மதுரம் என்ற சொல் மனித பாஷையைக் குறிப்பதாக இருக்கிறது என்பதை வால்மீகி ராமாயணம் மூலம் கண்டோம்.
மதுர மொழியைப் பேசியவர்கள் வாழ்ந்த நாடு மதுரை என்று பெயர் பெற்றிருக்க வேண்டும்.
தலைச் சங்கம் கண்டு கடலுக்குள் முழுகிய தென்மதுரையைப் பற்றி இங்கு பேசுகிறோம்.
திருவிளையாடல் புராணக் கருத்துப்படி, ஆதியில் மதுரை என்னும் பெயர் இருந்தது. பிறகுதான் நான்மாடக் கூடல் என்ற பெயர் பெற்றது. (பகுதி 42).
மதுர என்னும் சொல்லை பலவிதமாகப் பொருள் கொள்ளலாம்.
’மத்’ என்னும் சமஸ்க்ருத வேர்ச்சொல்லிலிருந்து மது, மதுர, மதுரம் போன்ற சொற்கள் எழுந்தன.
‘மத்’ என்றால் மயக்கம், சொக்கிப் போதல் என்று அர்த்தம்.
அழகானவற்றைப் பார்த்துச் சொக்கிப் போவார்கள்.
இனிமையானவற்றில் மயங்கிப் போவார்கள்.
எனவே அழகும், இனிமையும் மது, மதுர என்றாயின.
· சொக்க வைக்கும் அழகுடைய பெருமான், சொக்கநாதர் என்றானார், அழகானவராக இருந்ததால், சுந்தரர் என்ற பெயரைக் கொண்டவரானார். அந்த நாளில் உருவகப் பெயராகவோ, காரணப் பெயராகவோதான் அழைத்தார்கள். எனவே சொக்கநாதர், சுந்தரர் போன்ற பெயர் கொண்ட பெருமான் இருக்கும் தலமும் மதுர என்ற பெயரைக் கொண்டதாகவே அமையும்.
· இனிமையும் மதுர எனப்படும். அது இனிய காட்சியாக இருக்கலாம். இனிய உணவாக இருக்கலாம், இனிய தேனாக இருக்கலாம், இனிய கள்ளாக இருக்கலாம், இனிய கருப்பஞ்சாறாக இருக்கலாம், இனிய இசையாக இருக்கலாம். இனிமையான உணர்வைத் தரும் பேச்சாகவும் இருக்கலாம்.
மேலே சொல்லப்பட்ட அனைத்துடனும் மதுரை மூதூருக்குத் தொடர்பு இருந்தது.
அவற்றுக்கும் சிவனுக்கும் தொடர்பு இருந்த்து.
இவை அனைத்துடனும், மதுர மொழி என்று சொல்லப்பட்ட மனித மொழிக்குத் தொடர்பு இருந்தது.
அது எவ்வாறு என்று பார்ப்போம்.
- மதுரை என்பதில் உள்ள ‘ம’ என்ற எழுத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். ‘ம’ என்பதே ஒரு ஓரெழுத்துச் சொல். ‘ம’ என்றால் சிவன் அல்லது யமனைக் குறிக்கும் என்கிறது செந்தமிழ் அகராதி. சிவன் அதிபதியானதால், சிவனைக் குறிக்கும் ’ம’ என்ற சொல்லிலிருந்து மது என்றாகி, மதுர என்ற சொல் நாளடைவில் வந்திருக்கலாம்.
- ‘ம’ என்னும் சொல்லால் குறிக்கப்படும் சிவனும், யமனும் ஒன்று என்கிறது ’மதுரைக் கலம்பகம்’. குமர குருபரர் எழுதிய மதுரைக் கலம்பகத்தில், இந்த இரண்டு பெயர்களுமே சிவனைக் குறிக்கின்றன என்று சொல்லப்பட்டுள்ளது.
‘அழகுற்றதொர் மதுரேசனை யமரேசனெனக்
கொண்டாடும் களியானின்றிசை பாடும்
களியேம் யாம்” (மது- கல- 24)
என்னும் இந்த வரிகளால் சோம சுந்தரரை மதுரேசன் என்றும் அவரையே யமரேசன் என்றும் அழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. சிவனையும், யமனையும் தெரிவிக்கும் மகாரத்தை ஒட்டி மதுரை என்னும் பெயர் எழுந்திருக்கக்கூடும்.
- · மதுரைக் கலம்பகத்தில் அடிக்கடி ‘மதுரேசன்’ என்ற பெயரே சோம சுந்தரேசருக்குச் சொல்லப்பட்டுள்ளது. மதுரைக்கு ஈசன் என்றால் மதுரையீசன் என்றல்லவா சொல் புணரும்?
மதுரை + ஈசன் = மதுரையீசன்.
ஆனால் மதுர: என்ற சொல் சமஸ்க்ருதச் சொல்.
மதுர: என்ற இடத்துக்கு ஈசன் என்றால்
மதுர: + ஈசன் = மதுரேசன் என்று புணரும்.
