கூறுகிறார்கள். இந்த விவரம், மோரியர் குறித்து வந்துள்ள மற்ற பாடல்களில் உள்ளதைப் போல தலைவி பிரிவுத் துயரத்தில் ஆழ்ந்துள்ளாள். அவள் படும் துன்பத்தை அறிந்தால் தலைவன் தாமதிக்காமல் வந்து விடுவான். அவன் வராமைக்குக் காரணம் அவன் மோரியர் சமைத்த பாதை வழியே சென்றிருக்கிறான் என்பதே.



இங்கு மோகூர் என்பது மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தொன் மூதாலத்துப் பொதியில் என்று கோசர்களைப் பற்றி வரவே அவர்கள் பொதிகை மலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும்,
அவர்களுக்கும் மோகூருக்கும் பகை இருக்கவே,
அவர்கள் மௌரிய மன்னனை வரவழைத்தனர் என்றும் கருதுகின்றனர்.
அப்படி அவர்கள் வரும் வழியில் எந்த மலை உள்ளது?
விந்திய மலையாக இருக்கும் என்பது ஒரு கருத்து.
அதை உடைத்துக் கொண்டு வர வேண்டும் என்ற அவசியமில்லை.
அந்த மலையைத் தவிர்த்து, தென் திசை நோக்கி தேர்ப்படையுடன் வர முடியும்.
அப்படி வந்தாலும் மோகூர் என்பது மதுரைக்கு மிக அருகில் 13 கி மீ தொலைவில் இருக்கவே, தன் இருப்பிடம் அருகே மௌரியர்கள் வருவதைக் கண்டு, பாண்டியன் கை கட்டிக் கொண்டு இருந்திருப்பானா?


மோகூர் மன்னர்கள் இருவரை சேர மன்னர்கள் தோற்கடித்திருக்கின்றனர் என்று பதிற்றுப் பத்து கூறுகிறது.
மோகூர் மன்னன் பழையன் காரி என்பவனை கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் போரில் கொன்றான் என்று ஐந்தாம் பத்தின் பதிகம் கூறுகிறது.
அந்தப் பத்தில் இரண்டு செய்யுட்களில் மேலும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பழையன் மாறன் என்பவனை குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை வென்றான் என்று 9-ஆம் பத்தின் பதிகம் கூறுகிறது.
அதாவது மோகூர் என்னும் இடம் பாண்டியனுக்கும், சேரனுக்கும் இடையில் உள்ள இடம் என்று தெரிகிறது.
மோகூரை ஆண்டவர்களுக்கு அருகிலேயே பகைவர்கள் சேர மன்னர்கள் உருவில் இருந்தனர் அன்றும் தெரிகிறது.
அவர்களை வெல்ல சோனை ஆற்றங்கரையில், பாடலியை ஆண்டு வந்த மௌரியர்களைக் கோசர்கள் வரவழைத்தனர் என்பது இயல்புக்குப் புறம்பாக இருக்கிறது.


மோரியர் பற்றிய சங்கக் குறிப்புகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.
அதைப் பற்றிய உண்மை விவரங்களை ஆராய வேண்டும்.
வந்தவர்கள் மௌரியர்கள் என்றால் அதற்கு வேறு எங்குமே ஆதாரம் இல்லை. தமிழகப் பகுதியை மௌரியர்கள் தொடவே இல்லை.
அவர்கள் தமிழர்களுடன் சுமுக உறவுடன் இருந்திருக்க வேண்டும்.
கரிகாலன் திறை பெற்றதற்கு அந்த சுமுக உறவு ஒரு சாட்சி.
அப்படி இருக்க, கோசர்கள் அழைத்தாலும், மௌரியர்கள் தங்கள் படையை அனுப்பி இருக்க மாட்டார்கள்.
தமிழக மன்னர்களை ஈடுபடுத்தியிருப்பார்கள்.
மேலும் மோகூர் ஒரு சிறிய நாடு.
மூவேந்தர்களுக்கிடையே இருந்த நாடு. மூவேந்தர்களை ஊடுருவி மௌரியர்கள் அங்கு வந்திருக்க முடியாது.
ஆனால் கோசர்களுக்கும், மோகூர் மனன்னுக்கும் ஒரு பகை இருந்தது என்று இந்தப் பாடலின் மூலம் தெரிகிறது.
அதை ஆராயப்புகும்போது, வேறு சில சுவாரசியமான உண்மைகள் தெரிய வருகின்றன.


