ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

74. மந்திரம் என்பது மூட நம்பிக்கையா?


எண்ணும், எழுத்தும் சேரும் போது 
ஒரு வார்த்தைக்கு வீரியம் கிடைக்கிறது.
அந்த வார்த்தையை ஒரு குறிப்பிட்டவிதத்தில் சொல்லும் போது
அந்த வீரியம் சக்தியாக வெளிப்படுகிறது.
சொல் என்றாலே, அதற்கு ஒலி அலைகள் உள்ளன.
அந்த ஒலி அலைகளுக்கு அழிக்கும் சக்தி உண்டு,
ஆக்கும் சக்தியும் உண்டு, காக்கும் சக்தியும் உண்டு.

எங்கேயோ ஒரு இடத்தில் வெடித்த ஒரு வெடி ஏற்படுத்திய அதிர்வலைகளால்,
வேறு எங்கோ உள்ள ஒரு மனிதனது உடலுக்குள் இருக்கும்
ஒரு நுண்ணிய ரத்தக் குழாய் வெடித்திருக்கும் சாத்தியங்களை
இன்று விஞ்ஞானம் கூறுகிறது.


அது போல நமது காதுகளால் கேட்க முடியாத ஒலி அலைகளால்,
உடலில் இருக்கும் நோயைக் குணப்படுத்த முடியும் என்பதையும்
இன்று நாம் அறிகிறோம்.
இந்த அடிப்படையில் நாம் மந்திரங்களைப் பார்க்க வேண்டும்.


குறிப்பிட்ட ஒலி அலைகளால் மனிதனைக் காக்கவும் முடியும்
மனதைக் காக்கவும் முடியும்,
மனித நிலைக்கு அப்பாற்பட்டு உயரவும் முடியும் என்பது,
மந்திரம் என்பதன் மூலம் சாத்தியமாகிறது.


மந்திரத்துக்கு வீரியம் தர, அதற்கு அடிப்படையில் எண் இருக்கிறது.
அந்த எண் எது என்று தெரிந்து, அறிந்து, புரிந்து கொண்டு,
அதை எப்படிப் பயன் படுத்தலாம் என்று சொல்வதற்கு
ஒரு மனிதனுக்குத் தகுதி இருக்க வேண்டும்.
இதைத் தொல்காப்பியம் சொல்கிறது.


பொருளதிகாரத்தில், பாடல் வகைகளைச் சொன்ன பிறகு,
அவற்றுக்குள் வராத,
ஆனால் சில குறிப்புகளைக் காட்டுவதற்காக
உருவாக்கப்பட்ட மொழிகளைச் சொல்லுமிடத்தே,
முதலில் முதுமொழியைச் சொல்கிறார் தொல்காப்பியர்.
பல காலமாகப் பாமர மக்களிடையே பேச்சு வழக்கில் உருவான ஒரு மொழியை,
காலப்போக்கில் பிற மக்களும் எடுத்துக் கொண்டு,
அதன் மூலம் ஒரு குறிப்புணர்த்தியது,
முதுமொழி அல்லது பழமொழி எனப்பட்டது. .
அப்படிப்பட்ட ஒரு பழமொழியானது வால்மீகி ராமாயணத்தில்,
சீதையால் சொல்லப்பட்டது என்பதை பகுதி 69- இல் கண்டோம்.


முதுமொழிக்கு அடுத்த
தாக, ‘மந்திரம்’ என்பதைத் தொல்காப்பியம் கூறுகிறது.
“நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழிதானே மந்திரம் என்ப(பொரு- 480)
இதன் பொருள் :-
”நிறைந்த மொழியையுடைய மாந்தர்,
தமதாணையால் சொல்லப்பட்ட மறைந்த சொல் மந்திரமாகும்”.  


மந்திரம் என்றாலே, மறைவாகவும், மூடி மறைத்தும் இருப்பது.
அதன் பொருள் வெளிப்படையாகத் தெரியாது.
ஆனல் அதைத் தந்தவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை.
நிறைமொழி மாந்தர் என்று தொல்காப்பியம் சொல்வதால்,
கற்றறிந்தவர்களாகவும்,
சிறந்த மொழி பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும்.
இதன் மூலம்,
மந்திரத்தில் உள்ள சொல்லும் முக்கியம்,
அதை உண்டாக்கியவரது தகுதியும் முக்கியம் என்று தெரிகிறது.


மந்திரம் என்னும் சொல்,
பல வகையாகத் தமிழில் வழங்கி வந்திருக்கிறது.


மந்திரச் சுற்றம் என்பது அரசனது மந்திரி சபையைக் குறிக்கும்.
அவர்களுடன் அரசன் மந்திராலோசனை செய்வான்.
அதாவது, ரகசியமாக ஆலோசனை செய்வான்.
அரசன சொல்வதை ஆணையாக எழுதுவது மந்திரவோலை எனப்படும்.
சுருக்கமாகவும், குறிப்புப் பொருளைத் தருவதாகவும் இருக்கவே
இங்கு மந்திரம் வருகிறது.
இவை எந்த மொழில் வேண்டுமானாலும் இருக்கலாம். 


இவற்றைத் தவிர ‘மூடு மந்திரம்’ இருக்கிறது.
அதைக் கொண்டு வித்தை காண்பிப்பவன் மந்திரவாதி ஆவான்.
ஆய கலைகள் 64 –இல் ஒன்றான களவில் மந்திரம் வருகிறது.
இதைப் பற்றி சிலப்பதிகாரத்தில் சில விவரங்கள் இருக்கின்றன.