இது
சுந்தர: + ஈசன் = சுந்தரேசன்
ராம: + ஈஸ்வரம் = ராமேஸ்வரம்
என்பவற்றில் உள்ளது போலப் புணர்வது. இதனால் மதுரை என்பதை விட மதுர என்னும் பெயரில்தான் ஆதியில் அழைக்கப்படிருக்கிறது என்று தெரிகிறது.
- இதை இன்னும் ஆராய்ந்தால், மதுரேசனும், யமரேசனும் ஒரே இட்த்தில் குடி கொண்டிருந்தனர் என்றும் தெரிகிறது. வால்மீகி ராமாயணக் குறிப்புகள் மூலம், இந்தியக் கடலுக்குள் அமிழ்ந்த நிலங்களைத் தேடினோமே அதில் கண்ட ரிஷப மலைக்குத் தெற்கில் (பகுதி 57) யமனது இடம் உள்ளது என்று சுக்ரீவன் சொல்கிறான்! (வால்-ராமா – 4-41).
- இதை நோக்கும் போது, மதுரைக்கும் அதிபதி, யமப்பட்டணத்துக்கும் அதிபதி என்று சிவபெருமான் இருப்பதும், அந்த இடங்கள் (தென் மதுரை இருந்த ரிஷப மலையும், யமப் பட்டணமும்) ஒன்றுக்கொன்று அருகில் இருந்தன என்பதும் ஒரு பழைய வரலாற்றின் சுவடுகளாகத் தெரிகின்றன.
- அதே பகுதியில் சாகத்தீவும் இருந்தது என்று நாம் முன்பு கண்டோம். (பகுதி 60) அங்கு நால் வகை வர்ணத்தவர்கள் இருந்தார்கள் என்றும் கண்டோம். அவர்கள் பெயர்களை நினைவுக்குக் கொண்டு வருவோம். அவை மக (பிராம்மணர்), மசக (க்ஷத்திரியர்), மானச (வைசியர்), மந்தக (சூத்திர்ர்). எல்லாப் பெயர்களும் மகாரத்தில் ஆரம்பிப்பது எதேச்சையான ஒன்றா அல்லது சிவனை முன்னிட்டு இந்தப் பெயர்கள் சூட்டப்பட்டனவா? சாகத்தீவின் தெய்வம் சிவ பெருமானே என்பதையும் நாம் இங்கு நினைவு கூற வேண்டும்.
- மகாரத்திலிருந்து ஈரெழுத்து ‘மது’வுக்குச் செல்வோம். மது என்பது இனிமை, தேன் போன்ற பொருள்களில் வருகிறது. சிவனைப் பற்றிச் சொல்லும் பல இடங்களில் அவன் அணியும் கொன்றை மாலை சொல்லப்படுகிறது. இந்தக் கொன்றை மாலை தேன் சிந்தும் தன்மையுடையது. உதாரணத்துக்கு மதுரைக் கலம்பகத்தைக் காண்போம். “தேந்த்த கொன்றையான் தெய்வத் தமிழ்க் கூடல்” (ம-க – 48). தேனும், இனிமையும் பிரிக்க இயலாதவை. அதனால் சிவனிருக்கும் இடத்துக்கும் இனிமைக்கும் தொடர்பு இருக்கிறது.
- மது என்றால் இனிய சாறு என்றும் ஒரு பொருள் உண்டு. அந்த நாளில் கரும்பிலிருந்து சாறு எடுத்தார்கள். பரிபாடல் திரட்டில் காணப்படும் இருந்தையூர் திருமாலைப் பற்றிச் சொல்லும் பாடலில் அந்த ஊரின் வயலில் கரும்பு பயிரிட்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. கருப்பஞ்சாறு பிழியும் ஆலைகள் இருந்தன என்றும் சொல்லப்பட்டுள்ளது. கடல் கொண்ட தென்பகுதியிலும் கரும்பு விளைச்சலே அதிகமாக இருந்த்து என்று சொல்லும் வண்ணம், சாகத்தீவில் இக்ஷுவர்த்தனிகா என்னும் நதி ஒன்று ஓடியது என்றும் பார்த்தோம். (பகுதி 58). இக்ஷு என்றால் கரும்பு என்பது அர்த்தமாதலால், சாகத்தீவில் கரும்புப் பயிர் அதிகமாக இருந்திருக்க வேண்டும். அந்தப் பகுதியில் தென்னன் ஆட்சி மலர்ந்தது என்று நாம் சொல்வதால் (பகுதி 59), கரும்புக்கும், கருப்பஞ்சாறுக்கும், அது தரும் இனிமைக்கும் மதுரை மூதூர் பெயர் போனதாக இருந்திருக்க வேண்டும்.