இந்தக் கோசர்கள் யார் என்று தேடினால், பல இடங்களில் அவர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது.
(1)       துளு நாட்டில் கோசர் இருந்திருக்கிறார்கள் (அகம் -15)
(2)       செல்லூர் என்னும் ஊருக்குக் கிழக்கில் இருந்த நியமம் என்னும் ஊரில் கோசர்கள் இருந்திருக்கிறார்கள் (அகம் -90)
(3)       அகதை என்னும் கூத்தர்கள் தலைவனைக் கோசர்கள் பாது காத்திருக்கிறார்கள் (அகம் -113) இந்தச் செய்தி பரத்தைச் சேரிக்குச் சென்று திரும்பிய தலைவனைப் பற்றிக் கூறுமிடத்தே வருகிறது. பாட்டும் கூத்தும் இருக்கும் பரத்தையர் வாழுமிடத்தில் அவர்கள் தலைவனுக்குக் காவலாகக்  கோசர்கள் இருந்திருக்கின்றனர்.
(4)       தேரழுந்தூர் பகுதியில் கோசர் இருந்திருக்கின்றனர். (அகம் 196) இனி சொல்லப்போகும் எல்லா பாடல்களிலும், கோசர்கள் என்பவர்கள் ஒரு நாட்டவரல்லர். அவர்கள் ஒருவகை மக்கள் என்று தெரிய வருகிறது. “ஒன்று மொழிக் கோசர் என்று இந்த அகப் பாடலில் வருகிறது. அதாவது அவர்கள் சொன்னால் ஒரே சொல்தான். மறு பேச்சு கிடையாது. சொன்னதை சொன்னபடி செய்வார்கள். அப்படி ஒரு சபதம் ஏற்பார்கள்.
(5)       அகம் 205 இலும் வாய் மொழி சொல்லும் கோசர் என்று வருகிறது. அவர்கள் சூளுரைப்பார்கள். அதிலிருந்து மாற மாட்டார்கள்.
(6)       அகம் 216 இலும், புறம் 169 இலும்  இளைஞர்களான கோசர்கள் என்று வருகிறது.
(7)       அகம் 262, 251 போன்றவற்றில் அவர்கள் ஆல மரத்தடியில் அமர்ந்து ஊருக்கு பஞசாயத்து செய்பவர்கள் என்னும் பொருளில் வருகிறது. அவர்கள் சொன்னால் சொன்னதுதான். மறு பேச்சு கிடையாது.
(8)       புறம் 283 போர் செய்பவர்கள் என்று வருகிறது.
(9)       குறுந்தொகை 15 இல் நாலூர்க் கோசர் என்று வருகிறது. இந்தப் பாடலின் பழைய உரை மூலம், மேலே சொன்ன மோரியர் குறித்த அகப்பாடலில் வரும் விவரம் விளங்குகிறது. அந்தப் பாடலில் வருவது போல ‘தொன் மூதாலத்துப் பொதியில் என்று இந்தப் பாடலிலும் வருகிறது. இங்கு பொதியில் என்பதைப் பொதிகை மலை என்று பழைய உரையாசிரியர் விளக்கவில்லை. பொதியில் என்பதைப் பொதுவிடம் என்கிறார். மூதாலம் அதாவது முதிய ஆல மரத்தின் அடியில் பொது இடத்தில் அமர்ந்து கோசர்கள் சொல்லும் சொல் ஒரே சொல்லாக இருக்கும், அதற்கு மாற்று கிடையாது.
(10)    இதே போல குறுந்தொகை 73 இலும், மதுரைக் காஞ்சி 508 இலும் வருகிறது.
(11)    சிலப்பதிகாரத்தில் ‘கொங்கிளம் கோசர்என்று வருகிறது. இதைக் கொண்டு கொங்கு நாட்டில் கோசர்கள் இருந்தனர் எனூ கொள்ளலாம். ஆனால் உரை ஆசிரியரான அரும்பத உரையாசிரியர் இவர்களை ‘குறும்பு செலுத்துவர் இவ்வீரர்என்று குறிப்பிடுகிறார்.