களவு சாஸ்திரம்.

மந்திரத்தின் துணையால் கோவலன்,
அரசனது மாளிகையின் வாயில் காப்பாளர்களைத் தூங்கச் செய்து,
அரசியின் சிலம்பைக் களவாடி விட்டான் என்று
பொற்கொல்லன் சொல்வதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. (கொலைக் களக்காதை 143)
“கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும்
துன்னிய மந்திரம் துணையெனக் கொண்டு
வாயி லாளரை மயக்குது யிலுறுத்துக்
கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்”
என்று சொல்லுமிடத்தே,
கையில் கன்னக்கோல் இல்லாமல், கொடிற்றுக் கோல் இல்லாமல்,
தன் உள்ளத்துப் பொருந்திய மந்திரத்தின் துணையால்
வாயில் காப்பாளர்களை உறங்கச் செய்து,
சிலம்பைத் திருடி விட்டான் இந்தக் கோவலன் என்கிறான் பொல்லாத பொற்கொல்லன்.
இதன் மூலம் மந்திரத்தால் பிறரை உறங்கச் செய்ய முடியும் என்பது தெரிகிறது. 



அந்த மந்திரத்தை வெளிப்படையாக உச்சரிக்க வேண்டாம்.
மனதுக்குள் சொல்லியே
தேவையான பலனைப் பெற முடிந்தது என்றும் தெரிகிறது.


சிலப்பதிகாரம் சொல்லும் இந்தக் கருத்தைப்
பகுத்தறிவு பேசும் திராவிடவாதிகள் கவனிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட கருத்துக்கள் தமிழ்ச் சமுதாயத்தில்
2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கின்றன.
அன்றைய தமிழர்களுக்கு இல்லாத பகுத்தறிவு,
இந்தத் திராவிடவாதிகளுக்கு வந்து விட்டதா?
அல்லது அன்றைய தமிழன் முட்டாள் என்று சொல்கிறார்களா? 


பொற்கொல்லன் இத்துடன் நிற்கவில்லை.
அரசன் அனுப்பின காவலர்களுடன்
அவன் கோவலன் இருந்த இடத்துக்கு வருகிறான்.
கோவலனைக் கண்ட காவாலாளர்கள்,
அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவன் குற்றமற்றவன் என்று நினைக்கின்றனர்.
அது கண்டு பொறுக்காத பொற்கொல்லன்,
களவு நூல் இலக்கணங்களைச் சொல்லி,
கோவலன் ஒரு குற்றவாளி என்று வாதாடுகிறான்.
அவன் சொல்லும் களவு இலக்கணம்
சுவாரசியமான விவரங்களைத் தருகிறது.
அதில் மந்திரம் வருகிறது. ஜோதிடமும் வருகிறது. 


மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திரம் இடனே காலம் கருவியென்று
எட்டுடன்ன்றே இழுக்குடை மரபிற்
கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது” (கொலைக்- வரிகள் -166-169)
மந்திரமும், தெய்வமும், மருந்தும், நிமித்தமும்,
தந்திரமும், இடமும், காலமும் கருவியும்
என்னும் இந்த எட்டையும்
துணையாகக் கொண்டு இந்தத் திருடர்கள்,
கொடிய களவில் ஈடுபடுகின்றனர் என்கிறான். 


மந்திரமும், தெய்வமும் திருடனுக்கும் துணை போகிறது.
நிமித்தம் என்னும் ஜோதிடக் குறிப்பைத்
திருடனும் பார்த்து, வெற்றி தரும் நிமித்தமாக இருந்தால்,
அந்த நேரத்தில் களவுக்குச் செல்கிறான்.


தந்திரம் என்பதும் தந்திர கரணம் என்பதாகும் என்கிறார் உரையாசிரியர்.
கரணம் எனபது, ஜோதிடத்தில் முக்கிய அங்கம் வகிப்பது.
ஐந்து அங்கங்களைக் கொண்ட ‘பஞ்சாங்கம்’ என்கிறோமே,
அந்த ஐந்தில் ஒன்று கரணம் ஆகும். 

பஞ்சாங்கம் என்பது
நாள் (ஞாயிறு, திங்கள் என்பன),
நக்ஷத்திரம், (அன்றைய தினம் சந்திரன் இருக்கும் நக்ஷத்திரம்),
திதி (சூரியனிலிருந்து சந்திரன் விலகிச் செல்லும் ஒவ்வொரு 12 பாகையும் ஒவ்வொரு திதியாகும். பூஜ்ஜியம் பாகையில் சூரியனும், சந்திரனும் அமாவாசையில் சந்தித்த பிறகு, சந்திரன் செல்லும் தூரத்தில் முதல் 12 பாகைகள் முதல் திதியான பிரதமை, இரண்டாவது 12 பாகைகள் இரண்டாவது திதியான துவிதியை என்பன),
யோகம் (ஒரு நாளில் சூரியனும், சந்திரனும் சேர்ந்து கடக்கும் தூரம்),
கரணம் (திதியில் பாதி. அதாவது 6 பாகைகள்)

இந்தக் கரணத்தில் விஷ்டி கரணம் என்று ஒரு கரணம் இருக்கிறது.
விஷ்டி கரணம் இருக்கும்போது, ஒருவன் கொலையே செய்தாலும்,
மாட்டிக் கொள்ள மாட்டான் எனபது ஜோதிட சாஸ்திரம் சொல்வது. 


