டிடிகாகா புல்லைப் பற்றிய ஒரு விவரம் என்னவென்றால், இதைக் கொண்டு செய்யப்படும் ஒரு வகை நீச்சல் உபகரணக் கருவியைக் கொண்டு 'தங்கத மனு' (Tangata manu) போட்டியில் கலந்து கொள்வார்கள். ஈஸ்டர் தீவுப் பகுதியில் இந்தப் போட்டி மிகவும் பிரபலமானது. தங்கத மனு என்னும் பெயர் தெங்கத மனு என்ற ஒலியில் இருக்கிறது. இதில் உள்ள மனு என்னும் சொல், சமஸ்க்ருத மனு அல்லது மனிதன் என்னும் பொருளில் தான் வருகிறது. தெங்கத என்பது தேங்காய் என்பதன் திரிபாக இருக்கலாம், ஆனால் அந்தப் பெயர் ஒரு பறவை முட்டையைக் குறிக்கிறது என்கிறார்கள். இந்தப் போட்டியில் கடலில் நீந்தி தொலைவில் இருக்கும் மோட்டு நூ (Motu Nui) என்னும் ஒரு தீவில் கரையேறி அங்கு காணப்படும் பறவை முட்டையை எடுத்துக் கொண்டு மீண்டும் கடலில் நீந்தி, கிளம்பின இடத்துக்கு வந்து அங்கிருக்கும் செங்குத்தான மலை மேல் முதலில் ஏறுபவன் வெற்றி பெற்றவனாவான்.
(Motu Nui) மோட்டு நூ என்பதில் உள்ள மோட்டு என்பது மேடு என்பதன் திரிபாகத் தெரிகிறது. மோட்டு என்னும் பெயருடன் பல இடங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. அவை அனைத்துமே கடல் மட்டத்திலிருந்து சிறிதளவு உயரத்தில்தான் உள்ளன, பார்ப்பதற்கு மேடு போல உள்ளன.
தெங்கத மனு போட்டியில் போட்டியாளர்கள் செல்லும் மோட்டு நூ தீவின் அமைப்பை இந்தப் படத்தில் காணலாம். கடலில் மேடுகளாக இந்த்த் தீவு இருக்கிறது.
தங்கத என்னும் பெயர் தெங்க நாடு என்னும் பெயரை ஒத்து ஒலிக்கிறது, 3 ஆம் ஊழிக்கு முன் ஏழு தெங்க நாடுகள் தென் கடலில் இருந்திருக்கின்றன. தெங்கம் என்னும் பெயரால் அங்கு தென்னை மரங்கள் அதிகமாக இருந்திருக்க வேண்டும். கடலுக்கு நடுவில் ஆங்காங்கே இருந்த அந்த்த் தீவு மக்களுக்கு நீந்திச் சென்று தெங்கங்காயை எடுத்து வருவதே விளையாட்டாக இருக்கும்.
இந்தோனேசியாவையும், தென் மதுரையை ஒட்டியும் 90 டிகிரி மலைப் பகுதிகள் தீவுகளாக இருந்த காலக் கட்ட்த்தில் அங்கு வாழ்ந்த மக்கள், இயற்கைச் சீற்றத்தினால், மேற்கு நோக்கி இடம் பெயர்ந்திருக்க வேண்டும். பசிஃபிக் கடல் பகுதியில் பாலினேசியா எனப்படும் பகுதியில் இந்த விளையாட்டு இருப்பதால், அதிலும் தெங்கம் என்றும், மனு என்றும் பெயர் கொண்ட போட்டி இருந்ததால், இது தெங்க நாட்டு மக்கள் தப்பிச் சென்ற விவரத்துக்குச் சான்றாகத் தெரிகிறது. வந்த இட்த்தில் தெங்க மரங்கள் இல்லாத்தால், அங்கு கிடைக்க்கூடிய பறவை முட்டையை எடுத்து வருவதைப் போட்டியாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். மனு என்பவனை மோசமானவன் என்று திராவிடவாதிகள் சித்தரிக்கின்றனர். மனு என்பது சமஸ்க்ருதச் சொல். அந்த மனுவுடனும் அவன் பரப்பியதாகச் சொல்லப்படும் ஆரியத்துக்கும், சொந்தம் கொண்டாடுபவர்கள் ஐரோப்பியர்கள்! ஐரோப்பாவிலிருந்துதான் இந்தியாவுக்கு ஆரியர்கள் வந்தனர் என்றும், அவர்களில் ஒருவனான மனு என்பவன் ஆரிய மேலாண்மையை நிலைநாட்டி, பாரத்த்தில் ஏற்கெனெவே இருந்த திராவிடர்களைக் கீழானவர்களாக நட்த்தினான் என்றும் சொல்வது இவர்கள் வழக்கம். அதை அப்படியே ஏற்றுக் கொண்டனர் தமிழ் நாட்டுத் திராவிடவாதிகள்.