இவை எல்லாவற்றின் மூலமாக கோசர்கள் என்பவர்கள், குறிப்பிட்ட  நடவடிக்கை கொண்ட வீரர்கள் என்பது புலனாகிறது.
அவர்கள் கடுமையான சபதம் எடுத்து, அதன் படி நடப்பார்கள். வேளக்காரப்படையினர் என்பார் அரசனுக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சூளுரைப்பர்.
அது போல கடுமையான வாய் மொழி கூறி அதன் படி செய்துகாட்டும் வீரர்களைக் கோசர் என்றிருக்கின்றனர்.
அவர்கள் சொன்ன சொல்லுக்கு அப்பீல் கிடையாது.
அப்படிப்பட்ட கோசர்கள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால் அந்த மாதிரி மக்கள் சங்க காலத்திற்குப் பிறகு இருந்ததாகத் தெரியவில்லை.


இனி, மோகூர் என்னும் ஊரைப் பற்றி ஆராயலாம்.
மோகூர் என்பது ஆகு பெயராகும் என்று பதிற்றுப் பத்து உரை ஆசிரியர் கூறுகிறார்.
பதிற்றுப் பத்தில் மோகூர் மன்னனை பழையன் என்றே குறிப்பிட்டுள்ளனர். “மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்ஆகையால் அது ஆகு பெயர் என்கிறார் (பதிற்றுப்பத்து 49 உரை).
மொய் என்றால் வலிமை. வலிமையும், வளமும் மொசிந்திருந்தால் அந்த ஊர் மோகூர் ஆகும் என்று பொருளாகிறது.


மோரியர் குறித்த அகம் 251 ஆம் பாடலை முழுவதுமாகப் படிக்கும் போது பாடலாசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது புலனாகிறது.


தூதும் சென்றன; தோளும் செற்றும்;
ஓதி ஒண்நுதல் பசலையும் மாயும்;
வீங்கிழை நெகிழச் சாஅய்ச்; செல்லலொடு
நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்  5
 தங்கலர்- வாழி, தோழி!- வெல்கொடித்
துனைகால் அன்ன புனைதேர்க் கோசர்
தொல்மூ தாலத்து அரும்பணைப் பொதியில்,
இன்இசை முரசம் கடிப்பிகுத்து இரங்கத்,
தெம்முனை சிதைத்த ஞான்றை; மோகூர்  10
 பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்,
மாசில் வெண்கோட்டு அண்ணல் யானை  15
 வாயுள் தப்பிய அருங்கேழ், வயப்புலி
மாநிலம் நெளியக் குத்திப், புகலொடு
காப்புஇல வைகும் தேக்கமல் சோலை
நிரம்பா நீளிடைப் போகி-
அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே.


இந்தப் பாடலில் இருவேறு விவரங்களை தலைவன் கிளம்பிச் சென்ற பாங்குடன் இணைக்கிறார் புலவர். ஆல மரத்தடியில் பொது இடத்தில் முரசடித்துக் கோசர் சூளுரைத்த நாளில் (ஞான்றை என்று பொருள் முடிவதைக் கவனிக்கவும்) தலைவன் கிளம்பிச் சென்றான். அவன் சென்ற வழி மோரியர் தேர்ச் சக்கரம் குறைத்த மலை வழி. அதனால் தாமதம் ஆகிறது. உன் பசலை நோயை அவன் அறிந்தால் அவன் அங்கு தங்க மாட்டான். உடனே வந்திருப்பான், என்கிறாள் தோழி.