- இனி மூவெழுத்து ‘மதுர’ என்றால் என்ன என்று பார்ப்போம். மதுர என்றால் இனிமை என்றும் அழகு என்றும் பொருள் பெறும்.மதுரக் கழை என்று கரும்புக்குப் பெயர், கழை என்றாலும் கரும்பு. மதுரக் கழை என்றால் இனிமையான கரும்பு என்பதாகும். (இந்தச் சொற் பிரயோகம், மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் மீதான ‘அழகர் கலம்பகத்தில்’ 67 ஆம் பாடலில் வருகிறது.) மதுரக் கழை என்னும் கரும்பு சாகத்தீவில் பயிரான முக்கியப் பயிராகும் என்று பார்த்தோம் (பகுதி 58)
- மதுர என்றாலும் வசீகரம் செய்வது, அழகாக இருப்பது என்றும் சமஸ்க்ருதத்தில் பொருள் அமைகிறது. சோம சுந்தரரை மருமகனாகப் பெற்ற ஊராதலால் மதுர என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
- மற்றொரு அழகரான, திருமாலிருஞ்சோலை அழகரும், அந்தப் பழம் பெரும் மூதூரான தென் மதுரையில் குடி கொண்டிருந்திருக்க வேண்டும். அவரை வேண்டிக் கொண்டதால், மலயத்துவஜ பாண்டியனுக்கு, பார்வதி தேவியே தடாதகைப் பிராட்டியாகப் பிறந்தாள் என்று புராணங்கள் சொல்வதால், கடல் கொண்ட மதுரைக்கருகில் ஒரு தென்திருமாலிருஞ்சோலை இருந்திருக்க வேண்டும். அதனையே பெரியாழ்வார் திருமொழி 4-2 – இல் காண்கிறோம். (பகுதி 44). அந்தப் பெருமானுக்கும் ‘அழகர்’ என்ற பெயர் உள்ளதால் மதுரமும், அழகும் கொஞ்சும் நகரமாக அந்த்த் தென் மதுரை இருந்திருக்க வேண்டும்.
- சிவனுக்கும், அந்தத் தென்பகுதிக்கும் தொடர்பு காட்டும் ஒரு விவரம் ராமாயணத்தில் சுக்ரீவன் வாய் மொழியாக்க் கிடைக்கிறது. 90 டிகிரி மலைப் பகுதியில் நாம் அடையாளம் கண்ட ரிஷப மலைப் பகுதிகளில் ரோஹிதர்கள் என்னும் கந்தர்வர்கள் இருக்கிறார்கள் என்கிறான் அவன். சிவந்த நிறம் உடையவர்களை ரோஹிதர்கள் என்பார்கள். அவர்கள் உடல் நிறமும், முடி நிறமும் சிவப்பாக இருக்கும். சிவனுக்கும் செஞ்சடையோன் என்ற பெயர் உண்டு. அந்தி வண்ணன் என்ற பெயரும் உண்டு. அப்படி சிவந்த அதாவது சிவனது நிறமும் சிவப்பு. முடியும் சிவப்பு.நிறமும், முடியும் கொண்ட மக்கள் அந்தத் தென் கோடியில் வசித்தார்கள் என்று வால்மீகி ராமாயணம் சொல்லவே, அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்றாற்போல, அங்கு குடி கொண்ட சிவனும் காட்சி தந்தான் என்று தெரிகிறது. மேலும் நிறம் என்பது ஓரிடத்தில் விழும் வெய்யிலைக் கொண்டுதான் என்று முன்பே பகுதி 8-இல் கண்டோம். அந்தத் தென் கோடியில் வாழ்ந்த மக்கள் சிவப்பு நிறமாக இருந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
- தென்னன் தேசம் என்பதும், அது இருந்த சாகத்தீவு என்பதும், பூமத்திய ரேகைக்கு சிறிது வடக்கில் ஆரம்பித்து, தென் துருவம் அருகில் வரை பரவியிருந்த்து. சாகத்தீவின் வர்ணனையில் ‘ஸ்யாம மலை’ இருந்தது என்று பார்த்தோம். (பகுதி 58). அங்கு வாழ்ந்த மக்கள் கருப்பு நிறமாக இருந்தார்கள் என்றும் சஞ்சயன் சொல்லக் கேட்டோம். அந்த இடம் பூமத்திய ரேகையை ஒட்டி இருந்தது. எனவே அங்கு வாழ்ந்த மக்கள் கருப்பாக இருந்தனர். ஆனால் பூமத்திய ரேகைக்குத் தெற்கே செல்லச் செல்ல சூரிய ஒளி அதிகம் விழாது. அப்படி இருக்கும் ஒரு பகுதியில் மக்கள் சிவந்த நிறமாக இருப்பது சாத்தியம். எனவே 700 காவதம் என்று 7500 கி.மீட்டருக்கும் அதிக தூரம் (பகுதி 45) பரவியிருந்த தென்னன் நாட்டில் வாழ்ந்த மக்களில் சிவந்த நிறம் கொண்டவர்களும் இருந்திருப்பார்கள், கருத்த நிறம் கொண்டவர்களும் இருந்திருப்பார்கள்.