நடப்பில் உள்ள கரணத்தைக் கொண்டே
ஒரு செயல் வெற்றி அடையுமா
அல்லது வெற்றி அடையாதா என்று சொல்கிறது ஜோதிடம்.
அந்தக் கரண சாஸ்திரம் களவு நூலில் கற்பிக்கப்படுகிறது.
அதாவது 1800 ஆண்டுகளுக்கு முன்னாலும், சங்க காலத்திலும்
திருடனும் ஜோதிடம் தெரிந்து வைத்திருந்தான்.
மந்திரம் கற்றுக் கொண்டிருந்தான்.
அவற்றைக் கற்றுக் கொண்டு,
திருட்டுத் தொழிலில் பயன்படுத்திக் கொண்டான்.


களவுக்கான மந்திரத்தின் மூலம் திருடர்கள் மாங்காய் பறிக்கவில்லை.
விலையுயர்ந்த பொருட்களைக் களவாடினார்கள்.
அவர்கள் கற்றுக் கொண்ட மந்திரத்தின் மூலம்,
யார் கண்ணுக்கும் தெரியாமல்
இந்திர குமாரர்கள் போல காணாமல் போய் விடுவார்கள்
என்றும் பொற்கொல்லன் சொல்கிறான்.
அப்படி மறைந்து விடுவது ஒரு திறமையாக இருக்கலாம்.
ஆனால் ராமாயணத்தில் ராவணன் மகன் இந்திரஜித்தும்,
கண்ணுக்குத் தெரியாமல் மாயமாக மறைந்து போர் புரிந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.


தேவ லோகம் என்று உலகின் வட பாகத்தில் இருந்த இடத்துக்கான
ஆதாரங்களைக் கண்டோமே,
அங்கிருந்த தேவர்களுக்கு மறையும் வித்தை தெரிந்திருக்கலாம்.
அவர்களை ஜெயித்ததால்தான் இந்திரஜித் என்ற பெயரே அவனுக்கு ஏற்பட்டது.
அவனும் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் வித்தையை அறிந்திருந்தான்.
அந்த வித்தையைக் களவு சாஸ்த்திரத்தின் மூலம்
கள்வர்களும் தெரிந்து வைத்திருந்தார்கள்.


அதுமட்டுமல்ல,”தெய்வத் தோற்றம் தெளிகுவர் ஆயின்
என்று பொற்கொல்லன் சொல்லும் போது,
அந்தக் கள்வர் தெய்வத்தின் வடிவினைத்
தன் உள்ளத்தில் வைத்துத் தெளிந்து நினைப்பார்களே என்றால்,
கையில் களவுப் பொருட்கள் இருந்தாலும்,
அவற்றைக் காட்டிக் கொண்டாலும்,
தப்பி விடுவார்கள் என்கிறான். 


அதாவது கள்வனுக்கும் தெய்வம் இருக்கிறது.
அதை வேண்டிக் கொண்டு, தப்பித்து விடுவர் என்கிறான் பொற்கொல்லன்.
களவு நூல் இலக்கணத்தைப் பற்றி அவன் பேசப் பேச,
அதனால் உந்தப்பட்டு, ஒரு காவலன், கோவலன் மீது வாளைப் பாய்ச்சி விடுகிறான். 





இதில் நமக்குத் தேவையான விஷயத்துக்கு வருவோம்.
களவு என்பது ஆய கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்று.
பொற்கொல்லன் சொல்கிறானே அந்த 8 வழிகளில் பிறரை மயக்கித்
திருடுவதற்கும் ஒரு திறமை வேண்டும்.
அதற்கான ஆயத்தமும், பயிற்சியும் வேண்டும்.
அதனால் களவும் ஒரு கலை எனப்பட்டது.
ஆய கலைகளில் ஒன்றாக இருப்பதால் அதைக் கற்கலாம்,
ஆனால் களவு என்பது செய்யக்கூடாதது என்பதால்,
கற்றபின் அதை மறந்து விட வேண்டும் என்று,
களவும் கற்று மற’ என்று சொல்லியிருக்கிறார்கள். 


அதைக் கற்பதனால், களவு செய்பவர்கள் எப்படிச் செய்கிறார்கள்
என்பதைத் தெரிந்து கொண்டு
அதற்கேற்றவாறு தயார் நிலையில் இருக்க முடியும்.
அது மட்டுமல்ல,
களவுக்காக இல்லாமல்
வேறு இடங்களில் தேவைக்கேற்றவாறு (உதாரணமாக, ஒற்றன் வேலை பார்க்கும் போது)
அந்தத் திறமையைப் பயன்படுத்த முடியும்.
அதனால் களவை ஆய கலைகளிலிருந்து ஒதுக்கவில்லை.


களவில் எட்டில் ஒன்றாக மந்திர ஞானம் சொல்லப்பட்டுள்ளது.
அந்த மந்திரம் எந்த மொழியில் இருந்தது என்பது ஒரு கேள்வி.
ஆனால் ஆய கலைகளில் பாமர மக்களது பேச்சு வழக்கையும்
தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு கலையாகும்.
அதனால் இந்தக் கலைகளைத் தெரிந்தவர்கள்,
தங்கள் தாய் மொழியை மட்டும் அறிந்திருக்கவில்லை,
பிற மொழிகளையும் அறிந்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. 


