வியாழன், 17 நவம்பர், 2011

83. விஸ்வகர்ம வாஸ்துவும் பண்டைய அமைப்புகளும்.GREAT BATH  எனப்படும் குளத்தின் அமைப்பைப் பார்க்குபோது,
நமக்கு வாஸ்து விதிகள் நினைவுக்கு வருகின்றன.
மொஹஞ்சதாரோ என்னும் நகரம்,
மஹாபாரதக் காலத்தை ஒட்டி எழுந்திருந்தால்,
அங்கு நிச்சயம் வாஸ்து அமைப்புகள் இருக்க வேண்டும்.
அவற்றைப் பற்றி ஆராயும் முன்,
வாஸ்து என்பதன் சில அடிப்படைகளைத் தெரிந்துக் கொள்வோம்.


ஒவ்வொரு வஸ்துவும் (வஸ்து = பொருள்) இப்படி இப்படி அமைந்திருந்தால்,
இன்னின்ன நலன்கள் ஏற்படும் என்பதே வாஸ்து ஆகும்.
நம் பயன்பாட்டில் இருக்கும் எல்லா வஸ்துக்களையும்,
நான்கு வகைகளாகப் பிரித்துள்ளார்கள்
அவை நிலம் (பூமி),
ப்ராசாதம் (வீடு, மாளிகை, கோவில், மண்டபம் போன்றவை),
யானம் (வாகனங்கள்),
சயனம் (கட்டில், ஆசனம், கருவிகள் போன்றவை) என்பன.


இவற்றைச் செய்ய குறிப்பிட்ட அளவு முறைகள் உள்ளன.
அவற்றின் அடிப்படை அளவு அங்குலம் என்பதாகும்.
சாதாரணமாகச் சொல்வதாக இருந்தால் இது ஒருவரது கட்டைவிரல் அகலமாகும்.
இதற்கு அளவீடுகள் கொடுத்துள்ளார்கள்.
அந்த அங்குலத்தின் அடிப்படை அளவு பரம அணு ஆகும்.
8 பரம அணுக்கள் கொண்டது ஒரு ரேணு எனப்படும்.
8 பரம அணு = 1 ரேணு
8 ரேணு = 1 வாலாக்ரா (தலை முடியின் சுற்றளவு)
8 வாலாக்ரா = 1 லீக்ஷா (பேன் முட்டைஇது ஒரு மில்லிமீட்டராகும்)
8 லீக்ஷா = 1 யூகா ( பேன்)
8 யூகா = 1 யவம் (பார்லி)
8 யவம் = 1 அங்குலம்.)


ரேணு என்பது, ஒரு ரதம் செல்லும் போது எழும்பும் தூசிப்படையின் ஒரு தூசு!!
இப்படி கண்ணுக்குத்தெரியாத அளவிலிருந்து நம் அளவீடுகள் ஆரம்பிக்கின்றன.
இதில் என்ன கவனிக்க வேண்டும் என்றால்
ரதங்கள் இருந்திருந்தால்தான் இப்படி ஒரு அளவீட்டைச் சொல்லியிருக்க முடியும்.
சிந்து சமவெளியின் காலத்தில்தான்
இந்திய வரலாறே ஆரம்பித்ததாகச் சொல்பவர்கள்
இந்த அளவீடு எப்பொழுது ஆரம்பித்தது என்பார்கள்?


இந்த அளவீட்டில் பார்லி என்னும் தானியம் பயன்படுத்தப்படுவதால்,
பார்லியைப் பயிரிட்ட காலத்திற்குப் பிறகு இந்த அளவீடு உண்டாகி இருக்க வேண்டும்.
பயிர் வகைகளில் மரபணு ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.
அந்த ஆராய்ச்சிகள் மூலம் இன்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்பே
இமயமலையின் தென் மேற்குச் சரிவுகளில், பஞ்சாப், சரஸ்வதி நதி உள்ளிட்ட
பகுதிகளில் பார்லி பயிரிடப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது


இந்த வகை பார்லி,
ஈரான், ஐரோப்பா போன்ற இடங்களில் பயிராகும் பார்லியல்ல.
இது இந்தியாவிலிலேயே விளைந்ததாகும்.
இந்த பார்லியிலும் 5 விதமான பார்லி வகைகள் இருக்கின்றன என்றும்,
அவற்றுள் ரக்த சாலிஎனப்படும் வகையை
இந்த அளவீட்டுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் சில்பரத்னா என்னும் நூல் கூறுகிறது