- அது மட்டுமல்ல அந்த ரோஹிதர்களைக் கந்தர்வர்கள் என்றழைக்கிறான் சுக்ரீவன். ஐந்து விதமான குடிப் பெயர்கள் கொண்டவர்கள் என்று அவர்களது பெயர்களையும் சொல்கிறான்.
- அவை சைலூசம், கிராமணி, சிக்ஷா, சுகா, பப்ரு என்பன. சைலூசன் என்றால் நடிப்பில் வல்லவன் என்று பொருள். கிராமணி என்றால் கிராமத்துக்குத் தலைவன். சிக்ஷா என்றால் ஆசிரியன். சுகா என்றால் சுகமாக, சந்தோஷமாக இருப்பவன். ப்ப்ரு என்றால் செந்நிறம் உடையவன். இவர்களெல்லாம் கந்தர்வர்கள் என்கிறான். கந்தர்வர்கள் என்றால் பாட்டும், கூத்துமாக கவலையில்லாமல் திரிந்து கொண்டு வாழ்கையை இலகுவாக வாழ்பவர்கள். அவர்களுக்குத் திருமண விதிகளும் கிடையாது. கந்தர்வ விவாகம் என்கிறோமே, உற்றாரையும், மற்றோரையும் கலந்து கொள்ளாமல், தானே ஒரு பெண்னைப் பார்த்து விரும்பி அவளுடன் உறவு கொள்ளுதல் - அது இந்தக் கந்தர்வர்களது வழக்கம்.
- இதைத் தமிழில் களவியல் என்கிறோம். களவியலில் ஈடுபட்ட மக்கள் அந்தத் தென் கோடியில், மதுரேசன் தெய்வமாக இருந்த பதியில் வாழ்ந்து வந்தனர். அந்தக் களவியலைத்தான் இறையனாரான சிவ பெருமான், தான் அருளிய இறையனார் அகப்பொருளின் ஆரம்பத்தில் ’கந்தருவ வழக்கம்’ என்று சொல்லி ஆரம்பிக்கிறார். இறையனார் அகப்பொருளிலும், வால்மீகி ராமாயணம் தரும் விவரங்களிலும், ஒரே வார்த்தை, ஒரே கருத்து இடம்பெற்று இருப்பதைப் பாருங்கள். ஆதியில் இருந்த மக்கள் களவியலில் ஈடுபட்ட மக்கள் ஆவர். இமயமலையிலும் கந்தர்வர்கள் வசித்தார்கள். ரிஷப மலையை ஒட்டி இருக்கும் பகுதியிலும் கந்தர்வர்கள் வசித்தார்கள். வாழ்க்கை முறையால் இவர்களுக்குத் தொடர்பு இருக்க வேண்டும். அதைப் பிறகு கூறுவோம். இங்கு சொல்லப்படவேண்டிய முக்கியமான விவரம், மதுரேசன் ஆண்ட மதுரைப் பதியில் வாழ்ந்த மக்கள் களவியலில் ஈடுபட்ட மக்கள் என்பதே.
- அந்த மக்களது பெயரை ஆராய்கையில் மற்றுமொரு முக்கிய விவரமும் கிடைக்கிறது. அவர்கள் இசையிலும், ஆட்டத்திலும் ஆர்வமும், திறமையும் கொண்டவர்கள். இசை என்பது மனித மொழியின் முதல் உருவாக்கம், ஆதியில் மக்கள் பேசி வந்த மனித பாஷைக்கு இலக்கணம் இல்லை. ஆனால் இசை இருந்திருக்க வேண்டும். இசையுடன் இருந்திருந்தால் கேட்க இன்னும் மதுரமாக இருக்கும். அப்படி மதுரமாக இசையுடன் கூடிய மொழியாக அவர்கள் பேசவே அந்த மனித மொழிக்கு ‘மதுர மொழி’ என்ற பெயர் உண்டாகியிருக்க வேண்டும்.
- சங்க நூல்களில் நாம் என்ன காண்கிறோம்? பாணர்கள்தான் பெரும்பாலும் பாட்டிசைத்துப் பரிசில் பெற்றனர். புறநானூறு 335 இல் ’துடியன், பாணன், பறையன், கடம்பன்’ என்ற நான்கு குடிகளைப் பற்றிச் சொல்கிறார் மாங்குடி கிழார். (மாங்குடி என்ற இடத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மாமரங்கள் அதிகம் வளரவே மாங்குடி என்று பெயர் பெற்றிருக்கும். மாமரத்தை மதுமா என்று குறிக்கும் வழக்கம் தமிழில் உண்டு.) இந்த நான்கு குடிப் பெயர்களுமே பாட்டு மற்றும் இசையைக் குறித்து எழுந்தவையே.
