ஞாயிறு, 1 மே, 2011

52. மனுஸ்ம்ருதியும், திராவிடனும்.



மனுஸ்ம்ருதியில் திராவிடன் என்பவன் யார் என்று சொல்லப்பட்டுள்ளது.
அந்த நூலின் 10 ஆம் அத்தியாயத்தில் மக்கள் கூட்டம்
பற்றிய விவரங்கள் வருகின்றன.
அதில் இந்தத் திராவிடனும் வருகிறன்,
தஸ்யுவும் வருகிறான்.


மனுவாதி சித்தாந்தம் என்று திராவிடவாதிகளால் இகழப்படும் வர்ணப்பிரிவுகள் இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வருகையில்,
திராவிடன் என்ற பெயர் கொண்ட மக்களைப் பற்றியும்
சொல்லப்படுகிறது.


வர்ணங்கள் என்பவை
ஒரு மனிதனது குணத்தால் அமைவதாகச் சொல்லப்பட்டுள்ளது.
குணத்தின் காரணமாக ஒருவனது செயல்பாடு அமையும்.
அந்தச் செயல்பாட்டையே தனது தொழிலாகக் கொண்டால்
அதனால் அவனுக்கும் பயன் கிடைக்கும்.
அவனது அந்தப் பங்களிப்பால் சமூகத்துக்கும் பயன் கிடைக்கும்.
இந்த விதமான
மனித வள மேம்பாட்டுக் கருத்தாக
வர்ணாஸ்ரம தர்மத்தை மனு ஸ்ம்ருதி தருகிறது. 


அதாவது ஒருவனது சுபாவத்திலிருந்து,
ஸ்வகர்மம் (சுய கர்மம் அல்லது அவனுக்கு இயல்பாகச் செய்ய வரும் செயல்பாடுகள்) உண்டாகிறது.
அதுவே ஸ்வதர்மம் (சுயதர்மம்) எனப்படுகிறது.
ஸ்வதர்மம் என்றால்
இயல்பாக ஒருவனுக்குச் செய்ய வரும் செயலைச் செய்வது.
அதை விட்டு விட்டு அவன் இயல்புக்குப் புறம்பான
வேறு தொழிலைச் செய்தால் அது திருப்தியாக அமையாது.
பகவத் கீதையில் காணப்படும் இந்தக் கருத்தே
மனு கொடுத்த வர்ணாஸ்ரம தர்மமாகும்.

சுபாவம் -> சுயகர்மம் -> சுயதர்மம்
   

மஹாபாரதத்தில் திருடனுக்குக் கூட தர்மம் உள்ளது
என்று சொல்லப்பட்டுள்ளது.
திருட்டு அவனது தொழில்.
அவன் ஸ்வபாவத்தால் அதைச் செய்கிறான்.
ஆனால் அந்தத் திருடனும், தன் குடும்பத்தைப் பேண வேண்டும்.
தாய், தந்தைக்குப் பித்ரு கடன் செலுத்த வேண்டும்.
திருடுமிடத்திலும், மிச்சம் வைக்காமல் திருடக் கூடாது.
திருடனாக இருந்தாலும், தான தர்மங்கள் செய்ய வேண்டும்
அவனிடம் பிராணிகள் அன்பு செலுத்தும் வண்ணம்
அவன் நடந்து கொள்ள வேண்டும்.
என்றெல்லாம் வாழ்க்கை விதிகள் இருக்கின்றன.
அந்தத் திருடனே நல்ல சிந்தனையும்,
யாருக்கும் தன்னைக் கண்டு பயப்படாமல் இருக்கும் படியும்,
தன்னால் யாருக்கும் கெடுதல் வராமலும், செய்தால்
அவன் உயர்ந்தவன் ஆகிறான்.
திருடனாக வழிப்பறி செய்த வால்மீகி ஆதிகவி எனப்போற்றப்பட்டு
காலத்தாலும் அழியாத ராமாயணம் எழுதினார். 



கசாப்புக் கடைக்காரனாக இருந்தாலும், வ்யாதன் என்பவன்,
விருப்பு வெறுப்பில்லாமல் தன் தொழிலைச் செய்தும்,
தன் பெற்றோரைப் பேணிக் காத்தும்,
சிறந்த ஞானம் பெற்று விளங்கினான்.
அவன் சொன்னது ‘வ்யாத கீதை என்று புகழப்படுகிறது.

வைசியனாக இருந்த துலாதாரன் என்பவன்,
ஜாஜலி என்னும் தவசிக்கு,
தர்மம் எது என்று சொல்கிறான் (சா-பர் 260)
அதற்குக் காரணம், சுபாவத்தால் வைசியனாக வாணிபம் செய்தாலும்,
சிந்தனையால் உயர்ந்த விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தான்.
அவற்றைக் கடைப் பிடிக்கவும் செய்தான்.

எனவே ஸ்வபாவத்தால் ஏற்படுகின்ற தொழில் ஒன்றானாலும்,
சிந்தையால் ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பதன் மூலமே
ஒருவன் உயர்ந்தவன் எனப்படுவதும், தாழ்ந்தவன் என்ப்படுவதும் ஆகும்.
ஸ்வபாவத்தால் ஏற்படுகிற தொழிலை மனு ஸ்ருதி சொல்கிறது.
அவ்வாறு வேறு வேறு தொழிலில் ஈடுபட்டிருக்கிற மக்கள்
எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது,
தவிர்க்க இயலாத சூழ்நிலையில் அதில் எந்த மாறுதல்கள் செய்யலாம்
என்பது போன்ற செயல்பாடு குறித்து பல விளக்கங்களை
மனுஸ்ம்ருதி சொல்கிறது.

அவை வாழ்க்கையில் எப்படி நடக்கின்றன என்பதை,
உதாரண சம்பவங்கள் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
மேலே சொன்ன வால்மீகி, வ்யாதன், துலாதரன் போன்றவர்கள்,
வர்ணத்தால் ஒரு தொழிலும்,
ஆனால் வாழும் முறையால் உயர்ந்தவர்களாகவும்
இருந்த பாங்கினை,
ஒரு மாக்ஸ் முல்லரோ
அல்லது மனு ஸ்ம்ருதியை மொழி பெயர்த்த வில்லியம் ஜோன்ஸோ
அறிந்திருக்கவில்லை.
இந்தப் பாரத மண்ணில் வாழ்ந்து,
வேத தர்மத்தின் வழி நடப்பவர்களால் தான்
இவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.


ஸ்ம்ருதி நூல்களைப் படிக்க முடிந்தால் மட்டுமே,
புரிந்து கொள்ள முடியாது.
ஸ்ம்ருதி என்பவை என்றோ கேட்கப்பட்டு,
ஞாபகத்திலிருந்து சொல்லப்படுவது.
அவற்றை நேரிடையாகப் புரிந்து கொள்ள முடியாது.
அசோக வனத்தில் துக்கத்தில் உழன்று கொண்டிருந்த சீதையைப் பார்த்து அனுமன் நினைக்கிறான் இவள் புரிந்தும், புரியாதது போன்ற ஸ்ம்ருதி நூல்களைப் போலத் தென்படுகிறாள்.
எனவேதான் ஸ்ம்ருதிகளில் கூறப்படுபவை
வாழ்வில் எவ்வாறு அமைகின்றன என்பதையும்,
அவற்றுக்கான விளக்கங்களையும்,
ஸ்ருதிகளைப் படிப்பதால் தெரிந்து கொள்ள முடியாது.
புராண, இதிஹாசக் கதைகள் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.


மனு ஸ்ம்ருதியைப் பொருத்தவரையில்,
அதன் கருத்துக்கள் மஹாபாரதத்தில்
வாழ்க்கைக்குத் தக்கவாறு விளக்கப்பட்டுள்ளன.
யுதிஷ்டிரர் கேட்ட தர்ம சம்பந்தமான கேள்விகளுக்கு,
அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த
பீஷ்மரைப் பதில் சொல்லுமாறு
கிருஷ்ணன் கேட்டுக் கொண்டான்.
அந்தப் பகுதி சாந்தி பர்வம் என்று அழைக்கப்படுகிறது.
மனு ஸ்ம்ருதியில் காணப்படும் விஷயங்களுக்கு
இந்த பர்வத்தில் விடைகளும், விளக்கங்களும் கிடைக்கின்றன.

முக்கியமாக,
வர்ணம் என்பதும் ஜாதி என்பதும் ஒன்றா?
ஜாதியினால் ஒருவன் தாழ்ந்தவனாக ஆகிறானா என்பதற்கு
பீஷ்மர் தரும் விளக்கங்கள் பதிலளிக்கின்றன.
வர்ணம் என்பதும், ஜாதி என்பதும் ஒன்றல்ல.
சுபாவத்தைக் கொண்டு வர்ணமும்,
தொழிலைக் கொண்டு ஜாதியும் சொல்லப்பட்டது.
ஒருவனே இவற்றில் மாறி மாறி வர முடியும்.


க்ஷத்திரியனான அரிச்சந்திரன்,
மயான வேலையை மேற்கொண்டபோது சண்டாளன் ஆனான்.
இது போல மாறி வருதல்
ஒரு நூற்றாண்டு முன் வரை நடைமுறையில் இருந்திருக்கிறது.
உதாரணமாக பொன் வேலை செய்யும் பொற்கொல்லர்களை
சோனார் என்று அழைப்பார்கள்.
பொன் என்று பொருள் படும் ஸ்வர்ணம் என்னும் சொல்லிலிருந்து
இந்தப் பெயர் வந்தது.
தொழிலால் ஏற்பட்டது இந்தப் பெயர்.
இதை ஜாதி என்றாக்கினது ஆங்கில அரசு.