பொதுவாகப் பெண்கள்தான் ஆய கலைகளையும் கற்றுக் கொண்டார்கள்.
இவற்றைக் கற்றுக் கொண்ட பெண்கள் ‘கணிகையர்’
என்னும் பெயருடன் அரச சபையில் இருந்தனர்.
நேரிடையாக அரசனோ, மற்றவர்களோ
செய்ய முடியாத அரசாங்கக் காரியங்களை
இந்தக் கணிகையர் மூலமாக அரசன் செய்து கொண்டான். 


இந்த 64 கலைகளும் தமிழ் மண்ணில் மட்டுமே இருந்தன என்று நினைப்பதும் தவறு.
வால்மீகி ராமாயணத்திலேயே இந்தக் கணிகையர் பங்கு சொல்லப்படுகிறது.
தசரதனுடைய நண்பன் ரோமபாதன் என்பவன்.
இவனது நாட்டில் மழை பொய்த்து விட்டது.
அப்பொழுது காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷ்யஸ்ருங்கர்
என்னும் முனிவர் அவனது நாட்டுக்குள் காலெடுத்து வைத்தால்
மழை பொழியும் என்று பெரியோர்கள் கூறினார்கள்.
அந்த முனிவரை எளிதில் வரவழைக்க முடியாது.
அவரை வரவழைக்க, பெண்களான கணிகையரை அரசன் அனுப்பினான்.
அவர்கள் தாங்கள் அறிந்த கலைகள் வாயிலாக அவர் மனதை மாற்றி
தங்கள் நாட்டுக்கு வரவழைத்தனர். 


பின்னாளில் அந்த முனிவரே தசரதனுக்குப் புத்திர காமேஷ்டி யாகம் செய்து,
ராமன் முதலானோர் பிறக்கக் காரணமானார்.
இதனால் ராமாயண காலத்திலேயே ஆய கலைகள் இருந்திருக்கின்றன என்று தெரிகிறது.
அவற்றுள் ஒன்றான களவில்
மந்திரமும், தந்திரமும், ஜோதிடமும் இருந்திருக்கின்றன.
சிலப்பதிகாரம் நிகழ்ந்த காலத்திலும்
அந்தக் களவு இலக்கணமும், களவு நூலும்,
அதைக் கற்ற திருடர்களும்,
அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட
கொடியவன் பொற்கொல்லனும் இருந்திருக்கின்றனர். 


இதன் மூலம்,
வடக்கு, தெற்கு வித்தியாசம் இல்லாமல் ஆய கலைகள் எங்கும் இருந்திருக்கிறது
என்று தெரிகிறது.
அதில் களவுக்கு உதவும் மந்திரங்களும் இருந்திருக்கின்றன.
மறை பொருள் கொண்ட இந்த மந்திரங்கள், தொல்காப்பியம் சொல்வது போல
நிறைந்த அறிவு கொண்டவர்களால்தான் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அந்த மந்திரங்களை நல்ல செயலுக்கும் பயன் படுத்தி இருக்கிறார்கள்.
களவுக்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அந்த மந்திரங்களுக்கான சக்தி,
அவற்றுள் பொருத்தப்பட்ட எழுத்துக்களின் வீரியத்திலும் இருக்கிறது.
அப்படிப் பொருத்தியவர்களது சக்தியிலும் இருக்கிறது.
இந்தச் சக்திகள் இயற்கையாக இருப்பவை.
அவற்றைச் சேர்க்க வேண்டிய விதத்தில்,
சேர்த்து வைக்கும் தகுதியும், திறமையும் பெற்றவர்கள் செய்யும் பொழுது
மந்திரம் பிறக்கிறது.
அந்த மந்திரங்களுக்குப் பின்னால் ஒரு எண்ணும்
அந்த எண்ணுக்குப் பின்னால் ஒரு அலை வரிசையும் இருக்கிறது.


உதாரணமாக ரத்னாகரன் என்னும் திருடன்
வால்மீகியான கதையை எடுத்துக் கொள்வோம்.
வழிப்பறிக் கொள்ளை செய்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான் ரத்னாகர்.
ஒருமுறை அவன் நாரதரையே வழிப்பறி செய்கிறான்.
அவர் அவனிடம் எதற்காக வழிப்பறி செய்கிறாய் என்று கேட்டார்.
அதில் கிடைக்கும் பொருளைத் தன் மனைவியிடம் தருவதாகவும்,
அதைக் கொண்டு அவள் குடும்பம் நடத்துவதாகவும் சொன்னான்.
அப்பொழுது நாரதர் ஒரு கேள்வி கேட்டார் –
நீ திருடின பொருளில் உன் மனைவி பங்கெடுத்துக் கொள்கிறாளே,
அந்தத் திருட்டைச் செய்வதால் உனக்கு ஏற்படும் பாவத்திலும்
அவள் பங்கெடுத்துக் கொள்கிறாளா என்று
கேட்டறிந்துச் சொல்லச் சொல்கிறார். 