இன்னும் நிறைய விவரம் இருக்கிறது.
ஒரு அங்குலம் என்றால் என்னவென்று பார்த்தோம்.
24 அங்குலம் என்பது ஒரு ஹஸ்தம் எனப்படும்.
இதைத் தமிழில் ‘முழம்’ என்கிறார்கள்.
24 உத்தம அங்குலம் என்பது இன்றைய பிரிட்டிஷ் அளவீட்டின்
18 இன்சுகளுக்குச் சமமாகும்


பயன்பாட்டுக்கு ஏற்றவாறு இது மாறும்.
மொத்தம் 24 அங்குலத்தில் ஆரம்பித்து,
31 அங்குலம் வரை வெவ்வேறு பயன்பாடுகளுக்குக் கணக்கிடுகிறார்கள்.
24 அங்குலத்தைத் ‘தஞ்சாவூர் முழம்” என்பார்கள்.
பிரகதீஸ்வரர் ஆலயத்தின் அடிப்படை அள்வு இந்த முழம்.
சிதம்பரத்திலும், திருவண்ணாமலைக் கோவிலிலும்,
25 அங்குல அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை சிதம்பரம் முழம், திருவண்ணாமலை முழம்
என்று சொல்லும் வழக்கம் தமிழ் நாட்டு ஸ்தப்திகளிடையே இருக்கிறது. 


இவ்வாறு சிறு சிறு வேறுபாடுகளுடன் 282 முழங்கள் இருப்பதாக
’விஸ்வகர்ம பிராகிசிகை’ என்னும் வாஸ்து நூல் கூறுகிறது.
இதன் மூலம் 282 விதமான கட்டுமானப் பணிகள் இருந்தன என்று தெரிகிறது.
இந்த அளவுக்கு ஒரு சாஸ்திரம் உருவாக
எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்பது பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. 


ன்றைக்கு அதிகபட்சம் நமக்குத் தெரிய வந்திருப்பது,
முழம், அல்லது ஹஸ்தத்தில்
உத்தமம், மத்தியமம், அதமம் என்ற வேறுபாடுகள் உள்ளன என்பதே
இவற்றின் பயன்பாடுகளும் இடத்துக்கு இடம் மாறுபடும்.
மானாங்குலம் என்பது வீடுகள், கோவில்கள் போன்றவற்றில் பயன்படுவது.
மாத்ராங்குலம் என்பது சுவர் போன்ற சுற்று இடங்களை அளக்கப் பயன்படுவது.
தேஹலாபாங்குலம் என்பது சிற்பங்கள் வடிப்பதில் பயன் படுவது.
தெய்வச் சிலைகளில், ராமர் சிலை வடிக்க உத்தம ஹஸ்தமும்,
பெண் தெய்வச் சிலைகளுக்கு மத்யம ஹஸ்தமும்,
பிற தெய்வங்களுக்கு அதம ஹஸ்தமும் கடை பிடிக்கப்படுகிறது.


இவற்றைச் சொல்லும் சிற்ப சாஸ்திர நூல்கள் மற்றும்
வாஸ்து நூல்கள் எல்லாம் மிகப் பழமையானவை.
இதற்குச் சான்றாகச் சிலப்பதிகாரம் இருக்கிறது.
1800 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அந்த நூலில்
மாதவி நடன அரங்கேற்றம் செய்த அரங்கின் அளவு சொல்லப்படுகிறது.
அது வாஸ்து நூல்களில் சொல்லப்பட்டுள்ள அளவுகளே.
எண்ணிய நூலோர் என்றும்நூல் நெறி மரபின் அரங்கம் என்றும்
முன்பு இருந்து வந்த நூல்களைக் காட்டி,
அவற்றின் அடிப்படையில் அரங்கு அமைத்தனர்
என்கிறார் இளங்கோவடிகள் (அரங்கேற்றுக் காதை


அதிலும், நாம் மேலே சொன்னதைப் போல
24 அங்குலத்தில், உத்தம அளவீட்டில் அமைத்துள்ளார்கள்.
அந்த அரங்கை ஒரு கோல்
(4 ஹஸ்தம் = 4 முழம் = 1 தண்டம் = 1 கோல் என்பது விஸ்வகர்ம வாஸ்து அளவு)
உயரத்துக்கு உயர்த்தி,
8 கோல் நீளமும், 7 கோல் அகலமும்,
அரங்கின் தளத்திலிருந்து 4 கோல் உயரத்தில்
அதன் மேல் விதானமும் அமைத்தார்கள் என்கிறார் இளங்கோவடிகள்.
நீளத்தைவிட அகலம் ஒரு பங்கு குறைவாக இருப்பது என்பது
சிறந்த வாஸ்து விதியாகும்