அவர்கள் நாட்டில் தொழில் அடிப்படையில்
CASTE என்று ஜாதியை உண்டாக்கினர்.
அதையே குடிப் பெயராகவும் அவர்கள் கொண்டிருந்தனர்.
உதாரணமாக கோல்ட்ஸ்மித், ஸ்மித், ப்ளாக்ஸ்மித், காப்ளர்
என்றெல்லாம் அவர்கள் பெயர்கள் இருக்கும்.
இவை எல்லாம் அவர்கள் பரம்பரையாகச் செய்து வந்த
தொழிலின் அடிப்படையில் வந்தவை. 


ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட போது,
அந்த வழக்கத்தையே நமக்கும் கொண்டு வந்து,
அதுவே நமது ஜாதிகள் என்றனர்.
ஆனால் அதுவரை நம் மக்கள்
வர்ணங்களின் பெயரால் மட்டுமே தங்களை இனம் காட்டிக் கொண்டிருந்தனர்.


இதைப் போன நூற்றாண்டில் எடுக்கப்பட்ட
சென்சஸ் என்னும் மக்கள் தொகைக் கணப்பெடுப்பில் காணலாம்.
1911 ஆம் ஆண்டு சென்சஸில்
சோனார்கள் தங்கள் ஜாதி க்ஷத்திரியர்கள் என்றே
பதிந்துள்ளனர்.
1921 ஆம் ஆண்டு சென்சஸிலும் க்ஷத்திரியர்கள் என்றே
பதிந்துள்ளனர்.
ஆனால் 1931 ஆம் ஆண்டு சென்சஸில்
பிராம்மணர்கள் என்றும், வைசியர்கள் என்றும் பதிந்துள்ளனர்.
அதாவது தொழிலால் பொற்கொல்லர்கள்,
வர்ணத்தால் ஒரு சாரார் பிரம்மணார்களாகவும்,
மற்றொரு சாரார் வைசியர்களாகவும் இருந்திருக்கின்றனர்.


அது போல சூத்ரதார் என்னும் தச்சு வேலை செய்பவர்கள்
தங்களை வைசியர்கள் என்று
1911, 1921 ஆண்டு சென்சஸில் பதிந்துள்ளானர்.
1931 ஆம் ஆண்டு சென்சஸில் தங்களை பிராம்மணர்கள் என்று பதிந்துள்ளனர்.


அது போல கம்மாளர்கள் என்னும் இரும்பு வேலை செய்பவர்கள்,
1921 ஆம் ஆண்டு சென்சஸில் க்ஷத்திரியர் என்றும்,
1931 ஆம் ஆண்டு சென்சஸில் பிராம்மணர் என்றும் பதிந்துள்ளனர்.
ஆனால் அவர்களை கம்மாளர் என்னும் ஜாதியாகத்தான்
ஆங்கில அரசு பார்த்தது.

ஆங்கிலேயர்கள் சென்சஸ் எடுத்த காலத்தில்
பாரத மக்களில் பெரும்பாலோர்
இந்த ஜாதிக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஜாதி என்று பதிய வேண்டிய கட்டாயத்தைக் கொடுத்த போது,
வர்ணத்தையே பதிந்தனர்.
ஆனால் எதிலிருந்து வருமானம் வருகிறது என்ற கேள்வி எழுந்த போது,
தொழில் ரீதியான பெயரைத் தர வேண்டியதாயிற்று.
அதுவே அவர்கள் ஜாதி என்று ஆங்கில அரசு முத்திரை குத்தி விட்டது.


நமக்கு ஜாதி அடையாளத்தை உண்டாகினவர்கள் ஆங்கிலேயர்களே.
அதைப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்தவர்கள்
தமிழ் பேசும் திராவிடவாதிகள். 


ஜாதி வேறுபாடுகளையும், அவற்றின் அடிப்படையில்
உயர்வு, தாழ்வுகளையும்
மனுஸ்ம்ருதியோ, மஹாபாரதமோ சொல்லவில்லை.
அன்றைக்கிருந்த கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
அதை ஜனகர், பராசரரிடம் கேட்டார்.
அந்தக் கேள்வி
ஒருவனை தோஷமடையச் செய்வது எது, வர்ணமா, கர்மமா?
இன்றைய சூழ்நிலையில் ஜாதியா, கர்மமா (செயலா) என்று கேட்கலாம்.
இதற்குப் பராசரர் தரும் பதில்,
எந்த ஜாதியாக இருந்தாலும்,
ஒருவன் துஷ்கர்மத்தைச் செய்தாலும்,
துர் நடத்தை இருந்தாலும்,
அதுவே ஒருவனுக்கு தோஷத்தைத் தரும் என்கிறார்
என்று சாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.


இப்படி ஒரு அறிமுகத்துடன்  மனுஸ்ருதி சொல்வதை ஆராய்ந்தால், மனுவாதி சித்தாந்தம் என்று இன்று இகழப்படும் கருத்துக்கள்
உண்மையில் என்ன சொல்கின்றன என்பது புரியவரும்.

ஊழிக் கால வெள்ளத்திலிருந்து மனு தப்பி வந்தபோது,
தன்னுடன் ரிஷிகளையும்,
ஒவ்வொரு உயிரின வர்கத்திலும் சிறந்தவர்களையும்
(அவை மாடு, கன்று, பயிர், விதை முதலானவை
என்று பொருள்படும் வண்ணம் சொல்லப்பட்டுள்ளது)
அழைத்து வருகிறான்.
எனவே மக்களையும் அழைத்து வந்திருக்கிறான் என்று தெரிகிறது.
அப்படி வந்த மக்கள் சிறந்த குண நலன்கள் கொண்டவர்களாக இருந்தனர். அவர்களில் வர்ண வித்தியாசம் இல்லை.


மனுவை முன்னிட்டு ஆரம்பித்த காலக் கட்டம் கிருத யுகம் என்ப்பட்டது.
அந்த யுக குணாதிசயங்கள், மஹா பாரதம் சாந்தி பர்வத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி முதலில் மனுவுடன் வந்த மக்களுக்கிடையே
வர்ண பேதம் இல்லை எனப்படுகிறது.
அவர்கள் அனைவருமே
தியானத்திலும், யோகத்திலும், எளிமையிலும்
சிறந்து விளங்கினார்கள்.
அதாவது ஒரு யோகிக்கு, அதாவது தவசிக்கு
வர்ணாஸ்ரம தர்மம் கிடையாது.
வர்ண தர்மம் என்பது சுபாவத்தால் செயலாற்றும் விதமாகும்.
ஒரு யோகியானவன், தன் சுபாவத்தை வென்று,
சத்வத்தில் லயிக்கிறான்.
அவனை சுபாவமோ, செயலாக்கமோ ஆட்டி வைப்பதில்லை.
இதனால்தான், எந்த வர்ணத்தில் இருக்கிறவனாலும் யோகியாக முடியும்.
வர்ணம் என்பது, யோகி நிலைக்கு ஒருவன் உயர்வதைத் தடுக்காது.
மனு குடியேறிய காலத்தில்,
மக்கள் அனைவருமே யோக நிலையில் நாட்டம் கொண்டிருந்தனர்.
அதனால் அப்பொழுது வர்ணங்கள் இல்லை.
அப்பொழுது எழுந்த வேதத்தில் பிரிவுகள் இல்லை.
அப்பொழுது இருந்தது ரிக் வேதம் மட்டுமே.


மக்கள் இயற்கையில் கிடைத்ததையே உணவாக உண்டனர்.
பூமியை உழுது உண்ணவில்லை.
விதைகளைக் கொண்டு வந்தார்கள் என்று சொல்லியிருக்கவே,
அவற்றை விதைத்துப் பயிர் செய்திருக்க வேண்டும்,
ஆனால் பூமியை உழுது பயிரிடவில்லை.
அந்த அளவுக்குப் பூமி சத்துடன் இருந்தது.
மேலும் பூமியை உழுவதால்,
பூமி வாழ் உயிரினங்களுக்குத் துன்பம் நேரிடும்.
அதன் காரணமாக பாவம் வரும்.
அதைப் போக்கி கொள்ள பிராயச்சித்தங்களும், பரிகாரமும் செய்ய வேண்டும்,
அப்படிச் செய்யும்போதுதான்
செயல்பாடுகள் ஒருவனை இயக்க ஆரம்பிக்கின்றன.
வர்ணங்கள் (சுபாவங்கள்) அதைச் செய்விக்கின்றன.
கிருத யுகத்தில் இவை எதற்குமே அவசியம் இல்லாமல் இருந்தது.


மஹாபாரத்தில் வரும் மற்றொரு வர்ணனையின் மூலம்,
வெள்ளத்திலிருந்து மக்கள் தப்பி வந்த பிறகு,
தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.
ஆயினும், எந்தவித பயமும் இல்லாமல் வாழ,
மனுவைத் தங்களுக்கு அரசனாக்கினர் என்று சொல்லப்பட்டுள்ளது
(சா. பர். 66 )
அதாவது வைவஸ்வத மனு என்பவன் க்ஷத்திரியனாக வாழ்ந்திருக்கிறான்.


புது வாழ்வு தொடங்கிய மனுவுக்கு முதலில் ஒரு பெண் பிறக்கிறாள்.
அவளே இளை அல்லது ஐலா என்பவள்.
பெண் குழந்தை வேண்டுமென மனுவின் மனைவி
ரிஷிகளிடம் வேண்டுகிறாள்.
அது தெரியாமல் குழந்தைப் பேறு விரும்பி மனு யாகம் செய்கையில்
தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று விரும்புகிறான்.
இருவருக்குமே ரிஷிகள் அவ்வாறே ஆகுக என்று சொல்லி
வேத மந்திரம் ஓதி விட்டனர்.
இதனால் குழந்தை பெண்ணாகப் பிறந்தது.
ஆனால் அவ்வபொழுது ஆணாகவும் ஆகி இருப்பதாக
ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளது.


இதன் காரணமாக இமயமலைப் பகுதிக்குச் செல்லும் போது
இளை என்னும் பெண்ணாக இருக்கிறாள்.
அப்பொழுது ஹா என்பவனுக்குக் குழந்தை பெற்றுத் தருகிறாள்.
இங்கு சில அதிசய விஷயங்கள் இருக்கின்றன.
இமய மலைப் பகுதியில் ஹ-ஹா, ஹோ-ஹோ, ஹூ
என்னும் பெயர்களில் கந்தர்வர்கள் இருந்ததாக
மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது ஸரஸ்வதி நதி தீரத்தில் மனு வந்து குடியேறின
14,000 வருடங்களுக்கு முந்தின காலக் கட்டத்தில்,
இமய மலைப் பகுதியில் மக்கள் முன்னமே இருந்திருக்கின்றனர்.
ஹா என்பவனிடம் மனுவின் மகளான ஐலாவுக்கு புரூரவஸ் பிறந்தான் என்கிறது பாரதம்.
அவள் மூலமாகச் சந்திர வம்சம் ஆரம்பித்தது என்கிறது.
ஹா, ஹூ போன்றவர்கள் கந்தர்வர்கள் என்கிறது பாரதம்.
இந்தப் பெயர்கள் சீனப் பெயர்களுடன் ஒத்துப் போவதைக் கவனிக்க வேண்டும்.


இமய மலைப் பகுதிகளில் வாழ்ந்த கந்தர்வர்களுக்கும்
நாம் முன்பே பார்த்த (பகுதி 35)
அப்சரஸ் மங்கைகளுக்கும் தொடர்பு அடிக்கடி சொல்லப்படுகிறது. மஹாபாரதத்தில் மட்டும் 505 இடங்களில் கந்தர்வர்கள்
பற்றிய விவரங்கள் வருகின்றன.
அவர்கள் மனு வருவதற்கு முன்பே அங்குக் குடியிருந்திருக்கின்றனர்.


சமீபத்தில் வெளியான ஒரு மரபணு ஆராய்ச்சியில்,
சுமார் 40,000 வருடங்களுக்கு முன் இமய மலைப் பகுதியில்
மக்கள் வசித்தனர் என்று சொல்லப்பட்டுள்ளது.
பனியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தின காலக்கட்டம் அது.
அப்பொழுது நாம் இப்பொழுது பேசும் மனுவின் முன்னோர்கள் 
இந்தியாவுக்குத் தெற்கில், இந்தியக் கடல் பகுதியில்
வசித்து வந்தனர்.
தக்ஷ பிரஜாபதியின் காலக்கட்டமாக அது இருக்கலாம்.


மனுவைச் சேர்ந்தவர்கள் ஸ்ரஸ்வதி நதிப் பகுதிக்கு வந்தபோது,
கந்தர்வர்கள் இமய மலைப் பகுதியில் இருந்திருக்கிறார்கள்.
அவர்களுடன் மனு சண்டை போட்டதாகவோ,
அவர்களை விரட்டி அடித்ததாகவோ ஒரு அறிகுறியும் இல்லை.
ஆனால் அவர்களுடன் திருமண உறவு ஆகி,
சந்திர வம்சம் தொடங்கினதாகத்தான் விவரம் இருக்கிறது.
ஐலாவின் வம்சாவளி இளா வர்ஷம் என்னும் இடத்தில் தொடர்ந்தது
என்று முன்னமே கண்டோம் (பகுதி 38).
ஐரோப்பாவில் அந்த மக்கள் பரவியிருக்க
நிறையவே சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
ஐலா என்னும் குடிப் பெயர் கொண்ட மக்கள்
ஐரோப்பாவில் இன்றும் இருக்கிறார்கள்.
ஐலா என்னும் குடிப் பெயர் கொண்ட
ஒரு பெண்மணியைப் பற்றித் தெரிய வந்தது.
அவர் தற்சமயம் அர்ஜெண்டைனாவில் இருக்கிறார்.
அவர் தன் முன்னோர்களைத் தேடுகையில்
அவர்கள், இன்றைய துருக்கி நாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்திருந்தனர்
என்று தெரிய வந்தது.
துருக்கி இளா வர்ஷத்துக்கு அருகில் உள்ளது என்பதால்,
இவரது பூர்வீகம் மனுவின் பெண்ணான ஐலா அல்லது இளாவர்ஷம் வரை செல்லக்கூடும்.



இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம்,
இப்படியெல்லாம் மக்கள் இந்தியாவிலிருந்து
மனுவின் மூலம் ஐரோப்பாவுக்குப் பிரிந்து சென்றிருக்கின்றனர்.
அவர்கள் எல்லாம் வர்ணக் கட்டுப்பாட்டுக்குள் சொல்லப்படவில்லை.
பாரதத்தில் வாழ்ந்தவர்கள்தான் வர்ணக் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருக்கின்றனர்.
நான்கு வர்ணத்துக்குள் வராதவர்களை,
தஸ்யூக்கள் என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறது (10- 45).


ஐலா என்னும் மனுவின் பெண்,
சுத்யும்னன் என்னும் ஆணாகவும் இருந்திருக்கிறாள்.
இதன் மூலம் பெண்ணாகப் பிறந்து, மகனும் பெற்று,
பிறகு ஆணாகப் பால் மாற்றம் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
ஆணாக இருக்கையில் அவனுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர்.


ரிஷிகளும் தங்கள் மந்திர, ஹோமம் முதலியவற்றின் மூலமாக
மனுவுக்கு ஆண் குழந்தைகளை அருளச் செய்வதாக வாக்களிக்கிறார்கள்.
அது முதல் பும்சவனம் என்னும் வேதக் கிரியை உண்டாகி இருக்க வேண்டும். கருவுற்ற 3 ஆம் மாதம் செய்யப்படும் அந்தக் கிரியை மூலம்
கருவில் இருக்கும் குழந்தை ஆணாக உருப் பெறுகிறது.

அப்படிப் பிறந்த பிள்ளைகளில் ஒருவன் இக்ஷ்வாகு என்பவன்.
அவன் சரயு நதிக் கரையில் அயோத்தியில் தனது நாட்டை ஸ்தாபித்தான். அவன் வம்சாவளியில் சிபியும்,
அந்தச் சிபியின் வம்சாவளியில் சோழனும் வருகின்றனர்.
இக்ஷ்வாகு பரம்பரையில் ராமனும் வருகிறான்.



மேலே சொன்ன ஐலாவின் பரம்பரையில் யயாதி வருகிறான்.
அவனுக்கு ஐந்து மகன்கள் பிறந்தனர்.
அவர்களுக்கிடையே மூண்ட அரசுச் சண்டையே
ஆரிய தஸ்யு சண்டை என்று மாக்ஸ் முல்லர் சொல்லியுள்ளார்.
அந்த ஐந்து மகன்களில் முதல் மகன் யது ஆவான்.
அவன் பரம்பரையில் பிறந்தவன் கிருஷ்ணன்.


அந்த ஐந்து மகன்களுக்கிடையே மூண்ட சண்டையில்,
அநுவும், த்ருஹ்யுவும் பாரதத்துக்கு வெளியே அனுப்பப்பட்டனர்.
அவர்கள் வேத மரபைப் பின்பற்றவில்லை.
அதனால் அவர்கள் தஸ்யூக்கள் என்று அழைக்கப்பட்டனர். (பகுதி 30)
அவர்களுக்கிடையே நான்கு வர்ண தர்மங்கள் கிடையாது.
மீதி மூன்று மகன்களும், வர்ணாஸ்ரம தர்மத்தைப் பேணி,
வேத மரபில் வாழ்ந்து ஆரியர்கள் என்று உயர் பண்பாளார்களாக வாழந்தனர்.


மூத்தவன் யது தற்போதைய குஜராத், மஹாராஷ்டிரப் பகுதிகளுக்கும்,
துர்வஸு என்பவன் வங்காளம், ஒரிசா வரையும் சென்று குடியேறினர்.
இளையவன் புரு ஸரஸ்வதி நதி தீரத்தில் ஆட்சி செய்யலானான்.

இவர்கள் சென்ற இடங்களை இந்தப் படத்தில் காணலாம்.
நீல நிறத்தில் ஸரஸ்வதி நதி.
சிவப்பு நிற வட்டம் ஆர்யவர்த்தம்.

ஸரஸ்வதி நதியில் ஆரம்பித்து, வங்காளம் வரையிலும்,
வடக்கில் இமய மலையில் ஆரம்பித்து, விந்திய மலை வரையிலும்
இந்த மூன்று மகன்களும் ஆக்கிரமித்தனர்.
இவர்கள் பரவியிருந்த இந்தப் பகுதி ஆரியவர்த்தம் எனப்பட்டது.
ஆரியம் வாழுமிடம் என்பது இதன் பொருள்.
(இதன் விளக்கங்களை, ஆரியம் பற்றி விவரிக்கும் போது காண்போம்.)

இங்கு நாம் ஒன்று கவனிக்க வேண்டும்.
முன் பகுதிகளில் நாம் ஆராய்ந்த பஞ்ச கௌட பிராமம்ணர்கள்
இந்தப் பகுதிகளில்தான் வசித்தனர்.


இதனால் பிராம்மணர்கள்தான் ஆரியர்கள் என்று அர்த்தமில்லை.
ஆரியவர்த்தம் என்று வட இந்தியா முழுவதும் சென்றவர்கள்
துர்வஸு, அநு என்னும் க்ஷத்திரியர்கள்.
அவர்கள் இருந்த பகுதிகளில் மக்கள்
வர்ணாஸ்ரம தர்மத்தைக் கடைப் பிடிதிருக்கிறார்கள்.
நான்கு வர்ணாத்தவரும் கொண்டதுதான் ஆரியவர்த்தம்.
பிராம்மணனும், க்ஷத்திரியனும், வைசியனும், சூத்திரனும் ஆரியனே.

இக்ஷ்வாகு பரம்பரையில்,
சிபிக்கும், ராமனுக்கும் முன்னால் வந்த மாந்தாதா
ஒரு முறை இந்திரனிடம்
இந்த வர்ணங்களைப் பற்றி தனது சந்தேகங்களைக் கேட்கும்போது,
ஆரியவர்த்தத்திலிருக்கும் நான்கு வர்ணத்தவர்களிலிருந்து உண்டான
யவனர்கள், சாகர்கள், காம்போசர்கள் போன்ற இன்ன பிற மக்கள்
எத்தகைய தர்மங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்கிறார்.
இதிலிருந்து பிராமம்ணர்கள் மட்டுமே ஆரியர்கள் என்றும்,
சூத்திரர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்றும்
சொல்வது தவறு என்று தெரிகிறது.

இந்த இடத்தில் இந்திரன்
திருடர்களுக்கான தர்மத்தைச் சொல்கிறான்.
(சா.பர் 64)
ஆரியரல்லாதவர் என்னும் வகையில் திருடன் வருகிறான்.
ஏனெனில் அவன் நான்கு வர்ணத்தில் வரவில்லை.
அதாவது நான்குவித சுபாவங்களில் ஒன்று கூட அவனிடம் இல்லை.
ஆயினும் அவனுக்கும் தர்மம் உண்டு.
பெற்றோர்கள், பெரியோர்கள், காட்டில் வசிப்பவர்களை
அவன் பேண வேண்டும்.
அரசர்களுக்கும் உதவ வேண்டும்.
வேதத்தில் சொல்லப்பட்ட பித்ரு ஹோமம் செய்யவேண்டும்.
கிணறு வெட்டுதல், வழிப்போக்கர்களுக்குத் தண்ணீர் தருதல்,
தன்னால் இயன்ற அளவுக்குத் தான தருமம் செய்தல்
ஆகியன செய்ய வேண்டும்.
இங்கு ஒரு விவரம் மறைமுகமாக இருக்கிறது.
திருடனாக இருந்தாலும்,
அவனது முன்னோருக்குப் பித்ரு கடன் செய்து வைக்க
பிராம்மணன்தான் வர வேண்டும்.
தான் ஆரியன் என்று பிராம்மணன் உச்சாணிக் கொம்பில் உட்காரவில்லை.
கூப்பிட்டவர்களுக்கு வந்து பித்ரு ஹோமம் செய்து விட்டுப் போக வேண்டும்.
திருடனாக இருந்தாலும்,
அவன் கூப்பிட்டால் வந்து பித்ரு ஹோமம் செய்து வைக்க வேண்டும்.
அப்படி வந்த பிராம்மணனுக்குத் தகுந்த தானத்தை
அந்தத் திருடன் தர வேண்டும்.


நான்கு வர்ணத்தவர்களுக்குள்ளேயே
ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும்.
வர்ண அமைப்பில் செய்த தொழில்கள் அப்படித்தான் இருந்தன.
இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய
மயானத்தில் வேலை செய்பவன் சூத்திரன் என்றால்,
அந்த இறந்த உடலுக்கு அந்திமக் கிரியைகள் செய்ய
மயானத்துக்கு பிராம்மணனும் சென்றான்.
நான்கு வர்ணத்தில் சேராதவன் என்னும் ஒரு திருடனுக்கும்,
பித்ரு ஹோமம் செய்து வைத்து,
பிராம்மணன் உதவி செய்ய வேண்டும்.
இப்படி மனிதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
அமைப்பு வர்ணாஸ்ரம தர்மத்தில் இருந்தது.


இனி மேலே விட்ட இடத்திலிருந்து தொடருவோம்.


ஆரியவர்த்தம் முழுவதும் எல்லா வர்ணத்தவர்களும் இருந்தார்கள்.
பிராம்மணனும் இருந்தார்கள்.
அவர்கள் ஆங்காங்கே இருந்த இடங்களின் பெயரால்
பஞ்ச கௌடர்கள் என்று அந்த இடத்தின் பெயரோடு
இணைத்து அழைத்துக் கொண்டார்கள்.
ஆனால் இந்தப் பெயர் அடையாளம்,
1200 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் இருக்கிறது.(பகுதி 50)


யயாதியின் மகன்கள் காலத்தில்
ஆரிய-தஸ்யு சண்டைக்குப் பிறகு
வட இந்தியாவில் இவ்வாறு ஆரியவர்த்தம் என்று அமைந்தது.
அதற்குப் பிந்தின காலத்தில்
பரசுராமர் வந்தபோது,
நாம் முன்பே சொன்னாற்போல
விந்திய மலைக்குத் தெற்கே
சூர்ப்பாரகம் தொடங்கி கேரளம் வரை
ஸரஸ்வதி பிராம்மணர்களைக் குடி அமர்த்தினார். (பகுதி 49 & 50)


விந்திய மலைக்குத் தெற்கில் ஏற்பட்ட அந்தக் குடியேற்றங்கள்
நாளடைவில் பஞ்சத் திராவிடர்கள் எனப்பட்டனர். (பகுதி 50)
அவர்களுள் ஒரு பகுதி காஞ்சிபுரத்துக்குக் குடி பெயர்ந்த போது,
அவர்களை முன்னிட்டு அந்தப் பகுதி திராவிடம் எனப்பட்டது.
இந்தப் பிராம்மணர்களைப் பொருத்தமட்டில்,
அரசர்கள் அவர்களை வரவழைத்துக் குடி அம்ர்த்தியிருக்கின்றனர்.
இதை மெய்ப்பிக்கும் வகையில்,
‘கோணசீமைத் திராவிடர்கள்என்னும் பிராம்மணார்களைப்
பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.


இவர்கள் இன்று ஆந்திர மாநிலத்தில்
கிழக்குக் கோதாவரிப் பகுதியில் வாழ்கின்றனர்.
11-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட ராஜேந்திர சோழன்,
தன் மகள் அம்மங்கா தேவியை,
ராஜமுந்திரிப் பகுதியை ஆண்ட வேங்கி நாட்டு அரசனான
ராஜ ராஜ நரேந்திரன் என்னும் சாளுக்கிய அரசனுக்கு மணம் முடித்த போது, அவளுடன் 18 பிராம்மணக் குடும்பங்களைச் சீதனமாக அனுப்பி வைத்தான். கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்களாதலால்,
அந்த பிராம்மணார்கள்
‘கும்பகோண சீமையைச் சேர்ந்தவர்கள் என்னும் பெயரில்,
கோண சீமத் திராவிடர்கள் என்று இன்றும் பல்கிப் பெருகி உள்ளனர்.


கும்ப கோணத்திற்குச் செல்லும் முன்
அவர்கள் காஞ்சியைச் சேர்ந்த பிராம்மணர்களாக இருந்திருக்க வேண்டும். சோழ தேசத்தில்
கும்பமேளா காணும் முக்கியத்துவம் வாய்ந்த
கும்பகோணம் பகுதிக்குச் சென்று குடியேறி இருக்கவே
திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களைத் தவிர வேறு பிரம்மணர்கள் இல்லையா என்றால், இருந்தார்கள்.
வர்ணத்தின் அடிப்படையில் பிராம்மணர்கள்
எல்லா இடங்களிலும் இருந்தார்கள்.
தென்னன் தேசமான பாண்டிய நாட்டிலும் இருந்தார்கள்.
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு
ஆண்ட முது குடுமிப் பெரு வழுதி என்னும் பாண்டிய மன்னன்
பல்யாக சாலை என்னும் சிறப்புப் பெயர் பெற்றிருந்தான்.
பல யாகங்களைச் செய்ததால் அந்தப் பெயர்.
யாகங்களை பிராம்மணர்கள் செய்தனர்.
அவன் இருந்த கபாடபுரம்
இன்றைக்கு 3,500 ஆண்டுகளுக்கு முன் கடைசி ஊழியில் அழிந்தது.
அந்தக் காலக்கட்டத்தில்தான் மாக்ஸ் முல்லர் சொல்லும்
ஆரியப் படையெடுப்பு நடந்தது (!)
சிந்து நதிப் பகுதியில் ஆரியர் வந்தனர் என்று அவர் சொல்லும் காலக்கட்டத்துக்கு முன்பே
கபாடபுரத்தில் பிராம்மணர்களைக் கொண்டு
யாகங்கள் செய்திருக்கிறான் பாண்டிய மன்னன்.


ஆங்காங்கே இருந்த மக்கள் வர்ணங்களாக
அடையாளம் காட்டப்பட்டது தென்னன் நாட்டிலும் இருந்திருக்கிறது என்பதைத் திருவிளையாடல் புராணம் மூலமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
திருக்குறளிலும் அந்தணர் முதலிய வருணத்தவர்
செய்யும் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன.
தொல்காப்பியத்திலும் நான்கு வருணத்தவர் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன.
நான்கு வர்ணாத்தவர்களும் ஆரியர் என்பதால்,
தமிழ் நாட்டில் வாழ்ந்த நான்கு வர்ணத்தவர்களும் ஆரியரே.
ஆனால் ஆரியன் என்ற பெயரால் அழைக்கப்படாமல்,
வேறு ஒரு பெயரால் அழைக்கப்பட்டிருந்தனர்.
அந்த விவரங்களை ஆரியன் பற்றிப் பேசும் போது காண்போம்.


திருக்குறள் குடிமை அதிகாரத்தில்
உயர் பிறப்பாளன், தாழ் பிறப்பாளன் என்பவர்கள் யார்
என்று சொல்லப்படுகிறது.
அதில் பிராம்மணன் உயர் பிறப்பாளன் என்றோ,
சூத்திரன் தாழ் பிறப்பாளன் என்றோ சொல்லப்படவில்லை.
அவரவர் பிறந்த குடியில், வருணத்தில்,
ஒருவர் உயர்ந்தவராகவும் இருக்கலாம்,
தாழ்ந்தவராகவும் இருக்கலாம்,
அது எவ்வாறு என்று, மஹாபாரதம் சொல்வது போலவே சொல்லப்படுகிறது. ஒருவன் பிராம்மணனாக இருந்தும்
அவனது செய்கை மூலம், தாழ்ந்தவனாக இருக்கலாம்.
ஒருவன் சூத்திரனாக இருந்தும், உயர்ந்தவனாக இருக்கலாம்
என்பதே குடிமை அதிகாரம் சொல்லும் கருத்து.



இனி மீண்டும் மனுவின் காலத்துக்கு வருவோம்.
அவன் இருந்த கிருத யுகத்தில்
பிராம்மணர், வைசியர் போன்ற வித்தியாசங்கள் இல்லை.
மனு க்ஷத்திரியனாக மக்களைக் காத்திருக்கிறான்.
அவனுக்குப் பிறந்த ஒரு மகனான ப்ரஸத்ரன்என்பவன்
பசுக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான்.
வெள்ளத்திலிருந்து தப்பி வந்தபோதே
பசுக்களையும் கூட்டி வந்திருக்க வேண்டும்.
வந்த இடத்திலும், பசுக்களை அரவணைத்துக் காப்பாற்றி இருக்க வேண்டும். மஹாபாரதம் தரும் வர்ணனையின் படி
பசுக்களைக் காப்பாற்றுபவன் வைசியன் என்ப்படுவான்.
அவனே பயிர்த் தொழிலிலும் ஈடுபட்டான்.


பிற மகன்களை க்ஷத்திரியத் தொழிலில் ஈடுபடுத்தின மனு,
இந்த மகனுக்கு இயல்பில் இருந்த சுபாவத்தினால்.
பசுக்களைப் பாதுகாக்க விட்டிருக்கிறான்.
க்ஷத்திரியன் எனப்படுபவன் வீரம் கொண்டவனாகவும்,
சண்டை போடுவதில் வல்லவனாகவும்,
வலியைத் தாங்குபவனாகவும்,
பிறரைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டவனாகவும் இருப்பான்.
அந்தக் குணங்கள் கொண்ட மகன்களை அரசாள விட்டிருக்கிறான் மனு. ஆனால் இந்த மகன் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு,
எல்லாவற்றையும் கவனிக்கும் சுபாவத்தைக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
அந்த சுபாவத்தை உபயோகமாக ஆக்கிக் கொள்ள,
நிலம், நிலம் சார்ந்த உயிரினம்
ஆகியவற்றைக் கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டால்,
அது அவனுக்கும் பயன் தரும்,
மற்றவர்களுக்கும் பயன் தரும்.
இதுவே வைசியன் தோன்றின விதம்.
க்ஷத்திரிய மனுவின் இந்த மகன் வைசியனாக இருந்தான்.


அவன் வாழ்வில் ஒரு சம்பவம் நடந்தது.
ஒரு சமயம் ஓரிரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.
எங்கும் கும்மிருட்டாக இருந்தது.
திடீரென பசு ஒன்று ஓலமிட்டது.
ஒரு புலி அதைக் கவ்வி இருக்கிறது.
இதை உணார்ந்த ப்ரஸ்த்ரன், தனது வாளை வீசினான்.
அது பசுவின் கழுத்தை வெட்டி விட்டது.
அத்துடன் புலியின் காதும் அறுந்து விட்டது.
புலியும் ஓலமிட்டுக் கொண்டே ஓடி விட்டது.
அந்த ஒலியைக் கொண்டு, புலியைத் துரத்தி விட்டோம்
என்று ப்ரஸத்ரன் நினைத்தான்.
ஆனால் பொழுது விடிந்ததும் தான் தெரிந்தது,
தான் பசுவைத் தவறுதலாக வெட்டி விட்டோம் என்று.
பசுவை வெட்டிக் கொன்றதனால்
அவன் அடுத்த பிறவியில் சூத்திரனாகப் பிறந்தான்.


அதாவது முதலில் உண்டான வர்ணங்கள் மூன்று.
மூன்று வர்ணங்களில் இருப்பவர்கள் செய்த செயல்களால்,
பின்னால் ஏற்பட்ட பிறவிகளில் சூத்திர வர்ணம் ஏற்பட்டது
என்பது மனுவின் கதை சொல்லும் ஒரு முக்கிய விவரம்.
அதாவது ஒரு பிறவியில் பிராம்மணனாக இருந்தவன்,
வினைப் பயனால், மறு பிறவியில் சூத்திரனாகப் பிறக்கலாம்.
அது போல ஒரு பிறவியில் சூத்திரனாக இருந்தவன்,
வினைப் பயனால் மறு பிறவியில் பிராம்மணனாகப் பிறக்கலாம்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்னும் புற நானூற்றுப் பாடல்
இந்தக் கருத்தைத்தான் தருகிறது.
தீதும், நன்மையும், சாதலும், நோதலும் பிறர் தர வாரா.
அவை கர்ம வினையின் படியே ஏற்படுகின்றன.
ஒருவர் பெரியோராக இருத்தலும்,
அல்லது சிறியோராக இருத்தலும்,
முன் பிறவியில் செய்த வினையின் படியே,
எனவே பெரியோரை வியப்பதும் இல்லை,
சிறியோரை இகழ்வதும் இல்லை.
மற்றவர் யாரும், நம்முடைய இன்ப துன்பங்களுக்குக் காரணமில்லை.
நாமே நம் நிலைக்கு காரணம்.
ஆகையால், எல்லாரும் நமக்கு ஒன்றுதான்.
அதனால், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும்
தத்துவக் கருத்து கொண்டது இப்புறப் பாடல்.


சூத்திரன் என்பதற்கு
‘அழுபவன்அல்லது ‘துக்கம் கொண்டவன்
என்று பொருள்.
உண்மையில் ஒவ்வொரு மனிதனும்,
பிறக்கும் போது அழுது கொண்டே பிறப்பதால்,
பிறப்பால் அனைவரும் சூத்திரர் எனப்படுகின்றனர்.
அதற்குப் பிறகே செய்யும் செயலால்,
கட்டுதிட்டங்களுடன் வாழும் வாழ்க்கையால்
பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர் எனப்படுகின்றனர்.


வர்ண லட்சணங்கள்.

சுபாவ அடிப்படையில் பிராம்மணன் எனப்படுபவன்
யாருக்கும் தீங்கு செய்ய மாட்டான்.
அவனைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம்.
அவனும் யாருக்கும் பயம் உண்டாக மாட்டான்.
அவனுக்கு யாரும் எதிரி கிடையாது.
அவன் யாருக்கும் எதிரியாக மாட்டான்.
அப்படிப்பட்டவன் பிராம்மணன்.
ஆயினும் தினசரி வாழ்க்கை முறையில்
அவனுக்கும் தெரியாமல்,
கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களுக்குத் தீங்கு இழைத்து விடுகிறான்.
அதற்குப் பிராயச் சித்தமாக அவன் ஜப, ஹோமங்கள் செய்வது விதிக்கப்பட்டுள்ளது.


சுபாவ அடிப்படையில் க்ஷத்திரியன் எனப்படுபவன்
தனக்கு நேரும் உடல் வலியைத் தாங்கக் கூடியவன்.
தன் உடல் வலிமையால்
பிறருக்குத் தீங்கு செய்யக்கூடிய சுபாவம் கொண்டவன்.
கர்ணன், பரசுராமரிடம்
அஸ்திர வித்தை கற்றுக் கொள்ள விரும்பி,
தான் ஒரு க்ஷத்திரியன் என்று சொல்லாமல் மறைத்து,
தான் ஒரு பிராம்மணன் என்கிறான்.
ஆனால் ஒரு வண்டு அவனது தொடையைத் துளைத்த போது,
வலியைப் பொறுத்துக் கொண்டு அசையாமல் இருந்தான்.
இதன் மூலம் அவன் க்ஷத்திரியனாகத்தான் இருக்க முடியும்
என்று பரசுராமர் தெரிந்து கொள்கிறார் என்ற ஒரு சம்பவம் உண்டு.
க்ஷத்திரியனது அந்த சுபாவத்தை நல்ல விதமாக வழிப்படுத்த,
அவனுக்கு காக்கும் தொழில் கொடுக்கப்பட்டது.
காக்கும் தொழிலிலும்,
பிற ஜீவ ராசிகளுக்குத் துன்பம் ஏற்படுவதால்,
அவனும் ஹோம கர்மங்கள் செய்ய வேண்டும்.


பகைவர்களை வீழ்த்த க்ஷத்திரியனது சுபாவம் கை கொடுக்கிறது.
ஆனால், அந்தச் செயலில் அவன் பிறருக்கு உடல் வலியைத் தருவதாலும்,
உயிரிழக்கச் செய்வதாலும்,
அவனும் அவ்வாறே வலியடைந்து,
ரத்தம் சிந்தி ரண களத்தில் இறப்பதே மிகச் சிறந்த பரிகாரம் என்றும்,
அதனால் அவன் இறந்த பின் உடனடியாக சிறந்த உலகங்களை அடைகிறான் என்றும் சாந்தி பர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இதுவே சிறந்த க்ஷத்திரிய லக்ஷணம் ஆகும்.
இதன் முழு உருவமாகத் திகழ்ந்தவர்கள் தமிழ் நாட்டு மூவேந்தர்கள்!!
அவர்கள் என்றென்றும் நாட்டை விஸ்தரிப்பதில் கவனம் செலுத்தினர்.
அவர்கள் வாளுக்கு எப்பொழுதும் வேலை வேண்டும்.
அவர்கள் போரில் வீர மரணம் அடைவதையே விரும்பினர்.
இதுவே மிகச் சிறந்த க்ஷத்திரிய லக்ஷணம்.

எல்லா நாடுகளையும் தங்கள் வசப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல்,
ராஜசூயம், அஸ்வமேதம் போன்ற வேள்விகளியும்
க்ஷத்திரியன் செய்ய வேண்டும்.
அந்த வேள்விகளைத் தமிழ் அரசர்களும் செய்திருக்கிறார்கள்.


பொதுவாகவே மூவேந்தர்களும் எப்பொழுதும்
ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்
என்பதுதான் நாம் சங்க நூல்கள் மூலம் அறியும் செய்தி.
அதற்குக் காரணம் அவர்கள் முழு க்ஷத்திரியர்கள் என்பதே.
சோழர்கள் வம்சாவளியின் ஆரம்பத்தில் வந்த
மாந்தாதா க்ஷத்திரிய தர்மத்திலிருந்து நழுவினான்
என்ற அவச் சொல் ஏற்பட்டது.
ரிஷி வசிஷ்டரானவர், தனது யோக வலிமையால்
விஸ்வாமித்திரரை வென்றார்.
அதுபோல யோக வலிமையால்
பகைவர்களை வெல்ல விரும்பினான் மாந்தாதா.
அது க்ஷத்திரியனுக்கு இழுக்கு.
ஒரு ரிஷி அவ்வாறு செய்யலாம்.
ஆனால் ஒரு க்ஷத்திரியன் நெஞ்சை நிமிர்த்தி
போர்க் களத்தில் நின்று போரிட வேண்டும்.
இவ்வாறு மற்றவர்கள் அவனுக்கு அறிவுரை கூறவே
அவன் பாரதமெங்கும் திக் விஜயம் செய்து
தனக்கு அடி பணியாதவர்களைப் போரில் வென்று
தனக்குகந்த க்ஷத்திரிய தர்மத்தைக் கடைபிடித்தான்
என்கிறது மஹாபாரதம்.


மாந்த்தாதாவின் திக் விஜயத்தின் போது தென்னிந்தியா வரை வந்தான்
என்று சொல்லபப்ட்டுள்ளது.
அப்பொழுது அவன் வசத்தில் பூம்புகார் வந்திருக்க வேண்டும்.
அவனது மகன் முசுகுந்தன் பூம்புகாரில்
நாளங்காடிப் பூதத்தை நிறுவுகிறான் (பகுதி 11).
பின்னாளில் அவர்கள் பரம்பரையில் சோழவர்மன் வந்த போது,
பூம்புகாரைத் தனது தலைநகரமாக ஆக்கிக் கொண்டிருக்க வேண்டும். 


இனி சுபாவம் மூலமாகச் சொல்லப்படும்
வைசியன் செயல்பாட்டைக் காண்போம்.
அதிகம் உடலை வருத்திக் கொள்ளாமலும்,
சுற்றுப்புறத்தைக் கவனிப்பதிலும்,
எல்லா விஷயங்களிலும் தராதரத்தைப் புரிந்து கொள்வதிலும்
எவன் கெட்டிக்காரனாக இருக்கிறானோ,
அவன் வைசியன் எனப்படுவான்.
பொதுவாக் நிலம், நிலத்தைச் சார்ந்த உயிரினங்கள் மீது
அவனுக்கு அதிகக் கவனம் இருக்கும்.  

மனுவின் காலத்தில் பசுக்களைப் பராமரிப்பதில் அவர்கள்
கவனம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
காலப்போக்கில், குதிரை, யானை, கோவேறுக் கழுதை
போன்றவற்றைப் பழக்குவதைச் செய்தார்கள்.
அவர்கள் பயிர்த் தொழிலும் செய்ய ஆரம்பித்தார்கள்.
யுக லட்சணங்கள் என்று சொல்கையில்,
த்ரேதா யுகம், துவாபர யுகங்களில் வைசியனே
பயிர்த் தொழிலும் செய்திருக்கிறான்.
கிருஷ்ணன் பசு மேய்த்தலும்,
அவன் சகோதரன் பலராமன் பயிர்த் தொழிலும் செய்திருக்கின்றனர்.
இந்தத் தொழிலில் (உழுவதில்)
மண்ணில் இருக்கும் உயிரினங்கள் துன்பமடையக் கூடும் என்பதால்,
வைசியர்களுக்கும், பிராயச் சித்தமாக ஹோம காரியங்கள்
செய்வது விதிக்கப்பட்டது.



சுபாவம் அடிப்படையில் சூத்திரன் என்பவன்
எதற்காவது துக்கப்பட்டுக் கொண்டிருப்பான்.(பகுதி 23)
ஒரு நல்ல விஷயம் நடந்தாலும்,
அதிலுள்ள ஒரு குறையின் காரணமாக
அவனால் சந்தோஷப்பட முடியாது.
அந்தத் துக்கம் ஏன் அவனுக்கு வர வேண்டும்?
முன் வினைப் பயன் ஒன்றைக் கழிக்கும் விதமாக
அவன் துக்கப்படுகிறான்.
அதனால் அவன் புதிதாக ஒரு கர்மத்தை உருவாக்குவதில்லை.
அதாவது மற்ற மூன்று வர்ணத்தவர்களைப் போல
பிற உயிருக்குத் தீங்கு செய்யும் வண்ணம் அவன் செயல் அமைவதில்லை.
அவனால் எந்த உயிருக்கும் தீமை ஏற்படுவதில்லை.
எனவே ப்ராயச்சித்தமாக அவன் எந்த ஹோமமும் செய்யத் தேவையில்லை
என்று சாந்தி பர்வம் (97) கூறுகிறது.


எல்லோருக்கும் பொதுவான பித்ரு ஹோமம் மட்டும்
அவன் செய்தால் போதும் என்று சொல்லப்பட்டுள்ளது.
தான் புதிதாக ஒரு கர்மத்தை உண்டாக்காத வண்ணம்,
அவன் மற்ற வர்ணத்தவர் செய்யும் தொழிலில் உதவிக்குச் செல்கிறான்.
அந்தத் தொழிலில் அந்த வர்ணத்தவர்களுக்கு நேரிடும்
புதிய கர்மமும், பாவமும் சூத்திரனுக்கு வருவதில்லை.


இவ்வாறு அமையும் சூத்திர வர்ணம் முதலில் இல்லை.
மனுவின் மகன் ப்ரஸத்ரன் மறு பிறவியில் சூத்திரனாகப் பிறந்தான்
என்று சொல்லப்பட்டுள்ளதைப் போல,
மூன்று வர்ணத்தவர்கள் பிராயச்சித்தம் செய்ய இயலாத
காரியங்கள் செய்த போது,
அவர்கள் சூத்திரர்களாகப் பிறந்து,
அந்தப் பிறப்பே பிராயச்சித்தமாக அமைகிறது.
அந்தப் பிறப்பில் அவர்கள் செய்யும் சிறு தியானமும், பக்தியும்கூட
பல ஹோமங்களைச் செய்வதை விட அதிக பலன்களைத் தருகிறது.
இந்து மதத்தில் சிறந்த ஞானிகளும், ஆழ்வார்களும், பக்தர்களும்
சூத்திர வர்ணத்தில் பிறந்து,
பக்தி ஒன்றின் மூலமாக
நேரிடையாகக் கடவுளை அடைந்து விட்டனர்.
தெய்வத்தை அடைய மிக எளிய வழி இந்த வர்ணத்துக்குத் தான் உண்டு.


வர்ணக் கலப்பு

த்ரேதா யுகம் தொடங்கியே வர்ணக் கலப்புகள் ஆரம்பித்தன.
பாண்டவ சகோதரர்களை எடுத்துக் கொண்டோமென்றால்,
அவர்களுள் நகுலன், குதிரைப் பராமரிப்பில் சிறந்து விளங்கினான்.
அதே நேரம் க்ஷத்திரியனாகப் போரில் ஈடுபடவும் அவனால் முடிந்தது.
இவ்வாறு சுபாவக் கலப்புகள் காலப் போக்கில் ஏற்பட்டன.

யுதிஷ்டிரன் செய்த ராஜ சூய யாகத்தில்
கிருஷ்ணனுக்கு க்ஷத்திரியன் என்ற மரியாதை தரக்கூடாது
என்பதே சிசுபாலனது வாதம்.
அதற்குக் காரணம்,
கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கும் வைசியனான இருந்தான்
என்பது மட்டுமல்ல,
அவன் ஒரு வர்ணக் கலப்பில் பிறந்தவன்
அதனால் அவன் முழு க்ஷத்திரியன் இல்லை.


கிருஷ்ணனது குலமான யாதவ குலத்தின் முன்னோடியான யது என்பவன்
யயாதி என்னும் க்ஷத்திரியனுக்கும்,
தேவயானை என்னும் பிராம்மணப் பெண்ணுக்கும் (சுக்கிராச்சாரியார் மகள்) பிறந்தவன்.
அந்த வர்ணக் கலப்பில் பிறக்கும் குழந்தை,
முழு க்ஷத்திரியனாகவோ, முழு பிராம்மணானாகவோ இருக்காது.
க்ஷத்திரிய ஆணுக்கும், பிராம்மணப் பெண்ணுக்கும்
பிறக்கும் குழந்தை ‘சூதன் எனப்படுவான்.
அவன் தேரோட்டுவதில் கெட்டிக்காரனாக இருப்பான்.
 எனவே தேரோட்டும் தொழிலை அவனுக்குக் கொடுக்க வேண்டும்.
இது மனுஸ்ம்ருதி சொல்வது.
இதன் காரணமாக, சிசுபாலன் கிருஷ்ணனை க்ஷத்திரியனாக
ஒப்புக் கொள்ளவில்லை.
ஆனால் அதை மற்றவர்கள் பொருட்படுத்தவில்லை.
கிருஷ்ணனுக்கே மரியாதை செலுத்தினர்.
கிருஷ்ணனும், தனது சுபாவத் தொழிலான தேரோட்டுவதை
பாரதப் போரில் செய்தான்.


ஒவ்வொருவித வர்ணக்கலப்பினால் பிறக்கும் குழந்தைகள்
தங்கள் பெற்றோரிடமிருந்து எடுத்துக் கொள்ளும் சுபாவத்தை ஒட்டி
செய்யக் கூடிய செயலையும்,
அப்படி உண்டாகும் புதிய வர்ணத்துக்கு ஒரு புதிய பெயரும்
மனுஸ்ம்ருதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
தந்தை என்பவன் விதை என்றும்,
தாய் என்பவள் அந்த விதையை நட்டு முளைக்கச் செய்யும் நிலம் என்றும்,
ஒரு செடியின் தன்மை என்பது
விதை, நிலம் ஆகிய இரண்டின் தன்மையைப் பொருத்து அமையும் என்பதும்,
பல காலமாக ரிஷிகளிடையே அலசப்பட்டு வந்த விஷயமாகும்
என்கிறது மனுஸ்ம்ருதி. 
அதன் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் ஒன்றுக்கொன்று கலப்பதால்
எற்படும் புது சுபாவங்கள்,
அந்த புது சுபாவங்கள்
மேலும் மேலும் ஒன்றுக்கொன்று கலப்பதால் உண்டாகும்
புது சுபாவங்கள்,
அந்த சுபாவங்களின் அடிப்படையில் ஏற்படும் திறமை,
அந்தத் திறமையை வெளிப்படுத்தச் செய்யும் தொழில்
இவையே மனுஸ்ம்ருதி சொல்வது.
ஒரு சமூகத்துக்கு, அதன் மக்கள் எந்த வகையில் பயன்பட முடியும்
என்று ஆராயப்பட்ட மனித வளத்தை,
மனுவாதி சிந்தாந்தம் என்று திராவிடவாதிகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.


கிருஷ்ணன் வர்ணக் கலப்பினால் ஏற்பட்டவன்.
அந்தக் காலக்கட்டத்தில் அவனுக்கு சிசுபாலன் மூலம் எதிர்ப்பு ஏற்பட்டாலும்,
மற்றவர்கள் அவன் சிறப்பைப் பார்த்திருக்கின்றனர் என்பதே,
எந்தக் குடிப் பிறப்பாக இருந்தாலும்,
ஒருவன் அவனது நடத்தையால்தான் மதிக்கப்படுகிறான்
என்பதை உறுதி படுத்துகிறது.


வர்ணங்களில் திராவிடம்.


இப்படி ஏற்பட்ட வர்ணக் கலப்பு ஒருபுறம் சொல்லப்படுகிறது.
வர்ணக்கலப்பில்லாமலேயே, ஒரு குறிப்பிட்ட வர்ணத்தவர்
தங்கள் வர்ண சுபாவத்தைக் கடைப் பிடிக்கவில்லை என்றால்
அதனால் அவர்கள் அந்த வர்ணத்தவர் என்னும் அடையாளத்தை இழக்கின்றனர்.
அப்படி உருவானதுதான் திராவிடன் என்பது.

மனுஸ்ம்ருதி 10-22 ஆம் ஸ்லோகத்தின் மூலம்,
திராவிடன் எப்படி உருவாகிறான் என்று தெரிகிறது.
க்ஷத்திரியனாகப் பிறந்தவன்,
அதாவது க்ஷத்திரிய சுபாவத்துடன் பிறந்தவன்,
க்ஷத்திரியத் தொழிலைச் செய்யவில்லை என்றால்,
அவனுக்குப் பிறக்கும் பிள்ளை ‘க்ஷத்திரியன் என
ப்பட மாட்டான்.
அவன் ‘கல்லன்எனப்படுவான்.
அவனும் க்ஷத்திரிய சுபாவத்துடன், க்ஷத்திரியத் தொழிலைச் செய்யவில்லை என்றால் அவன் ‘மல்லன் எனப்படுவான்.
இவ்வாறே ஒவ்வொரு தலைமுறையிலும், க்ஷத்திரியம் வெளிப்படவில்லை என்றால் அவர்க்ள் க்ஷத்திரியத்தை இழப்பார்கள்.
இப்படி ஆறு தலைமுறை சென்றுவிட்டால்
அதற்குப் பிறகு பிறப்பவன் திராவிடன் என்ப்படுவான்.

அந்த வரிசை:-
க்ஷத்திரியன்
1. கல்லன்
2. மல்லன்
3. லிக்கிவி
4. நடன்.
5. கரணன்
6. கஸன்
7. திராவிடன்.

திராவிடனுடன் இந்த வரிசை முடிந்து விடுகிறது.
எனவே ஏழாவது தலை முறையில்
க்ஷத்திரிய சுபாவமானது முழுதும் மறைந்து விடுகிறது என்று தெரிகிறது.
இப்படி வர்ண சுபாவம் மறைந்து போவது மூன்று வர்ணத்தவருக்குமே உண்டு.
அவர்களுள் க்ஷத்திரிய சுபாவம் மறைந்தவன் திராவிடன் எனப்பட்டான்
என்பது மனு ஸ்ம்ருதி தரும் விளக்கம்.


சுபாவம் மறைந்து போவதால்,
அந்த வர்ணத்தவர்கள் செய்யும் செயல்களைச் செய்வதில்லை.
ஹோமம் உட்பட எந்தக் கிரியையும் செய்யாமல் போவதால்
அவர்கள் சூத்திரர்களது சுபாவத்தை அடைகிறார்கள். (10- 43)
ஆனால் அவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லவில்லை.
ஏனெனில் சூத்திரர்களும் ஆரியர்கள்.
அவர்கள் வேத மத நம்பிக்கைகள் கொண்டவர்கள்.
தியானம், பக்தி எல்லாம் உண்டு.
ஆனால் திராவிடர்களோ வேத மதத்திற்குப் புறம்பாகச் சென்றவர்கள்.
வேத மத வழக்கங்களைக் கைவிட்டவர்கள்.


இந்த விதத்தில் க்ஷத்திரியர்கள் திராவிடர்களாக மாறியது
பரசுராமர் கலத்தில்தான் ஏற்பட்டது என்று சொல்லும் வண்ணம்
மஹாபாரதத்தில் ஓரிடம் உள்ளது.
பரசுராமர் க்ஷத்திரிய வம்சத்தைப் பூண்டோடு ஒழிக்கிறேன்
என்று 21 முறை க்ஷத்திரியர்களை அழித்தார்.
அவரிடமிருந்து தப்ப விரும்பிய க்ஷத்திரிய மக்கள்,
தாங்கள் க்ஷத்திர்யர்கள் என்று மறைக்க விரும்பி,
தங்கள் க்ஷத்திரியத் தொழிலைச் செய்யவில்லை.
இவ்வாறு ஆறு தலைமுறை சென்றவுடன் அவர்கள்
திராவிடர்கள் ஆனார்கள்.

பரசுராமருக்குப் பயந்து க்ஷத்திரியத்தை விட்டவர்கள்
திராவிடன், அபிரன், புண்டரன், சவரன் என்பவர்கள் என்கிறது
மஹாபாரதம் 14-29
மேலும் இரண்டு இடங்களில்,
ப்ராம்மணர்கள் கோபத்துக்குப் பயந்து திராவிடர்கள் உட்பட
கலிங்கர்கள்,
புளிந்தர்கள்,
உசீனரர்கள்,
கோலிசர்பர்கள்,
மஹிஷகர்கள்,
மேகலர்கள்,
லதர்கள்,
பௌண்டரர்கள்,
கொன்வாஸிரர்கள்,
சௌண்டிகர்கள்,
தரதரர்கள்,
தர்வர்கள்,
சௌரர்கள்,
ஸவரர்கள்,
வர்வரர்கள்,
கிராடர்கள்,
யவனர்கள்,
போன்றோர் க்ஷத்திரிய தர்மத்தை விட்டு சூத்திரர்கள் போலானார்கள்
என்கிறது மஹாபாரதம் 13 33 & 35.

இங்கு பிராம்மணர்கள் என்றது, பிராம்மணரான பரசுராமரை.
இவரது தந்தையான ஜமதக்னியை,
ஹேஹய அரசனான கார்த்தவீர்யார்ஜுனன் என்பவன் கொன்று விடவே,
க்ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழித்து விடுவதாக சபதம் எடுக்கிறார்.  
அதன்படி கார்த்த வீர்யார்ஜுனனையும்,
அவனுக்கு உதவிய மன்னர்களையும் கொன்றார்.
மொத்தம் 21 முறை பல அரச பரம்பரைகளையும் கொன்று
அவர்கள் நாடுகளைக் கைப்பற்றினார்.
அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகத்தையும் செய்து,
தன்னை எதிப்பவர்கள் யாரும் இல்லாமல் செய்தார்.

பரசுராமர், கார்த்தவீரியார்ஜுனனது 1000 கைகளை வெட்டுதல்.


அவருக்குப் பயந்து தலையைக் காட்டாமல்
மறைந்து வாழ்ந்த க்ஷத்திரியர்கள்
நாளடைவில் திராவிடர்கள் ஆனார்கள்.

அவர்கள் சூத்திர தர்மத்தைக் கொண்டவர்கள் ஆனார்கள்
என்னும் இந்த விவரத்தை,
பிராம்மணர்கள், திராவிடர்களை அடக்கு முறை செய்ததாகவும்
அந்தத் திராவிடர்கள் சூத்திரர்கள் ஆவார்கள் என்றும்,
இதனால், பிராம்மணர்கள் சூத்திரர்களை அடக்கிக் கொடுமைப்படுத்தியதாகவும்,
ஆங்கிலேய மிஷனரிகள் ஒரு சித்தாந்தத்தைப் பரப்பினார்கள்.
இதன் மூலத்தை ஆராயாமல்,
கிளிப்பிள்ளை போல எடுத்துக் கொண்டார்கள் தமிழ் பேசும் திராவிடவாதிகள்.


ஆராயும் மனப்பான்மை இல்லாத இந்தத் திராவிடவாதிகள்,
மேலே சொல்லப்பட்டவர்களில் யாருமே
தமிழ் நாட்டுப் பகுதியிலிருந்தவர்கள் இல்லை என்பதை அறியவில்லை.
தமிழ் நாட்டுச் சரித்திரத்திலும், 
தமிழ் மன்னர்கள் யாரும் பரசுராமருடன் சண்டை போட்டதாக இல்லை. 
மாறாக சேர நாட்டைக் கடலிலிருந்து மீட்டார்
என்று புராணங்களில் செய்திகள் உள்ளன.

பரசுராமர் அழித்ததாகச் சொல்லப்படும் அரசர்கள்,
வட இந்தியப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
அவரது முக்கிய எதிரியான கார்த்த வீர்யார்ஜுனன்
விந்திய மலைப் பகுதியை ஆண்டு வந்தான்.
அவனது தலைநகரமான மஹிஷமதி, நர்மதை ஆற்றங்கரையில் இருந்தது.




அதற்கு மேற்குப் புறத்தில் சூர்ப்பாரகத்தில்
பரசுராமர் தனது கடைசி காலத்தைக் கழித்தார்.

அந்த காலக் கட்டத்தில், சூர்ப்பாரகம் தொடங்கி, கேரளம் வரை
அரபிக் கடலிலிருந்து நிலத்தை மீட்டு
அங்கு ஸரஸ்வதி பிராம்மணர்களைக் குடி அமர்த்தினார்.
அப்படி அங்கு உண்டான ஒரு பகுதி
பஞ்சத் திராவிடத்தில் ஒன்றான திராவிடம்.


பரசுராமரால் பயந்து க்ஷத்திரியத்தை விட்ட திராவிடர்கள்
ஒருக்கால், அந்தப் பகுதியில் முதலில் வாழ்ந்தவர்களா?
அதனால் அந்தப் பகுதிக்குத் திராவிடம் என்ற பெயர் வந்ததா?
ஏனெனில் அந்தப் பகுதி
கார்த்த வீர்யார்ஜுனனது அரசுக்குத் தெற்கெல்லையில் இருக்கிறதே?
இந்தக் கேள்விகளையும் ஆராய்வோம்.

8 கருத்துகள்:

  1. good article.. but there is some error in considering today's kerala as cheranadu..

    Kerala is always referred as malayala naadu.. chera region is b/w madukkarai near kulithalai and vellimalai in coimbatore region..

    During british period, the travancore kings, in order to get recognized as a princely state, modified history and projected them as chera hereditary..

    kerala is always referred as kairalam, and malainaadu..

    i can give you more details regarding this, from tamil literature..

    பதிலளிநீக்கு
  2. Thanks for the info. Please give the details you have in Tamil literature.

    Until now we have only PathiRRup paththu as the oldest book detailing the Chera kings. The old commentary to them contains a lot of info on additional stories.

    The olden areas as told in PathiRRup paththu have stretched until the Arabian sea. In Seguttuvan's period it spilled over to Lakshadweep. The Uthiyan Cheralathan territory as told in Purananuru song stretched from Bay of Bengal to Arabian sea. All these periods go beyond 2000 years.

    Parasura period (The recovered territories then were called as Parasurama kshethram) was before 7000 years. Compared to them Travancore kings came very recently.

    The name Malayala nadu is due to the Malaya range. That range existed in that name when the land forms in the Indian ocean existed as "shaka dweepa" before it became thennan desam.

    The west and south west coast regions of Kerala were not occupied until the 2nd deluge when the Pandyans shifted their capital to kapatapuram. The Kollam - kumari existed as a unit (told by adiyaarkku nallar in silappadhikara commentary)That deluge was before 7000 years. almost at the same period parasurama existed. Perhaps from North of Kollam to Sopora (Surparka) in Maharashtra, the sunken west coast was exposed. It is along that coast Gokarna, Tulu, konkan and dravida too were re establsihed.

    Any way I would like to take a look at your tamil sources.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா2 மே, 2011 அன்று 1:56 PM

    Jayashree mam,Your work is commendable.I am wonder how much deep u have studied all theses vedas,upanishads,jodhidam,tamil ilakkiyam..amazing...Keep on doing this.How british and selfish tamilnadu politicians cheated us.Still students are taught up with Aryan invasion.Internet is tht only tool for un biased news,information..

    பதிலளிநீக்கு
  4. //பெயரில்லா சொன்னது…

    Jayashree mam,Your work is commendable..//

    Thanks.

    பதிலளிநீக்கு
  5. Wow, Amazing Jayasree Mam,

    It takes long time for us to even read your articles, I wonder how much time you must have spent in researching and writing such extra ordinarily informative articles. Wonderful.

    Some years ago I had read Dr. B.R. Ambedkar's writings on varnas. I think he had written about Purusha Suktham.

    He had blamed the brahmins in creating Purusha Suktham and deliberately downgrading some people as sudras and denying such people the right to wear poonal or doing homas, pujas etc as other varnas. He had also put forth other such arguments against brahmins vis-a-vis sudras.

    Your interpretations on sudras differ from his interpretations.

    In my opinion the dravidavadis must have taken their inspiration from Ambedkar's writings as also from other such anti brahmin writers.

    Bala

    பதிலளிநீக்கு
  6. //ஆனால் அதுவரை நம் மக்கள்
    வர்ணங்களின் பெயரால் மட்டுமே தங்களை இனம் காட்டிக் கொண்டிருந்தனர்./

    அடுத்த காமடி

    பதிலளிநீக்கு
  7. //பிராம்மணர்கள் சூத்திரர்களை அடக்கிக் கொடுமைப்படுத்தியதாகவும்,
    ஆங்கிலேய மிஷனரிகள் ஒரு சித்தாந்தத்தைப் பரப்பினார்கள்.//

    உண்மையைத்தானே சொல்லியிருக்காங்க

    பதிலளிநீக்கு
  8. இது வடுக காமடி காதில் நன்றாக பூ சுற்றுதல் கட்டுரை

    பதிலளிநீக்கு