- பண் இசைத்துப் பாடுபவன் பாணன். இசையைக் கூட்டுவதற்கு இந்த நாளில் தம்புரா இருப்பது போல, அந்தப் பாணர்கள் யாழைக் கையில் கொண்டு இசை மீட்டினர்,
- அவன் பாடுவதற்கேற்றாற்போல துடிப் பறை அடிப்பவன் துடியன். "துடியிசை” என்ற இசை சங்க நூல்களில் சொல்லப்படுகிறது. துடியோசைக்கு ஏற்ப ஒரு பெண் தன் கால் சிலம்பு ஒலிக்க அடியெடுத்து வைத்த விதத்தை பரிபாடல் 21 -இல் காண்கிறோம். இசைக்கு ஏற்றாற்போல பறை அடிப்பவன் பறையன், பாட்டும், இசையும் இருந்தால் போதுமா? அங்கு நடனமும் வேண்டும். அதற்காக்க் கூத்தாடுபவன் கடம்ப மாலை தரித்த கடம்பன். இந்தக் கலவை சிவ பெருமானிடமும் உண்டு. தென்னாடுடைய அவன் வாழ்ந்த இடம் கடம்ப வனம் என்று புராணங்கள் கூறுகின்றன. அவனும் பறை அடித்து ஆடிபவன். அந்தத் தென்னன் தேசத்தில் கடம்ப மரங்கள் அதிகம் இருந்திருக்க வேண்டும், அதன் மலரை அணிந்து கொண்டு கடம்பர்கள் கூத்தாட பாணம் பண் பாட, துடியனும், பறையனும் ஒலிச் சேர்க்கை தர அதில் கிடைக்கும் இசையின்பம் மதுரமாக இருந்திருக்கும். இந்த மக்களும் ஆதியில் கந்தர்வர்கள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது கந்தர்வர்களின் வழியில் இவர்கள் வந்திருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் கொடுத்த இந்த இசைக் கலவையைத் தருவதில் கந்தர்வர்களும் பெயர் பெற்றவர்கள்.
- அந்தப் புறநானூற்றுப் பாடலில், இந்த நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகள் கிடையாது என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பாடல் முழுவதையும் தெரிந்து கொண்டால் இது விளங்கும். அந்தப் பாடல் சொல்லும் கருத்து:- பூக்கள் என்று சொன்னால் 4 பூக்களைத் தவிர வெறு கிடையாது, (அந்த 4 பூக்கள் பெயரும் முழுமையாக சுவடிகளில் கிடைக்கவில்லை.) உணவு என்று சொன்னால் வரகு, தினை, கொள், அவரை இவை நான்கு தவிர வேறில்லை. குடிகள் என்று சொன்னால், துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நான்கு குடிகளைத் தவிர வேறில்லை. கடவுள் என்று சொன்னால் போரில் பகைவருக்கு முன் நின்று போரிட்டு யானையை வீழ்த்தித் தானும் வீழ்ந்து நடுகல்லாகிப் போகிறானே, நெல் தூவி வழிபடப்பட்ட அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை.
- உயர்வானதாகவும், பரவலாகவும் காணப்பட்ட விவரங்களை, ‘இவற்றைத் தவிர வேறு இல்லை’ என்று இந்தப் பாடல் சிறப்பித்துச் சொல்கிறது. பாணன் உள்ளிட்ட நான்கு குடிகளைத் தவிர மற்ற குடிகளும் இருந்திருப்பார்கள். ஆனால் அவர்களை விட இந்தக் குடிகளுக்கு ஒரு சிறப்பு இருந்திருக்கிறது. அது என்னவாக இருக்கும் என்றால், இந்தக் குடிகளே இசை, கூத்து, நாடகம் ஆகியவற்றை வழி வழியாகச் செய்து வந்தவர்களாக இருந்திருக்க வேண்டும். கந்தர்வர்கள் இவற்றில் தேர்ந்தவர்கள். அந்தக் கந்தர்வர்கள் ரோஹிதர்கள் என்ற பெயரில் தென் கோடியில் இருந்தனர். அவர்கள் பாடலாலும் மனித மொழியானது மதுர மொழியாக கருதப்பட்டிருக்கலாம். மக்களிடையே வழங்கி வந்த மதுர மொழிக்கு, மெருகூட்டி, இலக்கணம் வகுத்து, தமிழ் என்று முறைப்படித்தியிருக்கிறார்கள் இறையனாரும், அகத்தியனாரும்.
· குமரகுருபரர் அவர்கள் எழுதிய ‘மதுரைக் கலம்பகத்தில்’ தமிழும், மதுரமும் கூட்டிய விவரம் ஒன்று வருகிறது.
”குமரவேள் வழுதி உக்கிரனெனப் பேர் கொண்டதுந்
தண்டமிழ் மதுரங் கூட்டுணவெழுந்த வேட்கையால் எனில்
இக்கொழி தமிழ்ப் பெருவையாரறிவார்.”” (ம-க 92)
· இதில் சொல்லப்பட்டுள்ள குமரவேள் என்பது முருகனாக இருக்கலாம். மீனாட்சி- சுந்தரேஸ்வரருக்குப் பிறந்த உக்கிர பாண்டியன் என்பவன் குமரனாக இருக்கலாம். குமரன் என்றாலும் அழகன் என்னும் பெயர் உண்டு என்பது இங்கு நோக்கத்தக்கது. புறநானூறு உள்ளிட்ட பல நூல்களில் உக்கிர குமாரனைப் பற்றிய செய்தி வருகிறது. பொங்கிய கடல் மீது வேலெறிந்து தன் கால் வரை நிற்கச் செய்தவன் அவன். அதனால் அவனுக்குக் கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்ற பெயர் வந்தது. அவன் வழியில் பாண்டிய அரச பரம்பரை வளர்ந்த்து. அவன் காலத்தில்தான் முதல் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்த்து.