இந்தப் பாடலைத் தவிர மற்ற மூன்று பாடல்களிலும், பனி படர்ந்த மலையை ஊடுருவி மோரியர் வந்த விவரம் வந்துள்ளதால், அது இமயமலைப் பகுதியில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி என்பது புலனாகிறது.
ஆதனுங்கன் குறித்த புறப்பாடலில் (175) மோரியர் என்பார் சக்கரவாளச் சக்கரவர்த்திகள் என்று பழைய உரைஆசிரியர் எழுதியுள்ளதால், அவர்கள் இமய மலைக்கும் அப்பால் உள்ள மக்கள் என்பதும் தெரிகிறது.


இனி அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றி ஐரோப்பிய ஆராய்ச்சிகளில் என்ன கூறப்பட்டுள்ளது என்று பார்த்தால், இதுவரை நாம் வடக்காசியப் பகுதிகளைப் பற்றிச் சொன்ன விவரங்களுடன் ஒத்துப் போகின்றன. 
மொழி என்று பார்க்கையில், அப்பகுதிகளில் பேசப்படும் இரண்டு மொழிகளில் தமிழின் சாயல் இருக்கிறது.
மங்கோலிய மொழியிலும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. ஹங்கேரிய மொழியிலும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. மங்கோலிய மொழியில் தமிழ் சொற்கள் கலந்திருக்ககூடிய சாத்தியக் கூறுகளை மோரியர் பற்றிய விவரங்கள் மூலம் அறிந்தோம்.
மங்கோலியப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் மாகியர் எனப்பட்டன்ர்.
இவர்களும் ஹங்கேரி நாட்டு மக்களும் ஒரே இனத்தவர்கள்.
இருவருமே மாகியர்கள் என்று ஹங்கேரிய மொழியில் அழைக்கப்படுகின்றனர். மங்கோலியப் பகுதி என்பது ரஷ்யாவின் தென் பகுதியில் வருகிறது. காஸ்பியன் கடல் பகுதிக்கும், மங்கோலியப் பகுதிக்கும் இடையே போக்குவரத்து இருந்திருக்கிறது. 
காஸ்பியன் கடல் பகுதிக்கும் ஹங்கேரிக்கும் தொடர்பு இருந்திருகின்றது. இந்தத் தொடர்பு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது என்று ஹங்கேரிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அதன்படி சுமேரியா என்னும் யூப்ரடிஸ், டைகிரிஸ் நதிப் பகுதிகளில் வாழ்ந்த மன்னனான நிம்ருத் என்பவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள்.
அவர்கள் பெயர் ஹூனோர், மாகூர்.
அவர்களே மாகியர்கள் ஆவார்கள்.
அவர்கள் பேசிய மொழி மாகியர் என்னும் மொழி.
அதுவே இன்றைக்கு ஹங்கேரி மக்கள் பேசும் மொழியாகும்.
அந்த மகன்கள் காஸ்பியன் கடல் வரை சென்றனர். அங்கு அவர்கள் சந்தித்த மக்களும் அவர்களது மொழியையே பேசினர். மாகியர்கள் மங்கோலியா வழியாகவும் காஸ்பியன் கடல் வரை பரவி இருந்தார்கள். 
அந்தக் காஸ்பியன் கடல் பகுதியில்தான் சக்‌ஷுஸ் நதி இருந்தது என்பதையும், விரட்டப்பட்ட மிலேச்சர்கள் அங்கு குடி இருந்ததையும் அறிந்தோம்.
அதே பகுதியில்தான் ஆரிய- தஸ்யூ போராட்டத்தில் விரட்டப்பட்ட மக்கள் குடியமர்ந்தனர். அவர்களுள் ‘உசீனரர்களும்இருந்தனர் என்று மஹாபாரதம் கூறுகிறது. (பகுதி 32)