ரத்னாகரனும் மனைவியைக் கேட்டான்.
அதற்கு அவள் தான் ஏன் அந்தப் பாவத்தில் பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று சொல்லி விடுகிறாள்.
அதில் ரத்னாகரன் மன மாற்றம் அடைகிறான்.
செய்வது பாவச் செயல்,
அந்த பாவத்தின் பலன் தனக்கு,
ஆனால் செயலின் பலன் பிறருக்கு என்பதால் அவன் மனம்,
தான் அதுவரை செய்து வந்த செயலைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது.
அந்த மன நிலையில், அவனுக்கு நாரதர் ஒரு மந்திரத்தை உபதேசம் செய்கிறார். 


அந்த மந்திரம் இரண்டெழுத்துதான்.
அது ‘மரா’ என்பதாகும்.
அந்த மந்திரத்துக்கு அர்த்தம் என்று எதுவும் உபதேசிக்கவில்லை.
மனத்தை ஒருமுகப்படுத்தி,
மரா, மரா, மரா என்றே தியானம் செய்யச் சொல்கிறார். 


ரத்னாகரனும் அந்த இடத்தில் அமர்ந்து
மரா மரா மரா என்று தியானிக்க ஆரம்பிக்கிறான்.
மரா மரா மரா என்று சொல்லச் சொல்ல
அது ராம ராம ராம என்ற ஒலியைக் கொள்கிறது.
இப்படியே அவன் பல காலம் சொல்லிக் கொண்டிருக்க,
அவனைச் சுற்றி எறும்புப் புற்று உண்டாகி விடுகிறது. 


அதிலிருந்து ஒரு நாள் அவர் தேஜசுடனும், ஞானத்துடனும் வெளிப்படுகிறார்.
எறும்புப் புற்றுக்கு சமஸ்க்ருதத்தில் வால்மீகம் என்று பெயர்.
எறும்புப் புற்றிலிருந்து முனிவராக அவர் பிறக்கவே,
அவருக்கு வால்மீகர் என்ற பெயர் உண்டானது.
அவரைத் தவ முனியாக மாற்றிய அந்த மந்திரத்தை ஆராய்வோம்.



ம-ரா என்பதன் எண்கள் எவை என்பதை
முந்தின கட்டுரையில் கண்ட கடபயாதி பததியின் மூலம் அறியலாம்.
ம = 5
ரா (ர-வர்க்கம்) = 2
மரா = 52
இதை வலமிருந்து இடது நோக்கிப் படிப்பார்கள்.
அந்த எண் 25 ஆகும்,
அதாவது ராம என்னும் சொல்லுக்கான எண் 25 ஆகும். 




இதற்கு ஒரு தாத்பரியம் உள்ளது.


இந்தப் பிரபஞ்சமே 26 என்னும் எழுத்தில் அடங்கி விடும்.
அதில் 25 என்னும் எண் ஒருவரது ஆத்மாவைக் குறிக்கும்,
26 என்னும் எண், எங்கும் பரவியுள்ள பரமாத்மாவைக் குறிக்கும்.
24 ஆவது எண் வரை இந்தப் பிரபஞ்சம் வியாபித்துள்ளது.


இந்த எண்களைச் சொல்லும் ஒரு ஸ்லோகம் பாத்மோத்தர புராணத்தில் உள்ளது.
“பூதாநி ச க-வர்க்கேண ச-வர்க்கேண இந்திரியாணிச” என்று ஆரம்பிக்கும் அந்த ஸ்லோகம்
கடபயாதியில் வரும் எழுத்துக்களுக்கான உட்பொருளைச் சொல்கிறது.

, , , ,   என்னும் க-வர்க்கம் ஐந்தினால் பூமி முதலிய ஐந்து பூதங்களும்,
ச- வர்க்கம் ஐந்தினால் ஐந்து கர்மேந்திரியங்களும்,
ட-வர்க்கம் ஐந்தினால் ஞானேந்திரியங்கள் ஐந்தும்,
த-வர்க்கம் ஐந்தினால் கந்தம், ரஸம் முதலான ஐந்து பூத குணங்களும்,
பகாரத்தினால் மனமும்,
 என்னும் எழுத்தால் அஹங்காரமும்,
, என்னும் எழுத்துக்களால் முறையே மஹத்தும், பிரக்ருதியும் சொல்லப்படுகின்றன. (இதுவரை 24 எழுத்துக்கள் ஆகின்றன.)
இனி 25 ஆவது தத்துவமான ஜீவன்
25 ஆவது அக்ஷரமான மகாரத்தால் சொல்லப்படுகிறான்”
என்கிறது இந்த ஸ்லோகம். 

இதனுடைய தத்துவ விரிவாக்கத்தை,
ரிஷிகளும், ஆசாரிய புருஷர்களும் சொல்லியுள்ளனர்.


25 என்னும் எண்ணைத் தொடும் போது ஒருவன் தனது ஆத்மாவை உணருகிறான்.
அதைத் தருவது ராம என்னும் சொல்லாகும்.
அதுவே ராம மந்திரம் எனப்படுகிறது. 


தொல்காப்பியம் சொல்கிறதே மறைபொருள்,
ராம மந்திரத்தில் இருக்கும் மறை பொருளை
நிறை மொழி மாந்தரான நாரதர் உபதேசிக்க,
ஒரு திருடன், வால்மீகி என்னும் முனிவராக மாறினான்.
அந்த மந்திரம் அவரை வேறு ஒரு அலை வரிசையில் வைத்து விட்டது.
அதனால்தான் சமஸ்க்ருதமே அறியாத அவர் வாயில் வேதத்துக்கு ஒப்பான
சமஸ்க்ருத காவியம், ராமாயணம் என்னும் பெயரில் உண்டானது. 