· அதை விவரிக்கும் இந்தப் பாடலில் தண்டமிழும், மதுரமும் சேர்த்து என்று எழுதப்பட்டுள்ளதை, ’தமிழுடன் இனிமை சேர்த்து’ என்று சொல்லி விடலாம். அப்படிச் சொன்னால், தமிழுக்கு இனிமை என்பது முதலில் இல்லை. பிறகு சேர்க்கப்பட்டது என்றாகி விடுகிறது. இந்த வரிகளை வேறுவிதமாக – அதாவது - தமிழையும், மதுரத்தையும் கூட்டி பெருமை பெற்ற தமிழ் என்றும் சொல்லலாம். அதாவது முதலில் மதுரம் என்ற பெயரில் அந்த மொழி மனிதர்கள் பேசிய மொழியாக இருந்து, அதற்கு இறையனார் என்ற சோமசுந்தரரும், அகத்தியனாரும், இலக்கணம் வகுத்து, முறைப்படுத்தி, தமிழ் என்ற பெயர் கொடுத்தார்கள்.
· அப்படிச் செம்மைப்படுத்திய மொழியை வளர்ப்பதற்காகவும், பரப்புவதற்காகவும் சங்கம் கூட்டினார்கள்.
· பழைய நூல்களில் சங்கம் கூட்டித் தமிழ் வளர்த்தான் பாண்டியன் என்ற சொல் பிரயோகம் வருவது சிந்திக்கத்தக்கது. ஒரு மொழியை இலக்கணத்தால் செம்மைப் படுத்திவிட்டு, அப்படியே விட்டு விட்டால் அதை மக்கள் பயன் படுத்த மாட்டர்கள். அப்படி செம்மைப்படுத்தப்பட்ட மொழியை மக்கள் உபயோகிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு அதில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்குச் சங்கம் உதவியது. அதனால் சங்கம் கூட்டித் தமிழ் வளர்த்தனர் என்று சொல்லியிருக்கின்றனர்.
· தமிழில் பாடல் இயற்ற ஊக்குவித்து, அதற்குப் பரிசாக இறையனாரே தனது சங்கணிந்த காதினைத்தீட்டிக் கேட்டார் என்று சொல்லப்பட்டுள்ளதால், செம்மைப் படுத்தப்பட்ட தமிழை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கற்கக் கூடிய சூழ்நிலை உண்டானது.
· அதுவரை சமஸ்க்ருத்த்தில் மட்டுமே பாடல்கள் இயற்றி, இறைவனுக்குப் படைத்தார்கள். தமிழ்ப் பாடல்களையும் இறைவன் செவி மடுப்பான் என்றதும், தமிழ் மொழிக்கும் அந்தஸ்து கூடி விடுகிறது.
· இதற்கு உதாரணமாக மதுரைக் கலம்பகம் பாடல் 46 ஐச் சொல்ல்லாம்.
”பாணறா மழலைச் சீறியாழ்
மதுரப் பாடற்குத் தோடுவார் காதும்..”
என்று ‘யாழ் மீட்டி பாணர்கள் பாடும் மதுரப் பாடலுக்கு, தோடுடைய செவியாரான இறையனார் தன் காது கொடுத்துக் கேட்டார்” என்று சொல்லப்பட்டுள்ளது.
இங்கு ஏன் தமிழ்ப் பாடல் என்று சொல்லவில்லை?
மதுரப் பாடல் என்று ஏன் சொல்ல வேண்டும்?
பாணர்கள் எளிய மக்கள். அவர்கள் பண்டிதர்கள் அல்ல. அவர்கள் ஆதியில் மற்ற மக்களைப் போல மதுர மொழி பேசி வந்தவர்களே. அதனுடன் தமிழ் இலக்கணம் கூட்டிப் பாடுகிறார்கள் என்றால், அதை இறையனார் கண்டிப்பாகச் சிலாகிப்பார் அல்லவா? சங்கத் தோட்டையே பரிசாக்க் கொடுத்து விட்டார். இப்படித்தான் சங்கம் வளர்ந்தது.
மதுர மொழி என்று முதலில் வழங்கி வந்ததற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இனிமையான பாட்டாக மக்கள் அடிக்கடி பாடி வந்திருக்க வேண்டும். அதில் எழும் ஓசை நயத்தால் அந்த மொழி கேடபதற்கு இனிமையாக இருந்திருக்க வேண்டும். இதற்குச் சான்றாக பரிபாடலைச் சொல்லலாம். இசையுடன் கூடிய பரிபாடல் போன்ற இசை நூல்களைத் தான் முதல் சங்கத்தில் அதிகம் அரங்கேற்றி இருக்கிறார்கள். இசையும், நாடகமும், இயல்பாகவே சாதாரண மக்களிடம் உண்டாவது. அவற்றைச் செம்மைப்படுத்தினார்கள். கூடவே இலக்கணத் தமிழையும் சேர்த்து முக்கூடல் என்றாக்கினார்கள்.