ஐரோப்பாவுடனும், ஆரியத்துடனும் தொடர்பு கொண்ட மனு, தென் கிழக்கு ஆசியாவில், பசிஃபிக் தீவுகளில் எப்படி வந்தான்?
மனு என்னும் சமஸ்க்ருதச் சொல் அங்கு எப்படி வந்தது?
தெங்கம் என்னும் தமிழ்ச் சொல்லுடன் அது எப்படி இயைந்து வந்தது?
மனு என்னும் சொல் இந்த இடத்தில் மட்டுமல்ல, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள பிற தீவுகளிலும் காணப்படுகிறது. சமோவா தீவுக்கூட்டத்தில் இந்தச் சொல் அதிகம் இருக்கிறது. (Samoa, Samoan Islands) சமோவா என்னும் பெயரே சாமரம் என்னும் சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து உருவாகி இருக்க வேண்டும் என்னும் வண்ணம் அங்குள்ள மக்களது குறியீடுகளில் சாமர வடிவம் இருக்கிறது.
அமெரிக்கன் சமோவா என்று ஒரு சின்னத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது சமீபத்தில் உருவாக்கப்பட்ட்துதான். ஆனல் இதில் சமோவாவின் பழமையான சின்னங்களைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் காணப்படும் சமோவாவின் சின்னத்தில் சாமரம் போன்ற வடிவத்தைக் காணலாம். இப்படிப்பட்ட வடிவத்தில் இந்தியாவில்தான் கோயில்களிலும், அரசாட்சிகளில் அரசனுக்கும் வீசப்படும் சாமரம் இருக்கும். தென்ன்ன் தேசம் என்று 49 நாடுகள் இருந்த போது அங்கு சமரம் தயாரித்த அல்லது அரசனுக்கு சமரம் வீசிய மக்கள் ஊழிகளில் சிதறுண்டபோது சாமரா, சமோவா என்ற பெயருடன் இருந்திருக்கிறார்கள். சாமரம் என்பது சமஸ்க்ருதப் பெயர்!
இன்றைக்கு இருக்கும் சமோவாத் தீவுகளில் மனுவா (Manu'a) என்னும் மக்கள் கூட்டங்கள் இருக்கின்றன. எங்கேயிருந்து இதில் மனு என்னும் சொல் புகுந்தது?
இதைப் போல மனோனோ (Manono) என்னும் தீவும், அந்தப் பெயரில் மக்களும் இருக்கிறார்கள். மனு என்னும் சொல்லுடன் தொடர்பு கொண்ட இந்தப் பெயர் எப்படி இங்கு வந்தது?
இதைத்தாண்டி, வட அமெரிக்காவில் நுழைந்தால் அ-நிசி-நாபி (Anishinaabe) என்னும் சம்ஸ்க்ருதப் பெயர் கொண்ட மக்கள் நயாகரா பகுதியில் இருக்கிறார்கள். நிசி என்றால் இரவு.
அ-நிசி என்றால் இரவு ஒழிந்த பகல், அதாவது சூரிய வெளிச்சம்.
அதன் நாபி, அதாவது கொப்பூழ்.
சூரியனது ஒளி பரவும் இடங்களில் உயிரினம் உண்டாகும் என்பதை இது காட்டுகிறது.
இறைவனின் கொப்பூழிலிருந்து உயிரினம் உண்டானது என்பது வேத மரபில் சொல்லப்படுவது.