இவை 2000 வருடங்களுக்கு முன் இருந்ததென்றால்,
அதற்கு முன் எப்பொழுது இந்த சாஸ்திரம் தோன்றியிருக்கும்?
சிந்து சமவெளி நாகரிக காலமெல்லாம் போதாது.
அதற்கும் முன்பே தோன்றிய சாஸ்திரமாக இருந்திருந்தால்தான்
2000 ஆண்டுகளுக்கு முன்பே புகார் நகரில்
இப்படி ஒரு அளவீட்டின் அடிப்படையில்
நடன மேடை அமைக்கப்பட்டிருக்கும்.
அது மட்டுமல்ல, இந்த சாஸ்திரம்,
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சாஸ்திரம் விஸ்வகர்மாவில் ஆரம்பிக்கிறது.

மொஹஞ்சதாரோவில் ஒரு உலோகச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒய்யாரமாக ஒரு இளம் பெண் நின்று கொண்டிருப்பது போல இருக்கும் 
அந்தச் சிற்பத்தைச் செய்யும் முறையை ஆராய்ந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் ஸவாமி மலைக்கருகே இருக்கும் 
விஸ்வகர்மாவினர் அதே முறையில் சிற்பம் வடிக்கின்றனர் 
என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
தமிழ் நாட்டினர் மொஹஞ்சதாரோவிலிருந்து வந்தனர் என்று 
இதைக் கொண்டு சொல்லலாமே என்று கேட்கலாம்.
விஸ்வகர்மாவினர் இந்த முறையை அறிந்துள்ளனர் என்பதால், 
மொஹஞ்சதாரோவின் சிற்பிகள் 
விஸ்வகர்மா பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லலாமே? 


மொஹஞ்சதாரோவில் இப்படிப்பட்ட சிற்பமும், 
கட்டடக்கலையும் காணப்படுவதால்,
அதற்கும் முன்பே அந்த மக்கள் அப்படிப்பட்ட திறமையை 
வளர்த்துக் கொண்டிருந்தால்தானே சாத்தியமாகும்?


மொஹஞ்சதாரோ காலத்துக்கும் முன்பே 
அந்தத் திறமை இந்தியாவில் இருந்திருக்கிறது.
அந்தத் திறமை ஐரோப்பாவிலிருந்தோ,
மேற்கு ஆசியாவிலிருந்தோ வந்த்து என்று சொல்லத்தக்க வகையில், 
அந்த இடங்களில் அதற்கு முந்தின் காலக் கட்டத்தில் அந்தத் திறமை இல்லை.
இது போன்ற ஒருமித்த கட்டடக் கலையும் வாஸ்துவும்,
இந்தியாவில் இன்றும் தொடர்வது போல,
அந்த இடங்களில் இல்லை.
இந்தக் கலை இந்தியாவில் உண்டாகியும் 
வேறூன்றியும் இருந்திருந்தால்தான், 
அன்றும் இன்றும் 
வாழ்ந்து கொண்டிருக்க முடியும்.மொஹஞ்சதாரோவில் இப்படி ஒரு சிறபம் என்றால், 
அதே காலக்கட்டத்தில் வளர்ந்த ஹரப்பாவிலும் 
இந்தச் சிற்பத்தை நினைவுறுத்தும் வண்ணம் 
ஒரு சிலை கிடைத்துள்ளது.
இந்தப் பெண்ணின் கையில் அடுக்கடுக்கான வளையல்கள் இல்லையென்றாலும்,
அவளது ஒய்யார அமைப்பு 
மொஹஞ்சதாரோ சிலைப் பெண்ணை ஒத்திருக்கிறது.
இந்தப் பெண்ணின் அமைப்பு 
கிருஷ்ணன் ஆடிய ரஸ ஆட்டங்களில் ஆடிய பெண்களை ஒத்திருக்கிறது என்றால் மிகையல்ல.


விஸ்வகர்மாவின் தோற்றம்.


நிலம் என்பதே இந்த உலகம் நல்ல வாஸ்து அமைப்பில் உள்ளதால் எழுந்தது.
இப்படி ஒரு அமைப்பு பிரபஞ்சத்தின் வேறு எந்த இடத்திலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகமே வாஸ்துவுடன் அமைந்திருப்பதற்குக் காரணம் சூரியன் ஆகும்.
அந்த சூரியனது நிலையாலும், தன்மையாலும்,
இந்த உலகில் உயிர்கள் எழுந்துள்ளன.
அதனால் அந்த சூரியன் முதல் விஸ்வகர்மா ஆவான்.

விஸ்வ கர்மா என்றால் இந்த அண்டத்தைச் செதுக்கினவன் என்று பொருள்.
அந்த விஸ்வகர்மாவைப் போற்றும் பாடல்கள் ரிக் வேத்த்தில் இருக்கின்றன.
அவனுக்கு ஐந்து முகங்கள் என்று வசிஷ்ட புராணம் கூறுகிறது. (3-6-11)
அவை மனு, மயன், துவஷ்டா, சில்பி, விஸ்வஞ்ஞன் என்பன.இப்படி தத்துவார்த்தமாகச் சொல்லப்படும் முகங்கள்,
ஐந்து பிரிவுகளான நிபுணத்துவங்களாக இருக்கலாம்.
இவற்றை ஐந்து ரிஷிகள் மூலம் கற்றுக் கொண்டு,
ஐந்து பரம்பரைகள் ஏற்பட்டிருக்கின்றன.
(நம் நாட்டில் எல்லா அறிவும் ரிஷிகள் மூலம் தான் எழுந்தன.
அவர்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ளப்பட்டன.)
வால்மீகி ராமாயணத்தில் விஸ்வகர்மாவே சொல்லப்பட்டுள்ளான்.
ராவணன் வாழ்ந்த லங்கையை நிர்மாணித்தவன் அவனே.
அவனே பறக்கும் ஊர்தியான புஷ்பக விமானத்தையும் செய்தான்.
நிலம், கிராம நிர்மாணம், நகர நிர்மாணம், ஆகியவற்றுக்கு,
விஸ்வகர்மா நிருமித்த கோட்பாடுகளே இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.


இதைப் பற்றிப் பேசும் போது
விஸ்வகர்மா வாஸ்துவில் வரும் ஒரு விவரம் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆராய்ச்சிக்குரியது.
மேலே சொல்லப்பட்ட அங்குல அளவீடுகள்
முதலில் தேவமானம் என்றழைக்கப்பட்டு,
தேவர்கள் பயன்பாட்டில் இருந்தது என்றும்,
அதில் சில வேறுபாடுகளைக் கொண்டு வந்து,
மனிதர்கள் பயன்பாட்டுக்கு ஏற்றாற்போல
விஸ்வகர்மா மாற்றினார் என்றும் சொல்லப்பட்டுள்ளது


தேவர்கள், இந்திர லோகம் போன்றவை
உலகின் வட கோடியில் இருந்தவையே என்று இந்தத் தொடரில் முன்பு பார்த்தோம்
இன்றைக்கு 40,000 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து,
பனியுகம் ஆர்ம்பித்த காலமான 17000 ஆண்டுகள் முன் வரை
மக்கள் அந்தப் பகுதிகளில் வாழ்ந்தனர் என்று 

மரபணு ஆராய்ச்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அந்தப் பகுதியில் உத்தர குரு இருந்தது என்றும்,
அங்கு வாழ்ந்த மக்கள், தங்கள் இருப்பிடத்துக்குள்
மற்றவர்களை எளிதில் அனுமதித்த்தில்லை என்றும் முன்பே கண்டோம் (பகுதி 35)


கடைசியாக நாம் அவர்களைப் பற்றி அறிவது மஹாபாரத காலத்தில்
பாண்டவர்கள் பிறந்ததபோதுதான்.
பாண்டவர்களது உடற்கூறு ரீதியான பயலாஜிகல் தந்தையர் அந்தப் பகுதியான
தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள்.

அதற்கு ,முன் ராமாயண காலத்தில், ராவணன் மகனான இந்திரஜித்,
இந்திர லோகம் சென்று இந்திரனை வென்றான்,
அதனால் தான் அவனுக்கு அந்தப் பெயரே ஏற்பட்ட்து (பகுதி 35)


அதற்கும் முன்னால் சோழர்களது முன்னோனான முசுகுந்தனது காலத்தில்,
அந்த அரசனுக்கும், இந்திர லோகத்தவர்களுக்கும்
அடிக்கடி தொடர்பு இருந்திருக்கிறது என்றும்,
இந்திர லோகத்துத் தெய்வம் ஒன்றே,
நாளாங்காடி பூதம் என்னும் பெயரில் புகார் நகரில் குடி கொண்டிருந்தது
என்றும் பார்த்தோம். (பகுதி 11,16,17, 35)


புகாருடன், இந்திர லோகத்துக்குத் தொடர்பு இருந்தது என்று சொல்லும் வண்ணம்
ஒரு வாஸ்து அமைப்பு இருக்கிறது.
ஒரு சமயம் இந்திர லோகமாக இருந்து,
இப்பொழுது ரஷ்யாவின் சைபீரியாப் பகுதியாக இருக்கும்
அர்க்கைம் என்னும் இடத்தில் வட்ட வடிவில் அமைப்புகள்
இருப்பதைக் கண்டு பிடித்துள்ளார்கள் என்றும் கண்டோம் (பகுதி 34,35. ). 