’மும்மைத் தமிழ்க் கூடன் மூல லிங்கம்’ என்று சோம சுந்தர்ரை மதுரைக் கலம்பகம் கூறுகிறது (ம-க- 36).
இதையே ‘தண்தாரான் கூடல் தமிழ்” என்று இறையனார் அகப்பொருள் முதல் பாடலில் கூறுகிறது. மூன்று தமிழைக் கூட்டினார்கள் என்றால், சேர்த்தார்கள் என்றும், பெருக்கினார்கள் என்றும் பொருள் கொள்ளலாம். முதலில் மக்க்ளுக்குப் பரிச்சயமான இசையும், ஆதி மக்களின் வாழ்க்கையியலான களவும், காந்தருவமும், அக வாழ்க்கையையுமே அதிகம் இடம் பெற்றன. இதைப் பற்றிச் சொல்லும் நச்சினார்க்கினியர் இவ்வாறு சொல்கிறார்:-
“முந்து நூல் அகத்தியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன: எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல், அரசியல், சோதிடம், காந்தருவம், கூத்தும் பிரிவுமாம்”
இதில் சோதிடம் பற்றி பிறகு அறிவோம். மற்ற எல்லாமும், இசைத் தமிழைச் சார்ந்து இருப்பதும், அக வாழ்க்கையைச் சார்ந்திருப்பதும் முக்கியமான செய்திகளாகும். இசை என்பது மனிதனின் முதல் பொழுது போக்காக இருந்திருக்க வேண்டும். தன் குரலையே பல விதமாக அவன் சோதித்துப் பார்த்து, இன்பம் தரும் இசையை அவன் கண்டு பிடித்திருப்பான். அதைக் கேட்க மதுரமாக இருந்திருக்கும். அதனால் முதலில் உண்டான அந்த மனித பாஷையை மதுர என்று அழைத்திருக்கிறார்கள்.
அதற்கு இலக்கணம் கூட்டியது சாமனிய மனிதன் அல்ல. இறையனாரும், அகத்தியரும் ஆவர்.
அப்படி இலக்கணம் கூட்டிய போது, அந்த மதுர என்ற சொல் திருத்தப்பட வேண்டியது என்றானது. மாற்றப்பட வேண்டிய ஒன்றானது.
அது ஏன் என்று யோசித்தால் தொல்காப்பியம் பிறப்பியல் சூத்திரம் 83 -இன் அடிப்படையில் உந்தி முதல் பரவும் காற்றே ஒலியாகப் பிறந்து, அது சொல்லாக வந்து, அது எழுத்தாக வருவதால், மொழிக்கு இடும் பெயர் வல்லின, மெல்லின, இடையின சொற்கூட்டாக இருப்பது பொருத்தமாக இருக்கும்.
மதுர என்னும் சொல்லிலும், இந்த முக்கூட்டு இருக்கிறது. ஆனால், வல்லின, மெல்லின, இடையின வரிசையில் இல்லை.
ஆனால் தமிழ் என்ற சொல்லில், வல்லின, மெல்லின, இடையின வரிசைப்படி அமைந்துள்ளதைக் காணலா. த-மி- ழ் என்று மூன்றின் தொகுப்பாக, மிகவும் கவனமாகப் பெயரிடப்பட்ட சொல்லாக தமிழ் என்னும் சொல் அமைந்துள்ளது.
மேலும் மதுர என்பது சமஸ்க்ருதச் சொல்.
அதைச் செம்மைப்படுத்தி, புதுப் பெயரிடும் பொழுது, முற்றிலும் தமிழில் அமைந்த சொல்லையே பயன்படுத்தியிருப்பார்கள்.
அதிலும், தமிழுக்கே உரியதான ழகாரத்தைக் கொண்டு அந்தச் சொல்லை அமைப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.
அப்படியிருக்க திராவிடவாதிகள் சொல்வதைப்போல திராவிட என்னும் சொல்லிலிருந்து மருவியோ, கடன் வாங்கியோ இந்தப் பெயரை உருவாக்கவில்லை.
திராவிட என்னும் சொல் தமிழ் என்றானது என்கிறார்கள் திராவிடவாதிகள்.
திராவிட என்பது, திரவிட என்றாகி,
அது த்ரமிள என்றாகி,
அது தமிள என்றாகி
அதுவே தமிழ் என்றானது என்று
கால்டுவெல் சொன்னதைப் பிடித்துக் கொண்டார்கள்
திராவிடவாதிகள்.
ஆனால் அதைத் தமிழ் அறிந்தவர்கள் ஒத்துக் கொள்ளலாமா?