உசீனரன் யார் என்று நினைவில் இருக்கும்.
அவனது மகனே சிபி! சிபியின் வம்சாவளியில் வந்தவர் சோழர்கள்.
சோழ நாட்டிலும், சிபி நாட்டிலும் பேசிய மொழி ஒரே மொழியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று படித்தோம். (பகுதி 32)
அந்த சிபி மக்கள் மேலும் வட ஐரோப்பா நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர் என்றால் அவர்களுடன் அவர்கள் பேசிய தமிழும் சென்றிருக்கும்.
அவர்களுடன் இணைந்த மாகியர்களுக்கும் (ஹங்கேரி மக்கள்) சுமேரியா மூலம் பாரதத் தொடர்பு இருந்திருக்கின்றது. (பகுதி 31)
அங்கு கலந்த மக்கள் மூலமாக, பாரததில் பேசப்பட்ட மொழி கிடைத்திருக்கிறது. எனவே இந்தோ- ஆரிய மொழி என்று ஐரோப்பிய மொழிகளுக்கும், சமஸ்க்ருதத்துக்கும் உள்ள தொடர்புடன், தமிழின் தொடர்பும் அந்த மொழிகளுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது.
ஹங்கேரிய மொழியில் 2,500 தமிழ்ச் சொற்களது சாயல் இருக்கிறது என்று அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உசீனரர் காலம் தொட்டே பாரதத்தில் பேசு மொழியாகத் தமிழ் இருந்திருந்தாலே இப்படி ஒரு கலப்பு நிகழ்ந்திருக்க முடியும்.


இந்தப் படத்தில் சிவப்பு வட்டப்பகுதி சக்‌ஷுஸ் நதிப் பகுதி. அது பாரதத்திலிருந்து வெளியேறிய உசீனரர் போன்றவர்கள் குடியேறின இடம். படத்தின் வலப்பக்கத்தில் மங்கோலியா உள்ளது. அங்கிருந்து காஸ்பியன் பகுதிக்கு மாகியர்கர்கள் குடியேறின இடம் ஒரு வட்டமாகவும், இடப்பக்கத்தில் ஹங்கேரிப் பகுதியில் வாழ்ந்த மாகியர்கள் இருந்த இடம் ஒரு வட்டமாகவும் காட்டப்பட்டுள்ளது. இவர்கள் உசீனரர்கள் உள்ளிட்டோர் வாழ்ந்த காஸ்பியன் பகுதியில் கலந்துள்ளனர். இதனால் மொழிக் கலப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

இந்த மொழிக் கலப்பின் மூலமாக, பாரதத்திலிருந்தே மக்கள் வெளியேறி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
வெளியிலிருந்து மக்கள் வரவில்லை.
இத்துடன் கூடுதலாக, தமிழன் திரவியம் தேடப்போனபோதும் ஆங்காங்கே தமிழைப் பரப்பி வந்திருக்கிறான்.


தமிழ் படிக்கவேண்டும் என்று இன்றைய அரசு பல முயற்சிகள் செய்கிறது. தமிழன் தமிழ் மட்டுமே படித்துத்  தமிழ் நாட்டை விட்டு வெளியே போக இயலாத நிலையில் இது வைத்துள்ளது.
தமிழன் வெளியே பரவ வேண்டும்.
அப்பொழுதுதான் அவன் மூலம் தமிழ் வெளி இடங்களில் பரவும்.
சங்க காலத்தில் உலகெங்கும் சுற்றிய தமிழனால் பிற நாட்டு மொழிகளில் தமிழின் பாதிப்பு ஏற்பட்டது என்பதை மோரியர் கதை பறை சாற்றுகிறது.


மோரியர் வாழ்ந்த பகுதிக்கு அருகே இருந்தது இளை நதிதீரம்.
ஆரிய-தஸ்யூக்கள் என்று பார்த்தோமே அவர்களது முன்னோனான புரூரவஸ் இருந்த இடம் அது.
இன்றைய பாரதத்துக்கும், வட ஆசியப் பகுதிகளான அந்தப் பகுதிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தொடர்பு இருந்திருக்கிறது என்பதைப் பறை சாற்றும் அந்த விவரங்களை அறிந்து கொண்டால், ஆரியன் என்ற மக்கள் யாரும் எங்கிருந்தும் வரவில்லை, பாரதக் கண்டம் எனபட்ட அந்நாளைய பாரதம் பரந்து விரிந்து ஒரே கலாச்சாரத்துடன் இருந்தது என்பதை அறியலாம்.
அந்த விவரங்களை அடுத்த பகுதியில் காண்போம். 