இவையெல்லாம் ஒருவர், படித்தோ, அறிந்தோ,
தூண்டி விட்டோ, திணித்தோ,
உன் மொழி, என் மொழி என்று பார்த்தோ வந்தவையல்ல.

ராம என்பதில் உள்ள எழுத்துக்கள் தமிழிலும் உள்ளன.
சமஸ்க்ருத்த்திலும் உள்ளன.
அதில் உள்ள எண் பலமும்,
அந்த எண் குறிக்கும் இயற்கைத் தத்துவ பலமும்,
அதைச் சொல்பவன் மனம் பண்பட, பண்பட அவனுக்குள் இறங்குகிறது. 
எந்த மந்திரத்திலும் இந்த எண் பலம் இருக்கும்.
நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு
அவற்றில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை மட்டுமே தெரிகிறது.
அதன் அடிப்படையில் ஒரெழுத்து மந்திரம்,
ஐந்தெழுத்து மந்திரம்,
எட்டெழுத்து மந்திரம் என்று அடையாளம் காண்கிறோம்.



அவற்றை உச்சரித்தாலும்,
அல்லது மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும்
உண்டாகக்கூடிய அதிர்வலைகள் அங்கு முக்கியத்துவம் பெருகின்றன.
அப்படி அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய மந்திரங்களை உருவாக்கியவர்களை
மந்திர த்ருஷ்டா என்பார்கள்.
காயத்ரி மந்திரத்தைக் கொடுத்த விஸ்வாமித்திரர் ஒரு மந்திர த்ருஷ்டா ஆவார்.


மந்திரம் என்பது இயற்கையில் இருப்பது.
அதைக் கண்டு கொடுத்தவர்கள், வேத மதத்தைப் பின்பற்றியவர்களே.
எந்த ஒரு மிலேச்ச மதமாக இருந்தாலும்,
அவற்றில் இந்த வகையான மந்திரங்கள் இருக்க முடியாது.
தங்கள் மதத்தில் உள்ள மந்திரங்களால் பேய் ஓட்டுவோம்,
பிசாசு ஓட்டுவோம் என்று அவர்கள் சொல்லலாம்.
ஆனால் அவர்களால், மனிதனைத் தெய்வ நிலைக்கு உயர்த்துகிறேன் என்றோ,
அவனைத் தெய்வமாக்குகிறேன் என்றோ சொல்ல முடியாது.


தெய்வமாக்கக் கூடிய  இந்த மந்திரங்கள்,
சமஸ்க்ருத எழுத்துக்களையும்,
அவற்றின் எண் கொடுக்கும் வீரியத்தையும் கொண்டே உருவாக்கப்பட்டன.
தமிழில் திருமந்திரம் இல்லையா என்று கேட்கலாம்.




ஆம், திருமூலர் அளித்த திருமந்திரம், மந்திரப் பலம் கொண்டது.
நாதமுனிகளுக்கு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் அளித்த
‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால்” என்று தொடங்கும்
மதுர கவியாழ்வார் பாசுரம்
மந்திரப் பலம் கொண்டது.
மேலும் பல கவசப் பாடல்கள் இருக்கின்றன.


ஆனால் இங்கு மந்திரம் என்று நாம் சொல்வது
அளவில் சிறியதாகவும்.
ஜபிப்பதற்கு வசதியாகவும் இருக்கும் மந்திரங்களே.


அவை தமிழுக்கும், சமஸ்க்ருதத்துக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
ஏனெனில் மந்திர எழுத்துக்களுக்குப் பின் உள்ள எண் பலம்,
சமஸ்க்ருத்த்தில்தான் சொல்லப்பட்டுள்ளது.
பீஜ மந்திரம், மூல மந்திரம் என்னும் பெயர்களில் அவை உள்ளன.


மந்திரம் என்னும் சொல்லே சமஸ்க்ருதத்தில் உருவானது.
“மந்தாரம் த்ராயத இதி மந்த்ர:” என்பதே அதன் மூலம் ஆகும்.

இதன் பொருள்:-
மனனம் செய்பவனைக் காப்பாற்றுவது என்னும் காரணத்தாலே மந்திரம் எனப்படுகிறது.


ஓம் என்னும் பிரணவம் ஓரெழுத்து மந்திரம்.
அதற்குத் தமிழ் எழுத்து கிடையாது.
இது சமஸ்க்ருத்த்தில்  என்று ஓரெழுத்தாக எழுதப்படுவது.
ஓம் என்று தமிழில் எழுதலாம் என்று சொல்லிக் கொள்ளலாம் அவ்வளவுதான். 




ஓம் என்பது அ,உ,ம் என்னும் எழுத்துக்களின் சேர்க்கை ஆகும்,
இவற்றுள் அ, உ என்பவை உயிரோட்டம் உள்ள உயிர் எழுத்துக்கள்.
ம் என்பது உயிர் மெய் எழுத்து.
அதாவது உயிரும் மெய்யும் கூடின ம-காரம் மனிதன் ஆவான்.
அவனைக் கை தூக்கி விடுவது ஓம் என்னும் பிரணவம்.
ஓம் என்பதை வாய் விட்டு உச்சரிக்கும் போது,
எழுத்துக்களின் பிறப்பிடங்களான
நாபி, ஹ்ருதயம், கண்டம் (தொண்டை) என்று எழும்புகிறது.
இந்த மூன்றெழுத்துக்களின் (அ,உ,ம்) உச்சரிப்பை
ஒரு சிகிச்சை முறையாக யோகாப்பியாசத்தில் வைத்துள்ளார்கள்.
இவை நம் உடலில் அதிர்வலைகளை உண்டாக்குகின்றன. 


