வெள்ளி, 26 அக்டோபர், 2012

112. ட்ரூயிட் என்னும் தானவர்களது இந்தோனேசியத் தொடர்பு -1


புராணங்கள், இதிஹாசங்கள் உள்ளிட்ட பல பாரத நூல்களிலும், தானவர்கள், தைத்தியர்கள் என்னும் இருவிதமான மக்கள் பெயர்கள் அடிக்கடி வருகின்றன. இவர்களை அசுரர்கள் என்று இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. அசுரர்களும் மனிதர்களே. ஆனால் கருணை இல்லாதவர்களாகவும், பிறரைத் துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி அடையும் குரூர மனம் உடையவர்களாகவும் இருப்பவர்கள் அசுரர்கள் என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்து கூறுகிறதென்று 21 ஆம் கட்டுரையில் கண்டோம். அப்படிப்பட்டவர்களாக தானவர்களும், தைத்தியர்களும் இருந்தனர் என்பதால் அவர்கள் அசுரர்கள் என்றழைக்கப்பட்டனர். தானவர்கள், தைத்தியர்கள் என்ற பெயர்க் காரணங்கள், அவர்களது தாய் வழிப் பரம்பரையால் ஏற்பட்டது. தானுவுக்குப் பிறந்தவர்கள் தானவர்கள், திதிக்குப் பிறந்தவர்கள் தைத்தியர்கள். தானுவும், திதியும் சகோதரிகள். கஸ்யப முனிவரை மணந்தவர்கள்.


இப்படிச் சொல்லப்பட்ட கதைகளின் உட்பொருள் இன்றைய மரபணு விஞ்ஞானத்தால் புரிபடுகிறது. கஸ்யபர் என்பவர் பிரஜாபதி என்று, எல்லா உயிர்களது உற்பத்திக்கும் தந்தையாக ஆங்காங்கு சொல்லப்படுகிறார். மண், செடிகொடிகள், மிருகங்கள், மனிதர்கள் என்று எல்லா உயிரினங்களது உற்பத்திக்கும் காரணத் தந்தையாக கஸ்யபர் சொல்லப்படுவது, ஒரு அரிய விஞ்ஞான உண்மையைக் கதை போலச்  சொல்வதேயாகும். ஏனெனில் கஸ்யப என்றால் மீன் என்று ஒரு பொருள் உண்டு. ஆமை என்றும் ஒரு பொருள் உண்டு. ஒருவகை மானுக்கும் கஸ்யப என்ற பெயர் உண்டு. கஸ்யப என்றால், சூரியனை முன்னிட்டு, சூரியனுடன் தொடர்தல் என்றும் ஒரு பொருள் உண்டு.


மீன் என்பதால், மீனில் ஆரம்பிக்கும், உயிரினப் பரிமாண வளர்ச்சியைக் கஸ்யபர் குறிக்கிறார். இதனால், கஸ்யபரிடமிருந்து, மீனும், பறவையும், மிருகங்களும் உண்டாயின என்று சொல்லும் புராணக் கதைகள், பரிணாம வளர்ச்சியின் காரணாமாக உயிர்கள் பலவிதமாகப் பிறக்கின்றன என்னும் விஞ்ஞானக் கருத்தைக் கூறுவதைக் காணலாம்.


இந்தக் கருத்தை ராமனிடம் ஜடாயு தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் இடத்தில் கூறுகிறான். (வால்மீகி ராமாயணம் - ஆரண்ய காண்டம் 14).


பறவை உருவில் இருக்கும் ஜடாயுவைப் பார்த்து ராமன் அதிசயப்படுகிறான். அப்பொழுது, தன்னைப் போன்றவர்களது பிறப்பை ஜடாயு விவரிக்கிறான். கஸ்யபருக்கு, தானு (DANU), திதி (DITI) போலவே தாம்ரா (TAAMRA) என்னும் மனைவியும் இருந்தாள். அவளுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளும் பறவைகளாகும். அவை ஒவ்வொன்றும் பலப்பல பறவையினங்களை உருவாக்குகின்றன. அவர்களுள் ஒருத்தியான ஷ்யேனீ (SHYENII) வழியில் தான் பிறந்ததாக ஜடாயு கூறுகிறான்.


அத்துடன் பிற உயிரினங்களது தோற்றத்தையும் ஜடாயு விளக்குவது பரிணாம விஞ்ஞானத்துக்கே அடிகோலுவதாகும். உதாரணமாக, கஸ்யருக்கும், க்ரோதவஷா (KRODHAVASHA) என்னும் மனைவிக்கும் பிறந்தவை மான் முதலான மிருகங்கள் என்கிறான்.


கஸ்யபருக்கும் பத்ரமந்தா (BHADRAMANDHA) என்னும் மனைவிக்கும் ஐராவதி என்னும் பெண் பிறந்தாள். அவள் வழியில் ஐராவதம் என்னும் யானையும், பிற வகையான யானைகளும் உருவாயின. இப்படியே பலவிதமான உயிரினங்களுக்கு ஒரு மூலக் குறியீட்டை ஜடாயு சொல்வதைப் பார்க்கும் போது, இன்றைய விஞ்ஞானம் கூறுவதை விட அதிக விவரங்களை வேத மத நூல்கள் கூறுகின்றன என்று தெரிகிறது.


கஸ்யப என்றால் ஆமை என்றும் ஒரு பொருள் உண்டு என்பதால், கூர்ம அவதாரத்தில் சொல்லப்படும் கருத்துக்களை கஸ்யபர் குறித்த கருத்துக்களில் பார்க்கலாம். இந்த உலகம் தொடர்ந்து கடையப்பட்டாலும், நிலையாக நின்று, உயிர்கள் தழைக்க உதவுவதால் கஸ்யபரைப் பற்றிச் சொல்லும் இடங்களில், உயிர்கள் தோற்றத்தையும், மக்கள் பெருக்கத்தையும் காணலாம்.


சூரியனை ஒட்டி, அல்லது முன்னிட்டு, கஸ்யப என்னும் பெயர் அமைவதால், எங்கே சூரியனது வெப்பம் தேவையான அளவு விழுகிறதோ, அங்கு கஸ்யபருக்குக் குழந்தைகள் பிறக்கும் என்பதைப் புராணக் கதைகளில் காணலாம். உதாரணமாக, பூமியின் சாய்மான வேறுபாட்டால் பல ஆயிரம் வருடங்கள் பூமியின் வடக்கு பகுதியும், அதைத் தொடர்ந்து பல ஆயிரம் வருடங்கள் பூமியின் தென்பகுதியும், தொடர்ந்து வெயிலையும், அதனால் உயிர்ப் பெருக்கத்துக்குச் சாதகமான சூழ்நிலையையும் பெறும் என்பதை  (மிலன்கோவிட்ச் தியரி) 35 ஆவது கட்டுரையில் கண்டோம்.



http://apollo.lsc.vsc.edu/classes/met130/notes/chapter16/tilt.html

 

அவ்வாறான சாதகமான சூழ்நிலையைக் கடந்த லக்ஷம் வருடங்களில் குறைந்தது 2 முறையாவது பூமியின் தென் மண்டலம் பெற்றது. அதுவும் நாமிருக்கும் பாரத நாட்டின் தென்பகுதியிலுள்ள கடலில் இத்தகைய சூழ்நிலை இருந்திருக்கிறது.


அங்கு கஸ்யபருக்கும் தக்ஷனது 13 பெண்களுக்கும் பிறந்த மக்கள் பல்கிப் பெருகியிருக்கின்றனர். இங்கு 13 பெண்கள் என்று சொல்வது, மரபணுக் குறியீட்டில் பெண் வழியாகச் செல்லும் மைட்டோகாண்ட்ரியல் டி.என். வின் வகைகள் ஆகும் என்பதை மரபணு விஞ்ஞானம் மூலம் நாம் அறிகிறோம். அவற்றுள் ஒரு வகை திதி, அவளது மரபணுக் குறியீட்டைக் கொண்டவர்கள் தைத்தியர்கள் எனப்பட்டார்கள். நரசிம்ம அவதாரக் கதையில் வரும் ஹிரண்யகசிபுவும், அவன் மகன் பிரஹல்லாதனும், அவர்கள் பரம்பரையில் வந்த மஹாபலியும், பாணாசுரனும், ராவணனது தாயும், தைத்தியர்களே. அவர்கள் மட்டுமல்ல, மயன் என்னும் இனமும் திதியின் வழி வந்த தைத்தியர்களே என்று ராமாயணம் கூறுகிறது (உத்தர காண்டம், அத்தியாயம் 12).


மற்றொரு வகை தானு, அவளது குறியீட்டைக் கொண்டவர்கள் தானவர்கள். தானவத் தாய்க்குப் பிறந்தவன் த்ருஹ்யு. யயாதியின் மகனான அவனும், அவனைச் சேர்ந்தவர்களும் ட்ரூயிட் என்றழைக்கப்பட்டார்கள் என்பதை முந்தின கட்டுரைகளில் கண்டோம்.


பாரதத்தைச் சேர்ந்த நாம், மற்றொரு வகையான அதிதியின் (ADITI) குறியீட்டைப் பெற்ற விவஸ்வான் என்னும் ஆண் வர்க்கத்தில் வருகிறோம். விவஸ்வானின் மகன் மனு. மனுவின் வர்க்கத்தில் வரும் நாம் மானவர்கள் எனப்படுகிறோம். இந்த அடிப்படையில்தான் இனங்கள் பிரிகின்றன என்பதைக் கஸ்யபர் குறித்த விவரங்கள் தெரிவிக்கின்றன. அதையே இன்றைய விஞ்ஞானமும் கூறுகிறது. உடல் நிறத்தாலோ, அல்லது பேசும் மொழியாலோ இனங்களைப் பிரித்தறிவதில்லை.


மஹாபாரதம் நடந்த 5000 ஆண்டுகளுக்கு முன் வரையில் தானவர்களும், தைத்தியர்களும், தென் கடல் பகுதிகளில் இருந்திருக்கிறார்கள். அந்த இடம் எது என்று கண்டுபிடிக்க நமக்குக் கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டு ஹிரண்யபுரம் என்னும் தானவ நகரம் என்பதாகும், இந்த இடத்தைப் பற்றி நாரதர், மாதலிக்குச் சொல்வதாக மஹாபாரதத்தில் விவரங்கள் வருகின்றன. (உத்யோக பர்வம் 98 முதல் 103 வரை).


மாதலி என்பவன் இந்திரனது தேரோட்டியாவான். இதே பெயருடையவனே ராவண யுத்தத்தில் ராமனுக்குத் தேரோட்டினான். இதே பெயருள்ளவனே, மஹாபாரதக் காலக் கட்டத்தில் இந்திரனது கட்டளைப் படி அர்ஜுனனுக்குத் தேர் விமானம் ஓட்டினான். ஒரே பெயரில் பல்வேறு காலக் கட்டத்தில் ஒரே தொழிலைச் செய்பவன் வருவதால் இந்தப் பெயர் குடிப் பெயராக இருக்க வேண்டும்.


இவர்களுள் இந்திரனது தேரோட்டியாக இருந்த மாதலி தனது மகளான குணகேசி என்பவளுக்கு மாப்பிள்ளை தேடி அலைந்து கொண்டிருந்தான். அவனை நாரதர் கண்டார். விவரத்தை அறிந்து கொண்ட அவர், தான் வருணன் இருக்கும் கடல் பகுதிக்குச் செல்வதாகவும், அங்கு மாப்பிள்ளை தேடலாம் என்றும் சொல்கிறார். அவ்வாறு அவர் மாதலியை அழைத்துச் செல்லும் இடங்களில் தானவ நகரமான ஹிரண்யபுரம் வருகிறது.

அவர் செல்லும் இடங்கள் பூமியின் தென் பகுதியில் ஆரம்பித்து, தென் துருவம் வரை செல்கின்றன. இதே போன்ற வர்ணனையை வால்மீகி ராமாயணத்திலும், சீதையைத் தேடிச் செல்லும் வானரர்களுக்குச் சுக்ரீவன் கூறுகிறான். இந்த இரு தென் பகுதி வர்ணனைகளையும் ஒப்பு நோக்கினால் தானவர்கள் வாழ்ந்த இடத்தை அறிய முடிகிறது.


முதலில் மஹாபாரதத்தில் நாரதர் தரும் வழித்தடத்தைக் காணலாம்.

1.   வருணன் என்னும் கடலில் புஷ்கரம் என்னும் இடம்

2.   அதற்கப்பால் பாதாளம்.

3.   அதற்கப்பால் ஹிரண்யபுரம்.

4.   அதற்கப்பால் பறவைகள் இருப்பிடம்.

5.   அதற்கப்பால் பசுக்கள் இருப்பிடம்.

6.   அதற்கப்பால் நாகர்கள் வாழும் போகவதி.

போகவதியில் வாழ்ந்த ஆர்யகன் என்னும் நாகனது பேரனான சுமுகனைத் தனது மாப்பிள்ளையாக மாதலி ஏற்கிறான்.

 

போகவதி என்பது உலகின் தென் கோடியில் உள்ளது என்பதால், நாரதர் செல்லும் இந்த வழித்தடம் பூமத்திய ரேகைக்குத் தென்பகுதி என்று தெரிகிறது. இந்த வழித்தடம், இன்றைய இந்தியாவுக்குத் தெற்கிலுள்ள இந்தியப் பெருங்கடலில்தான் உள்ளது என்பதை நிலைநாட்ட, வால்மீகி ராமாயணத்தில் சீதையைத் தேடிச் செல்லும் வானரர்களுக்குச் சுக்ரீவன்  சொல்லும் வழித்தடத்தை ஆராய்வோம். சுக்ரீவன் சொல்லும் வழித்தடமும் போகவதிக்குச் செல்கிறது. அதை அடைவதற்கு முன் உள்ள மலைத்தடங்களை முன்பே 41 ஆவது கட்டுரையில் கண்டோம். ஒப்பீட்டுக்காக மீண்டும் அவற்றைக் காண்போம்.


தென்பகுதி நோக்கிச் செல்லும் அந்த வழித்தடத்தில் காவேரி நதி முதல் ஆரம்பிப்போம். (வா-ராமா – 4 – 41).

1.   காவேரி ஆறு .

2.   அகஸ்தியர் வாழ்ந்த மலய மலை (இது குற்றாலமாக இருக்கலாம். விவரங்கள் வேறொரு இடத்தில்)

3.   தாமிரபரணி ஆறு.

4.   பாண்டியன் தலை நகரமான கவாடம்

5.   தென் கடலும், மஹேந்திர மலையும்.

6.   மஹேந்திர மலையின் தாழ்வரையில் உள்ள லங்கா. (ராவணன் இருப்பிடம்)

7.   அங்கிருந்து 100 யோஜனை தொலைவில் புஷ்பிதக மலை.

8.   அதற்கு 14 யோஜனை தொலைவில் சூர்யவான் மலை.

9.   அதற்கப்பால் வைடூர்ய மலை.

10. அதற்கப்பால் அகஸ்தியர் வாழும் குஞ்சர மலை. (குஞ்சரம் என்றால் யானை)

11. அதற்கப்பால் போகவதி.

12. அதற்கப்பால் ரிஷப மலை.

13. அதற்கப்பால் யமன் இருப்பிடம்.

போகவதியை அடைவதற்கு மிகவும் முன்பே ஹிரண்யபுரமும், அதற்கு முன்பே பாதாளமும் நாரதர் வர்ணனையில் வந்து விடுகின்றன.

இன்றைய தென் இந்தியப் பகுதியிலிருந்து பார்க்கும்போது, லங்கையைத் தாண்டியவுடன் நாரதர் வர்ணனையில் புஷ்கரமும், சுக்ரீவன் வர்ணனையில் அதற்கு இணையாகப் புஷ்பித மலையும் வந்து விடுகின்றன. இவற்றை ஆராய்ந்து ஹிரண்யபுரம் இருந்த இடத்தை அடையாளம் காண்போம்.


வருணன் என்னும் கடலை நோக்கிச் செல்லும்போது நாரதர் காட்டும் இடங்களது விவரம் பின்வருமாறு:- (மஹாபாரதம் உத்யோக பர்வம் 98 முதல்  வரை)

1)   வருணனாகிய கடலில் 'புஷ்கரம்' என்னும் ஒரு அமைப்பு இருக்கிறது. அதை வருணனது மகன் என்கிறார் நாரதர். தாமரை இலையின் கண் போல அது இருந்தது. (புஷ்கர் என்றாலே நீலத்தாமரை மலர் என்று பொருள். கடலின் நிறம் நீலமானதால், கடலில் இருந்த குளத்தை புஷ்கரம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதே பெயரால், நிலத்தில் தோண்டப்பட்ட குளங்களையும்அவை நீல நிறமாக இல்லையென்றாலும்புஷ்கரம், புஷ்கரிணி என்றழைக்கும் வழக்கம் வந்திருக்கிறது. புஷ்கரம் என்றால் குளம், நீர், சூரியன், தாமரை என்று பல பொருள்கள் இருக்கின்றன. புஷ்கரம் என்பது பொதுவாக புண்ணிய தீர்த்தம், புண்ணிய குளம் என்ற பொருளில் வரும்.)

இங்கு ஒரு கேள்வி வருகிறது. கடலே நீரால் நிரம்பியது, அதில் ஒரு குளம் எப்படி இருக்க முடியும்? இதைப் பற்றி அறிய நாரதர் மேலும் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

நாரதர் கூறுகிறார்: சோமனது மகள் அந்தப் புஷ்கரனைக் கணவனாக வரித்தாள். இதனால் அவளுக்கு ஜ்யோத்ஸ்னகாளி என்ற பெயர் ஏற்பட்டது. அதற்கு முன்பு அவள் அதிதியின் முதல் மகனான விவஸ்வானை (சூரியன்) வரித்திருந்தாள்.

ஜ்யோத்ஸ்னா என்றால் சந்திரனது ஒளி என்று பொருள். சந்திரனது கலைகளுள் ஒன்றனுக்கு ஜ்யோத்ஸ்னா என்று பெயர். ஜ்யோத்ஸ்னகாளி என்பதில் உள்ள காளி என்றால் கருப்பு, இருட்டு, நெருப்பு, அவதி என்றெல்லாம் பல அர்த்தங்கள் இருக்கின்றன. இங்கு வெப்பத்தையும், குளுமையையும் ஒருங்கே கூறுகிறார். அது ஏன் என்று பார்த்தால், அந்த ஜ்யோத்ஸ்னகாளி அதற்கு முன்பு அதிதியின் முதல் மகனான விவஸ்வான் என்னும் சூரியனை மணந்தாள் என்று கூறுகிறார். இதனால் அது வெப்பமான ஒரு பகுதியாகவும்,  சூரியன் உச்சியில் வரும் பூமத்திய ரேகைப் பகுதியாகவும் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

அல்லது இங்கு சொல்லப்படும் புஷ்கரும், ஜ்யோத்ஸ்ன காளியும் ஒரு மலையையும், அதில் இருந்த குளத்தையும் காட்டுவதாகவும் நாம் சொல்லலாம். ஏனெனில் இதே பகுதியில்தான் சுக்ரீவன் சொல்லும் புஷ்பிதக மலையும், அதற்குத் தெற்கில் சூர்யவான் மலையும் இருந்தது.


 

சுக்ரீவனது வர்ணனையில் புஷ்பிதக மலையின் ஒரு புறம் சூரியனது கதிர்களும், மறு புறம் சந்திரனது கதிர்களும் கிறுக்குவது போல விளையாடுகின்றன என்கிறான். (வா. ராமா – 4-41- 29) இப்படி ஒரு நிகழ்வு நடக்க இயலாது. ஆனால், பூமத்திய ரேகைப் பகுதியில் ஒரு மலை இருக்குமேயானால், அதன் வட பகுதி பூமியின் வட புலத்திலும், தென் பகுதி, பூமியின் தென் புலத்திலும் இருந்தன என்று சொல்லலாம். வடபுலத்தில் வெயில் இருந்தால் தென்புலத்தில் இருட்டு என்பது இதற்கான பொதுவான வர்ணனையாகும், அதாவது வடக்கில் சூரியன் இருந்தால், தெற்கில் சந்திரன் இருப்பான் என்று கவித்துவமாகச் சொல்லலாம். இதையே சுக்க்ரீவன் அடுத்த வரியில் இந்த மலையின் உச்சியைச் சூரியனும் அரவணைப்பான், சந்திரனும் அரவணைப்பான் என்கிறான்.

புஷ்பிதக என்னும் பெயரை இந்த மலை கொண்டதனால், நல்ல வளமுடனும் பூக்கள் பூத்தும் இந்த மலை காணப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. இதையே புஷ்கரம் என்று நாரதர் சொல்லியிருக்கலாம், அல்லது இந்த மலையில் ஒரு புஷ்கரிணியும் இருந்திருக்கலாம். அதைக் கொண்டு புஷ்கர் என்று நாரதர் சொல்லியிருக்கலாம். புஷ்பிதக மலையும், புஷ்கரும் ஒன்றே என்று நாம் சொல்ல ஏதுவான வர்ணனை ஜ்யோத்ஸ்னகாளியின் இரண்டு கணவன்மார்களே.

நாரதர் சொல்லும் காலக்கட்டத்தில் அவள் சந்திரனது மகளால் வரிக்கப்பட்டாள். அதற்கு முன் அவள் சூரியனை (விவஸ்வான்) வரித்தாள் என்றால், புஷ்பிதக மலைக்கு 14 யோஜனை தெற்கில் உள்ள சூரியவான் மலையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.


இந்தப் படத்தின் நடுவில் செல்லும் சிவப்புக் கோடு பூமத்திய ரேகை ஆகும். அதையொட்டி வடக்கில் இருக்கும் கரும் புள்ளி (1 என்ற எண் குறிப்பிடுவது) புஷ்பிதக மலை. அதற்குத் தெற்கில் சிவப்புப் புள்ளியாக இருப்பது (2 என்ற எண் குறிப்பிடுவது) சூர்யவான் மலையின் இருப்பிடமாகும்.

சூரியவான் என்னும் பெயர் கொண்டதால், ஒரு சமயம் சூரியவான் மலையில் சூரியன் உச்சிக்கு வந்திருக்க வேண்டும். அதாவது சூரியவான் பகுதியில் சம பகல்- இரவு நாள் (விஷு) தரும் மத்திய ரேகை அமைந்திருக்க வேண்டும். அப்படி அமைந்திருந்தால், அதன் உச்சியை வருடத்தில் இரண்டு நாட்கள், பௌர்ணமிச் சந்திரன் கடப்பான், ஒன்று சித்திரா பௌர்ணமி, மற்றொன்று கார்த்திகைப் பௌர்ணமி! 

நாரதர் சொல்லும் புஷ்கரம் இந்துமாக் கடலில் சம பகல் இரவு நாளாமத்திய ரேகைப் பகுதியாக இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்க ராஜஸ்தானத்தில் ஆஜ்மீருக்கு அருகே உள்ள புஷ்கரம் ஒரு சான்றாக இருக்கிறது.



ராஜஸ்தானில் உள்ள புஷ்கர்.

இந்தப் புஷ்கரம், ஹிந்துக்களது முக்கிய க்ஷேத்திரங்களில் ஒன்று. இதுபடைக்கும் கடவுளான பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்து இருக்கிறது. இங்கு பிரம்மனுக்குக் கோயில் உண்டு. இங்கு வருடந்தோறும், விளையாட்டுகள்  நடைபெறுகின்றன. இன்றைய ஒலிம்பிக் விளையாட்டுகள் போல மஹாபாரத காலத்திலேயே  இங்கு வருடந்தோறும் விளையாட்டுகள் நடந்திருக்கின்றன. அப்படி நடந்த விளையாட்டைப் பாண்டவர்கள் தங்களது அஞ்ஞாத வாசத்தில் விராட நாட்டில் இருந்த போது கண்டிருக்கின்றனர்.. தானவ காலகஞ்சர்களைப் போல அங்கு விளையாட்டு வீர்ர்கள் தங்கள் திறமையைக் காட்டியிருக்கின்றனர் என்கிறது மஹாபாரதம். (.பா- 4-13) அங்கிருந்துதான் பானியோனியாவுக்கு விளையாட்டுகள் சென்றிருக்கின்றன. இன்றும் புஷ்கரில் விளையாட்டுகள் நடக்கின்றன. ஒட்டக ரேஸ் போன்ற விளையாட்டுகளும் அங்கு நடக்கின்றன. ஒலிம்பிக் விளையாட்டுகளின் முன்னோடி அது என்று தெரியாத மக்களாக நாம் இருக்கிறோம்.

 

ராஜஸ்தானிலுள்ள இந்தப் புஷ்கரத்தைப் பற்றி நாரதர் சொல்லவில்லை. இந்தப் புஷ்கரத்துக்கு ஸுப்ரபா, கனகா, ப்ராசி, நந்தா, சரஸ்வதி ஆகிய நதிகள் நீரைக் கொண்டு வருகின்றன.  நாரதர் சொல்லும் புஷ்கரத்துக்கும் இந்தப் பெயர்களுக்கும் சம்பந்தம் இல்லை. மேலும் அவர் சொல்லும் புஷ்கரம் கடலில் இருந்திருக்கிறது.


ஆனால் ஜ்யோத்ஸ்னாவுக்கும் ஆஜ்மீரிலுள்ள பிரம்ம தேவன் இருப்பிடமான புஷ்கரத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.


ஜ்யோத்ஸ்னா என்பது நான்முகப் பிரம்மனது ஒரு பெயர் அல்லது உருவம். விஷ்ணு புராணத்தில் (1-5) அவருக்கு நான்கு உருவங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. அவை, பொழுது புலரும் உதய காலம், பகல், பொழுது சாயும் சாயங்காலம், இரவு என்பன. இவற்றுள் முதல் உருவமான பொழுது புலரும் உதய காலத்துக்கு ஜ்யோத்ஸ்னா என்று பெயர். அதாவது ஜ்யோத்ஸ்னா என்பது பிரம்மனது ஒரு உருவம்!


பூமத்திய ரேகைப் பகுதியில் ஒரு மலை அல்லது புஷ்கரம் இருந்திருந்தால், கார்த்திகைப் பௌர்ணமியன்றும், சித்திரா பௌர்ணமியன்றும், சந்திரன் அதன் உச்சியைக் கடக்க, ஜ்யோத்ஸ்ன காலத்தில் (விடிகாலை) ஒரு புறம் சந்திரன் ஒளியும், மறுபுறம் பொழுது புலரும் சூரிய ஒளியும் பட்டுக் கொண்டிருக்கும்.


கார்த்திகைப் பௌர்ணமி என்பது பூமியின் தென் பகுதியுள்ளவர்களுக்கு, சித்திரா பௌர்ணமி போன்றது.

பூமியின் வட புலத்தில் உள்ளவர்களுக்கு சித்திர விஷுவுக்குப் பிறகு வரும் பௌர்ணமியான சித்திரா பௌர்ணமி விண்ணியல் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும்.


ஆனால் பூமியின் தென் புலத்தில் வாழும் மக்களுக்கு ஐப்பசி விஷுவுக்குப் பிறகு துவங்கும் கார்த்திகையில் வரும் பௌர்ணமி விண்ணியல் முக்கியத்துவம் வாய்ந்தது. தென் புலத்தில் வாழ்ந்த மக்களுக்குக் கார்த்திகைப் பௌர்ணமியை ஒட்டி வரும் காலத்தில், பகல் பொழுது வளரும். வட புலத்தில் வாழ்ந்தவர்களுக்கு சித்திரா பௌர்ணமியை ஒட்டி வரும் காலத்தில் பகல் பொழுது வளரும்.


இதனால் பூமியின் தென் புலத்தில் வாழ்ந்த மக்கள் அனுஷ்டித்த கார்த்திகைப் பௌர்ணமியும், அந்தப் பௌர்ணமி உச்சம் பெறும் புஷ்பித மலையும், அதிலிருந்த புஷ்கரமும், மறக்க இயலாத, அல்லது விடமுடியாத முக்கிய தருணங்கள் ஆகும்.


அதை அனுஷ்டித்த மக்கள், இந்தியப் பகுதிகளுக்கு வந்த பின்னும் விடாமல் அனுஷ்டித்திருக்கிறார்கள் என்பதன் சான்றே, ராஜஸ்தானிலுள்ள புஷ்கரம்.

அதுவும் பிரம்மாவுக்கான இடம். இந்தியாவில் இருக்கும் பிரம்மாவுக்கான ஒரே இடம் (கோயில்) அது.

அங்கு கார்த்திகைப் பௌர்ணமியே விசேஷ தினமாகும். கார்த்திகை வளர்பிறை ஏகாதசியில் ஆரம்பித்து, பௌர்ணமி வரை விரதம் இருந்து புஷ்கரில் குளித்து, பிரம்மாவை தரிசிப்பார்கள்.


அந்தப் பூர்வ நினைவைத் தாங்கிய மக்களாக இருந்ததால்தான், இந்தியாவின் குஜராத்தில் உள்ள பிரபாசத்தில், கார்த்திகைப் பௌர்ணமிச் சந்திரன் தொட்டுச் செல்லும் வண்ணம்  சோமநாதரைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதை ஜோதிலிங்கம் என்பார்கள்.  இந்தியாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் ஜோதி லிங்கம் அது. கடல் வெள்ளத்தில் தப்பி வந்த மக்கள் நிறுவின லிங்கம் அது. அங்கிருந்து பார்த்தால், தென் துருவம் வரை கடல் மட்டுமே தென்படும் என்று பாண ஸ்தம்பத்தில் எழுதி வைத்துள்ளார்கள் என்று  90 ஆவது கட்டுரையில் பார்த்தோமே, ஏன் அதைக் குறிப்பிட வேண்டும்?



சோமநாதர் ஆலயத்தில் இருக்கும் பாணஸ்தம்பம்.

 

ஆதியில் தென் பகுதிலிருந்த மக்கள் தாங்கள் வந்த வழியை அல்லது ஆதி இருப்பிடத்தைத் திரும்பிப் பார்க்கிறார்கள் என்பதேயே அது காட்டுகிறது.

அவர்கள் நுழைந்த வழி துவாரகை.

வந்து சேர்ந்த பகுதி இன்றைய குஜராத்தும், ராஜஸ்தானமும்.


சோமநாதபுரத்திலிருந்து, தென் துருவம் வரை எங்கும் கடல் நீரே. அதுவரை வாழ்ந்த இடங்கள் கடலுக்கடியில்!

இன்றும் அங்கு வாழும் மக்களது வருடம் கார்த்திகை மாதத்தில்தான் ஆரம்பிக்கிறது, சித்திரையில் அல்ல! வட புலத்தில் இருப்பவர்களுக்குச் சித்திரை தான் முதல் மாதம். அது போல தென்புலத்தில் இருப்பவர்களுக்குக் கார்த்திகைதான் முதல் மாதம்.


தமிழ் மக்களாகிய நாமும் கார்த்திகை தீபத்தை இன்னும் ஏற்றுகிறோம்.

அது ஒரு பழைய நினைவின் தொடர்ச்சியே! பூமத்திய ரேகைக்குத் தென்புலத்தில் வாழ்ந்த மக்களுக்குத்தான் கார்த்திகைப் பௌர்ணமி முக்கியத்துவம் உடையதாகிறது. கார்த்திகை தீபமே மிகப் பழமையான பண்டிகை என்பதை சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திகை தீபத்துக்குப் பெயர் பெற்றது  திருவண்ணாமலை.


அருண மலை என்பதே அண்ணாமலை என்றாகியிருக்கிறது. அருணன் என்றால் சூரியன். அண்ணாமலை ஒரு அணைந்த எரிமலையாகும். ஆதியில் அதன் உச்சியில் தீக்கனல் கனன்று கொண்டிருந்தது என்பார்கள்.


இது சூரியவான் மலையை ஒத்திருக்கிறது. சூரியவான் ஒரு எரிமலையாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அது இருக்கும் 90 டிகிரி மலைத் தொடரே பூமிக் குழம்புகள் பீறிட்டதால் உண்டானது. அது ஆங்காங்கே பீறிட்ட இடங்களில் எரிமலைகளாக இருக்க வேண்டும். சூரியவானுக்குத் தெற்குத் திசையில் தென்னன் தேசம் இருந்தது. அந்தத் தேசம் ஏழேழ் 49 நாடுகளாக ஆங்காங்கே பரவியிருந்தது. அங்கிருந்து பார்க்கையில் சூரியவான் மலை  வெளிவிட்ட நெருப்பு, தீபம் போலத் தெரிந்திருக்க வேண்டும். அதே மலையைத் தொட்டுக் கொண்டு கார்த்திகைப் பௌர்ணமிச் சந்திரனும் சென்றதை மக்கள் பார்த்திருக்கின்றனர். பின்னாளில் அந்த மலை கடலுக்குள் முழுகி விட்டது. 49 நாடுகளும் முழுகி விட்டன. எனினும், தென்னிந்தியப் பகுதிகளில் குடியேறிய பின்னும், பழைய நினைவில், அருண மலையை (அண்ணாமலை) அடையாளம் கண்டு அங்கு கார்த்திகை தீபத்தைக் கொண்டாடியிருக்கின்றனர்.


ஆக, நாரதர் அடையாளம் காட்டும் புஷ்கரம், இந்திய மக்களது பழைய இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறது என்றால் மிகையில்லை. இனி அவர் சொல்லும் அடுத்த விவரத்தைப் பார்த்தால், அது ஒரு பழைய இருப்பிடத்தையும், ஒரு பழைய வரலாற்றையும் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.

2)   வருணனது பகுதியில் புஷ்கரத்தைச் சொன்ன கையுடன், அதே பகுதியில் - அதாவது பூமத்திய ரேகைப் பகுதியில் வருணனது ஏரி இருந்தது என்கிறார் நாரதர். அது தீக்கொழுந்துகளால் ஆனது. அதை விஷ்ணுவின் ஒளி வீசும் சக்கரம் சூழ்ந்துள்ளது. அங்கு உலகங்களை அழித்த அம்பு ஒன்று இருக்கிறது. இதே அம்பின் பெயரால் அர்ஜுனனது அம்பும் அழைக்கப்பட்டது. (Narada to Matali :- "Behold, there, in Varuna's lake is that fire of blazing flames, and that discus of Vishnu surrounded by the lustrous splendour of mighty caloric. Behold, there lieth that knotty bow that was created for the destruction of the world. It is always protected with great vigilance by the gods, and it is from this bow that the one wielded by Arjuna hath taken its name." MB 5-98)

கடலே நீரால் ஆனது. அதில் ஒரு ஏரி இருந்தது என்றால் அது கடலில் இருந்த மலை போன்ற அமைப்புகளால் உருவாக்கப்பட்ட அல்லது சூழப்பட்ட ஒரு நீர்நிலையாக இருக்க வேண்டும். இந்த அமைப்பு பூமத்திய ரேகையை ஒட்டி இருந்தது என்பதை நாரதரது வர்ணனை கூறுவதால், இது தோபா எரிமலையால் உண்டான தோபா குளம் அல்லது ஏரி என்று சொல்லலாம்.


தோபா எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட தோபா குளம்.

http://en.wikipedia.org/wiki/Lake_Toba


இதை தானவ் தோபா (DANAU TOBA) என்று இந்தோனேசிய மொழியில் அழைக்கிறார்கள். தானவ- தோபா என்னும் ஒலியில் வரும் இந்தச் சொல், இந்த இடங்களில் தானவர்கள் வாழ்ந்ததால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

நாரதர் வர்ணனை தோபா எரிமலை வெடித்தலைக் காட்டுகிறது. திரிபுரம் அழித்த கதையை தோபாவுடன் இணைத்து விவரித்த 84 ஆவது கட்டுரையை இங்கு திரும்பிப் பார்ப்போம். மூவுலகிலும் அட்டகாசம் செய்து வந்த திரிபுர அசுரனை சிவ பெருமான் தனது அம்பினால் அழித்தார் என்பதே புராணக் கதை. இதைப் பரிபாடல் 5 ஆம் பாடலில்,

"நாக நாணா மலை வில்லாக

மூவகை ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய"

என்னும் வர்ணனையாகக் காண்கிறோம்.

மலை வில்லானது.

நாகம் என்னும் பூமிக் குழம்புகள் நாணாகின.

நெருப்பு அம்பாகியது.

பரிபாடல் தரும் இந்த வர்ணனை ஒரு எரிமலை வெடித்துச் சிதறுவதை ஒத்திருக்கிறது. இங்கு மூவகை ஆரெயில் என்பதை இரும்பு, வெள்ளி, தங்கம் என்பவற்றாலாகிய கோட்டைச் சுவர்கள் என்று புராணங்கள் உருவகிக்கின்றன. உண்மையில், எரிமலைக்கு அடியில், திரவக் குழம்புகளாக இந்தக் கனிமங்கள் இருப்பதையும், அவற்றைச் சிதறடிக்கும் வண்ணம் எரிமலை வெடிப்பதையுமே திரிபுர சம்ஹாரம் காட்டுகிறது. இதைப் படமாக கீழ்க்கண்டவாறு காட்டலாம்.

 


வெடிக்கும் எரிமலையின் தோற்றம்.

 

திரிபுர சம்ஹாரத்தில் மலையே வில்லாக, நாகமே நாணாக, நெருப்பு அம்பாக அடித்தால் எப்படி இருக்கும் என்பதை எரிமலை வெடிக்கும் காட்சியாகக் கீழ்க் கண்ட படத்தில் காணலாம்.

 

தோபா எரிமலை வெடித்தலை இவ்வாறு கதையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அந்த வெடித்தலால், அங்கு வாழ்ந்த அசுர தைத்தியர்கள், தானவர்கள் பலர் மாண்டனர் என்று புராணங்கள் கூறுகின்றன. 70,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அந்த வெடித்தலால், மனித இனம் பெரும் அழிவைச் சந்தித்தது. கஸ்யபருக்கு 13 மனைவிகள் என்றோமே, அவர்களுள் பலரும் அதாவது தாய் வழிப் பரம்பரையில் வந்த பல இன மக்களும் பூண்டோடு அழிந்து விட்டனர். மய தானவர்கள் சிலர் தப்பினர். சில தைத்திய, தானவர்கள் தப்பினர். அப்பொழுது மீந்தவர்கள்தான் இன்றைய உலகில் 7 பில்லியன் மக்களாகப் பெருகி இருக்கின்றனர்.  

இனி நாரதர் வர்ணனைக்கு வருவோம். அவர் வருண ஏரியைச் சொல்கிறார்.

அது தீக்கொழுந்துகளால் ஆனது. அதை விஷ்ணுவின் ஒளி வீசும் சக்கரம் சூழ்ந்துள்ளது. அங்கு உலகங்களை அழித்த அம்பு ஒன்று இருக்கிறது. இதே அம்பின் பெயரால் அர்ஜுனனது அம்பும் அழைக்கப்பட்டது என்கிறார்.

இங்கு அர்ஜுன்னைத் தொடர்பு படுத்துவது இன்னொரு துருப்புச் சீட்டாகும். அர்ஜுனனது அம்பு காண்டீபம் ஆகும். ஆனால் திரிபுரம் எரித்த சிவனது அம்புக்குப் பெயர் பினாகம் என்பதாகும். எனினும் சிவனது அம்புக்குப் பாசுபதம் என்றும் ஒரு பெயர் உண்டு.  12 வருட வனவாசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த அர்ஜுனனுக்குச் சிவ பெருமான், தனது பாசுபத அஸ்திரத்தை அளிக்கிறார். (-பா- 3- 40) 

இந்தப் பெயர் ஒற்றுமை மட்டுமல்லாமல், மற்றொரு ஒற்றுமையும் இருக்கிறது. மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இந்தப் பகுதிக்கு வந்து ஒன்றல்ல இரண்டு இடங்களை அழித்திருக்கிறான். அதற்கொப்பாக இந்தப் பகுதியில் இரண்டு எரிமலைகள் இருக்கின்றனஅர்ஜுன்ன் பெயரைத் தாங்கிக் கொண்டு. அவற்றைக் கொண்டு,  தானவர்களை அர்ஜுனன் அழித்த விவரத்தைப் பிறகு காண்போம்.

இங்கு வருணனது ஏரி என்று சொல்வது தோபா வெடிப்பினால் உண்டான ஏரியாக இருக்க வேண்டும். பொதுவாக வருணன் என்பதே நீர் நிரம்பிய கடலாகும், கடலுக்குள் ஏரி என்றால், இப்படிப்பட்ட ஏரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இங்கெல்லாம் தைத்தியர்கள், தானவர்கள் பூர்வத்தில் வெற்றி கொள்ளப்பட்டார்கள் என்று நாரதர் கூறுவதால், இந்த இடங்கள் தானவர்களது பூர்வ இருப்பிடங்கள் என்று தெரிகின்றன.

3)   இவற்றையடுத்து நாரதர் சொல்லும் 3 ஆவது இடம் பாதாளம் ஆகும். (.பா. 5-99) பாதாள லோகம் என்பது கற்பனை என்று நாம் நினைக்கிறோம், அல்லது பாதாளம் என்பது இந்தியாவுக்கு மறுபுறம் இருக்கும் அமெரிக்கா என்று நினைக்கிறோம். ஆனால் வருணனான கடலில் பாதாளம் என்ற ஒரு இடத்தை நாரதர் அடையாளம் காட்டுகிறார். அது நாகர்களது உலகத்தின் நடுவில் உள்ளது என்கிறார். தைத்தியர்களும், தானவர்களும் கொண்டாடுமிடம் என்கிறார். நாகர்கள் வசிக்குமிடம் என்பதால் அங்கு அங்கு பூமிக்கடியில் குகைகளும், பொந்துகளும், சுரங்கப் பாதை போன்ற அமைப்புகளும் இருக்க வேண்டும். லாவா, பூமிக் குழம்புகள் போன்றவை அங்கு ஒரு சமயம் வெளிப்பட்டிருந்தால்தான் இப்படிப்பட்ட பூமிக்கடியிலான அமைப்புகள் உண்டாகும். பூமிக்கடியில் வசிக்கத்தக்க அமைப்புகள் இருப்பதாலும், அந்த இடத்துக்குப் பாதாளம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். பாதாளம் என்றால் கீழுள்ள பகுதி என்றும், பூமியில் உள்ள ஓட்டைகள் என்றும் பொருள் உண்டு.

பாதாளத்தை மிக உயர்வாக நாரதர் பேசுகிறார். அவர் தரும் விவரங்கள் மிக முக்கியமானவை. அவர் கூறுகிறார், இந்த இடத்தில் மோதும் நீரலைகள் வெப்பத்தைத் தருகின்றன. அவற்றால் ஏற்படும் வெப்பத்தை அசுரத்தீ (அசுராக்னி) என்பார்கள்.

இங்குதான் முன்பு தேவர்கள் அசுர்ர்களை வென்று அமிர்தத்தை அடைந்து, அதை நன்கு குடித்துவிட்டு, மீதம் இருப்பதை இங்கு வைத்தார்கள் (-பா 5-99).


இங்கிருந்துதான் சந்திரன் வளர்வதும், தேய்வதும் பார்க்கப்பட்டன. இங்குதான் அதிதியின் மகனான, குதிரை முகமுடைய விஷ்ணு (ஹயக்கிரீவர்) அவ்வப்பொழுது தோன்றி, வேத மந்திரங்களைத் தந்தார்.


இங்குதான் ஐராவதம் என்னும் யானை கடலில் நீரை முகந்து வர, அதை மழையாக இந்திரன் பொழிகிறான்.


இங்கு பல உயிரினங்கள் வெயிலால் வாட்டப்பட்டு இறந்தாலும், இரவில் சந்திரன் கிரணங்கள் தொடுகையில், அமிர்தத்தை உண்டு, மீண்டும் பிழைத்து வளருகின்றன.


இங்குதான் மஹாதேவன் என்னும் சிவன் உலக நன்மைக்காக தவம் இருக்கிறான். அவனைப் போலவே பல முனிவர்களும் 'கோ' என்னும் தவத்தில் ஈடுபட்டனர். கிடைத்த இடத்தில் படுத்துறங்கி, கிடைத்த உணவை உண்டு, கிடைத்த உடையை உடுத்துவதே இந்தத் தவத்தில் மேற்கொள்ளும் விரதமாகும் என்கிறார்


இங்கிருந்த தானவர்கள் காலத்தால் பீடிக்கப்பட்டு, இந்திரனால் வளத்தை இழந்தார்கள்.


இங்குதான் சுப்ரதீகா (SUPRATIKA) என்னும் யானை இனம் உருவாகி அதிலிருந்து ஐராவதம் போன்ற யானை இனங்கள் உண்டாயின.

இங்கு கடலுக்குள் எரியும் முட்டை ஒன்று ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அது உலகம் ஆரம்பித்த காலத்திலிருந்து இருக்கிறது. அது நகரவும் இல்லை. வெடிக்கவும் இல்லை. அது எப்பொழுது பிறந்தது, அது எப்படிப்பட்டது என்று யார் பேசியும் கேட்டதில்லை. ஆனால் உலகம் முடியும் காலம் வரும்போது அதிலிருந்து பெரும் நெருப்பு வெடித்து, மூவுலகையும் எரித்து, அசையும் பொருள், அசையாப் பொருள் என்று அனைத்தையும் அழிக்கும் என்கிறார்கள் என்று மாதலியிடம் கூறுகிறார் நாரதர். (.பா- 5-99)


இந்த வர்ணனையில்தான் எத்தனை விவரங்கள் புதைந்து கிடக்கின்றன!


கடைசியாகச் சொல்லும் விவரம், தோபா எரிமலையை மட்டுமல்ல, அங்கு இன்னும் கனன்று கொண்டிருக்கும் பல எரிமலைகளையும் சுட்டிக் காட்டுகிறது. இந்தப் பகுதி இந்தோனேசியப் பகுதியாகும். பூமிக்குள் மறைந்து கிடக்கும் முட்டையைப் போல இருப்பவை எரிமலைகள். இந்தோனேசியப் பகுதியில் மட்டும் ஏறத்தாழ 130 எரிமலைகள் இன்றும் கனன்று கொண்டிருக்கின்றன. அவற்றில் எவை, என்று வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தோபா போல ஒரு எரிமலை வெடித்தால் போதும், உலகம் முழுவதுமே பேரழிவைச் சந்திக்கும். இந்தப் பகுதியின் அமைப்பைத் தெரிந்து கொண்டு நாரதர் வர்ணனைக்கு வருவோம்.



தோபா குளம் என்பதே நாரதர் வர்ணித்த வருண ஏரியாக இருக்க் வேண்டும், இதுவே தோபா எரிமலையின் இருப்பிடமாகும். இது பூமத்திய ரேகையை ஒட்டி அமைத்துள்ளது.


இந்தப் படத்தில் இந்தியா, இந்தோனேசியா, பர்மா ஆகிய இடங்களச் சுற்றி வெளிர் நிறத்தில் காட்டப்பட்டுள்ள இடங்கள், ஒரு சமயம் நிலப்பகுதிகளாக இருந்தவையே. இதன்படி இலங்கை, இந்தியாவின் நில நீட்சியாக இருந்திருக்கிறது. இந்தியாவின் மேற்குக் கடற்கரை முழுவதும் நில நீட்சிகள் இருந்திருக்கிறன. இன்றைக்கு மேற்குக் கரையோரமாக ஒரு சுவர் போல மேற்குத் தொடர்ச்சி மலை செல்கிறது. ஆனால் 5000 ஆண்டுகளுக்கு முன் அதற்கு மேற்கில், மக்கள் வாழத்தக்க நிலையில் நிலங்கள் இருந்திருக்கின்றன. இந்த அமைப்பு குஜராத் வரை செல்கிறது.


இந்தோனேசியப் பகுதிகளைப் பார்த்தால், அது ஒரு பெரும் நிலப்பரப்பாக இருந்திருக்கிறது. அதை சுந்தாலாந்து (SUNDALAND) என்று அழைக்கிறார்கள். முன்பே நாம் சாகத்தீவைப் பற்றியும், தென்னன் ஆண்ட தென்மதுரையைப் பற்றியும் ஆராய்ந்தோம். அவை சுந்தாலாந்திலிருந்து வேறுபட்டவை. ஏனெனில் இந்த சுந்தாலாந்து அசுர தானவர்களும், தைத்தியர்களும் வாழ்ந்த இடம். தென்னன் பாண்டியன் அசுரனல்லன். சாகத்தீவினர் அசுரல்லர். எனவே அவர்கள் சுந்தாலாந்து பகுதியில் வசிக்கவில்லை எனலாம்.


சுந்தாலாந்துக்கும், போகவதி, தென் மதுரைக்கும் உள்ள தொலைவை கீழ்க்காணும் படத்தில் காணலாம்.


 

16,000 ஆண்டுகளுக்கு முன்வரை சுந்தாலாந்து என்பது நிலப்பரப்பாகவே இருந்தது. எரிமலைகளது வெடிப்பாலும், கடல் நீர்மட்ட உயர்வாலும், அதன் பல பகுதிகள் நீரில் முழுகி விட்டன. இன்றைய அமைப்பு ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது. அதாவது அங்கிருந்த மக்கள் பெருமளவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இடப்பெயர்வு செய்திருப்பார்கள்.



 இந்தப் படத்தில் 16,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நில அமைப்பும், தற்சமயம் இருக்கும் அமைப்பும் காட்டப்பட்டுள்ளன. தோபா எரிமலைப் பகுதியை நக்ஷத்திரக் குறியாகக் காணலாம்.


இனி நாரதர் வர்ணனையில் வரும் கருத்துக்களைக் காண்போம்.


வருண ஏரியைப் பற்றிச் சொல்லும் நாரதர் அங்கு மோதும் கடலலைகள் வெப்பத்தை உண்டாக்குகின்றன என்றும், அதனால் ஏற்படும் வெப்பத்தை அசுர அக்னி என்றும் குறிப்பிடுகிறார்.  சுந்தாலாந்து பகுதியே பூமிக்குழம்புகளால் கனன்று கொண்டிருக்கிறது. அங்கு சிதறியுள்ள மணலும், நீரும் வெப்பத்தைக் கொண்டிருக்கும். இங்கு அசுரர்கள் என்பது பூமிக் குழம்புகளைச் சிதறடித்து அழிவைத்தரும் எரிமலைகள் ஆகும்.


அடுத்து, தேவசுர யுத்தத்தில் வெற்றி பெற்ற தேவர்கள் சாவாமையைத் தரும் அமிர்த்தை உண்டு மீதம் இருந்த்தை இங்கு வைத்தார்கள் என்கிறார். தேவாசுர யுத்தம் என்றாலே பாற்கடலைக் கடையும் சமுத்ர மந்தன் ஆகும். பூமியின் வட பகுதியை தேவர்கள் இருப்பிடம் என்றும், தென் பகுதியை அசுரர்கள் இருப்பிடம் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. வட கோடியில் சூரியன் சஞ்சரிக்கும் போது, தென் கோடியில் இருட்டாக இருக்கும். வெயிலும், இருட்டும்  இங்கு மாறி மாறி வருகின்றன. இதையே தேவர்களும், அசுரர்களும் மாறி மாறி இழுக்கும் சண்டை போல உருவகப்படுத்தப்பட்டுள்ளது.



நாரதர் வர்ணனையில் இந்தச் சண்டையின் தாக்கம் பூமத்திய ரேகைப் பகுதியில் நடந்திருக்கிறது. பூமியின் சுழற்சியாலும், பூமியின் அச்சு இடைவிடாமல் மாறிக் கொண்டே இருப்பதாலும், பூமிக் குழம்புகள் கடையப்பட்டு அவை வெளியே எரிமலைகள் வாயிலாகச் சிதறுகின்றன. அப்படி நடந்த ஒரு சிதறலான தோபா வெடிப்பில், தேவர்கள் தப்பித்து விட்டனர். அதனால் அவர்கள் சாவாமையைத் தரும் அமிர்த்த்தை உண்டவர்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். திரிபுர சம்ஹாரக் கதையிலும் தேவர்கள் பாதிக்கப்படாமை சொல்லப்படுகிறது. அதன் அர்த்தம், பூமியின் வடகோடிப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இந்த வெடித்தலால் பாதிப்பு அடையவில்லை என்பதே. அதனால் அவர்கள் அமிர்தம் உண்டவர்கள் ஆகிறார்கள்.


தோபா பகுதியில் வாழ்ந்த பல மக்களும்தானவர்கள்மடிந்து போயினர். அவர்களுள் மய தானவன் தப்பித்துக் கொள்கிறான் என்று புராணங்கள் கூறுவதால், கட்டடக் கலை அறிந்த மக்கள் எஞ்சி நின்றனர் என்று தெரிகிறது. அவர்களும் வேறு சில தானவ, தைத்தியர்களும் உயிர் தப்பினதால், மீதம் இருக்கும் அமிர்தம் இங்கு வைக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது.


இங்குதான் மஹாதேவன் என்னும் சிவ பெருமானும் தவம் இருந்தான் என்று சொல்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபுரம் எரித்தவன் சிவபெருமான் ஆவார். அதை எரித்தபோது எங்கும் சாம்பலே இருந்தன என்றும், வெண்ணிறமான அந்தச் சாம்பலை, சிவ பெருமான் அணிந்து நடனம் ஆடினார் என்று புராணங்கள் கூறுகின்றன.



எரிமலை சாம்பல்தான் வெண்ணிறமாக இருக்கும். தோபா எரிமலையின் சாம்பல் அப்படிப்பட்டதே. அதன் சாம்பல், பூனா வரை பரவியது என்பதற்குத் தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன. அதைப் பூசிக் கொண்டு சிவன் ஆடிய நடனமே தமிழ் மரபின் நடனங்களில் முதலாவதான பாண்டரங்கம் ஆகும். பாண்டரம் என்றால் வெண்மை என்று பொருள். எங்கும் அந்தச் சாம்பலே சிதறி இருந்தது என்பதைக் காட்டும் இந்த வர்ணனையில் சிவன் ஊர்துவ தாண்டவம் ஆடினார்.


ஒரு காலைத் தூக்குவது, பூமியிலிருந்து வெளிப்பட்ட எரிமலைக் குழம்பும், சாம்பலும் சென்ற திசையைக் காட்டுகிறது. (மேல் நோக்கி வீசி எறியப்பட்ட பாங்கினைக் காட்டுகிறது).


அழிவை ஏற்படும் போதெல்லாம், அங்கு சம்ஹார மூர்த்தியாக சிவன் இருப்பார். சம்ஹாரம் செய்த கையுடன் அங்கேயே சிவன் தவம் உட்கார்ந்து விட்டார்ஆக்கத்தை உண்டாக்குவதற்காக. இது நடந்த இடம் பாதாளம். பாதாளம் என்பது பூமிக்கு உள் இருப்பது. பூமிக்குள் இருக்கும் பூமிக் குழம்புகள் வெடித்துச் சிதறியதால், அழிவைக் கொடுத்த சிவன் அது நடந்த தென் புலத்தில் குடி கொண்டுவிட்டான் என்பதே நாரதர் சொல்லும் வர்ணனையில் தெரிகிறது.


தென்னாட்டுடைய சிவன் என்று சொல்லியுள்ளார்களே, எங்கே தென்னாடு?


எங்கே அந்த சிவன்?


என்று தேடிக் கொண்டிருந்தோமே,

அது அங்கே சுந்தாலாந்தில் சம்ஹாரத்தைச் செய்துவிட்டு, ஒரு புதிய அத்தியாயத்தைத் துவங்க ஆக்கத்துக்காகத் தவம் கொண்டு விட்டார்.


முன்பே சாகத்தீவைப் பற்றி ஆராயும் போது சொன்னோம், அந்தத்தீவின் தெய்வம் சிவபெருமான் என்று சஞ்சயன் கூறுகிறான் (57 ஆவது கட்டுரை). அந்தத் தீவு தென் கடலில்தான் இருந்தது என்பதையும் கண்டோம். அது சுந்தாலாந்தாக இருக்குமா என்றால், இல்லை எனபதே என் பதில். ஏனெனில் சுந்தாலாந்து காட்டும் பாதாளமும், அதைத் தொடர்ந்து வரும் ஹிரண்யபுரமும், தானவ, தைத்திய அசுர்ரகளது இருப்பிடமாகும். சிவபெருமான் அசுரர்களைக் காத்ததாகச் சரித்திரம் கிடையாது.. ஆனால் தன்னை வழிபட்ட அசுர தானவ மயனைக் காத்தார். தன்னை வழிபட்டவர்களை அழிவிலிருந்து காப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கிறார்.


சாகதீவு அசுர தானவர்கள் வாழ்ந்த இடமல்ல. 70,000 ஆண்டுகளுக்கு முன் தோபா அழிவு நடந்த பிறகு அந்த இடம் சாகத் தீவு என்று அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அசுரர்கள் அங்கு அதிக அளவில் பெருகிவிட்ட பிறகு அந்த இடத்தை விட்டு சிவ பெருமான் நீங்கி இருப்பார்.


அந்த் தென்புலச் சிவனது அருளால், பாண்டியர் குலவிளக்காக மீனாட்சி அம்மை பிறக்க, சிவபெருமானே மருமகனாக ஆனபோது, தனது ஆக்க சக்தியைப் பிரயோகித்து, அங்கு வாழ்ந்த மக்கள் பேசிய மொழியைத் திருத்தி, செந்தமிழாக்கி, மக்கள் மொழியையும், வாழ்க்கையையும், பண்பாட்டையும் வளர்த்தார். முதல் சங்கத்தில் சொல்லப்படும் அவர் பெயர் திரிபுரம் எரித்த சிவன் என்பதேயாகும். இது நடந்து 12,000 வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு முன் சாகத்தீவு என்ற பெயரில் ஓரிடம் இருந்திருக்கிறது. அதற்கு முன் திரிபுர சம்ஹாரம் நடந்திருக்கிறது. (தோபா எரிமலை)


ஆக, சிவன் தென்னாட்டில் அமர்ந்த செய்தியை நாரதர் கூற்றில் காண்கிறோம்.


அது மட்டுமல்ல, பல முனிவர்களும் 'கோ' என்னும் விரதம் பூண்டு தவமிருந்தனர் என்பதால், முனிவர்களும், ரிஷிகளும் என்றோ தோன்றி விட்டனர், தொல்காப்பியம் சொல்லும் 7 வகை மக்களுள் தாபதர்கள் என்பவர்களை நாம் இன்னும் ஆராயவில்லை. (61 ஆவது கட்டுரை). அவர்களைப் பற்றி ஆராயும் போது மேலும் சில விவரங்கள் அறிவோம், ஆனால் அடுத்த கட்டுரைகளில் தானவத் தொடர்புகளைப் பார்க்கும் போது இந்த விவரம் முக்கியத்துவம் பெறும்.


நாரதர் சொல்லும் இன்னொரு முக்கியமான விவரம், சந்திரன் தேய்வதும், வளர்வதும் இங்கிருந்துதான் பார்க்கப்பட்டன என்பதே. இது ஜோதிட சாஸ்திரம் பிறந்ததைக் காட்டுகிறது. வேத ஜோதிடம் என்பது, சந்திரனது சாரத்தின் அடிப்படையில் நாளை அடையாளம் காட்டுகிறது. அதன் அடிப்படையில்தான் பஞ்சாங்கமே உருவானது. அவனது சாரத்தில்தான் தக்ஷனது 27 பெண்கள் என்னும் நக்ஷத்திரங்களைச் சந்திரன் மணந்த கதை உருவானது. தக்ஷனால் சபிக்கப்பட்ட அவன் சிவனைத் தஞ்சமடைந்தான். அழிவைத்தரும் சிவன், அந்த அழிவின் முடிவில் ஆக்கத்தைத் தருபவன். அதனால்தான் திரிபுர சம்ஹாரம் செய்தும், தென்பகுதியில் மனித குலம் தழைக்க குடி கொண்டான். அவனே சந்திரனுக்கும் புகலிடம் கொடுத்து முடியில் சூட்டிக் கொண்டான். அப்படிப்பட்ட சிவனை சோமநாதர் என்று வழிபட்ட அந்தத் தென்புலச் சமுதாயம், குஜராத்தில் கரையேறி ஜோதிலிங்க க்ஷேத்திரத்தை அமைத்தது என்றால் ஜோதிடம் பிறந்தது தென்புலத்தில்.

மனு வந்த 13,000 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது பனியுகக் காலத்துக்கு முன்பே தென் புலத்தில் வேத ஜோதிடம் வந்து விட்டது. தக்ஷனது கதையில் அவன் தலையை இழந்து, பிறகு ஆட்டின் தலையைக் கொண்டது. ஆடு முதலாக (மேடம் முதலாக) காலச் சுற்று ஆரம்பிக்கும் ஜோதிட வழக்கையே காட்டுகிறது.


நிலமை வ்வாறு இருக்க, கிரேக்கர்கள் கொடுத்த ஜோதிட்த்தையே நாம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வது நகைப்புக்குரியது.


இதையடுத்து நாரதர் சொல்லும் மற்றொரு செய்தி இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் அங்குதான் அவ்வப்பொழுது தோன்றி வேதத்தைத் தந்தார். சிவன், ஹயக்ரீவர், வேதம், ஜோதிடம் இவையெல்லாம் உண்டானது இன்றைய பாரதத்தில் அல்ல, என்றோ அவை தென்புலத்தில் உண்டாகி விட்டன.


வேதத்தை எந்தப் பிராம்மணனும் கொடுக்கவில்லை, அதைக் கொடுத்து தெய்வம். அதுவும் குதிரை முகம் கொண்ட தெய்வம். இதன் மூலம் தெரியும் வெளிப்பாடான விவரம், குதிரைகள் தென்புலத்தில் தோன்றியிருக்கின்றன என்பதே.


இந்தியாவில் குதிரை இருந்த்தா, இல்லையா என்று ஆரியப் படையெடுப்பாளிகள் இன்னும் சச்சரவு செய்து கொண்டிருக்கிறார்களே, குதிரையின் உருவத்தில்தான் வேதமே தோன்றியிருக்கிறது. அதுவும் ஐரோப்பாவில் நிகழவில்லை. இந்துமாக் கடலில் தோன்றியுள்ளது.

அந்தத் தென்புல மக்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகள் அழிய, அழிய, அங்கிருந்து இடம் பெயர்ந்து பாரத தேசமெங்கும் பரவி, இன்றைய பாரதத்தில் வேதப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்,


இதைப் படிப்பவர்கள், பாரதத்தில் அப்பொழுது இருந்தவன் ஆதிவாசி, சூத்திரன் என்று சொல்லிக் கொண்டு அவர்களை இவர்கள் ஆதிக்கம் செய்தார்கள் என்று அவசரப்பட்டுச் சொல்ல வேண்டாம். பாரதமும், சுந்தாலாந்தும், தென்னன் பகுதிகளும் அன்று அருகருகே நில இணைப்புகளுடன் இருந்தன, அது மட்டுமல்ல, 10,000 வருடங்களுக்கு முன்னால், இந்தியாவின் பல பகுதிகளும் வசிக்க இயலாத தட்ப வெப்ப நிலையுடன் இருந்தன. கடலோரப் பகுதிகளே வசிக்கத்தக்க அளவில் இருந்தன என்பதை கிரஹாம் ஹான்காக் காட்டுகிறார். 

 


தென் புலம் துவங்கி, பாரதம் வரை எங்கெல்லாம் வசிக்க முடியுமோ அங்கெல்லாம் மக்கள் பரவியிருந்தனர். இதை மனு எவ்வாறு திராவிடேஸ்வரனான் என்பதை ஆராயும் போது மேலும் பார்ப்போம்.


வேதத்தைக் கொடுத்தவர் ஹயக்ரீவர் எனப்பட்டதால், தவத்தின் மகிமையால் முனிவர்கள் வேதத்தை அறிந்தனர் என்றாகிறது. வேதத்தைப் பெற்ற மக்களும் தென்புலத்துடன் நின்றுவிடவில்லை. ஏனெனில் சாகத்தீவுக்குச் சிவன் கடவுள் என்பதைப் போல, பத்ராஸ்வ வர்ஷத்துக்கு ஹயக்ரீவரே கடவுள் என்று சஞ்சயன் கூறினான் என்று 57 ஆவது கட்டுரையில் கண்டோம்.


பத்ராஸ்வம் என்பது இந்தியாவுக்குக் கிழக்கே உள்ளது. இங்குள்ள யமகோடி என்னும் பட்டினம், இலங்கைக்குக் கிழக்கில் 90 டிகிரி தொலைவில், 6 மணி நேரத் தொலைவில் உள்ளது என்று சூர்ய சித்தாந்தம், சிந்தாந்த சிரோமணி ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் இருந்த இடங்கள், அங்கு வாழ்ந்த மக்கள் ஆகியவற்றைப் பற்றி அன்று பாரத நாட்டினர் அறிந்திருந்தனர். (ட்ரூயிடுகளும் அறிந்திருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.).


சூரிய சித்தாந்தத்தின்படி லங்கையில் சூரிய உதயம் என்றால், சித்தாபுரத்தில் சூரிய அஸ்தமனம் ஆகும், அப்பொழுது யமகோடியில் நண்பகலாக இருக்கும், ரோமக தேசத்தில் நள்ளிரவாக இருக்கும். இதே கருத்தை சித்தாந்த சிரோமணியில் பாஸ்கரரும் தெரிவிக்கிறார். அதையொட்டி அந்த இடங்களை ஊகமாக உலகப் படத்தில் கீழே கொடுத்துள்ளேன்.



(க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும்)


இதில் சித்தாபுரம் என்பது மெக்ஸ்கோவில் மயன் இருந்த இடமாகும்.


ரோமக தேசம் என்பது லங்காவிலிருந்து 90 டிகிரி மேற்கே என்பதால் அது அட்லாண்டிக் கடலில்தான் அமைகிறது.

அது கடலுக்குள் முழுகின அட்லாண்டிஸாக இருக்கலாம்.


சுந்தாலாந்து, 90 டிகிரி மலைத் தொடரைப் போலவே பூமிக் குழம்புகள் வெடிக்கும் இடம் மேற்காணும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடலில் உள்ள அந்த இடம் ஆழ் கடல் பூமிக் குழம்புகள் வெடித்த்தனால், முழுகிய அட்லாண்டிஸாக இருக்கலாம், சூரிய சித்தாந்தம் கூறும் ரோமக தேசம் அதுவாக இருக்க வேண்டும்.


னி யமகோடியைப் பார்ப்போம். அது இருக்க்கூடிய பகுதி பசிஃபிக் பெருங்கடல் ஆகும், அங்கு ஒரு தீவுப் பகுதியை சுமார் 90 டிகிரி தொலைவில் காட்டியுள்ளேன். அது அதே தீர்க்க ரேகையில் எங்கு வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். கீழ்க் காணும் படத்தில் லங்காவையும், அதற்கு 90 டிகிரி தொலவில் செல்லும் தீர்க்க ரேகையையும் காணலாம்.


அது செல்லும் பகுதியை ஒட்டி இன்று நியூஸிலாந்து நாடு மட்டுமே இருக்கிறது.

தென் துருவத்தை ஒட்டி யமப் பட்டணம் உள்ளது.

சுக்ரீவன் வர்ணனையில் தென் துருவம் வரை வர்ணிக்கிறான்.

அதில் கடைசி இடம் யமன் இருப்பிடம்.

தென் துருவத்தை ஒட்டிய நியூஸிலாந்து யமகோடியாக இருக்கலாம்.

ஆஸ்திரேலியா பத்ராஸ்வ வர்ஷ்மாக இருக்கலாம்.  

அந்தப் பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகள் செய்தால் இதற்கு விடை கிடைக்கும்.


சஞ்சயன் காலமாக 5000 ஆண்டுகளுக்கு முன் யமகோடி இருந்துக்கிறது. அது இருக்கும் பத்ராஸ்வ வர்ஷத்துக்கு ஹயக்ரீவரே கடவுள் என்பதால், வேதம் முதன் முதலில் தோன்றின இடம் தென் துருவத்துக்கு அருகில் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இதைப் பற்றிய பிற கருத்துக்களை வேறொரு கட்டுரையில் காண்போம். .


அடுத்து இந்திரனது ஐராவதம் என்னும் யானையின் தோற்றம் தென் புலத்தில்தான் அதிலும், சுந்தாலாந்தில்தான் என்பதை நாரதர் வர்ணனையில் காண்கிறோம். அதன் பிரதிபலிப்பாக சுந்தாலாந்தைத் தொடரும் நிலப்பகுதியான பர்மாவில் இந்திரனது அடையாளத்தைக் காண்கிறோம், இந்திரனது யானை வெண்ணிறமானது. அப்படிப்பட்ட யானைகள் பர்மா காடுகளில்தான் இருக்கின்றன. ஐராவதி என்னும் நதி அங்குதான் பாய்கிறது. பர்மாவின் பழைய பெயர் இந்திரத்வீபம் என்பதே.


இந்தப் பெயர்கள், கலாசாரம் ஆகியவை இந்தியர்கள் அங்கு சென்று புகுத்தினது என்பது கடந்த 2000 வருடங்களுக்குள் தான் நடந்திருக்கிறது. ஆனால் அதற்கும் முன்பே அங்கே அந்தப் பெயர்கள் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் சூரியனது சாரத்துக்கு ஏற்ப பனியுகங்களும், அழிவும் ஏற்பட்ட போது, மக்கள் கூட்டம் தெற்கிலிருந்து வடக்குக்குப் படிப்படியாக நகர்ந்திருக்கிறது. அப்படிச் சென்ற ஒரு வழித்தடம், யமகோடி (?) சுந்தாலாந்துபர்மாஇமயமலைப் பகுதிஅதைச் சுற்றிக் கொண்டு சைபீரியா என்று சென்றிருக்கிறது. வடபுலத்துத் தேவர்கள் சென்ற வழித்தடம் இதுவாக இருக்க வேண்டும்.


ஏனெனில் இந்திரன் என்பவன் தென்புலத்திலும் சொல்லப்படுகிறான். தென்புலத்தில் ஒளியும், வெப்பமும், வட புலத்தில் பனியுகமும், குளிரும் இருந்த காலத்தில், தெற்கில் மனித குலம் தழைத்தது. அப்பொழுது அங்கு இந்திரன் இருந்தான் என்பது மரபு. அவன் போகவதியில் இருந்திருக்கிறான். அதனால் அவனைப் போகி என்றும் அழைத்திருக்கின்றனர். இதன் காலக் கட்டங்களை மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. யார் எங்கு இருந்தார்கள் என்பதை வேத மதப் புராண இதிஹாசங்கள் தெரிவிக்கின்றன.


அவை தெரிவிக்கும் செய்திகள் அடிப்ப்டையில் பாதாளம் என்பதை சுந்தாலாந்து பகுதியான இந்தோனேசியாவில் பார்த்தோம், அங்கு இன்னும் பாற்கடல் கடையப்பட்டுக் கொண்டிருக்கிறது.


அதே இடத்தில் தானவர்கள் வசித்த ஹிரண்யபுரம் இருந்தது. அதைப் பற்றி நாரதர் கூறுவதை அடுத்த கட்டுரையில் காண்போம்,