10 கருத்துகள்:

  1. கட்டுரை அருமையா இருக்கு. ஆனா எனக்குத்தான் சுத்தமா புரியலை

    பதிலளிநீக்கு
  2. தூக்கக்கலக்கமாக இருக்கும். நல்லா விழிச்சப்புறம் படிங்க.

    பதிலளிநீக்கு
  3. //தூக்கக்கலக்கமாக இருக்கும். நல்லா விழிச்சப்புறம் படிங்க.
    //

    இப்பவும் புரியலையே

    பதிலளிநீக்கு
  4. word verification எடுங்க. நான் கமெண்ட் போடவே முடியலை

    பதிலளிநீக்கு
  5. கட்டுரையில் சில மற்றங்கள் செய்துள்ளேன். ஒரு வரைபடமும் இணைத்துள்ளேன். இப்பொழுது இன்னும் தெளிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். புரியாத பகுதிகள் எவை என்று சொன்னால், விளக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. Dear Jayasree Mam,
    While reading this article, one thought crosses my mind.The wars between Devas and Asuras, could that have happened between the evolved divine humans of Siberia with the leadership of Indira and the brutal barbaric less developed, uncivilized Mongolians.

    We know how cruel Chengiz Khan was.Almost always the devas loose the war and in all the cases divine forces comes to rescue them.

    Could this have happened!

    Regards
    Chalam

    பதிலளிநீக்கு
  7. @ Chalam,

    On your doubts on Deva asura yuddha, the wars have both metaphorical and real significances. Metaphorically it is the alternating growth of civilization in north and south hemispheres. In real terms, the fight had been between the people of asuric tendencies and satwic tendencies who happened to occupy south and north hemispheres respectively.

    In one of the posts in this series, I would have written about Indra going on a war with Asuras, asking Cholan king to take care of his capital Amaravathy. In return he gave the king the Naalangaadi bootham. It means Indra had left the North and gone to the South for the war with Asuras.

    The asura capital was Bhogavathi which was in the South near South pole, The description of the location of that place comes in Ramayana and there are references to it in Thiruvilaiyaadal puranam and Silappadhikaaram. I will write about Bhogavathi in a subsequent post.

    What I am coming to say is that Asuras were in the south. Chengiz khan was a recent phenomena (2000 + years ago) when compared to the time period that Deva loka existed.

    The said Devaloka existed in Uttar kuru regions of Siberia about 40,000 years ago. When I take up genetic research from 58th article onwards, more will be known.

    On Mangols and people with Mongoloid features, the genetic research says that autosomal EDAR 1540 c gene is responsible for their specific features. Genetics say that this gene originated in India and spread out through China and N.America.

    From puranic description, I consider the Chinese and those with Mongoloid features as the Shiva Ganas that were active 40,000 years ago.

    பதிலளிநீக்கு
  8. ஆங்கிலத்தில் இவற்றை எழுதி உள்ளீர்களா .....
    எழதி இருந்தால் அதனை எனது பிற மொழி நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன்..
    நந்தர்கள் ஆப்கானிஸ்தான் ஹிந்துகளா?????

    பதிலளிநீக்கு
  9. இந்தத் தொடரை ஆங்கிலத்தில் எழுதவில்லை. ஆனால் மங்கோலியர் பற்றிய இந்தக் கட்டுரையில் வரும் சில கருத்துக்களை ஆங்கிலத்தில் முன்பு எழுதினேன். அதை இங்கு படிக்கலாம்:-

    http://jayasreesaranathan.blogspot.com/2010/08/moriyar-in-sangam-texts-refers-to.html

    பதிலளிநீக்கு
  10. தமிழரின் வரலாற்றை அறிய http://nhampikkai-kurudu.blogspot.com வலையில் உள்ள கட்டுரைகளைக் காணுங்கள்.

    பதிலளிநீக்கு