அப்படிப்பட்ட சமஸ்க்ருதப் பெயரான அநிசிநாபி மக்களின் முதல் மனிதனை மனு என்று சமஸ்க்ருதப் பெயரால் சொல்லவில்லை. மனிதூ (மனிதன்) (Gichi-Manidoo) என்று தமிழ்ப் பெயரால் சொல்கிறார்கள். அநிசிநாபியைப் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம். இங்கு நாம் காண வேண்டியது, தமிழும், சமஸ்க்ருதமும் இணைந்த ஒரே கலாசார மக்கள் தென் கடலில் வாழ்ந்தார்கள் என்பதையும், அவர்களே வட அமெரிக்கா வரை சென்றார்கள் என்பதையுமே. அதிலும் மனு என்ற சொல் தென் கடலில்தான் உருவாகி இருக்கிறது. மக்கள் கூட்டங்கள் என்னும் பொருளில் பல மனுக்கள் வந்திருக்கின்றனர். அவர்களுள் ஒருவனான வைவஸ்வத மனு, சரஸ்வதி நதி வழியாக இந்தியாவில் நுழைந்து இன்றைய பெரும்பான்மையான இந்திய மக்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறான்.
சமோவா போன்ற இடங்களில் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் அந்த மக்கள் குடியேறி இருப்பதாக ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளன. அதற்கு முன்னால் அவர்கள் எங்கிருந்தார்கள் என்பதற்கு ஆராய்ச்சியாளர்களிடத்தில் பதிலில்லை. எங்கு இல்லை என்று அவர்களால் சொல்ல முடிகிறது. அவர்கள் சீனாவிலிருந்து வரவில்லை, இன்றைய இந்தோனேசியாவிலிருந்து வரவில்லை, தென் அமெரிக்காவிலிருந்து வரவில்லை என்பதை மரபணு ஆராய்ச்சிகள் மூலம் சொல்ல முடிகிறது. அப்படியென்றால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், யாருடன் அவர்கள் தொடர்பு கொண்டவர்கள் என்றால் இன்றைக்கு தென் கடலில் முழுகி விட்ட, ஆனால் தென்ன்ன் தேசமாகப் பரவியிருந்த மக்கள் கூட்டத்திலிருந்து அவர்கள் வந்திருக்கிறார்கள் எனபதுதான் பதிலாக இருக்க முடியும்.
இன்று தென்னிந்தியக் கடலில் நிலமே இல்லை, மக்களும் இல்லை. ஆனால் இந்த சமோவா போன்ற மக்கள் பசிஃபிக் கடலில் குடியேறிய அதே காலக்கட்டத்தில் – இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் 3 ஆம் கடலூழியால் பாதிக்கப்பட்டு, தென்ன்ன் பாண்டியனும், அவனுடன் ஆயர் போன்ற தொல் குடி மக்களும், இன்றையத் தென்னிந்தியப் பகுதிகளில் கரை ஏறி இருக்கிறார்கள் என்பதற்கு நம் தமிழ்ச் சங்க நூல்கள் மட்டுமே சான்றுகளாக இருக்கின்றன. அவை தரும் குறிப்புகள் மூலம் இந்த மக்களும், ஆதி தென்ன்ன் தேச மக்களில் ஒருவரே என்றும் தெரிகிறது. இந்த மக்களிடையே சமஸ்க்ருதம் மற்றும் தமிழ்ப் பெயர்ச் சொற்கள் இன்னும் இருப்பதால், தென்னன் தேசத்திலேயே சமஸ்க்ருத- தமிழ்ச் சேர்க்கை இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
அவ்வாறு வரும் இன்னொரு சொல்லைப் பார்ப்போம். சமோவா உள்ள பாலினேசியப் பகுதியில் தான் டோங்கா (Kingdom of Tonga) நாடு இருக்கிறது. (டோங்கா என்னும் பெயரில் ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வேயிலும் மக்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் இணைத்து மரபணு ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்.) இந்தப் பெயரும் தெங்கம் என்னும் தமிழ்ப் பெயரின் திரிபாக இருக்கிறது. டோங்கா என்றால் தெற்கு என்று அவர்கள் மொழியில் கூறுகிறார்கள்.
பாலினேசியத் தீவுகளின் தெற்கில் இருப்பதால் இந்தப் பெயர் என்று கருதுகிறார்கள். ஆனால் தென்னன் மதுரை இருந்த பகுதிகளிலிருந்து வந்தவர்களாக இருந்திருந்தால், தெங்கு – தெற்கு என்னும் பொருளில் தெங்க நாடுகளிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம்.