இதே அதிர்வலைகள்தான் வேதத்தினுடைய நாடி ஆகும்.
வேத ஒலியிலிருந்துதான் உயிரினங்களும்,
அவற்றுக்குப் பெயரும்,
அவை செய்ய வேண்டிய தொழிலும் உண்டாகின
என்று விஷ்ணு புராணம் (1-5-63) கூறுகிறது.


ஒரு செல்லுக்கு உயிரூட்ட முடியுமா
என்ற ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது..
ஒலியின் அதிர்வலையின் மூலம் உண்டாக்கலாம் என்பதே
விஷ்ணு புராணம் தரும் தகவல் ஆகும்.
புத்திர காமேஷ்டி யாகத்தில் சொல்லப்பட்ட
வேத மந்திரத்தால் உண்டான அதிர்வலைகளின் பயனாக
ராமன் பிறந்தான்.
திரௌபதியும், அவள் சகோதரன் திருஷ்டத்யும்னனும்
வேத ஹோமத்தினால்தான் பிறந்தனர்.


வேத ஒலிக்கு அந்த சக்தி இருக்கிறது.
வேத்த்துக்கு ஒலி வடிவம் உண்டு.
ஆனால் எழுத்து வடிவம் கிடையாது.
வேதம் என்பது சமஸ்க்ருதத்தில் இருந்தாலும், அதை எழுதிப் படிக்க மாட்டார்கள்.
ஏனெனில் வேதம் முழுவதுமே ஒலி வடிவை ஒட்டி எழுந்தது.
அதனால் அதை சந்தோ பாஷை என்றனர். 

ஒலி அலைகளுக்கு அர்த்தம் கிடையாது,
ஆனால் அவற்றால் அதைச் சொல்பவனிடத்திலும்,
சுற்றுப்புறத்திலும்,
மாறுதல்களையும், பலன்களையும் உண்டாக்க முடியும்.
அந்தக் காரணத்தினால்தான் வேதத்தை எழுதிப் படிக்கவில்லை.
அதைக் காதால் கேட்டு, சரியான தொனியில் சொல்ல வேண்டும். 


ஒரு மந்திரத்தைச் சொல்வதற்கு ஒருவித மனநிலை தேவை என்பதை
வால்மீகியின் கதையில் தெரிந்து கொண்டோம்.
மனநிலை, நியமம், தொனி என்னும் மூன்றன் அடிப்படையில்
வேதக் கல்வி அளிக்கப்பட்டது. 

அது பார்ப்பனர்களுக்கு மட்டும்தானா, மற்றவர்களுக்கில்லையா என்பதும்,
வேதத்துக்குத்தான் முக்கியத்துவமா, தமிழுக்கில்லையா என்பதும்,
வேதத்தில் இவன் அவனை அடித்தான்,
அவன் இவனை அடித்தான் என்றும் சொல்லியுள்ளதே என்பதும்,
வேத்த்தின் அருமையும், பெருமையும் தெரியாத ஆங்கிலேயன் சொல்லி,
அதைத் திராவிடவாதிகள்
கண்மூடித்தனமாகப் பின்பற்றியதன் விளைவுதான்.


இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்,
வேதம் என்ன சொல்கிறது என்று பொருள் காண முடியாது போல இருக்கிறது.
அதில் ஏதோ மறை பொருள் இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாம் சொல்லி வந்தோமே கடபயாதி பததி,
அதில் இருப்பது போல ஏதோ எண் கணிதமும்,
புதிர்களும் வேதத்தில் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

மந்திர நீர்.

வேத மந்திரங்களைக் குடத்தில் உள்ள நீரில் ஜபிப்பார்கள்.
அதனால் அந்த நீர் மந்திர சக்தி பெறுகிறது.
அந்த நீரைத் தெளித்தால், நோய் நீங்குகிறது.
கையில் நீரெடுத்து அதில் மந்திரம் ஜபித்து,
அந்த நீரைத் தெளித்தன் மூலம் பலரும் பயனடைந்த கதைகள் இருக்கின்றன.


இவை எல்லாம் மூட நம்பிக்கை என்றோ,
ஆரியத் திணிப்பு என்றோ சொல்ல முடியாதவாறு,
சிலப்பதிகாரத்திலும் விவரங்கள் இருக்கின்றன.
கண்ணகிக்குக் கோவில் எழுப்பிய போது அங்கு மூன்று சிறுமிகள் வந்தனர்.
அங்கு சேரமான் செங்குட்டுவன் இருக்கையில்,
தேவந்தி என்னும் பெண் மீது சாத்தன் என்னும் தெய்வம் ஆவேசிக்கிறது.
அதன் கட்டளைப்படி மாடலன் தன் கையிலுள்ள கமண்டலத்தில் உள்ள நீரை
அந்த மூன்று சிறுமிகள் மீது தெளிக்கிறான்.
உடனே அந்தச் சிறுமிகளுக்கு முன் பிறவி ஞாபகம் வருகிறது.
அந்த மூவரும், முன் பிறவியில் கண்ணகியின் தாய்,
கோவலனின் தாய்,
மதுரைக்கு வந்த கோவலன் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த மாதரி
என்று தெரிகிறது.
அவர்கள் தங்கள் பூர்வ ஜன்ம நினைவைப் பெறுகிறார்கள்
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. 