ஏனெனில்,
திராவிட என்பது தமிழ் ஆனது என்பது
தொல்காப்பிய வட சொல் திரியும் சூத்திரத்தை ஒட்டி அமையவில்லை.
த்ராவிட என்னும் சொல்லில் உள்ள ‘த்ர’ என்னும் சொல் உருமாற வேண்டும்.
திராவிட என்பது தமிழ் ஆனது என்பது
தொல்காப்பிய வட சொல் திரியும் சூத்திரத்தை ஒட்டி அமையவில்லை.
த்ராவிட என்னும் சொல்லில் உள்ள ‘த்ர’ என்னும் சொல் உருமாற வேண்டும்.
அதைத் த்ரமிள என்று எடுத்துக் கொண்டாலும்,
ள என்னும் எழுத்து ழ என்று உருமாற வேண்டும்.
ளகரம் ழகரமாகலாம் (சோள = சோழ)
ஆனால் திர அல்லது த்ர என்பது தகரம் ஆகாது.
ஒலிக் குறிப்பில் ‘த’கரம், தகரம் ஆகலாம்.
அதாவது தமிள (damiLa) என்பது தமிழ (thamiza ) என்றாகலாம்.
ள என்னும் எழுத்து ழ என்று உருமாற வேண்டும்.
ளகரம் ழகரமாகலாம் (சோள = சோழ)
ஆனால் திர அல்லது த்ர என்பது தகரம் ஆகாது.
ஒலிக் குறிப்பில் ‘த’கரம், தகரம் ஆகலாம்.
அதாவது தமிள (damiLa) என்பது தமிழ (thamiza ) என்றாகலாம்.
ஆனால் திரமிள என்றால் அது திரமிழ அல்லது த்ரமிழ என்றுதான் ஆகும்.
தமிழம் என்றாகாது.
த்ரமிள என்றாலும், திரமிழம் என்றுதான் ஆகும் ,
த்ரவ்யம் என்பது திரவியம் என்பது ஆவது போல.
அப்படியிருக்க
வட சொல் திரியும் முறையை அறியாமல்,
கால்டுவெல் செய்த சொற்பிரயோகம்
ஒத்துக் கொள்ளத் தக்கதல்ல
ஆனால் தமிழ் என்னும் சொல் திருத்தமாக,
ஆராய்ந்து ஏற்படுத்தப்பட்ட சொல் என்பது அது அமைந்த முறையில் தெரிகிறது.
மதுர என்றழைக்கப்பட்ட மொழிக்கு முழுவதும் அதே பொருளில் தமிழ் என்று திருத்தமாக வடிவமைத்துப் பெயரிட்டிருக்கிறார்கள்.
அந்த்த் திருத்த்தை சாமானிய மனிதன் செய்யவில்லை.
தெய்வமே செய்தது.
மனித பாஷை என்ற அந்தஸ்து தமிழுக்கு இருந்திருந்தால்தான் இந்தப் பெருமை தமிழுக்குக் கிடைத்திருக்கும்.
மதுர மொழிக்கு இலக்கணம் கொடுத்து, செம்மைப்படுத்தி, தமிழ் என்ற பெயர் சூட்டி, அதை வளர்க்க தலைச் சங்கம் கூட்டியிருக்கிறார்கள். அது ஆரம்பித்த காலக்கட்டமே, தமிழ் என்னும் மொழியாகப் பிறந்த காலக் கட்டம் எனலாம்.
12,000 ஆண்டுகளுக்கு முன்னால் முதல் சங்கம் கூட்டவே, (பகுதி 44) மனித பாஷையான மதுர மொழி, 12,000 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் என்னும் பெயர் பெற்று, இலக்கணத்தால் செம்மைப்படுத்தப்பட்டு, சங்கம் மூலம் வளர்க்கப்படலாயிற்று.
இந்த மாற்றம் நடந்த பிறகுதான் ராமாயணம் நடந்திருக்கிறது. ராமாயண காலக் கட்டம் இன்றைக்கு 7000 வருடங்களுக்கு முன்னால் என்று பார்த்தோம். (பகுதி 14) அப்பொழுது முதல் ஊழி முடிந்து, கவாடபுரத்தில் இடைச் சங்கம் நடந்து கொண்டிருந்தது. எனினும், பாரதத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையே மதுர மொழி என்றே அது தொடர்ந்து வழங்கி வந்திருக்க வேண்டும். மேலும், சமஸ்க்ருத மொழியில் ராமாயணம் எழுதப்படவே, தமிழ் என்னும் சொல்லின் சமஸ்க்ருதப் பெயரான மதுரம் என்ற சொல்லாலே அது ராமாயணத்தில் சொல்லப்பட்டிருப்பது பொருத்தமே.
ஏனெனில் இந்தப் பெயரைப் போலவே ஒரு தமிழ்ப் பழமொழியும் சமஸ்க்ருத மொழி பெயர்ப்பில் ராமாயணத்தில் வருகிறது. அதை அடுத்த கட்டுரையில் காண்போம்.