இதைச் சொல்வதற்குக் காரணம், இந்த்த் டோங்கா தீவில், இன்றைக்கு 3000 முதல் 3500 ஆண்டுகளுக்கு முன்புதான் மக்கள் குடியேறியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. டோங்காவில் மட்டுமல்ல, பல பாலினேசியத் தீவுகளிலும் 3000 ஆண்டுகளுக்கும் முன்புதான் மக்கள் குடியேறி இருக்கின்றனர். அதாவது 2 ஆம் தமிழ்ச் சங்க காலம் அழிந்து, 3 ஆம் கடலூழியில் ஒரு சுவடும் இல்லாமல் இந்தியப் பெருங்கடலில் ஆங்காங்கே இருந்த நிலங்களும், மக்களும் பாதிக்கப்பட்ட பொழுது, கிழக்கு நோக்கி பசிஃபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் தஞ்சம் புகுந்த மக்களே பாலினேசிய மக்கள் என்ற பெயரில் இன்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்தப் படத்தில் சமோவா, டோங்கா, ஈஸ்டர் தீவு ஆகியவற்றை சிவப்பு நிற அடிக் கோட்டில் காணலாம். மேலும் ஹவாய், ஃபிஜித் தீவுகளிலும் சில புராணத் தொடர்புகள் இருக்கின்றன். அவற்றைத் தக்க இடத்தில் ஆராயலாம்.
இந்த இடங்களில் தமிழ் – சமஸ்க்ருதச் சொற்கள் மட்டுமல்ல புராணப் பெயர்களும் இருக்கின்றன. எந்த இந்திய அரசனும் இந்த இடங்களை வென்று, தங்கள் ஆட்சியை நிறுவி, அதன் காரணமாக புராணப் பெயர்கள் ஏற்படுத்தவில்லை. ஆரம்பத்திலேயே அந்த மக்கள் அந்தப் பெயர்களைக் கொண்டு அழைத்திருக்கிறார்கள். அவற்றை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம். இங்கு சமஸ்க்ருதம் – தமிழ் புழங்கிய சான்றுகளைப் பார்ப்போம்.
மேலே உள்ள வரை படத்தில் உள்ள பகுதிகளில் காணப்படும் மற்றொரு முக்கிய சமஸ்க்ருதச் சொல் லபிதா என்பதாகும். (http://en.wikipedia.org/wiki/Lapita )
இந்தப் பகுதிகளில் 3500 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்ட பானை வனையும் கலையை லபிதா என்னும் பெயரில் அழைக்கிறார்கள். லபிதா என்னும் சொல் சமஸ்க்ருத்த்தில் சட-சடவென்ற ஓசை என்னும் பொருளிலும், தொடர்ச்சியாக வரும் ஒரு ஒலிக் குறிப்பையும் குறிக்கும். பானை வனையும் சக்கரம் எழுப்பும் ஒலியை இது காட்டுவதாக உள்ளது.
இந்தச் சொல்லே தவறாகப் புரிந்துக் கொண்ட சொல் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. 1952 இல் முதன் முதலில் இந்தப் பானைச் சில்லுகளை ஆராய்ந்த பொழுது, அங்கிருந்த மக்களை விசாரித்த பொழுது, அவர்கள் ழபேதா (xapeta'a) என்று சொன்னதாகவும், அதைச் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல் லபிதா என்று நினைத்து விட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். (இங்கு க்ஷ அல்லது ஷ என்னும் ஒசையில் எழுதப்படுவதை ழ என்று சொல்லியுள்ளேன். இதைப் பற்றிய சில விவரங்களை இன்னொரு கட்டுரையில் காண்போம்). அந்தச் சொல்லுக்குத் தோண்டுதல், குழி என்று பொருள் சொன்னார்களாம். இந்தப் பொருள் தமிழையும், ழபிதா என்பதே தமிழ்ச் சொல்லாக இருக்க்கூடும் என்பதையும் காட்டுகிறது.
செந்தமிழில் ழகரத்தில் சொல்லை ஆரம்பிக்க மாட்டார்கள். அதை இழபிதா என்று சொல்ல வேண்டும். இழிபு என்றால் குறைவு, தாழ்வு என்று அர்த்தம். பானை வனைய, பள்ளம் தோண்டி மண் எடுப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் லபிதா என்றே இந்தப் பானை வகையையும் அதை உருவாக்கிய கலாசாரத்தையும் அழைக்கின்றனர். இழிபு என்னும் இந்தச் சொல்லிலிருந்துதான் இழிஞன், புலையன், என்னும் பெயர்கள் உண்டாயின. இந்தப் பெயரை இழிவானதாகக் கருதவில்லை. பாணன், புரோகிதன் ஆகியோரையும் புலையன் என்றே குறிப்பிட்டுள்ளனர். புலஸ்தியர் என்னும் ரிஷி இருந்திருக்கிறார்.