இதன் காலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பாகும்.
அதற்கும் முன்னால் 11,500 ஆண்டுகளுக்கு முன்பே
புகார் நகரிலும் அவற்றை ஒத்த அமைப்புகள் இருந்திருக்கின்றன. (பகுதி 16)
புகார் அருகே கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அமைப்பு
ஏறத்தாழ அர்க்கைம் அமைப்பை ஒத்திருப்பதைக் காணலாம்.


வட்ட வடிவமான அர்க்கைம் (ரஷ்யா) அமைப்பு - 4000 ஆண்டுகளுக்கு முந்தின அமைப்பு.முட்டை வடிவமான புகார் அமைப்பு - 11,500 ஆண்டுகளுக்கு முந்தின அமைப்பு.

இப்படிப்பட்ட அமைப்புகள் தற்காலத்தில் கிடையாது.
பொதுவாக சதுரமாகவும், செவ்வகமாகவும் அமைப்பதே
சிறந்த வாஸ்து என்று சொல்லப்படுகிறது.

ஆனால் வட்ட வடிவில் நிலம், மற்றும் கட்டுமானப் பகுதிகள் அமைப்பது உண்டு.
இதை விருத்தாகாரம் எனப்பார்கள். விருத்தி அடைதல், வளருதல் என்று பொருள்.


அது சிறந்த அமைப்பென்றும்,
அந்த அமைப்பில் கோவில்கள், பாட சாலைகள்,
பெரும் அரங்குகள் அமைப்பது சிறந்தது என்றும்,.
ஊருக்குள் இடம் போதவில்லை என்றாலும்,
ஊரை விரிவு படுத்த வேண்டும் என்றாலும்,
அப்படி விரிவாக்கம் செய்யும் பகுதிகளில் 
வட்ட வடிவ விருத்தாகார அமைப்புகள் செய்யலாம் என்றும்
வாஸ்து நூல்கள் கூறுகின்றன.


இன்றைக்குப் பிரபலமாகாத இந்த அமைப்பு,
அர்க்கைமிலும், புகாரிலும் இருந்தது என்றால்,
அது முந்தின வாஸ்து மரபைக் காட்டுகிறது என்று தோன்றுகிறது.


தேவலோகத்தில் வாஸ்து விதிப்படி இந்திர சபை அமைத்தார்கள்.
தேவமானத்தில் லீக்‌ஷா (மில்லி மீட்டர்) வரை அளவுகள் இருந்தன,
அதாவது ஒரு அங்குலம் என்பது தேவ மானத்தில் ஒரு லீக்‌ஷா ஆகும்.
இந்தக் குறிப்பு விஸ்வகர்ம வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளதால்,
குறைந்தது 10,000 ஆண்டுகளுக்கு முன்பே
கட்டுமானத்திறமை மக்களுக்கு இருந்திருக்கிறது என்று தெரிகிறது.

அதற்கு ஒரு சாட்சி,
புகார் அருகே கடலுக்குள் காணப்படும் முட்டை வடிவ அமைப்பாகும்.

இனி மய வாஸ்துவைப் பற்றித் தெரிந்து கொண்டு,
மொஹஞ்தாரோவில் உள்ள குளத்தின் அமைப்பை ஆராய்வோம். 2 கருத்துகள்:

  1. i have few doubts regarding ur concept stating that indralog exixts with in this world.some of hindu mythology says that ppl from this world went to indralog(story refers to balarama's marrige) n some other places outside this world.when they come back to their surprise so many generations went passed. this stories scientifically explains the time dialation concept of einstein's theory. ie if human being wants to travel the nearest star then he should travel with light year 's velocity, even then this lifetime may not be sufficient to cover the distance but if he traveled with light velocity then it will freeze his age.stories with this amazing reference to time dilation makes me believe the fact that ppl from this world travelled to other world like indraloga . could u clear my doubts?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. In articles 19, 20 and 21, I had explained the three-some interpretation for Indra. Similar explanation holds good for Muruga / Karthikeya too. Perhaps a reading of those articles and the comments that I have posted on this topic before might give an answer.

      நீக்கு