 
அதைக் கொடுத்தது கமண்டல நீராகும்.
மந்திர பலம் அந்த நீரில் இறங்கவே இப்படிப் பலன்கள் உண்டாகின்றன.

எண்ணமும், சொல்லும் நீரில் இறங்குகின்றன என்று சொல்லும்
ஆராய்ச்சிகள் இருக்கின்றன.
அவற்றை இந்த வலைத்தளத்தில் காணலாம்.

நம் உடலின் முக்கால் பங்கு நீரால் ஆனது.
நம் எண்ணமும், சொல்லும், ஜபமும், மந்திரமும்
நீர் நிரம்பிய நம் உடலில் மாற்றங்களை உண்டாக்கக்கூடியவை..
இந்த உலகமும் முக்கால் பங்கு நீரால் ஆனது.
வேத ஒலி எங்கும் முழங்கினால்
நீரால் சூழப்பட்ட இந்த உலகமே வீரியம் மிக்கதாக ஆகும்.
நம் நாட்டிலேயே கங்கையும், காவேரியும், இன்ன பிற நதிகளும்
புண்ணிய நதிகளாக இருப்பதற்கு,
அந்த நதிக் கரைகளில் சொல்லப்படும் மந்திரங்களும்,
செய்யும் வேதக் கிரியைகளுமே ஒரு காரணமாகின்றன.




சேர நாட்டிலிருந்த செங்குட்டுவன், தன் தாயை அழைத்துக் கொண்டு
கங்கைக் கரைக்குச் சென்று புண்ணிய நீராடினான்
என்னும் தகவலைச் சிலப்பதிகாரம் சொல்கிறது.
இமய மலையிலிருந்து கொண்டு வந்த கல்லைக் கொண்டு வடித்த சிலையில்
கண்ணகியைக் கண்டு தொழுதார்கள் தமிழ் மக்கள்.


அவர்கள் மட்டுமல்ல,
எந்த ஆரிய அரசர்களைச் செங்குட்டுவன் வென்றானோ,
அவர்களும் கங்கைக்கு அப்பால் இருந்த தங்கள் நாடுகளில்
கண்ணகிக்கு வேள்விகள் செய்ய,
பத்தினித் தெய்வத்தின் உத்தரவு பெற்றனர்
என்கிறது சிலப்பதிகாரம்.(வரந்தரு காதை)


கண்ணகிக்குக் கோவில் கட்டி,
வேள்விகள் செய்து வழிபடுவது
தமிழர் பண்பாடு, ஆரிய அரசர்கள் பண்பாடு.



ஆனால் அந்தக் கண்ணகியை ஒரு காப்பிய நாயகியாக மட்டுமே பார்த்து,
கடற்கரையில் உப்புக் காற்றில் உலர வைப்பது
திராவிடப் பண்பாடு போல இருக்கிறது.


2 கருத்துகள்:

  1. //-நம் நாட்டிலேயே கங்கையும், காவேரியும், இன்ன பிற நதிகளும்
    புண்ணிய நதிகளாக இருப்பதற்கு,
    அந்த நதிக் கரைகளில் சொல்லப்படும் மந்திரங்களும்,
    செய்யும் வேதக் கிரியைகளுமே ஒரு காரணமாகின்றன.//
    இன்று காவேரி மற்றும் கங்கை ஆறுகள் சீரழிந்து சாக்கடை கழிவுகளாலும், குப்பைகளாலும் நிரம்பி வழிவதற்கு என்ன காரணம்?. மந்திரங்களை யாரும் ஒழுங்காக சொல்வதில்லையா அல்லது மக்களின் மனதின் திறம் குறைந்து போய் விட்டதால் மந்திரம் பலிக்கவில்லையா?. இன்னும் கங்கையும் காவிரியும் தூய்மையான ஆறுகள் என்ற எண்ணம் இருக்கிறதா?.

    பதிலளிநீக்கு
  2. நதிகளில் கழிவுகளும், குப்பைகளும் போடுவதற்கு மனிதன் காரணம். அவனது சுயநலமும், முட்டாள்தனமும் காரணம்.அவற்றின் தூய்மையைக் கெடுப்பது நாம். ஆனால் கங்கை, காவேரி போன்ற நதிகள், அவை உற்பத்தியாகும் விதத்தின் காரணமாக சில சிறப்பியல்புகளைப் பெற்றுள்ளன. கங்கை நீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவு மிக அதிகம். கங்கையில் ஒரு mysterious x- factor உள்ளது என்று சொல்லும் அறிவியல் கண்டுபிடுப்புகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.
    http://jayasreesaranathan.blogspot.com/2008/02/purity-of-ganga-proven-scientifically.html

    http://www.npr.org/templates/story/story.php?storyId=17134270

    ஹரித்துவாரம் போன்ற இடங்களில் நிர்மலமாக ஓடி வரும் கங்கை நீரைப் பல நாட்கள் வைத்திருந்தாலும், அதில் எந்தக் கிருமியும் உண்டாகாது. அப்படிப்பட்ட வித்தியாசமான நீரின் புனிதத் தன்மை மந்திரங்களால் மேலும் அதிகரிக்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு