செவ்வாய், 1 மே, 2012

வருடப்பிறப்பு சித்திரையில்தான் - என்னும் எனது உரை.


 

மூவர் முதலிகள் முற்றம் என்னும் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த "சித்திரைச் சிறப்பு விழா" ஏப்ரல் 21 ஆம் தேதி அன்று நடந்தேறியது. அவ்வமயம், 'தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் சித்திரையே" என்னும் புத்தகமும், குறுந்தகடும் வெளியிடப்பட்டன. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னரே இந்த அமைப்பினர், சித்திரை அல்லது தை, எதுவாயினும், அதுவே வருடம் பிறக்கும் மாதமாயின், தகுந்த ஆதாரங்களுடன் கட்டுரையாக்கி அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். நானும் ஒரு கட்டுரை அனுப்பியிருந்தேன். அது உள்ளிட்ட சுமார் 20 கட்டுரைகளை ஒரு புத்தக வடிவில் இந்த விழாவில் வெளியிட்டனர். இதன் முக்கிய அம்சமே அனுப்பப்பட்ட கட்டுரைகள் அனைத்துமே சித்திரையே வருடப் பிறப்பு என்று பறைசாற்றின என்பதே. கருணாநிதி உள்ளிட்ட 33 தை ஆதரவாளர்களுக்கு கட்டுரைகள் அனுப்புமாறு கேட்டுக் கொண்டும், அவர்கள் யாரும் தையை நிரூபித்துக் கட்டுரை அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அந்த விழாவில் நான் ஆற்றிய உரையை கீழே கொடுத்துள்ளேன். இதன் முடிவில், நான் அனுப்பிய கட்டுரையையும் அளித்துள்ளேன்.




"சித்திரைச் சிறப்பு விழாவில்" திருப்பனந்தாள் தம்பிரான் ஸ்வாமிகள் "தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் சித்திரையே" என்னும் நூலை வெளியிட, ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் பெற்றுக் கொள்கிறார். அருகில் ஜெயஸ்ரீ சாரநாதன், பேராசிரியர் சாமி தியாகராஜன், மற்றும் கல்வெட்டாய்வாளர் திரு எஸ் ராமச்சந்திரன் அவர்கள். தினமலர் செய்தி.



உரை:-


சித்திரை முதல் நாளே வருடப்பிறப்பென்றால், சங்க நூல்களில் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று ஒரு சாரார் கேட்கிறார்கள். சங்க நூல்களில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, சித்திரைக்கு அப்படி என்ன முக்கியத்துவம்? வருடப் பிறப்பென்பது தையிலும் இருக்கலாமல்லவா என்று இன்னொரு சாரார் கேட்கின்றனர். இந்த இரு வகையினருக்கும் இங்கு பதிலளிக்க விரும்புகிறேன்.


சிலப்பதிகாரம் ஒரு சிறந்த இலக்கியம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அதில் ஒரு விவரம் வருகிறது. கண்ணகிக்குச் சிலை வடிக்க வேண்டி, கல் எடுக்க இமயமலைக்குச் செல்ல முடிவு செய்கிறான், சேரன் செங்குட்டுவன். அப்பொழுது அது குறித்து ஒரு ஆலோசனை செய்கிறான். தனது ஆசான், பெருங்கணி, அமைச்சர், தானைத் தலைவர் ஆகியோருடன் ஆலோசனை செய்கையில் பெருங்கணி தன் கருத்தைக் கூறுகிறார். இன்றைக்கு ஜோதிடர் என்கிறோமே அவரை அந்த நாளில் பெருங்கணி என்று அழைத்தார்கள். வடதிசைக்குப் பயணம் செல்ல நல்ல நேரம் அது என்று அவர் அரசனிடம் கூறுகிறார். இதைப் பற்றிச் சொல்லும் இளங்கோவடிகள், 'ஐந்து கேள்வியும் அமைந்தோன்' பெருங்கணி என்கிறார். அவை என்ன ஐந்து கேள்விகள்? அவை திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் ஐந்து அங்கங்கள் ஆகும். இந்த விவரத்தை உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.



உரையாசிரியர் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாது, ஐந்து கேள்விகள் என்று இளங்கோவடிகள் சொன்னது வேறு ஏதேனுமாவது இருக்கலாமே என்று கேட்கலாம். அவை வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்று சொல்லும் வண்ணம்,, அடுத்து இளங்கோவடிகள் கூறுகிறார், 'முழுத்தம் ஈங்கிது முன்னிய திசை மேல்" – என்கிறார். முழுத்தம் என்றால் முஹூர்த்தம் என்று பொருள். வடதிசைக்குச் செல்ல நல்ல முகூர்த்தம் இதுவே என்கிறார் பெருங்கணி என்று இளங்கோவடிகள் எழுதியுள்ளார். முகூர்த்தம் என்பதை ஐந்து கேள்விகளான பஞ்ச அங்கங்களைக் கொண்டுதான் கணிக்க முடியும். அதாவது சிலப்பதிகாரக் காலக்கட்டத்தில் பஞ்சாங்கம் இருந்திருக்கிறது. முகூர்த்தம் என்ற சொல் சிலப்பதிகாரத்தில் இருக்கிறது. இது நம்மில் யாருக்காவது தெரியுமா? சிலப்பதிகாரத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் இந்த விவரத்தை நமக்குச் சொன்னார்களா? கண்ணகியை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்த விவரத்தை நமக்குச் சொன்னார்களா? சொல்லவில்லையே. ஒருவேளை அவர்கள் சிலப்பதிகாரம் முழுவதையும் படிக்கவில்லை போலிருக்கிறது. படித்திருந்தாலும், இந்த விவரம் பகுத்தறிவுக்கு ஒவ்வாது என்று அவர்கள் விட்டிருக்கலாம். அவர்களுக்கு வேண்டுமானால் அது பகுத்தறிவுக்கு ஒவ்வாமல் இருந்திருக்கலாம். ஆனால் சேர மன்ன்ன் செங்குட்டுவனுக்கு அது பகுத்தறிவுதான். அதை எழுதிய இளங்கோவடிகளுக்கும் அது பகுத்தறிவுதான். பஞ்சாங்கத்தை இன்றைய மக்கள் ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் அது முக்கியமல்ல, அன்றைக்கு, அதாவது 1800 ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாங்கம் இருந்திருக்கிறது. அதைக் கொண்டு நல்ல நேரம் கண்டுபிடித்திருக்கிறார்கள். சேர மன்னன் பஞ்சாங்கத்தைக் கொண்டுதான் நல்ல நேரத்தைத் தெரிந்து கொண்டிருக்கிறான் என்பதற்கு சிலப்பதிகாரமே சாட்சி.



சேர மன்னன் மட்டுமல்ல, அவனிடம் பஞ்சாங்கம் பார்க்கும் ஒரு பெருங்கணி இருந்தால், அப்படி ஒரு பெருங்கணி சோழனிடமும் இருந்திருப்பான், பாண்டியனிடமும் இருந்திருப்பான். குறுநில, பெரு நில மன்னர்களிடமும் இருந்திருப்பான், ஏனெனில் அன்று அரசனைச் சுற்றி ஒரு 'ஐம்பெருஞ்சுற்றம்' இருந்தது என்று நூல்கள் தெரிவிக்கின்றன. காலக் கணியனான ஜோதிடனும் இந்த் ஐம்பெருஞ்சுற்றத்தில் ஒருவர் ஆவார். அவர்கள் எந்நேரமும் அரசனுக்கு அருகில் இருப்பர். பஞ்சாங்கத்தைப் பார்த்து நேரம் காலம் சொல்லி வந்திருக்கின்றனர் என்று சிலப்பதிகாரம் மூலம் தெரிகிறது.

 

பஞ்சாங்கம் பார்த்தனர் என்றால் என்ன அர்த்தம்? பஞ்சாங்கப் படனம் நடந்திருக்கிறது என்று அர்த்தம். பஞ்சாங்கப் படனத்தை என்றைக்குச் செய்வார்கள்? வருடம் பிறக்கும் சித்திரை முதல் நாளில்தான் செய்வார்கள். சித்திரையே வருடப்பிறப்பென்று நேரிடையாக இலக்கியங்கள் சொல்லத் தேவையில்லை. பஞ்சாங்கம் இருந்தது என்பதே, சித்திரை வருடப்பிறப்பு இருந்தது என்பதற்கு அத்தாட்சி. பொ.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் முகூர்த்தம் என்னும் சொல் இருக்கிறது. பஞ்சாங்கம் தெரிந்தவன் இருந்திருக்கிறான் என்பதே அன்று வருடப்பிறப்பைச் சித்திரை முதல் நாளில் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சி.

 

சிலப்பதிகாரக் காலக் கட்டத்தில் பஞ்சாங்கமும், சித்திரை வருடப் பிறப்பும் இருந்தன என்றால், அவை சங்க காலத்திலும் இருந்திருக்கின்றன என்றும் அர்த்தம். சிலப்பதிகார காலத்துக்கும், சங்க காலத்துக்கும் எவ்வளவு கால வேறுபாடு? அதிகம் இல்லையே. சங்க காலத்தில் பஞ்சாங்கம் உருவாகியிருந்தால்தான், சிலப்பதிகார காலக் கட்டத்தில் அந்த அளவு வந்திருக்க முடியும். சங்க காலத்திலேயே பஞ்சாங்கம் பார்க்கும் முறை இருந்த்து என்று சொல்லும் வண்ணம் ஒரு பாடல் இருக்கிறது.

'ஈயென இரத்தல்' என்று தொடங்கும் 204 ஆவது புறநானூற்றுப் பாடலில் அது வருகிறது. அந்தப் பாடல் வல்வில் ஓரியின் மீது பாடப்பட்டது. அந்த அரசன் வரிசை அறிந்து பரிசில் தருபவன். அவன் தனக்கும் ஒரு பெரும் பரிசு தருவான் என்ற எதிர்பார்ப்பில் புலவர் பாடல் எழுதியுள்ளார். அப்பொழுது அவருக்கு ஒரு சந்தேகம் வந்து விடுகிறது. ஒருவேளை தனக்குப் பரிசில் தரவில்லையென்றால் என்ன செய்வது என்ற சந்தேகம் வந்து விடுகிறது. அப்படி அவன் பரிசு தரவில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்காகத் தான் அவனைப் பழிக்க மாட்டேன் என்கிறார் புலவர். அப்பொழுது சொல்கிறார், அரசே, நீ பரிசு தரவில்லை என்றால் அதற்காக உன்னைப் பழிக்க மாட்டேன். நான் கிளம்பின நேரம் சரியில்லை என்று நேரத்தைத்தான் பழிப்பேன் என்கிறார். "புள்ளும் பொழுதும்" பழிப்பேன் என்று அவர் எழுதியுள்ளார். கிளம்பின நேரம் சரியில்லை, அதனால் தனக்குப் பரிசு கிடைக்கவில்லை என்று நினைப்பாராம். அவருக்கு இல்லாத அறிவா? அல்லது அவருக்கு இல்லாத பகுத்தறிவா? ஆனால் அவர் நேரம் சரியில்லை என்கிறார். இதைச் சொல்பவர் தமிழ்ச் சங்கப் புலவர். அவ்வாறு அவர் எழுதிய பாடல் சங்க இலக்கியமாக இருக்கிறது.

ஒரு பறவை குறுக்கே போனது அதனால் பரிசு கிடைக்கவில்லை, தான் கிளம்பிய பொழுது சரியாக இல்லை, அதனால் பரிசு கிடைக்கவில்லை என்று பொழுதைப் பழிப்பேன் என்கிறார். அந்தப் பொழுது என்பது என்ன? சிறுபொழுதா அல்லது பெரும் பொழுதா? இரண்டும் இல்லை, அது முகூர்த்தம் என்று உரையாசிரியர் எழுதி வைத்துள்ளார். கிளம்பும் நேரம் நல்ல நேரமா,? போகும் காரியம் வெற்றிகரமாக முடியுமா என்று சொல்ல, திதி, வாரம் போன்ற பஞ்ச அங்கங்களையும் கொண்டுதான் பொழுதைச் சொல்வார்கள். அப்படிச் சொல்லும் ஒரு கணியனைக் கலந்தாலோசித்துத்தான் அந்தப் புலவர் கிளம்பியிருக்கிறார். மன்னனுக்கு ஒரு பெருங்கணி என்றால், புலவருக்குச் சிறு கணி இருந்திருக்கிறான். ஒவ்வொரு கிராமத்திலும் கணியர்கள் இருந்தார்கள். மன்னனது பெருங்கணியானவன் மன்னனுக்கு முன் பஞ்சாங்கப் படனம் செய்தால், இந்த்ச் சிறு கணிகள் கிராமக் கோவில்களில் பஞ்சாங்கப் படனம் செய்து இருக்க வேண்டும். அதைச் சித்திரை வருடப்பிறப்பு அன்றுதான் செய்ய முடியும்.

சித்திரை என்னும் சொல் இலக்கியத்தில் இருக்கிறதா என்றால், இப்படித்தான் உள்ளமைவாக இருக்கும். பொழுதின் முக்கியத்துவத்தை உணர்ந்த பகுத்தறிவுவாதிகளாக அவர்கள் அனைவரும் இருக்கவேவோ என்னவோ, வல்வில் ஓரியும், புலவரது இந்தப் பாடலை ரசித்து, பொழுதில் ஒரு குற்றமும் வரக்கூடாது என்றெண்ணி, பெரும் பரிசான யானையையே அளித்து விட்டான் போலிருக்கிறது. இந்தப் புலவரது பெயர் 'கழைதின் யானையார்' என்பது. கழையைத் தின்னும் யானையை உடையவர் என்பது பொருள். அவருக்கு யானையையே பரிசாக அளித்துவிட்டான், வல்வில் ஓரி. பொழுதைப் பழிப்பேன் என்று புலவர் சொன்னதும், பொழுதைப் பழிக்க விடக்கூடாது என்று அரசன் நினைத்துப் பெரும் பரிசு கொடுத்து விட்டான்.

உண்மையில் அந்த நாளில் பஞ்சாங்கம் அல்ல, அஷ்டாங்கம் என்னும் எட்டு கேள்விகள் இருந்தன. இதில் முதலாவது யுகம் என்பது, கலியுகம் போன்ற நான்கு யுகங்கள் முதலாவது அங்கம். ஒவ்வொரு யுகத்திலும் 60, 60 என்று பிரிக்கப்பட்ட அறுபது வருடங்கள், இரண்டாவது அங்கமாகும். ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை முதலாகப் பன்னிரெண்டு மாதங்கள் மூன்றாவது அங்கமாகும். இவற்றுக்குப் பிறகுதான் திதி, வாரம் என்னும் பஞ்ச அங்கங்கள் வருகின்றன. இவை அனைத்தும் ஒன்றனுக்குள் ஒன்று அமைவன. இவற்றில் முதல் மூன்றங்கங்களான யுகம், வருடம், சித்திரை முதலான மாதம் ஆகியவற்றை அறிந்து கொள்ள பெரிய கணக்கு எதுவும் தேவையில்லை. பாமரர்களும் இவற்றை அறிந்திருந்தனர். ஆனால் திதி முதலான ஐந்து விவரங்களை, ஒரு கணியன் வாயிலாகத்தான் அறிய முடியும். அவற்றை அறிய, பயிற்சி வேண்டும், ஒரு குருவை அண்டி, அவற்றை ஒரு கல்வியாகக் கற்க வேண்டும். அதனால் பஞ்சாங்கம் என்பது தனிப்பட சொல்லப்பட்டது. முதல் மூன்று அங்கங்களான யுகம், வருடம், மாதம் ஆகியவையும் பஞ்சாங்கத்தில் சொல்லப்படும். அதனால் அவற்றைத் தனிப்பட சொல்வது என்பது வழக்கொழிந்து விட்டது. ஆனால் பாமரர்களும் அறிந்த யுகம், வருடம், மாதம் ஆகிவற்றைப் பண்டிதர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் அறியாத நிலைமை ஒரு சமயம் இந்தத் தமிழ் நாட்டில் வரும் என்று அன்றே நம் முன்னோர்கள் அறிந்திருந்தால், பஞ்சாங்கம் என்று தனியாக வைத்திருக்க மாட்டார்கள், அஷ்டாங்கம் என்றே வைத்திருப்பார்கள். இளங்கோவடிகளும், ஐந்து கேள்வி என்று சொல்லாமல், எட்டு கேள்வியும் அறிந்த பெருங்கணி என்றே எழுதியிருப்பார். கால அடிப்படை கூட தெரியாத நிலைமை இன்று இருக்கிறது என்பதே இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகும்.

இதையெல்லாம் நான் சொன்னாலும், சிலர் கேட்கலாம், மாதம் என்பது சரி, ஆனால் அது சித்திரையில்தான் தொடங்கியது என்று எப்படிச் சொல்லலாம்? தையில் தொடங்கியிருக்கலாமே என்று கேட்கலாம்.

சித்திரையில்தான் தொடங்கியது என்று நாம் சொல்ல வானத்தையும், காலக் கணக்கையும் பார்க்க வேண்டும். இன்றைக்கு நாளின் தொடக்கம் இரவு 12 மணி என்று பின்பற்றுகிறோம், அப்பொழுது கடிகாரத்தில் சிறிய முள்ளும், பெரிய முள்ளும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொள்கின்றன. மீண்டும் அவை அவ்வப்பொழுது சந்தித்துக் கொண்டாலும், இரவு 12 மணியில் சந்திப்பதைத்தான் நான் ஆரம்பமாக எடுத்துக் கொள்கிறோம், அது போல, இந்த வானத்தில் ஒரு சமயம் சூரியன், தன் பரிவாரங்களாகிய பிற கிரகங்களுடன் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டான். அங்கிருந்து புது காலக்கணக்கு தொடங்கியது. மீண்டும் அதே இடத்தில் இந்த கிரகங்கள் அனைத்தும் சந்தித்துக் கொள்ள 4,32,000 வருடங்கள் ஆகும், ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு வேகத்தில் செல்லவே, அவை மீண்டும் ஒன்றாகச் சந்திக்க இத்தனை காலம் பிடிக்கிறது. சமீபத்தில் இவர்கள் சந்தித்துக் கொண்ட காலம் இன்றைக்கு 5113 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. இதனை யுகம் என்றார்கள். யுகம் என்ற சொல் யுக்மா என்ற சொல்லிலிருந்து வந்தது. யுகம் என்றால் சேருதல் என்று பொருள். யோகா என்கிறோமே அதுவும் யுக்மா என்ற சொல்லிலிருந்துதான் எழுந்தது. உடலும், மனமும் சேர்ந்து செய்யப்படுவதால் அது யோகா. அது போல கிரகங்கள் சந்தித்துக் கொண்டதை யுக ஆரம்பம் என்கிறோம். இவை  சந்தித்துக் கொண்ட இடம் மேடம் பூஜ்ஜியம் பாகையாகும்.

 

சித்திரை முதல் நாளான மேடம் பூஜ்ஜியம் பாகையில் இவை சந்தித்துக் கொண்டபோது, சூரியன் மேட ராசியில் நுழைந்தான், அன்று அமாவசைக்கு அடுத்த நாளான பிரதமை திதி அமைந்தது. அன்றிலிருந்து சித்திரை தொடங்கியது. புது யுகமும், புது வருடமும் தொடங்கியது. அன்று வளர்பிறைப் பிரதமையானதால், சித்திரையை ஒட்டி வரும் வளர்பிறைப் பிரதமையை யுகாதி என்று தெலுங்கர்கள் தங்களது வருடப்பிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். யுகாதி என்றால் யுகத்தின் ஆதி, யுகத்தின் ஆரம்பம் என்று பொருள்.



யுகாதி எனப்படும் வளர்பிறைப் பிரதமை ஒரு நிலையான புள்ளியல்ல. சூரியனுக்கும் சந்திரனுக்கும் வேக வேறுபாடுகள் இருப்பதால், அந்த நாள் ஒவ்வொரு வருடமும் மாறுபடும். மேலும் 5113 ஆண்டுகளுக்கு முன் நிகழந்த கிரக சந்திப்பு மீண்டும் இப்பொழுது நிகழப்போவதில்லை. அந்தச் சந்திப்பு நிகழப்போவதில்லையென்றாலும், அந்தச் சந்திப்பு நிகழ்ந்த இடம் முக்கியத்துவம் பெற்றதாகிறது. எனவே அந்தச் சந்திப்பு நடந்த இடமான மேடம் பூஜ்ஜியம் பாகையை தமிழர்கள் வருடப்பிறப்பாக ஏற்றுக் கொண்டார்கள்.

இங்கு ஒரு கேள்வி எழலாம். ஏதோ நான் நேரில் பார்த்தாற்போல கிரகங்கள் சந்தித்துக் கொண்டன என்கிறீர்களே, மேடம் பூஜ்ஜியம் பாகையில்தான் அவை சந்தித்துக் கொண்டன என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கலாம். ஒரு ஆதாரத்தை நான் கூறுகிறேன். இன்றைக்கும் பஞ்சாங்கக் கணியர்கள் துல்லியமாக கிரகணத்தைக் கணித்து எழுதுகிறார்கள். அவர்கள் 'நாஸா' வெப்சைட்டைப் பார்த்தா அவ்வாறு எழுதுகிறார்கள்? இல்லை. இதற்கெனெ தனியான கணக்குகள் இருக்கின்றன. இந்தக் கணக்குகள் ஒன்றுக்குள் ஒன்றெனப் பின்னோக்கிச் சென்று, காலத்தின் ஆரம்பத்தில், கலியுகம் ஆரம்பித்த போது இருந்த கிரக நிலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. அன்று சூரியனும், சந்திரனும் சந்தித்துக் கொண்டபின் பல லட்சம் முறை சந்தித்துக் கொண்டு விட்டன. இதற்கிடையே அன்றைக்கிருந்த ராகு, கேது அமைப்பையும் துல்லியமாக அறிந்திருக்க வேண்டும். அன்றைய அமைப்பைத் துல்லியமாக அறிந்திருந்தால்தான், இன்றைக்கு வரை கிரகணங்களை அவர்களால் துல்லியமாகக் கணிக்க இயலும். அப்படி அவர்கள் செய்யும் கணக்குக்கு அடிப்படையாக இருப்பது, 5113 ஆண்டுகளுக்கு முன் சித்திரை முதல் நாளன்று நடந்த சந்திப்பாகும். சித்திரையை முதல் நாள் என்று வைத்துக் கொள்ளவில்லையென்றால், இன்றைக்கும் கிரகணத்தைச் சரிவரச் சொல்ல முடியாது. தையை வருடப் பிறப்பாகக் கொண்டால் கிரகணக் கணக்கு சரிவர வராது.

 

அது மட்டுமல்ல, இன்றைக்கு 1000 வருடங்களுக்குப் பிறகு வரும் ஏதேனும் ஒரு நாளைக் கொடுத்து அன்று இருக்கப்போகும் நட்சத்திரம், திதி, கிழமை என்னவென்று கேட்டாலும், இந்தக் கணியர்களால் சொல்ல முடியும், அப்பொழுது என்றைக்குக் கிரகணம் வரும் என்று கேட்டாலும் சொல்ல முடியும், அதற்கு அடிப்படை சித்திரை வருடப்பிறப்பில் ஆரம்பித்த கிரக அமைப்பே தவிர, தையை முன்னிட்டு அல்ல. மேலும் அந்த அரிதான சந்திப்பு சித்திரை முதல் நாளன்று ஏற்பட்டதே தவிர, தையில் அல்ல. சித்திரையிலிருந்து காலக் கணக்கு ஆரம்பிக்கவே, நம் தலையெழுத்தை எழுதும் ஸ்டெனோக்ராஃபரான சித்திர குப்தனுக்குச் சித்திரையில்தான் விழா எடுக்கிறோமே தவிர தையில் அல்ல.



முடிவாக, அறிவியல் ஆதாரம் என்று தை ஆதரவாளர்கள் சொல்லும் ஒரு விவரத்தைக் காண்போம். சித்திரை முதல் நாளை விஷு என்று கொண்டாடுகிறார்கள். விஷு என்றால் சம பகல் இரவு நாள் என்று அர்த்தம். இதை ஈக்வினாக்ஸ் (Equinox)  என்று கூறுவார்கள். இன்று இந்த ஈக்வினாக்ஸ் சித்திரை முதல் நாளான்று வருவதில்லை. அது பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு நகர்ந்து இன்று அது பங்குனி 6 ஆம் நாள், அதாவது மார்ச் 20 ஆம் தேதி வருகிறது. இதன் காரணமாக, சித்திரை முதல் நாளன்று வருடப் பிறப்பு கொண்டாடுவது சரியல்ல. அதனால், உத்தராயணம் ஆரம்பிக்கும் தை முதல் நாளன்று கொண்டாடுவதே சரியாக இருக்கும் என்பது தை ஆதரவாளர்கள் சொல்லும் கருத்து. இந்தக் கருத்து மூன்று காரணங்கள் அடிப்படையில் சரியில்லை.



முதலாவதாக, தமிழர்களாகிய நாம் வருடப்பிறப்பை விஷு என்று அழைப்பதில்லை. வருடப்பிறப்பு என்பதை மேடம் பூஜ்ஜியம் பாகையில் சூரியன் நுழையும் நாள் என்றே கணக்கிடுகிறோம். சம பகல் இரவு நாள் என்று அதை அறுதியிடுவதில்லை.



இரண்டாவதாக, விஷு என்னும் சம பகல் இரவு நாள் பின்னோக்கி நகர்ந்தால், உத்தராயணமும் பின்னோக்கி நகரும். உத்தராயணத் தொடக்கத்துக்கும், விஷுவுக்கும் 90 டிகிரி அதாவது 3 மாத இடைவெளி உள்ளது. விஷுவானது 24 நாட்கள் பின்னோக்கி நகர்ந்து விட்டால், அதற்கொப்பாக, உத்தராயணமும், 24 நாட்கள் பின்னோக்கி நகர்ந்து விடும். அதாவது இன்றைக்கு உத்தராயணமும் தை முதல் நாளன்று ஆரம்பிப்பதில்லை. மாறாக அது மார்கழி 24 ஆம் நாளே ஆரம்பித்து விடுகிறது. அதனால் உத்தராயணம் ஆரம்பிக்கும் தை என்று சொல்வது தவறு.


 

மூன்றாவதாக, ஈக்வினாக்ஸ் என்பது பின்னோக்கி நகர்ந்து கொண்டே செல்லும் என்பது தவறானது. தற்சமயம் மீனத்தில் இருக்கும் ஈக்வினாக்ஸ், இன்னும் பின்னோக்கி நகர்ந்து கும்பத்துக்குச் செல்லாது. மீனம் 3 பாகை வரை சென்றவுடன் அது முன்னோக்கி நகர ஆரம்பிக்கும். இதற்கு ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது.



நாம் இருக்கும் பூமி, தன் அச்சில் தற்சமயம் 23-1/2 பாகைகள் சாய்ந்திருக்கிறது. இடைவிடாமல் சுர்றிக் கொண்டிருக்கவே இப்படி சாய்ந்து சுழல்கிறது. இந்த சாய்மானம் எப்பொழுதுமே 23-1/2 பாகையில் இருக்காது. அது 22 பாகை முதல் 25 பாகை வரை ஆடிக்கொண்டே சுற்றுகிறது என்று மிலன்கோவிட்ச் (Milankovitch)  என்பவர் கண்டுபிடித்திருக்கிறார். இது ஏன் இப்படி சாய்ந்து ஆடிக்கொண்ட் சுற்றுகிறது என்பதை ஒரு பம்பரத்துடன் ஒப்பிட்டுச் சொல்ல்லாம். ஒரு பம்பரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் ஆணியே அதன் அச்சாகும், அது வேகமாகச் சுற்றும் போது, ஆணியான அச்சு சாய்ந்து கொண்டே சுற்றும், அதனால் பம்பரமும் தலையை ஆட்டுகிறாற்போல சாய்ந்து, சாய்ந்து சுற்றும். ஒரு பக்கம் சாய்வது போல இருக்கும், உடனே எதிர்பக்கமும் சாய்ந்து சுற்றிக் கொண்டிருக்கும். அதைப் போலவே பூமியும் சுற்றுகிறது.



அப்படிச் சுற்றும் போது அதன் மேல்படுகிற சூரிய ஒளியும் மேலும், கீழுமாக ஏறி இறங்கும். கடக ரேகை, பூமத்திய ரேகை, மகர ரேகை என்று மூன்று மட்டங்களில் சூரியனது கதிர்கள் பூமியின் மீது விழுகின்றன. சூரியக் கதிர்கள் ஒரே சரியாக விழுகின்றன. ஆனால் பூமியானது 22 முதல் 25 பாகை வரை ஆடிக்கொண்டிருக்கவே இந்தக் கதிர்கள் மேலும், கீழும் நகர்வதுபோல மாறிக் கொண்டிருக்கின்றன. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த ஆட்டம் சித்திரை முதல் நாளான மேடம் பூஜ்ஜியத்தை மையமாகக் கொண்டு அமைகிறது என்பதே.



பூமியின் அச்சு மாறிக் கொண்டே இருப்பதால், மேடம் பூஜ்ஜியம் பாகையிலிருந்து, விஷு என்னும் சம பகல் இரவு நாளானது மீனத்தில் 27 பாகைகள் வரை செல்லும். அதற்கு மேலும் அது செல்லாது. அவ்வாறு அது செல்ல வேண்டும் என்றால் பூமி கவிழ்ந்தால்தான் அப்படி நடக்கும், பூமி கவிழுமா? கவிழாது. இதையும் பம்பரத்தைக் கொண்டே சொல்லலாம். தலையை ஆட்டி ஆட்டி, பம்பரம் சுற்றும், ஆனால் அதன் வேகம் குறைந்தால் அதை கவிழ்ந்து விடும். அது போல பூமியும் தன் வேகத்தைலிருந்து குறைந்தால்தான் கவிழும், ஈக்வினாக்ஸும் இன்னும் பின்னோக்கிச் செல்லும் என்றால் பூமி கவிழும் நிலைக்குச் சென்றால்தான் சாத்தியப்படும். தற்போதைய நிலையிலிருந்து திரியாமல் பூமியானது சுற்றும் வரை, ஈக்வினாக்ஸும் முன்னும், பின்னும் போய் வருமே தவிர, ஒரேடியாக பின்னோக்கிச் செல்ல முடியாது.


 


 

தற்போது பின்னோக்கிச் செல்லும் ஈக்வினாக்ஸ், மீண்டும் முன்னோக்கி மேடம் பூஜ்ஜியம் பாகைக்குச் சென்று, அங்கிருந்து முன்னோக்கி மேட்த்தில் 27 பாகைகள் வரை செல்லும். மேடத்தின் கார்த்திகை முதல் பாகை வரை இவ்வாறு செல்லும். ஒரு முறை கார்த்திகையில் ஈக்வினாக்ஸ் வந்தது என்று காட்டும் ஆதாரங்கள் இருக்கின்றன. 27 பாகை வரை கார்த்திகை வரை சென்ற பிறகு, மீண்டும் மேடம் பூஜ்ஜியம் பாகைக்குத் திரும்பி, பிறகு மீனம் 3 பாகை வரை, அதாவது பூரட்டாதி 4 ஆம் பாதம் வரை செல்லும்.



இந்த ஆட்டத்தைக் கடிகாரத்தின் பெண்டுலம் ஆடுவதுடம் ஒப்பிடலாம். இரண்டு பக்கமும் ஆடினாலும், நடுப் பகுதியைக் கொண்டுதான் இந்த ஆட்டம் அமைகிறது. சித்திரை முதல் நாளை மையமாக வைத்து விஷு நகர்வதும் இவ்வாறானதே. இன்னொரு ஒப்பீடாகத் தராசு முள்ளைச் சொல்லலாம். தராசின் தட்டுகள் மேலும், கீழும் ஆடலாம். ஆனால் அதன் ஆதாரம் அல்லது மையம் நடு முள்ளில் இருக்கிறது. மேடம் பூஜ்ஜியம் பாகையும் இவ்வாறான மையப் புள்ளியாக இருந்து, ஆடுகிறது. இந்தப் பகுதி, சூரியன் பூமத்திய ரேகையைக் கடக்கும் போது அமைவது. அதாவது விஷு என்னும் ஈக்வினாக்ஸ், மீன  மேஷத்துக்குள்தான் அமையும். இந்த விவரம் சங்க இலக்கியத்தில் இருக்கிறது. ஆம், பூமத்திய ரேகையைச் சூரியன் கடந்து செல்லும் இந்த நடுப் பகுதியைப் பற்றி சங்க இலக்கியமான பரிபாடல் கூறுகிறது.


 

'விரிகதிர் மதியம்' என்று தொடங்கும் பரிபாடல் 11 ஆம் பாடலில், 'தெருவிடைபடுத்த மூன்று ஒன்பதின் இருக்கையுள்' என்று மூன்று தெருக்களைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. வானத்தில் மூன்று தெருக்கள் அதாவது வீதிகள் இருக்கின்றன என்று பரிபாடல் கூறுகிறது. அதாவது நம்மைச் சுற்றியுள்ள வான் வெளி வட்டத்தை மூன்று வீதிகளாகப் பிரித்து, அவற்றில் 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் அமைத்து, அவற்றினூடே சூரியன் முதலான கிரகங்கள் செல்கின்றன என்று புலவர் எழுதியுள்ளார். அந்த மூன்று வீதிகளுள் - இப்பொழுது சொன்னோமே, ஈக்வினாக்ஸ் என்று முன்னும், பின்னும் நகரும் வீதி – அது நடு வீதியாகும். பூமத்திய ரேகையைச் சூரியன் கடக்கும் மீன மேட மாதங்கள் இந்த நடு வீதியில் அமைந்துள்ளன. அதன் நடுப் பகுதி வருடப்பிறப்பான மேடம் பூஜ்ஜியம் பாகையாகும், அந்த மேடம் பூஜ்ஜியம் பாகையை மையமாகக் கொண்டுதான் ஈக்வினாக்ஸ் முன்னும் பின்னும் 27, 27 பாகைகள் சென்று கொண்டிருக்கிறது.


 

நடு வீதியைக் கடந்தபின் வைகாசி முதல் ஆவணி வரை சூரியன் நாமிருக்கும் வட பகுதியில் சஞ்சரிப்பான். அப்பொழுது நமக்கு பகல் பொழுது அதிகமாக இருக்கும் அதை வடக்கு வீதி என்று அழைத்தார்கள். அதன் பின் மீண்டும் சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்து தெற்கு நோக்கிச் செல்வான். பங்குனி – சித்திரைக்கு எதிரே அமையும் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில், அதாவது கன்னி – துலாம் ராசிகளில் மீண்டும் நடு வீதியைச் சூரியன் கடப்பான். அதன் பிறகு கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களில் பூமியின் தென் பாகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தைத் தெற்கு வீதி என்பார்கள். தை மாதம் தெற்கு வீதியில், தென் பகுதியில் வருகிறது என்பதைப் பாருங்கள். தைக்குத் தனியாக எந்த முக்கியத்துவமும், ஆரம்பமும் இல்லை என்பதைப் பாருங்கள்.


 

தெற்கு வீதியைத் தாண்டின பிறகு மீண்டும் நடுவீதியில் சூரியன் பிரவேசிக்கிறான். இங்கு மேடம் பூஜ்ஜியம் பாகையை மையமாகக் கொண்டு ஈக்வினாக்ஸ் ஆடுகிறது. தற்சமயம் மீனம் 6ஆம்  பாகையில் இருக்கும் சூரியன் மீனம் 3 பாகை வரை செல்லும். அதன்  பிறகு மீண்டும் திரும்பி – மேடம் பூஜ்ஜியம் பாகையை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும். இந்த விவரம் நம் நாட்டு மக்களுக்கு மட்டுமே தெரிந்த விவரம். இதை இன்னும் மேல் நாட்டவர்கள் கவனித்து ஆராயவில்லை. ஆனால் இன்றிலிருந்து 300 ஆண்டுகள் கழித்து கவனிக்க ஆரம்பிப்பார்கள். ஏனெனில் தற்சமயம் தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் விஷு, அப்பொழுது வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கும், அப்பொழுது விழித்துக் கொண்டு கணக்கு போடுவார்கள். மேடத்தில் சித்திரை முதல் நாளை மையமாகக் கொண்டு பெண்டுலம் போல ஆடுகிறது என்று ஏதோ அவர்கள் கண்டு பிடித்தது போலச் சொல்வார்கள். ஆனால் இந்த விவரத்தைக் கொண்ட நூல்களை உடைய நாம், சித்திரைதான் வருடப் பிறப்பா என்று சந்தேகித்துக் கொண்டிருப்போம்.


 

இன்று இரண்டே இரண்டு இலக்கியங்களில்தான் இந்த ஆட்டத்தைக் கொண்ட வீதி கான்செப்ட் காணப்படுகிறது. ஒன்று பரிபாடல். மற்றொன்று வால்மீகி ராமாயணம். ராமாயணத்தில் சேதுப் பாலம் கட்டியவுடன் அதை வால்மீகி வருணிக்கிறார். கடலுக்கு மத்தியில் ஒரு தெரு அமைத்து போல காணப்படும் சேதுவானது ஆகாயத்தில் சூரியன் செல்லும் ஒளி வீசும் நடு வீதி போல இருக்கிறது என்கிறார் வால்மீகி. நடு வீதி என்ற பெயரே, சித்திரை முதல் நாளை மையமாக்க் கொண்டு முன்னும் பின்னும் ஆடும் ஆட்டத்தால் ஏற்பட்டது. வால்மீகியும், பரிபாடலும் அதைச் சொல்வதன் மூலம் அன்று பாரதம் முழுவதும் இந்த வீதி கான்செப்டை அறிந்திருந்தார்கள் என்று தெரிகிறது. அதனால், வருடப் பிறப்பென்பது, பாரதம் முழுவதும் பங்குனி அல்லது சித்திரைக்குள்தான் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த பூமி தன் நிலையிலிருந்து மாறாமல் செல்லும் காலம் வரை, சித்திரை முதல் நாளை மையமாகக் கொண்டுதான் பூமியின் ஆட்டமும், சூரியனின் நகர்வும் இருக்கும் என்பதில் நாம் தெளிவாக இருப்போம். எந்த அரசு வந்தாலும் போனாலும், சித்திரையை மாற்றுவேன் என்றாலும், சித்திரையே வருடப் பிறப்பென்பதில் நாம் உறுதியாக இருப்போம்.


(முடிவு)


*****************


எனது கட்டுரை`

 

 

சோதிடம் காட்டும் வருடப் பிறப்பு!

ஜெயஸ்ரீ சாரநாதன்

 

அருந்தவ முனிவன் அகத்தியன் வழிப்படுத்த, வளர்ந்த சமுதாயம் நம் தமிழ்ச் சமுதாயம். இலக்கணம் மட்டுமின்றி, வாழ்வியலில் பல துறைகளிலும் அவர் வழிகாட்டியுள்ளார். அவற்றுள் ஒன்று சோதிடமாகும். எழுத்தாணி கொண்டு எழுதுவதில் ஆரம்பித்து, நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், அதைச் செய்ய வேண்டிய இடம், பொருள், காலம், மற்றும் அப்படிச் செய்வதால் விளையும் நன்மைகளையும் அவர் எழுதி வைத்துள்ளார்.



அவரைப் பணிந்தே, தமிழ் மன்னர்கள் பணிகளைச் செய்தனர். புகார் நகரில் இந்திர விழா எடுக்க விரும்பிய 'தொடித் தோட் செம்பியன்" "ஓங்குயர் மலயத்து அருந்தவ"னான அகத்தியன் உரைத்தாவாறு அந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தான். நாலேழ் இருபத்தெட்டு நாட்கள் நடக்கும் அந்த விழா, பங்குனி மாதச் சித்திரை நட்சத்திரத்தில் ஆரம்பித்து, சித்திரை மாதச் சித்திரையில் முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், "சமயக் கணக்கரும், தம் துறை போகிய அமயக் கணக்கருமாகிய" சோதிடர்களைக் கொண்ட குழுவினரால், அந்த விழா குறித்த விவரங்கள் ஆலோசிக்கப்பட்டன என்கிறது மணிமேகலை (விழாவறைக் காதை). ஒரு திருவிழா என்றால், அதிலும் சமயச் சார்புடைய விழா என்றால் அங்கு சமயக் கணக்கரையும், அமயக் கணக்கரையும் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்க மாட்டார்கள் என்னும் மரபை இது காட்டுகிறது. 



அதிலும் தமிழ் வருடப் பிறப்பென்பது, பஞ்சாங்கம் அறிந்த சோதிடர்களால் கணிக்கப்படுவது. பஞ்சாங்க முறை என்பது சிலப்பதிகாரக் காலத்திலேயே இருந்திருக்கிறது. கண்ணகியின் சிலைக்குக் கல் எடுப்பதற்காக இமய மலைக்குச் செல்ல சேரன் செங்குட்டுவன் முடிவு செய்தபோது தன் "ஆசான், பெருங்கணி, அருந்திறல் அமைச்சர், தானைத் தலைவர்" ஆகியவர்களோடு ஆலோசனை செய்கிறான். அப்பொழுது


"ஆறிரு மதியினுங் காருக வடிப் பயின்று

ஐந்து கேள்வியும் அமைந்தோ"னான பெருங்கணியன்,

"முழுத்தம் ஈங்கிது முன்னிய திசை மேல்" என்கிறான். (கால் கோள் காதை), (முழுத்தம் = முகூர்த்தம்)


ஆறிரு மதி என்னும் பன்னிரண்டு ராசிகளில் கோள்கள் செல்லும் நிலையறிந்த அந்தப் பெருங்கணி, 'ஐந்து கேள்வியும்" அமையப் பெற்றிருந்தான் என்பதன் மூலம் 'ஐந்து கேள்வி' என்னும் வாரம், நாள், திதி, யோகம், கரணம் என்னும் ஐந்து அங்கங்கள் கொண்ட பஞ்சாஞ்கத்தை அறிந்திருந்தான் என்று தெரிகிறது. அந்த ஐந்து கேள்விகளின் அடிப்படையில் வட திசை நோக்கிப் பயணம் செல்ல நல்ல முகூர்த்தமது என்றிருக்கிறான். இதன் மூலம் பஞ்சாங்கத்தைக் கொண்டு காலம் கணிக்கும் முறை சிலப்பதிகார காலத்துக்கும், அதற்கு முன்பும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.


 

பஞ்சாங்கத்தைக் கொண்டு பலன் சொல்வதற்கு அடிப்படையாக உள்ளவர்கள் 'நவ நாயகர்கள்" ஆவார்கள். அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள 'மீன- மேடம்" பார்க்க வேண்டும்! இதைச் சொல்லும் தமிழ்ப் பாடல், சுவடிகளில் காணப்படுகிறது. இந்தப் பாடல் மட்டுமல்ல, எல்லா சோதிட விதிகளும் பாடல் வடிவில் காலங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றைக் கொண்டே பஞ்சாங்கம் எழுதப்படுகிறது. சோதிடப் பலன்கள் சொல்லப்படுகின்றன.

"மீனமேடம்" பார்க்காமல் வருடப் பலனைச் சொல்ல முடியாது. ஏனெனில்,


"மீனபூர்வப் பிரதமை ராசனா

மேடமாச முதல்வரா மந்திரி.."


என்று தொடங்கும் பாடலில் மீன ராசியில் அமாவாசை கழிந்த பிரதமையன்று இருக்கும் கிழமைக்குரிய கிரகம், வருடத்துக்கு அரசனாவன்; மேட ராசியில் சூரியன் நுழையும் போது இருக்கும் கிழமையின் கிரகம் வருடத்தின் முதல் மந்திரியாவான் என்று சொல்லி, வருடத்தின் பிற மாதப்பிறப்புகளில் வரும் கிழமைகளின் கிரங்கள், மற்ற மந்திரிகளாவார்கள் என்று சொல்லி அந்தந்த மந்திரிகளுக்கு உரிய கிரகங்களால் (இவர்களே நவநாயகர்கள்) ஏற்படும் பலன்கள் சொல்லப்பட்டுள்ளன. அரசனுக்கான மீனப் பிரதமையை 'யுகாதி" என்று பிற மாநிலத்தவர்கள் கொண்டாடுகிறார்கள். முதன்மந்திரிக்கான மேட மாதப் பிறப்பை வருடப் பிறப்பென்று தமிழ் மக்கள் கொண்டாடி வந்திருக்கிறார்கள். இதை மெய்ப்பிக்கும் பாடல் ஒன்று அகத்தியரால், 'அகத்தியர் பன்னீராயிரம்" என்னும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.


வருடத்தின் முதல் நட்சத்திரமான அசுவினி தேவர்கள் தனக்கு உபதேசித்ததைப் புலத்திய முனிவருக்குக் கூறுவதாக அகத்தியர் பன்னீராயிரம் அமைந்துள்ளது. அதில் அவர் தெள்ளத்தெளிவாக தமிழ் வருப்பிறப்பு சித்திரையில் ஆரம்பிக்கிறது என்கிறார்.


"புத்தியுள்ள யெனதைய ரசுவினியாந்தேவர்

புகலவே யான்கேட்ட வரைபாட்டோடும்

கத்தான கலியுகத்து வாழ்க்கையெல்லாம்

காவலரே யாம்கேட்டு நுந்தமக்காய்

சத்தியமாய் யானுரைத்தே னன்புளானே"

 

"மேடமென்னும் ராசியாம் மதனிற்கேளு

மேலானா யசுவினி முதலாம்பாதம்

குலவியே கதிரவந்தான் வந்துதிக்க

வருச புருசன் அவதரிப்பானென்றே

பரிவுடன் உலகிற்கு நீசாற்றே"


என்கிறார் அகத்தியர்.



சித்திரை மாதம் எந்தக் கிழமையில், எத்தனை நாழிகையில் பிறக்கிறது என்பதைக் கணிக்க சோதிட விதி முறைகள் பாடல்கள் வடிவில் இருக்கின்றன. சங்க காலத்தில் நாழிகைக் கணக்கர்கள் இருந்தார்கள். இவர்கள் நாழிகையைக் கணக்கிடுவதில் வல்லவர்கள். இவர்கள் சித்திரையைக் கொண்டுதான் நாழிகை கணித்தார்கள். இந்தக் கணிதத்தைச் சொல்லும் வெண்பா ஒன்று சுவடிகளில் காணப்படுகிறது.




"சித்திரைக்குப் பூசமுதல் சீராவ ணிக்கனுடம்

அத்தனுசுக் குத்திரட்டா தியாம்- நித்தநித்தம்

ஏதுச்சமா னாலும் ரெண்டே காலிற்பெருக்கி

மாதமைந்து தள்ளி மதி"


என்னும் இந்தப் பாவில்


சித்திரை முதல் ஆடி வரை பூசம் முதலாகவும், ஆவணி முதல் கார்த்திகை வரை அனுஷம் முதலாகவும், மார்கழி முதல் பங்குனி வரை உத்திரட்டாதி முதலாகவும் கொண்டு, அப்பொழுது உச்சமான நட்சத்திரம் வரை எண்ணி, இரண்டேகாலால் பெருக்கி, அதுவரை முடிந்த மாதங்களில் மாதம் ஒன்றுக்கு ஐந்து நாழிகையாக அன்று வரை ஈவுப்படித் தள்ளிக் கண்டது அப்போதைய நாழிகையாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. 'மாதமைந்து' என்பது சித்திரை தொடங்கி, மாதம் ஒன்றுக்கு ஐந்து நாழிகை என்ற கணக்கில் தள்ளப்பட்டு கணக்கிடப்படுகிறது என்று பொருள். சித்திரையில் வருடம் தொடங்கவே இவ்வாறு கணக்கிடப்படுகிறது.


தமிழருக்கே உரித்தான சோதிட விதிகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று 'கரி நாள்' என்பது. சித்திரை தொடங்கி ஒவ்வொரு மாதத்திலும், சில குறிப்பிட்ட நாட்களைக் கரி நாட்கள் என்பார்கள். இந்த நாட்களைப் பற்றி எந்த வடமொழி நூலும் சொல்வதில்லை. தமிழ் சோதிடத்திற்கே உரிய இதைக் கொடுத்தவர் அகத்தியர் ஆவார். இதைச் சொல்லும் பழந்தமிழ்ப் பாடலில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் கரிநாட்களைப் பற்றிச் சொல்லும் போது, பங்குனியைக் 'கடை மாதம்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


"இன்பமுறு மேடமதிலாறு பதினைந்தாம்"

எனத்தொடங்கும் இந்தப் பாடலில் சித்திரை தொடங்கி ஒவ்வொரு மாதப்பெயரையும், மேடம், ஏறு, ஆனி, ஆடி, ஆவணி, கன்னி, துலை, தேள், முனி, கலை, மாசி என்று 11 மாதங்களுக்குச் சொல்லி விட்டு, பங்குனிக்குப் பெயரேதும் சொல்லாமல் 'கடை மாதம்' என்று சொல்லப்பட்டுள்ளது, இதன் மூலம் சித்திரையே முதல் மாதம் என்பது தெரிகிறது.  அகத்தியரால் தரப்பட்ட கரிநாள் கணக்கு என்று சொல்லும் இப்பாடலின் கடை வரிகளைக் காண்போம்.


"துதிபெறு மாசி பதினைந்து பதினாறும்

      சொல்லு பதினேழு கடைமாத மதிலாறும்         

பதினைந்து மொன்றொழியைந் நான்குமிகுதீ தாம்

        பகர்ந்தமாதந் தோறுந்தெய் தியெனக் கொண்டு

கதிதரு நற்பொதியை வரைமுனிவ ரைந்திட்ட

        கரிநாண் முப்பா நான்குங் கண்டறிகுவீரே."


கடை மாதம் பங்குனி என்றால், சித்திரையே முதல் மாதம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

 

சூரிய வீதிகள்


சித்திரையில் பயணத்தைத் தொடங்கும் சூரியன் மூன்று வீதிகளில் செல்கிறான். அவை மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி என்பவை. வைகாசி முதல் ஆவணி மாதம் வரை மேடவீதி என்றும், கார்த்திகை முதல் மாசி வரை மிதுன வீதி என்றும், மீதியுள்ள பங்குனி, சித்திரை, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மாதங்களை இடப வீதி என்றும் சொல்வது தொன்று தொட்டு இருக்கிறது என்பதைப் பரிபாடல் 11 ஆம் பாடல் மூலம் அறிகிறோம்.


சூரியன் மேடவீதியில் செல்லும் போது, பூபாகத்தின் வட பகுதியில் நாம் இருக்கும் பகுதியில் பகல் வளரும். இது வடக்குத் தெரு என்றும் சொல்லப்படுகிறது. சூரியன் மிதுன வீதியில் செல்லும் போது நமக்கு இரவுப் பொழுது வளரும். அது சூரியனின் தென் திசைப் பயணமாதலால், அதற்குத் தெற்குத் தெரு என்று பெயர். சூரியன் இடப வீதியில் செல்லும் போது, நமக்குப் பகலும், இரவும் சமப்படும். இதனால் இது நடுத்தெரு என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் கால வேறுபாட்டைச் சொல்லும் ஒரு பாடல் சோதிடச் சுவடிகளில் இருக்கிறது.


"சித்திரையு மைப்பசியுஞ் சீரொக்கும் சித்திரைவிட்

டைப்பசிமுன் னைந்து மருக்கேது மைப்பசிக்குப்

பின்னைந்து மாசம் பிசகாமல் ராவேறும்

மின்னே விடுபூ மடி."


கடைசி வரியில் உள்ள 'விடுபூமடி" என்பது ஒரு புதிர். அதை வி-டி = ¾, மு-டு = 1-1/4, பூ= 1-1/2 நாழிகை என்று சித்திரைக்கு முன்னும், பின்னும், வடக்கு வீதியில் கூட்டியும், தெற்கு வீதியில் கழித்தும் ஒரு நாளது நாழிகையைச் சொல்ல வேண்டும். சித்திரையிலும், ஐப்பசியிலும் சீராக 30 நாழிகைகள் இருக்கும். இந்த வீதிகளைக் கீழ்க்கண்டவாறு அமைப்பது வழக்கம்.


 


இதையே பலரும் நன்கு அறிந்த சோதிடக் கட்டத்திலும் கீழ்க்கண்டவாறு காட்டலாம்.

               


சங்க காலத்தில் வீதிகளின் அடிப்படையில்தான் கிரக அமைப்பை அடையாளம் சொல்லியுள்ளனர்  என்பதைப் பரிபாடல் 11 மூலம் அறிகிறோம். முதலில் மேட வீதியில் இருக்கும் வெள்ளியைச் சொல்லிவிட்டு, உடனேயே நடு வீதியான இடப வீதியில் இருந்த கிரகங்களை அடையாளம் காட்டுகிறது அந்தப் பாடல். அதை அடுத்து மீதம் இருக்கும் மேட வீதிக் கிரகங்களைச் சொல்வதன் மூலம், ஆரம்பம் என்பது மேடப் பெயர் கொண்ட வீதியிலாகும் என்பதைப் புலப்படுத்தி விட்டு, நடுவீதியே உண்மையான ஆரம்பம் என்பதால், நடு வீதிக் கிரகங்களைச் சொல்லிவிட்டு, அதற்குப் பிறகு மீதம் இருக்கும் கிரகங்களை மேட வீதி, அதன் பின் தெற்கு வீதி என்று சொல்லும் வழக்கம் சங்க காலத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. 


 

மேடத்தைக் கொணர்ந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.


மேடத்தை வருடை என்னும் மலையாடு என்பார்கள். "கொண்டமை வருடையாடு கொறிமறி மேடமென்ப" என்கிறது சூடாமணி நிகண்டு (1-64) அப்படிப்பட்ட வருடைகள் தண்டகாரண்யத்தின் விந்திய மலையில் காணப்படவே, அந்த மலையுச்சியை எட்டி, அங்கிருந்து அந்த ஆடுகளைத் தன் நாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறான் ஒரு சேர மன்னன். வானத்தைத் தொடும் மலையுச்சியை அடைந்த்தால் 'வான வரம்பன்" என்னும் பெயர் பெற்ற அந்த அரசன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்று அழைக்கப்பட்டான்.


கோட்படுதல் என்றால் பிடித்தல் அல்லது கட்டுதல் என்று பொருள். ஆடுகளைப் பிடித்துக் கொண்டு வருதல் ஒரு பெரிய செயலா என்ற கேள்வி எழுகிறது. அபூர்வமான ஆடுகளாகவும், தங்கள் கலாசாரத்தில் முக்கியத்துவம் பெற்ற ஆடுகளாகவும் இருந்திருந்தால் மட்டுமே அப்படிப்பட்ட ஆடுகளைக் கொண்டு வந்து அதனால் ஒரு சிறப்புப் பெயரும் பெற்றிருப்பான் அந்த மன்னன்.

பதிற்றுப் பத்தின் ஆறாம் பத்தில் இந்த அரசனைப் புகழும், காக்கைப் பாடினியார், "தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையை"க் கொண்டு வந்தவன் என்றும், "ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்" என்றும் புகழ்ந்துள்ளார். வருடை என்பது மேடத்தைக் குறிப்பதாலும், சூரியப் பயணம், மேடத்திலும், மேட வீதியிலும் ஆரம்பிப்பதலாலும்,  வருட ஆரம்பத்தின் சின்னம் தன் நாட்டில் இருக்க வேண்டும் என்று அந்த அரசன் விழைந்திருக்கிறான், அதனால் இந்த மலையாட்டினைக் கொணர்ந்திருக்கிறான் என்பது புலனாகிறது. அந்தச் சேர மன்னன் காலத்தில் மேடத்தில் வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டிருப்பதை இது காட்டுகிறது. இன்றும் இரவிக்குளம், மூணாறு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை வரையாடுகள், இந்த வருடைகளே.

 

அயன சலனம்.


இன்றைக்கு மேல் நாட்டு விஞ்ஞானம், சூரியன் இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்வதாகவும், அதனால் சித்திரையின் பூஜ்ஜியம் பாகையில் வருடப்பிறப்பு கூடாது என்றும் சிலர் சொல்கிறார்கள். அவர்களுக்கு இந்த வீதி அமைப்பே பதிலாகும். விண்வெளியின் பின்புலத்தில் சூரியன் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது. அதை நம்மால் பார்க்க இயலாது. ஆனால் நாம் பார்க்கும் விண்வெளியைக் கொண்டே சோதிட விதிகளை உண்டாகியுள்ளார்கள். நாம் பார்க்கும் விண்வெளியில் சூரியன் நடு வீதியில் முன்னும் பின்னும் நகர்வதைக் கண்டு கொள்ள முடியும்.


 

இதற்குக் காரணம், நாம் இருக்கும் பூமி, அதன் அச்சிலிருந்து 23-1/2 பாகைகள் சாய்ந்துள்ளதால், ஒரு தலையாட்டி பொம்மை போல ஆடுகிறது. அந்த ஆட்டத்தின் காரணமாக, விண்வெளியின் பின்புலத்தில், மேடத்தின் பூஜ்ஜியத்திலிருந்து 27 பாகைகள் வலமாகவும், இடமாகவும் சூரியன் செல்வது போலத் தோற்றமளிக்கிறது.


 


 

பின்புலத்தில் எந்த அமைப்பு இருந்தாலும், சூரியன் மேடத்தில் நுழைவதே வருடப் பிறப்பாகும் என்பதே சோதிட விதி.


இந்த விதிகளை அமைத்த முனிவர்களே பிரபவ முதலான 60 ஆண்டுகளையும் அமைத்துப் பலன் சொல்லியுள்ளார்கள். பிரபவ முதலான ஆண்டுகள் தமிழ் நாட்டுக்கென்றே அமைந்துள்ள ஆண்டுகள் ஆகும். இதற்கும் வடநூலார் சொல்லியுள்ள ஆண்டுகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, தமிழ் நாட்டில் கர வருடம் நடக்கும் போது, வட இந்தியாவில் சுபகிருது ஆண்டு நடக்கும். அந்த வேறுபாட்டுக்குக் காரணம் கலியுக ஆரம்பத்தைப் பற்றி தமிழ் முனிவர்கள் கொண்டிருந்த வேறுபட்ட கருத்தே ஆகும்.


மஹாபாரதப் போர் முடிந்து 36 ஆண்டுகள் கழித்து, துவாபர யுகத்தின் பிரமாதி வருடம், சித்திரை முதல் நாளன்று கிருஷ்ணர் உலகை விட்டு நீங்கினார். அவர் நீங்கின நொடியில் கலி மஹாயுகம் பிறந்தது. அந்த நாளையே கலியுக முதலாகக் கொண்டனர் வட நாட்டினர். அதாவது பிரமாதி வருடத்திலிருந்து அவர்கள் கலியுகக் கணக்கை ஆரம்பித்தனர். ஆனால் தமிழ் நாட்டவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கலி யுகம் என்பது ஒரு புது யுகம் என்பதால், கடிகார முள்ளைத் திருப்பி வைப்பது போல, எல்லாவற்றையும் ஆரம்பத்திற்குக் கொண்டு வந்தனர். அதனால் 60 வருடங்களில் முதல் வருடமான பிரபவம் முதல் கலியுகம் ஆரம்பித்தது. அன்று சித்திரை முதல் நாளாகவும் இருந்தது.


வருட பலன்களை எழுதியுள்ள இடைக்காட்டுச் சித்தர்,

"ஆதி பிரபவத்தில் அம்புவியின் மானிடர்க்கு"


என்று ஆதி பிரபவம் என்று கூறுவதால், பிரபவமே வருடங்களின் ஆரம்பமும், கலியுக ஆரம்பமும் என்று கருதியிருக்கின்றனர் என்று தெரிகிறது. இடைக் காட்டுச் சித்தர் எழுதிய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, திருவள்ளுவ மாலை ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன. இவர் எழுதிய 60 வருடப் பாடல்கள் பஞ்சாங்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வருடங்கள் தமிழ் மரபில் வந்தவை என்பதை இடைக்காடனார் பாடல்கள் மூலம் அறியலாம்.

தமிழ் நிலங்களுக்கும், அவற்றைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும், இடைக்காடனார் இந்தப் பாடல்களில் பலன் சொல்லியுள்ளார். சீன நாட்டைப் பற்றி இரண்டு பாடல்களிலும், சிங்களத்தைப் பற்றி ஒரு பாடலிலும் பலன்களைக் காணலாம். காவேரி, கோதாவரி, துங்கபத்ரை நதிக் கரை நாடுகள், சோழ தேசம், அனந்த தேசம், காஞ்சி, தெலுங்கம், கூர்ச்சரம், கொங்கு நாடு, வட தேசம், தென் தேசம் என்று பல இடங்களிலும் ஏற்படக்கூடிய மழை, பஞ்சம், நன்மை, தீமைகளை, வருடப் பலன்களாகச் சொல்லியுள்ளார். அருகருகில்  உள்ள வெவ்வேறு நாடுகளுக்குப் பலன்கள் மாறுபடுவதை இவரது பாடல்களின் மூலம் அறிகிறோம். உதாரணத்துக்கு, 52 ஆவது வருடமான காளாயுக்திப் பலன்களைப் பார்க்கலாம்.


"காளயுக்தி ஆண்டுதனில் காஞ்சியிலே பஞ்சம்மிகும்

காலமழை பெய்யாது காசினியில்மேலும்

தெலுங்கத்தில் கொஞ்சம்மழை தென்திசையில் இன்பம்

நலங்காணும் நன்றே நவில்."


இந்தப் பாடலில் காஞ்சியில் பஞ்சம், அதற்குச் சற்று வடக்கிலுள்ள தெலுங்கத்தில் சிறிது மழை, ஆனால் அதற்குத் தெற்கே மழையும், நலன்களும் என்று சொல்லியுள்ளதால், ஒவ்வொரு பகுதியையும் கவனித்துப் பலன் சொல்லியுள்ளது தெரிகிறது.


இப்படிப்பட்ட அறிவு காக்கப்பட வேண்டிய ஒன்று. சித்தர்களும், முனிவர்களும் நமக்கு அளித்த இந்த அறிவுச் செல்வத்தைக் காப்பது நம் கடமை. அவர்கள் தந்துள்ள அறிவுப் புதையலை ஆராய்ந்து நம் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமேயல்லாது, அவற்றுக்குச் சமாதி கட்டுதல் அறிவுடையோர் செயலல்ல.




                     *********************************************************************