புலத்தியர் அல்லது புலஸ்தியர் என்னும் ரிஷியை மனித குலம் உருவாக்கிய ஆரம்ப ரிஷியாக மஹாபாரதம் கூறுகிறது. 114 ஆவது கட்டுரையில் கர்தமர் என்னும் ரிஷியைப் பற்றிச் சொன்னோம். கர்தமர் என்றால் மண் என்று பொருள். மண்ணிலிருந்து (செல்வம் ஈட்டத்தக்க) பல பொருட்கள் உருவாக்கப்பட்டதால், கர்தமரது பெண் லக்ஷ்மியாவாள் என்றும் பார்த்தோம். அந்தக் கர்தமரது ஒரு மகளான 'ஹவிர்பூ' (हविर्भू) என்பவளைப் புலஸ்தியர் மணந்து கொண்டார். ஹவிர் பூ என்றால் அவிப் பொருளைச் சேர்க்கும் யாக பூமி என்று பொருள். பூமியிலிருந்து மண்ணெடுத்து, பானை முதலிய பல பொருட்களை உருவாக்கும் செய்கையை இது காட்டுகிறது.
இதனால் புலஸ்திய ரிஷி என்பவர், மண்ணைத் தோண்டி, பக்குவம் செய்து பானை வனையும் தொழிலுக்கும், அவ்வாறு வனையும் மக்களுக்கும் அதிபதி ஆவார் என்றாகிறது. இன்றைக்குப் புலையன் என்பது இழிசொல்லாகிவிட்டது. ஆனால் அந்தப் புலைத் தொழிலான குயவன் தொழிலால்தான் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக மனித இனம் வாழ்ந்து வந்திருக்கிறது. புலஸ்தியரைப் பற்றிப் பேசும் வேத மதமும், மரபும் அந்தத் தொழிலுக்கு இழிவை ஏற்படுத்தவில்லை. சாலிவாஹன சகாப்த்த்தை உருவாக்கின சாலிவாஹனன், கும்பர் என்னும் குயவர் குலத்தைச் சேர்ந்தவன்.
இந்தக் குயவர் குலம் ஆதியில் தென் கிழக்கு ஆசியாவில் இருந்து வந்திருக்கிறது. அப்பொழுதே வேத மதம் அங்கு தழைத்திருக்கிறது என்பதைக் காட்ட லபிதா பானைச் சில்லுகளே சாட்சியாக இருக்கின்றன. அங்கிருந்து 3 ஆம் ஊழியில் அவர்களில் ஒரு பகுதியினர் பசிஃபிக் கடல் பக்கம் சென்றிருக்கிறார்கள். அதற்கு முன்பே இந்தியாவிலும் நுழைந்திருக்கிறார்கள்.
சிந்து சமவெளிப் பகுதியில், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே ஹரப்பாவில் காணப்படும் ஒரு சின்னத்தைக் கீழே பார்க்கலாம்.
இதில் 7 பெண்கள் கை கோத்தற்போல அருகருகே இருக்கின்றனர். (இந்தச் சின்னத்தை மனித பலியைக் காட்டும் சின்னம் என்று ஆரியப் ப்டையெடுப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தச் சின்னத்தின் உண்மையான கருத்தை, வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்)
இதே போன்ற அமைப்பில் லபிதா பானைகளில் பாலினேசியப் பகுதிகளில் கிடைத்துள்ளன. கீழே காணவும்.
Lapita / Fiji - earliest pot shards > c.1900 B.C. Photo – Fiji Museum
இந்த அமைப்பில் இன்றும் ராஜஸ்தானியப் பெண்கள் அணிவகுத்துச் செல்வதையும், குஜராத்திப் பெண்கள் நடனமாடுவதையும் பார்க்கலாம். இவர்கள் உடை அமைப்பு இன்றைக்கும் இந்தியாவில் காணப்படும் உடை அமைப்பே.
லபிதா கிண்ணம் ஒன்றைக் கீழுள்ள படத்தில் காணலாம்.
Lapita Bowl/Face – Tarawa Atoll / Kiribati Photo – John Terrell / Lapita Gallery
அதில் ஒரு பறவை போன்ற அமைப்பும் அதன் மத்தியில் சில ஜியோமிதி வடிவங்களும் காணப்படுகின்றன. அது யாக சாலையின் அமைப்பை ஒத்திருக்கிறது.
அதிராத்திரம் என்னும் அக்னி யாகத்தில் இப்படிப்பட்ட அமைப்பில்தான் யாக குண்டத்தை அமைப்பார்கள். அது இப்படி இருக்கும்:-
சமீபத்தில் கேரளாவில் நடந்த அதிராத்திர யாகத்தில் யாக்க் குண்டத்தை இப்படித்தான் அமைத்தார்கள்.
அதை இந்தப் படத்தில் காணலாம்.
அதைக் கட்டும் போது எடுக்கப்பட்ட படம் கீழே.
http://en.wikipedia.org/wiki/Agnicayana
இதே உருவம்தான் வட அமெரிக்காவில் அநிசிநாபி மக்களிடையேயும் புனிதமாகக் கருதப்பட்டு வருகிறது. அதைக் கீழே காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Anishinaabe
கருடன் என்று நாம் சொல்லும் பறவையின் அமைப்பில் இவை உள்ளன.
பாலினேசியாவில் இந்த வடிவம் வனையப்பட்டது என்றால், அதை இந்தியாவிலிருந்து யாரும் அங்கு சென்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. அவர்கள் பரம்பரை பரம்பரையாக அதைச் செய்து வந்துள்ளார்கள். அதுவே வேதப் பாரபரியத்தின் முக்கிய யாகத்தின் வடிவமாதலால், அந்த யாகம் தென் கிழக்கு ஆசியா, தென்னிந்தியக் கடல் பகுதி, தென்னன் தேசம் என்று அந்தப் பகுதிகளில் முதலில் தோன்றி விட்டிருக்கிறது. பொதுவாகவே யாகம் செய்வதற்கு முன் யாக பூமியை உழுவார்கள். அதைப் புலையன் தான் செய்வான். அதில் அவனுக்கு இழுக்கு இல்லை. புலஸ்தியரே அதை ஆரம்பித்து வைத்தவராக இருக்க வேண்டும்.
அவரவர் தொழில் சார்ந்து அதற்கேற்ற வேலைகளைச் செய்திருக்கின்றனர். உண்மையில் எவனொருவன் யாகம் செய்யத் தேவையான ஏற்பாடுகளையும், செயல்பாடுகளையும் தன் வாழ்வின் குறிக்கோளாகச் செய்கிறானோ அவன் அடுத்த பிறவியில் சிறந்த வேத வித்வானாகப் பிறந்து, அனைவராலும் போற்றப்பட்டு, செல்வம், செல்வாக்கு, இன்பமான குடும்பம் ஆகியவற்றாஇ அனுபவித்து, அந்தப் பிறவி முடிந்தவுடன், மறு பிறப்பில்லாத மோக்ஷத்தை அடைவான் என்று பிரம்ம ரிஷி வாக்கியம் என்னும் ஜோதிட நூல் கூறுகிறது.
எந்தத் தொழிலிலும் உயர்வு இருக்கிறது. இந்தியாவில் எல்லாத் தொழிலும் பாரம்பரியமாகச் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அவற்றைச் செய்வதில் அந்தந்த மக்கள் பெருமைப் பட்டார்கள். அவற்றில் தாங்களே முன்னணியில் இருப்பவர்கள் என்று திருப்தி அடைந்தார்கள். ஆனால் அவற்றைப் பொருளாதார ரீதியில் தரம் பிரித்து, மட்டமாகப் பார்த்தவர்கள் கால்னிய ஆங்கிலேயர்கள். அவர்களைத் தொடர்ந்து இன்று வரை பல மக்களும் தங்களைப் பின் தங்கியவர்களாக்க் கருதுகிறார்கள்.
இங்கே சொல்லும் குயவனும், புலையனும் வேத யாக்க் குண்டத்தை வடித்தவர்கள். அதைப் பற்றிய விவரங்களை அறியாமல் அவர்கள் அந்த வடிவங்களையோ அல்லது யாக சாலையையோ உருவாக்கியிருக்க முடியாது.
இந்தக் கட்டுரையைப் பொருத்தமட்டில், வேதமும், தமிழும், சமஸ்க்ருதமும் தென் பகுதியில் இருந்த சுவடுகளை இவை காட்டுகின்றன என்பதைச் சொல்வதே நம் நோக்கமாகும்.
Madam,
பதிலளிநீக்குcan you please let me know where to get this brahma rishi vakkiyam book?
Its available in Giri traders.
நீக்கு